'19 நாட்டவரின் கிரீன் கார்டு மறுசரிபார்ப்பு' - அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்களுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம்,Pete Marovich/Getty Images
2 மணி நேரங்களுக்கு முன்னர்
வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற வருபவர்களை நிரந்தரமாக நிறுத்துவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு வர இந்த நடவடிக்கை அவசியம் என்று எழுதியுள்ளார்.
இதனால், அமெரிக்காவின் 'குடியேறுபவர்களுக்கான விதிகள்' கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.
இதை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறியிருக்கும் டிரம்ப், இது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் குடியேறிய ஆப்கானியரான ரஹ்மானுல்லா லகன்வால் என்பவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்று அறியப்பட்டிருக்கிறது.
2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தில் 'ஆபரேஷன் அலைஸ் வெல்கம்' (Operation Allies Welcome) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை அமெரிக்கா அனுமதித்தது.
டிரம்ப் என்ன எழுதினார்?
முன்னாள் அதிபர் ஜோ பைடனை விமர்சித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதிய டிரம்ப், முந்தைய நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு தீங்கு விளைவித்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், "அமெரிக்காவிற்கு பயனில்லாதவர்கள், நம் நாட்டை நேசிக்க முடியாதவர்கள் உள்பட, நம் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்களும் மானியங்களும் ரத்து செய்யப்படும். அமைதியை சீர்குலைக்கும் புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள். மேலும் பாதுகாப்பு அபாயமாக இருப்பவர்கள் அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் ஒத்துப்போகாத வெளிநாட்டு நபர்கள் நாடு கடத்தப்படுவார்கள்" என்றும் அவர் எழுதியிருந்தார்.
ஆனால், எந்த நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்படும் என்று அவர் விளக்கம் தரவில்லை.
மற்றொரு பதிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து விமானத்தில் மீட்கப்பட்ட மக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "லட்சக்கணக்கான மக்கள் எந்த விசாரணையும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். இதை நாம் சரிசெய்வோம்" என்றும் எழுதியிருந்தார்.

பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images
படக்குறிப்பு,வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.
19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும்
வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு, அமெரிக்காவில் "எந்த நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரும்" நாடு கடத்தப்படுவார் என்று ட்ரம்ப் கூறினார்.
அதே நாளில், பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் வரை, ஆப்கான் குடிமக்கள் அளித்த அனைத்து குடியேற்ற மனுக்களின் செயலாக்கத்தையும் அமெரிக்கா நிறுத்திவைத்தது.
வியாழக்கிழமை, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) 19 அபாயகரமான நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களின் கிரீன் கார்டுகளை மீண்டும் சரிபார்ப்பதாகத் தெரிவித்தது.
அந்த அறிக்கையில், புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
பிபிசி கேட்டபோது, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையாகத் தடை விதித்தும், மேலும் 7 நாடுகளின் குடிமக்களுக்கு பகுதியளவில் நுழைவு தடை விதித்தும் 2025 ஜூன் மாதம் வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியது.
ஆப்கானிஸ்தான், மயான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வட்டோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, இரான், லிபியா, சொமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
புரூண்டி, கியூபா, லாவோஸ், சியார்ரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிரீன் கார்ட் எப்படி மீண்டும் சரிபார்க்கப்படும் என்று யுஎஸ்சிஐஎஸ் விளக்கம் கொடுக்கவில்லை.
'மூன்றாம் உலக நாடுகள்'
தனது சமூக ஊடகப் பதிவில், அமெரிக்காவில் சமூக சீர்கேடு அதிகரிப்பதற்கு அகதிகளை குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்காவிற்கு பலம் சேர்க்கும் சொத்தாக அல்லாத எவரையும் வெளியேற்றுவேன் என்று கூறினார்.
தேங்க்ஸ்கிவ்விங் செய்தியாக வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய டிரம்ப், "சோமாலியாவிலிருந்து வந்த லட்சக்கணக்கான அகதிகள் மின்னசோட்டாவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டார்கள்" என்று கூறினார்.
"அமெரிக்காவை முழுமையாக சரிசெய்ய, அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நான் நிரந்தரமாக நிறுத்துவேன்" என்றும் அவர் எழுதினார்.
'மூன்றாம் உலகம்' என்ற சொல் முன்னர் ஏழை நாடுகளையும், வளரும் நாடுகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
டிரம்பின் அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை, யுஎஸ்சிஐஎஸ் யாரும் இன்னும் வழங்கவில்லை. டிரம்ப் தனது பதிவில் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாகத் தொடர்புபடுத்தவில்லை.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடைகளையும் விதித்தார்.
அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெரமி மெக்கின்னி, வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு குறித்த அதிபர் டிரம்பின் பதில் புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குகிறது என்று கூறினார்.
பிபிசி உலக செய்திகளின் நியூஸ்டே நிகழ்ச்சியில் பேசிய ஜெரமி மெக்கின்னி தாக்குதல்காரர்களின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார்.
"இதுபோன்ற வழக்குகள் நிறம், இனம் அல்லது தேசியத்தைப் பார்ப்பதில்லை. மனநோயோ தீவிர சித்தாந்தமோ எந்த பின்னணியிலிருந்தும் ஒருவருக்கு உருவாகலாம்" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம்,Scott Eisen/Getty Images
படக்குறிப்பு,ஜோ பைடன் தவறான முடிவுகள் எடுத்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார்
இந்தியர்களை பாதிக்குமா?
டிரம்பின் முடிவு பற்றிப் பேசிய முன்னாள் தூதர் வீணா சிக்ரி, அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லாததால், இந்தியர்கள் கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார்.
"மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களையும் தடை செய்வதாக அவர் (டிரம்ப்) கூறியிருக்கிறார். அவர் தனது முதல் பதவிக் காலத்தில் இதனைச் செய்தார். பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் அத்தகைய பட்டியலில் இருந்தன" என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இம்முறை ஒரு பட்டியல் ஏற்கெனவே தயாராக இருக்கிறது. ஆனால், அதில் யாரெல்லாம் சேர்க்கப்படுவார்கள் என்பதுதான் தெரியவில்லை.
மேலும் பேசிய வீணா சிக்ரி, "பாகிஸ்தானின் பெயர் முன்னதாக அந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அந்த நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார்.
திட்டவட்ட விவகார நிபுணர் பிரம்மா செல்லனேய், கடந்த ஒரு தசாப்தத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார்.
"அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் இதுபோன்ற சம்பவங்களில் சுடப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது"
"ஆனால் முன்பு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வுக்காக பணியாற்றிய ஒரு ஆப்கானிஸ்தான் அகதியால் நடத்தப்பட்ட ஒரு சம்பவம் அதிபர் டிரம்பை கோபப்படுத்தியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து குடியேற்றத்தை நிறுத்துவேன் என்று சமூக ஊடகங்களில் அறிவிக்கும் அளவுக்கு அது அவரைக் கோபப்படுத்தியிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
"சொமாலிய மக்களுக்கு இந்த குற்றவாளியுடன் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அவர்கள் மீதும் தங்கள் கோபத்தை அவர்கள் கொட்டியிருக்கிறார்கள். ஒரு நபரின் செயலுக்காக ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் மக்களையும் குறைசொல்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
வாஷிங்டன் டிசி தாக்குதலில் சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல்
ரஹ்மானுல்லா லகன்வால் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிந்ததால் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஆப்கானியர்களில் அவரும் ஒருவர்.
2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது அவர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்தது.
லகன்வால் முன்பு சிஐஏவுடன் இணைந்து பணியாற்றியவர் என்று சிஐஏ இயக்குநர் தெரிவித்தார்.
பிபிசியின் அமெரிக்க துணை நிறுவனமான சிபிஎஸ்-ன்படி, லகன்வால் 2024 இல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c1dzg24dwdko