தமிழகச் செய்திகள்

தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்

1 day 11 hours ago
மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
 
 

 

p44a_1529451713.jpg‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம்.

‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர்  செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’

‘‘ஏன்?’’

‘‘முரண்பட்ட தீர்ப்பு வந்து, மூன்றாவது நீதிபதிக்கு விவகாரம் போனதும், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நொந்துபோய் விட்டார்கள். ‘இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போகுமோ’ என அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அப்போதுகூட தினகரன் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது எனக் கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன்.’’

p44_1529451733.jpg

‘‘ஆமாம். நீர் சொன்னதைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம்.’’

‘‘தினகரனின் இந்த ரியாக்‌ஷனால், தங்க தமிழ்ச்செல்வன் கடுப்பாகிவிட்டாராம். ‘வழக்கு இழுத்துக்கொண்டே போவதில் இவருக்குத் துளிகூட வருத்தம் இல்லை. தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நமக்கெல்லாம் பதவி வந்துவிடக் கூடாது என்பதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார். அப்படிப் பதவி வந்தால், நம்மில் பலரும் எடப்பாடி பக்கம் போய்விடுவோம் என அவர் பயப்படுகிறார்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கமென்ட் அடித்தார். தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் தினகரன் பேசியபோது, ‘18 பேரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாரே தவிர, தீர்ப்பை அதிகம் கண்டிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களைச் சந்தித்து, ‘நான் வழக்கிலிருந்து வாபஸ் பெறப் போகிறேன்’ என்று அறிவித்தார். அது மட்டுமல்ல... தீர்ப்புக்கு முதல் நாள்தான் ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் மேல் முறையீடு செய்ய மாட்டேன்’ என்று வேறு அவர் சொல்லியிருந்தார். இதெல்லாம் தினகரனை எரிச்சலில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டார் தினகரன்.’’

‘‘அப்போதுதான் வாக்குவாதம் ஏற்பட்டதா?’’

‘‘ஆமாம். ‘நான் ஒன்று சொன்னால், நீங்கள் வேறு ஏதாவது பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள். இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்? எங்கள் அணியில் பிரச்னை இல்லை என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது? தீர்ப்பை விமர்சித்துப் பேசினால் பிரச்னையாகும், ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியாதா?’ என்று தினகரன் கோபமாகக் கேட்டாராம். ‘நீங்கள் விமர்சனம் செய்திருந்தால், நான் ஏன் பேசப்போகிறேன்?’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பதிலுக்குக் கேட்டாராம். ‘வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என ஏன் பேசினீர்கள்?’ என்று தினகரன் கேட்க, உடனே தங்க தமிழ்ச்செல்வன், ‘நீங்கள் ஆர்.கே.நகர்... ஆர்.கே.நகர் என உங்கள் தொகுதிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். எனக்கு ஓட்டு போட்ட ஆண்டிபட்டி மக்களுக்காக நான் பேசக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். ‘நீங்க இப்போ அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ இல்லை. உங்களைத் தகுதிநீக்கம் செய்துட்டாங்க என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க’ என்று குத்தலாகச் சொல்லியிருக்கிறார் தினகரன்.’’

p44aaa_1529451770.jpg

‘‘அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னாராம்?’’

‘‘இரண்டு ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் அவர். ‘ஆரம்பத்தில் உங்கள் பக்கம் 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தோம். முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் கடிதம் கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்னபோது, தோப்பு வெங்கடாசலம் விலகிப் போனார். ‘இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் எம்.எல்.ஏ பதவி போய்விடும்’ என்று எங்கள் எல்லோரையும் எச்சரித்தார். பதவி போய்விடும் என்று தெரிந்தேதான் நாங்கள் அந்தக் கடிதத்தைக் கொடுத்தோம்’ என்று சத்தமாக தினகரனைப் பார்த்துச் சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன்.’’

‘‘அவர் சொன்ன இன்னொரு சம்பவம் என்ன?’’

‘‘ஜக்கையன் விவகாரம்தான் அது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தது 19 பேர். அதன்பின், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் போய் விளக்கம் அளித்து, தகுதிநீக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். அவரைக் குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘நாம யார் பக்கம் இருக்கிறோம் என்பது ரெண்டாவது விஷயம். ஆனால், பதவியில் இருக்கணும். இப்போதைக்கு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து, நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கப் பாருங்க’ என எங்கள் 18 பேரிடமும் ஜக்கையன் மன்றாடினார். அதையெல்லாம் செய்யாமல் தான், பதவியை இழந்து உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று தினகரனிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.’’

‘‘அப்படியானால் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் பக்கமிருந்து விலகுவாரா?’’

‘‘தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரனைப் பிடிக்கவில்லை; தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி ஆகிய இருவரையும் பிடிக்கவில்லை. ‘இவர்கள் போனால் பரவாயில்லை என்ற மனநிலைக்கு தினகரன் வந்துவிட்டார். ஆனால், இன்னும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களையும் தங்க தமிழ்ச்செல்வன் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு போனால் என்ன செய்வது என்பதுதான் தினகரனின் கவலை. அதற்கு ஏற்றார் போல, தங்க தமிழ்ச்செல்வனுடன் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால்தான், தன் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் மக்கள் கருத்து கேட்பது போல தினகரன் பேசிவருகிறார்’ என்கிறார்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘இந்த இருவர்மீது மட்டும் தினகரனுக்கு ஏன் கோபம்?’’

‘‘தினகரன் அணியில் இருக்கும் மற்ற யாரும் பெங்களூரு சிறைக்குத் தனியாகப் போய் சசிகலாவைப் பார்க்க முடியாது. ஆனால், இவர்களால் அது முடியும்!’’

‘‘புரிகிறது. தங்க தமிழ்ச்செல்வன் இனி தனி ரூட்டில் போவாரா?’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடத்துக்கு அவரால் போகமுடியாது. அ.தி.மு.க-வில் பிரச்னை வந்தபோது, பல மாவட்டங்களில் இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகங்கள் எடப்பாடி அணியின் வசம் வந்துவிட்டன. ஆனால், தேனி மாவட்ட அலுவலகம் மட்டும் இன்னமும் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நினைத்த நேரத்தில் செல்போனில் பேச முடிகிற மிகச் சிலரில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர். ‘ஐந்து பேரையாவது சேர்த்துக்கொண்டு வந்துவிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு எடப்பாடி ஆசை காட்டியிருக்கிறார். அதனால்தான், அவர் ஏதேதோ பேசி குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார். தகுதிநீக்க வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அவரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி’ என்று தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘துரோகம் செய்ய மாட்டேன் என்று சசிகலாவிடம் சிறையில் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன். அதை மீற மாட்டேன்’ என தங்க தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.’’

‘‘ஆண்டிபட்டி தொகுதியில் அவர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாரே?’’

p44c_1529451826.jpg

‘‘ஆமாம். கட்சிக்காரர்கள் புடை சூழ, டிராக்டர் வண்டியில் நின்றுகொண்டு பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘நான் வழக்கை வாபஸ் வாங்கி, பதவியை ராஜினாமா செய்யலாமா?’ என அவர் கேட்டதும், பலரும் ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்றனர். ‘சரி, பின்னர் இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘சந்திக்கலாம், சந்திக்கலாம்’ என்றனர். ‘நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் கண்டிப்பதற்காகவே இதைச் செய்கிறேன். வழக்கறிஞர் குழுவிடம் பேசி, இறுதி முடிவு எடுத்த பின்னர், இதேபோல் உங்களிடம் வந்து எனது முடிவைச் சொல்வேன்’ என்று சொல்லி முடித்தார். தங்க தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ‘சுமார் ஒரு வருடமாக என் தொகுதி, எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை, சாலை இல்லை, பல இடங்களில் சரியாக மின்சாரம் இல்லை. தொகுதி மக்கள் வந்து சொல்லும்போது, மனசு வலிக்கிறது. என் தொகுதி மக்களை நினைத்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். இடைத்தேர்தல் வரட்டும் நாங்கள் யார் என்று காட்டுகிறோம்’ என்று நிருபர்களிடம் சொன்னார் அவர். அது மட்டுமல்ல, ‘18 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தித்தால் அனைவரும் வெற்றி பெறுவார்கள்’ என்றும் சொன்னார்.’’

‘‘திவாகரன் சத்தமே காணோமே?’’

‘‘மன்னார்குடியில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய திவாகரன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேருடன் டெல்லி சென்றார். கட்சிப் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காகத்தான் சென்றதாகச் சொல்லப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லியிலேயே முகாமிட்டார் திவாகரன். ஜூன் 16-ம் தேதி சென்னை வந்தார். தன் ஆதரவாளர்களிடம், ‘நாம் நினைத்தது நடக்க ஆரம்பித்திருக்கிறது. தங்க தமிழ்செல்வன் தினகரனுக்கு எதிராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சிலர் அவரைப் பின்தொடர்வார்கள். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் குறித்த வழக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். தினகரனின் கோட்டையில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.’’

p44e_1529451804.jpg

‘‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே?’’

‘‘ஆமாம். ‘என் பதவியைக் காப்பாற்றுங்கள்’ என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் முதல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை செல்லத்துரை உதவி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாருமே சாதகமான பதில் தரவில்லை. இந்நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் ஜூன் 16-ம் தேதி மதுரை வந்தார். அவர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. உயர் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கைகள் செல்லத்துரையைக் கலங்க வைத்துள்ளது. ‘இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நிறைய இழந்துள்ளேன். திடீரென்று கழற்றி விடுகிறார்கள்’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். முன்பு துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு இதே நிலை ஏற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பெரிய வழக்கறிஞரை நியமித்தார். ஆனால், செல்லத்துரைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்யும் நிலையில் இப்போது உயர்கல்வித் துறை இல்லை. ‘எங்களைச் சிக்க வைத்ததற்குத்தான் இப்போது செல்லத்துரை இப்போது அனுபவிக்கிறார்’ என்று சிறையில் இருக்கும் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கூறி வருகிறார்களாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி

p44d_1529451850.jpgdot_1529451872.jpg தமிழக பெண் வி.ஐ.பி ஒருவரின் திடீர் திருமணம், பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதையும்மீறி கைகோத்தனர். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே  மணவாழ்க்கை கசந்துவிட்டதாம். வீட்டுக்கு எதிரே இருந்த தோட்டத்தில் கடந்த வாரம் வாக்கிங் போனபோது, தம்பதிக்குள் காரசார வாக்குவாதம். ஒரு கட்டத்தில் வி.ஐ.பி மனைவி, கணவரைச் சாத்தி எடுத்துவிட்டாராம். புதுக் கணவர், இதுவரை வீடு திரும்பவில்லை. யார் மனசுல யாரோ.

dot_1529451872.jpgகடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கக் காரணமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்து, அவர்களைக் களையெடுத்து வருகிறார் ஸ்டாலின். இப்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பதவிகளில் கைவைக்கப் போகிறாராம். ‘அவர்களின் உறுப்பினர் கார்டையே புதுப்பிக்காமல், விரட்டி விடப் போகிறார்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!

dot_1529451872.jpg18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறார்கள் தினகரன் அணியினர். ‘இந்தத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப் போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த       கே.சுப்பிரமணியத்திடம் இதுபற்றி தினகரன் டீம் பேசியிருக்கிறது.

dot_1529451872.jpgகடந்த வருட எம்.பி.பி.எஸ் அட்மிஷனில், வெளி மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் சிலர், தமிழகத்தில் வசிப்பதாக போலியாக நேட்டிவிட்டி சான்றிதழ் வாங்கி இடம்பிடித்தனர். இது சர்ச்சையாகி, நான்கு மாணவர்கள் சிக்கினர். ஆனால், அதேபோல இந்த வருடமும் நேட்டிவிட்டி சான்றிதழ் கேட்டு தாசில்தார் அலுவலகங்களைச் சில புரோக்கர்கள் வட்டமடித்துவருகிறார்கள்.

மீண்டும் நிற்க முடியாது!

ழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக, சட்ட நிபுணர்கள் சிலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருக் கிறார். ‘‘வழக்கை வாபஸ் பெற்றாலும், இப்போதுள்ள சட்டமன்றத்தின் ஆயுள்காலம் முடியும்வரை நீங்கள் ஏற்கெனவே ஜெயித்த தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது என்று கருதுகிறோம். ஒருவேளை போட்டியிட்டால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கும் இழுக்கும். எனவே, வேறு ஒருவரைத்தான் ஆண்டிபட்டியில் நிறுத்தவேண்டிவரும்’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதைப் பற்றியும் யோசித்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

தினகரனின் வலதுகரமான பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘‘வழக்கை வாபஸ் வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்தால், சபாநாயகர் அவரது வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகிவிடும். சபாநாயகரின் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் சபாநாயகரை ஜெயிக்கவிடக்கூடாது. நீதிமன்றத்தில் ஜெயித்த பிறகு சட்டசபைக்குள் வெற்றிகரமாக நுழையவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார்.

மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விமலா எடுக்கும் முடிவில் இவர்களின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

https://www.vikatan.com

`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்

1 day 21 hours ago
`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்
 
 
ஓலைச்சுவடி

உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தமிழக அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இதுவரை அறிந்திராத மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடியில் உள்ள தகவலைப் படிக்க உலகம் முழுவதும் ஆர்வலர்களின் உதவி தேவை என நூலகர்கள் தெரிவித்துள்ளனர்.

இருநூறு ஆண்டுகளாக 70,000க்கும் மேலான சுவடிகளை பாதுகாத்துவரும் இந்த நூலகத்தில் உள்ள அரிய சுவடி ஒன்றில் இடம்பெற்றுள்ள செய்தி, எந்த மொழியில், என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள பலமுயற்சிகளை நூலகர்கள் எடுத்துவருகின்றனர்.

ஓலைச்சுவடி

''வெளிநாடுகளில் இருந்து ஓலைச்சுவடிகளை தேடிப் படிக்க வரும் நிபுணர்கள் பலரிடம் இந்த சுவடியை காட்டிவிட்டோம். விளம்பரமும் கொடுத்துவிட்டோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. சிறப்பு கவனம் எடுத்து அந்த சுவடியை பாதுகாத்து வருகிறோம்,'' என்கிறார் தலைமை நூலகர் சந்திரமோகன்.

மொழியறியாத சுவடியோடு, வேறு எங்கும் காணக்கிடைக்காத ஓலைச்சுவடிகளை இந்த நூலகத்தில் காணலாம் என்று அந்த நூலகத்தை நமக்கு அறிமுகப்படுத்தினார் அவர்.

ஓலைச்சுவடி பெட்டகமான நூலகம்

''ஓலைச்சுவடி என்றாலே பட்டையாக, நீளமாக மட்டுமே பார்த்திருப்பீர்கள். இங்கே எங்கள் நூலகத்தில், வட்ட வடிவத்தில், சிவலிங்க வடிவத்தில் சுவடிகள் உள்ளன. திருமுருகாற்றுப்படை சுவடி ஒன்று மிகச்சிறிய வட்ட வடிவு ஓலையில் எழுதப்பட்டுள்ளது. மிகசிறிய அளவில், வெறும் 11 சென்டிமீட்டர் நீளமும், 2.5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட கரிநாள் சுவடி ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்க எழுதிவைக்கப்பட்ட சுவடியில் எழுத்துகள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பெரிய எழுத்துகளை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள உதவிய ஆங்கிலம்-தமிழ் அகராதி உள்ளது,'' என நூலகத்தில் உள்ள அரிய சுவடிகளை நம்மிடம் காட்டினர் சந்திரமோகன்.

ஓலைச்சுவடி Image captionசந்திரமோகன்

மொழிவாரியாக பார்த்தால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, அரபி, பர்மிய மொழி, பாரசீகம், உருது, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்திய மொழிகள், சிங்களம், பிரெஞ்சு, ஜெர்மனி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்பு புத்தகங்களும் இங்குள்ளன.

சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், இயற்கை வளம், வரைபடங்கள், பக்தி இலக்கியங்கள், கோயில் ஆகமங்கள், இலக்கணம், அகராதி போன்ற வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த சுவடிகள் உள்ளன.

ஓலைச்சுவடி

சுவடி நூலகம் தொடங்குவதற்கு முக்கிய முயற்சிகளை எடுத்தவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பணியாற்றிய ஆங்கிலேயே அதிகாரிகள்தான். இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த காலின் மெக்கன்சி, ஆந்திராவில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சி.பி.ப்ரௌன் மற்றும் மொழியியல் அறிஞர் பேராசிரியர் லெய்டன் ஆகியோர் சேகரித்த சுவடிகள்தான் இந்த நூலகத்தை அலங்கரிக்கின்றன. மெக்கன்சியின் பணிக்காலத்திற்குப் பிறகு அவர் இங்கிலாந்து சென்றதாகவும், அவரது மறைவுக்கு பின்னர் சுவடிகளை அவரது மனைவியிடம் ஆங்கிலேய அரசு சுமார் 10,000 பவுண்ட்கள் கொடுத்து அவற்றை பெற்றதாகவும் குறிப்புக்கள் உள்ளன.

ஓலைச்சுவடி

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து சுவடி நூலகத்தை ஆங்கிலேய அதிகாரிகள் தற்காலிகமாக திருப்பதிக்கு மாற்றிப் பாதுகாத்துள்ளனர். சுவடிகளை படித்து, தனியாக ஒரு குறிப்பேட்டில் எழுதிவைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்ட விளக்கப்பதிவேடுகள் வரலாற்று ஆவணங்களாக மாறியுள்ளன.

சுவடிகளைப் பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், ஆர்வத்துடன் வருபவர்களுக்கு ஓலைச்சுவடிகளை தேடித் தரவும், விளக்கவும் நிபுணர்கள் உள்ளனர். ''இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆர்வத்துடன் தகவலைத் தேடி வருபவர்களுக்கு இங்குள்ள தமிழ், உருது, சமஸ்கிருத அறிஞர்கள் உதவுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் வருவதாக தெரிவித்தால், அவர்களின் தேவைக்கு ஏற்ற சுவடிகளை தேடி எடுத்துவைத்துவிடுவோம். ஓலைச்சுவடிகளில் இருக்கும் தகவல்களை கொண்டு தற்கால தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களும் உள்ளன,'' என்கிறார் நூலகர் சந்திரமோகன்.

ஓலைச்சுவடி

பன்னாட்டு அறிஞர்களை ஈர்க்கும் நூலகம்

சுவடிகளை பாதுகாப்பதோடு, 1898ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து புத்தகங்களையும் இந்த நூலகம் வெளியிட்டுள்ளது. முதன்முதலாக வெளியிடப்பட்ட புத்தகத்தில் இந்த நூலகத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள சுவடிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் உள்ள சுவடிகளை ரசாயனங்களைக் கொண்டு பாதுகாக்கின்றனர்; சுவடிகளை படம் எடுத்து மைக்ரோ பிலிமாகவும் சேகரிக்கின்றனர். டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து, இணையத்தில் வெளியிட தமிழக அரசு ரூ.4.50கோடி ஒதுக்கியுள்ளது.

ஜெ.மோகன் Image captionஜெ.மோகன்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜெ.மோகன் கீழ்த்திசை நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார். ''கடந்த ஐந்து ஆண்டுகளாக சமஸ்கிருத இலக்கணம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த நூலகத்தில் உள்ள சுவடிகள் வேறுஎங்கும் கிடைக்கப் பெறாதவையாக உள்ளன. சாப்திகசிந்தாமணி என்ற சுவடியில் உள்ள தகவல்கள் எனது ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது,'' என்கிறார் மோகன்.

ஓலைச்சுவடி நூலகத்திற்கு வரும் இளைஞர்கள் பலர் மருத்துவ குறிப்புக்கள், ஜோதிடம் மற்றும் கணிதம் தொடர்பான தகவல்களை கேட்பதாக நூலகர்கள் கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் ஆராய்ச்சியாளர்கள், சௌதி அரேபியாவைச் சேர்ந்த வலாற்று ஆய்வாளர், சீனா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஆசிரியர்கள் என பலரும் இந்த நூலகத்தை பற்றிய தங்களது கருத்துக்களை பார்வையாளர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil

எய்ம்ஸ் மருத்துவமனையை, மதுரையில் அமைக்க அனுமதி.

2 days 11 hours ago
Edappadi Palaniswami thank Modi for setting up AIIMS மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மதுரையில் மருத்துவமனையை அமைப்படும் என்ற ஆணையை தமிழக சுகாதார செயலாளருக்கு அனுப்பியுள்ளது.

மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும், 60 செவிலியர்களுக்கு இங்கு இடம் கிடைக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி ஒத்துழைப்பு கொடுக்கும். மதுரையில் எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palaniswami-thank-modi-setting-up-aiims-322885.html

எஸ்.வி.சேகருக்கு பிணை

3 days 1 hour ago

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது.

201806201358252569_Egmore-court-granted-

பா.ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 

இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனபோது அவர் பிணைக்கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு பிணை வழங்கியது. மேலும், ஜூலை 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.

 

http://www.virakesari.lk/article/35288

தொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?

3 days 2 hours ago

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த சில நாட்களில் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த பல தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதற்குப் பல நாட்களுக்கு முன்பாக, அவர் நடத்திய போராட்டம் ஒன்றில் சுங்கச்சாவடி தகர்க்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர் சிறையில் இருக்கும்போதே மேலும் சில வழக்குகளிலும் அவர் கைதுசெய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. இந்த நிலையில், அவர் சிறையிலிருந்து வெளிவருவதற்கு முன்பாக வேறு ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவிருக்கிறார்.

பசுமை வழிச் சாலை

தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.

சென்னைக்கும் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான சேலத்திற்கும் இடையில் மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 வழி சாலை அமைக்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படவிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்திற்காக தங்கள் விளை நிலங்களை இழக்கவிருப்பவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். துவக்கத்தில் இந்த எதிர்ப்புகளை அனுமதித்துவந்த தமிழக அரசு, கடந்த சில நாட்களாக கைதுநடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பசுமை வழிச் சாலைபடத்தின் காப்புரிமை FACEBOOK

சில நாட்களுக்கு முன்பாக சேலத்தைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷை சந்தித்த திரைப்பட நடிகர் மன்சூர் அலி கான், "இங்கு இருக்கும் மக்கள் யாரும் 8 வழி பசுமை சாலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. 4 வழிச் சாலைக்கு சுங்கச் சாவடி அமைத்துக் கொள்ளையடிப்பதை 8 வழிச் சாலை அமைத்து பெரிய அளவில் கொள்ளை அடிப்பார்கள். 8 வழி சாலை அமைத்தால் சேலத்தில் வாழ முடியாது" என்று பேசியிருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறை ஜூன் 17ஆம் தேதியன்று சென்னையில் அவரைக் கைதுசெய்தது. அரசுக்கு எதிராக செயல்படுதல், போராட்டத்திற்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பேசிவந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகான் மேற்கண்டவாறு பேசிய கூட்டத்தில் கலந்துகொண்டதைச் சுட்டிக்காட்டி பியூஷும் ஜூன் 18ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். மன்சூர் அலிகான் மீது தொடரப்பட்ட வழக்குப் பிரிவுகளின் கீழேயே இவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் ஆச்சாங்குட்டிப் பகுதியில் 8 வழிச் சாலைக்காக வருவாய் துறையினர் நில அளவை செய்ய வந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளவை செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இயற்கை பாதுகாப்பு குழுவின் நிர்வாகியும், பெரியார் பல்கலைக்கழக மாணவியுமான வளர்மதி பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினார்.

பசுமை வழிச் சாலை

அப்போது பொதுமக்களை போராட்டம் நடத்தத் தூண்டுவது போல் பேசியதாக கூறி அவரை காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களிடம் வளர்மதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து வளர்மதியை குண்டுகட்டாக வேனில் ஏற்றி, காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

சேலம் அடிமலைப் புதூரில் இந்த 8 வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கான அளவீடு நேற்று நடந்தபோது, சம்பந்தப்பட்ட நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நிலத்தில் அழுது புரண்டனர். அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்களில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஏற்கனவே ஜூன் முதல் வாரத்தில் இதே விவகாரம் தொடர்பாக ஆச்சாங்குட்டப் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், மாரிமுத்து ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்களும் சூழல் ஆர்வலர்களும் செயல்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

"எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுக்கும் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்துப் பேசுபவரெல்லாம் கைது செய்யப்படுவது, நாம் ஹிட்லரின் ஆட்சியில் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எடப்பாடி பழனிச்சாமியும் அவர் காவல்துறையும், நமது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிறது. இப்படி அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு வரலாறு சரியான பாடம் கற்பித்திருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல" என தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணித் தலைவருமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்த கைது நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்துமென அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும் கூறியிருக்கிறார்.

பசுமை வழிச் சாலைபடத்தின் காப்புரிமை Getty Images

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து சென்னையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மக்கள் இயக்கங்களுக்கான தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மேதா பட்கரிடம் கேட்டபோது, "இது அதிர்ச்சியளிக்கிறது. முதலில் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டார். இப்போது தொடர்ச்சியாக சமூக செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். விவசாய நிலங்களை எடுத்து சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற வேறு பயன்பாடுகளுக்கு கொடுத்து என்ன சாதிக்கப்போகிறார்கள். எந்த நிபந்தனையும் விதிக்காமல் இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இப்படி எதிர்ப்பவர்களையெல்லாம் கைதுசெய்வதன் மூலம் தமிழகம், காவல்துறை ஆளும் மாநிலமாகிறது என்று சொல்வது தவறு என்கிறார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

செவ்வாய்க்கிழமை காலையில் செய்தியாளர்களை சந்திக்க வந்த அவரிடம் இந்த கைது நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பியபோது, "இந்தத் திட்டத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லையே. இதுபோல போராட்டங்களைத் தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். பியுஷ் மனுஷ் அதனால்தான் கைது செய்யப்பட்டார்" என்று தெரிவித்தார்.

தமிழகம் காவல்துறை ஆளும் மாநிலமாகிறது என்ற கேள்வியே தவறு என்றவர், காவல்துறையால்தான் மாநிலம் அமைதியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

சுந்தர்ராஜன்படத்தின் காப்புரிமை FACEBOOK Image caption சுந்தர்ராஜன்

"இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்று தெரியவில்லை. இம்மாதிரி மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்க வேண்டும். மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை முழுமையாக நடத்தியிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாமல், நிலத்தை அளந்து விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்துவது, எதிர்ப்பவர்களைக் கைதுசெய்வது ஆகியவை ஏற்க முடியாதது" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. அதிக இடங்களைப் பெற்றிருந்தது. அப்படியிருக்கும் நிலையில், இந்தக் கைது நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் தற்போதைய அரசு அது குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

"எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், இந்த முறை செய்ய வேண்டியதைச் செய்துவிட வேண்டுமென நினைக்கிறார். அரசியல் விளைவுகள் பற்றிக் கவலைப்படவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ராமசுப்ரமணியன்.

அ.தி.மு.கவைத் தவிர, பா.ஜ.கவும் இந்த எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "சென்னை-சேலம் பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள். அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சிக்கான ஆதரவு தமிழகத்தில் குறைவு என்பதால், அக்கட்சி வாக்குகளை இழப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ராமசுப்ரமணியன். அவர்களுக்கு உள்ள குறைந்த வாக்கு வங்கி, இம்மாதிரியான நிலைப்பாடுகளால் வெளியேறாது, அதனால் அவர்களுக்குக் கவலையில்லை என்கிறார் அவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் இந்த எட்டுவழிச் சாலைக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-44540473

தேர்தல் ஆணையத்தில் கமல் மனு!

3 days 7 hours ago
தேர்தல் ஆணையத்தில் கமல் மனு!
62.jpg

மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார் கமல்ஹாசன். கூடிய விரைவில் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமென்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும் கொடியையும் மதுரையில் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சி அமைப்புகள் சரிவர இயங்குவதில்லை எனவும், ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார் கமல்ஹாசன். இதற்கு மறுப்பு தெரிவித்தார் தமிழக அமைச்சர் வேலுமணி. கடந்த மே 16, 17, 18 தேதிகளில் நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கமல். மக்களுக்கு என்ன வேண்டுமென்று தெரிந்துகொள்வதே தனது பயணத்தின் நோக்கம் என்று கூறினார். இந்த காலகட்டத்தில், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் மய்யம் விசில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் நடத்தினார். இதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றைப் பதிவு செய்ய, டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கமல் சார்பில் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது தேர்தல் ஆணையம். அவ்வாறு எந்தப் புகாரும் வராததால், யாரும் மக்கள் நீதி மய்யம் கட்சிப்பெயருக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணைய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 20) காலை டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்றார் கமல்ஹாசன். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் சென்றனர். இதன்பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேர்தல் ஆணையத்திற்குச் சில கேள்விகள் இருந்தன. அதற்குப் பதில் சொன்னேன். பெரிதாக எந்த ஆட்சேபணையும் சொல்லவில்லை. கூடிய விரைவில் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்குமென்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார் கமல். இதனால், இன்று மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் அளிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

டெல்லியில் கடந்த எட்டு நாட்களாகப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த கமல், மாலையில் விமானநிலையம் செல்வதற்கு முன்பாக அவரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார். சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான போராட்டம் பற்றிப் பேசியவர், சுற்றுச்சூழல் குறித்துப் பேசினாலே குற்றம் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது என்றும், அந்த ஆதங்கமும் கவலையும் எல்லா குடிமகனையும் போலத் தனக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார். தனது பட நிறுவனத்தின் சார்பாக, நடிகை கவுதமிக்கு கொடுக்கவேண்டிய பணமும் அவருக்கு தரப்பட்டதாகத் தன் பேச்சில் குறிப்பிட்டார் கமல்.

 

https://minnambalam.com/k/2018/06/20/62

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி!

3 days 7 hours ago
மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி!
73.jpg

2018ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார்.

55ஆவது மிஸ் இந்தியா விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் நேற்று (ஜூன் 19) இரவு நடைபெற்றது. ஃபெமினா மாத இதழ் நடத்திய இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட அனுகிரீத்தி சிறந்த இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மானுஷி சில்லர் அவருக்கு கிரீடத்தை சூட்டி கௌரவப்படுத்தினார்.

73a.jpg

இரண்டாம் இடத்தை ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரியும் மூன்றாம் இடத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவும் பெற்றனர்.

தேர்வுக் குழுவில் பிரபல ஃபேஷன் டிசைனர் கௌரவ் குப்தா, கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகர்கள் மலைகா அரோரா, பாபி தியோல், குணல் கபூர் உள்ளிட்டோர் பங்குபெற்றிருந்தனர்.

73b.jpg

பாலிவுட் நடிகர்கள் கரண் ஜோஹரும் ஆயுஷ்மான் குரானாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். கரீனா கபூர், மாதுரி தீட்சித், ஜேக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

73c.jpg

பட்டம் வென்ற அனுகிரீத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவி ஆவார். இந்த ஆண்டு உலக அழகிக்கான போட்டியில் இந்தியா சார்பில் அனுகிரீத்தி கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/k/2018/06/20/73

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்

3 days 10 hours ago
ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்

June 20, 2018

1 Min Read

statlight.jpg?resize=800%2C400

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் திகதி நடந்த பேரணியின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தபோது ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கொள்கலனில் இருந்து சிறிய கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 1,000 தொன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டதன்படி கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2018/84404/

இன்று, நீதிமன்றத்தில்.. ஆஜராகிறார் எஸ்.வி.சேகர்.

3 days 11 hours ago
S.Ve.Shekher will appear in person today in Chennai Allikulam court இன்று ஆஜராகிறார் எஸ்.வி.சேகர்.. சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணை.

போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.

இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உடனே சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. அவர் சந்தோசமாக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் சுற்றி வருகிறார்.

இந்த நிலையில் பல வழக்குகளில், அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகும்படி சேகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் இன்று ஆஜராகிறார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/s-ve-shekher-will-appear-person-today-chennai-allikulam-court-322858.html

சேலம்: 'துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை' - ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்

4 days 1 hour ago

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலந்து ஏரியில் பத்து நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ளது கொட்டணத்தான் ஏரி. பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது.

ஏரியில் மழை காலங்களில் அதிகளவு தண்ணீர் வருவது வழக்கம் இதன் அடிப்படையில் சேலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

இதைப் பயன்படுத்திக் கொண்ட சாயக்கழிவுகளின் உரிமையாளர்கள் சாயக் கழிவுகளை ஆற்றில் கலப்பதோடு சிலர் செப்டிக் டேங் கழிவுகளை நேரடியாக ஏரியில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனால் ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகி விட்டது. .இதனால் தற்போது ஏரி மாசு ஏற்பட்டு மாசடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பத்து நாட்களுக்கு மேலாக துர்நாற்றம்: ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்

இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டு ஏரியில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஏரியில் இறங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றபடி தங்களை பாதுகாக்க வேண்டும் தூய்மையான குடிநீருக்கு வழிவகை செய்ய வேண்டும் சாயக்கழிவுகள் கலப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏரியை தூய்மைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் விரைவில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரப்பரப்பாக காணப்படுகிறது.

 

ஏரியை ஒட்டியுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேறு வழியின்றி தவிக்கின்றனர். எனவே, அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த ஏரியில் மீன்கள் கொத்துகொத்தாக இறந்து மிதந்ததும், இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்த முறையற்ற வகையில் இயங்கின சில சாயப்பட்டறைகள் மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் கொட்டநத்தான் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

p068k26c.jpg

திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் காணொலி வெளியிட்ட இளைஞர் கைது

4 days 10 hours ago
திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் காணொலி வெளியிட்ட இளைஞர் கைது
June 19, 2018
download-7-1-696x376.jpg

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸார்அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த லிங்கனப்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ் (25). இவர் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறார். இவர் கடந்த ஏப்ரம் மாதம் வாட்ஸ் அப்பில் காணொலி ஒன்றை வெளியிட்டார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அவர் சார்ந்த சமுதாயத்தினரை அவதூறாக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்திருந்தார்.

அந்தக் காணொலியில் திருமாவளவனை விமர்சிக்கும் மாதேஷ், தனது ஊர், கிராமம், செல்போன் அனைத்தையும் கூறி சவால் விடுக்கிறார். இதை வாட்ஸ் அப்பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செய்தித் தொடர்பாளர் வெங்கடேஷ் இது குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளித்தார். இதையடுத்து மாதேஷ் மீது பிரிவு 153(a), 294(b), 505(2), 2 மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மாதேஷ் மனுத் தாக்கல் செய்தார். முன் ஜாமீன் மனுவில் விசாரணையை கிருஷ்ணகிரி நீதிமன்றமே நடத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாதேஷ் நேற்று சரண் அடைந்து ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வாட்ஸ் அப்பில் மாதேஷ் வெளியிட்ட காணொலியை நீதிமன்றத்திலேயே பார்த்தார். பின்னர் மாதேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நிராகரித்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் மாதேஷை சேலம் சிறையில் அடைத்தனர்.

 

http://www.pagetamil.com/8849/

வேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு! - விளாசும் பிருந்தா காரத்

5 days ago

`வேதாந்தா குழுமம் பா.ஜ.க-வுக்கு கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இந்தச் சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணை போகிறது” என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

பிருந்தா காரத்

தூத்துக்குடி சி.பி.எம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சில கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேசினேன். இரவில் சீருடை அணியாமல் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து ஆண்களைக் கைது செய்து வருகின்றனர். இதனால், பயந்து குழந்தைகளுடன் ஊர்க் கோயிலில் முன்பாக உறங்குகிறோம் எனப் பெண்கள் கூறினார்கள். இரவு நேரங்களில் இவ்வாறு கைது செய்வதற்கு அனுமதி கொடுத்தது யார். விசாரணை செய்ய வேண்டுமென்றால் பகலில் விசாரணை செய்வதில் என்ன தயக்கம்?

மே 22-ம் தேதி நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக அப்பாவி மக்கள் பலர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதில் மக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போலீஸார்தான். இதுகுறித்து காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் மீதுகூட வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன். இச்சம்பவம் நடைபெற்று 25 நாள்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக்குழு அறிக்கை அரசைக் கட்டாயப்படுத்தாது. இந்த விசாரணைக்குழு மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாதது தெளிவாகவே தெரிகிறது. எனவேதான், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவிகளை அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும்.

வர்த்தகத்தைச் சுலபமாக்குதல் என்ற மோடியின் கொள்கைதான் இத்தகைய துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமாக அமைந்துள்ளது. வேதாந்தா குழுமம், மோடி மற்றும் பா.ஜ.க-வுக்குக் கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணைபோகிறது.

இந்த ஆலையின் விரிவாக்கத்துக்கு முக்கிய காரணம் மோடி அரசும் முந்தைய மத்திய ஆட்சியாளர்களும்தான். அதேபோல இதற்கு தற்போதைய அ.தி.மு.க அரசும் முந்தைய ஆட்சியாளர்களும்தான் காரணம். ஸ்டெர்லைட் ஆலை, மலிவான காப்பரை இறக்குமதி செய்து, அதை மலிவான கூலி கொடுத்து வேலையாட்களைப் பயன்படுத்தி சுற்றுபுறச் சூழலைப் பாழக்கி வருகிறது. இதன் பெயர் தொழில் வளர்ச்சி அல்ல. தொழில் சீரழிவு. போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 6 அப்பாவிகளைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது அரசு. இது தேசியப் பாதுகாப்பு அல்ல. ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனத்துக்கான பாதுகாப்பு” என்றார்.    

 

https://www.vikatan.com/news/tamilnadu/128066-cpim-brindha-karat-slams-bjp-government-over-thoothukudi-massacre.html

ஸ்டெர்லைட் ஆலை, அமிலக் கிடங்கில்... இரசாயன கசிவு.

6 days ago
Tuticorin Collector Sandeep Nandhuri says about Sterlite Industry ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர்.

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று மாலை அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 2 மாதமாக இயங்கவில்லை. ஆலை வளாகத்தில் அமிலங்கள், ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வு விவரங்களை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் என்ன மாதிரியான கசிவு ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்து இந்த குழு ஆய்வு நடத்தியது. பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஆய்வு விவரங்களை அளித்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலைக்குள் கந்த அமிலக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணி நாளை காலை தொடங்கும்.

இன்று இரவு முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். கந்த அமிலத்தை அகற்ற தேவைப்பட்டால் டேங்கர்லாரி பயன்படுத்தப்படும் என்றார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-collector-sandeep-nandhuri-says-about-sterlite-industry-322645.html

மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின்

6 days 9 hours ago
மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயம் ஆகும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு அண்ணாநகர் பகுதி செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் ஜூன் 3-ந் தேதி மட்டும் நாம் கொண்டாடவில்லை. 3-ந் தேதியோடு அவருடைய பிறந்தநாளை முடித்துக்கொள்வது கிடையாது. அடுத்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி வரும் வரையில் கொண்டாட கூடிய வகையிலே, அந்த உணர்வு, தெம்பு, உரிமை, திமிரு நம்மிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் கருணாநிதி பிறந்தநாளை நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தை தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில், கடல் கடந்தும், எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்கு காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர் அவர் என்பதால் தான்.

கருணாநிதி இந்திய நாட்டிற்கு ஜனாதிபதியை உருவாக்கி தந்திருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி தந்திருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் பிரச்சினைகளை எல்லாம் மையமாக வைத்து, உரிமையோடு கேட்க கூடிய மாநில சுயாட்சி என்ற பிரகடனத்தை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி.

உடல் நலிவுற்ற நிலையில் அவர் இப்போது ஓய்வு எடுக்கிறார். நாங்கள் அவரை சென்று பார்க்கும்போது, அவரது காதுக்கு அருகில் சென்று பேசுவோம். அப்போது முக மலர்ச்சியை வெளிப்படுத்துவார்.

அண்ணா அறிவாலயத்துக்கு போகலாமா? என்று கேட்டால் அற்புதமாக ஒரு சிரிப்பு சிரிப்பார். அவருக்கு பேச்சு பயிற்சி நடைபெறும்போது, மிகவும் சிரமப்பட்டு ‘அண்ணா… அண்ணா…’ என்று சொல்வார். ஒரு பேனாவை கையில் கொடுத்தால், அண்ணா என்று எழுதுவார். அண்ணாவையே நாள் முழுவதும், வினாடி தோறும் நினைத்துக்கொண்டு இருக்கும் தலைவர் கருணாநிதி தான்.

சில கட்சி தலைவர்கள் இன்றைக்கு, கருணாநிதி இருந்தால் விட்டிருப்பாரா?, என்கிறார்கள். முன்பு விமர்சித்தவர்கள், இன்றைக்கு கரிசனம் காட்டுகிறார்கள். அதற்கு நன்றி. நாங்கள் கருணாநிதியுடன் வாழ்கிறவர்கள். பயின்றுகொண்டு இருப்பவர்கள்.

அவர் எப்போது எதை செய்வார் என்று யாருக்கும் தெரியாது. அதை கொஞ்சம் நாங்களும் கற்று உள்ளோம். எனவே செய்யலையே என்று வருத்தம் வேண்டாம். நேரம் வரும். உரிய தந்திரத்தை எங்களுக்கு கருணாநிதி கற்றுத்தந்து இருக்கிறார். உரிய நேரத்தில் அதை பயன்படுத்துவோம்.

இன்றைக்கு ஆட்சியில் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் போல இனி செய்யப்படுமா? எவன் பிறந்து வந்தாலும் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆட்சிக்கு வரும் வாய்ப்பை நாம் இழந்தபோது 1.1 சதவீதம் மட்டுமே, அ.தி.மு.க.வுக்கும், நமக்கும் இருந்த வித்தியாசம். ஆனாலும் எதிர்க்கட்சியாக ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.,

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வேண்டும் என்று மக்கள் ஒன்று சேர்ந்து, அரசியல் சாயலின்றி, 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 100-வது நாளில் ஒரு பேரணி நடந்தது. உரிய அனுமதி பெறப்பட்ட போராட்டம் அது. ஆனால் அப்போராட்டத்தில் மக்களை காக்கை, குருவிகளை சுட்டுத்தள்ளுவது போல, மாற்று உடையில் காவலர்கள் சுட்டு தள்ளியுள்ளனர். ‘சைலண்டு புல்லட்’ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒன்று. இதன்மூலம் மத்திய அரசுக்கு, மோடிக்கு தெரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று தெளிவாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் ஒரு அனுதாபமாவது மோடி தெரிவித்தாரா? குஜராத்தில் நடந்தால் சும்மா விட்டிருப்பாரா? வடமாநிலங்களில் இந்த விபரீதம் நடந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாரா? அவருக்கு என் பகிரங்க கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, காட்சி. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருக்கவேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஜெயலலிதா இப்போது இல்லை. இறந்தவரை பற்றி விமர்சிக்க எனக்கு மனதில்லை. கருணாநிதி அப்படி எங்களை உருவாக்கவில்லை. ஆனாலும் சொல்கிறேன், ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் கூட பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவுடன் இருந்திருப்பார், ஆட்சியில் இருந்திருக்க மாட்டார். இறந்த காரணத்தினால் அவர் சிறையில் இல்லை, சமாதியில் இருக்கிறார். ஆனால் இப்போது உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது மத்திய அரசுக்கு எடுபிடி பழனிசாமியாக இருக்கிறார். இந்த ஆட்சியில் எத்தனை கொடுமைகள் நடக்கிறது.

இனி தூத்துக்குடி என்று சொல்லக்கூடாது, சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும். தூத்துக்குடி எம்.எல்.ஏ. என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் அங்கு நடந்த படுகொலையை பற்றி பேசக் கூட எங்களுக்கு சட்டசபையில் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

சட்டசபை ஒரு மாதிரியாக, வித்தியாசமாக நடக்கிறது. எனவே தான் ஒரு மாதிரி சட்டசபையை நாங்கள் நடத்தினோம். பெரும்பான்மை இல்லாதபோதும் திட்டங்கள் போடப்படுகிறது, சட்டங்கள் இயற்றப்படுகிறது. இது ஜனநாயக விரோதம்.

சமீபத்தில் பூவா? தலையா? என்று தமிழகமே நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தது. ஆனால் இரண்டுமே இல்லாமல் நட்டுக்குத்தாக நிற்கிறது, தீர்ப்பு. இது நியாயமா… இது என் கேள்வி அல்ல, மக்களின் கேள்வி. தற்போது வந்துள்ள தீர்ப்பால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மக்களுக்கு ஆபத்து. சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ, இப்படிப்பட்ட நிலை. எனவே யாரை நம்புவது. இனி மக்களை தான் நம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 100-வது பிறந்தநாளையும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் சொல்கிறேன். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மிக விரைவிலேயே தி.மு.க. வின் ஆட்சி உதயம் ஆக போகிறது. தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

http://akkinikkunchu.com/?p=58709

பொங்கி வரும், காவிரி...

6 days 10 hours ago

Flood in Cauverys Hogenakkal amidst heavy rain in Karnataka

பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 40 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு- 12.08 டிஎம்சி ஆக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/flood-cauvery-s-hogenakkal-amidst-heavy-rain-karnataka-322600.html
 

'ந‌ள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்வதை நிறுத்துங்கள்!'- தூத்துக்குடி எஸ்.பி-யிடம் நல்லகண்ணு நேரில் மனு

1 week ago

தூத்துக்குடியில், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்திட வலியுறுத்தியும் கைதுசெய்தவர்களை விடுவிக்கக்கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். 

நல்லகண்ணு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பல கட்சிகள், அமைப்புகள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்கிறோம் எனக் காரணம் கூறி, காவல்துறையினர் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் உண்ணாவிரதம் இருக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது நடவடிக்கையை நிறுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம்  கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அமைதியான முறையில், ஜனநாயக வழியில் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் 13  அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, அதில் பலர் பிணையில் உள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 20 நாள்கள் ஆன நிலையிலும், இன்னமும் வீடுகளைத் தட்டி, நள்ளிரவில்  புகுந்து பெண்களை மிரட்டி, ஆண்களை காவல்துறையினர் கைதுசெய்து வருகின்றனர். தூத்துக்குடியில் மக்கள் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பிவரும் நிலையில், காவல்துறையினரின் இந்தக் கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்துள்ள நிலையில் காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கையால் குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கைது நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ரத்துசெயப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சீல் வைக்கப்பட்டது மட்டும் போதாது. அமைச்சரவையைக் கூட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/127875-police-should-stop-arresting-people-in-thoothukudi-over-sterlite-protest-urges-cpim-leader-nallakannu.html

`தெரியாத வேலையைச் செய்யக் கூடாது’ - கமலை சாடும் முத்தரசன்

1 week ago

``நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது" என்று கடுமையாக விமர்சித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட
7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. ராகுல், சோனியா விடுதலை செய்யச் சொல்லியும் மனிதாபிமானம் அடிப்படையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருந்துவருகிறார்கள்.

தூத்துக்குடியில் அமைதி ஏற்படுத்துவதாகச் சொல்லி பொதுமக்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து சிலர்மீது வழக்கு போட்டு வருகிறார்கள். இதைக் கைவிட வேண்டும். தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள். அதைச் சிலர் எதிர்த்துப் போராடுகிறார்கள். அப்படி, போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்றும் அவர்கள்மீது வழக்கு போடுவதும் கண்டிக்கத்தக்கது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இப்படி அடக்கு முறை இல்லை.
 
காவிரி மேலாண்மை வாரியத்தைப் பற்றி அரசு மறந்தேவிட்டது. கபினி அணை நிறைந்து தண்ணீர் வெளியேறுகிறது. அந்த மாநில முதல்வர் இந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியத்தில் தண்ணீர்விடுவது பற்றி பிரச்னை இல்லை என்று உலக மகா நகைச்சுவை செய்கிறார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வருக்கு நன்றி சொல்கிறார். முதலில் நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது. கமல் சிறந்த நடிகர் என்பது எனக்குத் தெரியும். அதற்கு மேல் எனக்குத் தெரியாது.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் பற்றி சமீபத்தில் ஒரே சட்ட புத்தகத்தைப் படித்துவிட்டு 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்கள். இந்த மாதிரியான தீர்ப்பு மக்கள் ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. தாமதிக்கப்படும் நீதி ஜனநாயகத்தைப் பறிக்கும் செயல். ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, அரசு ஸ்திரத்தன்மையை இழந்துவிட்டது. அதனால் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்து விட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

பசுமை வழி சாலை தேவையில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் மக்கள் போக வேண்டிய தேவை இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த தேவை இருக்கலாம். திரைப்படத்தில் கூலி தொழிலாளிகளுக்காகப் போராடி கூலி உயர்வு பெற்று தருவார். நிஜத்தில் போராடினால் நாடு நாசமாகப் போகும் என்கிறார்கள். நடிகர் ரஜினி. அ.தி.மு.க, பா.ஜ.க மூன்று பேரின் குரலும் ஒன்றாக இருக்கிறது'' என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/127891-green-road-does-not-need-interview-with-muthrasan-in-salem-.html

முதல்முறையாக எடப்பாடியைத் தவிர்த்த ஓ.பி.எஸ்! - அதிரவைத்த அ.தி.மு.க அறிக்கை

1 week ago

அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. 

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்த ஓ.பி.எஸ்., தன்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறி அதிரடி கிளப்பினார். இந்தநிலையில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. இதனால், சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. இதற்கிடையே, சசிகலா ஆதரவுடன் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித் துறையைக் கவனித்து வந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சிறை செல்லும் முன் தினகரனைக் கட்சியின் அ.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக ஓர் உத்தரவை சசிகலா பிறப்பித்தார். ஆனால், மன்னார்குடி குடும்பத்தை ஓரங்கட்டுவது மற்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிச்சத்துக் கொண்டு வருவது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டத்தை நடத்தினார். 

பின்னர், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை ஓரங்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி தரப்பு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் தெரிவித்தது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா நீக்கம், பொதுச்செயலாளர் பதவியே இல்லை, கட்சியிலிருந்து ஒருவரை நீக்க, சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்ட விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குக் கடந்த ஏப்ரலில் அ.தி.மு.க தலைமை அனுப்பி வைத்தது.

அணிகள் இணைப்பு நடந்த காலகட்டத்திலிருந்தே இருவருக்குள்ளும் மறைமுக யுத்தம் நடந்துகொண்டுதான் வருகிறது. அரசு விழாக்களில் அவ்வப்போது இது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பாக நடந்த ஒரு விழாவில், துணை முதல்வர் பெயரைக் குறிப்பிட அமைச்சர் விஜயபாஸ்கர் மறந்துவிட்டார். இதை நினைவூட்டியதும்தான், துணை முதல்வர் பெயரைச் சொன்னார். அதேபோல், கடந்த மார்ச் மாதம் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடந்த கைவினைஞர்கள் தின விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பெயர் இடம்பெறவே இல்லை. இந்த விவகாரம் குறித்து விழாவுக்கு ஏற்பாடு செய்த ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமினை அழைத்து கடிந்துகொண்டாராம் ஓ.பி.எஸ். பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியதால், அந்த விழாவில் ஓ.பி.எஸ். பங்குபெற்றார். 

கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக வேலை பார்த்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல்களை அமைச்சர்கள் வெளிப்படையாக மறுத்தாலும், கட்சியில் பூசல்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கழகத்தின் கொள்கைக் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டு வந்த அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி என இருவரது பெயர்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. அதேபோல், அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டு வந்த வாழ்த்து மற்றும் இரங்கல் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளிலும் அவர்கள் இருவரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.   

இந்தச் சூழலில் தினகரனின் கோரிக்கைகளை நிராகரித்து அ.தி.மு.க பொதுக்குழுவின் தீர்மானங்களை, அதாவது கட்சியின் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அ.தி.மு.க சார்பில் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி அறிக்கையாக வெளியிடப்பட்டது. இரு அணிகளும் இணைந்த பின்னர் முதல்முறையாக அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தவிர்க்கப்பட்டு, அந்த அறிக்கையில் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்சியையும் ஆட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குச் செக் வைக்கும் விதமாகவே ஓ.பி.எஸ் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். கட்சி சார்பில் கடந்த 14ம் தேதியே ஓ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 15ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/tamilnadu/127890-eps-name-missing-in-admks-official-press-release.html

தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!

1 week ago
தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!
 

தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறது. கேட்டால் தடுப்புக் காவல் – கைது என்கிறது.

மதுரை நகரின் ஒத்தக்கடை அருகே உள்ள தாமிரப்பட்டியைச் சேர்ந்த தோழர் முருகேசன், தாயாம்பட்டியைச் சேர்ந்த தோழர் சதீஷ் ஆகிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்களை நேற்று நள்ளிரவு கைது செய்திருக்கிறது. இருவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் தோழர்கள். அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

தற்போது தென்மாவட்டங்களில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிவிட்டது. அறிவிக்கப்படாத அடக்குமுறையை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசின் ஒடுக்குமுறையை அனைவரும் கண்டிக்குமாறு கோருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://thetimestamil.com/2018/06/14/தூத்துக்குடியில்-போராடி/

Checked
Sat, 06/23/2018 - 15:17
தமிழகச் செய்திகள்/தகவல்கள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/151-தமிழகச்-செய்திகள்தகவல்கள்/