எங்கள் மண்

காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்

6 days 12 hours ago

Nov132018.jpg

(ஜெரா)

இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.அவரது ஆய்வின்படி, இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் அதன் மய்யப் பகுதிகளுக்கும், தீவுப் பகுதிகளில் இருந்தே மனித நிலவுகை பரவியது எனச் சொல்லப்பட்டிருக்கும். இந்தக் கண்டறிதலின்படி தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையால், இந்தக் கருத்தியல் செயல்வடிவம் பெறாமல் போயிற்று. ஆனால், அக்கருத்தியலில் உண்மையில்லை என யாராலும் இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது.

தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் தீவுகளில் ஒன்றான காரைநகர், இப்போது தமிழர்களாலேயே கைவிடப்படும் நிலையை எட்டியிருக்கிறது. செல்வச்செழிப்புடன் இருந்த வீடுகள், பாழடைந்த நிலையை அடைந்துவிட்டன. கூப்பிடு தொலைவில் கூட மனித நடமாட்டத்தைக் காண முடியாதளவுக்கு, குடிமனைகள் சுருங்கிவிட்டன. நூற்றாண்டுக் கணக்கில் கைவிடப்பட்ட கிராமமொன்றுக்குள் நுழையும் உணர்வை, வீதிகள் ஏற்படுத்துகின்றன. வீதிகளில் நடமாடும் மனிதர்களில் அநேகர், நீருக்காகப் பயணிப்பவர்களாகவே இருக்கின்றனர். இப்படியாக அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள், குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை, அண்மையகாலச் செய்திகளில் படித்திருப்போம்.

இவ்வளவு சிரமம் மிகுந்த சூழலுக்குள்ளும், தன் ஊர், வரலாறு, அவற்றை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கும் எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற பேரார்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்தான், இந்தக் கட்டுரையின் நாயகன். எப்போதும் ஆய்வுகூடங்களிலும் நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் வைத்துப் பாதுகாக்கப்படும் வரலாற்றை விட, சாதாரண மக்களிடம் வாழும் வரலாறு, மிகுந்த உயிர்த்துடிப்புள்ளது எனச் சொல்லப்படுவதுண்டு. அதற்குச் சாட்சியமாக, இந்தக் கட்டுரையின் நாயகன் வாழ்கிறார்.

கந்தப்பு நடராஜா, 1930ஆம் ஆண்டு, காரைநகர், களபூமி பொன்னாவெளி கிராமத்தில் பிறந்தார். சுந்தரமூர்த்தி பாடசாலை, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வியைக் கற்ற இவர், சுவாமி விபுலானந்த அடிகளாரின் விருப்புக்குரிய மாணவனாகவும் இருந்திருக்கிறார்.

இப்படியாக வாழ்க்கைச் சுருக்கக் குறிப்பைக் கொண்டவரிடம், எப்படியாக இந்த ஆவணப்படுத்தல் மீதான ஆசை வந்தது என்று கேட்டால், “உங்களைப் பார்த்துத்தான்” என்று சுருக்கமாகப் பதிலளிப்பவரிடம், அந்தக் கேள்விக்கு ஆழமான பதிலும் உண்டு.

“எனக்கு இந்த விடயங்களில், முதல் ஒன்றும் தெரியாது. சண்டையள் ஓய்ஞ்ச பிறகு, தெற்குப் பக்கமிருந்த வாற யாவரியளுக்கு, எங்கட வீட்டுப் பழைய சாமானுகள நிறைய வித்திருக்கிறன். பிறகு ஏன் இவங்கள் இதுகள வாங்குறாங்கள் என்று யோசிச்சன். அப்பிடிக் காரணத்த தேடிக்கொண்டு போகேக்க தான், எங்கட அன்றாடப் பாவனைப் பொருட்களின்ர முக்கியத்துவமும் தனித்துவமும் விளங்கினது. அதுக்குப் பிறகு, என்னதான் கஸ்ரம் வந்தாலும், ஒரு பொருளையும் விற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தன். எங்கட தோட்டந்துரவு, வயல் எண்டு கிடந்த பழைய சாமானுகள் எல்லாத்தையும் பாதுகாக்கத் தொடங்கினன்.

“என்ன செய்ய…! இந்த அறிவு, எனக்கு வயசான பிறகு தான் வந்தது. இந்தப் பொருட்கள என்னால பராமரிக்கிற அளவுக்கு வலு இல்ல. ஆனா, இதையாவது என்னோடயே பத்திரப்படுத்தி வச்சிருக்கிறனே என்ற பெருமை இருக்கு” எனத் தொடர்ந்தவரின் வார்த்தைகளில், வயதின் இயலாமையும், அதையும் தாண்டி இயலுமையை வரவழைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.

அப்படியே தன்னுடைய ஓர் அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பழைய பொருட்களைக் காட்டுவதற்கு ஐயா நுழைந்தார்.

அது, ஆவணக் காப்பகம் ஒன்றின் பிரதான இயல்புகளைக் கொண்டிருக்கவில்லை தான். சிலந்திகளின் வசிப்பிடமாகியிருக்கும் வெண்கலப் பொருட்களில், ஒவ்வொன்றையும் அவர் தன் கையால் எடுத்து எங்களுக்கு காட்டும்போது, கூடவே அந்தப் பொருளோடு தொடர்புட்ட நினைவின் வரலாற்றையும் பேசிக்கொண்டார்.

“இந்தா, இந்த வெண்கலக் குத்துவிளக்கு, 3 சதத்துக்கு வாங்கினது. இதை வாங்கும்போது, எனக்கு 12 வயசு. அப்ப தான் ஜப்பான் ஆர்மிக்காரர், காங்கேசன்துறைக்குக் குண்டுபோட்டவங்கள். காப்பிலி (ஆபிரிக்க) இராணுவம், காரைநகருக்குள்ள வந்தது. இங்க இருந்த காரைநகர் துறைமுகம், அந்த நேரம் பிரபலமாக இருந்தது. அதனால, இதால தான் யாழ்ப்பாணத்துக்கு எல்லாச் சாமானுகளும் போகும். அப்பிடித்தான் இந்தப் பொருட்களும் குறைஞ்ச விலைக்கு வாங்குப்பட்டது அந்த நேரம். இது மட்டுமில்ல, தட்டுமுட்டுச் சாமானுகள், துணிமணிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலயிருந்து கொண்டு வந்த வடக்கன் மாடுகள் எல்லாமே, இந்தத் துறைமுகத்துக்குள்ளால தான் வரும். வடக்கன் மாடுகள், நல்லா வேலை செய்யும். காரைநகர் முழுவதுமே அப்ப ரெண்டு போக (நெல் விதைப்பு பருவ காலங்கள்) விதைப்புச் செய்வினம். மரக்கறி செய்வினம். இப்ப இதைச் சொன்னால் நம்புவியளே. காரைநகர் விவசாயத்தில சிறந்திருந்த காலம் அது” என, அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லிமுடித்த நடராஜா ஐயாவின் பேச்சில், அதிகளவில் வரலாற்றுச் செய்திகள் கலந்திருப்பதை, வாசிக்கும் நீங்கள் உணரக்கூடும்.

ஐயாவின் வீட்டில் இருக்கும் பொருட்கள் அத்தனையும், நூறாண்டுகள் கடந்தவை. கிடைத்தற்கரிய நூல்கள் பலவற்றை வைத்திருக்கிறார். குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் சுதேசிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நூல்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இன்னும் அதிகளவான நூல்கள், பார்வையிட வந்தோரால் அனுமதியின்றியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

பாவனைப் பொருட்கள் தொடக்கம் வீட்டின் சுவர் தொடக்கம், கதவுகள், யன்னல்கள் என அனைத்திலும், யாழ்ப்பாணத்துக்கே உரித்தான கட்டடவியல் பண்பாட்டுக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. வீடமைப்பில், யாழ்ப்பாண குறிப்பாக தீவகச் சூழலுக்கு எல்லாவிதத்திலும் பொருந்திவரும் நுட்பம், இயல்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், நடராஜா ஐயாவின் வீட்டை வடிவமைத்தவர், கட்டடவியலாளரோ, இயந்திரவியலாளரோ அல்லர். நடராஜா ஐயாவின் தந்தையார் கந்தப்புவும் அவர்தம் நண்பர்களும் தான். அவர்கள், மரபார்ந்த விவசாயிகள்.

தமிழர்களின் பண்பாட்டுக் கூடமாக இருந்திருக்கும் அந்த வீடு, இப்போது மிச்சம் பிடித்து வைத்திருப்பவற்றைப் பார்த்து நிமிர்கையில், “எப்பிடி இருக்கு?” என்ற கேள்வியைக் கேட்கிறார்.

பெரும் பிரமிப்பைத்தவிர வேறு, எதையும் நம்மால் வழங்க முடியாதுதானே? “இவ்வளவு செழிப்பையும் விடுத்து, ஏன் ஐயா மக்கள் இங்கயிருந்து வெளியேறியிருக்கினம்?” என்ற கேள்வி, எங்களிடம் மீதமிருந்தது.

“போர்” என்ற அவரின் ஒற்றைச் சொல் பதிலுக்குப் பின்னால், ஆயிரம் அர்த்தங்கள் விரவிக்கிடக்கின்றன. அதைத் தொடர்ந்தார்:

“இரண்டாம் உலகப் போர் காலத்தில, காப்பிலிகள் (ஆபிரிக்கர்கள்) வரத் தொடங்கினதிலயிருந்து, மக்கள் இங்கயிருந்து இடம்பெயரத் தொடங்கினவ. அந்த நேரம், எனக்குத் தெரிய 40,000 பேர் அளவில் இங்க இருந்திருப்பினம். அப்பிடிப் போன ஆக்கள் பதுளை, பண்டாரவளை, கொழும்பு என்று குடியேறிச்சினம். கடல் பாதையள் அதிகமா இருக்கும் தீவுக்காரர் ஆனபடியால், யாவாரம் நல்லா பிடிபட்டது. யாழ்ப்பாணத்தில இருந்து புகையிலை கொண்டு போய், தெற்குப் பக்கங்களில் கடையளப் போட்டு வளர்ந்தவ. பிறகு, வேற வேற பிஸ்னஸ்களுக்கு (வணிகங்கள்) மாறி, இப்ப காரைநகராக்கள் எண்டால், பிஸ்னஸ்காரர் என்ற பேரெடுத்துப்போட்டினம் எங்கட ஆக்கள். ஆனால் நாங்கள், பாரம்பரியமான விவசாயிகள். அந்தத் தொழிலிலதான் எங்கட தொடக்கமிருந்தது.

“பிறகு ஆர்மி – இயக்கச் சண்டையள் வந்தது. மிச்சமிருந்த சனமும் யாழ்ப்பாணம், கொழும்பு, வெளிநாடு என்று போய்த் தங்கிட்டுதுகள். இந்தப் பிரச்சினைக்குள்ள, இங்க இருந்து நான் போகேல்ல. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்திட்டன். என்னோட சேர்த்து, 900 பேர் இங்க தங்கினவ. பிறகு இங்க வீட்டுத் திறப்புகள கதவிலயே விட்டிற்று வெளிய போங்கோ, ஒரு கட்சிக்காரரிட்ட (கட்சியின் பெயரை, அவரின் பாதுகாப்புக் கருதிக் குறிப்பிடப்படவில்லை) நிர்வாகத்த நடத்தக் குடுக்கப்போறம் என்று கட்டளை வந்தது. நாங்களும் நம்பி வெளியேறினம். மூன்று, நான்கு நாள்கள் கழிச்சுப் போய் வந்து பார்த்தால், வீடுகளில இருந்த பெறுமதியான கனக்கச் சாமானுகள் களவு போயிருந்தன. கதவுகளத் திறந்தும் உடைச்சும், இருந்த பெறுமதியான பொருட்கள் எல்லாத்தையும் களவாடிக்கொண்டு போயிற்றாங்கள். சில வீடுகளில் தாய்லாந்து, சிங்கப்பூர்லயிருந்து கொண்டு வந்து பொருத்தியிருந்த கதவுகளக் கூட கழற்றிக்கொண்டு போட்டாங்கள்” என, அவரின் மூச்சிறைப்பு, களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதியையும் அந்தச் சம்பவத்தால் அவரடைந்த துயரத்தையும் எடுத்து விளக்கப்போதுமாயிருந்தது.

“சனம் வெளியேறினதுக்கு, தண்ணீரும் ஒரு காரணம். கிணறுகளில துலா போட்டு இறைச்சு, விவசாயம் செய்யும் வரைக்கும் குடிநீர்ப் பிரச்சினை வரேல்ல. குடிக்கவும் விவசாயத்துக்கும் அளவாத் தண்ணீரப் பாவிச்சம். நல்ல தண்ணீர், அப்பிடியே இருந்தது. என்றைக்கு எங்கட விவசாயிகள், பம்ப் (இயந்திரம்) போட்டுத் தண்ணீர் இறைக்கத் தொடங்கிச்சினமோ, அண்டையில இருந்து கடல் தண்ணீர், நல்ல தண்ணீரோட கலக்கத் தொடங்கீற்றுது. இப்ப, தண்ணீருக்காக போராடவேண்டியிருக்கு. மழை பெய்தால் மட்டும்தான் விவசாயம். ம்…”.

நீண்ட பெருமூச்சோடு, தன் உரையாடலை முடித்துக்கொண்ட கந்தப்பு நடராஜா ஐயாவிடம், காரைநகரின் ஒரு தொகுதி வரலாறே அடங்கியிருக்கிறது. அதை அங்கொன்றும் இங்கொன்றுமாகவேனும் அவர் நினைவில் வைத்திருக்கிறார். இந்த வாழும் முதுசொத்திடமிருந்து, கற்றுக்கொள்ளவும் மீள நிறுவவும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நாமும், அடுத்த தலைமுறையும் அறிந்துகொள்வதற்காகவாவது, இந்த மாதிரியானவர்களைப் பற்றிய பதிவுகள் அவசியப்படுகின்றது. அழிந்துவரும் தமிழினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, இந்த மாதிரியான மனிதர்களும் மிகச் சிறந்த தேடுபொறிகளாக இருக்கின்றனர் என்பதே, இந்த நுற்றாண்டின் அதிசயம்தான்.

http://www.sooddram.com/கட்டுரைகள்/அரசியல்-சமூக-ஆய்வு/காரைநகரில்-நடமாடும்-ஆவணக/

அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப் பயணம் - 1938

1 week 6 days ago

Image may contain: water and text           Image may contain: 4 people, people smiling, people standing, wedding and outdoor

 

Image may contain: one or more people and people sitting  Image may contain: ocean, sky, water and outdoor  Image may contain: one or more people

 

யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...?

கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது..  
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி  கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா 
சென்றது  தமிழனின் சாதனை எத்தகையது.

அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938

வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.

அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரி;க்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.

சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும்> பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது. 
தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று> இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது> உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்> “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள்> கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.

அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும்> பத்திரிகைகள்> சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.

“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி> கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று> அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள்> வல்வெட்டித்துறையிலும் அதனை அடு;த்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால்> செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை> பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”

அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.

அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.

அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.

பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம்> சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.

இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.

அமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக் கடல்வழிப் பயணம் சரித்திர பூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும்> அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்;மா> காக்கிநாடா> தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்....ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி> இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிரு;ககாதல்லவா....

ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்;கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?

ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்.

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30 – 1995 – 23 வருடங்கள்

2 weeks 6 days ago
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30 – 1995 – 23 வருடங்கள்
October 30, 2018


displace.jpg?resize=480%2C320

(ஒக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 23 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள்  மீள் பிரசுரம் செய்யப்படுகிறது)

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.
இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.  யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை. ஆனால் அன்று புரிந்தது.

குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இருபது ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்

நன்றி ‐  சாரல்

 

http://globaltamilnews.net/2018/101229/

 

இரணைமடு

3 weeks ago

 

https://m.youtube.com/watch?v=YRSa2XOThTM

 

இரணைமடு 

இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் நீர்ப்பாசன பிரிட்டிஸ் பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.

இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரௌன் ஈடுபட்டார். இவர் தற்போது கிளிநொச்சி நகரிலுள்ள ‘ரை’ ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த ‘ரை’ ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் எம்மக்களின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902ல் ஆகும்.

1920 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.

1977ல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.

இடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் இடதுகரையில் ஊட்டக்குளமான கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதனிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இப்பொழுது மீளவும் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு நடக்கின்றது.இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது. 1990 உடன் இது செயலிழந்தது. மீளவும் அது இயங்கவில்லை. இதனால் திருவையாறு இன்றும் வரண்டு கிடக்கின்றது.

வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன. திருவையாறு ஏற்றுப்பாசனத்தை நம்பிய 1004 ஏக்கர் நிலங்கள் வரண்டு வாடுகின்றன. இரணைமடு நீருக்காக காத்திருக்கின்றது. இந்த ஏற்றுப்பாசனம் நிகழுமாயின் திருவையாறு பெரும் விளைச்சல்மிகு நிலமாக மாறும்.

ஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.

நீர் அரசியல்.

இரணைமடு இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கத்துக்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து நீர் வருகிறது. ஆனால் இந்தக் குளத்தின் பாசனநீர் மற்றும் பயன்பாட்டு நீர் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்கிறது. 1912இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு இப்பொழுதுள்ள ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ஹெக்டர் நீர்ப்பரப்பளவைப் பெற்றுள்ளது. இந்தக் குளத்தில் இருந்தே கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் நெற்பயிரிடல் மேற் கொள்ளப்படுகிறது.

இந்த நீர்த்தேக்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்பகாமம் என்ற காட்டுப்பிரதேசத்தில்தான் விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் 1975 காலப்பகுதியில் இருந்துள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்தின் பெருஞ்சமரான ஜெயசிக்குறு நடவடிக்கையில் இந்தக் குளம் மட்டுமே படையினரால் கைப்பற்றப்படாமல் இருந்தது. இந்தக் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அணைக்கட்டின் வழியாகவே கிழக்கு வன்னிக்கும் மேற்கு வன்னிக்குமான பயணங்களும் தொடர்பும் நடந்தன. இந்த நீர்த்தேக்கத்தில்தான் 2002இல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் அவருடைய துணைவி அடேல் பாலசிங்கமும் விமானத்தில் வந்து இறங்கினர். பாலசிங்கம் தம்பதிகளை விடுதலைப்புலிகளின் தலைவரும் அவருடைய மனைவி மதிவதனியும் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் வரவேற்றனர். இந்த நீர்த்தேக்கத்தின் மேற்கே கிளிநொச்சி நகர் உள்ளது. கிழக்கே விடுதலைப்புலிகளின் விமான நிலையம் உள்ளது. இப்பொழுது இந்த விமான நிலையத்தைப் படையினர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துப் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்கள். போர் முடிந்த பிறகு இந்த நீர்த்தேக்கத்திற்கு இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ விஜயம் செய்திருந்தார். நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் உள்ள படைத்துறைத் தலைமையகத்தில் இலங்கையின் மந்திரிசபைக் கூட்டத்தை நடத்தினார். இலங்கையின் வரலாற்றில் வடக்கில் நடத்தப்பட்ட முதலாவது மந்திரிசபைக் கூட்டம் இதுவாகும்.

நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் இப்பொழுது இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான படைத்துறைச் செயலகம் உள்ளது. இதை அண்மித்த பகுதியில்தான் செஞ்சோலை சிறுவர் இல்லம் உள்ளது. முன்னர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் ஜெனனி என்ற மூத்த பெண் போராளியின் பொறுப்பில் இருந்த இந்த இல்லத்தை இப்பொழுது நிர்வகித்து வருபவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி என்ற குமரன் பத்மநாதன். இரணைமடுவுக்கு மேற்கே உள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும் பொறியியற் பீடமும். போரினால் பாதிக்கப்பட்டிருந்த கட்டடங்களை மீளப் புனரமைத்து புதிதாக மேலும் கட்டடங்களை உருவாக்கி வருகிறார்கள். இங்குள்ள கலாச்சார மையத்தை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்துக்கும் புனரமைப்புக்கும்கூட இந்திய அரசு உதவியிருக்கிறது. இரணைமடுவை ஆதாரமாகக் கொண்டே கிளிநொச்சியின் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத்தைச் செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பை கிளிநொச்சியில் உள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழ் பயிர் செய்யும் விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கான பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் இயங்குகிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் எதிர்ப்பு அலையை உருவாக்கி வருகிறார்கள். இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர்த் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு, வடமராட்சி, தீவகம், தென்மராட்சி, யாழ்ப்பாண நகர் போன்ற இடங்களில் நீர்ப்பிரச்சனை உண்டு. இங்கே நல்ல தண்ணீரைப் பெறுவதற்காகத் தலைமுறை தலைமுறையாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்குத் தீர்வுகாணும் நோக்கில் இரணைமடு நீர்த்தேக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை மட்டும் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிக்கடன் திட்டத்தின்கீழ் இரண்டு ஆயிரத்து முன்னூறு கோடி இலங்கை ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலும் வேண்டும். ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி முடிவடைகிறது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துத் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதாக எச்சரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் – இப்போதுள்ள நீர்த்தேக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அணைக்கட்டை மேலும் உயர்த்தி அதிகளவு நீரைத் தேக்குவதாகும். அப்படித் தேக்கப்படும் கூடுதலான நீரில் இருந்து 12 சதவீதம் நீரை மட்டுமே யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துவதாகும். விவசாயிகளின் எதிர்ப்புக்குக் காரணம் – விவசாயத்துக்கான பாசனத்துக்கு நீர் போதாமையாகிவிடும் என்ற அச்சம்.

நீர் மேலாண்மை அடிப்படையில் குடிநீரும் விவசாயத்துக்கான பாசன நீரும் உரியமுறையில் பகிரப்பட வேண்டும். இதுவே தேசிய நீர்ப்பங்கீட்டுக் கொள்கையாகும். அத்துடன் நீர்த்தேக்கத்தைப் புனரமைத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு நீரைத் தேக்கிய பின்னரே குடிநீர் பெறப்படும். இதில் விவசாயிகளின் நலன் 100 சதவீதம் பாதுகாக்கப்படும்.

ஆனால் இதை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தத்தம் நலன்சார்ந்து பெரும் விவகாரமாக்கி விட்டனர். தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்தை மாற்று ஏற்பாடாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித் துள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தைத் தனியாகப் புனரமைப்பது என்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடல்நீரை நன்னீராக மாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடல்நீரை நன்னீராக மாற்றுவது பற்றியே பேசப்பட்டதாகவும் இரணைமடு நீர்த்தேக்கத்தைப் புனரமைப்பதைப்பற்றிப் பேசப்பட்டபோது ஆசிய அபிவிருத்தி வங்கி அதற்கு இணங்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் இந்த நீர்த்தேக்கம் உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாசன நீர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்ப் பிரச்சனைகள் நீக்க இத்திட்டம் நிறைவேறுவது அவசியம். இத்திட்டம் விவசாயி களின் ஒப்புதலுடன் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது வடமாகாண அரசின் கையில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரமான இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வடமாகாண தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். மாகாண அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிடில் இலங்கை அரசு இரணைமடுவை கையகப்படுத்தி தேசிய நீர் மேலாண்மை கொள்கையின் அடிப்படையில் தீர்வுகாணும் சாத்தியம் உள்ளது. மாகாண அரசுகள் மேலும் பலவீனமடைந்து அதிகாரம் மைய அரசிடம் குவியவே இது வழிவகுக்கும்.

தொகுப்பு (FB)

Dr sivakumar  subramaniyam 

Engineering faculty 

Jaffna university

ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா

3 weeks 3 days ago
ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா…
October 26, 2018

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா தந்த வித்தியாசமானதொரு அனுபவம்.

  • MEMORY-WALK-3.jpg?resize=800%2C450

சிறிய சிறிய விடயங்கள்தான் அவை. இருந்தும் வாழ்க்கையை அவை எப்படி அர்த்தப்படுத்துகின்றன. சதா அந்த இடத்தைக் கடந்து செல்லுகிறோம். இருந்தும் அவை பற்றி நாம் வலுவாகச் சிந்திப்பதில்லை. அவை எப்படி சமூகத்தோடு ஒன்றிப் போயிருந்தன என்பது போன்ற விடயங்களில் நாம் அக்கறை கொள்வதுவுமில்லை. ஆனால் அவை ஒரு கல்விசார் விடயமாக முன்னெடுக்கப்படும்போது அவற்றின் பெறுமதிகள் உயர்ந்து கொள்ளுகின்றன. அப்படி யாழ்.மண்ணில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றிய விபரங்களை இவ்வாரம் உங்களுக்காகத் தருகிறோம்.

கடந்த ஓக்டோபர் மாதம் யாழ். மண்ணில் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக “ஞாபக நடை” என்னும் ஒரு நிகழ்சி நடைபெற்றது. அந்த நிகழ்வை ஒருங்கமைத்து நடத்தியவர் யாழ்.நுண்கலைத் துறையைின் தலைவர் கலாநிதி.தா.சனாதனன். ஈழ மண்ணில் நடைபெற்ற யுத்தத்திற்கு முன்னும் பின்னரும் திரை அரங்குகளோடு யாழ்ப்பாணச் சமூகத்திற்கு உண்டான நெருக்கமும் சமூகப் பெறுமதியும் என்ற தளத்தையொட்டிய விடயங்கள்  இந்த நடைபவனியிலே பேசப்பட்டது.

யாழ். வண்ணார் பண்ணைப் பகுதியில் கே.கே.எஸ் வீதிக்கு மேற்காக இருக்கின்ற   மனோகராத் திரையரங்கு முன்றிலிருந்து தொடங்கி வண்ணை சிவன் கோவில் முன்பாகச்  சென்று கன்னாதிட்டி வழியாக கஸ்தூரியார் வீதியில் உள்ள எஸ்.ரி.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராஜா தியேட்டர் பின்னர் அவ்விடத்தில் முன்பிருந்த பழைய வின்ஸர்,  பழைய வெலிங்டன் என்றும் தொடர்ந்து லிடோ   திரையரங்கு இருந்த கட்டத்தொகுதியைத்  தொடர்ந்து  ஸ்ரான்லி வீதிவழியாகச் சென்று அங்கு 1990 இல் தொடங்கி இன்றுவரை இயங்கும் ஒரு மினி சினிமாத் தியேட்டரைக் கடந்து   ஸ்ரீதர் சினிமா அரங்கத்தைப் பார்த்துப்  பின்னர் விக்டோரியாத் தெருவுக்கூடாக ச் சென்று மின்சார நிலைய வீதியில் காணப்பட்ட ராணித் தியேட்டரடியில் நின்று பேசிப்  பின்னர் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினூடாகச் சென்று செல்வாத் தியேட்டரைக்  (அது முன்பு சாந்தித் தியேட்டர்) கண்ட பின்னர் முற்றவெளி மையானத்திற்கு முன்பதாகக் காணப்பட்ட றீகல் திரையரங்குவரை நடை நீடித்தது. பழைய யாழ். மாநகர சபைக் கட்டடத்திலும் ஒரு சினமாத் திரையரங்கு இயங்கியிருக்கிறதென்ற விடயமும் அங்கு பேசப்பட்டது.

MEMORY-WALK-2.jpg?resize=800%2C450

பண்டைய காலத்தில் சினிமா பார்ப்பதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையிலிருந்த போது சமூக எல்லைகளை உடைக்கக் கூடிய சமூக ஒழுக்கம் அற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களே சினிமாவை அதிகம்  பார்க்கத் தொடங்கினர். சினிமா பார்ப்பது ஒரு ஒழுக்கக் குறைவான பழக்க வழக்கம் என்று கருதப்பட்ட காலத்தை த் தாண்டிப் பின்னர் ஒரளவு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதுவே நாளடைவில் ஒரு பாரிய பொழுது போக்கு ஊடகமாக மாறிக் கொண்டது. பின்னர் 1960 – 1970 களில்  அந்தச் சினிமா ஒரு சமூகப் பண்பாட்டுப் பெரு வெளிக்குள் நுழைந்து கொண்டது. அக்காலத்தில் திருமணம் செய்து கொண்ட பல புதுமணத் தம்பதிகள்  அவர்களுக்குரிய சடங்குகளோடு சினிமா பார்க்கச் செல்வதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்ததை  நாம் நினைவில் கொள்ளலாம்.  எனவே இத்தகைய பாரிய பின்னணியைக் கொண்ட விடயம்  தொடர்பாகக் கல்வியாளர்கள் பார்வை எப்படி இருக்கிறது, அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்றதையும், ஞாபக நடை பற்றியும்  அறிய கலாநிதி தா.சனாதனனை அணுகினோம்..

வணக்கம். ஞாபக நடை என்ற நிகழ்வை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்ன?அதுவும் யாழ்ப்பாணத் திரைப்பட விழாக்காலத்தில் அது நடைபெற்றிருக்கிறது. எனவே அதன் பின்னணி பற்றிச் சொல்வீர்களா? அதைப் பற்றி அறியப் பலர் ஆவலாக இருக்கிறார்கள்.

ஆம். யாழ்ப்பாணச் சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ். பல்கலைச் சமூகத்தினாலும் மற்றும் பல தனியார் முயற்சிகளாலும் அவ்வப்போது திரைப்பட விழாக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.பொதுவாகத் திரைப்படம் பற்றிப் பேசுகிறோம். அதன் வரலாறு பற்றி ஆய்வு செய்கிறோம்.அதை இயக்கியவர்கள் பற்றிக் கலந்துரையாடுகிறோம். அதன் ஆக்கமும் அதன் பின்னணி பற்றியும் விவாதிக்கிறோம். ஆனால் எப்பவுமே அதைப் பார்த்தவர்கள் பற்றிய அல்லது அதைக் காண்பித்தவர்கள் பற்றிய வரலாறு  ஒரு போதும் பேசப்படுவ தில்லை. ஆனால் படம் பார்த்தவர்கள் பற்றிய வரலாற்றைப் பேசாது சினமாவின் முழுவடிவத்தைப் பற்றிப் பேசமுடியாது என்றொரு நிலையுண்டு. யாழ்ப்பாணத்தில் சினமா ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக 1960 – 1970 களில் எப்படி உருவானது. பின்னர் அது ஒரு சமூகப் பண்பாட்டு நிகழ்வாக இருந்திருக்கிறது. திரைப்படம் பார்ப்பதென்ற  விடயத்தைப்  புறந்தள்ளிப் பார்க்க முடியாதவாறு அது  சமூக நடவடிக்கைகளோடு பின்னிப் பிணைந்து காணப்பட்டிருக்கிறது. தொடர்ந்து காணப்பட்ட யுத்தகால நடவடிக்கைகளில் பொருளாதாரத்தடை, மின்சாரமின்மை, சீரற்ற போக்குவரத்து,  அரசியல் போன்ற காரணங்களினால் சினமாவைக் கொண்டு வந்து காட்ட முடியாத நிலைமை ஏற்பட்ட காலகட்டத்தில் வேறு வடிவங்களுக் கூடாகச் சினமா நுகரப்பட்டிருக்கிறது. சினமா எமக்குள் இருப்பதற்குக் கடும் போரட்டத்தை செய்திருக்கிறது. அது போல நாமும்  சினமாவைப் பார்ப்பதற்குக் கடும் போரட்டத்தைச் செய்திருக்கிறோம். தமிழர் பண்பாட்டு வரலாற்றை மற்றும் போராட்ட வரலாற்றை ஒரு காட்டுமிராண்டித் தனமானதாகவும் ,  ஆயுதத்தைக் கையிலெடுத்த பண்பாட்டுத் தொடர்பில்லாத வெறும் நெருக்கடிக்குட்பட்டதாகக் காட்ட முற்படுகின்றனர் சிலர். ஆனால்  அதுக்குள்ளேயும்  பன்முகப்படுத்தப் பட்டதொரு  வாழ்க்கை இருந்திருக்கிறதென்றதையும் இந்த வரலாறு காட்டுகிறது. அதாவது சினமாவை பார்க்கின்ற விடயம் தொடர்பாக எமக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது என்றதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் எமக்கிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் நடைபெற்ற  காலங்களில் கலைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சிகளும் மாற்றுச் சினமாவுக்கான வெளியைத் திறக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளும் நடைபெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஒரு குறுகிய நகரத்துக்குள், சிறிய வட்டத்துக்குள்  அதுவும் ஒரே நேரத்தில் ஏறத்தாழப் பன்னிரண்டு திரையரங்குகள் இயங்கியிருக்கின்றன என்றவிடயம் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது. எனவே இத்தகைய சினமாத் தியேட்டர்களுக்கூடாக சினமாபார்த்த  வரலாற்றைப்  பேசுவதும் அத்தோடு அவைகள் இன்று காணப்படும் நிலைகளை வைத்து அவைகள் எப்படி வன்முறைக் காலங்களை எதிர்கொண்டன, கடந்து வந்தன  போன்ற விடயங்களைப் பேசுவதுமே எமது முக்கியமான நோக்கங்களாக இருந்தன.

MEMORY-WALK-6.jpg?resize=800%2C450

இந்த ஞாபக நடை என்ற நிகழ்வுக்கு முன்னரும் பின்பு அது நடைபெற்று முடிந்த பின்னரும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? சிறிய தொகையினரே  கலந்து கொண்டதாகக் கண்டேன். உங்கள் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா?

மிகவும் திருப்திகரமானதாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு குறிப்பிட்ட தொகையினரை உள்ளடக்க வேண்டும் என்பது எமது திட்டங்களில் ஒன்று. ஏனெனில் இதற்கு முன்பு நாம் நிகழ்த்திய நடைகளில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே இதனைத் திட்டமிட்டோம். நடை நடத்தப்பட வேண்டிய களச் சூழ்நிலையையும் அங்கு காணப்படுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அத்துடன் குறைந்த எண்ணிக்கையினருடன் பேசும்போது பல விடயங்களை அவதானிக்கலாம். சிறு வயதில் பஸ்ஸில் பயணித்துப் பார்த்த காலத்தில் பார்த்த விடயங்கள், பின்னர் வாகனத்தில் பயணித்துப் பார்க்கும் விடயங்கள் என்றதற்கு அப்பால் காலால் நடந்து அவற்றைப் பார்ப்பதென்ற விடயம் மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரவல்லது என்று கண்டு கொண்டேன். ஒரு குறுகிய வட்டத்திற்குள் இத்தனை விடயங்கள் நடைபெற்றிருக்கின்றனவா? என்று மூக்கில் விரலை வைத்தவர்கள் பலர். அத்துடன் இந்த சினமாத் திரையரங்குகள் பற்றிய கதைகள் தெரியும். ஆனால் அந்தக் கதைகளை அது நடைபெற்ற இடங்களுக்கு அருகில் நின்று பேசுவது ஒரு அலாதியான அனுபவம் என்றனர் பலர். இந்த நடையின்போது பலவிடயங்களைக் கடந்து சென்றோம். அவைகள் பற்றியும் அறியக் கூடிய சந்தர்பங்களை இந்த நடை பெற்றுத் தந்தது. நிகழ்வு நடைபெற்ற அந்த மூன்று நாட்களும் ஒரு வளவுக்குள் நடந்து விடயங்களைப் பார்ப்பது போன்ற ஞாபகங்கள். ஒரு யாத்திரைக்கு யாத்திரீர்களை அழைத்துச் செல்வதைப் போன்ற அனுபவங்கள் . நிகழ்வு நடைபெற்ற அந்த ரம்மியமான அதிகாலைப் பொழுது. அன்று காணப்பட்ட  மழைக்காலச்  சூழல். நிகழ்வில் கலந்து கொண்ட பல தரப்பட்ட மக்களின் (உள் நாடு மற்றும் சர்வதேசம்) ஆர்வம் – எனப் பலதரப்பட்டவைகளால் என் மனம் நிறைந்து கொண்டது. தொடர்ந்து ஒரே விடயமே பேசப்பட்டாலும் கலந்து கொண்டவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது புதுப் புது விடயங்கள் வெளிக் கொணரப்பட்டன. முடிவாகச் சொல்லப்போனால் இத்தகைய விடயங்கள் இப்படியான முறையிலேதான் பேசப்பட வேண்டும். நான் எண்ணிக் கொண்ட விடயங்களைவிட அந்தந்த இடங்களுக்கு முன்பாகச் சென்று நின்றபோது பல ஞாபகங்கள்  மீள் நினைவுக்குட்பட்டது. பல விடயங்கள் புதிதாக முளைவிட்டன. அவற்றைப் பற்றியும் பேசினோம். கதைத் தோம். பகிர்ந்து கொண்டோம். ஒரு திருப்திகரமான செயற்பாடு என்கிறார் கலாநிதி தா. சனாதனன்.

இந்த நடையில் நானும் கலந்து கொண்டேன்.சிறு வயதில் கெஞ்சிக் கூத்தாடி மன்றாடி விடுமுறையின்போது பெரியவர்கள் கூடச் சென்று இடைவேளையின்போது  ஒரு கையில் வல்வெட்டித்துறை பேபி மார்க் சோடாவும் மற்றக் கையில்  கடுதாசிப்பையில் கோதுக்கடலையோடு நெஞ்சிலோர் ஆலயம், திருவிளையாடல், தெய்வம், ஆயிரத்தில் ஒருவன்  எனச் சில படங்கள் பார்த்த பால்யப் பருவத்தை இரைமீட்டுக் கொண்டேன்.நினைவில் வாழ்வதில் நாம் காணும் இன்பமும்,  அனுபவமும்  அலாதியானது.

MEMORY-WALK-1.jpg?resize=800%2C450

MEMORY-WALK-4.jpg?resize=800%2C450

 

http://globaltamilnews.net/2018/100661/

 

மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு

4 weeks ago
மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு
_17143_1540155023_vvvvvvvvvvvvvvvc.jpg

"ரகு இல்லையெண்டதால வாறத நிப்பாட்டியிடாதீங்க: எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல்  விட்டிடாதீங்க"  - வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது  தாயார் பூரணலட்சுமி அழுகையினோ டே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் "இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப்போங்க" என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர்.குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார்.   ஓரிரு நாட்களில் ரகு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டான். அவனுக்கு பிரதிஸ் எனப்பெயர் சூட்டப்பட்டது.
பயிற்சி முகாமில் ஒருவருக்கு சுகவீனம். அந்தக்காலத்தில் இயக்கத்திற்கு  மருத்துவப்பிரிவு என ஒன்றிருக்கவில்லை. எந்த நோய் வந்தாலும் அரச மருத்துவ மனையிலேயே சிகிச்சைபெறவேண்டும். சுகவீனமுற்றவனைக்  கூட்டிக்கொண்டு 09.09.1985அன்று  ரகு மட்டக்களப்புக்கு வந்தான். அந்தக்கால கட்டத்தில் குறிப்பிட்ட வயது   இளைஞர்களைக் கண்டாலே படையினருக்கு கைது செய்ய வேண்டும் போலிருக்கும்.  அதேநடைமுறையை இவர்களிலும் செயற்படுத்த முயன்றனர்.தப்ப முடியாத நிலையில் இவர்கள் இருவரும் சயனைட் உட்கொண்டனர். இவர்களின் சடலங்களைப்  படையினரே தீ மூட்டி எரித்தனர். ஓரிரு தினங்களின் பின்னரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்  பிரதிஸ் (சின்னத்துரை ரகு ) பிரியன்  (தம்பிப்பிள்ளை நவரட்னராஜா) என அறிய வந்தது. இருவரின்  வீட்டிலும் மரணஓலம் , ஆரையம்பதிக் கிராமத்தில் கணிசமானோர் இருவரின்வீட்டிலும் குழுமியிருந்தனர்.
எப்படியும் இவர்களின்  வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். அதுவும் தனது கையில் ரகுவைப்பிடித்துக் கையளித்த அன் ரிஎன்றைழைக்கப்படும்  திருமதி பூரணலட்சுமியைச் சந்திக்க வேண்டும்; இவ்வாறு தீர்மானித்த அந்தப் போராளி மாலையாகும்வரை காத்திருந்து விட்டு அங்கு சென்றார். "உங்கட கையிலதானே  அவனைப் பிடிச்சுத்தந்தன்; துலைச்சுப்போட்டு வாறீங்களே"எனக் கேட்பாரே   அன்ரி என நினைத்தவாறேதான் அந்த வளவுக்குள் அவர் காலடி எடுத்து வைத்தார். அவ்  வேளையிலேயே தொடர்ந்தும்  தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற  வேண்டுகோள் விடுத்தார் அன்ரி. அதிர்ந்துதான் போனார் அப்போராளி . சாதாரணமாக ஒரு அன்னையின் வாயிலிருந்து வரவேண்டிய அழுகையும் சோகமும்  வேறுவிதமான  வேண்டுகோளுடன் ஒலிக்கிறதே என வியந்தார். அந்தப் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டோரில்இருவரும் பயிற்சியை முழுமையாக பெற்றும் களம் காணாமல் போய்ச் சேர்ந்தனர்.
                                      ***
உள்ளுணர்வுகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். முல்லைத்தீவு  கேப்பாபுலவுப்  பகுதியில் ஒரு போராளியின் குடும்பத்தினர் தங்கள் வீதியூடாக வீரச்சா வெய்தியோரின் வித்துடல்கள் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்துக்குக்  கொண்டு செல்கையில் மலர்தூவி   வணக்கம் செலுத்துவது வழமை. ஒரு நாள் வித்துடல் தாங்கிய வாகனம் இவர்களின்  வீட்டருகில்  வரும்போது பழுதடைந்து விட்டது. யாருடைய பிள்ளையென்றாலும் தங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து கண்ணீர் மல்க உணர்பூர்வமாக வழியனுப்பி வைப்பதை களத்தில் நின்று பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.இந்த வாகனம் திருத்தப்பட்டு வித்துடல் கொண்டு செல்லப்படும்வரை இக் குடும்பத்தினர் அங்கேயே நின்றனர்.பின்னர் துயிலுமில்லத்தில் விதைத்தாயிற்று வித்துடல் .
அந்த மாவீரர் யாரென இனங்காணமுடியாத நிலையிலேயே துயிலுமில்லத்துக்குக்  கொண்டுசெல்லப்பட்டது.
மும்முரமாக யுத்தம் நடைபெறும் சமயங்களில் காயமடைந்தோர் களத்திலிருந்து அகற்றப்படுவர். அவர்கள் சிகிச்சைபெறும்போதும்  வீரச்சாவு அடைவதுண்டு. களத்தில் வீரச்சாவடைவோர் சிலர் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருப்பர்.அதனால் உறுதிப்படுத்த தாமதமாகும். சரியாக உறுதிப்படுத்தத்  தாமதமாகுமெனில் (நாட்கணக்கில்) வித்துடல்கள் பழுதாகக்கூடும் .என்வே சூழ்நிலைக்கு ஏற்றவாறு.முடிவெடுக்க நேரும். ஒரு நாள் காயமடைந்த, வீரச்சாவு வடைந்த  சிலரின் இலக்கத்தகடுகள் இணைத்த நூல்களை ஒருவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு வந்த போது நிகழ்ந்த தாக்குதலில் வீரச்சாவடைந்துவிட்டார்.  கழுத்தில் அவரதும் இலக்கத்தகடும் தொங்கியது. இவரது இலக்கமென்ன? யார்யார் காயமடைந்தனர்.?வீரச்சாவு அடைந்தனர் ? என ஆராய்ந்து முடிப்பதற்கு சம்பந்தப்படடோர் பட்ட பாடு     கொஞ்சநஞ்ச மல்ல.    அதைப்போலவேதான் கேப்பாபுலவில் பழுதடைந்த .      வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டவரின் வித்துடல் அங்கு மலர் வணக்கம் செலுத்திய குடும்பத்தைச்  சேர்ந்தவர் என்றுஅவர்களுக்குப் பின்னரே தெரியவந்தது. "எங்கட பூவையும் கண்ணீரையும் பாக்க   வேணுமெண்டுதானோ அவன்ர ஆன்மா வாகனத்தைப் பழுதாக்கினது“என்று அந்த மாவீரரின் குடும்பத்தினர் இந்த ஏற்பாடுகளைச் செய்தவரிடம் கேட்ட போது அவர் அதிர்ந்து தான் போனார்.
அது போலத்தான் அன்ரி ரகுவின் சம்பவம் நடந்த நாள் மட்டக்களப்பு நகரில்த்தான் நின்றார். வாகனத்தில் இருவரது உடல்களும் கொண்டு செல்லப்பட்ட போது  தூர நின்று பார்த்தார்."ஒரு புள்ள பச்சைச் சாறன் உடுத்திருந்தது;ஆர் பெத்த  பிள்ளைகளோ?“ என்று அன்று முழுவதும் அங்கலாய்த்த படி இருந்தார். அந்தச் பச்சைச் சாரம் உடுத்த மகன் அவர் பெற்ற பிள்ளை  என்று தெரியாமல் போயிற்று. அமிர்தகழியில் கொண்டுபோய் எரித்தார்கள்  என்ற தகவல்தான் அவருக்கு மேலதிகமாகக் கிடைத்தது.
ரகு மறைவதற்கு முதல்நாள்அவனது   சகோதரி ஒருவர்  "அவனைப் பாக்கவேணும்போல கிடக்கு; எங்கே யெண்டு சொல்லுங்கோ; நான் அங்க போய்ப் பாக்கிறன்"  என்று கேட்டார். "பயிற்சி முடியாமல்அவனைஅனுப்பேலாது. முடிஞ்ச பிறகு வருவான்"என்று தான் அவனை அழைத்துச் சென்ற போராளியால் சொல்லமுடிந்தது. எனினும் ஆளே முடிந்தபின்னும் அவனைப் பார்க்க முடியாமல் போய்விட்டது அந்தச் சகோதரிக்கு .எப்படியோ நம்புபவர்கள் அது உள்ளுணர்வுதான் என்பர்.    
                                   ***
போராளிகளை உபசரிப்பது முதலான பணிகளைச் செய்து வந்த அன்ரி மகனின்  இழப்புடன் சோர்ந்து போகவில்லை. அதன் பின்னர்  மேலும்  வீ ச்சுடன் தனது பணிகளைத் தொடர்ந்தார். குறிப்பாக அன்னை பூபதியின் உண்ணாவிரத காலத்தில் அவர் முழு மூச்சுடன் செயல்பட்டார். இந்திய இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டும் பணியில்  தீவிரமாகக் பணியாற்றினார்.இந்திய இராணுவத்தால் கைதாகித்  தடுத்து வைக்கப்பட்டிருந்தோரைப் பார்வையிட்டதுடன் அவர்களின் நலனுக்காக இயன்றவரைஉழைத்தார். இதனைச்  சகிப்பார்களா ஒட்டுக்குழுவினர். மட்டக்களப்பை விட்டு ஓடுவதற்கு சில நாட்களுக்கு முன் இவரைப்பிடித்து பழுக்கக் காய்ச்சிய   கம்பியால் கையில் சுட்டனர் .  அந்தக் காயம் ஆறமுன்னரே இந்தியப்படையுடன் இணைந்து செயற்பட்டோர் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட்டனர்.தடுப்பிலிருந்த போராளிகள் விடுதலையாகினர். அவர்களின் விடுதலைக்காக திருக்கேதீஸ்வரத்துக்கு நேர்த்தி வைத்த அன்ரி. அதனை நிறைவேற்ற அங்கு சென்றார். கம்பியால் சூடு வைக்கப்பட்ட கையில் பிரசாதத்தைப் ஏந்தியபடி யாழ்பாணத்திலிருந்த போராளிகளையும் சந்திக்கச் சென்றார்.மட்டக்களப்பில் புலிகளிடம் கைதாகியிருந்த ஏனைய இயக்கத்தவரை விடுவிக்குமாறு வேண்டினார்.தாய்மை என்பது எல்லாப்பிள்ளைகளையும் ஒரேமாதிரித்தானே பார்க்கும்." இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண  நன்னயம் செய்துவிடல்" என்ற குறளுக்கு இலக்கணமாக அவரது வேண்டுகோள் இருந்தது.ஆனால் அவர்கள் திருந்தினார்களா ?
                                     ***

1990ல் இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கியதும் அந்த ஆயுதக்குழுக்கள் இன்னும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கின.பல்வேறு சுற்றிவளைப்புக்கள், விசாரணைகளில் படையினருக்கு உதவின. இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து ஒரு அணி மட்டக்களப்பு நிலைமைகளைப்  பார்வையிடப்   பெரும்பாலும் நடையிலேயே போய்ச்சேர்ந்தது. இதனைச் கேள்வியுற்றதும் அவர்களைச் சந்திக்க அன்ரி விரும்பினார். அக்காலகட்டத்தில் ஆரையம்பதியிலிருந்து படுவான்கரைக்கு  தோணியில்  எவரும் போகமுடியாதென  டெலோ தடை விதித்திருந்தது. அந்தத்தடையை அன்ரி பொருப்படுத்தவில்லை.ஒரு தோணிக்காரரும் அன்ரிக் கு உதவினார். எனினும் முதல் நாளே வடக்கிலிருந்து வந்த அணி திரும்பிச் சென்றுவிட்டதும்  "ஆனால் என்னநீங்களும் எங்கள் பிள்ளைகள் தானே?“  என்று கூறி அங்கிருந்த போராளிகளிடம் தான் கொண்டுவந்த பலகாரங்களைக் கையளித்துவிட்டு புறப்பட்டார்அன்ரி . இறுதியில் அந்தப் பயணமே அன்ரி யின் வாழ்நாளை முடிக்கும் வகையில் அமைந்திருந்தது. டெலோவின் அன்றைய மட்டக்களப்புப் பொறுப்பாளர் ஜனா (கோவிந்தன் கருணாகரன்)  தமது தடையை மீறியமைக்காக அன்ரிக்கு    மரணதண்டனை விதித்தார் . அதனை நிறைவேற்ற  22.10.1990 அன்று கிழவி ரவி ,வெள்ளை , ராபட்  ஆகியோர் அன்ரி யின் வீட்டுக்கு வந்தனர். தன்னை இழுத்த டெலோவினருடன் இழுபறிப்பட்டார் அன்ரி. கைகளால் தாக்கினார்.எனினும் தமது தளபதி ஜனாவின் கட்டளையை நிறைவேற்றினர் டெலோ உறுப்பினர்கள்.
மேலும் பலர் அந்தக் காலத்தில்  ஆரையம்பதியில் கொல்லப்பட்டனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வணிகரான தம்பிராஜா , அவரது மகனான வங்கிப் பணியாளர் குருகுலசிங்கம், மகளான திருமதி மலர் ஆகியோரைக் கொன்று தீர்த்தது டெலோ.கர்ப்பிணிப்பெண்ணான மலரைச் சுடும்போது  "வயித்துக்குள்ள என்ன புலிக்குட்டியா இருக்கு ?“ எனக் கேட்டுவிட்டே சுட்டார் ஜனாவின் தம்பி. டெலோ மாமா என்றழைக்கப்படும்  கோவிந்தன் கருணாநிதி.
கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற போராளியை 19.04.1988 அன்றுசெட்டிபாளையத்தில் வைத்து வெட்டிக் கொன்றார் ஜனா. உச்சக் கட்டமாக விஜி என்ற உயர்தர தர வகுப்பு மாணவியைக் கூட்டுப்பாலியல் வன்முறைறைக்குள்ளாக்கி விட்டு  கொலை செய்து ஆற்றில் வீசினர். இவரது சடலத்தை வழங்குவதென்றால் அனுஷ்யா நல்லதம்பி என்ற இந்த யுவதி ஒரு பயங்கர வாதியென்று கையெழுத்திட வேண்டுமென அதிகாரத்தரப்பு உத்தரவிட்டது. இந்தப் பாதகங்களைச்  செய்த  அன்வர், வெள்ளை , ராபட்  ஆகியோருக்குப் புலிகள் சாவொறுப்பு த்தண்டனை  வழங்கினர்.  ஜனாவின் தம்பி டெலோ மாமா  லண்டனில் 30.10.2017 அன்று  பார்வை இழந்த நிலையில் மரணமடைந்தார்.
.ஜனாவும் , ராமும் இப்போதும் உள்ளனர். புலிகளால் தண்டனை  வழங்கப்பட்ட  அன்வர், வெள்ளை, ராபட்  போன்றோருக்கும்   பொது நினைவுத் தூபியொன்றைத் அமைக்கவேண்டுமென சிவாஜிலிங்கம் தலை கீழாக நிற்கிறார். டக்ளஸ் கட்சியினரும் இதற்கு ஒத்துழைக்கின்றனர். குமரப்பா,புலேந்திரனுக்கு அஞ்சலி   செலுத்துவோர் மட்டக்களப்பில் பாதகங்களைப்  புரிந்த அனைவரையும் நினைவு கூர  வேண்டுமென்பது சிவாஜிலிங்கத்தின் கனவு .
அனுமதிப்பார்களா பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை  நகர மக்கள் ?
சிவாஜிலிங்கம் , ஜனா போன்றோரை மீண்டும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க தமிழினம் தாயாராக உள்ளதா ?

 

http://www.battinaatham.net/description.php?art=17143

ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு.

4 weeks ago
image_b1db135ba3-720x450.jpg ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு.

மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான்.

திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார்.

VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.

மூதூர், மத்திய கல்லூரி தேசிய பாடசாலை 500 வருடங்கள் பழமையான வரலாறு கூறும் இடத்தில், அமைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒல்லாந்தர்-காலத்து-நாணயம/

"போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம்" சிறப்புரை, மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி, பிரபாகரன் லிசாகரி

1 month ago

"போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம்" சிறப்புரை, மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி, பிரபாகரன் லிசாகரி

 

 

 

1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும்

1 month 1 week ago
1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும் -:

October 11, 2018

 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

IPKF1.png?resize=800%2C450

இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஈழத்து விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்திய தன்னலமாக செயற்பட்டது என்பதற்கும் இனப்பிரச்சினைக்கு உகந்த முறையில் தீர்வு காணத் தவறியது என்பதற்கும் 1987இல் நடைபெற்ற பவான் இராணுவ நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணமாக நினைவுகூறத்தக்கது. இந்திய அரசு தன் நலன்களுக்கு ஏற்பவும் ஈழம் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு மாறாகவும் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் காய்களை நகர்த்தி வருவதுடன் வடக்கில் ஆதிக்கம் கொள்வதை அன்று முதல் செயற்படுத்தியுள்ளது என்பதற்கும் இது உதாரணம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தம் என்ற யாப்புத் திருத்தம் 1987 இலங்கை இந்திய உடன்படிக்கை பிரகாரம் கொண்டுவரப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் முகமாக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் குறித்த திருத்தம் குறைந்த அளவிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறெனினும் இலங்கையில் நிலவும் இன அழிப்பு மற்றும் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலோ, தமிழ் மக்களின் தனித்துவமான ஆட்சிமுறை குறித்த கோரிக்கையோ உள்ளடக்கப்படாமையினால் குறித்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர். இதனால் தமிழ் மக்களும் இதில் நம்பிக்கை இழந்தனர்.

இன முரண்பாட்டை, போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டிய நிலையில் பலவந்தமாக தீர்வொன்றை திணித்து, அதனை நடைமுறைப்படுத்த போரை இந்தியா தேர்வு செய்தது. ஜூலை 29ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒப்பந்தம் நடந்தது. சில மாதங்களிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. மிகப் பெரிய அளவில் இந்தியப் படைகள் பவான்இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரைத் தொடங்கிய நாளே இன்றாகும். இந்தப் போர் நடவடிக்கையே இலங்கை, இந்திய, ஈழவிடுதலை மட்டங்களில் பெரும் தாக்கங்களை பிற்காலத்தில் உருவாக்கும் வகையிலும் அமைந்தது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தவும் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கவும் விடுதலைப் புலிகளிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றவுமே இந்தப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்திய அரசின் அறிவித்தலின்படி, அரசியல் தீர்மானத்தின்படி இப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் சண்டை மூண்டது.

IPKF2.png?zoom=3&resize=324%2C223

அத்துடன் விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பன் முனைகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று வாரமாக நடந்த சண்டையின் பின்னர் யாழ் குடாநாட்டை இந்தியப் படைகள் கைப்பற்றின. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ் குடா நாட்டைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் 3 ஆண்டுகள் போரிட்டது. முடியாத நிலையில் அமைதி காக்க வந்ததாக கூறிய இந்திய இராணுவம் போர் செய்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. அமைதிப்படைகளின் முகத்திரை கிழிந்த நாட்கள் இவை.

யாழ்ப்பாணமே போர்க்கோலம் பூண்டது. இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இந் நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து விடுதலைப் புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன.

இந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (MARCOS) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன. அக்டோபர் 21 1987 சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர். இந்தப் போர் நடவடிக்கையில் இந்தியப் படைகள் 600பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டன.

இந்திய இராணுவத்தினர் தமிழ்ப் பொதுமக்களை கண்ட கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். இலங்கை வரலாற்றில் பல்வேறு ஊரடங்குச் சட்டங்களால் இருண்ட வாழ்வில் தவித்த ஈழத் தமிழ் மக்களை மிக நீண்ட நாட்கள் ஊரடங்கில் தள்ளியவர்கள் இந்தியப் படைகளே. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் 35 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினர். ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வந்த அனைத்து தமிழ் மக்களும் இந்தியப் படைகளால் சுட்டுக்கொன்றழிக்கப்பட்டனர்.

image-3.png?resize=500%2C328

வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியதை அடுத்து 1987 ஜூன் மாதம் வடமராட்சியில் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து செக்மேட் இராணுவ நடவடிக்கையை மேற் கொண்ட இந்தியப் படைகள் முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற பவான்இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் பொதுஇடங்களில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

யாழ் மருத்துவமனை, வீடுகள், சந்திகள் எனப் பல இடங்களிலும் இந்திய இராணுவம் புகுந்து கோரத்தாண்டவம் ஆடியது. அக்டோபர் மாதமே இந்தியப் படைகளின் கோரத் தாண்டவங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த மாதமாக அக்டோபர் மாதம் ஆக்கப்பட்டது. அமைதி வரும், தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களுக்கு போரும், கொலைகளும் அழிப்பும், பதுங்குகுழி வாழ்வும் பரிதவிப்பும் வழங்கப்பட்டன.

இலங்கை அரசு தமிழரை அழிக்கிறது என்று போராடி நிலையில் தீர்வு காண வந்ததாக சொன்னவர்களே யுத்தம் செய்த கொடிய நாட்கள். அமைதியை ஏற்படுத்த வந்ததாக சொன்னவர்களே தமிழர்களை அழித்தனர். இலங்கை அரசின் போர் வெறி எண்ணங்களையும் இன அழிப்பு கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தின இந்தியப் படைகள் . தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் மிகவும் சீண்டிய பவான் நடவடிக்கை இந்தியப் படைகளுக்கு, அரசுக்கு எதிராக தமிழர்களை திரளச் செய்தது. வரலாற்றில் மிகவும் தவறான அரசியல் முடிவுகளினால் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கைமுள்ளிவாய்க்கால் என்ற கூட்டு இனப்படுகொலைக்கும் வித்திட்டது எனலாம்.

image-Copy.png?resize=424%2C311image-4-Copy.png?zoom=3&resize=335%2C172

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

http://globaltamilnews.net/2018/99015/

இயக்க வாழ்வில் எனது மலையக அனுபவங்கள் - பஷீர் சேகு தாவூத்

1 month 1 week ago
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்பு 1985 இன் இறுதிக் காலாண்டில் ஒரு நாள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகப் பரமேஸ்வரா சந்தியில் அமைந்திருந்த முடி திருத்தும் கடையில் எனது தலை மயிரின் வழமையான வடிவத்தை மாற்றியமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஒரு முக்கிய வேலைக்காக பேரூந்தில் போகவேண்டி இயக்கத்தால் பணிக்கப்பட்டிருந்தேன். இக்காலத்தில் நான் ஹுசைன் என்ற பெயரில் ஒரு தேசிய அடையாள அட்டை வைத்திருந்தேன். பஷீர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டை பாவிக்காமையால் கிடைக்கும் பாதுகாப்பு முக அடையாளயாத்தால் பறி போய்விடக் கூடாது என்ற அக்கறையில் எனது முடி திருத்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
 
அப்பிரயாணத்தின் போது என்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்கச் செய்யப்பட்ட எளிய முயற்சியை அந்தத் தொழிலாளர் முடித்த அடுத்த நாள் காலை நான் ஹற்றன், மல்லியப்பூ பஜார் நோக்கிப் புறப்பட்டேன்.
 
மல்லியப்பூ பஜாரில் உள்ள கோயில் ஒன்றில் பாலநடராச ஐயர் என்ற இயற் பெயரைக் கொண்ட, இளையவன் என்ற பெயரில் எழுத்தாளராக அறியப்பட்ட உரும்பராயைச் சேர்ந்த தோழர் சின்ன பாலாவின் மாமா "குருக்களாக" பணியில் இருந்தார். அவரோடு கோயில் அறை ஒன்றில் இயக்கப் பணிகளின் நிமித்தம் சின்ன பாலா தங்கியிருந்தார். இவரோடு இணைந்து செயலாற்றுவதற்காகவே நான் அங்கு சென்றேன். வழியில் எந்தத் தடங்கலும் இன்றிப் போய் பாலாவுடன் இணைந்துகொண்டேன். இரவு வேளைகளில் அவருடனேயே தங்கிக்கொண்டு பகலில் இயக்க வேலைகளில் இருவருமாக ஈடுபட்டோம்.
 
சில நாட்களில் பாலா, உணவகம் ஒன்றில் கோழிக் கறி சாப்பிடுவதை அவரது ஐயர் மாமா கண்டு விட்டார். அன்றிலிருந்து கோயில் வளவுக்குள் எங்களது கால் படுவதற்கு மட்டுமல்ல, எம்மில் உராய்ந்து செல்லும் குளிர் காற்றுக்கூட கோயிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. பாலாவின் மிகக் கடுமையான போக்குக் கொண்ட ஐயர் மாமாவினால் உடுப்புப் பைகள் கோயில் எல்லைக்கு அப்பால் கொண்டு வந்து அழுகி முடை நாற்றமெடுக்கும் இறந்த ஏதோ பறவைகளை எறிவது போல தரப்பட்டது. அதுதான் முதன் முதலில் தான் சாப்பிட்ட 'மச்சம்' என்றும், இதற்கு முன்னர் சாப்பிட்டதே இல்லை என்றும், மாமா துரத்தினாலும் பரவாயில்லை கோழிக் கறி மிகவும் சுவையாக இருந்தது என்றும் பின்னொரு நாளில் நாமிருவரும் மட்டக்களப்பில் மலையக நினைவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது பாலா நகைச்சுவையாகக் கூறினார்.
2
1986 இல் மீண்டும் மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களுக்காகவும், இயக்கம் தொடர்பாக மலையகத் தமிழ் இளைஞர்களுக்குள் பிரச்சாரங்களை மேற்கொண்டு அணிதிரட்டுவதற்காகவும் மலையகத்துக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது.
 
இம்முறை நுவரெலிவை இலக்கு வைத்த பயணத்துக்குத் தயாரானேன். 1977 இல் மலையகத்து தமிழர்களை இலக்கு வைத்து கலவரம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட தாக்குதல்களினாலும், கொள்ளையினாலும் பாதிக்கப்பட்டு செங்கலடிக்கு வந்தார் சிவா. இவர் அங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள கடைத் தொகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து " லவினி மெடிக்கல்" என்ற பெயரில் ஒரு பார்மஸியைத் திறந்து வியாரம் செய்து வந்தார்.இவருடன் அப்பிரதேச ஈரோஸ் போராளிகள் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தனர். இந்த நட்பு வட்டத்துக்குள் நானும் ஒருவனாயிருந்தேன். எங்கள் கருத்துக்களை உள்வாங்கிய சிவா எந்த இழப்புக்கும் தயாரான உறுதி படைத்த ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளரானார். இவரது கடையின் முன்னால் மறைந்த தியாகத் தோழர்கள் ரமேஷ், வேணு, மனோகரன் மற்றும் இன்னும் மறையாத நான் ஆகியோர் பிரதான வீதியின் இரு புறத்தையும் திரும்பிப பார்த்த வண்ணம் கதைகள் பேசிக் கழித்திருப்போம். ஏதாவது பாதுகாப்புத் தரப்பு வண்டிகள் வந்தால் மெல்ல லவினி மெடிக்கலுக்குள் புகுந்து பின்னால் வேலிகள் பாய்ந்து ஒடி பிள்ளையார் கோயிலுக்குள் தஞ்சமடைந்துவிடுவோம். இவ்வாறான தருணங்களில் கடை முதலாளிக்கு ஆபத்துகள் நிகழும் என்றெண்ணி ஒரு போதும் எம்மைக் கண்டு சிவா முகம் சுழித்தது கிடையாது. ஈரோஸ் மலையகத் தமிழர்களின் விடுதலை பற்றி முதன்மையான அக்கறையைக் கொண்ட அமைப்பு என்பதை சிவா முழுமையாகப் புரிந்திருந்ததே அவரது திடகாத்திரமான ஆதரவுக்குக் காரணமாகும்.
 
சிரேஷ்ட மலையகத் தோழர் கணேஷ் 1984 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏறாவூரில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 'தூக்கப்பட்டு' இக்கினியாகலைக்குக் கொண்டு செல்லப்படார். அங்கு சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு, பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். கணேஷ் தளத்தில் இன்மையால் நான் மலையகத்துக்கு மீண்டும் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
 
நுவரெலியா செல்வதற்கு லவினி சிவாவிடம் உதவி கோரினோம். மனமுவந்த அவர் என்னையும் தோழி சுகிர்தாவையும் தொடரூந்தில் கண்டிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பேரூந்தில் நுவரெலியா கொண்டு சேர்த்தார்.
 
தோழி சுகிர்தா அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரியாவார். அந்தக் காலத்தில் பல்கலைக் கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியவுடன் வேலை வாய்ப்புக் காத்திருக்கும். அதுவும் விஞ்ஞானப் பட்டதாரி என்றால் வெளியேறும் போதே வாயிலில் வந்து நின்று வாய்ப்புகள் அரவணைத்து வரவேற்கும். அனைத்து வாய்ப்புகளையும் உதறிவிட்டு ஈழப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சுகிர்தா, பெரும் மனிதாபிமானியும், கொள்கைப் பற்றுள்ளவரும், புத்திஜீவியுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஒரு துணிகரமான பெண்ணாகும்.
 
நாம் மூவரும் தொடரூந்தில் கண்டியை நோக்கிச் செல்கையில் மன்னம்பிட்டியில் தரித்த வண்டிக்குள் அதிரடிப் படையினர் சோதனைக்காக ஏறினர். விசிலையும், புகையையும் ஊதிய தொடரூந்து நகரத் தொடங்கியது. சுகிர்தா அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்தில் இடமிருந்த போதும் வெவ்வேறு இடங்களில் அமர்வது பாதுகாப்பாக இருக்குமென்று கருதிய நாங்கள் வெவ்வேறாக அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் போல அமர்ந்திருந்தோம்.சிவா மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் நாமிருவரும் கவனமாக இருந்தோம்.
 
அதிரடிப் படையினரோடு முகமூடி அணிந்த "காட்டிக் கொடுக்கும்" நபரொருவரும் வந்ததைக் கண்ட சுகிர்தா கண்ணைக் காட்டி என்னைத் தன்னருகே அழைத்தார். சுகிர்தாவை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் முகமூடி அணிந்தவரைக் கண்ணுற்றதும் என்னை முகமூடி அடையாளம் காணக்கூடும் என்று பயந்துதான் ஒரு திடீர் திட்டத்தோடு என்னைத் தன்னருகே வருமாறு சுகிர்தா அழைத்தார் என்பதை அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை. அருகில் சென்ற என்னிடம் " நீங்கள் எனது மடியினுள் முகத்தைப் புதைத்தபடி தூங்குவது போல நடியுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்று மெல்லக் கூறினார். அப்படியே செய்தேன். சிவா தனது அடையாள அட்டையைக் காண்பித்தார், அவரது நரைத்த மீசையும் அவரைச் சந்தேகப்படாமலாக்கிற்று. எம்மிருவரது இருக்கைகளுக்கருகிலும் சோதனைக்காக வந்தவர்களிடம் 'இவருக்கு சரியான சுகமில்ல நான் பேராதெனிய பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு போறன்' என்று சுகிர்தா சொன்னது முகம் புதைத்துக் கிடந்த என் செவிகளில் கேட்டது.சுகிர்தாவின் முகத்தில் இழையோடிய சோகத்தையும், நாத்தழும்பும் பாவத்திலான கதையையும் கேட்ட படையினர் நகர்ந்து விட்டனர். படையினர் ஹபறண நிலையத்தில் இறங்கிய பின்னர் மூவரும் புன்சிரிப்போடு முகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம். இந்நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன், எண்ணிலடங்கா நன்றிகள் தோழி சுகிர்தா!
 
எங்களை சிவா நுவரெலியா நகரின் மத்தியில் லேடி மெக்லம்ஸ் வீதியில் அமைந்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வீட்டில் கொண்டு ஒப்படைத்துவிட்டு அவர் கிளம்பி எங்கோ அவருக்குத் தெரிந்த இன்னொருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
3
தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகள் கற்கும் முன்பள்ளியில் கற்பித்துக் கொண்டிருந்த இவ்வாசிரியைக்கு சொற்ப சம்பளமே கிடைத்தது. ஈரோஸ்காரரின் வழமைக்கிணங்க நாம் தங்கியிருந்த வீட்டுக்காரரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினோம். இவரது கணவன் சந்திரமோகன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தராக இருந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இறப்பின் பின் மனைவிக்கு காங்கிரஸ் இந்த ஆசிரியைத் தொழிலை வழங்கியிருந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனுமாக மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூத்த பெண்ணுக்கு 18 வயதாகவும், இளைய பெண்ணுக்கு 15 வயதாகவும், மகன் அம்மாவுடன் முன் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாகவும் இருந்தான். தனது சிறிய சம்பளத்தில் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் சுமந்திருந்த இந்தத் தாய்க்கு மேலதிக சுமையாக ஒரு தங்கையும், தம்பியும் போய்ச் சேர்ந்திருந்தோம். எவ்வளவு வற்புறுத்தியும் இவ்வாசிரியை எங்களிடம் பணம் பெற்றுக்கொள்ளவே இல்லை. தோட்டமொன்றுக்குச் சொந்தமான வீடு இவர்களால் வாடகைக்கு பெறப்பட்டிருந்தது. அடிக்கடி வீட்டைக் காலி பண்ணுமாறு தொந்தரவு வேறு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தொழிலாளர் காங்கிரசில் முன்னர் பிரபல்யமான பிரமுகராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து தற்போது விலகி வேறு கட்சி ஒன்றில் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சதாசிவம் ஐயாவுக்கும் இந்த ஆசிரியையின் கணவருக்கும் இடையில் இருவரும் காங்கிரசில் ஒன்றாக இருந்த காலத்தில் பலத்த போட்டி நிலவியதாக அறிந்தோம்.
 
லேடி மெக்லம்ஸ் வீதியின் முடக்கில் ஒரு பெரிய வெளி, இந்த வெளியின் மேலே இருக்கும் வானத்தின் பரப்பை மறைக்கும் வல்லமையுடன் கிளைகள் பரப்பிப் பரந்திருந்த நூற்றாண்டு பழமையான புளிய மரத்தின் கீழால் சென்று சில படிகள் ஏறி அந்தப் பழைய இருண்ட இரண்டறை வீட்டுக்குள் நுழைவது அலாதியான அனுபவத்தைத் தந்தது.ஒரு விறகு அடுப்பும் கம்பளிப் போர்வைகளும் அந்த வீட்டில் எமக்கான குளிர்க்காவலர்களாயிருந்தன. வீட்டின் முன்னால் ஒரு இரட்டைக் கழிவறையும்,குளியலறையும் இருந்தன. பல குடும்பங்கள் இவ்விரண்டையும் பயன்படுத்தின. 1986 ஏப்பிரல் 17 ஆம் திகதி காலையில் அந்தக் குழியலறைகளையும், கழிவறைகளையும் தீவிரமாகத் துப்பரவு செய்து கொண்டிருந்தேன். வெளியில் வந்து இதனைக் கண்ட சுகிர்தா என்ன இன்றைக்கு தீவிரமான சுத்திகரிப்புத் தொழிலாளராக மாறிவிட்டீர்கள் என்று கேட்டார். ஆமாம் எனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் என்று பதிலிறுத்தேன். அன்று எனது 26 ஆவது பிறந்தநாள் பிறந்திருந்தது.
 
நாம் தங்கியிருந்த இந்த வீட்டின் பின்புறத்தால் இறங்கி மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையால் ஏறினால் வெகு தூரத்தில் உள்ள மலை உச்சியில் அரச ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கோபுரம் அமைந்துள்ளது. மூச்சிரைக்க அக்கோபுரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். இக்கோபுரத்தை ஈரோஸ் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதில் மலையக மூத்த தோழர் கிருஷ்ணனும் பங்குபற்றியிருந்தார். இந்த தாக்குதல் நடந்து சில நாட்களில் தாக்குதல் பற்றிய வீரப் பிரதாபங்களை தோழர் கிருஷ்ணன் நுவரெலியா நகருக்குள் கொட்டித் தீர்த்தமையால் கைது செய்யப்பட்டார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பொது மன்னிப்பினால் அவர் விடுதலையானார். இப்போது இவர் கடும் நோய்வாய்ப்பட்டவராக தனிமையிலும் வறுமையிலும் உழல்வதாக அறிகிறேன். இவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் வேலைகள் தோழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
தங்கிய வீட்டுக்கு அருகாமையில் புளியமரத்துக்கு பக்கவாட்டில் சற்று உயரமான மேட்டில் ஒர் அகலமான பெரிய மாடிகளற்ற தள வீடு இருந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் மறைந்த முன்னாள் அமைச்சர் எம். எச் முஹம்மத் ஆவார். நாம் நுவரெலியாவில் இருந்த காலத்தில் இவ்வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகம் நடாத்திக்கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இவ்வலுவலகத்தின் பொறுப்பாளராக திரு சதாசிவம் இருந்தார். நாங்கள் அந்தக் காரியாலயத்துள் நுழைந்து அங்கு வேலை செய்த இளைஞர்கள் சிலரை நண்பர்களாக்கிக்கொண்டோம். நாட்போக்கில் அரசியல் வகுப்பெடுத்து அவர்களைத் தோழர்களாக்கி ஈரோஸ் உறுப்பினர்களாக உள்ளீர்த்தோம். பின்னென்ன, இரவு வேளைகளில் எனது உறக்கம் இந்த அலுவலகத்தில் இருந்த பெரிய மேசையின் மீதுதான் கழிந்தது. சுகிர்தா ஆசிரியை வீட்டில் தங்குவது தொடர்ந்தது. அங்கு வேலை செய்த தோழர்கள் ஓரிருவர் என்னோடு கூடவே தங்குவர். இவர்கள் இரவில் நெய் பூசி சுட்டுத் தந்த கோதுமை ரொட்டி போல் சுவையுள்ள ரொட்டியை நான் இன்று வரை வேறெங்கும் உண்டதில்லை. காலையில் எழுந்து ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துக் குளித்துவிட்டு தோட்டங்களுக்கு ஏறத்தொடங்கி விடுவேன். இங்கு பிடித்த எனக்குப் பிடித்தமான தோழர்கள் நுவரெலியாவில் உள்ள நிறையத் தோட்டங்களுக்கு என்னை அழைத்துச் சென்று இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வகுப்புகள் எடுக்கப் பெருந்துணை புரிந்தனர். சுகிர்தாவைத் தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதில்லை. தோட்டங்களைத் தெரிந்து கொண்டோம், அங்கெல்லாம் போகும் வழி தெரிந்து கொண்டோம், பலரை அமைப்பின் உறுப்பினர்களாக்கினோம், எமக்குத் தெரிந்தவர்களும் எம்மைத் தெரிந்தவர்களும் - எமது கொள்கைகளைப் புரிந்தவர்களும் பெருகினர், ஒருகட்ட வேலையைப் பூர்த்தி செய்துவிட்டு பதுளையூடாக அம்பாறை வந்து அக்கரைப்பற்றை அடைந்தோம்.
4
1977 இல் டெவன் தோட்டத்தை நட்சாத் திட்டத்திற்காக இல்லாமல் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தில் தீவிர பங்கெடுத்த வட்டகொட ஒக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவணுலட்சுமணன் பொலிசாரினால் மே மாதம் 11 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
மட்டு வந்து ஒரு வாரத்தில், சிவணுலட்சுமணனின் ஒன்பதாவது நினைவு தினம் தொடர்பான மக்கள் வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்காக மீண்டும் நுவரெலியா செல்லுமாறு இயக்கத்தால் பணிக்கப்பட்டேன்.
 
படுவான்கரைப் பாவற்கொடிச் சேனையில் இருந்து அக்கரைப்பற்றினூடாக அம்பாறை போய் பதுளையில் இறங்கி, அங்கிருந்து நுவரெலியா போகும் நோக்கோடு வந்த வழிப் பயணம் தொடங்கிற்று.
 
அக்ரைப்பற்றூரைச் சேர்ந்த ஈரோஸ் ஆதரவாளரான சலாஹுதீன் வட்டவிதானையார் அவரது உந்துருளியில் பாவற்கொடிச் சேனை வந்து என்னை ஏற்றிக்கொண்டு அம்பாறை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கி பதுளை போகும் பேரூந்தில் அவரது பணத்தில் நுழைவுச் சீட்டும் எடுத்துத் தந்தார். நான் பதுளையூடாக நுவரெலியா சென்று ஆசிரியையின் வீட்டையடைந்தேன்.
 
இம்முறை பாதுகாப்பு விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற முன்முடிவோடு செயலாற்றத் தொடங்கினேன். எனது முன்னைய மலையக வேலைத்திட்டங்களில் ஒன்றாக அனைத்து மதத்தலங்களுக்கும் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நுவரெலிய நகரப் பள்ளிவாயிலிலின் கவுழில் மிகவும் குளிரான நீரில் வுழூஉ செயது லுகர் தொழுகையை நிறைவேற்றிய பின் புவாத் என்ற ஒருவரை சந்தித்து நண்பராக்கிக் கொண்டேன். இவர் ஐ.தே. கட்சியின் தொழிற்சங்கமான ஐக்கிய தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியக் காரியாலயத்தில் இலிகிதராக வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது இம்மாவட்டக் காரியாலயத்தின் பொறுப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி இருந்தார். நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தொழிற்சங்கக் காரியாலயத்தைப் பயன்படுத்திய போது அதன் பொறுப்பாளராக இருந்த சதாசிவத்துக்கோ, புவாத்துடனான தொடர்பு பற்றி புத்திர சிகாமணிக்கோ தெரியாதவாறே காய்களை நகர்த்தினேன். ஆனால் மலையகத்தில் நடமாடிய காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் அமைச்சர் தொண்டமானின் புகைப்படத்தை எனது சட்டைப் பைக்குள் வைத்தவனாகவே நடமாடினேன்.அடிக்கடி புவாத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து உறவாடத் தவறவில்லை.
5
மட்டக்களப்பிலிருந்து புறப்படும் போது சிவணு லட்சுமணனின் நினைவாக மக்களை விழிப்பூட்டும் வகையிலான சுவரொட்டி வாசகங்களை தோழர்களோடு கலந்து வடிவமைத்து அரபு எழுத்துக்களில் தமிழ் கருத்துப்பட எழுதி வைத்துக்கொண்டேன்.
 
நுவரெலியாவை அடைந்தவுடன்
முன்னைய தொடர்புகளினால் கிடைத்த தோழர்களினூடாக மே 11 சிவணுலட்சுமணனின் நினைவுச் சுவரொட்டிகளைத் தமிழில் தயாரித்தேன். 63 தோட்டங்களில் நானும் தோழர்களும் ஏறி இறங்கி சுவரொட்டிகளை ஒட்டினோம். அடுத்த நாள் காலை தோழர்கள் எல்லோரும் முதல்நாள் இரவு நடந்தவை எவையும் தெரியாதவர்களாக நடித்து அவரவர் வேலைகளுக்குத் திரும்பினோம். நான் ஓர் அப்பாவி சுற்றுலாக்காரனாக புவாத்தின் காரியாலயத்துக்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பகல் போசனத்துக்கான நேரம் நெருங்கியது.கீழே இருந்த ஒரு முஸ்லிம் உணவகத்துக்குச் செல்வோம் என்று கூறி என்னை அழைத்துக்கொண்டு புவாத் இறங்கினார். நாமிருவரும் போகும்போது வெள்ளை உடையணிந்த திடகாத்திரமான இருவர் எம்மைப் பின் தொடர்வதை அவதானித்தேன். எதுவுமே தெரியாத 'பச்சப்புள்ள' புவாத் உணவகத்தினுள் சென்று அமர்ந்து இரண்டு சோற்றுச் சாப்பாட்டுகளைக் கொண்டு வருமாறு பணித்தார். நான் கூர் உணர்திறனுடனும்,அவதானத்துடனும் புவாத்தின் அருகில் அமர்ந்திருந்தேன். எம்மைக் பின்தொடர்ந்த வாட்டசாட்டமான அந்த இருவரும் உணவகத்தினுள் நுழைந்தனர். கதிரைகளில் அமர்ந்த அவர்கள் ஆளுக்கு ஒரு கால் இறாத்தல் பாணும் கறியும் கொண்டு வருமாறு வேலையாளைப் பணித்தனர். நான் உசாரானேன் பகலுணவுக்காக எவர்தான் காலிறாத்தல் பாண் எடுப்பர்? நிச்சயப்படுத்திக் கொண்டேன், இவர்கள் என்னைப் பின் தொடரும் அரசபடையைச் சேர்ந்த சிவில் உடையில் உலவும் அதிகாரிகளென்று. நான் கழிவறைக்குச் சென்று வருகிறேன் என்று புவாத்திடம் சாக்குச் சொல்லிவிட்டு உணவகத்தின் பின் வழியாக வெளியேறி விரிந்து கிடந்த 'கொல்ப்' மைதானத்தைத் தாண்டி பிரதான வீதியை அடைந்தேன். தங்கிநிருந்த வீட்டையடைந்து பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.
6
வீட்டை அடைந்தவுடன் எனது தடிப்பான மீசையை அவசரமாக மழித்து எறிந்திருந்தேன். பயணப் பையை எடுக்கும் போதே அணிந்திருந்த மேற்சட்டையையும், காற்சட்டையையும் மாற்றி வேறு ஆடைகளை அணிந்து கொண்டேன். என்னை ஓரிரு முறைகள் பார்த்தவர்கள் அடையாளம் காண்பதற்கு சிரமப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இவ்வாறு செய்தேன்.
 
பேரூந்து நிலையத்தை அடைந்து பதுளைக்குச் செல்லும் பேரூந்துகளைத் தேடினேன், ஆனால் அந்நேரம் அங்கு பதுளை செல்ல வண்டிகள் எதுவுமிருக்கவில்லை.அங்கு தாமதிக்க விரும்பாமல் சற்றுத் தள்ளியிருக்கும் தனியார் வேன்கள் தரித்திருக்கும் நிலையத்துக்கு நடையைக்கட்டினேன். நான் அவ்விடம் போய்ச் சேரவும் ஒரு பழைய வேன் வெலிமடைக்கு புறப்படவும் சரியாக இருந்தது. எம்பி ஏறி வேனுக்குள் தொங்கினேன். தரிப்பிடத்தில் இருந்து உயரமான மேட்டில் உறுமியபடி ஏறிய வேனின் இயந்திரம் நின்று போனது. சாரதி ச்ச்சிர்ர் என்று மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்தார். ம்ஹூம் இயந்திரம் இயங்க மறுத்தது. வெளியில் எட்டிப் பார்த்தேன், பேரூந்து நிலைய வளாகத்துக்குள்- உணவகத்துக்கு என் பின்னால் வந்த இருவரும் வேகமாகத் தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனே இயங்கினேன். Bபஹின்ட, தள்ளுவக் தாமு (இறங்குங்க தள்ளு ஒன்று போடுவோம்) என்று கூறியவாறு நான் முதலில் இறங்கினேன். தொடர்ந்து அனைவரும் இறங்கினர். பலங்கொண்டமட்டும் வேனைத் தள்ளினோம், ஸ்டார்ட் வந்து விட்டது. எல்லோரும் உள்ளே ஏறியதும் வேன் வெலிமடையை நோக்கிப் பயணித்தது.
 
வெலிமடையை வந்தடைந்த வேனிலிருந்து இறங்கினேன். பதுளை செல்லவேண்டும் பொது மற்றும் தனியார் வாகனத் தரிப்பிடங்களில் பதுளை செல்ல எந்த வண்டிகளும் இருக்கவில்லை.மாலை ஆறு மணிக்குத்தான் பதுளை செல்லும் வண்டிகள் புறப்படும் என்றார் அங்கிருந்த நேரக்காப்பாளர். இந்தப் பொது இடத்தில் நிற்பது பாதுகாப்புக்கு உசிதமல்ல என்று எண்ணியவுடன் வெலிமடையில் இருந்த "சத்தார்ஸ்" என்ற காத்தான்குடி முதலாளிக்குச் சொந்தமான துணிக்கடை நினைவுக்கு வந்தது. இக்கடை பேரூந்து நிலையத்துக்கு அண்மையிலேதான் அமைந்திருந்தது. கடைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த சிலருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஏறாவூரைச் சேர்ந்தவன் என்பதையும் அறிந்திருந்தார்கள். வாங்க.. வாங்க.. என்று அன்புடன் வரவேற்றார்கள். சாப்புட்டீங்களா? சாப்பிடாட்டி வாங்க சாப்மிடலாம் என்று அழைத்தார்கள். வேண்டாம் நான் பகல் சாப்பிட்டுட்டுத்தான் வாறன் என்று பொய் சொன்னேன். பசியா பசி.. சிறு குடலைப் பெருங்குடல் தின்னத் தொடங்கியிருந்த நேரம் அது. ஒரு கோப்பை தேத்தண்ணி தந்தால் குடிப்பேன் என்றேன்.தந்தார்கள், குடித்தேன். பதுளைக்குச் செல்லும் வண்டிக்கான நேரம் நெருங்கும் வரை பாதுகாப்பாகக் கடைக்குள்ளே இருந்துவிட்டு தரிப்பிடம் சென்று அரச பேரூந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். சரியாக ஆறுமணிக்கு வண்டி பதுளையை நோக்கிக் கிளம்பிற்று.
7
ஒரு மணி நேரம் வண்டி ஓடியிருக்கும்,திடீர் சோதனைக்காக வெலிமட- பதுளைப் பிரதான வீதியில் பொலிசார் வண்டியை நிறுத்தினர். நுவரெலியாவில் இருந்து ஒரு பயங்கரவாதி தப்பியமையால் இந்த திடீர் சோதனை நிகழ்த்தப்பட்டது.
 
வீதியோரத்தில் தனி நபர் வரிசை வகுக்கப்பட்டிருந்தது." அனைவரும் ஒவ்வொருவராக பிரயாணப் பைகளைத் திறந்தவாறு அடையாள அட்டைகளை கையிலேந்திக்கொண்டு தனியாளாக வரிசையில்" வருமாறு கேட்கப்பட்டோம்.என்னைப் பிடித்தால் துப்பாக்கியைப் பறித்துச் சுடுவது என்பது எனது அப்போதைய உறுதியான தீர்மானமாகும்.
 
ஈரோஸ் 1983 இல் நூரளை சீத்தா எலிய கோவிலின் பின்புறமாக இறங்கி நெடுந்தூரம் பயணித்தால் வெல்லவாய ஊடாக மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தை அடையலாம் என்று வரைபடத்தினூடாக கணிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் சீதா எலிய ஊடாக கீழிறங்கி உன்னிச்சையை அடையும் முயற்சியில் தோல்வியே கிடைத்தது. போகும் வழியெங்கும் அனுமதியின்றிக் களவில் மாணிக்கக் கல் தோண்டும் சிங்களவர் நாட்டுத் துப்பாக்கிகளோடு காவலில் இருந்தமையால் எமது முயற்சி கைகூடவில்லை. இது கைகூடியிருந்தால் இந்தக் கஷ்டம் இல்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
8
வரிசையில் செல்லும் போது சோதனை செய்பவருக்கு அலுப்புத் தட்டும் நேரத்தில்தான் எனது 'தவணை' வரவேண்டும் என்பதற்காக வரிசையில் பின்புறமாக நின்றுகொண்டேன். ஹுசைன் என்ற பெயரிலான தேசிய அடையாள அட்டையை அவசரத்தில் எடுக்க மறந்திருந்தேன். கைவசம் பஷீர் என்ற பெயரிலான எனது ஆசிரியர் அடையாள அட்டையே இருந்தது. நான் சோதனையிடும் பொலிஸ் உத்தியோகத்தரின் முன்னிலைக்கு வந்தேன். அடையாள அட்டையை மூடியபடி கையில் ஏந்தியவனாக பயணப் பையின் ஸிப்பைத் திறந்து காட்டினேன். கையில் இருந்த அரச அடையாள அட்டையைக் கண்ட அதிகாரி அதனை விரித்துப் பார்க்கவில்லை,பையை மட்டும் கிண்டிவிட்டு என்னை அனுப்பிவிட்டார். மீண்டும் அதே பேரூந்தில் பயணம் தொடர்ந்தது.பதுளை பேரூந்து நிலையத்தில் இறங்கினேன். இரவில் பதுளையில் இருந்து கிழக்கிற்குச் செல்ல வாகனங்கள் இல்லை. கடையில் இரவுணவு உண்டேன். எங்கே தங்குவது? பதுளைப் பள்ளிவாயிலுக்குப் போனேன், அங்கே ஒரு பீரங்கி என்னை வரவேற்றது. ஒலி பெருக்கி பாவனையில் இல்லாத காலத்தில் தொழுகைக்கான அழைப்பாக பீரங்கியை வெடிக்க வைப்பார்களாம்.
 
கால்களைக் கழுவிய பின்னர் பள்ளிக்குள் சென்று ஒரு மூலையில் பயணப் பையைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தேன். சிறிது நேரத்தில் பள்ளி முஅத்தின் வந்து எழுப்பி நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். மட்டக்களப்பு போக வாகனமில்லை அதனால் இங்கு தூங்கி காலையில் போகலாம் என்றிருக்கிறேன் என்றேன் அவரிடம். அப்படியா வாங்க மேலே போய் என்னுடைய அறையில் தங்குவோம் என்று அழைத்தார். நானும் மகிழ்வோடு சென்று மனிதனோடு தூங்கினேன். அசதியினாலும், களைப்பினாலும் மெய் மறந்து தூங்கிய என்னை முஅத்தினார் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுப்பினார். அன்று தலை நோன்பு என்பது என் நினைவில் இருக்கவில்லை. சஹர் உணவு தந்தார், சாப்பிட்டுவிட்டு சுபஹ் கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டபின் முஅத்தினாரிடம் விடைபெற்று பேரூந்து தரிப்பிடம் சென்றேன். அம்பாறைக்குச் செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்தேன். அம்பாறையில் இறங்கி வழமையான பாதுகாப்பான வழியால் பாவற்கொடிச் சேனையை அடைந்தேன்.
9
சில வாரங்களின் பின்னர் அமைப்பாக்கப் பணிகளுக்காக மீண்டும் மலையகப் பயணம், ஆனால் இம்முறை நுவரெலியாவுக்கல்ல கண்டிக்குச் சென்றேன்.
 
கண்டியைச் சேர்ந்த தோழர் குணசீலன் மட்டக்களப்பு சென்ற் மைக்கல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஈரோஸ் அவரைக் கருத்துக்களால் கவ்விப் பிடித்திருந்தது. இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், முத்தையா முரளிதரனின் உறவுக்காரர். இவரோடு கண்டியில் உள்ள கந்தானைத் தோட்டத்துக்குச் சென்றேன். இங்குதான் சீலனின் அக்கா குடும்பம் வாழ்ந்துவந்தது. அக்காவின் கணவர் தோட்டத்தில் இலிகிதராக வேலை செய்தார். இவர்களோடு தங்கியிருந்து கொண்டு பல தோட்டங்களுக்கும் சென்று அப்பிரதேசத்தில் அமைப்பாக்க வேலைகளைச் செய்தோம். வகுப்புகள் எடுத்தோம், உறுப்பினர்களைச் சேர்த்தோம். சில வாரங்கள் கடந்தன. நுவரெலியாவில் ஏற்கனவே செய்த வேலைத் திட்டங்கள் முடங்கிக் கிடந்தமை கவலையைத் தந்தாலும் அச்சம் அங்கு செல்வதற்கு தடையாக இருந்தது. இது மட்டுமல்லாமல் மடத்தனமாகச் சென்று மாட்டிக்கொள்ளவும் கூடாது என்ற அவதானமும் நுவரெலியா செல்வதைத் தடுத்தது. எதற்கும் தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா அலுவலகத்தில் வேலை செய்யும் தோழர்களோடு தொலைபேசிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். அலுவலகத்தில் இருந்து முக்கியத்தர்கள் கடமை முடிந்து போன பின்னர், இரவானதும் அங்கு தங்கி இருக்கும் தோழர்களொடு பேசினேன். விலாவாரியாக வினாக்களை எழுப்பினேன். அந்தப் பக்கமோ நான் தங்கியிருந்த வீட்டுக்கோ எந்தப் பாதுகாப்புத் தரப்பினரும் வரவோ விசாரிக்கவோ இல்லை என்று சொன்னார்கள். அடுத்த நாள் காலை புவாத்துடன் தொலைபேசினேன். நான் உணவகத்தில் இருந்து சாப்பிடாமல் போன பின்பு அவர் என்னைத் தேடிப் பார்த்தார். நான் எங்கும் கிடைக்காததால் அவர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றாராம். பின்னேரம் நாலு மணி போல் இருவர் வந்து உங்களோடு கடைக்கு சாப்பிட வந்தவர் யார்? அவரது விபரங்களைத் தரவேண்டும் என்று கேட்டார்களாம். அவர் ஒரு தொழிற்சங்க வேலையாக வந்தார், தோட்டங்களில் இருந்து அலுவலகத்துக்கு வந்து இருப்பவர்களுக்கு உணவு வேளை வந்தால் சாப்பாடு கொடுப்பது எமது வழக்கம், அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக அழைத்துச் சென்றேன். ஆனால், திடீரென வயிற்று வலி வர அவர் சாப்பிட முடியாமல் போய்விட்டார்.அவரது பெயர் ஷியாம் என்று சொன்னாராம் புவாத். ஆம் மலையகத்தில் நான் ஷியாம் என்ற பெயரில்தான் நடமாடினேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி புரிந்த காலமது, ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில் ஏடாகூடமாகப் பேசவும் முடியாது என்பதால் அவர்கள் கதையைக் கேட்டபின் சென்றுவிட்டார்களாம்.
இக்கதைகளை எல்லாம் கேட்டபின் அச்சம் நீங்கி நுவரெலியா போகும் ஆவல் ஓங்கியது.
10
கண்டியில் இருந்து நுவரெலியா சென்றேன். தோழர்களுடன் தொடர்பு கொண்டு விடுபட்ட வேலைகளில் இறங்கினேன். ஆயுதப் பயிற்சி வழங்குவதற்காக ஏற்கனவே சில இளைஞர்களைத் தெரிவு செய்திருந்தோம். இவர்களோடு இன்னும் மேலதிகமாகச் சிலரையும் இணைத்துக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பாக மட்டக்களப்புக்கு கொண்டு சேர்க்கும் சிக்கலான பொறுப்பை ஏற்றேன். போர்க்கப்பல்களைத் தோற்கடிக்கும் வல்லமையுள்ள தோணிகளைத் தயாரிக்கும் பணி தொடங்கிற்று. இலங்கையில் 200 ஆண்டுகளாக ஒடுக்குமுறைக்கு உட்படும் மலையகத் தமிழர்களே போராடத் தகுதியுள்ள முதன்மையான தேசிய இனமாகும். இவர்களுக்கல்லாமல் வேறு யாருக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது?
 
18 இளந்தோழர்களுடன் நுவரெலியாவில் இருந்து பேரூந்தில் கண்டி சென்றேன். கண்டியிலிருந்து தொடரூந்தில் மாஹோ சந்தி சென்று மட்டக்களப்பு செல்வது வரையப்படாத திட்டமாகும். கண்டியில் நின்ற தோழர் குணசீலன், நான் அறிவுறுத்தியதற்மைய தொடரூந்துக்கான 19 நுழைவுச் சீட்டுக்களை வாங்கி வைத்திருந்தார். தொடரூந்தில் 19 பேரின் பயணம் தொடங்கிற்று, எமக்கு அச்சம் நீக்கும் மருந்தாகவும், எதிரிகளுக்கு எம்மைப் பற்றிய சந்தேகம் ஏற்படாத வகையிலான உத்தியாகவும் பாட்டும் நடனமுமாகப் பயணித்தோம். குருநாகல் எனும் பெருநகரை அடையும் முன்பான பொல்கஹவெல நிறுத்த நிலையத்தில் வண்டி நின்றது. உடனே துப்பாக்கி ஏந்திய பொலிஸ் படையினர் பலர் கூட்டாக வண்டிக்குள் ஏறினர்.துரிதமாகச் செயற்பட்டு தோழர்களோடு வண்டியைவிட்டு நான் கீழிறங்கினேன். படையினரை ஏமாற்றிய வண்டி கிளம்பிற்று.
 
நாங்கள் பேரூந்தில் ஏறி குருநாகல் நகரை வந்தடைந்தோம்.அங்கிருந்து வேறொரு பேரூந்தில் பொலன்னறுவை நகருக்கு வந்தோம். எங்களுக்கா படையினரை ஏமாற்றத் தெரியாது? பொலன்னறுவையில் இருந்து மீண்டும் தொடரூந்தில் ஏறி எந்த தொந்தரவுகளுமின்றி மட்டுநகர் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். "கோச்சில எந்த பயங்கரவாதிகளும் பயணிக்கவில்லை."
மட்டக்களப்பு நிலையத்தில் இறங்கி கடவைகளைக் கடந்து பின்னால் செல்லும் பாதைகளூடாக நடந்து பார் வீதியில் இருந்த தோழர் கண்ணனிடம் மலையகத் தோழர்களை "பாரப்படுத்திவிட்டு" நான் நடந்தே மறைந்தேன். தொடரூந்துப் பயணத்தில் எஞ்சின்கள் மாறும், பெட்டிகள் மாறும், இலக்குகள் மட்டுமே மாறாது. இனி மீதியை கண்ணன் பார்த்துக்கொள்வார். கண்ணன் கச்சிதமாகச் செயற்பட்டு மலையகத் தோழர்களை ஆயுதப் பயிற்சிக்காக ஈரோஸின் பாவற்கொடிச்சேனை முகாமுக்கு அனுப்பி வைத்தார்.
11
தோழர் கண்ணன் 1990 இல் ஈரோஸ் தற்காலிகமாகக் கலைக்கப்பட்ட போது செய்வதறியாது திணறினார். ஆனாலும், அவசரமாக சுதாகரித்துக் கொண்டு பரம்பரையினரின் ஏடுகளைக் கையிலேந்தி ஆயுர்வேத வைத்தியத்தைக் கற்றுத் தேர்ந்தார். இலங்கை அரச ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தின் பரீட்சை எழுதி சித்தியடைந்தார்.தமது மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான வளவுக்குள் மூலிகைச் செடிகளை நட்டு பெரிய தோட்டத்தை உருவாக்கி வைத்தியத்தை சமூக சேவையாக செய்யத் தொடங்கினார். ஆங்கில வைத்தியத்தால் கைவிடப்பட்டவர்களை சவாலாக ஏற்று பலரைக் குணமாக்கினார். கிழக்கு முழுக்க அவரது புகழ் பரவியது. தமிழ் முஸ்லிம் மக்கள் அவரைச் சூழ்ந்தனர். நிறைவாக சேவை செய்தார். தம்மைச் சந்திக்க வருவோர்க்கு இயற்கை உணவை உட்கொள்வதற்கான ( Organic food) ஆலோசனைகளையும், மற்றும் மனோவலிமைக்கான உளவளப் பயிற்சிகளையும் வழங்கினார். விரைவில் செத்தும் போனார். மட்டக்களப்பில் கண்ணனின் மகளுக்கூடாக இன்னும் வாழ்கிறது அவரது வைத்தியமும், ஆலோசனைகளும். ஆம் இவரது மகள் இப்போது ஆயுர்வேத வைத்தியராக அப்பாவின் இடத்தை நிரப்பி பணி புரிகிறார்.
 
நான் மலைகத்தில் இருந்து புரட்சிகரமான செயல்களைப் பயிற்றுவிக்க மட்டக்களப்புக்கு அழைத்து வந்த தோழர் தினேஷ் கண்ணனின் தங்கையை திருமணந்து பார் வீதியில் வாழ்கிறார். விதைகளை நீரூற்றுக் கிடைக்கும் இடத்தில் பதியமிட்டால் அவை முளைக்கத்தானே செய்யும்.வளர்ந்து வளத்தை வழங்கத்தானே செய்யும்.
12
தோழர் கணேஷ் 1986 இறுதிக்காலத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துவிட்டார். மீண்டும் கணேஷோடு மலையேறினேன்.1987 ஜனவரி முதல் வாரத்தில் ஹற்றன் சோமசெட் தோட்டத்தின் கணக்கப்பிள்ளையின் வீட்டின் தொடர்பை கணேஷ் நீண்ட காலமாகப் பேணியிருந்தார். இம்முறை கணேஷ் இந்த வீட்டாரை எனக்கு அறிமுகப்படுத்தி என்னையும் அங்கு தங்கவைத்தார். கணேஷ், கண்டி திகண உடிஸ்பத்துவத் தோட்டத்தில் பிறந்து, கலகெதரவில் கல்வி கற்றிருந்தாலும் சிறை செல்வதற்கு முன்பு நுவரெலியா எங்கணும் இயக்க வேலைகள் செய்து பல இடங்களில் தொடர்புகளைப் பேணியிருந்தார். மறைந்த அமைச்சர் சந்திரசேகரம் தொழிலாளர் காங்கிரசில் முக்கிய தொழிற்சங்கப் பிரமுகராக இருக்கையில் கணேஷ் அவருடன் பல தடவைகள் ஈரோஸ் பற்றி விளக்கமாக உரையாடியிருந்தார். சந்திரசேகரத்துக்கு காங்கிரசுடன் முரண்பாடுகள் ஆழப்படத் தொடங்கிய காலத்தில் நான் ஒரு பத்திரிகை நிருபர் என நடித்து அவரை நேர்காணல் கண்டு அவரது நாடியோட்டத்தை அறிந்து ஈரோஸின் பக்கம் ஈர்க்க முயன்றிருக்கிறேன். ஈரோஸின் கொள்கை போட்பாடுகள் பற்றி ஏற்கனவே கணேஷ் மூலம் அனிந்திருந்த இவர் இக்காலத்தில் ஈரோஸ் ஆதரவாளராக மாறியிருந்தார். அவ்வருடம் தொழிலாளர் காங்கிரஸ் நடாத்திய மே தினக் கூட்டத்தில் சந்திரசகரம் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு அந்தக் கூட்டத்தில் ஆரவாரமான தனித்துவக் கோசங்களை எழுப்பிய வண்ணம் போய் ஏறினார். சூழ்நிலையை அவதானித்து இயக்கத்துக்கு அறிக்கையிடுவதற்காக இக்கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். இந்நிகழ்வுக்குப் பின் சந்திரசேகரத்தார் தனிக்கட்சி தொடங்கி விட்டார்.இவரின் வலது கரமாகவும், தத்துவாசிரியருமாக தோழர் காதர் செயற்பட்டார். காதர் தமிழ்நாட்டில் இருந்த போது எழுதிய "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம்" என்ற மலையக மக்கள் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை ஈரோஸின் பொதுமை வெயீட்டகம் பதிப்பித்து வெளியிட்டிருந்தது. சென்னையில் கண்ணன் என்ற பெயரில் இயங்கிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் யோகராசாவின் அச்செழுத்து தோற்றுப்போகும் அழகிய கையெழுத்தாலான இப்புத்தகப் பிரதியைப் படித்திருக்கிறேன்.
 
இடையில் சந்திரசேகரம், ஏனோ தெரியவில்லை புளட் இயக்கத்துடன் உறவாடத் தொடங்கினார். இதனால் ஈரோஸ் இவரில் இருந்து கொஞ்சம் விலகி நின்றது. இந்த நிலைமையினால் 1989 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகரத்தை, தோட்டங்களில் ஆழக் காலூன்றி நின்று அகலமான ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்த ஈரோஸ் இரகசியப் பிரச்சாரத்தின் மூலம் தோற்கடித்தது. பின்னர் ஈரோஸ், பாடசாலை அதிபராக இருந்த தனது ஆதரவாளரான மறைந்த இராமலிங்கத்தை தேசியப் பட்டியல் மூலம் மலையக மக்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக்கியது.
ஒரு வாரமளவில் சோமசெட் தோட்டத்தில் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டபின் இரண்டாவது வாரம் கணேசைவிட்டுப் பிரிந்து தனியாக நான் நுவரெலியா வந்தேன். மீண்டும் முன்பள்ளி ஆசிரியையின் வீட்டில் தங்கியிருந்து நுவரெலியாத் தோழர்களோடு இணைந்து வேலைகளில் ஈடுபட்டேன். 1987 ஜனவரி 14 ஆம் நாள் மாலை கடுங்குளிரில் நடுங்கியபடி ஆசிரியையின் வீட்டு விறகு அடுப்பில் கைகளைச் சூடேற்றிக் கொண்டடே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அன்றைய மாலைச் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தேன். செய்திகள் முடிவடைந்ததும், மரண அறிவித்தல் வந்தது. அதில் ஏறாவூரைச் சேர்ந்த மீராசாஹிப் என்பவர் இன்று காலமானார். ஆசிரியரான இவர் செய்த்தூன் பீவியின் கணவரும், ஆயிஷா ரமீஷாவின் தகப்பனும்.... ஆவார் என்று சொல்லப்பட்டது.எனது இரத்த ஒட்டம் அதிகமாயிற்று. மீராசாஹிப், தோழர் றகுமானின் மூத்த சகோதரியின் கணவனாகும்.எனது நெருங்கிய உறவினராகவும், தோழர்களுக்கு உதவுபவராகவும் இருந்த இவர் இளமையில் மரணத்தைத் தழுவியது எனக்கு பெருந்துயரைத் தந்தது. அடுத்த நாள் அதிகாலை புறப்பட்டு வழமையான வழிகளினூடாக வாகனங்களிலும் நடையுமாக ஏறாவூரை அடைந்து, நள்ளிரவில் மரணவீட்டுக்குள் பிரவேசித்தேன். கண்டவுடன் சத்தமிட்டு அழத்தொடங்கிய குடும்பத்தாரை பொறுமையாக இருங்கள் இல்லாவிட்டால் நான் இங்கு வந்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். தகவல் பாதுகாப்புப் படையினர் வரை சென்றால் எனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கூறி அவர்களை அமைதி காத்தேன். 
 
நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்தாலும் வானொலிச் செய்தி கேட்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நடந்த மரணத்தை உங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மரண அறிவித்தலை வானொலிக்குக் கொடுத்தோம் என்று அங்கிருந்த தோழர் றகுமான் கூறினார்.
 
அன்று
அதிகாலை வெளிக்கிட்டு ஈரோஸின் உறுதியான கிராமத் தளமான தன்னாமுனைக்கு நடந்து போய்ச் சேர்ந்தேன். மதியம் தோழர்கள் விஜி, கவி ஆகியோரும் நானும் தோணியில் மட்டக்களப்பு ஆற்றைக் கடந்து படுவான்கரை விளாவட்டவானுக்குச் சென்றோம்.மீராசாஹிப் ஆசிரியர் என் மனதோடே பயணித்தார். மீண்டும் நான் வேலைகளில் தீவிரமாக இறங்க மீராசாஹிப் என் மனதில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார். மச்சானின் மரணம் நிகழ்ந்து ஒரு வாரத்தில் றகுமான் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இச்செய்தி குடும்பத்தினருக்கும் எனக்கும் வேதனையை இரட்டிப்பாக்கியது. பாவற்கொடிச் சேனையில் இருந்து கன்னன்குடா வழியாக மட்டக்களப்பு எருமைத் தீவைத் தோணியில் கடந்து போவது எனது திட்டமாக இருந்தது. ஆனால் நான் ஒரு யமஹா ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளில் தனியாகப் போவதை அவதானித்த வான்படையின் உலங்கு வானூர்தி தாழப்பறந்து என்னை நோக்கி HMG என்ற பாரிய ஆயுதத்தால் தாக்கியது நான் மோட்டார் சைக்கிளை கீழே கிடத்திவிட்டு ஒரு பனை மரத்தின் கீழே ஒதுங்கினேன். இதனைத் தொலைத் நோக்கியூடாகப் பார்த்த மேலிருந்த சிப்பாய் பனை மரத்தை நோக்கிச் சுட்டார் மரத்தின் வட்டு பிழந்தது. நான் படுத்து உருண்டு அங்கே இருந்த சிறிய கொன்க்றீட் பாலத்தின் கீழே புகுந்துகொண்டேன். சுற்றிவர சரமாரியாகச் சுட்டுவிட்டுப் வட்டமடித்துப் பறந்து சென்றது உலங்கு. நான் வெளியில் வந்து, நகரையடைந்து மீண்டும் ஏறாவூர் வந்தேன்.
13
சில நாட்களில் மூதூர் சோமண்ணையும், நானும், யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தோழர் முருகனும் வெருகல் ஊடாக நடந்து கிளிவெட்டியை அடைந்து அங்கிருந்து மூதூர் சென்றோம். மல்லிகைத் தீவில் ஒரு நாள் இரவு தங்கி அடுத்த நாள் சோமண்ணையின் வழிகாட்டலில் புல்மோட்டைக்குச் சென்று கடல் மார்க்கமாக முல்லைத்தீவு சென்றோம். அங்கே ஈரோஸ் முகாமில் சிறிது நேரம் தரித்த பின் வடமராட்சிக்குப் பயணமான நாம் நடுநிசியில் நெல்லியடியில் இறங்கினோம். அங்குள்ள ஈரோஸ் காரியாலயத்திலிருந்த தோழர்கள் எம்மை வரவேற்று அழைத்துச் சென்றனர். எமக்கு எல்லையில்லாப் பசி எடுத்திருந்தது. காரியாலயத்திலும் அந்நேரம் உண்ண எதுவுமில்லை.எங்கள் நிலையைப் பார்த்த தோழர்கள் சாமம் என்றும் பாராது பக்கத்து வீடுகள் இரண்டைத் தட்டி எழுப்பி சோறும் மீன் குழம்பும் கொண்டு வந்தனர்.இரவுணவை முடித்து தூங்கி நீண்ட நேரமானதனால் அந்த வீடுகளிலும் எஞ்சியிருந்த கொஞ்ச உணவையே வழங்கினார்கள். மீன்குழம்புக்குள் மீன் துண்டுகள் இருக்கவில்லை. குழம்பை சோற்றில் விட்டு சாப்பிட்டோம். குழம்புக்குள் சிதிலமாகி ஒரு பெருவிரல் நகத்தின் பிரமாணத்தில் கிடந்த மீன் சதை எனது உணவுத் தட்டுக்குள் தட்டுப்பட்டது, அதை எடுத்து நுணைத்தேன். ஆஹா அதுபோலொரு சுவையான மீன்குழம்பை இந்த 31 வருடமாக எங்கும் உண்டதில்லை நான். உப்பு, புளி,உறைப்பு எல்லாம் கன கச்சிதமான அளவுத்திட்டத்தோடு பாவிக்கப்பட்டு ஊறி சுவை ததும்பிய ஒரு குழம்பை இன்னும் தேடுகிறேன்! அதிக பசி அந்த சுவைக்கான காரணமாக இருக்கும் என்று நண்பர்கள் பலர் அபிப்பிராயப்பட்டனர்.அப்படியாயின் இதன் பின்பும் அதீத பசியிலிருக்கும் போது மீன் குழம்பும் முழு மீன் துண்டும் உண்டிருக்கிறேன், இதிலெல்லாம் நெல்லியடி உருசி வரவில்லையே! 
 
அடுத்த நாள் நாம் மூவரும் யாழ்நகர் வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த அமைப்பின் தலைமைக் காரியாலயத்துக்கு வந்தோம். முருகன் கல்வியங்காட்டில் உள்ள தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையைக் காண வீட்டுக்குச் சென்றுவிட்டார். சோமண்ணையும் நானும் யாழ் திருநெல்வேலியில் இருந்த ஈரோஸின் மணவர் அமைப்பான 'கைஸ்' (GUYS) இன் அலுவலகத்துக்குச் சென்று அங்கு நின்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் ஜெமீலைச் சந்தித்து அளவளாவினோம். பின்னேரம் ஐந்து மணிபோல் பாலகுமாரன் அண்ணன் வேண்டிக்கொண்டதற்கு அமைவாக, நான் கிளம்பி மிருசுவில்லில் அமைந்திருந்த இயக்கத்தின் பண்ணைக்குப் போனேன். அங்கிருந்த தோழர்களோடு எனது மலையக அனுபவங்களைப் பகிர்ந்தேன். மேலும் அந்த இரவின் பெரும் பகுதியை அரசியல் நிலைவரங்களையும், இயக்கங்களுக்கிடையிலான முரண்களையும் பேசியபடி கழித்தோம். 
 
விடிந்ததும் புறப்பட்டு அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் முகைதீன் மௌலவியையும் அவரது குடும்பத்தையும் பார்ப்பதற்காக கொண்டாவிலில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வந்தேன். அவர்களோடு பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசிக் களித்தேன்.அடுத்த நாள் முருகன் வந்து என்னை அவரது வீட்டுக்கு அழைத்துப் போனார்.
 
முருகன் மலையக வேலைத்திட்டங்களைப் பார்க்க விரும்பினார்.இரண்டு நாட்கள் கழிந்து நானும், முருகனும் யாழிலிருந்து கொழும்பு ஊடாக நுவரெலியா சென்றோம்.
 
தோழர் முருகன் தேர்ந்த வாசகர்,புதுக்கவிதைகளில் நாட்டமுடையவர், மக்கள் நேசன், என்னோடு நிறையப் பேசுகிறவர்- தோழமைகயைக் கடந்தும் பாசத்தைக் கொட்டியவர். 1989 ஆம் ஆண்டு ஏறாவூரில் எமது வீட்டில் தங்கியிருந்த முருகனும், திருமலையைச் சேர்ந்த சிரேஷ்ட தோழர் கஜனும் செங்கலடியை நோக்கிப் போகையில் காணாமலாக்கப்பட்டார்கள். இது நடந்ததைக் கேள்வியுற்றவுடன் கொழும்பில் இருந்த நான் அவசரமாக ஊர் திரும்பினேன். ஏனைய தோழர்களோடு இணைந்து இவர்களை மும்முரமாகத் தேடினேன். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் செங்கலடி போகும் வழியில் ஏறாவூர் செங்கலடி எல்லையில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய இராணுவத்தின் ( TNA) அலுவலகத்தில் இருந்தவர்கள் இவர்களை வழி மறித் கடத்திச் சென்று கடற்கரையோரமாகக் கொன்று புதைத்துவிட்டனர் என்ற தகவல் மக்களிடமிருந்து இரகசியமாக எமக்குக் கிடைத்தது. இந்தக் கொலைகளை தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தாஸ் என்பவன் செய்ததாகப் பின்னர் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
14
நானும் முருகனும் நுவரெலியா, ஹற்றன், கண்டி பிரதேசங்களில் உள்ள தோழர்களைக் கட்டங்கட்டமாகச் சந்தித்து உரையாடினோம். முருகனை அதிகமாப் பேசவிட்டோம். அவர் தனது அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்தார்.முருகன், தேசியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து மறைந்த வெள்ளையன் பற்றி பெருமதிப்பு வைத்திருந்ததை அவரது மலையகத் தோழர்களுடனான கருத்துப் பரிமாறல்களின் போது கவனித்தேன். வெள்ளையனின் நூறாவது பிறந்தநாள் அண்மிக்கிறது. இந்நேரத்தில் கதை பகிர முருகன் இல்லையே!
 
இக்காலத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றிய செய்திகள் ஊடகங்களை நிறைத்திருந்தது.
 
முருகன் ஒப்பந்தம் நிறைவேறும் என்பதில் அவ்வளவாக நம்பிக்கை வைக்கவில்லை, ஒப்பந்தம் இடம்பெற்றாலும் மலையக வேலைத்திட்டங்கள் மேலும் வேகத்துடன் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று முருகன் தோழர்கள் மத்தியில் வேண்டிக்கொண்டார்.
 
ராஜிவ் காந்தியின் கொழும்பு வருகையும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் நாங்கள் மலையகத்தில் நின்ற போதே நடந்தது. ஒப்பந்தத்தில் அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளமையைக் கருத்தில் எடுத்திருந்தோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாம் நாள் நாமிருவரும் கொழும்புக்கு வந்து மருதானை பஞ்சிகாவத்தைப் பகுதியில் ஒரு சிறிய விடுதியில் தங்கியிருந்தோம். ஒப்பந்தத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இவ்வன்முறை தமிழர்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற ஐயம் எமக்கிருந்தது. ஆயினும் கொழும்பு எங்கணும் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதையும், அரச பேரூந்துகளுக்குத் தீ வைப்பதையும் வீதியின் மருங்குகளில் நின்று பார்த்தோம். இந்த வன்முறைகளில் இளம் தேரர்களும் பங்குபற்றியதைக் கண்டோம், அங்கு குழுமியிருந்த வெகுமக்கள் வன்முறையாளர்கள் ஜே.வி.பி யைச் சேர்ந்தவர்கள் என்று பேசிக்கொண்டார்கள். இன்னும் சிலர், இளம் தேரர்கள் போல் தெரிபவர்கள் உண்மையில் தேரர்களல்ல அவர்கள் மொட்டையடித்துக் காவி அணிந்து தேரர்கள் போல் வேசமிட்ட ஜேவிபி உறுப்பினர்கள்தானோ என்றும் சந்தேகப்பட்டனர். ஆனால் அக்காலத்தில் தேரர்கள் ஜேவிபியில் உறுப்பினர்களாகவும் இருந்தனர், மட்டுமல்ல இலங்கையில் தேரர்கள் பல சந்தர்ப்பங்களில் வன்முறகளில் ஈடுபட்ட வரலாறும் உண்டு என்று விடுதி திரும்பியதும் முருகன் அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.
 
கொழும்பில் மேலும் தங்குவது உசிதமல்ல என்று நினைத்த நாங்கள் அடுத்த நாள் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் புண்ணியத்தில் பகிரங்கமாக மட்டக்களப்புக்குப் பிரயாணமானோம். பாதுகாப்பாக மத்திய வீதிக் காரியாலயத்தை அடைந்தோம்.
15
இதன் பின் இந்திய இராணுவத்தால் கைது, இலங்கை அதிரடிப்படையால் கைது என்பனவும், இந்தியப் படைக்கும் புலிப்படைக்கும் இடையிலான யுத்த நெருக்கடி காலத்தில் மட்டக்களப்பில் நிற்கவேண்டிய அவசியம், எனக்கும் ராணிக்கும் திருமணம் நடந்தேறியமை, ஈரோஸ் பங்குபற்றாவிட்டாலும் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் கூர்மையான அவதானிப்புத் தேவைக்காக கிழக்கில் நிற்கவேண்டியிருந்தமை, யாழ்ப்பாணத்தில் 29 நாட்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்ற ஈழந்தழுவிய முக்கிய தோழர்கள் பங்கு கொண்ட மாநாட்டில் பங்குபற்றியது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றமை ஆகிய காரணங்களால் என்னால் மலையகத்துக்குச் செல்ல முடிந்திருக்கவில்லை. அதனாலென்ன, ஈழப் புரட்சி அமைப்பு மலையகத்தில் பதியமிட்ட விதைகள் முளைத்து மரமாகிக் கிளைபரப்பி நின்றன.1988, 1989 ஆகிய இரண்டு வருடங்கள், மே தினம் மலையக ஈரோஸ் தோழர்களால் ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் மேடையமைத்துக் கூட்டமிட்டுக் கொண்டாடப்பட்டது. ஈழப்போராட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் சம பங்காளிகள் என்று தத்துவ ரீதியாக நிரூபணம் செய்த ஈரோஸின் நிறுவுனர் தோழர் இரத்தினசபாபதி 1989 ஆம் ஆண்டைய மே தினக் கூட்டத்தில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
 
1990 ஆம் ஆண்டு நோர்வூட்டில் ஈரோஸ் நடாத்திய மே தினக் கூட்டத்தில் கொட்டும் மழையிலும் அணி திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினேன். எத்தனையோ மேடைகளிலும், அரங்குகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியிருக்கிறேன். ஆனாலும், நோர்வூட் மே தின மேடையில் உரையாற்றிய போது எனக்கிருந்த உச்சந்தொட்ட மனவுணர்வையும், நிறைவையும் வேறெந்த மேடைகளிலும் நானடையவில்லை. நான் பேசிக்கொண்டிருந்த வேளை மேடையின் முன்னால் வந்து நின்று தோழர் கணேஷ் இன்னும் பேசு, இன்னும் பேசு என்று என்னை ஊக்கப்படுத்தியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
 
மே தினக்கூட்டம் முடிவடைந்ததும் இரவோடிரவாக நானும் இரண்டு தோழர்களும் கொழும்பை நோக்கி காரில் பயணித்தோம். எமது நூறுக்காக்கா வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்த போது இடை நடுவில் வைத்து "தம்பி பிறேக் வேலை செய்தில்ல" என்று பதட்டத்துடன் கூறினார். வளைவுகளும் நெளிவுகளும் நிறைந்த மலைப் பாதைப் பயணம், என்ன செய்வதென்றே தெரியவில்லை." மெதுவாக ஓரமாக நிறுத்துங்க காக்கா" என்றேன். அவ்விடத்தில் இருந்து நான் சாரதியாகி மெல்ல மெல்ல அவதானமாக பிறேக் இல்லாமலே வண்டியை ஓட்டிக்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தோம்.
16
எம்பியாகிய பின்னர் தும்பியாகிப் பறந்த கதை சுவாரசியமானது. 
ஈரோஸின் அலுவலகம் இல: 39, பகதல வீதியில் அமைந்திருந்தது. 1990 இல் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் உரசல்கள் தொடங்குமாப் போல் இருந்த காலத்தில் பிரேமதாச அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதானத் தரகராகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.சீ.எஸ் ஹமீதுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல் செய்வதற்கான ஏற்பாட்டை ஈரோஸ் செய்து கொடுத்தது. கொழும்பு பகதல வீதி அலுவலகத்தின் பாதாள அறையில் சக்திவாய்ந்த தொலைத் தொடர்பு சாதனத்தை வைத்திருந்தோம். அக்காலத்தில் கைத் தொலைபேசிகள் பாவனையில் இருக்கவில்லை. புலிகளிடம் சட்டர்லைட் தொலைபேசி வசதியும் இருக்கவில்லை. ஆனால் புலிகளிடமும், அரசாங்கத்திடமும், ஈரோஸிடமும் வயர்களற்ற தொடர்பு சாதனம்(wireless Communication set) இருந்தது. புலிகள் அரசாங்கத்தின் சாதனங்களூடாகப் பேச விரும்பவில்லை. ஆகவே, ஹமீட் அவர்கள் புலிகளுடன் தொடர்பாட ஈரோஸ் தனது சாதனத்தைக் கொடுத்து உதவியது.அமைச்சர் 70 வயதை எட்டியிருந்த காலமது. அவரை நான் கைகளில் பிடித்த வண்ணம் கீழே மேலே மறுபடியும் கீழே மேலும் கீழே பின்னர் மேலே இன்னும் கீழே என்று பல தடவைகள் அழைத்துச் சென்று புலிகளும் அரச பிரதிதிதி ஹமீட்டும் பேசுவதற்கு உதவியிருக்கிறேன். அமைச்சர், ஜனாதிபதி பிரேமதாசாவின் அனுமதியுடன்தான் பேசுவதற்கு வந்தார்.அவர் மரப் படிக்கட்டுகளில் மேலும் கீழுமாக ஏறி இறங்கி மேலும் இறங்கி ஏறி இறங்கும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதைப் பார்க்கையில் எனக்குக் கவலையாக இருக்கும். ஹமீட் இறுதியாகப் புலுகளுடன் நேரடியாகப் பேச விரும்பி உலங்கு வானூர்தியில் வடக்கு சென்றார். அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதாக கொழும்புக்குத் தகவல் கிடைத்த வண்ணமிருந்தது. அன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் எம். எச் முஹம்மத் பாதுகாப்பாகக் கொழும்பு திரும்பவேண்டும் என்று பகிரங்கமாக வேண்டினார். ஹமீட்டைப் புலிகள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
 
இவை நிகழ்வதற்கு முன்பு பாலகுமாரன், பரராஜசிங்கம்(பரா) ஆகியோரும் இன்னும் சில சில தோழர்களும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர். பாலா அண்ணன் யாழ் சென்று சில நாட்களில் ஈரோஸ் யாழ் காரியாலயத்தில் வைத்திருந்த இதே வகையான தொடர்பு சாதனமூடாக கொழும்பு அலுவலகத்துக்குப் பேசி ஈரோஸின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவிகளைத் துறக்குமாறு கடுமையான தொனியில் கூறினார். அடுத்த நாளே அனைவரும் இராஜினாமாச் செய்தோம். பின்னொரு நாள் பாலா அதே தொலைத் தொடர்பூடாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி உடனடியாக அனைவரும் கிளம்பி யாழ்ப்பாணம் வருமாறு "கட்டளையிட்டார்" பதவிகளைத் துறந்த பெரும்பாலானவர்கள் சாதனத்தின் முன்னால் எதுவும் பேசாமல் தொடைகள் நடுங்க நின்றிருந்தனர். அல்பா போர் ( Alpha four) எங்கே என்று கர்ச்சித்தார். சுற்றியிருந்தவர்கள் விழி பிதுங்கி நின்றனர். தொடர்பு சாதனத்தினூடாகப் பேசும்போது ஆளடையாளத்தைக் காட்டாத வகையிலான என்னக்குரிய குறியீட்டுச் சொல் அது. தொடர்பு சாதனத்தின் இயக்கத்துக்குப் பொறுப்பாய் இருந்த தோழர் எனது முகத்தைப் பார்த்தார்.
 
ஒம் அண்ணே!- நான்
 
என்ன செய்யிறா அங்க இவ்வளவு நாளும்! எல்லாரையும் கூட்டிட்டு இங்க வா- பாலா
 
அண்ணே இங்க கொழும்புல பாதுகாப்பில்லாம 112 தோழர்கள் நிக்கிறாங்க நானெப்பிடி இவங்கள இங்க விட்டுட்டு வாறது? - நான்
 
பாலா பக்கமிருந்து சத்தமில்லை அவரின் தோழமையுணர்வும் மனிதாபிமான மனதும் அழுவதை நானுணர்ந்தேன். எனது கண்கள் கொஞ்சம் பனித்தன, அண்ணே நீங்கள் வடக்கு சூழலின் அழுத்தத்திற்கு ஏற்ப செயல்படுங்கள், நான், இங்கு தோழர்களின் பாதுகாப்பைக் கையாளுகிறேன் என்று சொன்னேன். தொடர்பு அறுந்தது. இதனை பாலாவின் அங்கீகாரமாகக் கருதி செயல்படலானேன்.
 
பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா பயணமானார்கள். நான் கொழும்பில் நின்றேன். மீண்டும் நாடாளுமன்று புகுந்தேன். மீண்டும் நாடாளுமன்ற உறுப்பிரானதன் நிமித்தம் எனக்கு அரசு தந்த ஜீப்பை விற்றுவிட்டு கொழும்பு அலுவலகத்தில் செய்வதறியாது திகைத்து நின்ற தோழர்களில் அநேகரை, தோழர் சுதா மாஸ்டரும் நானும் இணைந்து தாய்லாந்துக்கு அனுப்பினோம். அங்கே உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபை (United Nations Human Rights Council) அலுவலகத்தில் அவர்கள் தம்மை அகதிகளாகப் பதிவு செய்தனர்.சொற்ப காலத்தில் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அச் சபையால் அனுப்பிவைக்கப்பட்டனர். 
 
இக்காலத்தில் நான் முன்பு நுவரெலியாவில் தங்கியிருந்த முன்பள்ளி ஆசிரியை ஏதோ ஒரு தேவை நிமித்தம் எமது கொழும்பு அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தோழர்கள் அவர்களை பசீர் எம்பியை சந்தியுங்கள் என்று என்னிடம் அனுப்பிவைத்தனர். நானும் எனது மனைவியும் அந்த அலுவலகத்தில்தான் தங்கியிருந்தோம். என்னை வந்து கண்ட அவர்கள், இது எங்க சியாம் அண்ணனல்லவா என்று சத்தமிட்டவாறு ஒடிவந்து என்னைக் கட்டிப்பிடித்தனர். எனது இயற்பெயர் பஷீர் என்பதும் நான் ஒரு முஸ்லிம் என்பதும் அன்றுதான் அவர்களுக்குத் தெரியவந்தது.
 
1990 ஆம் ஆண்டு இயக்கம் தற்காலிகமாகக் கலைக்கப்பட்ட பின்னரும் மலையகத் தோழர்களுடன் தத்துவார்த்தத் தொடர்பாடலை வைத்திருத்தோம்.
 
இன்று ஈரோஸ் மலையகத்தில் மீளமைக்கப்பட்டு ஈழவருக்குத் தலைமை தாங்கும் தகுதியோடு இயங்குகிறது.
 
நன்றி நமது மலையகம்
 

அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்…..

1 month 1 week ago
அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்…..
October 7, 2018

அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறதால அப்பா இருக்கிறார் காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை– மு.தமிழ்ச்செல்வன்

Kaniisai1.jpg?resize=800%2C544

அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை.

2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில்.

2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொது மக்களுடன் வரிசையில் வந்து பேரூந்தில் ஏற முற்பட்ட போது இசையாளன் (கனியிசையின் அப்பாவின் இயக்கப்பெயர்) என பெயர் குறிப்பிட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்தான் கந்தசாமி திவிச்சந்திரன்(1976). இதுவரை எந்த தொடர்பும் இல்லை. இவருடன் சேர்த்து அழைத்துச் செல்லப்பட்ட பலருக்கும் இதே நிலைமைதான். 2009 இறுதி நாட்களில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், என அனைவரும் தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.

Kaniisai2.jpg?resize=800%2C543

2009 ஏப்ரல் வருடப்பிறப்பு அன்றுதான் தனது தந்தையை இறுதியாக பார்க்கின்றாள் கனியிசை, அப்போது அவளுக்கு இரண்டரை வயது. தந்தை மாத்தளனின் அவளது தறப்பால் கொட்டிலுக்குள் வரும் போது கனியிசை அம்மன் நோயாள் பாதிக்கப்பட்டிருந்தாள். கடும் வெப்பான நிலைமைக்குள் அம்மன் நோயால் பீடிக்கப்பட்டிருந்த தனது மகள் தறப்பால் கொட்டிலுக்குள் இருப்பதனை கண்ட அவரது மனம் பட்டபாட்டை அவரது முகம் காட்டிக்கொடுத்தது என்றார் கனியிசையின் தாய் கவிதா.

அன்றுதான் இறுதியாக தந்தையும் மகளும் சில மணித்தியாலங்கள் சந்தித்து உரையாடியது. அப்பா வழமையாக வீட்டுக்கு வரும் போது இருக்கின்ற மாதிரி அன்று இல்லை அவரது முகம் வாடியிருந்தது. மிகவும் கவலையாக இருந்தார். தந்தையின் இந்த நினைவுகள் மாத்திரமே கனியிசையிடம் இறுதியாக எஞ்சியிருக்கிறது.

தந்தையின் புகைப்படம் ஒன்றை மிக கவனமாக வைத்திருக்கும் கனியிசை அதனை அவ்வவ்போது பார்;த்து தடவி முத்தம் கொடுத்து தந்தையின் நினைவுகளை மீட்டிக்கொள்கின்றாள். மீள் குடியேற்றத்தின் ஆரம்ப நாட்களில் தாயிடம் தந்தையின் தொலைபேசி இலக்கத்தை தருமாறும் அவருடன் பேச வேண்டும் என்றும் அடம்பிடித்திருக்கின்றாள்.

Kaniisai4.jpg?resize=800%2C526

2011 ஆம் ஆண்டு ஒரு நாள் தீடிரென கதறி அழத்தொடங்கிய கனியிசை அப்பாவை யாரோ கடத்திச்சென்று சுடுகின்றார்கள் எனக் கத்தியிருக்கின்றாள். அப்போதெல்லாம் தனது வேதனைகளையும், துக்கத்தையும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு மகளை சமாதானப்படுத்துவதனை வழக்கமாக கொண்டிருக்கின்றார் தாய். காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் தொடர்பில் அவரது நினைவுகள் வரும் போது மனம் விட்டு கதறி அழவேண்டும் போலிருக்கும் ஆனால் மகளை எண்ணி எல்லாவற்றையும் மனதுக்குள் புதைத்துவிடுவேன் என்றார் கவிதா.

அப்பா இல்லா குறை மகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே வாழ தொடங்கிவிட்டார். பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் ஆரம்பத்தில் அனுப்பிய போது சில நாட்கள் சென்று வந்த கனியிசை ஒரு நாள் தயாயிடம் என்னோடு படிக்கிற பிள்ளைகளை அவர்களின் அப்பாக்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விடுகினம்,எனக்கும் அப்பா இருந்திருந்தாள் அவருடன் நானும் பள்ளிக் கூடம் போவன் என்ன அம்மா. என்றிருக்கின்றாள். அதன் பின்னர் ஆட்டோவில் பாடசாலைக்கு அனுப்புவதனை நிறுத்திவிட்டு மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலைக்குள்ளும் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி தினமும் பாடசாலைக்கு ஏற்றிசெல்கின்றேன். மகளின் மனநிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றார் கவிதா.

அப்பா கெதியா என்னிட்ட வந்து சேர வேண்டும் என்று நான் கோவில் திருவிழாக்களில் நேர்த்தி வைத்து நடனம் ஆடுறனான். என்ர அப்பாவை கூட்டிக்கொண்டு போனவர்கள் கெதியென்டு அவரை விட வேண்டும். மற்ற பிள்ளைகள் எல்லோரும் அப்பா அம்மா என்று சேர்ந்து பள்ளிக் கூடத்தில் நடக்கிற நிகழ்வுகளுக்கு எல்லாம் வருவினம், கோயில்களுக்கு போவினம், சுற்றுலாவுக்கு போகினம், ஜஸ் கீறீம் கடைக்கு போகினம் ஆனால் நான் மட்டும்தான் எங்க போனாலும் அம்மாவுடன் தனிய போறனான். இப்ப என்ர அப்பா இருந்தாள் என்ர நடனத்தை பார்த்து சந்தோசப்படுவார். நான் படிக்கிறத பார்த்து ஆசைப்படுவார்.

Kaniisai3.jpg?resize=800%2C582

சினிமா படங்களில் பிள்ளைகள் அப்பாக்களுடன் செல்லமாக சண்டை பிடிப்பினம், சும்மா கோவம் போடுவினம், அப்பாக்களின் முதுகில் ஏறி விளையாடுவினம் இத பார்க்கின்ற போது எனக்கும் அப்படியெல்லாம் செய்ய வேண்டும் போல் இருக்கும். அப்பா கெதியென்டு வந்தால் அப்படியெல்லாம் செய்யலாம், நான் பெரிய ஆளாக வந்திட்டன் என்றாள் அப்படியெல்லாம் விளையாட முடியாது என்றவள் ஆழத்தொடங்கினாள். சில நிமிடங்கள் அமைதிக்கு பின் இடம்பெயர்வதற்கு முன் அப்பா லீவில் வருந்து நிற்கும் போது மோட்டார் சைக்கிளில் என்னை கடைக்கு கூட்டிக்கொண்டு போவார், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு போவம், நான் கேட்ட பொருட்கள் எல்லாம் வாங்கித் தந்தவர் இதையெல்லாம் நினைக்கும் போது அழுகைதான் வருது மாமா. ஏன் கடவுள் என்ர அப்பாவை மட்டும் என்னிடம் இருந்து பிரித்து வைத்திருக்கின்றார். நானும் மற்ற பிள்ளைகள் போன்று சந்தோசமாக இருப்பது கடவுளுக்கு பிடிக்கவில்லையா? என தனது உணர்வுகளை கொட்டிக்கொண்டே சென்றாள் கனியிசை.

என்னுடைய நண்பிகளின் அப்பாக்களை பார்க்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபனம் வரும். பள்ளிக் கூடத்திற்கும், ரீயூசனுக்கும் எனது நண்பிகள் அப்பாக்களுடன் வந்து இறங்கிவிட்டு பாய் (டிலந) அப்பா என்று சொல்லும் போது எனக்கும் அப்படி சொல்ல வேண்டும் போலிருக்கும். அப்பா அப்பா என்று கூப்பிட வேண்டும் போலிருக்கும்; அம்மா இல்லாத சில நேரங்;களில் அப்பா அப்பா என்று சத்தமாக கூப்பிட்டிருக்கிறன். அம்மாவுக்கு கேட்டால் கவலைப்படுவா, அழுவா என்றதால அவ இல்லாத நேரமாக பார்த்து அப்பா என்று கூப்பிட்டு பார்ப்பன். ஆசையாக இருக்கும் அப்படி கூப்பிடும் போதும். இன்றைக்கு என்ர அப்பா எனக்கு அடிச்சுப் போட்டார் என்று நண்பிகள் சொல்லும் போது நான் எப்போது அப்பாவிடம் அடி வாங்குவேன்?. என்ர அப்பா இருந்தால் எனக்கு எப்படி அடிப்பார். என்றொல்லாம் யோசிப்பன் மாமா. எனத் தனது தந்தையின் மீதான எண்ணங்களை கூறிக்கொண்டே சென்றாள்.

அப்பாவை பெயரை சொல்லி கூட்டிக்கொண்டு போன ஆக்கள் ஏன் இன்னும் வைச்சிருக்கினம்? நிறைய இயக்க மாமாக்கள் தடுப்புக்கு போய் வந்திருக்கினம் அது மாதிரி என்ர அப்பாவையும் விடலாம்தானே? என்ர அப்பா வந்தால் நான் எவ்வளவு சந்தோசமாக இருப்பன். என்ர அம்மா எப்படி சந்தோசப்படுவா எனக் கூறிக்கொண்டே சென்றாள். அவளது கேள்விகளுக்கும் ஏக்கங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய ஆட்சியாளர்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மௌனமாக இருக்கின்றனர். அப்பாக்களுக்காக காத்திருக்கின்ற கனியிசை போன்ற பிள்ளைகளின் ஏக்கங்கள் மட்டும் நீண்டுக்கொண்டே செல்கின்றன.

Kaniisai5.jpg?resize=800%2C429

எல்லோருக்கும் வாழ்க்கையில் பல ஆசைகள் இருக்கும் ஆனால் என்னுடைய ஒரேயொரு ஆசை எனது அப்பா விரைவாக என்னிடம் வரவேண்டும் என்பதே. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் அம்மாவுடன் சென்று பங்குபற்றியிருக்கிறன். அப்பா திரும்பி வருவதற்கு நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறன் என்றவள் அழத்தொடங்கினாள். தொடர்ந்தும் கனியிசையை அழவிடாது அவளுடனான உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.

கனியிசை போன்று ஏராளமான குழந்தைகள் தங்களின் அப்பாக்களுக்காக தினமும் ஏங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் காணப்படுகிறது. கண்முன்னே பிரிந்து சென்று சரணடைந்த அப்பாக்களின், பிரித்து கொண்டு செல்லப்பட்ட அப்பாக்களின், போங்கள் வருகிறேன் என்று சொல்லிச்சென்ற அப்பாக்களின் பிள்ளைகள் நிறையவே உண்டு. இந்தப் பிள்ளைகள் தங்களின் அப்பாக்களுக்காக வீதியில் இறங்கி போராடுகின்றார்கள், பிஞ்சு வயதில் ஆலயங்களில் நேர்த்தி வைத்து காத்திருக்கின்றார்கள், சாத்திரிகளை நாடிச்செல்கின்றார்கள், ஜசிஆர்சி, ஜநா என நிறுவனங்களுக்கு நம்பிக்கையுடன் ஏறி இறங்குகின்றனர்.

புத்தகப்பையுடன் படிக்க வேண்டிய வயதில் வீதிகளில் இறங்கி அப்பாக்களின் படங்களுடனும், பதாதைகளுடனும் போராடும் இந்தக் குழுந்தைகளுக்கு நீதி எப்போது? இந்தக் குழந்தைகளின் அப்பாக்கள் இருக்கின்றார்களா? இல்லையா? அரசு இதற்கான பதிலை சொல்லுமா? அல்லது இதுவும் கடந்து போகுமா?

Kaniisai6.jpg?resize=800%2C555

 

http://globaltamilnews.net/2018/98614/

களத்தில் போராடியவர்கள் வறுமையின் பிடிக்குள் வசித்து வரும் நாச்சிக்குடா!!

1 month 3 weeks ago
 என் இனமே என் சனமே...   களத்தில் போராடியவர்கள் வறுமையின் பிடிக்குள் வசித்து வரும் நாச்சிக்குடா!! கிளஸ்டர் குண்டு தாக்குதலில் கால்களை இழந்த முன்னாள் பொறுப்பாளர்!!
 

1991ம் ஆண்டு பலாலி சண்டையில் முள்ளந்தண்டில் காயப்பட்ட முன்னாள் பொறுப்பாளர், 2009 இறுதி யுத்தத்தின்போது கிளஸ்டர் குண்டு தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்தார்.

சுயமாக நடமாட முடியாமல் வறுமையின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த உறவின் அவலங்களைப் பதிவிட்டுள்ளது ஐ.பீ.சி. தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி. இந்த உறவை தொடர்புகொள்வதற்கு அல்லது உதவுவதற்கு விரும்பும் புலம்பெயர் உறவுகள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இல: 0094212030600

வவுனியா ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் VIDEO - சமகளம்

1 month 3 weeks ago
வவுனியா ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் VIDEO - சமகளம்
வவுனியா ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் VIDEO

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி பசார் வீதி வழியாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக மாவட்ட செயலக முன்றலை சென்றடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவரே காட்டிக் கொடுக்காதே, எதிர்கட்சித் தலைவரே அரசுடன் பேசு, சுமந்திரனை வெளியேற்று போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இதன்போது குறித்த பேரணியில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களின் போது அமைதியாக பேரணியில் தலையை குனிந்து கொண்டு சென்றனர்.

Video Player
22-09-vavuniya-tna-4-mp4-image.png

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை எனவும் அவர்களை இவர்களுக்காக போராடுமாறும் பொது அமைப்புக்கள் சார்பில் கருத்துரைத்த தயா அவர்கள் தெரிவித்தார். இதன்போது மக்கள் கைதட்டி கரகோசம் செய்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பொது அமைப்புக்கள் சார்பில் பேசியவர் கருத்துரைத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்து அமைதியாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டமை மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருந்தது.

DSC_3044 (1)

http://www.samakalam.com/செய்திகள்/வவுனியா-ஆர்ப்பாட்டத்தில/

பரந்தன் கெமிக்கல் பயங்கரத்தின் அடையாளம்.

2 months 1 week ago

paranthan

குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது

இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும்.

வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு விரல் நுனியளவு செரிவு குறைந்த தின்மக்குளோரின்தான் பயன்படுகிறது அந்த மிகச்சிறிய அளவு குளோரின் கூட தொடர் பாவனையின் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்கின்றனர். சாதாரணமாக குடிதண்ணீர் கிணற்றிற்கு சற்று கூடுதலாக சில கிராம்கள் குளோரின் இட்டால் கிணற்றில் இருக்கும் மீன்கள் தவளைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செத்துமிதக்கும். அத்தனை கடுமையான விசம் குளோரின்.

சாதரணமாக குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM வரை இருந்தால் அது மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே, 2 PPM அளவு இருக்குமானால் இருமல், வாந்தி தலைசுற்றல் ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரலை காலிபண்ணும் அதுவே 60 PPM இருந்தால் நொடியில் ஆளை முடித்துவிடும்.

PPM என்ற சொல் PARTICLES PER MILLION என்பதன் சுறுக்கமாகும் அதாவது பத்து லட்சம் காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள் இருந்தாலே, அது நமது உயிரை எடுத்துவிடும்.

செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினை கப்பல் மூலம் எடுத்துச்செல்ல அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்திருக்கின்றன அது இலகுவில் கடலின் உப்பு நீரோடு வேதியல் தாக்கத்துக்கு உள்ளாகி பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால்.

ஜேர்மனியில் விசவாயு செழுத்தி ஹிட்லர் யூதர்களை படுகொலைசெய்தார் என்று கதைகளில் படித்த அந்த விசவாயு வேரெதுவும் இல்லை குளோரினே. அதேபோல் சிரியா உற்பட மத்திய கிழக்கு நாடுகளில் இரசாயன தாக்குதல்களுக்கு பயன்படுவதும் திரவக் குளோரினே.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் வடக்கின் பெருவீதியான A-9 வீதியில் கிளிநொச்சி நகருக்கு அண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுக்கு அருகில் “கெமிக்கல்” என்று அழைக்கப்படும் பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் இந்த கொடூர இரசாயன வேதிப்பொருளைத்தான் ஆனையிறவு உப்பில் இருந்து பிரித்தெடுக்கிறது.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை பழைய படி இயங்கி இன்றைய உலகின் திரவக் குளோரின் தேவையை பூர்த்திசெய்ய இலங்கை அரசு தீவிரமாய் செயற்பட்டால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் திரவ, வாயுநிலை குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா, ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்றவை ஒரு அணு உலையின் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு குளோரின் வாயுத்தாங்கி வெடித்துச்சிதறினால் வடமாகாணத்தின் மொத்தக்காற்றும் சுவாசிக்கத்தகுதியற்றதாவதோடு பலநூறு அப்பாவிகள் மூச்சுக்கு ஏங்கி மரணித்துப்போவார்கள். உலகில் அனேகமான விசவாயுக் கசிவு மரணங்கள் குளோரின் வாயுக் கசிவினாலேயே ஏற்படுகின்றன எனவே போபால் விசவாயு மரணங்களைப்போன்று பரந்தன் கெமிக்கல் மரணமும் தன் வடுவை காலம் முழுதும் சுமந்துகொண்டிருக்கும். இது ஒரு விபத்து நிகழ்ந்து குளோரின் வாயு சிலிண்டர் வெடித்தால் ஏற்படும் உடனடி விளைவு இதையும் தாண்டிய பின் விளைவுகள் பல இருக்கின்றன.

ஆனையிறவு உப்பளம் உப்பளமாக இயங்கி அங்கு உப்பு மட்டும் உற்பத்தி செய்யப்படுமானால் அதை அண்டியுள்ள நிலம் உவர் நிலமாகி பயிர்செய்கைக்கு உதவாத நிலமாய் போவதோடு நின்றுவிடும். அந்த உப்பை வைத்து திரவக்குளோரின் உற்பட வேதிப்பொருட்கள் தயாரிக்கத்தொடங்கினால் உப்பில் இருந்து இரசாயனங்களை பிரித்தெடுக்க குளோரினைவிடவும் ஆபத்து மிகுந்த இரசாயனங்கள் அதனோடு கலக்கப்படும் குளோரினை பிரித்தெடுத்தபின் வெளியாகும் ஆபத்து மிக்க இரசாயனக்கழிவுகள் பரந்தன் மண்ணிலேயே புதைக்கப்படும். அவை நிலத்தின் கீழிறங்கி நீரோட்டத்தால் இழுத்துச்செல்லப்பட்டு யாழ்குடாநாட்டின் சுண்ணக்கல் பாறைகளில் நீரோடு நீராய் சேமிக்கப்படும். எற்கனவே இவ்வாறு சேமிக்கப்பட்ட இரசாயனத்தின் விளைவைத்தான் இன்று குடாநாட்டு மக்கள் குடிநீர் பிரச்சனையாய் எதிர்கொள்கின்றனர்.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகள் அன்றுதொட்டு இன்றுவரை எங்கே கொட்டப்பட்டன கொட்டப்படுகின்றன என்பது இன்றுவரை பரம ரகசியமாகவே இருக்கின்றது. இனி கொட்டப்படுவதும் ரகசியமாகவே இருக்கும்.

காகித ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கழிவு நீரே பலபேரின் உயிரை பல இடங்களில் குடித்திருக்கிறது அந்த ஆலைகளில் பிரதான வேதிப்பொருளாய் பயன்படுத்தும் திரவக் குளோரினை தயாரிக்கும் ஆலையின் கழிவுகள் எத்தனை வீரியம் மிக்கதாய் இருக்கும்? அந்த கதிரியக்க வீரியம் மிக்க கழிவுகள் பல தசாப்தங்களாய் எம்மண்ணில்தானே தொழிற்சாலை தொழிற்புரட்சி வரலாற்று சாதனை என்ற பெயர்களில் கொட்டப்பட்டிருக்கிறது? பரந்தன் கெமிக்கலை அண்டிய மரங்களின் வேர்களிடம் பல கதைகள் இருக்கும் அவை வாழ்வோடு போராடிக்கொண்டிருப்பதைப்போல எதிர்காலத்தில் வடக்கும் போராடும்.

இலங்கை செறிவூட்டப்பட்ட திரவக் குளோரின் எற்றுமதியால் பலகோடி வருமானத்தைப்பெற்றுக்கொள்ள வன்னியை சுடுகாட்டு பூமியாக்க நினைக்கிறது. பரந்தன் கெமிக்கல் கடந்த காலங்களிலும் இன்றும் ஒரு சிலரின் வாழ்வில் வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் ஆனால் அது ஒரு பாரிய நிலப்பரப்பை இன்று சுடுகாடாய் மாற்றியதோடு மேலும் சுடுகாடாய் மாற்றவும் செய்யும். அத்துடன் பல அப்பாவி மக்களை போதிய விழிப்புணர்வு இல்லாமல் சோடாப் பெக்ரி வேலை என்ற பேரில் காவுவாங்குவதோடு ஒரு தேசத்தையும் காவுகொள்கிறது.

சிங்களத்தின் முதலாவது இன அழிப்பு தொழில் ரீதியில்தான் தொடங்கியிருக்கிறது அதை இருகரம் கூப்பி வரவேற்றவர்களும் வடக்குத்தமிழர்களாய்த்தானிருந்தனர். அத்துடன் ஆபத்து மிகுந்த இரசாயன தொழிற்சாலையை தம் நிலத்தின் கெளரவம் என்று கருதுவதும் அதை மீண்டும் செயற்படவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் ஒரே இனம் எம்மினம்தான் ஏனெனில் இரசாயனத்தொழிற்சாலைகள் எங்கு அமைக்கப்படுமோ அங்கெல்லாம் மக்கள் அதற்கு எதிராய் அதன் பின் விளைவுகளை மனதில் வைத்து போராடியிருக்கின்றனர் ஆனால் நாம்தான் நடுவீட்டில் அதற்கு இடம் கொடுத்திருக்கிறோம் .

கடந்த காலத்தில் பரந்தன் கெமிக்கல் இல்லையென்றவுடன் திரவக்குளோரின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு இறக்குமதியை மேற்கொண்ட இலங்கை அரசு அதை இலங்கையின் இன்னோர் பாகத்தில் ஏன் செயற்படுத்த வில்லை என்பதில் பல கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. எதனால் ஏனைய உப்பளங்களில் செரிவூட்டப்பட்ட திரவக்குளோரினை இலங்கை உற்பத்தி செய்யவில்லை? எதற்காய் இரசாயன தொழிற்சாலை அமைக்கவில்லை? ஆனையிறவு உப்பில் மாத்திரம் தானா திரவக்குளோரினை பிரித்தெடுக்க முடியும்? புத்தளம் உப்பளத்திலும் அம்பாந்தோட்டை உப்பளத்திலும் குளோரின் உற்பத்தி செய்ய முடியாதா?

அங்கெல்லாம் அத்தொழிற்சாலையினை அமைத்தால் அதன் எதிர்கால விளைவுகளை சிங்களமக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதால்தான் அமைக்காமல் இருக்கிறது.
நாமோ கெமிக்கல் பெக்ரியை திறந்தால் வடக்கு சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறோம் குடிக்க சுத்தமான நீர் இன்றி. இதுதான் உண்மை. வடக்கின் நிலத்தடி நீர் வற்றியா போய்விட்டது? இல்லையே குடிப்பதற்கு அது உகந்ததாக இல்லை அதில் அதிக வேதிப்பொருள் கலந்திருக்கிறது என்றுதானே இன்று யாழ் குடிநீருக்கு மாற்றுத்திட்டம் தேடுகிறீர்கள்? யாழ் நிலத்தடி நீருக்கு வேதிப்பொருள் எப்படி வந்தது எப்படி அதிக உவராக மாறியது என்று யாரேனும் கேள்விகேட்டார்களா இல்லை ஆராய்ச்சிதான் செய்தார்களா?

சுன்னாகம் பவர் ஸ்ரேசனின் கழிவு ஒயில் நிலத்தில் கலந்ததற்கே ஒரு பிரதேசத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறதென்றால் ஒரு மாபெரும் இரசாயன தொழிற்சாலையின் கழிவுகள் மண்ணில் புதைக்கப்படுவதில் நீர் நிலைகளில் கலக்கப்படுவதில் எத்தனை பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சிந்தியுங்கள். ஆனையிறவு உப்பளம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அபாயகரமான அழிவுக்கு தமிழர்கள் தாமே கையெழுத்து இட்டுக்கொடுத்திருக்கின்றனர். அதிலிருந்து அவர்கள் மீழ்வது கடினம்.

சு.பிரபா

paranthan

https://thinakkathir.com/?p=69565

தமிழ் குழந்தைகளை கழுத்தைத் திருகி கொன்றனர்; நெஞ்சை பதறவைக்கும் படுகொலைகள்! சத்துருக்கொண்டானில் அன்று நடந்தது என்ன?

2 months 1 week ago

குழந்தைகயைக் கால்களால் மிதித்தும் கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். இது மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய படுகொலையின் சாட்சியாக இருந்தவரின் வாக்கு மூலம். அன்று உன்மையில் நடந்தது என்ன இந்த படுகொலை எங்கு நடந்தது போன்ற உண்மைகளை ஆராய்கிறது இந்த கட்டுரை.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மிகக்கொடூரமான படுகொலை எனக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நடைபெற்று 28 ஆண்டு கடந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் தண்டிக்கப்படவில்லை என்பதே அந்த மக்களின் ஆராதரணமாக உள்ளது.

நல்லிணக்கம் உண்மையை கண்டறிதல் போன்ற விடயப்பரப்பிற்குள் காலடி எடுத்துவைக்கும் நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசமும் மட்டக்களப்பில் நடைபெற்ற இது போன்ற படுகொலைகளுக்கு பதிலளிக்காமல் அடுத்தகட்டத்திற்கு நகர்வதென்பது சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக அமையுமே தவிர அது நாட்டின் உண்மையான இன நல்லிணக்கத்திற்கு வழியமைத்துக் கொடுக்கப்போவதில்லை.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் என்பது படுகொலைகளின் மாதமாகவே அமைந்துள்ளது.

திட்டமிட்டவகையில் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டும் வெட்டியும் பாலியல்பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவங்கள் மட்டக்களப்பு மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே தங்களது நூற்றுக்கணக்காண உறவுகளை படுகொலை செய்தனர் என்ற உண்மைகள் ஆதாரவூர்வமாக நிருபிக்கப்பட்டும் அந்த உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டும் அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை இலங்கை அரசாங்கம் அப்போது தண்டனை வழங்காது காப்பாற்றியுள்ளதாகவும் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு என்ன பதிலை சொல்லப்போகின்றது என்பதனை 28 வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சத்துருக்கொண்டானில் அன்று நடந்தது என்ன?- உயிர் தப்பியவரின் வாக்குமூலம்!

 

வடகிழக்கு பகுதிகளில் கே.பலகிட்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழுவினால் 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் அங்கு நடந்த சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன அதன் பிரகாரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த தமிழர்கள் பலர் யுத்தம் கரணமாக மட்டக்களப்பு நகரிலும் இன்னும் பலர் படுவான்கரை பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து இருந்துள்ளனர்.

1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் “வெட்டுப்பாட்டி என்ற படையினர்” நடத்திய கொடூரமான கொலைகளுக்கு அஞ்சிய பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டம், கூட்டமாக தஞ்சமடைந்திருந்தனர்.

இப்படி கூட்டம், கூட்டமாக இருந்தவர்களை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் ஒன்றுதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.

17-08-1990 அன்று வெட்டுப்பாட்டி என்ற அரச படையினர் சத்துருக்கொண்டான் என்ற கிராமத்திலுள்ள “போய்ஸ்டவுன்” என்ற முகாமிற்கு கெப்டன் திஸ்ஸவர்ணகுலசூரிய என்ற அதிகாரியின் தலைமையில் வந்திருந்தனர்.

இவர்கள் வந்த அன்றைய நாளிலேயே கொக்குவில் கிராமத்துக்குள் புகுந்து 24 பேரை பிடித்து வந்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டுவந்து அடித்து சித்திரவதை செய்தனர்.

இதில் மரியநேசம், சுப்பிரமணியன், தவராசா, குமாரசாமி ஆகிய நால்வரையும் அந்த இடத்திலே அடித்துக்கொன்றனர். பின் டயர் போட்டு எரித்தனர்.

இதனையடுத்து 08-09-1990 அன்று சத்துருக்கொண்டான் கொளனிக்குள் சீருடையுடன் சென்ற படையினர் அங்கே தென்னந் தோட்டத்தில் ஓலைமட்டை எடுத்துக்கொண்டிருந்த த.கணபதிப்பிள்ளை, இளையான் ஆகிய இருவரையும் அவர்கள் கொண்டு வந்த ஓலை மட்டையை போட்டு உயிருடன் எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவங்கள் நடைபெற்றதை பின்னர் மிகவும் அச்சமடைந்த சத்துருக்கொண்டன் மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் இருந்த மக்கள் சிதறி ஓடினர்.

அநேகமானவர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். எஞ்சியவர்கள் பெரிய வீடுகளில் பயத்துடன் ஒன்றாகச் சேர்ந்து இருந்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

படுகொலையை நேரில் பார்த்தவரின் வாக்குமூலம்!

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காயங்களுடன் தப்பித்துவந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஸ்ணகுமார் என்ற இளைஞர்; இராணுவ முகாமிற்குள் நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டிருந்தார். அதன் பிரகாரம்

09-09-1990 அன்று பி.ப 5.30 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினர். சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர்.

ஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடிக் கிராமத்தை சுற்றிவளைத்தார்கள். மற்றையவர்கள் போய்ஸ்டவுன் முகாமிற்கு பின்புறமாக வந்து சத்துருக்கொண்டான் கொளனிப் பக்கமாகச் சென்று அங்கு ஒரு வீட்டிலிருந்த ராசா என்பவரையும் அவரின் மனைவி நேசம்மா, நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து பக்கத்து வீடுகளிலிருந்த கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்கள், அழகையா குடும்பத்தினர்கள், கதிர்காமத்தம்பி, கண்மணி குடும்பத்தினர்கள், நற்குணசிங்கம், மனைவி, சித்தி இவர்களின் மூன்று மாதக்குழந்தை அனைவரையும் அழைத்து “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளோம் உங்களுக்கான எல்லா உதவிகளையும் செய்வோம். ஏங்களுடன் வாருங்கள்” எனக் அழைத்து வந்து பனிச்சையடிச் சந்தியில் இருக்க வைத்தனர்.

அதன் பின் பனிச்சையடி சந்திக்கு பக்கத்து வீட்டிலிருந்த கிருபைரெட்ணம் குடும்பம், பேரின்பம் குடும்பம் இவர்களின் வீட்டிலிருந்த மற்றைய குடும்பங்கள் என அங்கு தஞ்சமடைந்திருந்த சுமார் 40 பேரையும்; சந்திக்கு கூட்டிவந்தனர.

இதில் பேரின்பத்தின் மனைவி பரஞ்சோதியுடன் நந்தினி என்ற பிள்ளையும் இவர்களுடன் நடக்க முடியாத, முடமான, பேசமுடியாத ஊமைப்பிள்ளைகள் நால்வரும் இருந்தனர்.

இவர்களை தூக்கி வர முடியாது எனக்கூற இவர்களை நாங்கள் முகாமிற்கு கொண்டுபோய் பாதுகாப்பு வழங்குவதுடன் சுகமாக்கியும் தருவோம் எனக்கூறி மற்றவர்களைத் தூக்கிவரும்படி இராணுவத்தினர் கூறினர்.

இவர்களின் நயவஞ்சகத்தினை அறியாத அப்பாவி மக்கள் அந்த வலது குறைந்த பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வந்து சந்தியில் வைத்தனர்.

அதன் பின் பரமக்குட்டி என்பவரின் வீட்டில் ஒன்றாக இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் பனிச்சையடிச் சந்திக்கு கொண்டு வந்து அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தனர்.

இப்படிப் பனிச்சையடிச் சந்தியில் சேர்க்கப்பட்டவர்கள் கொக்குவில், பிள்ளையாரடியில் பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரையும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டு வந்திருந்தனர்.

பின் அனைவரையும் கொண்டுசென்ற இராணுவத்தினர் மாலை 7.00 மணியளவில் போய்ஸ்டவுன் முகாமிற்குள் இருந்த ஒரு பெரிய கட்டிடத்திற்குள்;; (முன்னர் அரிசி ஆலை இருந்த கட்டிடத்தில்) 63 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேரையும் ஒன்றாக அடைத்தனர்.

இப்படி ஒன்றாக இருட்டுக் கட்டடத்துக்குள் அடைத்த பின்னர் அனைவரும் பயமும் பீதியும், நடுக்கமும் ஏற்பட்டு அழத்தொடங்கினர்.

ஒவ்வொரு குடும்பத்தினர்களும் அவர்களின் சொந்த உறவுகளை கட்டிப்பிடித்து முனுமுனுத்தவாறு அழுதனர். எல்லோரும் கடவுளே எங்களைக் காப்பாத்து என கடவுளை வேண்டினர். இவர்களை அடைத்த படையினர் தமது சீருடைகளைக் கழட்டி வைத்துவிட்டு மது அருந்தத் தொடங்கினர்.

எல்லோரும் குடித்துவிட்டு வாள், கத்தி என்பவற்றை எடுத்து பூட்டிய கதவைத் திறந்தனர். இவர்களை இருட்டில் அரைகுறையாகக் கண்ட மக்கள் அழத்தொடங்கினர்.

இவர்களில் மூவரை வெளியே எடுத்தனர். இவர்களை நாங்கள் விசாரிக்க வேண்டும், இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது, இப்படி விசாரிக்கும் போது நாங்கள் அடித்தால் மற்றவர்கள் சத்தம் போடக்கூடாது என அனைவரின் கண்களையும் கட்டினர்.

குமார் வயது 27, ஜீவானந்தம் வயது 33, கிருஸ்ணகுமார் வயது 22 ஆகிய மூவரையும் முகாமின் பின்பக்கமாக கொண்டு சென்று, சித்திரவதை செய்தனர், கத்தியால் குத்திக் கொன்றனர். இதில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக இராணுவத்தினர் கருதிய கிருஸ்ணகுமார் என்பவரின் இரு கண்களுமே படுகாயத்துடன் இந்த கொடூரக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தன.

பின்னர் வயது முதிர்ந்த ஆண்களை எடுத்து ஒவ்வொருவராக இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.

இதன்பின் வயது போன பெண்களைக் கொண்டுவந்து கம்பியாலும், பொல்லாலும் அடித்துக் கொண்டு குழியிலே போட்டனர். அடுத்து திருமணம் முடித்த அனைத்து ஆண்களையும் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறே திருமணமான பெண்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின் இளைஞர்களைக் கண்களைக்கட்டிக் கொண்டு வந்து கையையும், கால்களையும் வெட்டி அவர்கள் துடிக்கும் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களை பல துண்டுகளாக துண்டாடி கொன்று குழியிலே போட்டனர். பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

குழந்தைகயைக் கால்களால் மிதித்தும், கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த, நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.

 

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் எஞ்சியிருந்த இளம் யுவதிகளையும் வெளியே எடுத்து அவர்களை நிர்வாணமாக்கி காட்டு மிராண்டித்தனமாக மனித நேயமுள்ளவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரீகமான முறையில் அவர்களை சின்னாபின்னப்படுத்தி அவர்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர்.

இவர்கள் சத்தமாக கூக்குரலிட அவர்களின் வாய்களில் கறுப்புச் சீலையை திணித்தனர். அவர்களை அரைகுறை உயிருடன் குழியிலே கொண்டுபோய் போட்டனர். இப்படி அனைவரையும் ஒரே குழியில் ஒன்றாகக் குவித்தனர். அந்த குழி குற்றுயிரும் குறைஉயிருமாக கிடந்த உடல்களால் நிறைந்திருந்தது.

இதன் பினனர்; பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை உடல்கள் மேல் ஊற்றினர். எரிபொருள் போதாமையால் இன்னும் எடுப்பதற்காக வெளியில் சிலர் சென்றனர். மற்றவர்கள் களைப்பிலும் மதுபோதை மயக்கத்துடன் படுத்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து இறந்தவனைப் போல் சடலங்களுடன் அந்த காட்சிகளை பார்த்து படுத்துக்கொண்டிருந்த கிருஸ்ணகுமார் என்பவர் மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி பத்தைக்குள் மறைந்துகொண்டார்.

எரிபொருளுடன் வந்தவர்கள் இரத்தம் வடிய வெளியே சென்ற கிருஸ்ணகுமாரின் இரத்த அடையாளத்தை கண்டு அந்தவழியே தேடியுள்ளனர். இருந்தும் இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிருஸ்ணகுமார் ஒழித்திருந்து மேலும் நடக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பெற்றோலையும் திரும்ப ஊத்தி அனைவரையும் ஒன்றாக எரித்தனர். எங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உடல்களும் மண்டையோடுகளும் வெடிக்கும் சத்தந்தான் கேட்டன.

இதன் பின் இரவு 2.00 மணியளவில் கிருஸ்ணகுமார் தவண்டு வந்து ஒருவீட்டிற்கு வந்து பின் சிலரின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

இவர் தப்பிவந்து வைத்தியசாலையில் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு தேடினர்.

கிருஸ்ணகுமாரை அமெரிக்க மிசன் பாதர் மூலம் காப்பாற்றிய சமாதானக்குழுவினர் பின்னர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் அவரை ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சிசொல்லவைத்தனர்.

அன்றைய தினம் முகாமில் எரிக்கப்பட்ட அப்பாவி பொது மக்களின் உடல்கள் இரண்டு நாட்களாக எரிக்கப்பட்ட பின் அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இதில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 23பேரும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 18பேரும், 50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான ஆண்கள் 13பேரும், 50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான பெண்கள் 33பேரும், 25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத ஆண்கள் 16பேரும் 25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத பெண்கள் 23பேரும் 10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 20பேரும், 10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் 21பேரும், வாய்பேசமுடியாத, ஊனமுற்ற குழந்தைகள் 04பேரும், கர்ப்பிணித் தாய்மார்கள் 02பேரும் என மொத்தமாக 63 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 177பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

17-08-1990 கொல்லப்பட்டவர்கள் 04பேர், 08-09-1990 கொல்லப்பட்டவர்கள் 02பேர், 02-04-1991 கொல்லப்பட்ட 03பேர் என சத்துருக்கொண்டானில் மொத்தமாக 186 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான விபரம் கிடைத்துள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்!

தப்பிவந்த கிருஸ்ணகுமாரின் மூலமாக வெளிவந்த பல தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியிடம் வினாவியிருந்தனர்.

இதற்கு அந்த இராணுவ அதிகாரி கூறியதாவது “இங்கு நாங்கள் யாரையும் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை” என்பதே அவர்களின்; பதிலாக அமைந்தது.

இந்த சத்துருக்கொண்டான் படுகொலையை தலைமைதாங்கி நடாத்தியது போய்ஸ்டவுன் இராணுவ முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கப்டன் கெரத், விஜயநாயக்க மற்றும் இதற்கான கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பெசி பெனாண்டோ ஆகியோரே இக் கொலைகளுக்கான முக்கிய சூத்திரதாரிகளாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் இனம் காணப்பட்டனர்.

நீதி விசாரணை!  

 

இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

ஓய்வுபெற்ற நீதிபதியான கே.பாலகிட்ணர் அவர்கள் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் எனவும். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்

நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.

இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை. அவர்கள் இலங்கையின் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்படவில்லை சம்பவம் நடந்து இன்று 28 ஆண்டுகளாகியும் இக்கொலைக்கான நீதி வழங்கப்படவில்லை.

28 வருடங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள்

 

 

 

28 ஆண்டுகளுக்கு பின்னர் சம்பவம் நடந்த சத்துருக்கொண்டான் பிரதேசத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது அங்கு தங்களது உறவுகளை பறிகொடுத்த சொந்தங்கள் இன்றும் இலங்கை அரசாங்க படைகள் மீது மிகுந்த கோபத்துடன் 28 வருடங்களாக நீதி கிடைக்காததால் அனைத்து விசாரணைகளிலும் நம்பிக்கையற்று இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சத்துருக்கொண்டானில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களே இருக்கின்றன.

ஒவ்வொரு குடும்பத்திலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களால் இந்த பாதிப்பில் இருந்து இன்றுவரை வெளிவரமுடியாதவர்களாக உள்ளனர்.

பொருளாதாரம், பாதுகாப்பு, உறவுமுறைகள், சமூகம் என அனைத்திலும் பின்தங்கியவர்களாக தங்களுக்கான நீதியோ சரியான இழப்பீடுகளோ கிடைக்காத ஆதங்கத்தில் இன்றும் அந்தக் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கொத்துக் கொத்தாக உறவுகளை பறிகொடுத்த குடும்பம்  

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

09-09-1990 அன்று சத்துருக்கொண்டான் போய்ஸ்டவுன் முகாமிற்கு கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களில் தங்களது உறவுகள் 18 பேர் அடங்குவதாக சத்துருக்கொண்டானில் உள்ள கதிர்காமத்தம்பி தம்பிஐயா கூறுகின்றார்.

தனது பிள்ளைகள் உட்பட மாமா, மாமி, மச்சான்,அண்ணன் தம்பி என மொத்தமாக 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சத்துருக்கொண்டானை சேர்ந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளையின் குடும்ப சொந்தங்கள் 35 பேரும் இதில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சத்துருக்கொண்டானைச் சேர்ந்த குழந்தைவடிவேல் என்பவர் கூறும்போது தனது அம்மா அப்பா தங்கச்சி அக்கா அக்காவின் குழந்தைகள் மூன்றுபேர் அம்மம்மா அம்மப்பா தம்பி அண்ணன் என மொத்தமாக 10 பேர் படுகொலை செய்யப்பட்டதாக மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டானில் உள்ள ஜெயாநந்தி என்பவர் கூறும் போது இந்த சம்பவத்தில் தனது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.

கொக்குவில் சந்தியில் உள்ள ஜோச் சுகந்தினி என்பவர் கூறும்போது இந்தச் சம்பவத்தில் தனது அம்மா, தங்கச்சி, அம்மம்மா ஆகிய மூவரையும் கூட்டிச்சென்று இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை!
தமது உறவுகள் படுகொலைசெய்த அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டிருந்தும். அது குறித்து கடந்த 28 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி குற்றவாலிகளை தண்டிக்கவில்லை எனவே இனிமேலாவது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி பெற்றுத்தரப்படவேண்டும்.

நாங்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை நிலைமாறு கால நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்கவேண்டுமென சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.

09.09.2018ம் அன்று வெள்ளிக்கிழமை சத்துரக்கொண்டான் படுகொலையின் 28 வது ஆண்டு நினைவஞ்சலி நடைபெறவுள்ள நிலையில் அந்த அஞ்சலி நிகழ்வில் தாங்கள் இந்தப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/105891?ref=home-imp-parsely

 

வணக்கம் தாய்நாடு.... ஆதரவற்ற முதியோர்களுடன் ஓர் நாள் | யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம்

2 months 1 week ago

 

 

வணக்கம் தாய்நாடு.... ஆதரவற்ற முதியோர்களுடன் ஓர் நாள் | யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம்

Checked
Mon, 11/19/2018 - 22:01
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed