தமிழகச் செய்திகள்

விஜய் கட்சியை சேர்ந்தவர்களை ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும்

2 months 3 weeks ago

“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது.

இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? - திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு:

ADVERTISEMENT

“குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.”

இது தந்திரமா? - “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர்.

இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள்.

அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது.

விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார்.

எப்படி உருவானது இந்த வெற்றிடம்? - “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர்.

அவர் கூறியதாவது: "திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது.

இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும்.

இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார்.

‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்...’ - தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும்.

“ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா?

அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம்.

‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA' viral speech about TVK cadres and an insight into Vijay's politics - hindutamil.in

'தூத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்' - என்ன நடந்தது?

2 months 4 weeks ago

தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்கா

படக்குறிப்பு, கடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் புகைப்படங்கள்

கட்டுரை தகவல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பணியாற்றிவந்த ஐந்து தமிழர்கள் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 27 வயதான தளபதி சுரேஷ். இவர் கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர், 36 வயதான இசக்கிராஜா. இவர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்.

மற்ற மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த புதியவன், கலப்பை பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகியோர் அந்த மூவர்.

இவர்கள் அனைவருமே மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டுவந்த மின்சாரத் திட்டம் ஒன்றில் பணியாற்றிவந்தனர். இவர்கள் ஐந்து பேரும் வியாழக்கிழமையன்று கடத்தப்பட்டனர்.

ஏற்கனவே மாலியில் பணியாற்றிவிட்டு தற்போது ஊருக்குத் திரும்பியுள்ள ஜோசப், தனக்கு முதலில் தகவல் வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"அங்கு என் மாமா பணியாற்றி வருகிறார். அவர் வியாழக்கிழமையன்று இரவில் எனக்கு போன் செய்தார். இதுபோல ஆட்களைப் பிடித்துச் சென்றுவிட்டதாக அவர் சொன்னார். இந்தத் தகவல் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கும் என்ற காரணத்தால் நான் அவர்களிடம் சொல்லவில்லை. நாளிதழ்களில் செய்தி வந்ததைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு இது குறித்துத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. இப்போது மொத்தம் ஐந்து பேர் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்று ஜோசப் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர், மாலியின் கோப்ரியில் சர்வேயராகப் பணியாற்றிவிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஊர் திரும்பியிருக்கிறார்.

மாலியிலிருந்து பிபிசியிடம் பேசிய மோகன் ராஜா

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மாலியிலிருந்து பிபிசியிடம் பேசிய மோகன்ராஜ்

இந்தக் கடத்தல் எப்படி நடந்தது?

கடத்தல் தொடர்பாக மாலியில் இருந்து ஜோசப்பிற்குத் தகவல் தெரிவித்த மோகன்ராஜிடம் கேட்டபோது, அவர் அன்று இரவு நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"கோப்ரி என்ற கிராமத்தில் மின் தொடரமைப்புப் பணிகளைச் செய்துவந்தோம். மொத்தம் 18 தமிழர்கள் அந்த முகாமில் இருந்தோம். வியாழக்கிழமையன்று இரவு ஒன்பது மணி இருக்கும். இசக்கிராஜாவும் சிவபாலனும் ஒரே வீட்டில் இருந்தார்கள். இசக்கிராஜா வெளியில் உட்கார்ந்திருந்தார். அப்போது துப்பாக்கியுடன் சிலர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து இறங்கினார்கள்.

இசக்கிராஜாவைப் பிடித்து 'உங்கள் தலைவர் யார்' எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் மேல் அறைக்கு அழைத்துச் சென்று சிவபாலனைக் காட்டியிருக்கிறார். அவரையும் பிடித்துக்கொண்டார்கள். அதற்குப் பிறகு விளக்குகள் எரிந்த அடுத்த அறைக்குச் சென்றவர்கள் அங்கிருந்த சுரேஷ், பேச்சிமுத்து, பொன்னுத்துரை, புதியவன் ஆகியோரைப் பிடித்தனர்.

எல்லோரையும் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, ஒரு வாகனம் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் சாவி என்னிடம் இருந்தது. சிவபாலனிடம் அந்தச் சாவியை வாங்கிவரும்படி சொன்னார்கள்.

என்னுடைய வீடு அங்கிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்தது. அவர் வந்து கதவைத் தட்டி விஷயத்தைச் சொன்னதும், அந்த வீட்டிலிருந்த நான், சிவபாலன், மேலும் நான்கு பேரும் பின்னால் இருந்த வேலி வழியாக வெளியேறிவிட்டோம். அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்களையும் எச்சரித்து வெளியேற்றிவிட்டோம்.'' என்றார் மோகன்ராஜ்.

தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்கா

படக்குறிப்பு, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர்

சிவபாலன் திரும்ப வராத நிலையில், மீதமிருந்த ஐந்து பேரின் சட்டையையும் கழற்றி, அவர்களது கைகளைக் கட்டி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். எல்லாம் 15 நிமிடத்திற்குள் நடந்துவிட்டது என்கிறார் மோகன்ராஜ்.

''அவர்களில் ஒருவர் மட்டும் எந்திரத் துப்பாக்கி வைத்திருந்தார். மற்றவர்கள் கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் போனில் சிக்னல் இல்லை என்பதால் உடனடியாக யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் அரபியும் ஆங்கிலமும் கலந்து பேசினார்கள். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்கிறார் மோகன்ராஜ்.

இந்த மின் தொடரமைப்புப் பணிகளை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செய்துவருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கோப்ரியில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஒப்பந்ததாரராக பணியாற்றிவந்தார். அவர் மூலமாக தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்குச் சென்றனர்.

'ஊருக்குத் திரும்புவதாக இருந்தது'

"இங்கே இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் வேலைபார்த்துவந்தோம். வேலை முடியும் கட்டத்தை நெருங்கிவிட்டதால் எல்லோரும் நாடு திரும்பிவிட்டார்கள். நாங்களும் இந்த மாத இறுதியில் ஊருக்குத் திரும்புவதாக இருந்தது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்கிறார் மோகன்ராஜ்.

கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்கிறார் மோகன்ராஜ். தலைநகர் பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். கடத்தப்பட்டவர்கள் தவிர்த்த மீதமுள்ளவர்கள் பமாகோவில் ஒரு முகாமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்தப்பட்ட தகவல்கள் இப்போதுதான் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை மீட்டுத்தர வேண்டுமென கோரியுள்ளனர்.

தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)

2012ஆம் ஆண்டிலிருந்தே மாலி, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அல் - காய்தா மற்றும் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொண்டுவருகின்றன.

இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையால் நாட்டின் பல இடங்களில் எரிபொருள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டுப் பணியாளர்களை வைத்து மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் கடத்தப்படுவது அங்கு இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது.

தற்போதைய சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களை மீட்டுத்தரும்படி இந்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டிருப்பதாக தமிழ்நாடு அயலக தமிழர்கள் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மாலியில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்களை உடனடியாக மீட்டுத்தர ராஜ்ஜிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். வெளியுறவுத் துறையின் செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், பிற சர்வதேச ஏஜென்சிகளுடன் சேர்ந்து இவர்களை பத்திரமாக மீட்பதற்கான உதவிகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gp4yzkqw9o

டெல்லி கார் வெடிப்பு: இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புத் தீவிரம்

2 months 4 weeks ago

Published By: Digital Desk 1

11 Nov, 2025 | 11:43 AM

image

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும்  வெளிமாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர், மேலதிக பொலிஸ் கண்காணிப்பாளர், பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அரச விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், விடுதிகளில் உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் இலக்கம் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள்  அனுமதிக்கின்றனர்.

15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால்  “தேவசேனா”  என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புபிரிவு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்  மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடற்கரைப் பகுதிகளில்  பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர பொலிஸார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள்  மூலமாக வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, ஏர்வாடி ராமேஸ்வரம் ஆகிய மூன்று  கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏர்வாடி தர்கா சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/230067

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் உள்வாங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

3 months ago

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இறங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், சென்னை உட்பட இந்தியாவில் உள்ள ஐந்து பெரு நகரங்கள், நிலம் உள்வாங்கும் பிரச்னையை எதிர்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், சில நிபுணர்கள் இதற்கு மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலுமே கட்டடங்கள் சேதமடையும்போது பெரும்பாலும் அந்தக் கட்டடங்களின் கட்டுமானப் பிரச்னைகளே பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், 'நிலம் உள்ளிறங்குவதாலும் கட்டடங்கள் சேதமடைகின்றன; நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கான முக்கியமான காரணம்' என்கிறது அந்த ஆய்வு.

Nature Sustainability ஆய்விதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வின்படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள 2,406 கட்டடங்கள் நிலம் உள்வாங்குவதால் சேதமடையும் அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

இதே நிலை இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு நீடித்தால், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் இன்னும் 23,529 கட்டடங்கள் சேதமடையும் என்கிறது இந்த ஆய்வு.

கனடாவில் உள்ள யுனைட்டட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா டெக், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகளைப் பதிப்பித்துள்ளனர்.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2030வாக்கில் டோக்கியோவை விட தில்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஐந்து மெகா நகரங்கள்

செயற்கைக்கோள் மற்றும் ராடார் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இன்சார் (Interferometric Synthetic Aperture Radar - InSAR) என்ற முறையில் 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வேகமாக வளரும் ஐந்து மெகா நகரங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் நிலம் சுமார் சராசரியாக 4 மி.மீ. அளவுக்கு உள்வாங்குவது தெரியவந்திருக்கிறது. இந்த நகரங்களில் வசிக்கும் மக்களில், சுமார் 1.9 மில்லியன் மக்கள் இதன் பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும்.

தற்போதைய நிலையில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் மொத்தமாக 2,406 கட்டடங்களின் கட்டமைப்பு பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இதே போக்கு, ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்தால் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூருவில் உள்ள 23,529 கட்டங்களின் அடிப்படைக் கட்டுமானங்கள் சேதமடையக்கூடும் என்கிறது ஆய்வு.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கு முக்கியக் காரணமாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் என இந்தியாவில் உள்ள ஐந்து மிகப் பெரிய நகரங்களில் 8.3 கோடி பேர் தற்போது வசிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு, 2030வாக்கில் டோக்கியோவைவிட டெல்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது. இதன் காரணமாக, இந்த நகரங்களின் நீர்த் தேவை வெகுவாக அதிகரிக்கும்.

இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்காக சார்ந்திருக்கும் ஏரிகள், குளங்கள் போன்றவையும் ஆழ்துளைக் கிணறுகளும் தங்கள் நீர்வளத்திற்கு பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருக்கின்றன.

மேலும், நிலத்தடியில் உள்ள நீரைத் தேக்கிவைக்கும் பகுதிகளும் பருவமழையால்தான் புத்துயிர் பெறுகின்றன.

ஆனால், பருவமழை பெய்வதிலும் அந்த நீர் நிலத்தில் உள்வாங்கப்படுவதிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், இப்படி நிலம் கீழிறங்குவதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்கிறது இந்த ஆய்வு.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.

டெல்லியில் அதிகம்

2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த ஐந்து நகரங்களிலும் நிலம் குறிப்பிடத்தக்க அளவில் உள்வாங்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் வருடத்திற்கு 51 மி.மீ. அளவுக்கு நிலம் உள்ளிறங்கியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 31.7 மி.மீயும் மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஒவ்வொரு நகரத்திலும் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும், பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை, அடையாற்றின் வெள்ளச் சமவெளி பகுதிகள், வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நீண்ட காலமாகப் படிந்துள்ள களிமண் படிவங்களால் நிலம் உள்வாங்குவதாகவும் கே.கே. நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலம் உள்வாங்குவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இப்படி நிலம் உள்வாங்கப்படுவதால் கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என இந்த ஆய்வு கூறினாலும், அதன் அர்த்தம் அவை உடனடியாக இடிந்துவிடும் என்பதல்ல என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மாறாக, வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்படும் தருணங்களிலும் மோசமான கட்டுமானப் பணிகளின்போதும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதே இதன் அர்த்தம் என இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் கட்டடத்தின் வயது, அவை எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்' என்கிறார் எஸ். ராஜா.

நீர் வளத்துறை நிபுணர்கள் கூறுவது என்ன?

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக வாய்ப்பில்லை என்கிறார்கள் நீர் வளத்துறை நிபுணர்கள்.

"நிலத்தடி நீரை எடுப்பதால் வருடத்திற்கு 4 மில்லி மீட்டர் அளவுக்கு நிலம் உள்ளிறங்கும் என்பது சரியானதாகத் தெரியவில்லை. சென்னையில் பெரிய அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது என்றாலும்கூட, இப்படி நடக்காது" என்கிறார் தமிழக நீர் வளத் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமைப் பொறியாளர் எஸ். ராஜா.

இதற்கான காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். "நிலத்தடியில் நீரைச் சேமிக்கும் நீரகங்கள் (Accufiers) இரண்டு வகையானவை. ஒன்று, அடைபட்ட நீரகம் (Confined Accufier). மற்றொன்று, அடைபடா நீரகங்கள் (Unconfined Accufier). அடைபட்ட நீரகங்களைப் பொறுத்தவரை, நிலத்தடி நீருக்கு மேலும் கீழும் நீர் உள்ளே செல்ல முடியாமல் மூடப்பட்டிருக்கும். இந்த இடங்களுக்கு பல மைல் தூரத்திலிருந்து நீர் வரவேண்டும். ஆனால், அடைபடா நீரகங்களைப் பொறுத்தவரை, அந்த இடத்தில் மழை பெய்தால் அதே இடத்தில் கீழே இறங்கும். இதனால், அந்த இடத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். "

"சென்னையின் பெரும்பகுதிகள் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. அதனால், கோடை காலங்களில் நீர் வற்றினாலும், மழைக் காலங்களில் நீர் மட்டம் உயர்ந்துவிடும். சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. தரமணியைத் தவிர்த்த பெரும் பகுதிகள் மணற் பாங்கானவை. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்" என்கிறார் எஸ். ராஜா.

தரமணி பகுதியின் கீழே களிமண் இருப்பதால் அங்கு மட்டும் நீர் உடனடியாக கீழே இறங்குவது நடக்காது என்கிறார் அவர்.

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இறங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

சென்னை ஐஐடியின் சிவில் எஞ்சினீயரின் துறையின் வருகை பேராசிரியரான எல். இளங்கோவும் இதே கருத்தை வேறு காரணங்களை முன்வைத்து சுட்டிக்காட்டுகிறார்.

"முதலில் இந்தத் தரவுகள் எப்படி வந்தன என்பதைப் பார்க்கலாம். செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்களைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது, செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்கள் கதிர்களை கீழே அனுப்பி, திரும்பப் பெறும். நிலப்பரப்பிற்கும் ராடாருக்கும் இடையிலான தூரம் கணக்கிடப்படும்."

"நிலப்பகுதி உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ இந்த முறையில் பதிவாகும் என்பதுதான் புரிதல். 2015ல் இருந்து 2023 வரையிலான தரவுகளை வைத்து, இந்த ஆய்வு முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த நகரங்களில் நிலம் சற்று கீழிறங்கியிருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. சென்னை ஐஐடியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளுக்கு முன்பாக, கொல்கத்தா நகருக்கு இதே போன்ற ஆய்வுகளைச் செய்திருக்கிறோம். ஆனால், செயற்கைக்கோள் ராடார் தரவுகளை மட்டும் பயன்படுத்தி இதனை மேற்கொண்டால், முடிவுகள் துல்லியமாக இருக்காது.'' என்கிறார் எல். இளங்கோ.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா நகர கட்டடங்கள்

'சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல'

மேலும் ''இந்த ஆய்வைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு தவறுகள் நேரக்கூடும் என்பதையெல்லாம் கணக்கிட்டு, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றாலும்கூட, நிதர்சனத்தில் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். கொல்கத்தாவிலும் டெல்லியிலும் இதுபோல நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அங்கு ஆற்றுப் படிமங்கள் அதிகம். இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சினால், அதற்கு மேலே உள்ள களிமண் சுருங்கி, நிலம் கீழே இறங்கும். ஆனால், சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல.'' என்கிறார் எல். இளங்கோ

''சென்னையில் வேளச்சேரியிலும் தரமணியிலும் தரைக்குக் கீழே களிமண் இருக்கிறது. ஆனால், இந்த ஆய்வில் அந்தப் பகுதிகளில் நிலம் இறங்குவதாக குறிப்பிடப்படவில்லை. அடையாறு, அதன் தென் பகுதிகளில் தரைக்கு கீழே பாறைகள்தான் உள்ளன. சென்னை ஐஐடிக்கு கீழேயும் பாறைகளே உள்ளன. வடபழனியிலும் விருகம்பாக்கத்திலும் நிலத்தடி மணற்பாங்கானது. வேளச்சேரியிலும் தரமணியிலும் இதுபோல நடக்கலாம் என்றாலும், அங்கு நடப்பதில்லை. காரணம், சென்னையைப் பொறுத்தவரை மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில்தான் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் உடனடியாக கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். ஆகவே அங்கும் நிலம் கீழே இறங்க வாய்ப்பில்லை."

"கொல்கத்தா போன்ற நகரங்களில் சில கட்டடங்கள் உள்ளே இறங்கியிருப்பதை நாம் சாதாரணமாகவே பார்க்க முடியும். இத்தாலி, ரோம் போன்ற இடங்களில் சில பழங்காலக் கட்டடங்கள் இதுபோல கீழே இறங்குகின்றன. ஆனால், சென்னையில் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்த ஆய்வுகளைப் பொறுத்தவரை வெறும் ராடார் தரவுகளை மட்டும் நம்பாமல், நேரிலும் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஏதாவது சில கட்டடங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, கட்டடங்கள் உண்மையிலேயே இறங்குகின்றனவா என்பதை கணக்கிட்டிருந்தால் இது சிறப்பானதாக இருந்திருக்கும்" என்கிறார் பேராசிரியர் எல். இளங்கோ.

'விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும்'

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் எஸ். ராஜா. "இந்த ஆய்வு முடிவில் கே.கே. நகர், தண்டையார் பேட்டை பகுதிகளில் நிலம் அதிகம் கீழே இறங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அம்மாதிரி இடங்களில் சில கட்டடங்களைத் தேர்வுசெய்து அவை ஒரு வருடத்திற்கு எத்தனை மி.மீ. கீழே இறங்குகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென நவீன கருவிகள் இருக்கின்றன. அந்தத் தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்கிறார் அவர்.

இந்த ஆய்வில் குறிப்பிடப்படும் வேறொரு தகவல் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் எல். இளங்கோ.

அதாவது, பல இடங்களில் நிலம் இறங்குவதாகக் குறிப்பிட்டாலும் டெல்லியின் துவாரகா போன்ற பகுதிகளில் நிலம் சற்று உயர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "ஆனால், இதுபோல நிலம் மேலே உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு" என்கிறார் எல். இளங்கோ.

இருந்தாலும், நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக உறிஞ்சுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும் என்கிறார் அவர்.

நிலத்தடி நீர் கண்மூடித்தனமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்க என்ன செய்வது?

"தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் நிர்வாக) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதனை கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் எஸ். ராஜா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj6nwzy9g66o

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

3 months ago

Nov 5, 2025 - 05:38 PM

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர். 

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது. 

தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். 

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmhlyenbk01f6qplpl1ll93f5

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

3 months ago

New-Project-39.jpg?resize=750%2C375&ssl=

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முதல் விவசாயிகளின் இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்கள் வரை 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது, கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கட்சி கடுமையாகக் கண்டித்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. 

திமுக அரசு “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டது” என்றும், “பெண்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றும் குற்றம் சாட்டிய TVK, முதலமைச்சர் “தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வாரா” என்றும் கேள்வி எழுப்பியது.

மற்றொரு தீர்மானத்தில், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த TVK, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான தலையீட்டைக் கோரியது.

கனமழைக்கு மத்தியில் டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு TVK திமுக அரசை கடுமையாக சாடியது. 

அரசாங்கத்தின் “செயலற்ற தன்மை 20 லட்சம் தொன் இழப்புக்கு வழிவகுத்தது” என்று கட்சி குற்றம் சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரியது.

வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டிய மற்றொரு தீர்மானம், முழுமையடையாத மழைநீர் வடிகால்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியது. 

வெள்ளத்தைத் தடுக்க ரூ.4,000 கோடி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறும் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

Athavan News
No image previewபொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்...
கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். க

கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை

3 months ago

கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை

4 Nov 2025, 1:54 AM

Police arrest 3 men for gang-raping student

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி அருகே கடந்த ஞாயிறன்று இரவு கல்லூரி மாணவி தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். சிறிது தொலைவில் வைத்து மாணவியை கொடூரமான வகையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்த நிலையில் மாணவியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை தேடிய போலீசார் நேற்று அதிகாலையில் நிர்வாணமாக இருந்த நிலையில் அவரை மீட்டனர். இதைத்தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பெண்கள் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மகளிரணி தலைவரும், கோவை எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தலைமையில் நேற்று மாலை பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுட்டு பிடித்த காவல்துறை

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, நள்ளிரவில் கோவை வெள்ளகிணறு பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

https://minnambalam.com/police-arrest-3-men-for-gang-raping-student/

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!

3 months ago

New-Project-16.jpg?resize=750%2C375&ssl=

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!

தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், 

இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளையும் கைது செய்தது.

அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ச்சியான இந்த சம்பவங்கள் தமிழக மீனவ சமூகங்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஏனெனில் அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அச்சமும் குடும்பங்களின் முதன்மை வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல், ஆழ்ந்த பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது.

தற்போது 114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன. 

எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் உடனடியாக இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்று அவர் கோரினார்.

https://athavannews.com/2025/1451918

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

3 months 1 week ago

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.

கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார்.

அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

https://www.vikatan.com/
No image previewசென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...

'தென்கடலில் விழுந்த யாரும் பிழைத்ததில்லை'- கடலில் 26 மணி நேரம் மிதந்து உயிர்பிழைத்த சிவமுருகன்

3 months 1 week ago

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15.

கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து 5 மணிநேரம் கடந்திருந்தது.

"என் கண் முன்னே, ஒரு கடல் மைல் தொலைவில் (1.8 கிமீ) சில படகுகள் என்னைத் தேடிக்கொண்டிருந்தன. தொண்டைக்குள் கடல் நீர் சென்று, புண்ணாகி இருந்தது, உதவிகேட்டு கத்த முடியவில்லை. அமாவாசை இரவில், கடல் நீரிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நான் தவிப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. சில மணிநேரங்களில் அந்த படகுகள் கரைக்கு திரும்பிச் சென்றன. நான் அங்கேயே மிதந்து கொண்டிருந்தேன்" என பிபிசி தமிழிடம் அன்று நடந்ததை விவரித்தார் சிவமுருகன்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.

கடந்த மாதம் 20ஆம் தேதி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார்.

நடந்தது என்ன?

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்தச் சம்பவத்திற்கு 2 வாரங்கள் முன் தான் முதல்முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கியிருந்தார் சிவமுருகன்.

"வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு செட்டிகுளத்தில் இருந்து கிளம்பி, 4.30 மணிக்கு சின்னமுட்டத்திலிருந்து மீன்பிடிக்க படகில் புறப்படுவோம். சனிக்கிழமையும் (செப்டம்பர் 20) அப்படிச் சென்று, வலை விரித்து, மீன் பிடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பத் தொடங்கினோம்."

"இரவு 8 மணிக்கு, சிறுநீர் கழிக்கலாம் என படகின் ஒரு ஓரத்திற்கு வந்தேன். ஜிபிஎஸ் கருவி மூலம் கடைசியாகப் பார்த்தபோது, நாங்கள் கன்னியாகுமரி கரையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் இருந்தோம். அப்போது திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. படகு குலுங்கியதும், நான் நிலைதடுமாறி கடலில் விழுந்துவிட்டேன். விழுந்ததும், நீச்சல் அடித்து, தண்ணீருக்கு மேலே வந்து கத்தினேன். ஆனால், படகின் எஞ்சின் சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை." என்கிறார் சிவமுருகன்.

தொடர்ந்து பேசிய அவர், "10-15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் நான் திரும்பி வராததால், என் தம்பி வெளியே வந்து என்னைத் தேடியுள்ளான். நடந்ததைப் புரிந்துகொண்டு, சத்தம் போட்டு அனைவரையும் அழைத்து, ஜிபிஎஸ் கருவி மூலம் வந்த பாதையை கணக்கிட்டு, படகை திருப்பிக் கொண்டுவந்து என்னைத் தேடினார்கள். ஆனால், அதற்குள் அலைகள் என்னை 1 கடல் மைல் தூரம் வரை இழுத்துச் சென்றிருந்தன"

"அவ்வளவு பெரிய கடலில், அதுவும் அமாவாசை இரவில், தலையை நீட்டிக்கொண்டு, கைகளை உயர்த்தி கத்திக்கொண்டிருந்த என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. டீசல் பிரச்னை காரணமாக அவர்கள் திரும்பிவிட்டார்கள். மீண்டும் சில படகுகளுடன் வந்து என்னை தேடினார்கள். படகுகளின் விளக்குகளைப் பார்த்து கத்தினேன், கைகளை அசைத்தேன், சில மணிநேரங்களில் அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அதையே செய்துகொண்டிருந்தேன்." என்கிறார்.

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அதிகமாக கடல் நீர் வாய்க்குள் சென்றதால், தொண்டையில் புண்கள் ஏற்பட்டும், முகத்தில் தொடர்ந்து அலைகள் அடித்ததால் தோல் உரிந்தும், கண்களில் உப்பு நீர் பட்டு அதிக எரிச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டதாகக் கூறுகிறார் சிவமுருகன்.

"அந்த இரவில் சுற்றி எந்த வெளிச்சமும் இல்லாத அந்த நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது கரைக்கு சென்றுவிட வேண்டும், உயிர் இங்கேயே போய்விட்டால், குடும்பம் என்னவாகுமென்று கவலை. நீரில் எளிதாக மிதக்கும் வகையில், எடையைக் குறைக்க அணிந்திருந்த டி-ஷர்டை கழற்றி எறிந்தேன். அப்போது தான் உடலெங்கும் ஏதோ ஒன்று கடிக்கத் தொடங்கியது" என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.

"புழுக்களைப் போன்ற ஜெல்லி மீன்கள் அவை. உடலில் ஒட்டிக்கொள்ளும், கொஞ்சம் விட்டால் தோலில் துளை போட்டு விடும் என ஊரில் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தேன். தொடர்ந்து கை, கால்களை அசைத்து மிதந்து கொண்டே இருந்ததால், உடல் சோர்வடையத் தொடங்கியது. சில சமயங்களில் நீரில் மூழ்கினாலும், தன்னிச்சையாக நீச்சல் அடித்து மேலே வந்துவிடுவேன். மறுநாள் காலை (செப்டம்பர் 21) சூரியனைக் கண்டதும், எப்படியும் நீந்தி கரையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது." என்கிறார்.

'தென்கடல் மிகவும் ஆபத்தானது'

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்கடலில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும் என்கிறார் பவுலின்.

கரையைத் தேடி நீந்தத் தொடங்கிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்தத் திசையில் நீந்தினாலும் கடல் அலைகள் மற்றும் காற்று அவரை வேறு திசையில் தள்ளியது. பிடிப்பதற்கு ஒரு கட்டை கூட கண்ணில் தென்படாத நிலையில், அலைகளால் அங்குமிங்கும் வீசப்பட்ட அவர், நீந்தும் முயற்சியைக் கைவிட்டார்.

"எப்படி நீந்தினாலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன் என்று தோன்றியது. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. குளிரில் கால்கள் மரத்துப் போயிருந்தன. சூரிய அஸ்தமனம் முடிந்து, இருள் சூழத் தொடங்கியதுபோது, உடலில் இருந்த தெம்பும், மன தைரியமும் மொத்தமாக போயிருந்தது. தென்கடலில் காணாமல் போன யாரும் பிழைக்க மாட்டார்கள் என ஏன் சொல்கிறார்கள் எனப் புரிந்தது. இதற்கு மேலும் அவதிப்படமுடியாது என தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போது எனக்கு தெரியாத ஒன்று, ஊருக்குள் நான் இறந்துவிட்டேன் என அறிவித்திருந்தார்கள். என் உடலாவது கிடைக்காதா என குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தார்கள் என்பது" என்றார்.

"ஆனால், மூழ்க முயற்சி செய்தாலும், என்னால் மூச்சை அடக்க முடியாமல், மேலே வந்துகொண்டே இருந்தேன். எனவே அதிக கடல் நீரை குடித்தேன். இந்த முறை நிச்சயம் மூழ்கி விடலாம் என நினைக்கும்போது, தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது." என்கிறார் சிவமுருகன்.

சிவமுருகன் பிழைத்து வந்தது ஒரு அதிசயம் தான் எனக் கூறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் மற்றும் எழுத்தாளர் பவுலின். 50 வருடங்கள் மீன்பிடி தொழிலில் அனுபவம் கொண்ட இவர், பிற கடல் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்கடல் மிகவும் ஆபத்தானது எனக் கூறுகிறார்.

"ராமநாதபுரத்தின் சேதுக்கரை, கீழக்கரை தொடங்கி குமரிக்கரை வரை விரிந்திருக்கிறது தமிழகத்தின் தென்கடல். அதில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும். எனவே அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும். அத்தகைய கடற்பகுதியில் தவறி விழுந்த ஒருவர், 24 மணிநேரம் கடந்து உயிர்பிழைப்பது என்பது மிகவும் அரிது. காரணம், கடலின் அதீத குளிர் உடலை உருக்கிவிடும். கால்கள் மரத்துப் போய் மேற்கொண்டு மிதக்க முடியாமல், மூழ்கத் தொடங்கிவிடுவோம். உடல் சோர்வடைந்து கடல் நீரைக் குடிக்கத் தொடங்குவார்கள், அது உடலில் நீர் வற்றலை ஏற்படுத்தும்." என்று கூறுகிறார்.

ஆழ்கடலின் நீரோட்டத்தால் எவ்வளவு நீந்தினாலும் கரையைக் கண்டறிவது கடினம் எனக்கூறும் பவுலின், "ஒரு கட்டை போன்று ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக்கொண்டே மிதப்பது நீண்ட நேரம் மிதக்க உதவும். ஆனால், 24 மணிநேரத்துக்கும் மேல் வெறுமனே கை, கால்களை அசைத்துக்கொண்டே மிதப்பது மிகவும் கஷ்டம். உடல் ஒரு கட்டத்தில் தளர்ந்து, மூழ்கி விடும்" என்கிறார்.

கடல் நீரில் தவறி விழுந்தால் ஏற்படும் பிரச்னைகள்

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இனி மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாமென குடும்பத்தினர் கூறிவிட்டதாகக் சிவமுருகன் தெரிவிக்கிறார்.

கடல் நீரில் அதிக உப்பு உள்ளது. மனிதர்கள் கடல் நீரைக் குடிக்கும்போது, மனித உடலின் செல்கள் தண்ணீரையும் உப்பையும் உறிஞ்சிக் கொள்கின்றன. மனித சிறுநீரகங்கள் உப்பு நீரை விட குறைவான உப்புத்தன்மை கொண்ட சிறுநீரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எனவே, கடல் நீரைக் குடிப்பதன் மூலம் உறிஞ்சப்படும் அதிகப்படியான உப்பை அகற்ற, நீங்கள் குடித்ததை விட அதிக தண்ணீரை சிறுநீராக கழிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் நீரிழப்பால் உயிரிழக்க நேரிடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் கடல் நீரைப் பருகக் கூடாது.

அதேபோல, குளிர்ந்த நீரில் (15°C க்கும் குறைவான எந்த வெப்பநிலையிலும்) இருக்கும்போது, உங்கள் உடல் ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். இது நடந்தால், சுவாசம் மற்றும் இயக்கத்தின் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். குளிர்ந்த நீரால் ஏற்படும் அதிர்ச்சி உங்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கச் செய்து, மாரடைப்பை ஏற்படுத்தும்.

'எந்த மாதிரியான நீர்நிலையில் தவறி விழுந்தாலும் முதலில் பதற்றப்படாமல் மிதப்பது மிகவும் முக்கியம், அதோடு நிதானமாக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மிதப்பதற்கு உதவ உங்கள் கைகளையும் கால்களையும் மெதுவாக நகர்த்தலாம். நிலைத்தன்மையை மேம்படுத்த உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்கவும், உங்கள் கால்கள் மூழ்கினாலும் பரவாயில்லை. முழு உடலும் மிதக்கவில்லை என்றாலும், நீருக்கு மேலே தலை பின்னோக்கி சாய்ந்து, முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்' என பிரிட்டனின், ராயல் நேஷனல் லைஃப் போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) அறிவுறுத்துகிறது.

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

படக்குறிப்பு, தனது மகன் சிவராதேஷுடன் சிவமுருகன்.

தான் பார்த்த அந்த ஒளி ஒரு படகின் முகப்பு விளக்கு என்பதைப் புரிந்துகொண்ட சிவமுருகன், அதன் பிறகு நடந்தவற்றை விவரித்தார்.

"முழு பலத்தையும் திரட்டி கைகளை அசைத்தேன். எப்படியோ அவர்களும் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்னை நோக்கி படகைத் திருப்பினார்கள். நானும் அவர்களை நோக்கி நீந்தினேன். கடலில் இருந்து யார் என்னை தூக்கினார்கள், என்ன பேசினார்கள் என ஒரு 30 நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. டீ, பிஸ்கட்டுகளை சாப்பிட்ட பின் தான் கண்களைத் திறக்க முடிந்தது. கூத்தன்குழி கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவரின் படகு அது. அவரும் அவரது மீனவக் குழுவும், கடலில் விரித்திருந்த வலையை எடுக்க வந்திருந்தார்கள்." என்கிறார்.

கடலிலிருந்து மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு, கரைக்கு வந்தபிறகு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சிவமுருகனுக்கு திருமணமாகி ஐந்து வயதில் சிவராதேஷ் என்ற மகன் இருக்கிறார்.

"கடந்த ஒரு மாதத்தில், ஒருமுறை கூட கடலில் கால் வைக்கவில்லை. இனி கடலுக்கு செல்லக்கூடாது என மகன் தொடங்கி குடும்பத்தினர் அனைவரும் கூறிவிட்டார்கள். இன்னும் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனக்கு இப்படி ஆன பின்பு எனது சகோதரன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டான்."

"அவ்வப்போது கரையில் நின்று கடலைப் பார்ப்பேன். உடலில் ஜெல்லி மீன்கள், தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் என அந்த இரவில் மிதந்தவாறு நான் பார்த்த கடல் தான் இப்போதும் எனக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியை மறக்கும் வரை என்னால் கடல் நீரில் கால்களை நனைக்க முடியாது." என்கிறார் சிவமுருகன்.

(தற்கொலை எண்ணங்கள், மன சோர்வு உள்ளிட்டவை இருந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து ஆலோசனைகளும், உதவியும் பெறலாம்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn09rvgrxygo

தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!

3 months 1 week ago

தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!

28 Oct 2025, 8:18 PM

tvk management meeting will be held in panaiyur

தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதனையடுத்து தனது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். அதன்படி கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழுவை இன்று நியமித்து உத்தரவிட்டார்.

பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் கழக உறுப்பினர் மரிய வில்சன் என 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/tvk-management-meeting-will-be-held-in-panaiyur/

கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

3 months 1 week ago

கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

vijay.png

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.

கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கரூரில் கடந்த செப்-27ம் திகதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை.

ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் மீண்டும் இரண்டு பேருந்துகள் மூலம் கரூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, விடுதி வளாகத்தில் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

https://akkinikkunchu.com/?p=346422

'குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?

3 months 1 week ago

கண்ணகி நகர் கார்த்திகா, குகேஷ், தமிழ்நாடு அரசு, ஊக்கத்தொகை

பட மூலாதாரம், olympics.com

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • 28 அக்டோபர் 2025, 02:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த செய்தி வெளியானது முதலே, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியதுடன் ஒப்பிட்டு, கபடியில் சாதித்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை மிகவும் குறைவு என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு

கண்ணகி நகர் கார்த்திகா, குகேஷ், தமிழ்நாடு அரசு, ஊக்கத்தொகை

பட மூலாதாரம், olympics.com

கார்த்திகா, அபினேஷ் இருவருமே தத்தமது அணிகள் தங்கம் வெல்வதில் முக்கிய பங்கை ஆற்றியிருந்தாலும், கூடுதலான கவனம் கார்த்திகாவின் பக்கம் திரும்பியுள்ளது.

கார்த்திகா சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக குடியிருப்புகளில் வசிப்பவர். நகரின் பல்வேறு இடங்களில் குடிசை வீடுகளில் இருப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அரசு சார்பில் வழங்கப்படும் மாற்று குடியிருப்புகள் இவை. இந்த குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்று பல முறை புகார்கள் எழுந்துள்ளன.

விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில் அங்குள்ள பூங்காவிலேயே கார்த்திகா கபடி விளையாட்டை கற்றுள்ளார். அவரின் தாய் துப்புரவு ஊழியராக இருந்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார், அவரது தந்தை கட்டுமானத் தொழிலாளி ஆவார்.

வெற்றிப்பெற்று கண்ணகி நகருக்கு திரும்பிய கார்த்திகாவுக்கு அப்பகுதியினராலும், காவல்துறை சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

"வேலைக்கு செல்லும் போது 'கண்ணகி நகரில்' இருந்து வருகிறேன் என்று கூறுவதே தாழ்வாக பார்க்கப்படும். இப்போது நான் 'கண்ணகி நகர் ஆளு' என்று பெருமையுடன் கூறுவேன், இப்பகுதியினரும் அதில் பெருமை கொள்ள முடியும்" என்று கார்த்திகா ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். கண்ணகி நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் அதை செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கண்ணகி நகர் கார்த்திகா, குகேஷ், தமிழ்நாடு அரசு, ஊக்கத்தொகை

பட மூலாதாரம், olympics.com

படக்குறிப்பு, கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ்

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களை தவிர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரும் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

வீடியோ அழைப்பின் (வீடியோ கால்) மூலம் கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ஒரு கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் .

சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், சதுரங்க ஆட்டத்தில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி, பனிச்சறுக்கு விளையாட்டில் வென்ற ஆனந்த் குமாருக்கு ரூ.1.8 கோடி கொடுத்த பெருந்தன்மையான தமிழக அரசு கபடி வீரர்கள் இருவருக்கும் தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

"குகேஷுக்கு ரூ.5 கோடி, கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்தானா?" என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் செயலை ஆதரித்தும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

கார்த்திகாவைப் போலவே, தங்கம் வென்ற ஆண்கள் அணியில் இடம்பெற்ற அபினேஷ் மோகன்தாசும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர் தான். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தந்தையை இழந்தவர். தேனியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயின்றவர் ஆவார்.

கண்ணகி நகர் கார்த்திகா, குகேஷ், தமிழ்நாடு அரசு, ஊக்கத்தொகை

பட மூலாதாரம், TNDIPR

ஊக்கத்தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

கார்த்திகாவுக்கும் அபினேஷுக்கும் வழங்கப்பட்ட தலா ரூ.25 லட்சம் இரண்டு அலகுகளாக பிரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் /உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறினார்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் உயரிய ரொக்க ஊக்கத்தொகையாக (High Cash Incentive) ரூ.15 லட்சமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக ரூ.10 லட்சமும் என ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. உயரிய ரொக்க ஊக்கத்தொகை அரசு வெளியிட்டுள்ள ஆணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். அது தவிர, இருவரின் விளையாட்டை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தாமாக முன் வந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக வழங்க முடிவு செய்துள்ளது." என்று விளக்கம் அளித்தார்.

எந்த விளையாட்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை?

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2019-ம் ஆண்டு அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெண்கலம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம் உயரிய ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அந்த அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதே போன்று, ஆசிய இளைஞர் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.10 லட்சம், மற்றும் வெண்கலம் வெல்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.60 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும்.

அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இருந்தால், அதில் தங்கம் வெல்பவருக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்பவருக்கு ரூ. 50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும்.

இவை தவிர பல்வேறு போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்த விவரங்களை அரசாணை குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் விளக்கம்

இது வரை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மேற்குறிப்பிட்ட அரசாணைக்கு உட்பட்டே வழங்கப்பட்டது என்று மேகநாத ரெட்டி கூறினார்.

'குகேஷுக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சமா?' என்று குறிப்பிட்டு எழுந்துள்ள விமர்சனம் குறித்து கேட்ட போது, "இரண்டு விளையாட்டுகளை, இரண்டு போட்டிகளை ஒப்பிடுவதே தவறு. ஆசிய போட்டிகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் வெவ்வேறானவை. ஐந்து ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் ஒப்பிடக் கூடாது.

கார்த்திகாவின் திறமையை, பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது வெற்றியின் காரணமாக தமிழ்நாடு பெருமை கொள்கிறது, அதே போன்று தான் அபினேஷின் வெற்றியும். அவர் அரசு விடுதியில் பயின்றவர். அரசாணைப்படி அவர்களுக்கு ரூ.15 லட்சம் தான் ஊக்கத்தொகை. ஆனால் அவர்களின் அபாரமான விளையாட்டை அங்கீகரிக்கும் வகையிலேயே கூடுதலாக பத்து லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று தான் குகேஷுக்கும். தமிழ்நாட்டில் ஊக்கத்தொகை வழங்க மிக நேர்த்தியான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடுகள் சரியல்ல" என்று கூறினார்.

கண்ணகி நகர் கார்த்திகா, குகேஷ், தமிழ்நாடு அரசு, ஊக்கத்தொகை

பட மூலாதாரம், கவிதா செல்வராஜ்

படக்குறிப்பு, இந்திய கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்

கபடி அணி பயிற்சியாளர் கூறியது என்ன?

இந்திய கபடி அணியின் தற்போதைய பயிற்சியாளரும் கபடியில் சர்வதேச அளவில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் (40), "இப்போது ஊடக கவனம் அதிகம் இருப்பதால் இந்த வெற்றிகள் வெளியில் தெரிகின்றன. அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைப்பது மகிழ்ச்சி. கபடிக்கு, அதுவும் ஆசிய இளைஞர் போட்டிக்கு ரூ.25 லட்சம் கொடுத்திருப்பது குறைவானது அல்ல. நான் 2010-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. 2009 தெற்கு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது" என்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் அவர், "2005-ம் ஆண்டு விளையாட்டு கோட்டாவில் அல்லாமல் எனது சொந்த முயற்சி மற்றும் தகுதியில் காவல்துறையில் சேர்ந்தேன். காவல்துறையில் இருக்கும் போது தான் நான்கு சர்வதேச பதக்கங்களை வென்றேன். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன்" என்கிறார்.

மேலும் பேசிய அவர், "உடல் ரீதியாக அதிக உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14pe5z4g1yo

தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - எப்படி நடைபெறும்?

3 months 1 week ago

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட உள்ளது.

போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் , சமீபத்தில் பிகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தை "வாக்கு திருட்டு" எனக் கூறி நிராகரித்துள்ளது. மேலும் நிஜமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சுமத்தியிருந்தது.

முதல் கட்ட சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்ததாக ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வருகிற 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எஸ்.ஐ.ஆர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தீவிர திருத்தம் எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட இருக்கிறது?

  • அந்தமான் நிகோபார்

  • சத்தீஸ்கர்

  • கோவா

  • குஜராத்

  • கேரளா

  • லட்சத்தீவு

  • மத்தியப் பிரதேசம்

  • புதுச்சேரி

  • ராஜஸ்தான்

  • உத்திரப் பிரதேசம்

  • மேற்கு வங்கம்

  • தமிழ்நாடு

சிறப்பு தீவிர திருத்ததுக்கான தேவை பற்றி முன்னர் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஞானேஷ் குமார் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

"கடந்த சில தசாப்தங்களாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் குறைபாடு உள்ளது எனப் புகார் அளித்துள்ளனர். 1951 - 2004 வரை எட்டு முறை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டு 21 வருடங்கள் ஆகிவிட்டது." எனத் தெரிவித்தார்.

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அங்கு சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டது. அங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், ECI

படக்குறிப்பு, டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அவசியத்திற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

அவை

  • விரைவான நகரமயமாக்கல்

  • மக்கள் இடப்பெயர்வு

  • இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெறுவது

  • வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது

பிகார் மக்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதாக ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்தப் பணியின் போது தேர்தல் ஆணையத்துடன் பல தேர்தல் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

சராசரியாக ஒவ்வொரு 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் ஒரு வட்டார நிலை அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது.

வட்டார நிலை அலுவலர் பணிகள் என்ன?

  • புதிய வாக்காளர் பெயர்களை சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ சேகரித்து அவற்றை பட்டியலுடன் இணைக்க உதவி செய்வது

  • படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவுவது

  • ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை செல்வது. நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிகமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இணையத்திலும் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யலாம்

  • இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு செய்த வாக்காளர்களை அடையாளம் காண்பது

  • முதல் கட்டத்தில் வாக்காளர் படிவத்துடன் வேறு எந்த ஆவணமும் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் யாவை?

அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் என்பது குடியுரிமை, இருப்பிடம் அல்லது பிறந்த நாளுக்கான சான்று இல்லை எனத் தெரிவித்த ஞானேஷ் குமார், ஆனால் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அதை ஒரு அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

முக்கியமான நாட்கள்

அச்சிடுதல்/பயிற்சி: அக்டோபர் 28 - நவம்பர் 3, 2025

வீடு வாரியாக சென்று தகவல் சேகரிப்பது: நவம்பர் 4 - டிசம்பர் 4, 2025

வரைவு வாக்காளர் பட்டியல்: டிசம்பர் 9, 2025

ஆட்சேபனை தெரிவிக்கும் காலகட்டம்: டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026

ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு: டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 7 , 2026

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

அசாம் ஏன் இடம்பெறவில்லை?

நவம்பர் மாதம் நடைபெறும் பிகார் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடங்களில் அசாம் இடம்பெறவில்லை. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கான விளக்கத்தை வழங்கினார் ஞானேஷ் குமார்.

"இந்திய குடியுரிமை சட்டத்தில் அசாமிற்கு தனி பிரிவுகள் உள்ளன. மேலும் அங்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் குடியுரிமை சரிபார்ப்பு திட்டம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது."

"எனவே ஜூன் 24-ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணை ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. ஆனால் அது அசாமிற்கு மட்டும் பொருந்தாது. எனவே அந்த மாநிலத்திற்கென்று தனி ஆணை பிறப்பிக்கப்படும்." என்றார்.

எனினும் பிகாரில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டு தலைவர்கள் சொல்வது என்ன?

சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம்." எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள S.I.R எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் திருத்தப்பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள் தான் செய்யப்போகிறார்கள் என்பதால் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதில் " சதி" உள்ளது என்பது உண்மைதான். வாக்காளர் திருத்த பட்டியல் தமிழகத்தில் முறையாக நடக்குமா என்பது சந்தேகமே." எனத் தெரிவித்தார்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் தமது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj6n1w6w915o

இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

3 months 2 weeks ago

இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

adminOctober 26, 2025

chennai-court.png?fit=759%2C427&ssl=1

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடாரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதற்குப் பழிவாங்கும் விதமாக, தனிமைச் சிறைக்கு மாற்றி அதிகாரிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனா் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.நதியா, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளின் இன்ஹேலா்களைக்கூட சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவது இல்லை என்று வாதிட்டாா்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் சட்டத்தரணி ஏ.கோகுலகிருஷ்ணன், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க புழல் சிறைத் துறை நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா்.

மேலும், மனுவுக்கு வரும் நவம்பர் மாதம் 3-ஆம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

https://globaltamilnews.net/2025/222002/

வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

3 months 2 weeks ago

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

பட மூலாதாரம், imd.gov.in

24 அக்டோபர் 2025, 05:54 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 27ஆம் தேதி) வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

''மேற்கு-வடமேற்கு திசையில் இது மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிறகு, வருகின்ற 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 27ம் தேதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்) மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ மழை பதிவாகியது.

நெல்லையில் நாலுமுக்கு பகுதியில் 12 செ.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செ.மீ மழை பதிவாகியது. கன்னியாகுமரி பேச்சிப்பாறையிலும் சென்னை மேடவாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பெய்தது.

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், Getty Images

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மேல் நிலவுகிறது.

அதாவது லட்சத்தீவிலிருந்து 340 கி.மீ வடமேற்கிலும், கோவாவிலிருந்து 430 கி.மீ தென்மேற்கிலும் கர்நாடகாவிலிருந்து 480 கி.மீ மேற்கிலும் நிலை கொண்டுள்ளது.

இது அரபிக் கடலில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இரவு முதல் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரும் அதிகரித்துள்ளது.

கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று மாலை காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1qdr4d93o

தவெக உட்கட்சி மோதல்

3 months 2 weeks ago

டிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு?

Published On: 22 Oct 2025, 6:32 PM

| By Minnambalam Desk

TVK Party Cadres Internal Conflict

வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே..

நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா..

எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்?

எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு..

தவெகவில் அப்படி யார் யாருக்கு இடையே சண்டை.. விளக்கமாக சொல்லுமய்யா..

தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார்னு 2-ம் கட்ட தலைகள் இருக்கிறாங்க.. இவங்கதான் கட்சி..

இவங்க எல்லோருக்கும் மேல ‘ஜான் ஆரோக்கியசாமி’ இருக்கிறாரு.. இவருக்கும் கட்சிக்குமே தொடர்பு இல்லை.. விஜய்-க்கு தேர்தல் வியூக வகுப்பாளர் அல்லது ஆலோசகர்.

சரி.. இதுல யார் யாருக்கு இடையே போட்டி.. முட்டல் மோதல்?

அப்படி எல்லாம் ஒன்லைனில் சொல்லிவிடவா முடியும்? புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் மோதல் இருக்கு; புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருக்குமே கட்சிக்கே தொடர்பே இல்லாத, ஆனால் கட்சியை கண்ட்ரோல் செய்கிற ஜான் ஆரோக்கியசாமி மேல ‘காண்டு’ இருக்கு.. புஸ்ஸி, ஜான், ஆதவ், ஜான், நிர்மல்னு அத்தனை பேர் மீதும் அருண்ராஜூக்கு ஆத்திரம் இருக்கு.. “என்ன பெரிய 2-ம் கட்ட ‘தலைகள்’.. அவங்களுக்கும் மேல நான்னு” எல்லா கட்சி நிர்வாகிகளையும் நினைக்கிறாராம் ஜான்..

image-255-1024x570.png

யோவ்.. என்னய்யா தலையே சுத்துது..

இதுக்கே இப்படின்னா.. இப்ப சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கே getoutbussy anand-ங்கிற மாதிரியான ஹேஷ்டேக்குகள்.. புஸ்ஸி ஆனந்தால்தான் தவெக கட்சியே நாசமா போச்சு.. கரூர் சம்பவமே நடந்துச்சு.. கரூருக்கு பிறகு ஓடிப் போய் புஸ்ஸி பதுங்கிட்டதால கட்சியே முடங்கிப் போச்சு.. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றனும்னு அந்த ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்க்கிறாங்க.

அந்த ஹேஷ்டேக்கில் வேற என்ன சொல்றாங்க?

தவெகன்னு ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பே இல்லை.. பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிச்சா போதுமா? அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு எப்ப பொறுப்பாளர்களை நியமிப்பாங்க? அப்படி எல்லாம் நியமிக்காமலேயே ஆட்சியை பிடிப்போம்னு அலப்பறை விடுறது நல்லாவா இருக்கு?ன்னு ஓபனாகவே விமர்சிக்கிறாங்கப்பா

சரிய்யா.. இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? அவரு என்ன சொல்றாரு?

இந்த அக்கப்போர் பற்றி விஜய் கவனத்துக்கு போனதா? இல்லையான்னு? அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.. அந்த சோர்ஸ்களோ மூச்சுவிடாமல் அத்தனையையும் நம்மிடம் கொட்டிட்டாங்க..

என்னப்பா சொன்னாங்க..

நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “எங்க சார் (விஜய்) பொதுவாக எதையும் தேடிப் பார்த்து தெரிஞ்சுக்கமாட்டாரு.. அவருக்கு பட்டினப்பாக்கம் ஆபீசு, பனையூர் ஆபீசு – வீடு இதுக்கு மட்டும் போகத் தெரியும்.. நீங்க சொல்ற சோசியல் மீடியா சண்டை, வெட்டு குத்து எல்லாம் சாருக்கு எதுவுமே தெரியாது.. இதை எல்லாம் தேடிப் படிக்கிறவரும் இல்லை.. இதுதான் எங்க சாரோட கேரக்டர்” என அதிர்ச்சியை தந்தபடியே அடுத்த மேட்டருக்கு தாவினார்.

“எங்க சாரைப் பொறுத்தவரைக்கும் அவரும் யாரையும் அதிகமாக தொடர்பு கொள்ளமாட்டார்; யாரும் அவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.. இரவு 9 மணிக்கு மேல தன்னோட ரூமுக்கு போனா காலையில அவரா எழுந்து வெளியே வரும் வரைக்கும் வெயிட் செஞ்சுதான் ஆகனும்.. அவரா ரொம்ப சில பேர்கிட்ட மட்டுமே போனில் பேசுவார்.. அவங்க அப்பா கூட நேரடியாக சார் கிட்ட பேசமாட்டாரு.. சாரோட உதவியாளர் மூலமாகத்தான் பேசுவாரு” என்று அடுத்த ஷாக் கொடுத்தார் அந்த நண்பர்.

அத்துடன், “புஸ்ஸி ஆனந்த்- ஆதவ்- ஜான் இவங்களுக்கு இடையே மோதல் இருக்குன்னு மதுரை மாநாடு நடந்தப்பவே லேசாக புரிஞ்சுகிட்டாரு சார்.. அதனாலதான் மாநாடு முடியட்டும் பேசிக்கலாம்னு சொல்லி இருந்தாரு.. மாநாடு முடிஞ்சதும் இவங்க அக்கப்போருக்கு பஞ்சாயத்துன்னு பெருசா சார் நடத்தலை… எல்லாம் சரியாகிடும்னு சார் நினைச்சாரு.. எங்க சாரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு யூஸ் செய்யனும் நினைக்கிறாரு..

கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் ஜான் சொன்னதாலதான் கரூரில் இருந்து கிளம்பினாரு.. ஜான் சொன்னதாலதான் கருருக்கு திரும்பவும் போகலை.. ஜான் சொல்றதைத்தான் சாரும் கேட்பாரு” என ஜான் ஆரோக்கியசாமி விவகாரத்துக்கு வந்தார் அந்த நண்பர்.

தவெக உட்கட்சி மோதல் பற்றி விஜய்க்கு நெருக்கமான அந்த நண்பர் நம்மிடம் கூறும் போது, “கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாரே”ன்னு ஜான் ஆரோக்கியசாமி மேல புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே கோபம்.. ஜான் சொல்றபடி எங்க சார் நடந்துக்கிறாரு.. ஆனா அது அத்தனையும் திமுகவுக்கு சாதகமாக போகுதுன்னு புஸ்ஸி சந்தேகப்படுறாரு.. அதாவது ஜான் ஆரோக்கியசாமி திமுகவோட ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோன்னு புஸ்ஸிக்கு செம்ம டவுட்.. இதை ஓபனாக கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி சொல்ல இது ஜான் காதுக்கும் போனது..

அப்ப புஸ்ஸிக்கும் ஜானுக்கும் இடையே பயங்கர சண்டையாகிடுச்சு.. “கரூரில் இருந்து தளபதியை நீங்கதானே ரிட்டர்ன் வர சொன்னது”ன்னு புஸ்ஸி பாய, ஜான் ஆரோக்கியசாமியோ, “இத்தனை நாளாக பயந்தா கொள்ளி மாதிரி ஓடிப் போய் பதுங்கிட்டு இப்ப வந்து பேசுறாரு பாரு.. தளபதி வந்தாருன்னா நீங்க கரூருக்கு ரிட்டர்ன் போயிருக்க வேண்டியதுதானே.. அப்படி போயிருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா?”ன்னு திருப்பி ஜான் பாய ஒரே ரணகளமாகிடுச்சு..

புஸ்ஸியை பொறுத்தவரைக்கும், தன்னை குறிவைக்கிறது, காலி செய்யுறது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியோட வேலைதான்னு சொல்றார்.. என்னதான் தான் கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியிலேயே இல்லாத ஜான் சொல்றதைத்தானே விஜய் கேட்கிறாரேங்கிற கோபம் புஸ்ஸிக்கு ரொம்பவே இருக்கு” என்றார்.

image-256-1024x576.png

சரி ஆதவ் அர்ஜூனா என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா?

ஆமாய்யா.. “ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரைக்கும் ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்… எதுக்குடா இவ்வளவு கோடி கோடியா செலவு செய்றோம்னு ரொம்பவே விரக்தியாகிட்டார்.. இப்ப கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சேன்னும் சொல்றார்.. இவ்வளவு செலவு செய்யுற நாம, சார்கிட்ட நேரடியாக நினைச்ச நேரத்துல பேச முடியறதுல்லை.. எல்லாத்துக்கும் ஜான் மூலமாகவே போகனும்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் எத்தனை காலத்துக்கு சரிப்படும்? என சலித்து கொள்கிறார்..

அருண்ராஜைப் பொறுத்தவரைக்கும் புஸ்ஸி, ஜான், ஆதவ் மூன்று பேருமே சாரை தவறாக வழிநடத்துறாங்க.. இதைப்பற்றி ஒரு சில டைம் தளபதிகிட்ட தனிப்பட்ட முறையில் தாம் சொன்னதாகவும் அப்படி சொன்ன விஷயங்களை கூட இந்த மூன்று பேரிடமும் சார் ஷேர் செஞ்சுட்டாருன்னும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்” என்றார் விஜய்யின் நண்பர்.

அதே மாதிரி, “தவெகன்னு கட்சியை உருவாக்குனதே நான்தானே.. ஜான், ஆதவ் எல்லாம் இன்னைக்கு வந்தவங்க.. நான் இல்லாம கட்சி நடத்த முடியாதுன்னு இவங்களுக்கு தெரியாதா?” எனவும் புஸ்ஸி சீறுகிறார் என்றார் விஜய்க்கு நெருக்கமான நண்பர்.

தவெகவின் நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசிய போது, “எதுக்குதான் ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டும் தளபதி மலை போல நம்புறாருன்னு தெரியலை.. இன்னைக்கு கட்சியோட மா.செ.க்கள் யார்னு கூட தளபதியால முழுசா சொல்ல முடியாது.. புஸ்ஸிதானே எல்லாம் பார்க்கிறாரு.. அவருக்கு எதிராக அவரை அசிங்கப்படுத்தி ஆனந்தப்படுறாரு ஜான்.. இதை தளபதி கண்டுக்காம இருக்கிறாரே” என ஆதங்கப்படுகின்றனர்.

தவெகவின் உட்கட்சி மோதல், விஜய்யின் ‘தனிமை’ போக்கு.. இதெல்லாம் தமிழக அரசியலுக்கு எவ்வளவு காலத்துக்கும் தாங்கும்? என நமக்கும் சில கேள்விகள் இருந்தாலும், “ஜெயலலிதா- கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் இருக்குன்னு ரஜினி சொன்னாரு இல்லையா… அந்த வெற்றிடம் இன்னும் இருக்குன்னு விஜய் நம்புறாரு.. இப்படித்தான் அரசியல் செய்யனும்னு இருந்த சகாப்தாம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. யாரும் எப்படியும் எதுவும் தெரியாமலேயே அரசியல் செய்ய முடியும் என்பதுதான் தமிழக அரசியலோட தற்போதைய நிலவரம்.. அதுல விஜய்யும் அறுவடை செய்ய நினைக்கிறாரு” என விஜய்யை ஆதரிக்கக் கூடிய சில அரசியல் தலைவர்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

Minnambalam
No image previewடிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும்...
டிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. TVK Party Cadres Internal Conflict

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது - தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

3 months 2 weeks ago

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து)

21 அக்டோபர் 2025, 03:56 GMT

புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார்.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா

"கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார்.

இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21

ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22

ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அக்டோபர் 23

ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை.

ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

(கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.)

சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgkmyz0897o

Checked
Mon, 02/09/2026 - 23:19
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed