சமூகச் சாளரம்

மையங்களால் அழித்தல்

4 days 10 hours ago

இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது.

*****

மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி.
March 14, 2024

வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாகச் சரியும் வரை மையத்தை வலுவாக்கிக் கொண்டே செல்வார்கள். மையத்தின் எடை தாளாமல்தான் பெரும்பாலான அமைப்புகள் சரிகின்றன. 

சாமானியர் என இங்கே சொல்லப்படுவதில் வாழ்க்கையின் எல்லா தரப்பினரும் உண்டு.மறு சொல்லே இல்லாமல் குடும்பத்தை கட்டியாளும் குடும்பத்தலைவரை மையமாகக் கொண்ட குடும்பங்கள் வலுவானவையாக இருக்கும் என நம்பும் கோடிக்கணக்கானவர்கள் இங்குண்டு. அதே நம்பிக்கையுடன் தேசத்தை ஆட்சி செய்பவர்களும் உண்டு. சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிர்வாக அமைப்புகள் வரை, சிறிய சேவை அமைப்புகள் முதல் மதங்கள் வரை இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்கூடாக நம் குடும்பங்களிலேயே காணலாம். வலுவான குடும்பத்தலைவரால் நடத்தப்படும் குடும்பங்களில் மிக எளிதில் பூசல்கள் உருவாகின்றன.பிளவுகள் தோன்றுகின்றன. அனைவருக்கும் இடமுள்ள நெகிழ்வான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மிக மிக ஆற்றல் கொண்ட மையம் கொண்டிருந்த தேசங்கள் ஒரு நூற்றாண்டைக்கூட கடந்ததில்லை. அண்மைக்கால உதாரணம் சோவியத் ருஷ்யா. 

அப்படியே பின்னுக்குச் சென்றால் ஹிட்லரின் ஜெர்மனி, பிரிட்டிஷ் பேரரசு என,  ஒவ்வொரு உதாரணமும் நம்மை திகைப்பிலாழ்த்தும். அதற்கான காரணம் மிக மிக எளிதானது. அது இயற்கையின் விதி. இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும் பிரிந்து பிரிந்துதான் வளர்கின்றன. ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதி நிலைகொள்கின்றன. மிக வலுவான ஒன்றுக்கு அதேயளவு நிகரான வலிமைகொண்ட ஒன்று உடனே உருவாகிவிடுகிறது. அந்த முரண்பாடுதான் இயற்கை இயங்கும் வழி. அதை மேலைச்சிந்தனை dialectics என்கிறது. இந்திய சிந்தனைமரபில் யோகாத்ம தரிசனம் என்பது அதுவே என நடராஜ குரு அவருடைய நூல்களில் விளக்குகிறார். 

வலுவான மையத்தை உருவகிப்பவர்கள் எதிர்ப்பே இல்லாத ஒரு புள்ளியை கற்பனை செய்கிறார்கள். அப்படியொன்றுக்கு இயற்கையில் இடமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்று இங்கே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி ஒரு மையப்புள்ளிக்கு இந்து மெய்யியலில் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. இந்து மெய்யியலில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி உருவகிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லா தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படும் நிகரான ஆற்றல்கொண்ட சக்திகள் உண்டு. முழுமுதல் (absolute) என உருவகிக்கப்படுவது வேதாந்திகள் சொல்லும் பிரம்மம் மட்டுமே. அது தொடக்கமும் முடிவும் அற்றது. அது அன்றி வேறேதும் இல்லை. ஆனால் அந்நிலையில் அதற்குச் செயல்தன்மையே கிடையாது. அது செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்குச் சமானமான எதிர்விசை தேவை. அந்த விசையாக மாயையை உருவகிக்கிறது வேதாந்தம். 

வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி ரிக்வேதத்தில் உள்ள சிருஷ்டிகீதம். அது அனைத்தையும் இணைப்பதும், அனைத்துமாக ஆவதுமான ஒரு பிரம்மத்தையே உருவகிக்கிறது. ஒரு பதிலை முன்வைப்பதில்லை, எத்தனை விளக்கினாலும் முழுமையாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வியையே முன்வைக்கிறது. மையத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக விரிந்து விரிந்து செல்லும் ஒரு பயணத்தை தொடங்கி வைக்கிறது. அந்தப் பயணமே உபநிடதங்களில் விரிந்தது. ஒன்றை இன்னொன்று கடுமையாக மறுக்கும் பல்வேறு ஞானவழிகளை உருவாக்கியது. தெற்கே சைவசித்தாந்தம் வரை அது வளர்ச்சி அடைந்தது. இந்து மெய்ஞானத்திற்கு அது நிலைகொள்ளும் மையம் என ஏதுமில்லை. ஏனென்றால் அது ஓர் அமைப்பு அல்ல. அது ஒரு தேடல். பலநூறு ஞானப்பயணங்கள் நிகழும் களம். எல்லா பாதையும் சென்றடைவது ஓரிடத்தையே என்று உபநிடதங்கள் கூறின.

இந்தியாவின் பிரதமர் ராமர்கோயில் கட்டுவது 130 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார். அந்த கோடிகளில் நான் ஒருவன் அல்ல. எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு பதற்றமும் வருத்தமும்தான் உருவாகிறது. இந்த பூசல் தொடங்கிய காலம் முதலே இதைத்தான் எழுதி வருகிறேன். நான் சொல்வது அரசியல் அல்ல. ஓர் உறுதியான இந்துவாக, வேதாந்தியாக நின்று இதைச் சொல்கிறேன். இது இந்துமெய்ஞானத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு. நீண்டகால அளவில் இது அழிவையே உருவாக்கும். 

இந்த ஆலயத்தை இந்து மதத்தின் ஒற்றை மையமாக உருவகிக்கிறார்கள். இந்துதேசியத்தின் மிகமிக வலுவான ஒரு புள்ளியாக இதை நிறுவுகிறார்கள்.  இந்தியாவின் ஒவ்வொருவரும் அதை ஏற்றாகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதைத்தான் பிரதமரின் சொற்கள் காட்டுகின்றன. அந்த மனநிலையில் இருப்பது இந்தியத்தன்மை அல்ல, இந்துத்தன்மையும் அல்ல. இது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகிவந்த பண்பாட்டுத் தேசியவாத மனநிலை. அதை இங்கே நகல் எடுக்கிறார்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தை மட்டும் இங்கே மதத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அதில் முதன்மையானது ராமர் அவ்வளவுதான்.

பழைய மன்னராட்சிகள்  கூட்டு அதிகாரம் கொண்டவை. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்களின் அதிகாரத்தை நிர்வகிக்கும் மையம்தான் அன்றைய மன்னரின் சபை. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மன்னர் முற்றதிகாரம் கொண்டவராக ஆனார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் உருவாகி நவீன அரசுகள் அமைந்தன. அந்த அரசுகள் வலுவான ஆட்சிமையத்தை உருவாக்கிக்கொண்டன. அந்த மையத்தை உருவாக்கிக்கொள்ள அவை கண்டடைந்த வழிதான் பண்பாட்டுத்தேசியம். அது சர்வாதிகாரிகளை உருவாக்கியது. உலக வரலாற்றில் மதஅரசுகளும் மன்னர் அரசுகளும் உருவாக்கியதை விடப்பெரிய அழிவை அவைதான் உருவாக்கின. 

அந்த அழிவைக் கண்டபின்னர்தான் ஐரோப்பா நெகிழ்வான மையம் கொண்ட சமூகங்களையும் அரசையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அரசியல் என்பது முழுக்க முழுக்க பொருளியல் சார்ந்தது என்றும் அதில் மதம், இனம், மொழி போன்ற பண்பாட்டுக்கூறுகளுக்கு இடமில்லை என்றும் வகுத்துக்கொண்டது. இந்தியாவில் நாம் 1947ல் தொடங்கியபோதே ஐரோப்பாவில் நிகழ்ந்த அழிவுகளில் இருந்தும் இங்கே நிகழ்ந்த மதக்கலவரங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நெகிழ்வான, அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய தேசியத்தையும் அரசையும் உருவாக்கிக்கொண்டோம். இன்று மூர்க்கமாக திரும்பிச்சென்று பழைய ஐரோப்பிய பண்பாட்டுத்தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம். 

உறுதியான அதிகார மையங்களை உருவாக்க பண்பாட்டை பயன்படுத்தும் வழி என்பது பண்பாட்டுக்கூறுகளை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்குவது. கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்களை அதன்மேல் ஏற்றுவது. பண்பாட்டு தேசியவாதிகள் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில்  அவற்றுக்கு மாபெரும் சிலைகள், கட்டிடங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கினர். உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக மிகையுணர்ச்சிகளை பரப்பினர். அந்த உணர்ச்சிவேகத்தை பயன்படுத்தி அதிகாரங்களை அடைந்தனர். அந்த அதிகாரத்தின் முகங்களாக தனிமனிதர்கள் தங்களை முன்வைத்தனர். பிஸ்மார்க், முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின் அனைவரும் ஒரே வார்ப்புகள் கொண்டவர்களே. அனைவருமே மாபெரும் கட்டிடங்களையும் சிலைகளையும் நிறுவியவர்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். 

ஏன் சர்வாதிகார மனநிலைகொண்டவர்கள் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள்? ஏனென்றால் சர்வாதிகாரிகள் அஞ்சுவது காலம் என்னும் மாபெரும் ஓட்டத்தைத்தான். அது எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்கிறதென அவர்களுக்கு உள்ளூரத்தெரியும். அவர்கள் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காலிகத்தன்மையை அஞ்சுகிறார்கள். ஆகவே நிலையான எதையவாது உருவாக்க துடிக்கிறார்கள். பட்டேல் சிலை, ராமர் கோயில் எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான். அவை உடனடியாக பயனளிக்கும். மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களை கும்பல்களாக ஆக்கி, அதிகாரத்தை ஈட்டித்தரும். ஆனால் நீண்டகால அளவில் அவை இணையான எதிர்விசைகளை உருவாக்கி அழிவையே அளிக்கும்.  

அதிகாரம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு புரிந்துணர்வு. ஒவ்வொரு கணமும் நிகழும் பலநூறு ஒப்பந்தங்களின் வழியாக நிகழ்வது. சர்வாதிகாரிகள் அதை கண்கூடான ஓர் அமைப்பாக நிறுவ நினைக்கிறார்கள். சாமானியர் அதை வியந்து பார்க்கவேண்டும், அஞ்சவேண்டும். ஆகவே மாபெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். சொற்கள் அழியும் ஆனால் கல் அழியாமல் நின்றிருக்கும் என கற்பனை செய்துகொள்கிறார்கள். கல் நின்றிருக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகாரம் அழிந்தபின், அதிகாரம் என்பது அழியும் என்பதற்கான நினைவுச்சின்னமாகவே அந்த கல்லமைப்பு நிலைகொள்ளும். அதையே வரலாறு காட்டுகிறது. 

இந்த விவாதத்தில் எப்போதும் கேட்கப்படும் வினா, பழைய மன்னராட்சியில் ஆலயங்கள் கட்டப்படவில்லையா என்பது. மன்னராட்சிக்காலம் என்பது தீராத போர்களும் அழிவுகளும் நிகழ்ந்த யுகம். ஒரு மன்னர் உருவாக்கும் ஆலயம் இன்னொரு மன்னரால் அழிக்கப்படும். இருவருமே ஒரே மதத்தினராக இருப்பார்கள். அந்த மதச்சார்பு உருவாக்கிய அழிவைக் கண்டபின்னர்தான் உலகமெங்கும் ஜனநாயகம் உருவாகியது. ஜனநாயகத்திற்கு முதல் எதிரி பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினரின் பண்பாட்டை வலியுறுத்துவது நீண்டகால அளவில் அழிவைநோக்கிச் செல்வது.

கண்கூடான உதாரணம் ஸ்ரீலங்கா. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கே அரசியல் மதஅடிப்படை கொண்டதாக ஆகியது. அதற்கு வித்திட்டவர் ஐரோப்பியர்களிடமிருந்து பௌத்தத்தை கற்றுக்கொண்டவரான அநகாரிக தம்மபாலா என்பவர். அவர் முன்வைத்தது மதத்தை அல்ல, ஐரோப்பிய பாணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியவாதத்தை. பௌத்தம் அரசுமதமாகவே முன்வைக்கப்பட்டது. மதகுருக்களை பணிந்து ஜனநாயகரீதியாக தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களாக மதகுருக்கள் மாறினர். அதன் விளைவுகள் முப்பதாண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போர். உயிரழிவு, பொருளியல் பேரழிவு. 

அந்த மனநிலை மெய்ஞானத்தின் களத்திற்குள் வரும்போது மேலும் அழிவை உருவாக்குவதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே சிதைக்கப்படுவது சில மனிதர்களால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நாடு, அரசு போன்ற புறவயமான அமைப்புகள் அல்ல. அவை அழிந்தால் இன்னொருவகையில் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கே சிதைவுறுவது நுண்மையான அகவய அமைப்பு. அது பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னியல்பாக உருவாகி வந்தது. ஞானிகள், கலைஞர்கள், தத்துவசிந்தனையாளர்களால் திரட்டப்பட்டது. நம்மையறியாமலேயே நமக்குள் உருவாகியிருப்பது. அதை இழந்தால் நாம் திரும்ப அடைய முடியாது. 

வேதாந்தத்தின் அணுகுமுறையில். ராமன் வைணவ மதத்தின் ஒரு தெய்வ உருவகம். வைணவம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று மட்டுமே. அந்த தெய்வ உருவகத்திற்கு அதற்குரிய தனித்தன்மைகள் உண்டு. ‘அறத்தின் உருவமான அரசன்‘ என சுருக்கமாக வலியுறுத்தலாம். தொன்றுதொட்டு இருந்துவரும் தந்தைவழிபாடு, அரசன் வழிபாடு ஆகியவை அந்த உருவகத்தில் இணைகின்றன. அந்த உருவகத்தை இந்துமெய்ஞான மரபுகள் அனைத்துக்கும் தலைமையான ஒரு தெய்வவடிவமாக வலியுறுத்துவது என்பது மெய்ஞானத்தேடலின் மற்ற வழிகள் அனைத்தின்மீதுமான ஒடுக்குமுறையாகவே ஆகும். சிவலிங்கம் போன்ற உருவமற்ற உருவம் (அருவுரு) வழிபடப்படும் மதப்பிரிவுகள் இந்து மதத்திற்குள் உண்டு. உருவவழிபாட்டை ஏற்காத வேதாந்தப்பிரிவுகள் உண்டு. அவர்களெல்லாம் ராமனை ஏற்றுக்கொண்டாகவேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

காலப்போக்கில் ராமனை மறுப்பதென்பது தண்டனைக்குரிய இறைநிந்தனையாக இங்கே மாற்றப்படலாம். அது மதத்தை ஓர் உறுதியான நிறுவனமாக ஆக்குவதில் கொண்டுசென்று நிறுத்தும். எங்கே அப்படி ஓர் உறுதியான மதமையம் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரல்கள் உருவாவதை வரலாறு காட்டுகிறது. அந்த எதிர்க்குரல்களை மதநிந்தனை என்னும் குற்றம்சுமத்தி மையமரபு வேட்டையாடுகிறது. ரத்தம் தோய்ந்த போராக அது உருமாறிவிடுகிறது. அவ்வாறான ஒரு நிலைநோக்கி இன்றைய மையப்படுத்துதல் எதிர்காலத்தில் இந்து மதத்தை கொண்டுசெல்லக்கூடும். 

வைணவர்கள் தங்கள் தெய்வத்திற்கு என ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அவர்கள் ராமனே முழுமுதல்வ்தெய்வம் என்று சொன்னாலும் அதில் பிழையில்லை, அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அரசு அந்த ஆலயத்தை அதிகாரபூர்வமாக அமைத்து, இந்திய தேசத்தின் அனைவரின் வாக்குகளையும் பெற்ற ஆட்சியாளர்களால் அது திறந்து வைக்கப்படும் போதுதான் மையப்படுத்தல் நிகழத்தொடங்குகிறது. 

ஏனென்றால் இந்து மதத்தின் செயல்பாட்டு முறை என்பது மையப்படுத்துதலுக்கு எதிரானதாகவும், பன்மைத்தன்மை கொண்டதாகவும், உள்விவாதம் கொண்டதாகவும்தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெருமதங்கள் இன்று அதற்குள் உள்ளன. வேதாந்தம் என்னும் தூய தத்துவப்பார்வை உள்ளது. இதைத்தவிர பலநூறு சிறுவழிபாட்டு முறைகள் உள்ளன. பலநூறு புதிய புதிய தத்துவப்பார்வைகள் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றை மறுப்பதும் விமர்சிப்பதுமாகும். மையம் என ஒன்று திரண்டுவந்தாலே ஒடுக்குமுறை தொடங்கும். 

மிகச்சிறந்த உதாரண நிகழ்வு  ஒன்றுண்டு. இந்தியாவில் ராமன் ஒரே வகையாக எங்கும் சித்தரிக்கப்படவில்லை. வட இந்திய ராமன் அங்கே புகழ்பெற்றிருக்கும் வைணவ பக்தி மரபான புஷ்டிமார்க்கத்தால் உருவாக்கப்பட்ட உருவகம். தென்னிந்தியாவில் அப்படி அல்ல. கேரளத்தின் பெருங்கவிஞரும், நாராயண குருவின் வேதாந்த மரபில் வந்தவருமான குமாரன் ஆசான்  எழுதிய‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ என்னும் குறுகாவியம் மிகப்புகழ்பெற்றது. பல ஆண்டுகளாக கல்விநிலையங்களில் பயிலப்படுவது. அதில் சீதை ராமனை அரசனாக மட்டுமே நிலைகொண்டு கணவனாகவும் தந்தையாகவும் கடமையை மறந்தவன் என விமர்சிக்கிறாள். செப்டம்பர் 2015ல் மாத்ருபூமி நாளிதழில் அந்தக் கவிதையை பற்றி எம்.எம்.பஷீர் என்னும் புகழ்பெற்ற கல்வியாளர் ஒரு கட்டுரை எழுதியபோது கேரளத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அந்த இதழ் அக்கட்டுரையை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியது. (நான் அந்நிகழ்வில் கடுமையாக எதிர்வினையாற்றி பஷீருக்கு ஆதரவாக எழுதினேன்) 

அது உண்மையில் வேதாந்தத்தின்மேல், நாராயண குருவைப்போன்ற ஞானிகள்மேல் நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல். இன்றைய அரசுமதம் என்னும் போக்கு சென்று சேரக்கூடிய இடம் அதுதான். இந்து மெய்ஞானத்தின் உச்சகாகவும் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழும் வேதாந்தத்தை எதிரியாக்கி அழிக்க முயல்வது. அது இந்துமதத்தையே அழிப்பது. ஆகவே ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டிய ஒரு செயல் இவர்கள் செய்துகொண்டிருப்பது.

https://www.jeyamohan.in/197947/

 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"

4 days 13 hours ago
 
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"PART / பகுதி: 17 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil]
 
 
சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல என்பதும், சைவ உணவுப் பொருட்களுடன் சிந்து சமவெளி நாகரிக மக்களும் இறைச்சியை உட்கொண்டனர் என்பதும் இறந்தவர்களுக்காக வழங்கப்படும் பிரசாதங்களில் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
 
மேலும் அங்கு மாட்டிறைச்சி, குறைந்தது சிலராவது சாப்பிட்டதற்கு சான்றுகள் உண்டு. அங்கு தோண்டி எடுக்கப் பட்ட தொல்பொருள்களில், ஒரு வேட்டையாடும் கருவியான, சுண்டுவில்லில் [கவண்வில் அல்லது கவட்டை / slingshot] பாவிக்கும் களிமண் பந்துக்கள், மற்றும் செம்பு மீன் கொக்கிகள், அம்புவின் நுனி, எறியும் கத்தி போன்றவை எடுக்கப் பட்டுள்ளது. அவை விலங்குகளை கொல்ல பாவிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுடன், அவை மேலும் சிந்து வெளி மக்கள் விவசாயிகளாக மட்டும் இன்றி, அவர்கள் ஆற்றல் வாய்ந்த, மற்றும் திறமையான வேட்டைக் காரர்களாகவும் மீனவர்களாகவும் இருந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
 
இதுபோலவே தானியங்களை அரைக்கும் கல்திருகைகள் மொகஞ்சதாரோவில் கண்டறியப் பட்டுள்ளன. லோத்தலில் தந்தூரி அடுப்பு போன்ற சுடு அடுப்புகள் காணப் படுகின்றன. இறைச்சி பொதுவாக கால்நடையில் இருந்து வந்தன. அவை ஆடு, மாடு, பன்றி, போன்ற கால் நடைகளுடன் மற்றும் கோழி, ஆமை, பறவையும் ஆகும். மேலும் எருமைகள், செம்மறியாடு, ஆடுகள், மாடுகள் போன்றவை பால் எடுப் பதற்க்காக வளர்க்கப் பட்டன. அத்துடன் காட்டுக் கோழி, காட்டு விலங்குகளான, மான், மறிமான் (Antelope), காட்டுப்பன்றி போன்றவை அங்கு வேட்டையாடப் பட்டன. ஆறு, குளம், கடலில் இருந்து பெறப்படும் உடன் மீன் [fresh fish], மட்டி போன்ற வற்றையும் அவர்கள் உண்டார்கள்.
 
அத்துடன் பல மீன்கள் காயவிடப்பட்டன அல்லது உப்பு இடப்பட்டன. மீனுடன் அவர்கள் பழங்கள், காய்கறிகள் முதலிய வற்றையும் காயவைத்து அங்கு நிலவிய கடுமையான குளிர்காலத்தில் பாவித்தார்கள். பாறை மீன், கெழுத்தி மீன் போன்ற கடல் மீன்களின் எலும்புகள் மற்றும் ஓடுகள், சிந்து சம வெளி நாகரிகத்தை சேர்ந்த ஹரப்பா வீடுகளைச் சுற்றி கண்டு எடுக்கப்பட்டன. இவை எல்லாம் அங்கு மக்கள், கடல் உணவு உட் கொண்டதை எடுத்து காட்டுகிறது.
 
மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகளின் பற்களைப் பரிசோதனை செய்த போது, அங்கு ஆண்களை விடப் பெண்கள் மிகக் குறைவாகவே உணவு உட்கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் தமிழ் அறிஞர் அ.கா.பெருமாள் ஹரப்பா நாகரிக காலகட்ட உணவு வகைகள் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்.
 
ஹரப்பன் வீடுகளில் முற்றத்தின் வெளியில் சமையலறை செங்கல்லால் கட்டப்பட்ட அடுப்பைக் கொண்டு இருந்தன. அங்கு சமையலுக்கு பல்வேறு அளவுகளில் மட்பாண்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன; அதே நேரம் பணக்கார வீடுகளில் உலோக பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. சில குறிப்பிட்ட விவசாய கருவிகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அங்கு கண்டு பிடிக்கப்பட்ட தீக்கல் (Flint) அல்லது சிக்கிமுக்கிக் கல் கத்திகள் அறுவடைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இன்று ஊகிக்கப் படுகிறது.
 
அது மட்டும் அல்ல, பண்டைய காலத்தில் ஹரப்பன் காளிபங்கானில் [தற்கால தார் பாலைவனத்தில் பாயும் காகர் நதியின் தென்கரையில் அமைந்த சிந்துவெளி பண்பாட்டுக் கள நகரம் ஆகும்] உழவு செய்யப்பட்ட வயல் கிமு 3 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் கலப்பை அங்கு பயன்பாட்டில் இருந்ததைக் எடுத்துக்காட்டுகிறது; மேலும் ஒன்றையொன்று கடக்கும் கோடுகளின் வடிவத்தில் [criss-cross] அமைந்த , ஒரு கலப்பை மூலம் தரையில் செய்யப்பட்ட நீண்ட, குறுகிய அகழிகள் [furrows], ஒரே வயலில் இரண்டு பயிர்களை வளர்க்கப் பயன்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நடைமுறை இன்றைய நவீன காலத்திலும் தொடர்வதே!
 
இன்று நமது முக்கிய உணவுகளான - உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், புளித்த ரொட்டி [ வேகவைத்த பொருட்களை பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் மாற்றும் நுரைமம் அல்லது நொதி கொண்ட பாண் / leavened bread], சீஸ், ஆப்பிள்கள் - உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவை ஆகும். உதாரணமாக, சிந்து சமவெளி மக்களும் மற்றும் பண்டைய இடைக்கால இந்தியாவின் மக்களும் உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை அறிந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் சாப்பிட்டவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் நம் தட்டுகளில் இருந்து மறைந்து விட்டன.
 
இந்த மறைந்த உணவுகளில் துணைக்கண்டத்தில் ஒரு காலத்தில் வேட்டையாடப்பட்ட அல்லது வளர்க்கப்பட்ட பல விலங்குகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை நாம் எடுத்துக்காட்டிய உணவுகளை நன்றாக உற்றுப் பார்த்தால், சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த நம் முன்னோர்கள் இன்று நாம் உட்க்கொள்ளுவதையே அதிகமாக சாப்பிட்டுள்ளனர் என்பது தெளிவாகும். மாறாக, உண்மையில், அவர்கள் சாப்பிட்டதையே நாம் அதிகமாக இன்று இன்னும் சாப்பிடுகிறோம்! "விவசாய உபரிகளை உற்பத்தி செய்து கட்டுப்படுத்தும் திறன் ஆரம்பகால சிக்கலான சமூகங்கள் மற்றும் நகரங்களின் எழுச்சிக்கு ஒரு அடிப்படை காரணியாக இருந்தது." என்பதற்கு, இந்த உண்மைக்கு, சிந்து சமவெளி நாகரிகம் [கிமு 3300-1300 க்கு இடைப்பட்ட காலத்தில்,] சந்தேகமில்லாமல் ஆதாரம் காட்டுகிறது.
நன்றி.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி : 18 தொடரும்
 
"FOOD HABITS OF TAMILS" PART: 17 "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing"
The fact that the people of the Indus Valley civilization were not all vegetarians and Along with the vegetarian food items the people of Indus valley civilization also consumed meat that was evident or confirmed from the fact that meat was included in the offerings made for the dead and there is also evidence that at least some people in Harappan sites ate beef. Also With the excavation of number of artefacts like sling balls of clay, copper fish hooks, the arrow heads, the flying knives etc strongly prove that these were required to kill and this also prove that, the Indus valley people were not only farmers, they were competent and efficient hunters and fishermen. Meat came mainly from cattle, but Included in this list are chicken, mutton, beef, pork. Buffaloes, sheep, goats and cows were reared for milk too. Along with that, they also hunted a wide range of wildfowl and wild animals such as deer, antelopes and wild boar. They also ate fish and shellfish from the rivers, lakes and the sea; as well as being eaten fresh, many fish were dried or salted. Along with fish, fruits & vegetables also dried for use in the harsh winters.– many bones and shells in hard form from marine fish such as jack and catfish etc has been found in and around the houses of the Indus valley civilization, at Harappa, far inland.
 
Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Pottery vessels in a range of sizes were used for cooking; in wealthy households metal vessels were also used. Few certain agricultural tools have been found. Flint blades were probably used for harvesting. A ploughed field at Early Harappan Kalibangan shows that the plough was in use by the early 3rd millennium BC; its criss-cross furrows allowed two crops to be raised in the same field, a practice that has continued into modern times.
 
Many of our staples today — potatoes, tomatoes, chillies, leavened bread, cheese, apples — came to India from other parts of the world. The people of the Indus Valley, as well as those of ancient and most of medieval India, for example, would not have known what to with a potato or a tomato. At the same time, much of what was once eaten by our ancestors has been taken off our plates over time, thanks to cultural and economic forces. Among these foods are a number of animals that were once hunted or reared in the subcontinent.
 
If you have a good look at the food and it becomes clear that our ancestors of the Indus-Valley civilization ate a lot of what we do today. Rather, we eat a lot of what they ate! So powerful that people still continue to follow that !!
An examination of the teeth of the skeletons found at mohenjo-daro revealed that women consumed much less food than men. Also, Tamil scholar A.K. Perumal has clearly explained the food types of the Harappa civilization period in his article 'Food Culture'. “The ability to produce and control agricultural surpluses was a fundamental factor in the rise of the earliest complex societies and cities.” For this fact, the Indus Valley Civilization [of the period between 3300-1300 BC,] bears unequivocal evidence.
Thanks.
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
PART : 18 WILL FOLLOW
432749337_10224839085907227_769596461784
432779599_10224839082187134_717765824736
 
 
433036358_10224839086267236_798491585906
 
 
432764017_10224839083627170_366820152081
430133627_10224839082427140_644203901849
 
 

தூய அடையாளம்

2 weeks 1 day ago
தூய அடையாளம்
-----------------------------
10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது.
 
முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்று கணிக்கக்கூடிய வகைகளில் மனிதர்களுக்கு இடையே தனித்துவம் இருந்தது.
 
புலம் பெயர்ந்த பின், குடியேறிய நாடுகளில் ஒரு அடையாளம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 'இந்தியர்' என்ற ஒரு வகைக்குள் நாங்கள் அடக்கப்பட்டோம். இந்தியர்கள் தென்னிந்தியாவா என்று கேட்டனர், தென்னிந்தியர்கள் கேரளாவா என்றனர், இல்லை இல்லை ஶ்ரீ லங்கா என்று என் அடையாளத்தை நிலைநிறுத்தவே நிறைய சக்தி தேவைப்பட்டது. ஒரு தடவை ஒரு பங்களாதேஷ் நண்பரை நீ இந்தியாவா என்று தெருவில் ஒருவர் கேட்க, அவர் மிகவும் கோபப்பட்டு, எகிறிக் குதித்து பனியில் சறுக்கி விழுந்து போனார். அவருக்கு அவரின் அடையாளம் அவ்வளவு அவசியமான ஒன்றானதாக இருந்திருக்க வேண்டும்.
 
உண்மையில் எங்களின் தலைமுறைக்கு அடையாளம் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நாங்கள் அங்கிருந்து கொண்டு வந்த அடையாளங்களுடனேயே இங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இன்னும் இன்னும் அடையாளத்துடன் அதிகமாக ஒட்டியுள்ளோம் என்று தான் சொல்லவேண்டும். இப்படியே எங்களின் வாழ்க்கைகள் முடிந்தும் விடும். ஆனால், பிரச்சனை அடுத்த மற்றும் பின் வரப் போகின்ற தலைமுறைகளுக்கே.
 
இங்கு ஒரு பல்கலையில் இந்த விடயத்தை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் இடையே இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசும் ஒரு பெரும் சமூகமே இங்கிருப்பதால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறைகளில் அடையாளம் என்பது ஒரு சிக்கலான ஒரு விடயமாக இருக்காது என்றே உடனே எண்ணத் தோன்றும்.
 
ஆனால், அவர்களின் நிலைமையும் எங்களின் நிலைமையும் ஆச்சரியமாக ஒன்றாகவே இருக்கிறது. அச்சு அசலாக ஒன்றாக இருக்கின்றது. புதிய தலைமுறை ஒரு லத்தீன் அமெரிக்கராக இருக்க வேண்டிய அளவிற்கு லத்தீன் அமெரிக்கராக இல்லை என்று புலம் பெயர்ந்த தலைமுறை குற்றம் சாட்டுகின்றது. புதிய தலைமுறைக்கு ஸ்பானிஷ் மொழியே சரியாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. 
 
புதிய தலைமுறையோ எங்களுக்கு ஸ்பானிஷ் முற்றாகவே விளங்குகின்றது, ஆனால் நாங்கள் ஸ்பானிஷில் பதில் சொன்னால் இவர்கள் எங்களின் உச்சரிப்பை நக்கலும், நையாண்டியும் செய்கின்றார்கள் என்று முந்தைய தலைமுறையை நோக்கி விரலை நீட்டுகின்றனர். அமெரிக்கர்களோ எங்களின் சில ஆங்கில வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கின்றனர். நாங்கள் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.
 
மொழி விடாது போல.

முற்றவெளி மந்திரம்

3 weeks 3 days ago
முற்றவெளி மந்திரம்
sudumanalFebruary 18, 2023
bild1.jpg?w=640

யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது.

சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன்.

எப்போதுமே சந்ததி இடைவெளி என்பது வரலாறு பூராவும் இருந்துகொண்டேதான் வருகிறது. அப்பர் நடந்துவந்த தடத்தில் நான் நடக்க சாத்தியமில்லை. நான் நடந்த தடத்தில் என் பிள்ளைகள் நடக்க சாத்தியம் இல்லை. காலம் இயக்கமுறாமல் நிலைகுத்தி நின்றால் மட்டுமே இது சாத்தியம். காலம் இயங்கியபடியே இருக்கிறது என்ற நினைப்பு இந்த விடயத்தில் பல பேருக்கு வருவதில்லை.

அதுவும் 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்ததி இடைவெளி போலன்றி பின்னர் ஏற்பட்ட இணையம், சமூக வலைத்தளம் என்பன போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பக் கடல் ஒரு சுனாமி போல் எழத் தொடங்கி அந்த இடைவெளியை அதிகரிக்கிறது. இது அதை கையாளத் தொடங்கிய வளர் இளம் பருவ அல்லது இளைஞர் பட்டாளத்தின் தகவல் அறிதல் திறனையும் கொள்ளளவையும் அறிவுப் பரம்பலையும் மாற்றி உலகை விரல் நுனியில் நிறுத்தியுள்ளது. இளஞ் சமுதாயத்தின் உலகை முதிய சமுதாயம் புரிந்து கொள்வதில் தமது இளம்பராய ஒப்பீடுகளை தவிடுபொடியாக்கியது. புதிய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தம்மை ‘இற்றைப்படுத்த’ (update) முடியாதவர்கள் இளஞ் சமுதாயத்தின் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்கும் இயலாமைக்குள் சென்றார்கள்.

இந்த மனப்பாங்குடனே யாழ் முற்றவெளி சம்பவத்தை அவர்கள் அணுகுகிறபோது கலாச்சாரச் சீரழிவு, ஒழுக்கமின்மை என்ற எளிய சூத்திரத்திரத்தை பாவித்தார்கள். எம்மையும்விட அடுத்தடுத்த சந்ததிகள் அறிவிலும், உலகை அறிதலிலும் வளர்ச்சிகண்டு கொண்டே போவதற்கான வெளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதை நாம் அனுபவத்தில் எமது பிள்ளைகள் ஊடாக கண்டுகொண்டே இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களை “அறிவுலக வெளிக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்” என எவரும் சான்றிதழ் கொடுத்துவிட முடியாது என்றபோதும், அதை ஒரு வளர்ச்சிப் போக்காக வரையறுக்க முடியும். யாழ் முற்றவெளியில் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்த்திய மீறல் ஒன்றும் குற்றமாக எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கான பொறுப்பை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளாகள்தான் ஏற்க வேண்டும். அந்த விடயங்கள் பலராலும் பேசப்பட்டாயிற்று.

அந்த மீறலை ஒரு வன்முறைபோல சித்தரித்தல் அபத்தமானது. ஆனால் ஒரு கும்பல் தனமான வன்முறை அல்லது panic நிலைக்கு மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்தளவில் இளைஞர்களுக்கும், அதேபோல் பொலிசாருக்கும் பொறுப்புணர்வு இருந்திருக்கிறது. அதன்படியான செயல் இயல்பாகவே குளவிக்கூட்டுக்கு கல்லெறியாத, ஒரு கண்ணீர்ப்புகையிடம் உதவிகோராத, அதன்மூலம் ஒருவித panic நிலையை உருவாக்காத பொலிஸாரின் பொறுப்புணர்வில் தெரிகிறது. அதேபோல் வன்முறையை அன்றி ஆர்வக்கோளாறை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மீறலின் எல்லைக்குள் செயற்பட்ட இளசுகளின் பொறுப்புணர்விலும் தெரிகிறது. எந்நேரமும் உடைந்து நொருங்கக்கூடிய அந்தப் பொறுப்புணர்வின் எல்லை ஓர் அனர்த்தத்தின் வாயிலை எட்டாதது ஒரு பெரும் நிம்மதிதான்.

இளைஞர்களின் போக்கை கிண்டலடிப்பவர்களுக்கு இது விளங்காமலே போய்விட்டது. இவ்வாறான நேரம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல், எப்போதும் எதிரம்சங்களை மோப்பம் பிடிக்கும் வேட்டைமனிதர்களே ஆபத்தானவர்கள். மாறாக இந்த இளைஞர்கள் அல்ல. இந்த வேட்டை மனிதர்கள் தமக்கான ஆதாரங்களை கும்பலாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் கால்களுக்குள் அகப்பட்டு முறிந்த சில கதிரைக் கால்களிலும், சரிந்து விழுந்த தண்ணீர்த் தாங்கியிலும், கதிரையைக் களவெடுத்துக் கொண்டு ஓடிய ஒருசில கள்ளப் பயல்களிடமும் கண்டடைந்து சொன்னார்கள். விலையுயர்ந்த கமராக்கள் ஒலிபெருக்கிகள் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே அடித்து நொருக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்ததும், மேடைமீது பாய்ந்து ரகளை பண்ணாமல் இருந்ததும் என எல்லாமே இளைஞர்களின் மீறல் ஒரு வன்முறையல்ல, அது அவர்களின் நோக்கமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள்.

பல உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு மைதானங்களில் இப்படியான ரசிகர்களின் மீறல்கள் இருப்பது நாம் பார்க்காததல்ல. யாழ் முற்றவெளி மீறல் மட்டும் ‘யாழ்ப்பாணியின் கலாச்சார சீரழிவாக’ ஒரு பகுதியினருக்கு தெரிவது அறிவின் ஓர் அவலம். கலாச்சார காவிகளாக பெண்களை அமர்த்திவிட்டு, கலாச்சார காவலர்களாக ஆண்கள் இருப்பதே ஆணாதிக்க முறைமை கொண்ட சமூகத்தில் நிலவும் வழிமுறை. ஆண்களின் கலாச்சார மீறல்களை இயல்பானதாக எடுக்கும் அதேவேளை, பெண்களின் கலாச்சார மீறல்களை ‘குய்யோ முறையோ’ என கூச்சலிட்டு எதிர்ப்பதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரக் கடமையாக இருந்தது. இதில் ஆண்கள் மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, முற்றவெளி விடயத்தில் இந்த இளைஞர்களை (ஆண்களை) முன்வைத்து கலாச்சாரச் சீரழிவு பற்றி பேசும் முரண்நகையை என்னவென்பது. அதுவும் முற்றவெளிக்கு வராத ஒரு மிகப் பெரும் பகுதி இளைஞர்கள் இவர்கள் கவனத்திற்குள் வரவேயில்லை. ஒரு சிறு பகுதி இளைஞர்களை வைத்து பொதுவாக ‘யாழ்ப்பாணிகளின் கலாச்சார சீரழிவு’ என பிரதேசவாத வாடையுடனும், ஒரு கொசிப்பு மனநிலையுடனும் வந்து களமாடியவர்கள் உண்டு.

அடுத்தது ஒரு சமூகத்தின் கலாச்சார பங்காளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே இளைஞர்கள். அதுவும் ஆணாதிக்க பங்காளிகள். ஒரு கலாச்சார முழுமையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் பங்கை வசதியாக மறைத்துவிட்டு முற்றவெளிக்கு வந்த இளைஞர்களை மட்டும் முன்னிறுத்தி ‘தமிழ்க் கலாச்சார சீரழிவு’ என விரிவுபடுத்தி பேசுபவர்களும் இருந்தார்கள். இது இன்னொரு அபத்தம் அல்லது மோசடி. இளம் பெண்கள் முற்றவெளியில் நடந்த மீறலில் இளைஞர்களுடன் சமனான அல்லது முன்னணிப் பாத்திரம் கொண்டிருந்திருந்தால் கலாச்சார சீரழிவு மதிப்பீட்டாளர்கள் இன்னும் பத்து மடங்கு எகிறியிருப்பார்கள். புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் இந்த கலாச்சார மதிப்பீட்டாளர்கள் கலாய்த்தபடிதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். 

இந்துத்துவ இந்தியாவின் மத மற்றும் சாதியப் பண்பாட்டு பரவலாக்கம் அல்லது தீவிரப்படுத்தல் மட்டுமல்ல, சினிமாவை முதன்மையில் வைக்கும் ஜனரஞ்சக பண்பாட்டு ஆதிக்கமும் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி படிப்படியாக நகர்த்தப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இம் முற்றவெளி கலைநிகழ்ச்சி ஏற்பாடும் அதற்குத் துணைபோனதாக ஒருவர் மதிப்பிடுவதை இலகுவில் நிராகரிக்க முடியாது. ஒரு சிலமணி நேர நிகழ்ச்சிக்கு இவளவு பெருந்தொகையான சினிமாத்தள ‘கலைஞர்களை’ கொண்டுவந்து இறக்கிய செயல் அதனடிப்படையிலானதாகவும் இருக்கலாம். அதுவும் முந்தநாள் மழையில் நேற்று முளைத்தவர்களும் இந்த படைபெடுப்பினுள் அடக்கம்.

இந்தியப் பெருநகரங்களில் இல்லாத பெருமெடுப்பில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டித் தந்திருக்கிறோம் எனவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்பானது தரை, கடல், ஆகாயம் வழி இறுகப் பற்றிக் கொள்ளும் எனவும் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து யாழ்ப்பாணத்தில் மேடையில் நின்று உறவுப்பாலம் அமைத்துக் காட்டினார் அண்ணாமலை. அயோத்தியில் தொன்மைமிகு மசூதியை உடைத்து இராமர் கோயில் கட்டிமுடிய, இப்போ இராமர் பாலம் இலங்கையை கொழுவி இழுத்து கட்ட ஆயத்தமாகிறார்கள். இந்த பண்பாட்டு ஆதிக்கம் அல்லது பரவலாக்கலுக்கு இளைஞர்கள் படிப்படியாக இரையாகுவது குறித்து விழிப்படைய வேண்டும். ஒவ்வொரு பண்பாட்டிலுமிருந்து நல்லனவற்றையும் பொருத்தமானவற்றையும் உள்வாங்கி சொந்தப் பண்பாட்டை வளமாக்குதல் முக்கியம். அதேநேரம் மற்றைய கசடுகளை கழித்துக் கட்ட வேண்டியதும் அவசியம். முற்றவெளி நிகழ்ச்சி இந்தக் கசடுகளின் பிரமாண்டம்.

சினிமா ஓர் அற்புதமான கலை. எல்லாக் குறைபாடுகளையும் காட்டி அந்தக் கலையை நாம் ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. பெண்ணுடலை பாலியல் பண்டமாக்கும் கருத்துநிலைக்கு ஏற்ப அதன் காட்சிப் படிமங்கள், பாடல்கள் என சினிமாவானது ஒரு காலத் தொடர்ச்சி கொண்டது. அதற்கு இரசிகர்களாகி பலியாகியபடிதான் வந்துகொண்டிருக்கிறோம். அத் தொடர்ச்சி தமன்னா வடிவில் இப்போ இந்த இளைஞர்களை மேடைக்கு அருகில் இழுத்துவந்து விட்டதிலும், பனை மரத்தில் கம்பங்களில் என ஏற்றியதிலும் பெரும் பங்கை ஆற்றியது எனலாம். இரசனை வேறு மோகம் வேறு. இதுகுறித்து இளைஞர்கள் விழிப்புற வேண்டும். தமன்னாவுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிலரிடமிருந்து 30’000 ரூபாவை பறித்து விசுக்கியது இந்த மோகம்தானே ஒழிய சினிமா இரசனை அல்ல என்பதை அவர்கள் அடையாளம் காண வேண்டும்.

ஈழத்தில் 70 களில் வீச்சம் பெற்று எழுந்த பொப் இசை வடிவம் என்பது சினிமாவிலிருந்து கிளைத்ததல்ல. அது தனித்துவம் கொண்டது. அதன் தொடர்ச்சியை போர் முறித்தெறிந்துவிட்டது. இந்தியாவிலோ ‘பாடலிசை’ சினிமாவுக்குள் அடக்கமாகிப் போனது. பாடலிசையை இரசிப்பது என்பதை சினிமாவுக்கு வெளியில் பிம்பமுறாதபடி இரசிகரின் மனதை கட்டிப் போட்டுள்ளது. பல நாடுகளில் பாடலிசை என்பது சினிமாவுக்கு வெளியே வளர்ச்சியுறும் கலை வடிவம். இசையை இரசிப்பது, ஆடுவது என்பதெல்லாம் இளம் உடலின் துடிப்புத்தனத்துக்கும் அகத் தூண்டலுக்கும் அதிகம் இதமளிப்பது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுவது.

திரையில் உலவிய கதாநாயகன் அரசியலில் அறிவுக்கூச்சமின்றி முதலமைச்சராக நினைக்கிறான். தொலைக்காட்சி முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து அறிவை முன்னிறுத்துவதாக படம் காட்டும் போட்டி அல்லது உரையாடல் நிகழ்ச்சி எல்லாமே திரையுலகம் சுற்றியே சுழல்கிறது. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் வார்க்கவும், கோயில் கட்டவும்கூட மனித அறிவை இழிநிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது இந்தியத் திரையுலகம். இவையெல்லாம் இனி ஈழத்திலும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கிழிசல் பண்பாட்டு அம்சங்கள் உடைத்து நொருக்க நாளாகாது என்றே தோன்றுகிறது. இதுகுறித்து இளைஞர்கள் எச்சரிக்கையடையவும் வேண்டும்.

யுத்தங்கள் நடந்து முடிந்த பிரதேசங்களிலெல்லாம் திட்டமிட்டே போதைப்பொருளை பரவலாக்குவதன்மூலம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி, சமூகம்சார் அரசியலிலிலிருந்து தூரப்படுத்தி தமது அதிகாரங்களுக்கு எதிராக எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அதிகாரவெறியர்களின் உத்திகளில் ஒன்று. இலங்கைக்குள் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பகுதியினுள் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து பெருமளவு வருகிறது என சொல்லப்படுகிறது. இலங்கை அரசு அதிகார வெறியர்களின் உத்திக்கு இசைவாக, இந்திய வியாபாரிகளின் காசு பார்க்கும் குறியும் அமைவதால் அந்தக் காட்டில் ஒரே மழைதான்.

இலாபமீட்டும் தொழிலாக போதைப் பொருள் வியாபாரம் உலகின் மூலைமுடக்குகளெல்லாம் ஒரு சமூகவிரோத கிருமியாகப் பரவத் தொடங்கி நாளாகிவிட்டது. அதற்கு எதிராக இருப்பதும், அதை பொலிஸாரின் சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமும், சிவில் சமூக நிறுவனங்களின் அறிவூட்டல் செயற்பாடுகள் மூலமும் எதிர்கொள்வது அவசியமானது.

ஆனாலும் போதைப் பொருளை ‘கடந்து போதல்’ என்பது இளம் சந்ததியால் முடியாததல்ல. புலம்பெயர் நாட்டில் மது, சிகரெட், போதைப் பொருள், பாலியல் தொழில் விடுதிகள் என சட்பூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் கண்முன்னே விரிகிற சந்தர்ப்பங்கள் இருக்கிறபோதும், இவைகளுக்கு அடிமையாகுபவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். அது தனக்கானது அல்ல என்கின்ற அறிவு மற்றும் மனவளத்தால் பெரும்பான்மை மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலும் பெரும்பான்மை மனிதர்கள் அல்லது இளைய சமுதாயம் இதற்கு (கடந்துபோதலுக்கு) விதிவிலக்காக இருக்க நியாயமில்லை.

முற்றவெளி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒரு பாடம். இளைஞர்களுக்கு ஒரு சுயவிசாரணை!
 

https://sudumanal.com/2024/02/18/முற்றவெளி-மந்திரம்/#more-5984

எதுவுமே நிரந்தரமல்ல...................

1 month 1 week ago
எதுவுமே நிரந்தரமல்ல
 
சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு வீடியோ க்ளிப் மனத்தை வலியில் தள்ளியது. அதில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி திருமதி. பி. சுசீலா பேசியிருந்தார். அது:
 
"செத்துப்போயிடலாமான்னு இருக்கு. சாவு நம்ம கையில இல்லை. கடவுள் எப்ப கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். ஒரு ஆர்டிஸ்டு உயிரோடு இருக்கறப்ப யாரும் பார்க்கறதில்லை சார். பாட முடியாம இருக்கிறேன். வாய்ஸ்ம் இல்லை, சக்தியும் இல்லை. எண்பது வயதுக்கு மேல அதிகமாயிடுச்சு. யாராவது வந்து கேட்கிறாங்களா. சுசீலாம்மா சரஸ்வதிதேவி, மேல் உலகத்திலிருந்து கீழே வந்தவங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. சரஸ்வதிக்கு உடுத்தறதுக்கு துணி வேணாமா? சாப்பிடறதுக்கு பணம் வேணாமா? வீட்டில வளர்க்கிற நாய்க்குகூட வேளாவேளைக்கு சாப்பாடு போடுவாங்க. தேசத்துக்காக நாங்க எவ்வளவு பண்ணறோம். எங்களுக்கு என்ன பண்ணிச்சு தேசம்? கவர்மெண்ட் எங்களை ஜெயில்ல வைப்பாங்களா? வீடு கூட ஜெயில் மாதிரிதான் இருக்கு. இருக்கு! சாப்பிடறதுக்கு இருக்கு! பிச்சை எடுக்கறதுக்கு இன்னும் . . . . . ", இப்படி பேசிக்கொண்டே சென்றார்.
 
பல மொழிகளில் நாற்பதாயிடம் பாடல்களுக்கு மேல் பாடியவர். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பாடி வந்துள்ளார். அந்த கானக்குயிலின் குரல் பல நாட்கள் நம் கவலைகளை மறந்து உறங்க வைத்துள்ளது. தென்னிந்தியாவில் பி. சுசீலாவின் குரலை கேட்காமலோ, முணுமுணுக்காமலோ ஒரு நாள்கூட நாம் கடந்துவிட முடியாது. தவிர்க்க முடியாத இசையரசியாக வாழ்ந்தவர், இன்று தொலைந்துபோன தன் முகத்தை இன்றைய சமுதாயத்தில் தேடிக்கொண்டிருக்கிறார். இவரைப் போலவே தன் முகத்தை தொலைத்த பல பெரிய மனிதர்களை இன்றும் பார்க்கிறோம். சிலர் வெளிப்படையாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னமும் 'முன்னால்' சிந்தனையோடு இந்நாளும் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
 
சமீபத்தில் கிராமத்து கோவிலில் ஒரு பெரியவரை சந்தித்தேன். நெற்றியில் விபூதிப்பட்டை. பார்ப்பதற்கு எளிமையான தோற்றம். அவரின் படிப்பறிவை அனுமானிக்க முடியாத தோற்றம். மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன். அவர் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சர்யத்தில் தள்ளியது. அவர் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
"நான் சர்வீஸ்ல இருக்கும் போது என்னைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாரைப் பார்த்தாலும் இவனுக்கு நம்மைவிட அதிகம் தெரியாது என்று நினைக்கத் தோன்றும். சிறிய தவறுக்கும் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றும். கோபமே பணியாளர்களை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் என்று நினைப்பேன். பணியின் கடைசி நாளில் கல்கத்தாவிலிருந்து ரசகுல்லா வாங்கி வந்து அழகாக பேக் செய்து எல்லா பணியாளர்களின் மேஜைக்கும் அனுப்பிவைத்தேன்.
 
மாலை பிரிவு உபசார விழா நடந்தது. அது முடிந்ததும் என் இருக்கைக்கு வந்து கடைசியாக ஒரு முறை அமர்வதற்காக வந்தேன். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய மேஜை முழுவதும் ரசகுல்லா நிரம்பியிருந்தது. யாருக்கெல்லாம் நான் கொடுத்தேனோ, அவர்கள் எல்லாம் மேஜையின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் கோபத்தை வெளிபடுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நாளை நான் எதிர்பார்க்கவில்லை. பிறகு அங்கிருந்து வந்து இந்த கிராமத்தில் தங்கிவிட்டேன். என்னை மறைத்துக்கொள்ள இந்த கிராமமும், பக்தியும் எனக்கு உதவுகிறது, என்றார் அந்த மனிதர்.
 
எல்லாம் முடிந்தபிறகு உணர்ந்துகொள்வது அடுத்தவரின் வாழ்க்கை பயணத்திற்கு ஒரு பாடமாக உதவலாம். அது நமக்கு எந்த வகையிலும் உதவாது.
 
அட்டென்ஷன் சீக்கிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தனிமை, வருத்தம், தன்னம்பிக்கை இழந்த நிலை, இன்னும் சிலருக்கு பொறாமை, இவையெல்லாம் வயது முதிர்ந்தவர்கள் பலருக்கு இருப்பதை பார்க்கிறோம். அவர் குடும்பத்தோடுதான் இருக்கிறார். அதெப்படி தனிமை என்று சொல்ல முடியும்? உண்மையில் அதுவும் தனிமைதான். சுற்றி பலர் இருந்தாலும், அந்த கூட்டத்தினிடையே தன்னை தனிமையாக உணரும் நிலை அது. ஒரு காலத்தில் எதையெல்லாம் சாதனை என்று நினைத்தோமோ அவையெல்லம் இன்றைய நாளின் நினைவுகளாய், சோதனைகளாக மாறிப்போயிருக்கும். ஒரு குட்டிக்கதை.
 
ஒர் முதிர்ந்த அரசன். வயது தொன்னூறு. ஒருநாள் இளவரசன் அவரிடம் வந்து,
தந்தையே! எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. எல்லோரும் என்னை இளவரசே என்று தான் அழைக்கிறார்கள். எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி, 'பதினெட்டுவயதில் அரசனாக முடிசூட்டிக்கொண்டேன்', என்றுபெருமையாக சொல்வீர்களே! அதே போன்ற பெருமை எனக்கு கிடைக்கவில்லையே! எனக்கு எப்போது முடிசூட்டப்போகிறீர்கள்? என்று கேட்டான்.
 
அரசன் பதிலளித்தான்.
 
மகனே! பல காலங்களுக்கு முன் ஒரு சாதுவை சந்தித்தேன். நான் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வேன் என்று எனக்கு வரமளித்திருக்கிறார். அரசன் என்ற பதிவியில்லாமல் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. ஆகையால், உன்னுடைய ஆசையை விட்டுவிடு என்று சொன்னான் அரசன்.
 
அதிர்ந்துபோனான் இளவரசன். அடுத்த நாள் காலை. தனது ஆதரவாளர்களுடன் அரண்மனைக்குச் சென்றான். தூங்கிக்கொன்டிருந்த அரசனை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தான்.
 
இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. அரசனை சந்திக்க சாது வந்தார்.
 
'சாதுவே! என் நிலையைப் பார்த்தீர்களா? இந்த நாட்டையும், மக்களையும் சிறப்பாக ஆட்சி செய்தேன். ஆனால், இன்று வீட்டுச் சிறையில் இருக்கிறேன். எனக்காக மக்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் குரலெழுப்பவில்லை', என்று வருத்தப்பட்டார்.
அதோடு நிற்காமல் தான் செய்த சாதனைகளையெல்லாம் சாதுவிடம் சொல்லி புலம்பினார்.
 
'சாதுவே! என் ஆயுள் நூற்றி ஐம்பது வருடங்கள் என்று வரமளித்திர்கள். அன்று அது வரமாகத் தெரிந்தது. இன்று அது சாபமாகத் தெரிகிறது. எந்த முக்கியத்துவமும் இல்லாமல் எப்படி அடுத்த அறுபது ஆண்டுகள் உயிர்வாழ்வது? என்னுடைய மனைவிகள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள். என் மகன் என்னை புறக்கணித்துவிட்டான். நான் உங்களிடம் வரம் கேட்கும் போதே அந்த வரத்தில் ஒளிந்திருக்கும் இந்த மோசமான நிலையை எனக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா? நீங்கள் எனக்கு அளித்தது வரமல்ல. சாபம்', என்று வருத்தப்பட்டான் அரசன்.
 
'அரசனே! ஒரு மனிதனின் ஆயுட்காலம் வயதோடு தொடர்புடையது. அதில் குறிப்பிட்ட சில வருடங்களை சாதனைக்காலம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல, அந்தக்காலம் நீங்கள் செய்த சாதனைக்கானது என்றால், அந்தச் சாதனைகளையெல்லாம் நீங்களே செய்தீர்கள் என்றால், இன்று அது உங்களுடனே இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லையே! இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சாதனைகளை செய்வதற்கான காலத்தின் கருவியே நாமெல்லாம். உயர்ந்த நிலையை அடையும் போது,
 
இது நிரந்தரமானதல்ல என்பதை நீங்கள் உணரவில்லை. "நல்ல நிலையில் இருக்கும் போது இப்படி ஒரு மோசமான நிலை நமக்கு வரும் என்று கணிக்கத் தவறியவனும், மோசமான நிலையில் இருக்கும் போது வாழ்ந்து முடித்த நாட்களே உயர்ந்தது என்று கணக்குப்போடுபவனும் நிம்மதியாக வாழமுடியாது". ஆகையால், பிரச்னையோ அல்லது அதன் தீர்வோ எல்லாமே நம் மனத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுமே மாயைதான். இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் இறந்த காலத்தை உயர்ந்த காலம் என்று சொல்லமாட்டார்கள்.
 
நிகழ்காலத்தை ரசிக்கின்ற ஒருவனே வாழ்க்கையின் கடைசி நாள்வரை நிம்மதியாக வாழ்கிறான். இதை உணராதவனின் வரங்கள் எல்லாமே சாபமாகிறது, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது
அரசன் சிறையில் இருக்கும் நிகழ்காலம் ரசிக்க வேண்டிய விஷயமல்ல. ஆனால், இந்த நிலையை இறந்தகாலத்தில் உணர்ந்திருந்தால், அதை அரசன் தவிர்த்திருக்கலாம். இராமாயணத்தில், தசரதன், தன் தலையில் முதல் நரை முடியைப் பார்த்தவுடன், ராமனுக்கு முடிசூட்ட விரும்பினான் என்று படித்திருக்கிறோம். இருக்கும் வரை தான் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்று தசரதன் நினைக்கவில்லை. தன்னைச் சார்ந்தவர்களை அமர்த்தி அழகு பார்க்கும் பக்குவம் அவனிடம் இருந்தது. இந்தப் பக்குவம் மொகலாய பேரரசர் ஷாஜகானிடம் இல்லை.
 
அதனால்தான் அவனுடைய கடைசி நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை அவனது மகன் ஒளரங்கசீப் ஏற்படுத்தினான்.
இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷங்கள் இரண்டு.
 
ஒன்று, உயர்ந்த நிலயாகக் கருதப்படும் நிலையிலிருக்கும் போது அது நிரந்தரமல்ல என்பதை உணருதல்.
 
மற்றொன்று, தனக்கு மட்டுமே எல்லாக் காலங்களிலும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
 
"அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர்", என்று இதற்கு ஒரு பெயரிட்டு உலவியல் ரீதியாக இதை அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கடந்துதான் தீரவேண்டும். இந்த நிலையை கடப்பதற்கு பெரும்பாலானவர்களுக்கு உதவியாக இருந்தது இறைநம்பிக்கை, பக்தி. உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்ட காலங்களிலும், நலிவடைந்த நிலை என்று சொல்லப்பட்ட காலத்திலும் நம்முடன் இணைந்திருக்கும் ஒரே இணைப்பு பக்தி.
 
ஒன்றை உதற வேண்டுமென்றால், மற்றொன்றை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எந்த நேரமும் இறைநம்பிக்கையை பிடித்துக் கொண்டவனுக்கு மற்ற விஷயங்கள் நிரந்தர பிடிப்பை ஏற்படுத்தாது.
 
திருமதி. பி. சுசீலாவின் இன்றைய நிலைக்கு என்ன பெயர் வைத்தாலும் சரி, அல்லது அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றே வைத்துக் கொண்டாலும் சரி, அவர் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குறியது. ''உயர்ந்த மனிதன்'' என்ற திரைப்பத்தில் அவருக்கு தேசிய விருதுபெற்றுத் தந்த அந்தப் பாடல் வரிகள் என்றும் இளமையானவை. அவை நம் நினைவிற்கு வருகிறது. முகம் தெரியாத காதலனுக்காக பாடுவதாக அந்தப்பாடல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலுக்காகத்தான் பின்னணி பாடகர்களுக்கான முதல் தேசிய விருதைப் பெற்றார் திருமதி. பி. சுசீலா. ஐந்து முறை தேசிய விருதும் பெற்றவர்..
 
நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா . . .
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. . . .
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு. . .
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு . . .
 
திருமதி. பி. சுசீலாவின் இன்றைய தனிமைக்காக தென்றல் நின்று போனாலும் வருத்தத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் அவருக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் கொடுக்கட்டும். அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
 
(Bala shares..........))
May be an image of road, fog and street
 
 
 
 

அப்பா என்பவர் ஓர் அதிசயமான புத்தகம்!

1 month 1 week ago

அப்பா ஒரு அதிசயமான புத்தகம் தான். ஏனென்றால், இந்த புத்தகம் நமது கையில் இருக்கும் போது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்துகொள்ள நினைக்கும் போது, அந்த புத்தகம் நம் கையில் இருப்பதில்லை. இது தான் உண்மையும் கூட.

நம்முடையும் வாழ்க்கையும் ஒரு புத்தகம் தான். இந்த வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் கடவுளால் எழுதப்படுகிறது. ஆனால், நடுவில் உள்ள அனைத்து பக்களையும் நாம் தான் நிரப்ப வேண்டும். இந்த பக்கங்கள் சந்தோசத்தாலும், உயர்வினாலும், கண்ணீரின்றி, கவலையின்றி நிரப்பப்பட வேண்டும் என்றால், அதற்கு நமக்காக கஷ்டப்பட்டு, கண்ணீர் சிந்தி, நம்மை சரியான வழியில் நடத்த வேண்டும்.

தந்தையின் அன்போடு இணைந்து வாழ்பவர்களை விட, தந்தையின் அன்பை இழந்து அல்லது பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு தான் தெரியும், தந்தையின் அன்பு எவ்வளவு பொக்கிஷம் போன்றது என்று. எத்தனையோ அறிவுகளுக்கு பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தம் இப்பரஞ்சத்தில் எங்கு தேடினாலும் கண்டெடுக்க இயலாது.

அந்த வகையில் நாம் எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் தான். பிறந்த போது நம்மை தோள்களிலும், வளர்ந்த போதும் நம்மை நெஞ்சிலும் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தந்தையர்களும் நமக்கு தெய்வங்கள் தான். [எ]

https://newuthayan.com/article/அப்பா_என்பவர்_ஓர்_அதிசயமான_புத்தகம்!

தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?

1 month 4 weeks ago
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன்

spacer.png

தியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை.

பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்றதற்குத் தந்தையார் பெயரையோ கணவர் பெயரையோ எழுதினார்கள். ஆதார் அட்டையைத் தயாரிக்கிற பணி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே கிடைத்தது. ஒருவருக்கு ஒரு பெயர் மட்டும் இருக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். முன்னொட்டாக ஒரு தலைப்பெழுத்தையும் (initial) இணைத்துக் கொண்டார்கள். ஆக, பான் அட்டையில் இரண்டு பெயர்கள்; ஆதார் அட்டையில் ஒற்றைப் பெயர், தலைப்பெழுத்து தனி. தமிழர்களின் இரண்டு அட்டைகளும் ஒட்டாமல் போனது இப்படித்தான். பலர் ஆக்ஞையை நிறைவேற்றப் பல மாதங்கள் இதன் பின்னால் ஓடினார்கள்.

 

தமிழன் துறந்த சாதிப் பெயர்

உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கும், இந்தியாவில் தமிழகம் நீங்கலான பிற மாநிலத்தவர்களுக்கும் அவர்களது பெயர்களில் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகள் இருக்கும் - முதற்பெயர், குடும்பப் பெயர். இவை தவிர நடுப் பெயர் உள்ளவர்களும் உண்டு. குடும்பப் பெயர் பொதுவாகக் குழுவை அல்லது பரம்பரையைக் குறிக்கும். இந்தியாவில் அது மிகுதியும் தொழிலையோ சாதியையோதான் குறிக்கும். இந்த இடத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆண்டு: 2019, இடம்: மும்பை, பாத்திரங்கள்: நால்வர்- நானும் எனது ஒரு சாலை மாணாக்கர் ஒருவரும் ஆக இரண்டு தமிழர்கள், இரண்டு மராட்டிய நண்பர்கள். பேச்சு, தமிழகமும் மராட்டியமும் இந்தியாவில் பல அலகுகளில் முன்னணியில் நிற்பதைப் பற்றித் திரும்பியது. அப்போது தமிழ் நண்பர் சொன்னார் : ‘தமிழகம், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களைக் காட்டிலும் 90 ஆண்டுகள் முன்னால் நிற்கிறது.’ அது என்ன 90 ஆண்டுக் கணக்கு? நண்பர் 1929இல் நடந்த செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டை முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளியாகக் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில்தான் சாதிப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொள்வதற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.

‘ஈ.வெ. ராமசாமி நாயக்கராகிய நான் இன்றுமுதல் ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்படுவேன்’ என்று பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான். அந்தத் தீர்மானமும் அந்த அறிவிப்பும் அந்த மாநாட்டோடு நின்றுவிடவில்லை. அது தமிழ்ச் சமூகமெங்கும் பரவியது. தமிழர்கள் சாதிப் பெயரைக் களைந்தார்கள். நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன். ‘சாதி, பெயரில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேட்பாளர்கள் சாதி பார்த்துத்தானே நிறுத்தப்படுகிறார்கள்? திருமணங்கள் சாதிக்குள்தானே நடக்கின்றன? நம்மில் பலருக்கும் சாதி உணர்வு இருக்கத்தானே செய்கிறது?’ நண்பரிடம் பதில் இருந்தது.

‘இருக்கலாம். ஆனால் பெயரில் சாதியைத் துறப்பதற்கும் ஒரு மனம் வேண்டுமல்லவா? தமிழர்களிடம் அது இருந்தது. இப்போதும் தமிழகத்தில் பொதுவெளிகளில் சாதியைக் கேட்பதற்கும் சொல்வதற்கும் பலரும் கூச்சப்படவே செய்கிறார்கள்.  இன்றுகூட இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பலரால் சாதிப் பெயர்களைச் சுட்டும் குடும்பப் பெயர்களைத் துறப்பதைச் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது.’ மராட்டிய நண்பர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

 

தமிழ்ப் பெயர்களின் தனித்துவம்

சாதிப் பெயர்களைக் கைவிட்டதில் மட்டுமல்ல, பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் தமிழர்கள் தனித்துவமானவர்கள். குடும்பத்தின் பெரியவர்கள் பெயர்களைப் பிள்ளைகளுக்கு விடும் வழக்கம் நம்மிடமுண்டு. அதிலிருந்துதான் தலைவர்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் வந்திருக்க வேண்டும். காந்தி, நேரு, போஸ் என்று நம்மவர்கள் சூட்டி மகிழ்ந்த பெயர்கள் அந்தத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள்.

தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். தத்தமது ஆதர்சத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவார்கள். ஸ்டாலின் பெயரை மகனுக்குச் சூட்டியது கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல, அவரது தலைமுறையைச் சேர்ந்த ராஜாங்கமும் குணசேகரனும் கூடத்தான். சமீபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் பெயர் ஜெயகாந்தன். பொதிகைத் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவின் இயக்குநராக இருந்தவர் அண்ணாதுரை. சாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பாரதிதாசன். கல்லல் என்கிற ஊரின் காவல்துறை ஆய்வாளராக இருந்தவர் பெயர் ஜோதிபாசு. தமிழ்ப் பெண்களின் படங்களை அச்சொட்டாக வரைந்த ஓவியர் இளையராஜா. ரியாத்தில் என்னுடன் பணியாற்றிய ஓர் இளம் பொறியாளரின் பெயர் பாரதிராஜா.

2012இல் சத்தீஸ்கார் மாநிலத்தின் ஒரு மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவர் பெயர் அலெக்ஸ் பால் மேனன். செய்தி வெளியானதும் அவர் மலையாளி என்று நினைத்தேன். அவர் தமிழர், பாளையங்கோட்டைக்காரர், வி.கே.கிருஷ்ண மேனன் மீதிருந்த ஈடுபாடு காரணமாக அவரது தந்தை சூட்டிய பெயரது. ஒரு முறை ரயிலில் என்னோடு பயணம் செய்தவரின் பெயர் கேப்டன் நாயர் என்று பட்டியலில் கண்டிருந்தது. வந்தவர் பட்டாளக்காரரல்லர், மலையாளியுமல்லர். திருச்சிக்காரர். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர், பெயர்க் காரணம் எனக்குப் பிடிபட்டது.

இப்படி அபிமானத் தலைவர்களின், மேலதிகாரிகளின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் வடமொழிப் பெயர்களின் மீதான மோகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம் எடுத்துக்காட்டாக அமையும். அந்த விளம்பரத்திற்கு நன்மரண அறிவிப்பு என்று தலைப்பிடப்பட்டிருந்தது. கனிவு ததும்பும் ஒரு மூதாட்டியின் படமும் இருந்தது. அது நல்ல மரணம்தான். அவருக்கு வயது 102.

மூன்று தலைமுறை அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தது. பிள்ளைகளின் பெயர்கள் நாராயணன், சந்திரசேகரன், விசாலாட்சி, பார்வதி என இருந்தது. பேரப் பிள்ளைகளின் பெயர்கள் சதீஷ், சபிதா, சந்தோஷ், பிரவீன், ராகுல் என்று கொஞ்சம் ‘நவீன’மாகியிருந்தது. இந்தப் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களோடு ஓர் ஒவ்வாமை இருக்க வேண்டும். அது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டிய பெயர்களில் இருந்து புலனாகியது. மூதாட்டியின் கொள்ளுப் பேரர்களின் பெயர்கள் அனிஷா, பிரமோத், லக்‌ஷிதா, திரிஷாணா, அனோன்யா, சரித், தனுஷா என்கிற ரீதியில் இருந்தது.

 

இருபெயரொட்டு இன்னல்கள்

குடும்பத்தின் பெரியவர்கள் பெயர், அரசியல் தலைவர்கள் பெயர், அபிமான நட்சத்திரங்கள் பெயர், வடமொழிப் பெயர்- இப்படி விரும்பிய வண்ணம் பெயரிடுவது தமிழர்களுக்குச் சாத்தியமாகிறது. அதற்கு இந்த முதற்பெயர் - குடும்பப் பெயர் கலாச்சாரம் இல்லாததுதான் காரணமாக இருக்க வேண்டும். இப்படி பெயர் சூட்டும் வழக்கத்தை உலகின் பிறபகுதிகளில் காண முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இப்படி திறந்த மனத்துடன் பெயரிடுவதற்காகவும் சாதிப் பின்னொட்டைக் கைவிட்டதற்காகவும் தமிழர்களுக்கு யாரும் பாராட்டுக் கூட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மாறாக இன்னல்கள்தாம் வருகின்றன. இந்த முதற்பெயர்- குடும்பப் பெயர் ஆகிய இரு பெயரொட்டுத் தொடர்பான தமிழர்களின் இன்னல்கள் இரண்டு அட்டைகளின் வடிவத்தில் வந்தது. அது அத்தோடு முடிவதில்லை. திரைகடல் தாண்டும் எல்லாத் தமிழர்களும் இந்த இரு பெயரொட்டுப் பிரச்சினையை நேரிட்டிருப்பார்கள். அந்தச் சிக்கல்களுக்குள் போவதற்கு முன்னால் இது தொடர்பான சில சர்வதேச நடைமுறைகளைப் பார்க்கலாம்.

மேலை நாடுகளில் குடும்பப் பெயர்

வெளிநாடுகளில் ஒருவருக்குக் குடும்பப் பெயர் தந்தை வழியாகவோ கணவர் வழியாகவோ வரும். ஆகவே, அது ஆண்பால் பெயராகவே இருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பின் தாத்தா பிரெடரிக் டிரம்ப், ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர். டிரம்ப் என்பது ஜெர்மனியில் வழங்கும் ஒரு குடும்பப் பெயர். அதிபரின் அப்பா பிரெட் டிரம்ப், அம்மா மேரி ஆன் டிரம்ப், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ‘எங்கள் குடும்பம் எப்படி உலகின் அதிபயங்கர மனிதனை உருவாக்கியது?’ என்கிற நூலின் ஆசிரியர் மேரி டிரம்ப், அதிபரின் அண்ணன் மகள். குடும்பப் பெயருடன் திருவாளர், செல்வி, முனைவர் போன்ற மரியாதை முன்னொட்டுகளைச் சேர்க்க வேண்டும்.

முதற்பெயருக்கு மரியாதை விளி தேவையில்லை. நேர்ப்பேச்சுகளில் மின்னஞ்சல்களில் முதற்பெயரையும், சம்பிரதாயமான கூட்டங்களில் அலுவல்ரீதியான கடிதங்களில் குடும்பப் பெயரையும் பயன்படுத்துவார்கள். வயதில் மூத்தவர்களையும்கூட அணுக்கமானவர்களெனில் முதற் பெயரில் விளிக்கலாம். வயதில் குறைந்தவர்களானாலும் குடும்பப் பெயரைப் பயன்படுத்துகிறபோது மரியாதை முன்னொட்டைச் சேர்க்க வேண்டும்.

உங்கள் மேலதிகாரியின் பெயர் டோனி பிளச்சர் என்று வைத்துக்கொள்ளலாம். அவரை நீங்கள் டோனி என்று நேர்ப்பேச்சில் விளிக்கலாம். மின்னஞ்சலில் அன்புள்ள டோனி என்று எழுதலாம். அவர் கோபிக்கமாட்டார். ஆனால் சம்பிரதாயமான கடிதங்களில், பொதுக்கூட்டங்களில் மிஸ்டர் பிளச்சர் என்றுதான் அழைக்க வேண்டும்; அந்த இடத்தில் டோனி என்று அழைப்பது தவறு. மிஸ்டர் டோனி என்றழைப்பதும் பிழை.

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் வரும் வீட்டின் சொந்தக்காரர் திருமதி ஹட்சன் வீட்டையும் பராமரிப்பார். எல்லாக் கதைகளிலும் ஷெர்லக் ஹோம்ஸ் அவரைத் திருமதி. ஹட்சன் என்றுதான் அழைப்பார். ஹாரி பாட்டர் தனது நண்பனின் பெற்றோரை திருவாளர் வெஸ்லி, திருமதி. வெஸ்லி என்றுதான் அழைப்பான். (உறவினர் அல்லாதவரை அங்கிள், ஆன்ட்டி என்றழைக்கும் வழமை ஆங்கிலேயரிடத்தில் இல்லை).

 

சீனர்களின் குடும்பப் பெயர்

சீனர்களுக்கும் இப்படியான சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் ஐரோப்பியர்களைப் போலச் சீனர்கள் குடும்பப் பெயரைப் பின்னால் எழுதமாட்டார்கள். முன்னால் எழுதுவார்கள். சீன அதிபரின் பெயர் ஷி ஜிங்பிங். இதில் ஷி என்பதுதான் குடும்பப் பெயர். மா சேதுங்-இன் குடும்பப் பெயர் மா. ஹாங்காங் பன்னெடுங்காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததால் அவர்கள் ஓர் ஆங்கிலப் பெயரைக் கூடுதல் முதற்பெயராக வைத்துக்கொண்டார்கள்.

ஹாங்காங்கின் ஜனநாயகப் போராட்டங்களின்போது செயலாட்சித் தலைவராக இருந்தவர் கேரி லாம் செங் யூட்-கோர். இதில் ‘லாம்’ என்பது கணவரின் குடும்பப் பெயர். ‘செங்’ என்பது தந்தையாரின் குடும்பப் பெயர். பலரும் திருமணமான பின் தந்தையாரின் குடும்பப் பெயரைத் துறந்து கணவரின் குடும்பப் பெயரை வைத்துக்கொள்வார்கள். இவரது குடும்பப் பெயர் இப்போது ‘லாம்’ என்றாலும், திருமணத்திற்கு முன்பிருந்த ‘செங்’ எனும் பெயரையும் களையாமல் வைத்திருக்கிறார். ‘யூட்-கோர்’ என்பது சீன முதற்பெயர். அதை உச்சரிப்பதற்கு ஆங்கிலேயர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால், கேரி எனும் கிறிஸ்தவப் பெயரொன்றையும் முதற்பெயராகச் சூடிக்கொண்டிருக்கிறார்.

காலனிய ஆட்சியாளர்களின் வசதிக்காகப் பலரும் செய்துகொண்ட ஏற்பாடுதான் இது. (பழனியப்பன் அமெரிக்கா போனதும் பால் ஆவதோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்). செயலாட்சித் தலைவருக்கு அணுக்கமானவர்கள், அவரைக் கேரி என்றழைப்பார்கள்; மற்றவர்கள் லாம் தாய் என்று அழைப்பார்கள்; திருமதி லாம் என்று பொருள். அவரது கணவரை லாம் சாங் என்று அழைப்பார்கள்; திருவாளர் லாம் என்று பொருள். எல்லாக் குடும்பப் பெயர்களும் மரியாதைப் பின்னொட்டோடுதான் அழைக்கப்பட வேண்டும். ஆண்டாண்டுக் காலமாக இப்படி முதற்பெயர், குடும்பப் பெயர் கலாச்சாரத்தோடு வளர்ந்தவர்களுக்கு நமது ஒற்றைப் பெயர் கலாச்சாரம் புரிபடுவதில்லை.

 

என் கதை

1995இல் நான் ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தபோது எனக்கு இந்தக் கதையொன்றும் தெரியாது. அலுவலகத்தில் என்னை ‘ராமா’ என்று அழைத்தார்கள். சீன உச்சரிப்பிற்கு அது இசைவாக இருந்ததே காரணம். வேலையில் சேர்ந்த சில நாட்களில் ஒரு திட்டப்பணி தொடர்பான கூட்டத்திற்குப் போனேன். கட்டிடக் கலைஞர்களும் பொறியாளர்களும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள். ஓர் இளம்பெண் சிரத்தையாகக் குறிப்பெடுத்தார். அடுத்த நாள் அது தொலைநகலில் வரும். பங்கேற்றவர்களின் பெயர்-விவரம், குறிப்பின் முதல் பக்கத்தில் இருக்கும். கூட்டம் முடிந்ததும் அந்தப் பெண் நேராக என்னிடம் வந்தார். ‘உங்கள் முதற்பெயர் ராமா, குடும்பப் பெயர் நாதன், அப்படித்தானே?’ என்று கேட்டார்.

என் மீதமுள்ள வாழ்நாளின் மிக முக்கியமான கேள்வியை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கவில்லை. தவறான பதிலைச் சொன்னேன், ‘இல்லை, என் பெயர் ராமநாதன்; ஒரே சொல், சேர்த்துத்தான் எழுத வேண்டும்’. அவர் அடுத்தபடியாக, ‘அப்படியானால் உங்கள் பெயரின் முன்னால் வருகிற எம் என்பது என்ன?’ என்று கேட்டார். ‘அது தலைப்பெழுத்து’ என்றேன். தொடர்ந்து, ‘அப்படியானால் அதுதான் உங்கள் குடும்பப்பெயராக இருக்க வேண்டும்’ என்றார். ‘இல்லை, அது என் தகப்பனார் பெயரின் முதலெழுத்து’ என்றேன். ‘அப்படியானால், ராமநாதன் என்பதுதான் உங்கள் குடும்பப் பெயராக இருக்க வேண்டும்’ என்றார். ‘இல்லை, அது என்னுடைய பெயர்’ என்றேன். அம்மணி அத்துடன் கேள்விகளை நிறுத்திக்கொண்டார். ஆனால் இதே கேள்விகளை 25 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டுவருகிறேன்.

கடவுச்சீட்டு வாங்கப்போனால் முதற்பெயரும் கடைசிப் பெயரும் கேட்பார்கள். கடவுச்சீட்டு அலுவலர்களும் முகவர்களும் தமிழர்களிடம் தகப்பனார் பெயரைக் குடும்பப் பெயர் என்று எழுதச் சொல்வார்கள். எனக்கும் அப்படியே சொன்னார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் வந்தது. என் தகப்பனார் பெயர் எனது குடும்பப் பெயராகிவிடும். என்னுடைய பெயர் என் மனைவி மக்களின் குடும்பப் பெயராகிவிடும்.

அதாவது, ஒரே குடும்பத்தில் இரண்டு குடும்பப் பெயர்கள் வரும். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று ஹாங்காங்கில் பலரும் என்னிடம் கேட்டார்கள். அதற்காக நான் ஒரு யுக்தி செய்தேன். என் தகப்பனார் பெயரை எனது முதற்பெயராகவும், எனது பெயரைக் குடும்பப் பெயராகவும் மாற்றிக்கொண்டேன். இப்போது மொத்தக் குடும்பத்திற்கும் ஒரே குடும்பப்பெயர் கிடைத்தது. ஆனால், இதைவிட எளிய வழிகள் இருந்தன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

 

பெயரைக் கூறு போடலாம்

அ.முத்துலிங்கத்தின் ‘முழு விலக்கு’ என்கிற கதையை அப்போது நான் படித்திருக்கவில்லை. நாயகன் கணேசானந்தன் ஆப்பிரிக்காவுக்குப் போவான். போகிற இடமெல்லாம் குடும்பப் பெயர், நடுப்பெயர், முதற்பெயர் என்று கேட்பார்கள். ‘தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்’ என்று இவன் விஸ்தாரமாக எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். கடைசியில் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடிப்பான். ‘கணே சா நந்தன்’ என்று தன் பெயரை மூன்றாகப் பிரித்துவிடுவான்.

முத்துலிங்கம் இந்தக் கதையை 1995இலேயே எழுதிவிட்டார். நான் பல ஆண்டுகள் கழித்துத்தான் படித்தேன். அதற்குள் காலம் கடந்துவிட்டது. கடவுச் சீட்டு, ஹாங்காங் அடையாள அட்டை, தொழிற் பட்டயங்கள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றிலும் என் பெயருடன் தகப்பனார் பெயரும் இரும்பால் அடிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக இந்தக் கதையைப் படித்திருந்தால் 1995இல் என்னிடம் கேள்வி கேட்ட பெண்மணியிடம் ‘ஆம், ஆம்’ என்று பதிலளித்திருப்பேன்.

இணைய வெளியிலும் இரட்டைப் பெயர்

இந்த இரட்டைப் பெயர் இன்னல் பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் தொடர்கிறது. இந்தத் தளங்களில் கணக்குத் தொடங்க வேண்டுமென்றால் முதற்பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிட வேண்டும். தலைப்பெழுத்தை மட்டும் எழுதினால் இணையம் ஒப்புக்கொள்ளாது. ஆக தமிழகத்திற்குள் நிலவும் ஒற்றைப் பெயர், இணையவெளியிலும் கடவுச்சீட்டிலும் பான் அட்டையிலும் வெளிநாடுகளுக்குப் போகிறபோதும் இரண்டு பெயர்களாகிவிடுகின்றன. பெயரைப் பிரித்து எழுதலாம் என்கிற யோசனை முத்துலிங்கத்திற்கே காலங்கடந்துதான் தோன்றியிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அவரது பெயர் அப்பாதுரை முத்துலிங்கம் என்றுதான் இருக்கிறது.

உள்ளூரில் விளையாடுகிறபோது வி.ஆனந்தாக இருந்தவர் சர்வதேச அரங்கிற்குப் போனதும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிவிடுகிறார். நோபல் விருது பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிதம்பரத்தில் பிறந்தபோது ஆர்.வெங்கட்ராமன் என்றே அறியப்பட்டிருப்பார். 2020 செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும் வெளியுறவு அமைச்சரும் கலந்துகொண்டார்கள்.

முன்னவர் உள்நாட்டு ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் ராஜ்நாத் சிங் என்றே அழைக்கப்பட்டார். பின்னவரின் பெயர் உள்நாட்டில் எஸ்.ஜெய்சங்கர் எனவும் வெளிநாட்டு ஊடகங்களில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எனவும் குறிப்பிடப்பட்டது. ஏனெனில் வெளிநாட்டு ஊடகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்று நம்புகின்றன.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்? பலரும் செய்வதுபோலத் தலைப்பெழுத்தை விரித்தெழுதி அதுதான் முதற்பெயரென்றோ குடும்பப் பெயரென்றோ சொல்லிக் கொள்ளலாம்; அல்லது பெயரைப் பிரித்தெழுதி ஒரு பாதி முதற் பெயர் என்றும் மறுபாதி குடும்பப் பெயர் என்றும் சாதிக்கலாம். ஆனால் இவையெல்லாம் குறுக்கு வழிகள். நமக்கு பான் அட்டை வேண்டும், கடவுச்சீட்டு வேண்டும், சமூக வலைதளங்களில் கணக்கு வேண்டும்; அதற்காக ஒற்றைப் பெயருள்ள நாம் இரண்டு பெயர்கள் உள்ளதாக அபிநயிக்கிறோம்.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று முழங்குவதோடு நிறுத்திவிடாமல், அந்தத் தனிக்குணங்களில் ஒன்றுதான் சாதிப்பெயரைத் துறந்தது, அதன் நீட்சியாகத் தமிழன் ஒரு பெயரோடுதான் நிற்பான் என்று சொல்ல வேண்டும். தமிழக அரசும் தமிழ் அறிவாளர்களும் இதை ஒரு பிரச்சினையாகக் கருதி முன்னெடுக்க வேண்டும். முதற்கட்டமாக பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் தமிழர்கள் தலைப்பெழுத்துடன் தங்கள் ஒற்றைப் பெயர்களைப் பதிவுசெய்ய அனுமதி பெற வேண்டும். அடுத்த கட்டமாக இணையத்திலும் அதற்கு வகை செய்யப்பட வேண்டும். எல்லாப் பெயர்களையும் முதற்பெயர் - குடும்பப் பெயர் என்று பார்க்கும் வெளி நாட்டவர்க்கும் வெளி மாநிலத்தவர்க்கும் இதைப் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும்.

அவர்கள் அதை அங்கீகரிப்பதற்குத் தாமதமாகலாம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக வலிந்து இல்லாத குடும்பப் பெயரை உருவாக்கிக்கொள்வதைவிட ஒரு சமூகமாக எழுந்து நின்று தமிழர்களுக்கு ஒற்றைப் பெயர்தான் என்று சொல்ல வேண்டும். மனத்தடைகளைக் கடந்துவருகிறபோது அவர்களுக்கும் ஒற்றைப் பெயர் பழக்கமாகும். அதன்பிறகு அவர்கள் தமிழர்களுக்கு எழுதுகிற மின்னஞ்சல்களிலும் சம்பிரதாயமான கடிதங்களிலும் ஒற்றைப் பெயரைப் பயன்படுத்துவார்கள். வெளிநாட்டு ஊடகங்களில் வி.ஆனந்த், ஆர்.வெங்கட்ராமன், அ.முத்துலிங்கம், எஸ்.ஜெய்சங்கர் போன்ற பெயர்களைப் பார்க்கிற காலமும் வரும்.

 

https://www.arunchol.com/mu-ramanathan-article-on-tamilians-family-name

இது பற்றி நான் முன்னர் எழுதியது..

 

போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம்

2 months ago

போர் முழக்கம்
            - சுப.சோமசுந்தரம்

               நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர்.  பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ,  உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமைகளை மீட்டெடுக்க முயல்வேன்" என்று தமது உரையில் நாட்டின் பூர்வகுடிகளுக்கு மேலும் உறுதி கூறினார். அப்போர் முழக்கமும் அவரது உரையும் இணைய தளங்களில் உலகெங்கும் பரவின.
                 வரலாறு அறிந்த நாள் முதல் நமது தமிழ்க்குடி தொன்மையான நாகரிகத்தில் வகைப்படுத்தப்பட்டதால், பழங்குடிப் பாடல் என்று தமிழுக்கு ஏதும் அமையவில்லை. தமிழ் நிலத்தில் வாழும் காணி, தோடர் போன்ற தொல்குடிகளுக்கு இருக்கலாம். போரில் வெற்றி பெற்றவரைப் பாடுவது பரணி எனும் சிற்றிலக்கியமாய்த் தமிழில் வகைப்படுத்தப்பட்டது. பரணியில் போர் மேற்கொண்டு செல்லுகையில் போர் முழக்கமும் உண்டு. நமக்கான முதல் பரணி இலக்கியமான கலிங்கத்துப்பரணியே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்ததுதான். காலத்தால் அவ்வளவு சமீபத்தியது. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகர தொண்டைமான் தலைமையில் சோழர் படை அனந்தவர்மன் எனும் கலிங்க மன்னனின் படையை வெற்றி கொண்டதை செயங்கொண்டார் எனும் புலவர் பாடுவது கலிங்கத்துப் பரணி. இதில் போர் முழக்கம் உண்டு. நியூசிலாந்தின் மெய்பி கிளார்க் எழுப்பும் போர் முழக்கத்திற்கும் நமது செயங்கொண்டாரின் போர் முழக்கத்திற்கும் வேறுபாடு உண்டு. முன்னது தம் இன உரிமைக்கான முழக்கம்; பின்னது திறை செலுத்தத் தவறிய கலிங்க மன்னன் மீது படை எடுத்துச் சென்ற சோழனின் ஏகாதிபத்திய முழக்கம். முன்னது பெருமையுடன் பாட வல்லது; பின்னது தற்போதைய பண்பட்ட உலகத்தில் சிறுமை உணர்வு கொண்டது. உள்ளத்தை உறுத்தும் இப்பொருள் வேறுபாட்டைச் சற்றே மறந்து, இலக்கியம் என்ற வகையில் கலிங்கத்துப்பரணியின் போருக்கான அறைகூவலை மெய்பி கிளார்க்கின் உணர்வோடும் முகபாவனைகளுடனும் கற்பனை செய்வது ஓர் இலக்கியப் பார்வை. அவ்வளவே ! அப்பார்வை செல்லும் பாதையில் கலிங்கத்துப்பரணி பாடி சிறிது பயணித்துப் பார்ப்போமே !

"எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே"
                       - பாடல் 404.
பொருள் : '(படைக் கருவிகளை) எடும் எடும்' என விடுத்த மாறுபட்ட ஒலியானது (இகல் ஒலி) பொங்கியெழும் கடல் எழுப்பும் ஒலியை விட மிகுதியாகக் (இகக்க) கேட்பதாக ! குதிரை (பரி), யானைக் (கரி) கூட்டத்தினைக் (குழாம்) கட்டவிழ்த்து 'விடும் விடும்' என்று மிகுதியாய் ஒலிப்பதாக !

"வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே"
                        - பாடல் 405.
பொருள் : நன்கு கட்டமைக்கப்பட்ட வில்லில் (வரிசிலை) அச்சம் கொள்ளும் வகையில் (வெருவர) நாணிலிருந்து தெறித்த (தெறித்த நாண்) அம்பு சென்ற (விசைபடு) திசையே (திசைமுகம்) வெடிக்கட்டும் ! போரிடுவோர் (செருவிடை அவரவர்; செருதல் - போரிடுதல்) அதட்டும் ஒலியினால் (தெழி) உலகம் செவிடாகட்டும் (உலகுகள் செவிடெடுக்கவே) !

"எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே"
                        - பாடல் 406.
பொருள் : ஆர்ப்பரிக்கும் கடலோடு (எறி கடலொடு) கடல் மோதியது போல் (கிடைத்த போல்) இருதரப்புப் படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்வதாக (எதிர் கிடைக்கவே) ! மடங்கி வரும் அலையோடு (மறி திரையொடு) அலை மோதியது போல், வருகின்ற குதிரைப்படையோடு (வரு பரியொடு) இங்கிருக்கும் குதிரைப்படை மோதுவதாக !

"கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே"
                      - பாடல் 407.
பொருள் : பருத்த மலையோடு (கன வரையொடு; வரை - மலை) மலை போரிட்டதைப் போல் மதம் பொழியும் யானைகளோடு (கட கரியொடு) யானைகள் போரிடுவதாக ! திரளான மேகங்களோடு (இன முகின்) மேகங்கள் (முகில்) எதிர்ப்பது போல் தேர்ப்படையினைத் தேர்ப்படை (இரதமொடு இரதம்) எதிர்ப்பதாக !

"பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே"
                      - பாடல் 408.
பொருள் : போரிடும் புலி (பொரு புலி; பொருதல் - போரிடுதல்) புலியோடு சினம் கொள்வது போல் (சிலைத்த போல்; சிலைத்தல் - இசைச் சொல் - ஓசைப் பொருண்மையுடைய சொல்) போர் வீரரோடு (பொரு படரொடு) போர் வீரர் சினம் கொள்வதாக ! சிங்கத்தோடு சிங்கம் (அரியினொடு அரியினம்) மோதிக் கடுமையாகத் தாக்குவது போல் (அடர்ப்ப போல்) படைத்தளபதிகளோடு தளபதிகள் தாக்குவதாக (அரசரும் அரசரும் அடர்க்கவே) !

 

 

தேயும் ஈழத் தமிழ்மொழி

2 months 2 weeks ago
சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. 
காலிமுகத்திடல் போராட்டம்

இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேசுதல் அல்லது ஆங்கிலத்தை தமிழ்த்தனமாகப் தமிழோடு கலந்து பேசுதல் என்ற நிலைவரம் ஈழத்தமிழ் மொழிப்பயல்வுள் ஒப்பீட்டளவிற் குறைவுதான்.

எந்த ஒரு மொழியும் கலப்பற்றது – பேச்சு வழக்காற்று மாற்றங்களும் – கிளைகளும் அற்றவை எனப் பேசுவது மொழியின் வரலாற்றை மறுப்பதும், அதனியல்பைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகவும் மட்டுமே அமையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தொல்காப்பியம் ‘திசைமொழிகள்’ பற்றிப் பேசுகிறது. போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த மொழிச் சொற்கள் பலவற்றை தமிழ் என்று நினைத்தே பல நூற்றாண்டு காலமாகக் கையாண்டுவருகிறோம்.

அது மட்டுமின்றி ஏதாவது ஒரு மொழி உயர்வானது – மற்றையது தாழ்வானது என்று கருதுவதோ அல்லது சில மொழிகளை தெய்வீக அந்தஸ்து உடையவை என்று கூறுவதோ கூட அடிப்படையில் மொழியதிகாரம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே அமையும்.  

ஆனால் ஒவ்வொரு மொழிப் பயில்வு வட்டகையும் தனது சொற் தெரிவுகள், உச்சரிப்புக்கள் – தொனி நிலைகள் – குழும வேறுபாடுகள் சார்ந்த தனியடையாளங்கள் உடையவை என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். அவ்வகையில் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மொழிப் பயில்வானது அப் பிராந்தியத்தின் மரபுரிமையும் ஆகிறது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட அந்தந்த மொழியின் இயல்புகளுக்கேற்பவே அம் மொழிகளின் மாற்றங்களும் அமைகின்றன. அதாவது குறிப்பிட்ட மொழி புதிதாக உள்ளெடுக்கும் பிற மொழிச் சொற்களும் அல்லது உருவாகும் புதிய சொற்களுங் கூட மேற்படி பயில்மொழியின், மொழியில் அம்சங்களின் உள்ளார்ந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. 

இவ்வகையான வாதங்களை புரியும் போது – சந்தேகமில்லாமல் ஈழத் தமிழ் மொழியானது,  தமிழ் மொழி பயிலும் உலகின் பல்வேறு களங்களில் இருந்து வேறுபட்டதும் தனக்காக தனியான அடையாளங்களை உடையதுமான கட்டமைப்பு என்பதை நாம் கண்டடைய முடியும். அது ஒரு தனியடையாளம்  என்ற வகையில் ஒரு பண்பாட்டு முதலீடுமாகும். எனவே ஈழத்தமிழ் இனத்துவத்தின் முக்கிய கூறாக அதன் மொழியும் – மொழிசார் வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. எமது நாளாந்த பேசு மொழி, ஆற்றுகை நெறிப்பட்ட மொழி வெளிப்பாடுகள் தொடக்கம் எழுத்து மொழி – அதன் புனைவாக்க மொழிதல்கள் உள்ளிட்ட பரந்த பரப்பு அதனோடு கூடியுள்ளது.  நவீன காலத்து மேடைப் பேச்சு என்கிற வடிவமே ஈழத் தமிழிடமிருந்து உருவாகி நிலை பெற்றது என அண்மையிற் காலமான அமெரிக்க யேல் பல்கலைக்கழக மானுடவியற் பேராசிரியரான பேர்னாட் பேற் தனது கலாநிதிப்பட்ட ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளார். 

அதேநேரம் ஈழத்தமிழ் மொழி. இலக்கணம், இலக்கியம் – உரை மரபுகள் பற்றிய ஆய்வாளர்கள் பலரும் பலவேறு ஈழத்தமிழுக்கேயான வேறுபட்ட தனியியல்புகள் பலவற்றை சுட்டிக் காட்டியுள்ளனர். அண்மையில் பட்டமேற்படிப்புக்களுக்கான பிரெஞ்சு வரலாற்று மொழிநூலியல் நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி அப்பாசாமி முருகையன் பொதுத் தமிழ் பாவனையில் இருந்து வேறுபடும் ஈழத்தமிழின் மிக முக்கியான சில இயல்புகளைச் சுட்டிக்காட்டி அது பற்றிய ஆய்வுகளின் அவசியத்தையும் – அவசரத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இலங்கை வானொலி

இந்த வகைப்பட்ட தனித்துவம் தொடர்பிலான கல்விசார்ந்ததும் – ஆய்வியல் ரீதியுமான (academic and research) கருத்தாடல்கள் ஒரு புறமிருக்க, ஒரு காலத்தில் செய்தி ஊடகங்கள் முதலியவற்றின் தமிழ் பிரயோகம் – மொழி நடைகள் என்பனவற்றுக்காக ஈழத் தமிழ் ஊடகங்கள் பொது மக்கள் மத்தியில் உள்நாட்டில் மட்டுமின்றி  பிற நாடுகளிலும் புகழ் பெற்றுக் காணப்பட்டன. அவை ஈழத் தமிழின் தனியடையாளத்தை பிரதிநிதிப்படுத்தியதோடு அதனை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றும் கைங்கரியத்தையும் செய்தன. எஸ்.பி. மயில்வாகனம் தொடக்கம் இன்றைய வாழும் உதாரணங்களில் ஒன்றான. பி.எச். அப்துல் ஹமீத் வரை பலமான ஈழத்து வானொலித் தமிழின் மையமாக இலங்கை வானொலி இருந்த காலமொன்றுண்டு. 

பத்திரிகைகள் மொழிப்பாவனையில் எடுத்த கவனம் காரணமாக, அவை மொழிக்கல்விக்கான களமாயும் இருந்ததுண்டு. மொழியின் இயங்கு களத்தை இவை வலுப்படுத்தின. உலகறிவோடு அவை ஈழத்தமிழ் மொழியையும் அவை காவிச் சென்றன. 

ஆனால் இன்றைய நிலை என்ன? 

தமிழ் ஜனரஞ்சகச் சினிமா

இன்றைய இளைய தலைமுறை ஒருவகையான தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழை மிகப் பெருமையோடும், நடப்பு வழக்கின் (fashion) சிறப்புத தகமையாக பேசத் தொடங்கியுள்ளது. அது ஈழத் தமிழையோ அல்லது அதன் வேறுபட்ட பிராந்தியங்களிற் (யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு – மலையகம் என்றோ அவற்றின் உட் பிராந்திய கிளை வழக்காறுகளின் எண்ணற்ற பிரிவுகள் சார்ந்தோ) பயிலப்படும் சிறப்பு வேறுபாடுகளையுடைய மொழியையோ பேசாது புறந் தள்ளிவிட்டு இப் புதிய போக்கு வழிப்பட்டு விரைந்து செல்கிறது. அது ‘சுட்டுக் கொண்டு வருதல்’(திருடல்), ‘கேமுக்கு வாறியா?’ (சண்டை போட வருகிறாயா?), ‘செமையா இருக்குது’ (நல்லா இருக்குது) ‘டீல்’, ‘கெத்து’ என பல சொற் பிரயோகங்கள் மற்றும் ‘அவங்க’ – ‘சொல்றாங்க’ எனும் வாக்கிய முடிப்பு முறைகள் என இவை விரைந்து பரப்பப்படுகின்றன.

இவை பேரளவில் பயிலப்படுதலுக்கு முக்கியமாக வெகுஜன ஊடகங்கள்  காரணமாகின்றன. குறிப்பாக ஈழத் தமிழ் இளைய சமூகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுஜன சினிமாப் பண்பாட்டால் ஆக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகங்களும், கட்டவுட் (cutout) பூசைகளும் ஆரம்பமாகி விட்டன. இங்கிருந்துதான் மேற்படி தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழ் அதிகம் பொறுக்கப்படுகிறது.

இலங்கை வானொலி

ஆனால் இதை பேரளவில் நடவு செய்யும் முகவர் வேலையை – குறிப்பாக எமது பண்பலை வானொலிகள் (FM radio) செய்கின்றன. பேராசிரியர் சிவத்தம்பி இந்த வானொலிகளை Talkative radios எனக்  கூறுவார். அவை எப்போதும் – பெரும்பாலும் இந்த தென்னிந்திய சினிமா வழிவரும் வெகுஜனப் பேச்சு முறையை – சொற் பிரயோகங்களை நாடு முழுவதும், 24 மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றினைக் கேட்பவர்கள் அல்லது அதன் ரசிகர் குழாம் என்பது அதிகம் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள். இந் நிலைவரங்கள் ஈழத்தழிழ் மொழிக்குப் பதிலாக மேற்படி கொச்சையான இதுவுமல்ல – அதுவுமல்ல என்ற மொழிப் பயில்வொன்றை நடவு செய்து வருகின்றன. ஆனால் இது தொடர்பில் எம்மிடம் எந்தக் கேள்வியும் கிடையாது. 

இதன் அடுத்த பெருங்களம் தொலைக்காட்சி அலை வரிசைகளாகும். இவை வீடு முழுவதும் சதா சர்வகாலமும் புகுந்து நிற்கின்றன. ஒரு வகை சன் ரீவி மயமாக்கத் தமிழ் இன்னொரு பக்கம் மடை திறந்தோடி ஈழத் தமிழ் வீடுகளை நிறைத்து மெல்ல அவரவர் பிராந்தியத் தனித்துவ மொழியை தட்டையாக்கி மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழை எல்லோர் நாவிலும் மெல்ல – அவர்கள் அறியாமலே பதிகின்றது.

தமிழக மொழிமாற்ற கார்ட்டூன்

இதில் மிக முக்கிய இடத்தை சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன்கள் செய்கின்றன. 05 வயதுக்கு முன்பதாகவே ஈழத் தமிழ் குழந்தைகளின் பேசு மொழி, மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழைக் இக் கார்ட்டூன்கள் வழி பெற்றுக் கொள்கிறது. இது மிகப் பெரிய ஈழத் தமிழ் மொழி இழப்புக்குக் காரணமாகப் போகிறது. நாம் இதை விடுத்து இச் சிறுபராயப் பிள்ளைகளுக்காக  வாங்கும் அனைத்து Nursery Rhymes உட்பட்ட குறுமொலித் தட்டுக்கள் கூட இந் நிலைவரத்தை பேரளவில் அதிகரிக்கப் போகின்றன. (எத்தனை ஆயிரம் பக்தி பாடல்கள் ஊர்க் கோயில்கள் தோறும் வெளியிடும் ஈழப் பெருந் தலைவர்கள் தமது குழந்தைகளுக்கான மழலைப் பாடல்களை பதிவு செய்து உருவாக்குவதில் மட்டும் பெரியளவிற் கவனம் எடுப்பதில்லை).

ஈழத்து சிறுவர் இலக்கியங்கள்

இதேநேரம் கல்விச் சாலைகள் மொழிக் கல்வியில் கொண்டுள்ள பாராமுகம் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் ஆங்கில மூலக் கல்வி பற்றிய ஆய்வறிவற்ற மோகம் அல்லது தொடரும் மொழி தொடர்பான  காலனியகால தாழ்வுச் சிக்கல்கள் – சமூக அந்தஸ்தை மொழியோடு இணைத்துப் பார்க்கும் நோக்குகள் என்பன பாடசாலைகளிலும் – பல்கலைக்கழகங்களிலும் காணப்பட்ட பலமான ஒரு தாய்மொழிக் கல்விப் பாரம்பரியத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டன. அத்தோடு இவற்றுக்கு  வெளியாற் காணப்பட்ட பலமானவொரு மரபுவழிக் கல்விப் பாரம்பரியமும் கடந்த காலத்துக் கதையாகிப் போய் முடிந்து விட்டது. 

இவை யாவும் ஈழத் தமிழ் மொழியின் எதிர்கால வாழ்வை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளன. ஈழத்தமிழ் மொழியை அதன் பல்பரிமாணங்களை, அதன் பிராந்திய வேறுபாடுகளை, அவற்றின் கிளைகளோடு காத்திட என்னதான் செய்யப் போகிறோம்?

தொடரும்.

https://ezhunaonline.com/தேயும்-ஈழத்-தமிழ்மொழி/

மரண பலம் - சுப.சோமசுந்தரம்

2 months 2 weeks ago

          மரண பலம்

                    -----சுப.சோமசுந்தரம்

 

        சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது.
         தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர்.
        ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட்டிக்காட்டிலா (!!!) பிள்ளையைச் சேர்ப்பாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து என்னை உரிமையுடன் தூக்கி வந்து பாளையில் அந்தக் காலத்திலேயே இருந்த கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்தாள் என் ஆச்சி. நான் நானாக ஆனேன். அதனால் அவளிடம் பாசத்தில் கட்டுண்டே வாழ்ந்திருக்கிறேன். கடைசிக் காலத்தில் அவளைக் கவனிக்க ஆள் அமர்த்தியபோது, செலவுக்கு என்னிடம் அதிகம் வாங்கலாம் என்றும், "அவன் எனக்காக எதுவும் செய்வான்" என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாள். பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு அவளது பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள். என்னைப் பாசத்துடன் குறிப்பிட்ட காலம் வரை வளர்த்ததற்கும், கடைசிக் காலத்தில் கூட என்மீது நம்பிக்கயை வெளிப்படுத்தியதற்கும் நானும் கடமைப்பட்டவன். எனவே நாங்கள் அவள் வாழுங்காலம் இயன்றவரை அவளைத் தாங்கிப் பிடித்தோம்.
        ஆனால் நிறைய மனிதர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தாள். மருமகள்களுக்குக் கொடுமையான மாமியாராகவே வாழ்ந்தாள். வேற்று மனிதர்களிடமும்  ஓரளவு அப்படியே ! கடைசிக் காலத்தில் தன்னைக் கவனிக்க அமர்த்தப்பட்டவர்களைக் (caretakers) கேவலமாக நடத்தியதில் சுமார் பதினைந்து பேர்களை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.
      அவள் வாழுங்காலம் (காரணத்தோடு) அவளைத் தூற்றிய சிலர் அவளது மரணத்தில், "103 வயது ! கொடுத்து வைத்த ஆன்மா. அதிலும் ஏகாதசி அன்று இறந்ததால் வைகுண்ட பிராப்தி !" என்றெல்லாம் அவள் புகழ் பாடினார்கள். மனதுக்குள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டேன். எனக்கு அவள் நல்ல ஆச்சி. அவ்வளவே! அதற்காக அவள் நல்லவள், உத்தமி என்றெல்லாம் நான் பேசித் திரிந்தால் அது சுயநலமாகத்தானே முடியும் ! அல்லல் பட்டவர்களின் துன்பத்தை உணர்ந்து, பிறிதின் நோய் தந்நோயாகக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டாமா ?                 மரணத்திற்கு மனிதனைப் புனிதனாக்கும் ஆற்றல் உண்டோ ? நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ஒரு படத்தில் சொல்வதைப் போல, முடிந்தால் நாமெல்லோரும் செத்துச் செத்து விளையாடலாமோ !

இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்!

2 months 2 weeks ago
இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்!
KaviDec 26, 2023 15:34PM
Let the workplace-friendly attire spread

நா.மணி

சேலையை கட்டியது முதல், வீட்டிற்கு வந்து அதனை மாற்றிக் கொள்ளும் வரை, பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகிறார்கள்.

இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. அதில் பெண்கள் சரிபாதி. அதிலும் பாதிபேர் தான் சேலை உடுத்தும் நிலையிலும் வயதிலும் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், இன்றைய நிலையில் சுமார் 35 கோடி பெண்கள் நாள் தோறும் சேலை அணிந்து கொண்டு இருக்கிறார்கள்‌.

இவர்கள் இந்த அவஸ்தையை அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இப்படி எத்தனை கோடி பெண்கள், எத்தனை நூற்றாண்டுகள் இந்தக் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.

கலாச்சாரமாக மாற்றப்பட்ட கஷ்டங்கள்

usage-1-3-768x445.jpg

மிக எளிதாக, அத்துணை துன்ப துயரங்களையும் பண்பாடாக பரிணமிக்க செய்து விட்டோம். ஒவ்வொரு கணமும் சரிசெய்து கொள்ள வேண்டிய சங்கடத்தை வெகு இயல்பாக மாற்றி விட்டோம். பிறகென்ன ? அது பண்பாடு கலாச்சாரம் ஆக மலர்ந்த பிறகு, அதனை மிகவும் இயல்பான பழக்கமாக மாற்றி விட்டோம். இப்போது அது பழகிப் போய்விட்டது. அனிச்சை செயலாக மாறிவிட்டது.

எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவையோ அங்கெல்லாம் இழுத்து இழுத்து விட்டுக் கொள்வது தன்னை அறியாத ஓர் தற்காப்பு கலையாக மாற்றம் அடைந்து விட்டது. அது பாரம் என்பதே தெரியாமல் போய்விட்டது. அந்தக் கஷ்டத்தின் இயல்பான பாதுகாவலர்களாக பெண்களே மாறி விட்டனர். அந்தப் பாரம் தெரியாவண்ணம் மறைத்து விட்டோம்.

ஆனால், வெள்ளைக்காரன் வந்தவுடன் ஆண்கள் மட்டும் வேட்டியை கழட்டி எறிந்து விட்டு, கால்சட்டை, கை சட்டை மாற்றிக் கொண்டார்கள். கோட்டு சூட்டு எல்லாம் தரித்து கொண்டார்கள். இது தான் ஆண்களின் கலாச்சாரம் என்று கூறிவிட்டு தனக்கு தோதான உடைகளை அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பெண்கள் சேலையிலிருந்து இம்மியளவும் பிசகாமல் பார்த்து கொண்டது சமூகம். எந்த வேலை செய்தாலும், சேலை உடுத்திக் கொள்ளவும் மறைத்துக் கொள்ளவும் பழக்கப் படுத்தி விட்டோம். அதனைப் பண்பாடாக்கி விட்டதால், அதுவே போற்றுதலுக்கு உரிய கலாச்சாரமாக நிலை நிறுத்தி விட்டோம்.

இப்போது பெண்கள் தங்களுக்கு ஏற்ற ஆடைகள் அல்லது சுடிதார் அணிந்து கொள்ளலாம் என்று உத்தரவு போட்டால் கூட, சட்டத்தை சத்து இல்லாமல் செய்யும் சக்தியை பெற்று விட்டோம்.

சேலையில் பெண்களை சுற்றி கட்டி வைத்து விட்ட பின்னர், அவர்கள் படும் அவஸ்தைகள் என்னென்ன? வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுக்கும் போதே இயல்பாக ஏற முடியாது. இயல்பாக அமர முடியாது. அதற்கென்று தனித்துவமான பழக்கத்தை கைக் கொள்ள வேண்டும். ஆண்கள் போல் வண்டியேற முடியாது. வண்டியிலிருந்து இறங்க முடியாது.

Let the workplace-friendly attire spread

இது மழை காலம். மழையில் இயல்பாக நடக்க முடியாது. ஒருகையில் சேலை மறுகையில் கைப் பையோ குடையோ. கவனம் தேவை நடந்து செல்ல. வகுப்பறையில் கையை தூக்கி எழுதும் போதும் கவனம் தேவை. ஏதேனும் தன்னையும் அறியாமல் விலகி விட்டதோ என்று சரி செய்து கொள்ள வேண்டும். வெய்யில் காலத்தில் வியர்த்துக் கொட்டும்.‌ இருக்கமான ஆடைகள் எப்படி இருக்கும் என்பதை அனுபவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அவர்களுக்குதான் அதுவும் பழகிவிட்டதே!, மாலை நேரம். விளையாட்டு நேரம். விளையாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மிகவும் வினையமாக நடந்து கொள்ள வேண்டும். இயல்பாக விளையாட்டு சொல்லித் தர முடியாது. குறைந்த பட்சம் மாணவர்களை ஹேன்ஸ்அப் என்று கூறிக் கொண்டே படக்கென்று ஆசிரியர் கைகளை மேலே கொண்டு செல்ல முடியாது.

காலையில் புறப்படும் போது எத்தனை நேர்த்தியாக எத்தனை இடங்களில் பின்னை குத்தி உடலை மறைத்து இருந்தாலும் ஆடை எங்கேனும் விலகி விடுமோ என்ற அச்சத்தோடு வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். என்ன வேலை செய்து கொண்டே இருந்தாலும் கவனம் முழுவதும் உடலின் மீதே இருந்து கொண்டு இருக்க வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் விடை கிடைக்க இருக்கிறது, எவ்வளவு பெரிய மகிழ்ச்சி!

ஆதி மனிதன், தன்னை ஆண் பெண் என்று பாகுபடுத்தி பார்த்துக் கொள்ளும் காலத்திற்கு முன்னர், ஆடைகளை தங்கள் பாதுகாப்புக்காகவே அணிந்து கொண்டு இருக்க வேண்டும். அது இலைகளோ தழைகளோ மரப்பட்டைகளோ, தோல் ஆடைகளோ எதை ஆடையாக அணிந்து கொண்டாலும் அது பொதுவானதாகவே இருந்திருக்கக் கூடும்.

எப்போது ஆடை வேறுபாடுகள் தோன்றியிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்? உழைத்து உண்டு வாழும் ஒரு கூட்டமும், பிறர் உழைப்பை உண்டு வாழும் கூட்டமும் உருவான பிறகு ஆடையில் வேறுபாடுகள் தோன்றி இருக்கலாம். பாலின சமத்துவம் இன்மையும் வர்க்க வேறுபாடும் தோன்றிய பிறகே ஆடை வடிவமைப்பு வேறுபாடுகள் வந்திருக்க வேண்டும்.

ஆணாதிக்க சமூகம் உருவாகும் போது, ஆண் தனது சமூக அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், தனது சாதனைகளை பறைசாற்றவும் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தவும் ஆடையை ஓர் கருவியாக, தனித்துவமான கருவியாக தொடங்கி இருக்கலாம்.

பெண்கள் மீது குற்றம் சுமத்துதல்

பெண்ணை, தனது சமூக பொருளாதார சுரண்டலுக்கு ஏற்ற கருவியாக, எப்படி மாற்றுவது என்பதை சிந்தித்து அதற்கான பணிகளை மதம் பண்பாடு அரசியல் கலாச்சாரம் தத்துவம் போன்ற வடிவங்களில் உட்புகுத்தும் தந்திரங்களை கையாண்டு பெண்களுக்கான ஆடைகள் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும். வீட்டில் பூட்டி வைக்கப்பட்ட பெண்களுக்கு இந்த ஆடைகள் இடையூறாக இருந்தனவா? எப்படி வாழ்ந்தார்கள்? அவையும் ஆய்வுக்கு உரியவை.

ஆனால்,  புதுமைப் பெண்கள் ஆன பிறகு, கல்வி, வேலை, கலை, அறிவியல், தொழில்நுட்பம், பெண்கள் மீதான அத்து மீறல்கள், பாலியல் சீண்டல்கள், அதனினும் கொடிய செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடும் போது ஆடைகளையே ஆணாதிக்க சமூகம் துணைக்கு அழைத்துக் கொள்கிறது.

பச்சிளம் குழந்தைகள், வயது மிக முதிர்ந்து வறுமையில் வாடிக் கிடக்கும் பெண்களை இந்தக் காமுகர்கள் ஏன் விட்டு வைக்கவில்லை என்பதற்கு பதில் தேட முயற்சி செய்ய மாட்டார்கள்.

இன்று வரை பெண்ணின் ஆடையில் ஆண் கவனம் கொள்ள அதுவும் சேலையில் சுருட்டி வைக்கவும் வலுவான காரணமாக பசப்பி வருகின்றனர். பெண்களின் ஆடை மட்டுமா? முடியைக் கூட துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். என்னதான் பெண் பாதுகாப்பாக நடந்து கொண்டாலும் ஆண்கள், பெண்கள் மீதே குறைகளைக் தேடிக் கண்டறிந்து சுமத்திட திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.

பள்ளியில் படிக்கும் சிறுமியர்களுக்கு விடிவுகாலம் வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. பாவாடை தாவணிக்கு பதிலாக, சுடிதார். துப்பட்டாவுக்கு பதிலாக ஓவர் கோட் ஓர் ஆரோக்கியமான கலாச்சாரம்.

அதே பெண் குழந்தைகள் ஆசிரியர் எண்ணும் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டால் சேலை தான். ஒன்றாம் வகுப்பு முதல் பெண் குழந்தைகளுக்கு முழுக் கால் சட்டை பற்றிக் கூட யோசனை செய்யலாம். சின்னக் குழந்தைகள் தான் என்றாலும் வயது அறியா பருவம் முதலே பயிற்றுவிக்கப் படுகிறார்கள். குட்டை பாவாடை பலமுறை இழுத்து விட்டுத் தான் குழந்தைகள் அமர்கின்றன. இந்த சிரமங்கள் கூட களையப்பட வேண்டும்.

Let the workplace-friendly attire spread

2019 ஆம் ஆண்டு கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக இருக்கும் போது பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை பின்வரும் தெளிவுரையை தருகிறது.

“நேர்த்தியான, பணியிடத்திற்கு ஏற்ற வகையில் சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் உடைகளை பெண்கள் அணிந்து வரலாம்”.

இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னரும், சேலையே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலைமை ஆசிரியர் முதல் பல நிலை அதிகாரிகள் அடக்கம்.

இதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்கள் தெளிவுரை தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். “அரசின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பெண் ஆசிரியர்கள் அணிந்து வரலாம்” என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தின் பிறகு, “இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் “அமைச்சரின் இந்த ‌விளக்கத்திற்கு நன்றி. இனிமேலேனும் சௌகரியமான ஆடைகளை அணிந்து வரலாம்” என்று கூறியுள்ளார்.

இதே விசயத்தை சென்னையில் பணியாற்றி வரும் ஒரு முதுநிலை ஆசிரியரிடம் பத்திரிகையாளர் கேட்கிறார். “பாரம்பரிய உடையான சேலை சௌகரியமான ஆடைதான். ஆனால் மருத்துவக் காரணங்களுக்காக தான் விதிவிலக்கு வேண்டும்” என்கிறார்.

இங்கு மட்டுமல்ல, அஸ்ஸாம், பஞ்சாப், ஒடிசா, பிகார் என நாட்டின் பல பாகங்களிலும் பெண் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண் ஆசிரியர் தாடி வைத்துக் கொள்ள கூடாது என்றும் பிகார் மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் வெற்றி கண்டுள்ளனர்.

பல மாநிலங்களில் நேரடி அரசின் உத்தரவுகள் ஏதுமின்றி மறைமுக கட்டுபாடுகள் அவர்களை வழிநடத்தி வருகிறது. அரசு உத்தரவை இங்குள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் எப்படி எடுத்துக் கொள்ளும் எப்படி நடைமுறைப் படுத்தும் என்று தெரியவில்லை. அரசுப் பள்ளிகளில் கூட பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த மறைமுக சிக்கல்கள் இருக்கலாம். இவையும் களையப்பட வேண்டும்.

அமைச்சரின் விளக்கம், இந்தப் பிரச்சினையை ஒட்டிய ஊடக செய்திகள், சமூக ஊடக பதிவுகள் ஆசிரியர்கள் இவற்றுக்கு பிறகேனும் இதனை பெருவாய்பாக பயன்படுத்தி பெண் ஆசிரியர்கள் தங்கள் பணித் தளத்திற்கு ஏற்ற  ஆடைகளை அணிந்து வலம் வர வேண்டும். இல்லையேல் சட்ட ரீதியாக கிடைத்த இந்த சுதந்திரம் கூட காலப் போக்கில் காவு கொள்ளப் படலாம்.
 

https://minnambalam.com/featured-article/let-the-workplace-friendly-attire-spread-by-professor-n-mani/

புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்

2 months 3 weeks ago
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்

 — எழுவான் வேலன் —

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போனதும் புலமைப் பரீட்சை கற்பிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பில் பிள்ளை ஒப்படைக்கப்படுகின்றது. இரண்டு வருடத்துக்கு அவர்கள் காசை உறிஞ்சிக் கொள்வார்கள். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே பிரத்தியேக வகுப்பாக இதை பாடசாலைக்கு வெளியே நடத்துவதாகும்.

ஆரம்பத்தில் பிள்ளை சித்தியடைந்தால் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக ஆசிரியர் சக மாணவர்கள் என அனைவருக்கும் இனிப்புக்கள் பகிர்வதைக் காணக் கூடியதாக இருந்தது. பின்நாட்களில் இது குறித்த ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் விருந்து படைப்பதாக மாற்றமடைந்து இன்று விருந்துடன் ஆசிரியைகளுக்கு சேலையும் ஆசிரியர்களுக்கு சேட், வேட்டி என்பன கொடுப்பதாக மாறியிருக்கிறது. பதினைந்து ஆசிரியர்கள் இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் மூன்று பிள்ளைகள் மட்டும் சித்தியடைந்தால் ஒரு பெற்றோர் ஐந்து ஆசிரியருக்கு சாப்பாடும் ஆடைகளும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார். இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஐந்து பேருக்கும் ஆகக் குறைந்தது பதினைந்தாயிரம் ரூபா செலவழிக்க வேண்டியேற்படுகிறது. சேலை வாங்கிக் கொடுக்காத பிள்ளைகளை அழைத்து சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் பேசிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் அந்தப் பிள்ளையும் பெற்றோர்களும் அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறார்கள். என்ன கடன் பட்டாவது இந்த விடயத்திலிருந்து விடுபடுவதற்காக ஆசிரியர்களை மகிழ்விக்க முயல்கிறார்கள். உண்மையில் பிள்ளைகளிடம் கைநீட்டி அன்பளிப்புப் பெறும் ஆசிரியர்களே அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாக வேண்டியவர்கள்.  

அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் சேலை, சேட், சாப்பாடு என்பன ஒரு வகை இலஞ்சமேயாகும். ஒழுக்கத்தினையும்,  நேர்மையினையும், கடமையினையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலைகள் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் அன்பளிப்பு என்ற பெயரில் இலஞ்சத்தினையும், நேர்மையீனத்தினையும் கடமை துஸ்பிரயோகத்தினையும் நடைமுறை ரீதியாகக் கற்றுக் கொடுக்கின்றன. இந்த மாணவர்கள் நாளை பெரிய பதவிகளுக்குப் போகும் போது தான் செய்கின்ற கடமைகளுக்கெல்லாம் அன்பளிப்பை எதிர்பார்ப்பவர்களாக மாறுவது ஒன்றும் ஆச்சரிப்படத்தக்க விடயமில்லை.

ஆசிரியர்கள் தங்கள் கடமைக்கு அன்பளிப்புப் பெறுவதில்லை அது தனது கடமை அந்தக் கடமையை ஆற்றுவதற்காகத்தான் அரசு சம்பளம் தருகின்றது என்பதை நடைமுறை ரீதியாகக் கடைப்பிடிப்பார்களாக இருந்தால் பிள்ளையும் அந்த ஒழுக்கத்தை ஆசிரியர்களிடம் இருந்து கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளும்.  

மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முதல் வைத்து நோக்குகின்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் கடமையைச் செய்வதற்கு அன்பளிப்பு எனும் எண்ணங்களை ஏன் விதைக்கிறார்கள் என்பதும் இதனை அப்பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாதிருப்பதன் நோக்கம்தான் என்ன என்பதும் விளங்கவில்லை. என்ன கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை எமது பாடசாலையில், எமது வலயத்தில் எத்தனை மாணவர்கள் புலமைப் பரீட்சை சித்தியடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாக இருக்கிறது போல்த் தெரிகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள்,  தங்கள் கௌரவத்துக்காக, புகழுக்காக பிள்ளைகளைப் பிழிய அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் தங்கள் பாடசாலை,  வலயம் என்பவற்றை உயர்த்துவதற்காக பெற்றோர்களைப் பிழிகிறார்கள் போலத் தெரிகிறது.      

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையே இன்று மாணவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்ற பரீட்சையாக இருக்கின்றது. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கௌரவத்துக்காக சிறுவர்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றனர். நான்காம் ஆண்டில் இந்தச் சித்திரவதை தொடங்கி விடும். கிட்டத்தட்ட இரண்டு வருட கடும் பயிற்சி அதன் பிறகு பரீட்சை. இந்தக் காலப்பகுதிக்குள் காலை முதல் அந்தப் பிள்ளை தூங்கும் வரை பல பெற்றோர்கள் ஓய்வின்றிப் பிள்ளையை வருத்துகிறார்கள். என்னதான் சிறுவர் உரிமை பற்றிப் பேசினாலும் கல்வி என்ற பெயரில் இந்தப் பிள்ளைகளின் உரிமை பறிக்கப்படுவதை நாம் எல்லோரும் கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம்.

புலமைப் பரீட்சை முடிவு வந்தவுடன் சித்தியடையாத மாணவர்களின் மனம் நோகா வண்ணம் நடந்து கொள்ளும்படி சில சமூக ஆர்வலர்கள் முகநூல்களில் எழுதுவதுடன் இது முடிந்துவிடுகிறது. இவற்றின் ஊடாக எந்தப் பெற்றோரும் பெரியளவுக்கு விழிப்புணர்வு பெற்றதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பந்தயத்தில் தாம்தான் முந்த வேண்டும் என்ற நோக்கு இருக்கிறதே தவிர தனது பிள்ளையின் உளநிலை பற்றி அக்கறைப்படுவதாக இல்லை.

இந்தப் போக்கு இவ்வாறு வளர்ந்திருப்பதனையும் இதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதனையும் கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் அறியாமல் இல்லை. இருந்த போதும் புலமைப் பரீட்சையினை அரசு ரத்து செய்வதாக இல்லை. காலத்துக்குக் காலம் கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் இது தொடர்பாக பேசுவார்களே தவிர உருப்படியான காரியம் எதையும் செய்வதாக இல்லை. இதற்குக் காரணம் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் சரியான பொறிமுறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பது புலனாகின்றது. புலமைப் பரிசில் கொடுப்பதுதான் இந்தப் பரீட்சையின் நோக்கம் என்றால் அதற்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் புலமைப்பரிசிலை விட பாடசாலை அனுமதிதான் கல்வி அமைச்சுக்கு சிக்கலான விடயமாகத் தெரிகிறது.

புலமைப் பரிசு, பாடசாலை அனுமதி என்பவற்றைத் தாண்டி நாட்டுக்கு நற்பிரசைகளை உருவாக்குவதை மறந்து ஆசிரியர்களும் சமூகமும் செயற்படுகின்றது. புலமைப் பரீட்சையின் ஊடாக அன்பளிப்பு என்ற பெயிரில் இலஞ்சம் பெறும் மனோபாவம் ஒன்று உருவாகப் போவதை எவரும் உணர்வதாக இல்லை. இன்று வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த அன்பளிப்புப் பண்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது ஒவ்வோர் ஆசிரியர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த சீர்கெட்ட அன்பளிப்பு இலஞ்சம் நிறுத்தப்பட வேண்டும். இதனை கல்வி அதிகாரிகள் செய்ய முன்வரவேண்டும். அடுத்த ஆண்டில் இந்நடவடிக்கை தொடருமாக இருந்தால் அனைத்து ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.  

 

https://arangamnews.com/?p=10273

Checked
Tue, 03/19/2024 - 05:42
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed