'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் உள்வாங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images
கட்டுரை தகவல்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், சென்னை உட்பட இந்தியாவில் உள்ள ஐந்து பெரு நகரங்கள், நிலம் உள்வாங்கும் பிரச்னையை எதிர்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், சில நிபுணர்கள் இதற்கு மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
உலகெங்கிலுமே கட்டடங்கள் சேதமடையும்போது பெரும்பாலும் அந்தக் கட்டடங்களின் கட்டுமானப் பிரச்னைகளே பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், 'நிலம் உள்ளிறங்குவதாலும் கட்டடங்கள் சேதமடைகின்றன; நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கான முக்கியமான காரணம்' என்கிறது அந்த ஆய்வு.
Nature Sustainability ஆய்விதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வின்படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள 2,406 கட்டடங்கள் நிலம் உள்வாங்குவதால் சேதமடையும் அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இதே நிலை இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு நீடித்தால், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் இன்னும் 23,529 கட்டடங்கள் சேதமடையும் என்கிறது இந்த ஆய்வு.
கனடாவில் உள்ள யுனைட்டட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா டெக், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகளைப் பதிப்பித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2030வாக்கில் டோக்கியோவை விட தில்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது இந்த ஆய்வு.
ஐந்து மெகா நகரங்கள்
செயற்கைக்கோள் மற்றும் ராடார் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இன்சார் (Interferometric Synthetic Aperture Radar - InSAR) என்ற முறையில் 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வேகமாக வளரும் ஐந்து மெகா நகரங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் நிலம் சுமார் சராசரியாக 4 மி.மீ. அளவுக்கு உள்வாங்குவது தெரியவந்திருக்கிறது. இந்த நகரங்களில் வசிக்கும் மக்களில், சுமார் 1.9 மில்லியன் மக்கள் இதன் பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும்.
தற்போதைய நிலையில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் மொத்தமாக 2,406 கட்டடங்களின் கட்டமைப்பு பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இதே போக்கு, ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்தால் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூருவில் உள்ள 23,529 கட்டங்களின் அடிப்படைக் கட்டுமானங்கள் சேதமடையக்கூடும் என்கிறது ஆய்வு.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது

ஜவ்வாது மலையில் தங்க புதையல் - கட்டுமானத்திற்காக தோண்டிய போது கிடைத்தது

திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் - சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி

'பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல்'- பல் மருத்துவ உலகில் ஏற்படப் போகும் மாற்றம் என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கு முக்கியக் காரணமாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் என இந்தியாவில் உள்ள ஐந்து மிகப் பெரிய நகரங்களில் 8.3 கோடி பேர் தற்போது வசிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு, 2030வாக்கில் டோக்கியோவைவிட டெல்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது. இதன் காரணமாக, இந்த நகரங்களின் நீர்த் தேவை வெகுவாக அதிகரிக்கும்.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்காக சார்ந்திருக்கும் ஏரிகள், குளங்கள் போன்றவையும் ஆழ்துளைக் கிணறுகளும் தங்கள் நீர்வளத்திற்கு பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருக்கின்றன.
மேலும், நிலத்தடியில் உள்ள நீரைத் தேக்கிவைக்கும் பகுதிகளும் பருவமழையால்தான் புத்துயிர் பெறுகின்றன.
ஆனால், பருவமழை பெய்வதிலும் அந்த நீர் நிலத்தில் உள்வாங்கப்படுவதிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், இப்படி நிலம் கீழிறங்குவதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்கிறது இந்த ஆய்வு.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.
டெல்லியில் அதிகம்
2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த ஐந்து நகரங்களிலும் நிலம் குறிப்பிடத்தக்க அளவில் உள்வாங்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் வருடத்திற்கு 51 மி.மீ. அளவுக்கு நிலம் உள்ளிறங்கியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 31.7 மி.மீயும் மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.
இதுதவிர, ஒவ்வொரு நகரத்திலும் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும், பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை, அடையாற்றின் வெள்ளச் சமவெளி பகுதிகள், வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நீண்ட காலமாகப் படிந்துள்ள களிமண் படிவங்களால் நிலம் உள்வாங்குவதாகவும் கே.கே. நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலம் உள்வாங்குவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
இப்படி நிலம் உள்வாங்கப்படுவதால் கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என இந்த ஆய்வு கூறினாலும், அதன் அர்த்தம் அவை உடனடியாக இடிந்துவிடும் என்பதல்ல என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மாறாக, வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்படும் தருணங்களிலும் மோசமான கட்டுமானப் பணிகளின்போதும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதே இதன் அர்த்தம் என இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் கட்டடத்தின் வயது, அவை எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 'சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்' என்கிறார் எஸ். ராஜா.
நீர் வளத்துறை நிபுணர்கள் கூறுவது என்ன?
ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக வாய்ப்பில்லை என்கிறார்கள் நீர் வளத்துறை நிபுணர்கள்.
"நிலத்தடி நீரை எடுப்பதால் வருடத்திற்கு 4 மில்லி மீட்டர் அளவுக்கு நிலம் உள்ளிறங்கும் என்பது சரியானதாகத் தெரியவில்லை. சென்னையில் பெரிய அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது என்றாலும்கூட, இப்படி நடக்காது" என்கிறார் தமிழக நீர் வளத் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமைப் பொறியாளர் எஸ். ராஜா.
இதற்கான காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். "நிலத்தடியில் நீரைச் சேமிக்கும் நீரகங்கள் (Accufiers) இரண்டு வகையானவை. ஒன்று, அடைபட்ட நீரகம் (Confined Accufier). மற்றொன்று, அடைபடா நீரகங்கள் (Unconfined Accufier). அடைபட்ட நீரகங்களைப் பொறுத்தவரை, நிலத்தடி நீருக்கு மேலும் கீழும் நீர் உள்ளே செல்ல முடியாமல் மூடப்பட்டிருக்கும். இந்த இடங்களுக்கு பல மைல் தூரத்திலிருந்து நீர் வரவேண்டும். ஆனால், அடைபடா நீரகங்களைப் பொறுத்தவரை, அந்த இடத்தில் மழை பெய்தால் அதே இடத்தில் கீழே இறங்கும். இதனால், அந்த இடத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். "
"சென்னையின் பெரும்பகுதிகள் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. அதனால், கோடை காலங்களில் நீர் வற்றினாலும், மழைக் காலங்களில் நீர் மட்டம் உயர்ந்துவிடும். சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. தரமணியைத் தவிர்த்த பெரும் பகுதிகள் மணற் பாங்கானவை. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்" என்கிறார் எஸ். ராஜா.
தரமணி பகுதியின் கீழே களிமண் இருப்பதால் அங்கு மட்டும் நீர் உடனடியாக கீழே இறங்குவது நடக்காது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
சென்னை ஐஐடியின் சிவில் எஞ்சினீயரின் துறையின் வருகை பேராசிரியரான எல். இளங்கோவும் இதே கருத்தை வேறு காரணங்களை முன்வைத்து சுட்டிக்காட்டுகிறார்.
"முதலில் இந்தத் தரவுகள் எப்படி வந்தன என்பதைப் பார்க்கலாம். செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்களைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது, செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்கள் கதிர்களை கீழே அனுப்பி, திரும்பப் பெறும். நிலப்பரப்பிற்கும் ராடாருக்கும் இடையிலான தூரம் கணக்கிடப்படும்."
"நிலப்பகுதி உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ இந்த முறையில் பதிவாகும் என்பதுதான் புரிதல். 2015ல் இருந்து 2023 வரையிலான தரவுகளை வைத்து, இந்த ஆய்வு முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த நகரங்களில் நிலம் சற்று கீழிறங்கியிருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. சென்னை ஐஐடியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளுக்கு முன்பாக, கொல்கத்தா நகருக்கு இதே போன்ற ஆய்வுகளைச் செய்திருக்கிறோம். ஆனால், செயற்கைக்கோள் ராடார் தரவுகளை மட்டும் பயன்படுத்தி இதனை மேற்கொண்டால், முடிவுகள் துல்லியமாக இருக்காது.'' என்கிறார் எல். இளங்கோ.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொல்கத்தா நகர கட்டடங்கள்
'சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல'
மேலும் ''இந்த ஆய்வைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு தவறுகள் நேரக்கூடும் என்பதையெல்லாம் கணக்கிட்டு, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றாலும்கூட, நிதர்சனத்தில் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். கொல்கத்தாவிலும் டெல்லியிலும் இதுபோல நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அங்கு ஆற்றுப் படிமங்கள் அதிகம். இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சினால், அதற்கு மேலே உள்ள களிமண் சுருங்கி, நிலம் கீழே இறங்கும். ஆனால், சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல.'' என்கிறார் எல். இளங்கோ
''சென்னையில் வேளச்சேரியிலும் தரமணியிலும் தரைக்குக் கீழே களிமண் இருக்கிறது. ஆனால், இந்த ஆய்வில் அந்தப் பகுதிகளில் நிலம் இறங்குவதாக குறிப்பிடப்படவில்லை. அடையாறு, அதன் தென் பகுதிகளில் தரைக்கு கீழே பாறைகள்தான் உள்ளன. சென்னை ஐஐடிக்கு கீழேயும் பாறைகளே உள்ளன. வடபழனியிலும் விருகம்பாக்கத்திலும் நிலத்தடி மணற்பாங்கானது. வேளச்சேரியிலும் தரமணியிலும் இதுபோல நடக்கலாம் என்றாலும், அங்கு நடப்பதில்லை. காரணம், சென்னையைப் பொறுத்தவரை மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில்தான் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் உடனடியாக கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். ஆகவே அங்கும் நிலம் கீழே இறங்க வாய்ப்பில்லை."
"கொல்கத்தா போன்ற நகரங்களில் சில கட்டடங்கள் உள்ளே இறங்கியிருப்பதை நாம் சாதாரணமாகவே பார்க்க முடியும். இத்தாலி, ரோம் போன்ற இடங்களில் சில பழங்காலக் கட்டடங்கள் இதுபோல கீழே இறங்குகின்றன. ஆனால், சென்னையில் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்த ஆய்வுகளைப் பொறுத்தவரை வெறும் ராடார் தரவுகளை மட்டும் நம்பாமல், நேரிலும் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஏதாவது சில கட்டடங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, கட்டடங்கள் உண்மையிலேயே இறங்குகின்றனவா என்பதை கணக்கிட்டிருந்தால் இது சிறப்பானதாக இருந்திருக்கும்" என்கிறார் பேராசிரியர் எல். இளங்கோ.
'விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும்'
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் எஸ். ராஜா. "இந்த ஆய்வு முடிவில் கே.கே. நகர், தண்டையார் பேட்டை பகுதிகளில் நிலம் அதிகம் கீழே இறங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அம்மாதிரி இடங்களில் சில கட்டடங்களைத் தேர்வுசெய்து அவை ஒரு வருடத்திற்கு எத்தனை மி.மீ. கீழே இறங்குகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென நவீன கருவிகள் இருக்கின்றன. அந்தத் தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்கிறார் அவர்.
இந்த ஆய்வில் குறிப்பிடப்படும் வேறொரு தகவல் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் எல். இளங்கோ.
அதாவது, பல இடங்களில் நிலம் இறங்குவதாகக் குறிப்பிட்டாலும் டெல்லியின் துவாரகா போன்ற பகுதிகளில் நிலம் சற்று உயர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "ஆனால், இதுபோல நிலம் மேலே உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு" என்கிறார் எல். இளங்கோ.
இருந்தாலும், நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக உறிஞ்சுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும் என்கிறார் அவர்.
நிலத்தடி நீர் கண்மூடித்தனமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்க என்ன செய்வது?
"தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் நிர்வாக) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதனை கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் எஸ். ராஜா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Athavan News
பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்...

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...













































