கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு
24 Sep, 2025 | 05:16 PM
![]()
( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு எதிராகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிட்டார். வெளிப்படையாக பேச வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு ' பி' அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளேன்.அந்த அறிக்கையில் இறுதி பந்தியை வாசிக்கிறேன்.
'1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையின் திருத்தச் சட்டத்தின் 308 ஆம் உறுப்புரை மற்றும் சாட்சி தண்டனைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கோ எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இங்கு இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள்.இது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார்.
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு | Virakesari.lk






