தமிழகச் செய்திகள்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் : முழு விவரம்..!

3 weeks 3 days ago

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் : முழு விவரம்..!

22 Aug, 2025 | 03:33 AM

image

தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்றது.

Untitled-2.png

மாநாட்டு மேடைக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த அவரது பேச்சில் அரசியல் மற்றும் தேர்தல் குறித்த அதிரடியான கருத்துக்கள் இடம்பெற்றன.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களும் பின்வருமாறு:-

தீர்மானம் 1: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது .இதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை.

Untitled-1.png

முப்போகமும் விளையக்கூடியவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் பலவழிகளிலும் தொடர்ந்து தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

மேலும், அரசு கையகப்படுத்த முயலும் நிலப்பரப்பில் 13 வற்றா நீர்நிலைகள் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும். சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர்நிலைகளே உள்ளன. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் சென்னை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு,இங்குள்ள நீர் தேங்கும் பகுதிகள் சிதைக்கப்பட்டால் பருவமழைக் காலங்களில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இதில் தவறும்பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும். அதோடு எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும் அதே எளிய மக்களால் ஆட்சி.அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பதையும் இந்த தீர்மானத்தின் வழியே எச்சரிக்கையாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 8.3 சதவீதமாகும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா? இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?

போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள் என எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்

மத்திய மற்றும் மாநில அரசுகள், மீனவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால் தமிழக வெற்றிக் கழகம், எப்போதும் உண்மையான மீனவ நண்பனாக அவர்களுடன் நிற்கும்.

நம் நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் கடலில் தத்தளிக்கும் படகு போலவே தமிழக மீனவர்களின் வாழ்வும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே கூறியது போல கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலும், இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4: ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவச் சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டிய சூழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.

ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்

தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை பல்வேறு காரணங்களுக்காக, சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவங்கள். மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 6: அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இந்த நடவடிக்கையால். போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள், மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால். TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே தகர்த்துவிடும் பேராபத்து ஆகும்.

எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், TNPSC உள்ளிட்டத் தேர்வு வாரியங்கள் வாயிலாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமிழக வெற்றிக் கழகத்தின் இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது

https://www.virakesari.lk/article/223059

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

3 weeks 4 days ago

Capture-5.jpg?resize=750%2C375&ssl=1

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

vijay-tvk-01-jpg-1729936855733_1729936859554-1200x675-1.webp?resize=600%2C338&ssl=1

இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும்  பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டு மேடையின் உச்சியில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது‘ என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்.இ விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில்,சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள்,2-வது அடுக்கில் பொலிஸார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

…….

இந்நிலையில் இன்று காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர்.

மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகன நிறுத்தும்  இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gy17tb8aUAAori4.jpg?resize=600%2C565&ssl=1

அத்துடன் தொண்டர்கள் அமர்வதற்கு 60 பகுதிகள்  அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும்  சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவுப் பொதிகள்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் பொலிஸார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

….

sssssssssssssssssssss.jpg?resize=600%2C305&ssl=1

இந்நிலையில் இந்த மாபெரும் மாநாட்டில் தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1443978

சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! : நாமக்கல் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த துயரம்

3 weeks 5 days ago

கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 5 பேரிடம் முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகாரின்பேரில், அரசு சார்பில் சிறப்புக்குழு ஆய்வு செய்து, திருச்சி மற்றும் பெரம்பலுார் நகரங்களில் உள்ள 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது இதே பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னிடம் விலை பேசி கல்லீரல் தானத்திற்காக கல்லீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தரப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சிறுநீரகம் 8 லட்ச ரூபாய்; கல்லீரலுக்கு நாலரை லட்ச ரூபாய்!

இதில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிபிசி தமிழ் பேசியது. அந்த பெண்ணின் தனியுரிமை கருதி அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிபாளையம் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை மணந்து விட்ட காரணத்தால் தன் மகன் மற்றும் மகளுடன் அவர் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் ஏற்பட்ட கடன் பிரச்னையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் வேறு வழியின்றி ஒரு பெண் முகவரிடம் சிக்கி கல்லீரலைக் கொடுத்ததாகவும் அவர் விளக்கினார்.

''வீட்டு வாடகை, பிள்ளைகளை வளர்ப்பதற்கு வெவ்வேறு இடங்களில் கடன் வாங்கினேன். வட்டி அதிகமாகி மூன்றரை லட்சம் கடனாகிவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் எனக்குக் கடன் கொடுத்த ஒருவர் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து என்னை கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கலா என்ற ஒரு பெண் என்னிடம் அறிமுகமானார். உன் கடனைத் தீர்க்க ஒரு ோசனை யோசனை தருகிறேன் என்று அவர்தான் சிறுநீரகத்தைக் கொடுத்தால் 8 லட்ச ரூபாய் வாங்கித்தருவதாகக் கூறினார்.'' என்றார் அப்பெண்.

அதைப்பற்றி மேலும் விளக்கிய அவர், ''ஈரோடு, சேலம் என சில இடங்களில் எனக்கு மருத்துவப்பரிசோதனை செய்தார்கள். அதன்பின் சென்னைக்கு என்னை அந்தப் பெண் அழைத்துச் சென்றார். அங்கே எனது சிறுநீரகத்தை எடுப்பதாகத்தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறியவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் சிறுநீரகத்தை எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். அதனால் நான் நிம்மதியடைந்தேன்.'' என்றார்.

அதன்பின்பு, வீட்டிற்குச் செல்லலாம் என்று இவர் புறப்பட நினைத்துள்ளார். அப்போது இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு செலவிட்ட 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுப் போகச்சொன்னதாக தன்னை அங்கிருந்தவர்கள் மிரட்டியதாகக் கூறும் அந்த பெண், அதனால் சிறுநீரகத்துக்குப் பதிலாக கல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் எடுப்பதாகவும் அது மீண்டும் வளர்ந்து விடும் என்றும் கூறினர் என்கிறார்.

''அங்கே என் பெயரை மாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். அந்த மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்தேன். நான்காம் நாள் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் அப்போதே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே இல்லை. போனிலும் பேசமுடியவில்லை. அங்கே என்னிடம் எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. எனக்குப் பேசியதைப் போல 8 லட்ச ரூபாய் கொடுக்காமல் நாலரை லட்சம்தான் கொடுத்தார்கள்.'' என்று மேலும் விளக்கினார் அந்தப் பெண்.

கல்லீரல் முறைகேடு

பட மூலாதாரம், GETTY IMAGES

நாமக்கல்லில் லட்சங்களில் விற்கப்படும் சிறுநீரகம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏழை மக்களின் வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்கள் சிறுநீரகத்தை முறைகேடாக எடுப்பதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.

சமீபத்தில் இப்பகுதியில் சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோ வெளியானது.

அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் பலரிடம் சிறுநீரகம் முறைகேடாக எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அதுபற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசால் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டது.

இரண்டு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு கள விசாரணை நடத்தி, இரண்டு கட்டமாக அறிக்கை அளித்தது. அப்பகுதியில் 5 பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒப்புதலின்பேரில் தரப்பட்டதால் இது சிறுநீரக திருட்டு அல்ல, சிறுநீரக முறைகேடு என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குழுவின் இறுதி அறிக்கையின்படி, திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர் இருவர் மீது போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி, அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் ''மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994ன் படி. உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக்குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும் ஆணை வெளியிடப்படும்.'' என்றும் கூறப்பட்டிருந்தது.

கல்லீரல் முறைகேடு

படக்குறிப்பு, கல்லீரல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கருமுட்டையும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு

இந்த பகுதிகளில் சிறுநீரக விற்பனை முறைகேடு மட்டுமின்றி, கல்லீரல், கருமுட்டை போன்றவையும் முறைகேடாக எடுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கட்சியின் சார்பில் பள்ளிபாளையத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு மாவட்டச்செயலாளர் அசோகன், ''நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக சிறுநீரக விற்பனை முறைகேடு நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கல்லீரல், கருமுட்டை விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்று வலியுறுத்தினார்.

கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆனது?

கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு கல்லீரல் தானம் வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2022 நவம்பர் 16 ஆம் தேதியன்று சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருடைய கல்லீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மருத்துவக் குறிப்பையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

ஆனால், கல்லீரல் கொடுத்த மருத்துவமனையின் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார். அந்த ஒரே ஒரு முறை மட்டுமே சென்னை சென்றிருப்பதாலும், ஆட்டோவில் தன்னை பல குறுகலான வீதிகள் வழியாக அழைத்துச் சென்றதாலும் அந்த மருத்துவமனை எங்கு இருந்தது என்பதும் நினைவில் இல்லை என்றும் கூறிய அவர், அந்த மருத்துவமனையின் பெயர் 3 ஆங்கில எழுத்துகளில் இருந்தது என்கிறார்.

''அந்தத் தொகையை வாங்கிக் கடனைக் கட்டிவிட்டேன். ஆனால் இப்போது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சாப்பிடவே முடியவில்லை. சாப்பிட்டாலும் ஜீரணம் ஆவதேயில்லை. கடுமையான வேதனையை அனுபவிக்கிறேன். அதனால் என் மகன் ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். என் மகள் எட்டாம் வகுப்புப் படித்து விட்டு, என்னைப் பார்த்துக் கொள்வதற்காக என்னுடன் வீட்டில் இருக்கிறாள்.'' என்று அந்தப்பெண் கண்ணீருடன் வேதனையைப் பகிர்ந்தார்.

சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு

இந்த பெண் தெரிவித்த தகவல், ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''எங்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் வரவில்லை. ஊடகத்தில் பார்த்து விஷயம் தெரிந்ததும், துறை இயக்குநருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டோம்.'' என்றார்.

சம்பந்தப்பட்ட பெண் பிபிசி தமிழிடம், ''செல்போனில் சிலர் என்னை தொடர்பு கொண்டு அதிகாரிகள் என்று கூறி சிலர் பேசினர். சில விபரங்களை என்னிடம் கேட்டனர். நான் இப்போது படுகின்ற வேதனையை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் இப்போது இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்கு ஏதாவது ஒரு நிவாரணத்தையும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தினால் நல்லது.'' என்றார்.

அந்தப் பெண் கூறியுள்ள தகவல் பற்றியும், அமைச்சர் கூறியுள்ள விசாரணை பற்றியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இந்த கல்லீரல் முறைகேடு புகார் பற்றி சார்பு ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்துகிறோம். விசாரணையின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78zxq2deneo

ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா? - 'தி ஹண்ட்' தொடரால் எழும் கேள்விகள்

3 weeks 6 days ago

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

படக்குறிப்பு, ராஜீவ் காந்தி, சிவராசன் (வலது)

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் 1991 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பெங்களூருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது என்னவெல்லாம் நடந்தது? அவர்கள் வேறு கொலைகளைத் திட்டமிட்டிருந்தனரா?

கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து விசாரிப்பதற்காக டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது தேடுதல் வேட்டையில் கொலையில் தொடர்புடைய ஒவ்வொருவராகக் கைது செய்ய ஆரம்பித்தது.

இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதாகக் கருதப்பட்ட சிவராசனை சி.பி.ஐ. தீவிரமாகத் தேடிவந்தது. ஆனால், அந்தத் தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிவராசனை சி.பி.ஐ. நெருங்கியபோது, அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் அவர்கள் சடலமாகவே மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை பின்னணியாக வைத்து சமீபத்தில் The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று வெளியானது.

அந்தத் தொடரில், ராஜீவ் காந்தி கொல்லப்படுவதிலிருந்து சிவராசன் மரணம் வரையிலான பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தத் தொடர் வெளியான பிறகு, இதில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறித்து சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு சிவராசன் தேடப்பட்டுவந்தபோது, அவர் வேறு சில தலைவர்களை, குறிப்பாக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்தத் தொடரில் காட்டப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியது.

The Hunt தொடரில் இடம்பெற்ற சிவராசன் கதாபாத்திரம்.

பட மூலாதாரம், SONY LIV

படக்குறிப்பு, தி ஹண்ட் தொடரில் இடம்பெற்ற சிவராசன் கதாபாத்திரம்.

அந்தத் தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது?

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒன்பது காவல்துறையினர் உட்பட மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு அடுத்த நாளே, மத்திய ரிசர்வ் காவல் படையின் தென் பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்குவார் என முடிவுசெய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் இது தொடர்பான விசாரணைக்காக சி.பி.ஐயின் சென்னைக் கிளை, தமிழ்நாடு காவல்துறை, சிஆர்பிஎஃப், மத்திய - மாநில அரசுகளின் சில நிறுவனங்களில் இருந்து அதிகாரிகளைத் தேர்வுசெய்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே. ராகவன் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். அதில், இறந்துபோன புகைப்படக்காரர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த கேமராவும் இருந்தது. அதனை காவல்துறை போட்டோகிராபர் ஒருவரிடம் கொடுத்து, அதனை டெவலப் செய்து கொண்டுவரச் சொன்னார். ஆனால், கலர் பிலிம் என்பதால் உள்ளூரில் அதைச் செய்ய முடியவில்லை. இதற்குப் பிறகு, சட்டம் - ஒழுங்கு பிரசனை ஏற்பட்டதால் மே 23ஆம் தேதியன்று முன்னிரவில்தான் அதிலிருந்த புகைப்படங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்டன.

மொத்தம் பத்து புகைப்படங்கள். அதில் ஒன்றில் கையில் சந்தன மாலையுடன் நின்று கொண்டிருந்த சல்வார் கம்மிஸ் அணிந்த பெண், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லதா கண்ணன், அவர் மகள் கோகிலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்குச் சற்றுத் தள்ளி குர்தா - பைஜாமா அணிந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

மேலும்,  மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு.

பட மூலாதாரம், SONY LIV

படக்குறிப்பு, மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு.

சிறப்புப் புலனாய்வுக் குழு அந்த மனிதர் யார் எனத் தேட ஆரம்பித்தது. தொடர்ந்து நடந்த விசாரணை, "புகைப்படக் கலைஞர் ஹரிபாபு, இறந்த மனித வெடிகுண்டு, என்ன ஆனார் எனத் தெரியாத குர்தா பைஜாமா மனிதர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது" என்கிறது 'ராஜீவ் காந்தி படுகொலை - ஒரு புலனாய்வு' என்ற புத்தகம்.

இந்த நூல், சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயனாலும் மற்றொரு உயரதிகாரியான ராதா வினோத் ராஜுவாலும் இணைந்து எழுதப்பட்டது.

இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு, சந்தேகத்திற்குரிய கொலையாளி, குர்தா - பைஜாமா நபர் ஆகியோரின் படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கூறியது.

இதற்கிடையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை ரூசோ என்ற சங்கரைக் கைதுசெய்தது. அவரிடம் நளினி, தாஸ் ஆகிய இருவரின் தொலைபேசி எண்கள் கிடைத்தன. அவர் அளித்த கூடுதல் தகவலின் பேரில், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடத்தல் புள்ளி கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்தபோதுதான், குர்தா - பைஜாமா நபரின் பெயர் சிவராசன் என்பதும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில், இது குறித்து விசாரிப்பதற்காக கொழும்பு சென்றிருந்த குழு ஒன்று சென்னைக்குத் திரும்பியது. அந்தக் குழுவினரும் குர்தா - பைஜாமா நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராஜா மாஸ்டர் தான் எனக் குறிப்பிட்டனர்.

இதற்குப் பிறகு, நளினியின் சகோதரர் பாக்கியநாதனை விசாரித்தபோது அவரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

மேலும், மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு, அவரது தோழியின் பெயர் சுபா, புலிகள் இயக்கத்தில் சிவராசனின் பெயர் ரகு ஆகிய தகவல்களும் கிடைத்தன. இதற்கிடையில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

ஜூலை மாத இறுதியில் கோவையில் பதுங்கியிருந்த டிக்ஸன், குணா ஆகிய புலிகளைப் பிடிக்க முயற்சி செய்தபோது அவர்கள் இருவரும் சயனைட் அருந்தி உயிரிழந்தனர். பெங்களூரில் நடந்த தேடுதல் வேட்டையிலும் இருவர் உயிரிழந்தனர்.

முருகனுடன் நளினி

படக்குறிப்பு, முருகனுடன் நளினி

பெங்களூருவில் சுற்றி வளைக்கப்பட்ட குழுவினர்

இதற்கிடையில் பெங்களூருக்குத் தப்பிச் சென்ற சிவராசனும் சுபாவும் லேத் ஒன்றை நடத்திவந்த ரங்கநாதன் என்பவரது வீட்டின் ஒரு அறையில் தங்கினர்.

பிறகு பெங்களூரின் கோனனகுண்டேவில் இருந்த இன்னொரு வீட்டிற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று சிவராசனும் அவரது குழுவினரும் இடம்மாறினர். தேடுதல் வேட்டைத் தீவிரமடைந்தபோது மற்றொரு சம்பவமும் நடந்தது. கர்நாடக மாநிலம் மூதாடி, பிரூடா ஆகிய இடங்களில் புலிகள் தங்கியிருந்த இடத்தை காவல்துறை சுற்றிவளைக்க அந்த இரு வீடுகளில் தங்கியிருந்த 17 பேர் சயனைடு அருந்தி உயிரிழந்தனர்.

இந்தச் செய்தி சிவராசன் குழுவினருக்குத் தெரிந்ததும், ரங்கநாதனின் மனைவி மிருதுளா பதற்றமடைந்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மிருதுளா சிகிச்சைக்காக எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறி தன் சகோதரர் வீட்டில் சென்று தங்கினார். விரைவிலேயே காவல்துறை மிருதுளாவைப் பிடித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி பிடிபட்ட அவர் கடந்த 16 நாட்களில் புலிகளுடனான தனது அனுபவத்தை விரிவாக காவல்துறையிடம் தெரிவித்தார். கோனன குண்டேவில் அவர்கள் தங்கியருந்த வீட்டையும் காட்டினார்.

அந்த வீட்டில் அந்தத் தருணத்தில் சிவராசன், சுபா ஆகிய இருவருடன் மேலும் ஐந்து பேரும் தங்கியிருந்தனர். இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். என்ன நடவடிக்கை எடுப்பதென டி.ஆர். கார்த்திகேயன், சி.பி.ஐயின் இயக்குநரிடம் கேட்டபோது, தான் அங்கே வரும்வரை காத்திருக்கும்படி சொன்னார் அவர்.

தி ஹண்ட் தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?

பட மூலாதாரம், SONY LIV

மருத்துவருடன் வந்த சி.பி.ஐ இயக்குநர்

சி.பி.ஐயின் இயக்குநர் அங்கு வந்து சேரும்போது, தன்னுடன் டாக்டர் ராமாச்சாரி என்ற சயனைடு விஷ நிபுணரையும் அழைத்துவந்தார். ராமாச்சாரி, வேறொரு விஷ முறிவு மருந்து தேவை என்று குறிப்பிட்டார். அந்த மருத்து குவாலியரிலிருந்து வர வேண்டியிருந்தது. இதில் சில மணி நேரங்கள் கடந்தன. இதற்கிடையில், ரங்கநாத்தும் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்கு சற்று தூரத்தில் லாரி ஒன்று பழுதாகி நிற்க, அதிலிருந்த டிரைவர் லாரியைப் பழுது பார்க்க கீழே இறங்கினார். அவர்களை காவல்துறையினர் என நினைத்து சிவராசனும் குழுவினரும் சுட ஆரம்பித்தனர். காலை ஐந்து மணியளவில் குவாலியரிலிருந்து விஷ முறிவு மருந்து வந்தது. ஆறு மணியளவில் கறுப்புப் பூனைப் படையினர் உள்ளே புகுந்தனர். ஆனால், உள்ளே போய் பார்த்தபோது ஏழு பேருமே இறந்து போயிருந்தனர்.

அந்த ஏழு பேரும் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன், டிரைவர் அண்ணா, முந்தைய நாள் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த ஜமுனா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சிவராசன் மட்டும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்து போயிருக்க, மற்றவர்கள் சயனைடு அருந்தி உயிரிழந்திருந்தனர்.

"மறுநாள் காலை வரை காத்திருந்திருக்காமல் முந்தைய இரவே அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென நாங்கள் கருதினோம்" என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் டி.ஆர். கார்த்திகேயன்.

"முடிவு எங்களிடமே விடப்பட்டிருந்தால் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நாங்கள் அந்த இடத்தை புயலென புகுந்து தாக்கியிருப்போம். சையனைடு நச்சு முறிப்பு ஊசியோடு ஒரு மருத்துவரும் இருந்தும்கூட நாங்கள் பொறுப்பின்றி செயல்பட்டதாக விமர்சனத்திற்கு உள்ளானோம்" என தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர்.

ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த சம்பவம் நடந்ததாலும் தற்செயலாக ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஜீவ் காந்தியின் பிறந்த நாளாக இருந்தாலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன என்றும் இந்த மரணங்கள் முன்னாள் பிரதமரின் பிறந்த நாள் பரிசுபோல திட்டமிடப்பட்டதா என சில பத்திரிகைகள் விமர்சித்தன என்றும் டி.ஆர். கார்த்திகேயனின் நூல் குறிப்பிடுகிறது.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

வேறு திட்டமா?

The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது. அதில் ஒன்று, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமையகமான மல்லிகையைத் தாக்குவது. இரண்டாவது, அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்களை கொல்வது. இதனை சிவராசனை மற்றொரு கூட்டாளியிடம் சொல்வதாகக் காட்டப்படுகிறது.

The Hunt தொடரைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த நூலில், இது போன்ற ஒரு திட்டத்தை சிவராசன் சொல்வதாக அல்லாமல், உளவுத் துறையின் கருத்தாக இடம்பெறுகிறது. "ஐ.பியிலிருந்து வந்த தகவல்களின்படி, புலிகள் இயக்கம் தீர்த்துக்கட்ட வேண்டிய நீண்ட பட்டியலுடன் மிகப் பெரிய இலக்குகளை வைத்திருக்கிறது. இந்தக் கொலைப் படையினர், குறைந்தது மூன்று வி.ஐ.பிகளைத் தீர்த்துக் கட்ட நினைக்கின்றனர் - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி கே. ராமமூர்த்தி, தமிழக காவல்துறை டிஜிபி எஸ். ஸ்ரீபால்" என அந்த நூல் குறிப்பிடுகிறது.

இந்த நூலை எழுதிய அநிருத்ய மித்ரா, இந்தியா டுடே இதழுக்காக ராஜீவ் கொலை தொடர்பான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து சேகரித்துவந்தவர்.

ஆக்ஸட் 21, 1991ஆம் தேதியிட்ட இந்தியா டுடே தமிழ் இதழில் இந்தத் தகவலை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். "ராஜீவைக் கொன்ற பிறகு சிவராசன் தப்பிக்கவில்லை, கொலைப் பட்டியலில் இருந்த அடுத்த இரண்டு வி.ஐ.பிக்களைத் தாக்கத் தயாரானார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எஸ்.ஐ.டியை உலுக்கியிருக்கிறது. இந்த முறை டெல்லியில் கொலையை நடத்த திட்டமிட்டார். ஜூலை மாத மத்தியில் ஜெயலலிதா, ராமமூர்த்தியுடன் பி.பி. நரசிம்மராவைப் பார்க்கப் போவதாக இருந்தது. ராஜீவைக் கொலைசெய்ததைப் போன்ற ஜெயலலிதாவையும் கொலை செய்ய இருந்ததாக கனகசபாபதியும் ஆதிரையும் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டபோது தெரிவித்தார்கள்" என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் அனிருத்ய மித்ரா.

The Hunt தொடர் கடந்த ஜூலை 4ஆம் தேதி வெளியானது

பட மூலாதாரம், SONY LIV

படக்குறிப்பு, The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது

வாழப்பாடி கே. ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தனிடம் கேட்டபோது, "அந்தத் தருணத்தில் அவர் விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்துவந்ததால், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது உண்மைதான். இதனால், சேலம் வீட்டிலும் சென்னை வீட்டிலும் 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது" என்பதை மட்டும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஆனால், டி. கார்த்திகேயனின் நூல் இது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. கனகசபாபதியையும் ஆதிரையையும் கைதுசெய்தபோது விடுதலைப் புலிகளுக்கு என டெல்லியில் ஒரு இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் சிவராசன் உத்தரவாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள்.

டெல்லியில் ஒரு இடம் ஏற்படுத்திக்கொண்டால் இந்தியா முழுவதும் புலிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லவும் சௌகர்யமாக இருக்கும் என்பதுதான் அவர்களது திட்டம் என்கிறது கார்த்திகேயனின் நூல்.

அந்தத் தருணத்தில் இது குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்துவந்த மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்கும் பிற தலைவர்களைக் கொல்லும் திட்டம் ஏதும் புலிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார்.

"சிவராசன் உயிரோடு பிடிபடவில்லை. அவர் உயிரோடு பிடிபட்டு இதைச் சொல்லியிருந்தால் அதை ஏற்கலாம். அவர் யாரிடமோ இதைச் சொல்லி, அவர்கள் அதை வெளியில் சொன்னார்கள் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை. புலிகளைப் பொறுத்தவரை, யாருக்கு எவ்வளவு தகவல்கள் தெரிய வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே சொல்வார்கள். தவிர, அந்த நேரத்தில் அவர்கள் ஜெயலலிதாவைக் கொல்வதற்குக் காரணமே இல்லை. அவர் புலிகள் எதிர்ப்பாளராக இருப்பதுதான் காரணம் என்றால், ராஜீவ் கொலைக்குப் பிறகு பலருக்கும் அந்த மனநிலைதான் இருந்தது. தவிர, அந்நிய மண்ணில் இதுபோல செய்வதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, ராஜீவ் கொலைக்குப் பிறகு அப்படி எந்தத் திட்டமும் அவர்களிடம் இருந்ததாகச் சொல்ல முடியாது" என்கிறார் அவர்.

அதே சமயத்தில் தி ஹிந்து நாளிதழுக்காக இது தொடர்பான செய்திகளைச் சேகரித்துவந்த டி.எஸ். சுப்பிரமணியனும் இது போல தான் கேள்விப்படவில்லை என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1mpjge9r1lo

தில்லையாடி வள்ளியம்மை: 16 வயது தமிழ்ப்பெண் மகாத்மா காந்தியின் மீது ஏற்படுத்திய தாக்கம்

1 month ago

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், ANNAMALAI/X

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

"வள்ளியம்மா, சிறையில் அடைக்கப்பட்டதற்காக நீ வருந்துகிறாயா?" என்று நான் கேட்டேன். 'வருந்துவதா? மீண்டும் கைது செய்யப்பட்டால் இப்போதே கூட சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்று அந்தப் பெண் கூறினாள்."

"ஆனால் அது உன் மரணத்தில் முடிந்தால் என்ன செய்வது? என நான் கேட்டேன். 'எனக்குப் பிரச்னையில்லை. தாய்நாட்டிற்காக உயிரிழக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?' என்று அவரிடமிருந்து பதில் வந்தது"

மகாத்மா காந்தி தனது 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' எனும் நூலில், தில்லையாடி வள்ளியம்மை குறித்து எழுதியுள்ள வரிகள் தான் இவை.

1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு புலம்பெயர் தமிழ் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் வள்ளியம்மை. இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி - மங்களத்தம்மாள்.

வள்ளியம்மை தனது 15ஆம் வயதிலேயே, தென் ஆப்பிரிக்காவில் இனவெறியின் அடிப்படையில் இந்தியர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு எதிரான மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டவர்.

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

படக்குறிப்பு, தில்லையாடி வள்ளியம்மையின் உருவச்சிலை (தில்லையாடி கிராமம்)

அதன் காரணமாக அந்த இளம் வயதிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த கடுமையான சூழ்நிலைகள், வள்ளியம்மையின் உடல்நிலையைப் பாதித்தன. பிப்ரவரி 1914இல் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்த சத்தியாகிரகத்திற்கு பெரும் உத்வேகம் அளித்தது 'வள்ளியம்மை மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பல தமிழ் மக்களின் தியாகங்கள் தான்' என்று காந்தி தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் (1907–1914) என்பது மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய அஹிம்சை வழியிலான சத்தியாகிரக போராட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுடன் மகாத்மா காந்தி (1914)

மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிய சென்றார். தென்னாப்பிரிக்காவில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துவந்த இந்திய சமூகங்கள், அங்கு ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களால் கடுமையான இனவெறி ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். இந்தியர்களைக் குறிவைத்து பாரபட்சமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர்.

மேலும், இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் அங்கு ஒப்பந்தம் முடிந்தவுடன், மீண்டும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் அல்லது சுதந்திர இந்தியர்களாக வாழலாம் அல்லது சொந்த செலவில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதே விதி. அவ்வாறு சுதந்திர இந்தியர்களாக வாழ வேண்டும் என்று விரும்பியவர்கள், 3 பவுண்டுகள் வருடாந்திர வரி செலுத்த வேண்டும்.

இது ஒரு குடும்பத்திற்கு 3 பவுண்டுகள் என்று இல்லாமல், 13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என ஒவ்வொரு இந்தியருக்கும் 3 பவுண்டுகள் என அறிவிக்கப்பட்டது. இது அப்போதைய சூழலில் இந்தியர்களுக்கு மிகப்பெரிய தொகை.

இந்தச் சட்டத்தின் நோக்கம் என்பது, ஒன்று இந்தியர்கள் குறைவான கூலிக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யவேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.

பின்னர், 1906 ஆம் ஆண்டில் 'ஆசியப் பதிவுச் சட்டம்' (ப்ளாக் ஆக்ட்) அமலுக்கு வந்தது. இது, தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் மாகாணத்தின் இந்திய மற்றும் சீன சமூகங்களை இலக்காகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரு பாரபட்சமான சட்டமாகும்.

ஆசியப் பதிவுச் சட்டத்தின்படி, எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிய ஆண்களும் பதிவு செய்து, அடையாளச் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இதில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கைரேகைகள் இருக்கும். இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும்.

இத்தகைய சட்டங்களை எதிர்த்தே தனது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார் காந்தி. அதற்கு தென்னாப்பிரிக்காவின் புலம்பெயர் இந்தியக் குடும்பங்கள் பெரும் ஆதரவளித்தன. அதில் ஒன்று தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம்.

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், RANDOM CREATIONS

படக்குறிப்பு, சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா'

இது சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' எனும் தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

"செப்டம்பர் 11, 1906, ஒரு அமைதியான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அதற்கு சத்தியாகிரகம் என்று மோகன்தாஸ் காந்தி பெயரிட்டிருந்தார். என்னுடைய இளம் வயதிலேயே, இந்த அறியப்படாத, முயற்சிக்கப்படாத, போராட்டத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தேன். எதிர்காலத்தில் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக மாற இருந்தது...".

அதைத் தொடர்ந்து 1911-1913 காலகட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 'தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பிற மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதன் பிறகு சத்தியாகிரகப் போராட்டங்கள் மேலும் தீவிரமடைகின்றன.

தென்னாப்பிரிக்காவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தேவாலய சட்டத்தை மீறி நடத்தப்பட்ட அனைத்து திருமணங்களும் செல்லாது என்று அறிவித்தபோது, ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காந்தி முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டார் வள்ளியம்மை.

காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி 1910 இல் நிறுவிய ஆசிரமம் தான் 'டால்ஸ்டாய் பண்ணை'. டிரான்ஸ்வால் மாகாணத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிரான அவரது சத்தியாக்கிரக இயக்கத்தின் தலைமையகமாக இது செயல்பட்டது. 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. இங்கு வள்ளியம்மையும் சில காலம் தனது தாயுடன் வசித்துள்ளார்.

"இந்தப் பண்ணை அமைதியான இடமாக இருந்தது, அங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ்ந்தனர். இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் வயதுக்கு ஏற்ற எந்த வேலையையும் செய்தனர்" என டால்ஸ்டாய் பண்ணை குறித்து 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' நூலில் வள்ளியம்மை விவரிக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி உச்சத்தில் இருந்தது குறித்தும் அந்த நூலில் அவர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

"நான் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து வாழ நினைத்தேன், இவ்வளவு அற்புதமான ஒரு நாட்டில் நான் பிறந்ததால் அல்ல, மாறாக என் இதயம் இங்கிருக்கிறது என்பதால். நான் அநீதியை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன். என் திறமைகளால் பிரச்னைகளைச் சமாளிக்க, ஞானத்தால் சவால்களை வெல்ல, அன்பால் வெறுப்பைக் கைவிடச் செய்ய, முழுமையான நிராகரிப்புடன் இனவெறியை ஒழிக்கவும் முடிவு செய்தேன்."

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், ARUNANKAPILAN

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம்

1913ஆம் ஆண்டில், வள்ளியம்மை தனது தாய் மற்றும் ஏராளமான பெண்களுடன், காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை அமைந்திருந்த டிரான்ஸ்வாலில் இருந்து நடால் வரை ஊர்வலம் சென்றார். அங்கீகரிக்கப்படாத ஊர்வலங்களை தடைசெய்யும் சட்டங்களை மீறி, நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராகப் போராடினார். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக அங்கிருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் ரயில்வே முகாம்களுக்கு சென்று தொழிலாளர்களை, பெரும்பாலும் தமிழர்களை சந்தித்து சத்தியாகிரக போராட்டம் குறித்து பேசினர். 'மூன்று பவுண்டு வரி' என்ற சட்டம் ஒழிக்கப்படும் வரை வேலையை நிறுத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 21, 1913 காந்தியின் மனைவி கஸ்தூர்பா, வள்ளியம்மை உள்பட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடின உழைப்புடன் கூடிய மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார்.

அவர் பிப்ரவரி, 1914ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது கடும் காய்ச்சலுடன் இருந்தார் என மகாத்மா காந்தி 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' நூலில் குறிப்பிடுகிறார்.

"வள்ளியம்மா ஆர். முனுசாமி என்ற அந்த பதினாறு வயதுடைய இளம்பெண்ணை எப்படி என்னால் மறக்க முடியும்? ஜோகன்னஸ்பர்க்கைச் சேர்ந்த அவளை நான் பார்த்தபோது அவள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். அவள் ஒரு உயரமான பெண்ணாக இருந்ததால், அவளுடைய மெலிந்த உடலைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது."

சிறையிலிருந்து விடுதலையான சில நாட்கள் கழித்து, பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்றே உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது.

"இந்தியா என்ற நாடு இருக்கும்வரை வரை, தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நிலைத்து நிற்கும்." என காந்தி குறிப்பிட்டார்.

வள்ளியம்மையை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பொது நூலகமும் செயல்பட்டுவருகிறது. இந்திய அரசின் சார்பில் 2015ஆம் ஆண்டு வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு தினத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy4djz807e7o

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - நள்ளிரவில் கைது

1 month ago

நள்ளிரவில் கைது, தள்ளுமுள்ளு - சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே?

தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

14 ஆகஸ்ட் 2025, 02:31 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள்

கைது நடவடிக்கையின்போது இளைஞர்கள் இருவரை பேருந்துக்குள் போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், பெண் ஒருவர் பேருந்துக்குள் மயங்கி விழுந்திருப்பதையும் அவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என மற்ற தூய்மை பணியாளர்கள் போலீஸாரிடம் கோருவதையும் காண முடிந்தது. எனினும் இந்த காணொளிகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுரேஷ் எனும் தூய்மை பணியாளர் பிபிசியிடம் பேசுகையில், "பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதை கூட போலீஸார் கூறவில்லை. எங்களுக்கு உணவு கொடுப்பதாக கூறினர், ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்" என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

கைதாக மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, "பலரும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

கைது செய்யப்படும்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்ததை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் கைது நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்ததாக" அவர் கூறினார்.

தூய்மைப் பணிகளை தனியார் மயத்துக்கு அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.

முன்னதாக, தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம்.

தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்?

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்தனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

"ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, 'ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை' என தங்களிடம் கூறப்பட்டதாக" தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.

தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு மண்டலங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது, தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 31(1) படி (Industrial disputes act) தண்டனைக்குரிய குற்றம் என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணிமறுப்பு, அவுட்சோர்ஸிங் (பணிகளை கையாளும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு அளிப்பது) செய்வது தண்டனைக்குரிய குற்றம்" என்றார்.

தூய்மை பணியாளர்களின் 3 கோரிக்கைகள் என்ன?

தூய்மை பணியாளர்கள் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

  • தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது.

  • கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

  • தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது.

போராட்டக்காரர்கள் குறிப்பாக, "தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது " என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx27yw684gko

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!

1 month ago

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!

12 Aug 2025, 10:19 AM

CM MK Stalin Tour

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர்.

இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

https://minnambalam.com/cm-mk-stalin-to-take-part-in-dravidian-movement-events-at-oxford-and-cambridge-universities-in-uk/

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

1 month ago

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

August 12, 2025 12:57 pm

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம்.

வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு.

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.

மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/we-are-not-an-alternative-force-we-are-the-primary-force-vijays-invitation-to-the-madurai-conference/

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

1 month ago

semmani.jpg?resize=684%2C375&ssl=1

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ், புரட்சிகர் இளைஞர் முண்ணனியின் மாவட்ட செயலாளர் மலரவன், சி‌.பி.எம்.ரெட் ஸ்டாரின் மாவட்ட பொறுப்பாளர் இனியவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

செம்மணி மனித புதைகுழியில் கடந்த 05ஆம் திகதி அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள், குழந்தைகள், உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442607

'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் - இராமேஸ்வரம்

1 month ago

'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம்

10 AUG, 2025 | 11:38 AM

image

இராமேஸ்வரம் 

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகினை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அந்த படகில் இருந்த டல்லஸ், பாஸ்கரன், ஆரோக்கிய சாண்ட்ரின், ஸ்லைடன் சேசுராஜா, அருள், ராபர்ட், லொய்லன் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்த மீனவர்கள் தங்களுடன் மீன்பிடிக்க வந்த படகினையும் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற தகவலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் மீனவர்களின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் போலீஸாரின் சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி மீனவர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின் போது மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்காவிடில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

https://www.virakesari.lk/article/222217

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? சீமான் கேள்வி

1 month ago

10 AUG, 2025 | 10:26 AM

image

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை  அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விசமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும் ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். 

தமிழ் இனத்திற்கும் நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன் ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும் அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்? 

இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு எல்லையில்லா அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து ‌நாட்டை இழந்து உறவுகளைப் பறிகொடுத்து உரிமைகளும் உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும் தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை பரிவு பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?

நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா? 

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும் மானத்தையும் மண்ணையும் மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா? 

வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்? 

ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகவே ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு  Q- பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாகஇ நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இதற்கு மேலும் - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/222205

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி

1 month 1 week ago

07 Aug, 2025 | 04:18 PM

image

55  நாட்களில் 47  தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க    கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே  தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும். 

 திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும்இ  2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன.  நடப்பு 2025 ஆம் ஆண்டில் 

கடந்த ஜனவரி மாதம் 64  மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60  மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். 

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில்  ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள்  மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.

இரண்டு மாத மீன்பிடி தடை  காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும்  அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள்  மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா? 

இலங்கை கடற்படையால்  படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற  அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்?  

வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான்  விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும்  வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு  அரசு எத்தனை  சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும்  மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!!

ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல  கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ 

ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி | Virakesari.lk

 

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 1 week ago

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

Published By: RAJEEBAN

07 AUG, 2025 | 11:28 AM

image

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,

ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன்.

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது.

பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.

ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது.

இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும்.

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும்.

நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும்.

இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு  குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/222030

சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்

1 month 1 week ago

சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்

7 Aug 2025, 1:14 PM

Anbumani Ramadoss PMK

சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர்.

அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன்புமணி முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை தந்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது என்றார் ராமதாஸ்.

முன்னதாக பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை ஆகஸ்ட் 17-ந் தேதி கூட்டுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி பாமகவின் பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளது.

https://minnambalam.com/anbumani-trying-to-snatch-pmk-from-me-through-deceitful-means-ramadoss/#google_vignette

80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்

1 month 1 week ago

80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்

image_90a7ad05cf.jpg

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு  (புதன்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் . 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் .

தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறேன்.

எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/80-மீனவர்கள்-237-மீன்பிடிப்-படகுகளை-விடுவிக்குக-ஸ்டாலின்-கடிதம்/175-362500

தமிழகத்தில் தொடரும் சாதி கொலைகள் - நிபுணர்கள் கூறும் தீர்வு என்ன?

1 month 1 week ago

தமிழ்நாடு, சாதி ஆணவக் கொலைகள்

படக்குறிப்பு, திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சமீபத்தில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இத்தகைய கொலைகளை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிகள் கோரி வருகின்றன.

இதில் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி.

அரசியல் கட்சிகளிலிருந்து அரசு நிர்வாகம் வரை அதன் செயல்பாடுகளில் சாதி என்பது ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன்.

சாதியின் பெயரில் நடக்கும் கொலைகளுக்கு தனிச் சட்டம் தான் தீர்வாக இருக்க முடியும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம் தனிச்சட்டம் தேவையில்லை எனக் கூறுபவர்கள் காவல்துறை சுதந்திரமாக செயல்பட விட்டாலே போதுமானது என்கின்றனர்.

நீதிமன்ற விசாரணை

தமிழ்நாட்டின் இரு வேறு பகுதிகளில் சாதியின் பெயரால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தன.

திருநெல்வேலியில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கு மதுரைக் கிளையிலும், கடலூரில் நிகழ்ந்த மற்றுமொரு கொலை தொடர்பான வழக்கு சென்னையிலும் விசாரணைக்கு வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடன் பழகி வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தும், தந்தை சிறப்பு சார்பு ஆய்வாளரான சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவில் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் 8 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு, சாதி ஆணவக் கொலைகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

அதே போல கடலூர் மாவட்டம் அரசகுழி கிராமத்தில் சாதியின் பெயரால் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கொலையுண்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த பிகாம் மாணவரின் தந்தை கோரியிருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை" என நீதிபதி பி வேல்முருகன் தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

தமிழ்நாடு, சாதி ஆணவக் கொலைகள்

பட மூலாதாரம், FACEBOOK/HARIPARANDHAMAN

படக்குறிப்பு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

பெரம்பலூரில் என்ன நடந்தது?

இந்தநிலையில் அரசுத் துறைகளில் சாதிய உணர்வுகள் அவ்வப்போது வெளிப்படுவதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக பெரம்பலூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டுகிறார் அவர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேரை பட்டியல் சாதியினர் வசிக்கும் தெரு வழியே கொண்டு செல்வது தொடர்பாக பிரச்னை நிலவிய நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜூன் 3ஆம் தேதி நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தேர் தங்கள் தெருவுக்குள் வர வேண்டியதில்லை என பட்டியல் சமுக மக்கள் சிலரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்ததுடன், அமைதிப் பேச்சுவார்த்தை தீர்மானத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தேரை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களுக்குள் மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது ஒரு உதாரணம் தான் என்கிறார் அரிபரந்தாமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுபோல பல சந்தர்ப்பங்களில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், உள்ளூர் அரசியல் போன்ற காரணங்களுக்காக பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை. தற்போது சமூக ஊடகங்களின் வீச்சு அதிகமாகிவிட்டதால் எந்த சிக்கலென்றாலும் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது." எனத் தெரிவிக்கிறார்.

அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

திருநெல்வேலியில் கவினின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நீண்டகாலமாக ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கோரி வருவதாகக் கூறிய அவர், "சாதியப் பெருமையால் நடத்தப்படும் மிருகத்தனமான சம்பவங்களை எந்த ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆணவக் கொலைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களை திறம்பட அமல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்படுகிற தோல்விதான் இத்தகைய குற்றங்கள் தொடர காரணமாக அமைகின்றன என்றும் தெரிவித்தார்.

ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம் என சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேசிய போது தனிச்சட்டம் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். இதன் தீவிரத்தன்மையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேசமயம் இதுதொடர்பான தீவிர விழிப்புணர்வும் காவல்துறைக்கும் கூட தேவைப்படுகிறது. அரசு நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, சாதி ஆணவக் கொலைகள்

பட மூலாதாரம், FACEBOOK/NAAGAI MALI

படக்குறிப்பு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்ணகி - பட்டியல் சாதியைச் சேர்ந்த முருகேசன் கொலை வழக்கை நடத்திய வழக்கறிஞர் ரத்தினம், சமூகத்தில் ஆதிக்க சாதி உணர்வு குறையவில்லை என்கிறார். கண்ணகி முருகேசன் வழக்கில் நடந்த ஒரு நிகழ்வையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சாதிய அமைப்புகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் மிரட்டப்படுகின்றன அல்லது விலை பேசப்படுகின்றன. சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை. கண்ணகி முருகேசன் வழக்கை கூட சிபிஐ தான் விசாரித்தது. சில அமைப்புகளின் அழுத்தத்தால் முருகேசனின் நெருங்கிய ஒரு உறவினரே சாட்சியத்தை மாற்றிக் கூறினார். ஒரு சாட்சியம் மாறினால் கூட அது வழக்கின் விசாரணையை கடுமையாகப் பாதிக்கும்." என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு சாதி அடிப்படையிலானது என்கிறார் அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலில் தொடங்கி நிர்வாகம் வரை இங்கு பல விஷயங்கள் சாதி அடிப்படையிலான வாங்கு வங்கி அரசியலால் தீர்மானிக்கப்படுகின்றன. யார் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்." என்றார்.

சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு என தனிப் பிரிவுகள் உண்டா?

கௌரவம் என்ற பெயரில் சாதிக்காக நடக்கும் கொலை வழக்குகளுக்கு என்று தனிப் பிரிவுகள் எதுவும் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம்.

பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.

காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருப்பது உண்மை தான் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி.

தற்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது என்று அவர் தெரிவிக்கிறார், "இதற்கு முக்கியமான காரணம் காவல்துறைக்கு உள்ள பணி அழுத்தம் தான். பெரும்பாலான காவலர்கள் அவர்களின் நிலைய எல்லைக்குள் வேலை செய்வதே குறைந்துபோனது. இதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது" என்கிறார்.

"ஆணவக்கொலை வழக்குகளில் அரசியல்வாதிகளிடமிருந்தும் எதிர் தரப்பினரிடம் இருந்தும் அழுத்தம் வரும். ஆனால் அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பொருத்தது. அவர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. அதனால் தான் போலீஸ் விசாரிக்கக்கூடாது எனக் கூறுகிறார்கள். ஆனால் சிபிசிஐடி என்பது காவல்துறையின் ஒரு பிரிவு தான். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் வேலை செய்யவிட்டாலே போதுமானது" எனத் தெரிவித்தார்.

தனிச்சட்டம் தீர்வாக அமையுமா?

தமிழ்நாடு, சாதி ஆணவக் கொலைகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம்.

சமூகத்தில் ஆதிக்க உணர்வுகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் உதவும் என்கிறார் ராமு மணிவண்ணன். இது தொடர்பாக மேலும் விவரித்தவர், "நகர்ப்புறங்களை விட கிராமங்களில் சாதிய இறுக்கம் அதிகமாக இருக்கும். காவல்துறையும் சமூகத்தில் ஒரு அங்கமாகத் தான் உள்ளனர். எனவே அவர்களிடமும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. தற்போது அனைத்து கொலை வழக்குகளைப் போலதான் ஒரு ஆணவக் கொலை வழக்கும் நடத்தப்படுகிறது." என்றார்.

''ஒரு குற்றத்திற்கு என தனிச்சட்டம் வருகிறபோது அவை கூடுதல் கவனம் பெறும். இது பொதுமக்களுக்கானது மட்டுமல்ல. காவல்துறையும் நீதித்துறையும் கூட அந்த வழக்குகளை மேலும் சுதந்திரமாக கையாளத் தொடங்கும். தண்டனை ஒன்று மட்டுமே நம்மிடம் உள்ள ஒரே தடுப்பு. சட்டத்தின் கை இல்லாமல் அதைச் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளை வலுவாக்குவதே போதுமானது எனத் தெரிவிக்கிறார் ரத்தினம். "புதிய சட்டம் கொண்டு வந்தாலும் அதைச் செயல்படுத்துவது இதே காவல்துறையும் நிர்வாக அமைப்பும் தான். இதே அமைப்பு தான் சில வழக்குகளில் தண்டனை பெற்றும் கொடுத்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள தண்டனைச் சட்டங்களில் சில பிரிவுகளைச் சேர்த்துவதே போதுமானதாக இருக்கும். கூடுதலாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ளதைப் போல சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (விசிக) கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.

இதற்கிடையே திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (விசிக) கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.

சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சட்டத்தை தேர்தலுக்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crlzdx924lno

தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?

1 month 1 week ago

தமிழ்நாட்டில் நேற்று பரவலாக மழை பெய்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆக.05) பரவலாக மழை பெய்துள்ளது (கோப்புப் படம்)

59 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதை கடந்த சில நாட்களில் காணமுடிந்தது. இதற்கான காரணம் என்ன?

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது.

இதனை அடுத்து குறிப்பாக சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கிண்டி பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. கோவை மாவட்டத்திலும் நேற்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.

குறைந்த நேரத்தில் அதிக மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கோவையில் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறிகள் மழை நீரில் மூழ்கி வீணாவதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

முழு வீச்சில் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த மாநகராட்சி, அடுத்த முறை மழை வந்தால் வெள்ளநீர் தேங்காத அளவிற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்

குறைந்த நேரத்தில் அதிக மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று (ஆகஸ்ட் 5) ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. (கோப்புப் படம்)

இதற்கிடையில் இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதனால் 20 செ.மீ அளவிற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

தொலைபேசி: 1077 | 0423 - 2450034/35

வாட்ஸ்ஆப்: 9488700588

கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலம் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் பாதிப்பு எப்படி இருக்கும்?

குறைந்த நேரத்தில் அதிக மழை

பட மூலாதாரம், Getty Images

இன்று தென்தமிழக கடேலாரப் பகுதிகள், மன்னார் வைளகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் பீச்சில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் கரையை கடந்து கடைகள் மற்றும் அருகே உள்ள கோவிலையும் சூழ்ந்தன. கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதை சமீப காலங்களில் அதிகமாக காணமுடிகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானிடம் கேட்டபோது, பொதுவாக குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதற்கு மேகங்கள்தான் (Thunderstorms) காரணம் என்கிறார்.

"இவை எங்கெல்லாம் நகர்கிறதோ, அந்தந்த இடங்களில் மழை பொழிவு இருக்கும். இதில் 3 நிலைகள் உள்ளது. தொடக்கம் (Starting stage), முதிர்ச்சியடைதல் (Maturing Stage), வலுவிழப்பது (Weakening Stage) எனப்படும். சில சமயங்களில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், இந்த மேகங்கள் நகராமல் ஒரே இடத்தில் நின்றுவிடும். அதுதான் ஒரே இடத்தில் அதிக மழையை பெய்விக்கிறது" என விளக்கினார்.

தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

படக்குறிப்பு, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

"உதாரணமாக 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் 140 மி.மீ மழையும், தாம்பரத்தில் நேற்று முன்தினம் 75 மி.மீ மழையும், புதுச்சேரியில் நேற்று 100 மி.மீ மழையும் பெய்ததற்கு இதுவே காரணம்" என்றார் பிரதீப் ஜான்.

இதுபோன்ற மேகங்கள் பெரும்பாலும் பரவலான இடங்களில் இருக்காது எனக்கூறும் இவர், ''இது மிகவும் சாதாரணமான நிகழ்வுதான். மாதத்திற்கு இருமுறை இதுபோல் நடக்கிறது'' எனத் தெரிவித்தார்.

"இது பெரும்பாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிகழும். இந்த மழையால் குறிப்பிட்ட நேரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்குமே தவிர இது வெள்ளமாக மாறாது" எனக் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c79l3znng2vo

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்

1 month 1 week ago

05 Aug, 2025 | 11:26 AM

image

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டின் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரை போல மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். 

கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழச் சோசலிசக் குடியரசை அடைவதற்கு இரத்தம் சிந்தி உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து உயிரை விலையாகக் கொடுத்து உயிரீந்த மாவீரர்களின் ஒப்பற்ற வீரவரலாறே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். 

உலகின் எந்த இயக்கத்தினுடைய விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் அறநெறியையும் பின்பற்றி போரியல் விதிகளையும் மாண்புகளையும் கடைப்பிடித்து மரபுப்போர் புரிந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். போர் முடியும் கடைசித் தருவாயில்கூட பழிவாங்கும் நோக்கோடு சிங்கள மக்களை அழிக்க முற்படாது அவர்களது குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்த முனையாது இறுதிவரை அறம்சார்ந்து நின்ற வீரமறவர்கள் விடுதலைப்புலிகள். 

சிங்கள இராணுவமானது தமிழர்களது குடியிருப்புகள் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் என தமிழ் மக்கள் வாழ்விடங்களின் மீது வான்வழித்தாக்குதல் தொடுத்தது; தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் வீசி தமிழின மக்களைப் பச்சைப்படுகொலை செய்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தமிழர் நிலங்களை அபகரித்து தமிழர் தேசத்தை சுடுகாடாக்கி இனவெறியின் கோரத்தாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. 

எவ்விதப் போர் நெறிமுறையையும் பின்பற்றாது இனஅழிப்பு நோக்கில் செய்யப்பட்ட அத்தாக்குதல்களின் மூலம் ஏறக்குறைய 2 இலட்சம் மக்களை மொத்தமாய் கொன்றுகுவித்தது சிங்கள இனவாத அரசும் அதன் இராணுவமும். 

ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தும் தமிழினத்தின் கோர இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றமும் சர்வதேச அரங்கும் தமிழர்களுக்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தர முன்வரவில்லை. இனப்படுகொலை செய்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீது தலையீடற்ற பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும் ஈழச்சொந்தங்களிடம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியுமாக பன்னாட்டு மன்றத்தில் நீதிகேட்டு தமிழின மக்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை எம்மினத்தின் இனப்படுகொலையை உலகரங்கில் எடுத்துரைத்து எமது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எம்மினத்தின் மாண்பையும் ஈழச்சொந்தங்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது. 

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும்இமாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும் எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.

ஆகவே ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் திரையரங்குகளை முற்றுகையிட்டுஇ அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்.

https://www.virakesari.lk/article/221855

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!

1 month 1 week ago

WhatsApp-Image-2025-08-04-at-11.20.34.we

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!

தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய்  செலவில்  114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாயின்  ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். மேலும், கார் முதல் விற்பனை தொடக்க விழாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கனிமொழி எம்.பி. , வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441711

49 வயதில் மருத்துவம் படிக்க தேர்வு: தென்காசி பெண்ணின் சாதனை சர்ச்சையாவது ஏன்?

1 month 2 weeks ago

"நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது"

படக்குறிப்பு, மகளுடன் சேர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் தேர்வான தாய் அமுதவள்ளி

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 1 ஆகஸ்ட் 2025, 13:05 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"பிளஸ் 2 முடித்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆறு மாதங்களாக மகளுடன் சேர்ந்து நீட் தேர்வுக்குப் படித்து தேர்வு எழுதினேன். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை" எனக் கூறுகிறார், தென்காசியை சேர்ந்த 49 வயதான அமுதவள்ளி.

பிஸியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் அமுதவள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியிருக்கிறார்.

அதேநேரம், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்' என மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன. அதிக வயதில் மருத்துவம் படிப்பதற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமைன்று (ஜூலை 30) தொடங்கியது. முதல்நாளில் சிறப்பு பிரிவினருக்கான ((PwD category) கலந்தாய்வு புநடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் தென்காசியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான அமுதவள்ளி என்பவர் பங்கேற்றார். கலந்தாய்வு முடிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை அமுதவள்ளி எழுதியுள்ளார். கடந்த ஆண்டு பிளஸ் டூ படிப்பை முடித்த அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணியும் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இதில் 720 மதிப்பெண்ணுக்கு 147 மதிப்பெண்ணை அமுதவள்ளி பெற்றுள்ளார். அவரது மகள் சம்யுக்தா 441 மதிப்பெண் எடுத்துள்ளார்.

"பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இருக்கிறேன். எனக்கும் அரசு மருத்துவக் கல்லூரி அல்லது சுயநிதி கல்லூரியில் இடம் கிடைக்குமென நம்புகிறேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சம்யுக்தா கிருபாளணி.

மகளுடன் சேர்ந்து மருத்துவம் படிக்கத் தேர்வான தாய்

படக்குறிப்பு, "நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது'' என்கிறார் அமுதவள்ளி

'மகளால் வந்த ஆர்வம்'

"1994 ஆம் ஆண்டு பிளஸ் டூ படித்தேன். அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நுழைவுத் தேர்வும் பிளஸ் டூ மதிப்பெண்ணும் முக்கியமாக இருந்தன. அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார் அமுதவள்ளி.

ஆனால், பிஸியோதெரபிஸ்ட் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக பிபிசி தமிழிடம் கூறிய அமுதவள்ளி, "கடந்த ஓராண்டாக என் மகள் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். யாரிடமாவது சொல்லிப் படித்தால் மனப்பாடம் ஆகும் என்பதால் என்னிடம் சொல்லிப் படித்தார். அதைப் பார்த்து நானும் தேர்வு எழுதும் முடிவுக்கு வந்தேன்" என்கிறார்.

இவரின் கணவர் மதிவாணன் வழக்கறிஞராக இருப்பதால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தின் தேவைகளை அவர் கவனித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.

"கடந்த ஆண்டு நீட் தேர்வில் 380 மதிப்பெண் எடுத்ததால் மகளால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இந்தமுறை நானும் மகளும் இணைந்து படித்தோம். தினசரி ஆறு மணிநேரத்தை நீட் தேர்வுக்காக ஒதுக்கிப் படித்தேன்" என்கிறார், அமுதவள்ளி.

கடந்த ஆண்டு தனது மகளை நீட் பயிற்சி வகுப்பில் அமுதவள்ளி சேர்த்துள்ளார்.

'உயிரியல் பாடம் கைகொடுத்தது'

நீட் தேர்வு குறித்துப் பேசும் அமுதவள்ளி, " இயற்பியல் தேர்வு மிகக் கடினமாக இருந்தது. எல்லாம் கணக்குகளாக இருந்தால் ஒன்றும் புரியவில்லை. மத்திய பாடத்திட்டத்தில் (CBSE) இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பாடம் மட்டுமே கைகொடுத்தது" என்கிறார்.

இவர் தமிழ் வழியில் பிளஸ் டூ படிப்பை முடித்துள்ளார். "நீட் தேர்வையும் தமிழ் வழியில் எழுதினேன். ஒரு கேள்விக்கு கொடுக்கப்படும் நான்கு விடைகளும் ஒன்றுபோலவே இருக்கும். அதை கண்டறிவது தொடர்பாக மகள் கொடுத்த ஆலோசனைகள் உதவியாக இருந்தன" எனக் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மிகக் கடினமானதாக இருந்ததாகக் கூறுகிறார், அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணி.

"என்னுடன் சேர்ந்து படித்ததால் அம்மாவும் அதிக மதிப்பெண் பெறுவார் என நினைத்தேன். ஆனால் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துவிட்டது" என்கிறார்.

அதேநேரம், 49 வயதில் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படிப்பதை மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன.

"இவருக்கு தற்போது 49 வயதாகிறது. படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும்"

படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

ஓய்வுபெறும் வயதில் படிக்க வரலாமா?

"மருத்துவப் படிப்பு என்பது ஐந்தரை வருடங்களாக உள்ளது. தற்போது தேர்வானவருக்கு 49 வயதாகிறது. அவர் படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும். அறுபது வயதில் ஓய்வு பெற்றவர்களும் மருத்துவம் படிக்க வருகின்றனர்" எனக் கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவரால் எத்தனை ஆண்டுகாலம் திறனுடன் உழைக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு ஓய்வுபெறும் வயதை தொழிலாளர் நலத்துறை நிர்ணயித்துள்ளது. அதற்கு மேல் திறனுடன் வேலை பார்க்க முடியாது என்பது தான் காரணம்" என்கிறார்.

'ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது'

"இவர்களால் சமூகத்துக்கு எந்தளவுக்கு பலன் கொடுக்க முடியும் என்பது முக்கியமானது" எனக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "ஒருவர் தனது 49 வயதுக்குள் அதிக பட்டங்களைப் படித்து திறன்களை வளர்த்திருப்பார். அவரையும் பிளஸ் 2 படிப்பவரையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்க்க முடியாது" எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள், உயிரியியல் ஆசிரியர்களும் நீட் தேர்வு எழுதுவதாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "முன்பு மருத்துவப் படிப்புக்கு 25 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்டியல் சாதியினருக்கு 30 வயதாக உச்சவரம்பு இருந்தது" என்கிறார்.

வயது வரம்பை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "வழக்கு நிலுவையில் உள்ளதால் வயது வரம்பைத் தளர்த்திவிட்டனர். இதனால் ஐந்து முறைக்கும் மேல் சிலர் தேர்வுகளை எழுதுகின்றனர். வயது வரம்பு நிர்ணயிக்கும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.

இந்தக் கருத்தை மறுக்கும் அமுதவள்ளி, " பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு அதிக வயதில் ஒருவர் மருத்துவம் படிக்க வந்தால் அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறலாம். ஆனால், நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது" என்கிறார்.

பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு மூட்டு ஆகியவை குறித்துப் படித்திருப்பதாகக் கூறும் அவர், "இதைத்தான் மருத்துவப் படிப்பிலும் படிக்க உள்ளேன். மருத்துவம் படிப்பதற்கு வயது வரம்பு நிர்ணயிக்காமல் இருப்பது வரவேற்கத்தக்கது" எனவும் தெரிவித்தார்.

49 வயதில் மருத்துவம் படிக்க தேர்வு: தென்காசி பெண்ணின் சாதனை சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

வயது உச்ச வரம்பு வழக்கில் கூறப்பட்டது என்ன?

'நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை' என்ற தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கின் முடிவில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 'பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது' என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என, 2018 ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையேற்று, தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகமும், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு இல்லை' என்று அறிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn92gnre55po

Checked
Mon, 09/15/2025 - 19:37
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed