அறிவியல் தொழில்நுட்பம்

இந்தியா செலுத்திய 'பாகுபலி' ராக்கெட்டின் முக்கியத்துவம் என்ன? 4 முக்கிய அம்சங்கள்

19 hours 31 minutes ago

Bahubali Rocket, LVM3, ISRO

பட மூலாதாரம், X/@isro

படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • 3 நவம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LVM3-M5 ராக்கெட். இது'பாகுபலி' ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அந்த நிலைமை இல்லை. இது இந்திய விண்வெளி துறைக்கு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், "செயற்கைகோள் ஏவுதல் கடினமாகவும் சவாலானதாகவும் இருந்தது. வானிலை ஒத்துழைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் வெற்றியடைந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்திய கப்பற்படையின் பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Bahubali Rocket, LVM3, ISRO

"இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் CMS-03 ஐ விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள்" என்று பிரதமர் மோதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகுபலி திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில், " இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். இந்த ராக்கெட் தனது வலிமை மற்றும் பளுவின் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படுவதால் பாகுபலி (திரைப்பட) குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

LVM3 ராக்கெட் சந்திரயான் -3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவேதான் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

இதற்கு முன்பு செலுத்தப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் எவை?

இந்தியா இதற்கு முன்பு, CMS-03 செயற்கைக்கோளை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

2018-ம் ஆண்டு ஏவப்பட்ட GSAT 11 செயற்கைக்கோள் 5,854 கிலோ எடை கொண்டது. இது தென் அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஃப்ரெஞ்ச் கியானா என்ற பகுதியில் கோரோவ் என்ற இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து Ariane-5 VA-246 எனும் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முக்கிய ஏவுதளங்களில் ஒன்றாகும்.

Geostationary orbit -ல்(புவிநிலை வட்டப்பாதை) இதை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் வெவ்வேறு நாடுகளால் ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் சில : பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தால் 2013-ம் ஆண்டு ஏவப்பட்ட Inmarsat-4A F4 எனும் செயற்கைக்கோள் 6469 கிலோ எடை கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டு ஏவப்பட்ட EchoStar XVII எனும் அமெரிக்க செயற்கைக்கோள் 6100 கிலோ எடை கொண்டிருந்தது.

இருந்தபோதிலும் CMS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நான்கு காரணங்களால் இந்தியாவுக்கு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

1. தற்சார்பு

இந்தியா இந்த ராக்கெட்டை கொண்டிருப்பதன் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இதனால் ஏவுதல் செலவு குறையும் என்பதை தாண்டி தற்சார்பு நிலைக்கு இந்தியா செல்லும்.

2013-ம் ஆண்டு GSAT 7 எனும் தகவல் தொடர்பு செயற்கைகோளை ஃப்ரெஞ்ச் கியானாவிலிருந்து இஸ்ரோ ஏவியுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் காலம் முடிவடைவதால் அதை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக GSAT-R எனப்படும் CMS-03 செயற்கைக்கோளை ஞாயிறன்று விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

இந்திய கப்பற்படைக்கு பயன்படக்கூடிய தகவல்களை வழங்குவதே இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும்.

"பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுக்காக செலுத்தப்படும் செயற்கைக்கோளை வேறு நாட்டிலிருந்து ஏவுவதை விட இந்திய மண்ணிலிருந்தே ஏவுவது இந்தியாவின் தகவல்கள் பாதுகாக்கப்பட உதவும். எனவே, குறைவான செலவு, தற்சார்பு, பாதுகாப்பு என பல்வேறு விதங்களில் இது உதவும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

Bahubali Rocket, LVM3, ISRO

அதிகபட்ச எடையை விட கூடுதல் எடையை ஏந்தி சென்றது எப்படி?

LVM3 ராக்கெட் அதிகபட்சமாக 4.2 டன் (4200 கிலோ) எடையை Geosynchronous Transfer Orbit (GTO) வரையிலும், 8000 கிலோ எடையை குறைந்த புவி வட்டப் பாதை வரையிலும் ஏந்தி செல்ல முடியும்.

ஆனால் ஞாயிற்றுகிழமை GTO-வில் ஏவப்பட்ட CMS-03 செயற்கைக்கோள் 4410 கிலோ எடை கொண்டது. ராக்கெட்டின் அதிகபட்ச எடை திறனை விட 200 கிலோ அதிகமாக இருந்தாலும், இது எப்படி சாத்தியமானது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன்விளக்கினார்.

"செயற்கைக்கோளின் கூடுதல் எடையை ஏந்தி செல்லும் வகையில் ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதீத வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கும் வகையில் ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பு இருக்கும். பொதுவாக LVM3 ராக்கெட்டில் இது 245 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பின் எடை 165 கிலோ மட்டுமே.

எடை குறைந்தாலும், பாதுகாப்பு குறையாதவாறு அமைய தேவையான ஆய்வுகள் செய்த பிறகே இந்த எடை முடிவு செய்யப்பட்டது. செயற்கைக்கோளை சற்று குறைந்த உயரத்தில் வட்டப் பாதையில் நிலை நிறுத்தினோம். இப்படி வேறு சில மாற்றங்களும் செய்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம்" என்றார்.

LVM3 ராக்கெட்டின் மற்றொரு வடிவமும் தயாராகி வருகிறது என்கிறார் த வி வெங்கடேஸ்வரன். அதில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும்.

"இப்போது 4 டன் எடை திறன் கொண்ட ராக்கெட்டை 4.4 டன் வரை ஏந்தி செல்ல செய்துள்ளனர். வருங்காலத்தில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்வதற்கான ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வந்துவிட்டால், இந்தியா எந்த நாட்டையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலையை எட்டும்" என்கிறார் அவர்.

ஏனென்றால் விண்ணில் செலுத்தப்படக்கூடியவை பொதுவாக அந்த எடைக்குள்ளேயே இருக்கும் என்கிறார் முனைவர் த வி வெங்கடேஸ்வரன்.

" இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் மெட்டீரியல்களே பயன்படுத்தப்படும். அதாவது குறைந்த எடையில் அதிக திறன் கொண்ட பொருட்கள். எனவே விண்ணில் செலுத்த வேண்டியவற்றின் எடை பெரும்பாலும் அந்த வரம்புக்குள் இருக்கும்" என்றார்.

Bahubali Rocket, LVM3, ISRO

பட மூலாதாரம், முனைவர் த வி வெங்கடேஸ்வரன்

படக்குறிப்பு, முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

2. க்ரையோஜெனிக் என்ஜின் மறு- இயக்கம் (Cryogenic restart)

க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ராக்கெட்டின் என்ஜினை மீண்டும் செயல்பட துவக்குவது (Cryogenic restart) முக்கியமான செயலாகும்.

க்ரையோஜெனிக் என்ஜின் என்பது மிக குளிர்ந்த நிலையில் திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற எரிபொருளை பயன்படுத்துவதாகும். இந்த என்ஜினை பயன்படுத்தும் ராக்கெட் ஒரு இடத்தை சென்றடைந்த பிறகு, அங்கிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல அதை மீண்டும் இயக்கத் தொடங்குவது cryogenic restart எனப்படும்.

இந்த தொழில்நுட்பம் விண்வெளி துறையில் இருக்கும் பிற நாடுகளால் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டதாகும், இதை இந்தியாவே செய்து காட்டியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஊடகங்களிடம் பேசினார்.

"செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு 100 விநாடிகள் கழித்து, மீண்டும் ராக்கெட்டை இயக்கினோம். இதனை நிலத்தில் பல தடவை வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக இதனை விண்வெளியில் செய்து பார்த்துள்ளோம். அது வெற்றி அடைந்துள்ளது" என்று நாராயணன் கூறினார்.

க்ரையோஜெனிக் மறு துவக்கம் என்பது ஒரு வாகனத்தை நிறுத்திவிட்டு, அதை மீண்டும் ஸ்டார்ட் செய்வது போல என விளக்குகிறார் த வி வெங்கடேஸ்வரன்.

"அப்படி மீண்டும் இயக்கும் போது சிக்கல் இல்லாமல் அதை எளிதாக இயக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி, அதை தான் சோதித்துப் பார்த்துள்ளனர்." என்கிறார்.

Bahubali Rocket, LVM3, ISRO

பட மூலாதாரம், X/@isro

படக்குறிப்பு, க்ரையோஜெனிக் மறு துவக்க தொழில்நுட்பம் பல செயற்கைக்கோள்களை பல வட்டப்பாதைகளில் நிலை நிறுத்த உதவும்.

3. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்கள்

இதன் மூலம் பல வட்டப் பாதைகளில், பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் நிலை நிறுத்த முடியும். அதாவது எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் அந்த வெவ்வேறு இடங்களில் நின்று சரக்குகளை இறக்கி வைப்பது போன்றது.

குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) செயற்கைக்கோள்களை ஏந்தி செல்ல பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை கொண்டு ஏற்கெனவே பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் இந்தியா செலுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டு PSLV-C37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை செலுத்தி, 2014-ம் ஆண்டு 37 செயற்கைக்கோள்களை செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது இந்தியா.

Geostationary orbit (புவி நிலை வட்டப்பாதை) என்பது குறைந்த புவி வட்டப் பாதையை (Low Earth Orbit) விட உயரத்தில் இருக்கும் வட்டப்பாதையகும். Geosynchronous Transfer Orbit என்பது இந்த புவி நிலை வட்டப்பாதைக்கு செல்லும் வழியில் அதற்கு முன்பு இருக்கக் கூடியதாகும். இந்தப் பாதைகளில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த ஜிஎஸ்எல்வி ( GSLV) ராக்கெட் தேவைப்படும். இதிலும் பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுவதை சாத்தியமாக்க, க்ரையோஜெனிக் மறு துவக்கம் பயன்படும்.

"நான்கு டன் ஏந்தி செல்லக்கூடிய ராக்கெட்டில் 1.5 டன் எடைக்கான செயற்கைக்கோள் மட்டுமே பொருத்தப்படுகிறது என்றால், மீதமுள்ள இடத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்." என்று முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

4. ககன்யான் திட்டம்

டிசம்பர் மாதத்தில் LVM3 ராக்கெட்டின் மற்றொரு ஏவுதல் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்திலும் LVM3 ராக்கெட் பயன்படுத்தப்படும் என்று CMS-03 செயற்கைக்கோள் ஏவுதலின் திட்ட இயக்குநர் டி.விக்டர் ஜோசப் தெரிவிக்கிறார்.

மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று ஆளில்லா திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் அதிக எடை கொண்டவை விண்ணில் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கும் என்பதால், தற்போதைய வெற்றி அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

"ககன்யான் திட்டத்தின் குறிப்பாக பிற்பகுதிகளில் இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd67xlqxepno

'ஈஸ்ட் பூஞ்சை செவ்வாய் கிரகத்தில்கூட சாகாது' - விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?

3 days 16 hours ago

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Riya Dhage

படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 1 நவம்பர் 2025, 05:02 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு, "விண்வெளியில் மனித செல்கள் சந்திக்கும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான ஓர் அளவுகோலாக ஈஸ்ட் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் விஞ்ஞானியும் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிவேதியியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பல சவால்களைக் கொண்டது

விண்வெளிப் பரிசோதனையில் ஈஸ்ட் பூஞ்சை

உயிர்கள் பூமி தவிர பிற கோள்களில் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த புரிதலைப் பெறுவதற்காக பிரெட், மைதா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையை வைத்து விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி மாதிரிப் பரிசோதனையை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடெமிக் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, செவ்வாய் கோளின் கடினமான சுற்றுச்சூழலை ஒத்த மாதிரிகளை உருவாக்கிய ஆய்வுக் குழுவினர், அதைத் தாங்கிப் பிழைத்திருக்கக் கூடிய தன்மை ஈஸ்டுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கோளில் தொடர்ந்து நிகழும் விண்கல் மோதல் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே அளவிலான அதிர்ச்சி அலைகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல், ஹிஸ்டா என்றழைக்கப்படும் ஹை-இன்டன்சிடி ஷாக் டியூப் (HISTA) என்ற கருவி மூலம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள முனைவர் பாலமுருகன் சிவராமனின் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது. அதோடு, செவ்வாய் கோளில் உள்ள மண்ணில் காணப்படும் நச்சு வேதிப்பொருளான சோடியம் பெர்க்ளோரேடை ஈஸ்ட் எதிர்கொள்ளக் கூடிய சூழலையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர்.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Dr Bhalamurugan Sivaraman

படக்குறிப்பு, செவ்வாய் கோள் மீது விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் அதிர்வுகளை உருவாக்க உதவிய ஹிஸ்டா கருவி

செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், அதன் சுற்றுச்சூழலில் பல சவால்கள் உள்ளன. "அப்படிப்பட்ட இரண்டு சவால்கள் மீது கவனம் செலுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் செவ்வாயில் ஏற்படும் அதிர்வுகளை ஒத்த பரிசோதனை" என்று விவரித்தார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

அதுகுறித்து எளிமையாக விளக்கிய அவர், "செவ்வாய்க் கோளினுடைய வளிமண்டலம் பூமியைவிட மிகக் குறைவான அடர்த்தியுடன் இருக்கும். அதனால் தடையின்றி விண்கற்கள் செவ்வாயின் மேற்பரப்பில் மோதும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும். எனவே, ஒளியைவிட 5.6 மடங்கு அதிக வேகத்தில் விண்கல் மோதல் நிகழ்வதை ஒத்த கடுமையான அதிர்வுகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது," என்றார்.

மேற்கொண்டு பேசியவர், "மற்றுமொரு சூழ்நிலையில், செவ்வாய் மண்ணில் காணப்படும் சோடியம் பெர்க்ளோரைட் என்ற நச்சு வேதிமத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த வேதிமம் குறிப்பாக, நீருடன் ஒட்டாத வேதிப் பொருள்களுடன் வினைபுரியும். அப்படி வினைபுரிவது, உயிரினங்களின் செல்களை உடைத்துவிடும். அத்தகைய உயிரி செல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதிமத்துடன் ஈஸ்டுகள் பரிசோதிக்கப்பட்டன," என்று விளக்கினார்.

இந்த இரண்டு சவால்களையும் தனித்தனியாகவும் ஒருசேரவும் ஈஸ்ட் பூஞ்சைகளை எதிர்கொள்ள வைத்து விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அப்போது அவற்றின் எண்ணிக்கை பெருகுவதன் வேகம் குறைந்ததே தவிர அவை இறக்கவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Riya Dhage

படக்குறிப்பு, செவ்வாயின் சூழலை ஒத்த அழுத்தம் ஏற்பட்டபோது, புகைப்படத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தெரியும் ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கித் தமது எம்.ஆர்.ஏ மூலக்கூறுகளை ஈஸ்டுகள் பாதுகாத்துக் கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செவ்வாய் கோளில் ஈஸ்ட் பூஞ்சை உயிர் பிழைத்தது எப்படி?

ஒற்றை செல் பூஞ்சைகளான ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் சுற்றுச்சூழலை ஒத்திருக்கும் மிகக் கடினமான சவால்களைக்கூட சமாளித்து உயிர் பிழைத்திருந்தது எப்படி?

அதற்கான காரணம், "இந்த ஈஸ்டுகள் தங்களுக்குள் ஆர்.என்.பி எனப்படும் புரதத்தை சிறிய, துளி போன்ற கட்டமைப்புகளாக, ஒரு கவசத்தைப் போல் உருவாக்கிக் கொண்டதே" என்று ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆர்.என்.பி கவசங்கள் அணுவின் சாதாரண பாகங்களைப் போல் இருக்கவில்லை. அது ஒரு நீர்த்துளியை ஒத்த வடிவில் இருந்தது.

"அணுவானது ஒரு புற அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, அதன் மரபணு செயல்முறைகளைக் கடத்தும் எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளைச் சுற்றி இந்த ஆர்.என்.பி புரதத் துளிகள் ஒரு கவசம் போல் உருவாகின. அதன் மூலம் ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் கடினமான சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டன."

இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ளாத ஈஸ்டுகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Swati Lamba

படக்குறிப்பு,முனைவர் புருஷர்த் ராஜ்யகுரு (வலது), ஆய்வாளர் ரியா காதே (இடது)

அதேவேளையில், "இந்த ஆர்.என்.பி கவசத் துளிகள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆக்சிஜனேற்ற அயற்சி போன்ற பல காரணங்களின் விளைவாகவும் உருவாகலாம்" ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

இந்நிலையில், செவ்வாய் கோளை ஒத்த சவால் மிகுந்த சுற்றுச்சூழலை எதிர்கொண்டதன் விளைவாக, அதிலிருந்து உயிர் பிழைக்கவே ஈஸ்ட் பூஞ்சைகள் இந்தக் கவசத்தை உருவாக்கின என்ற முடிவுக்கு எப்படி வர முடியும், என்ற கேள்வி எழுகிறது.

அதற்குப் பதிலளித்த முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "ஈஸ்ட் பூஞ்சைகள் இந்த ஆர்.என்.பி. கவசங்களை பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உருவாக்கலாம். ஆனால், அவை பரிசோதிக்கப்படும் நேரத்தில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் அவை செவ்வாய் கோளின் விண்கல் தாக்கம் மற்றும் நச்சு வேதிம அபாயத்தை எதிர்கொண்டன. அதுதவிர வேறு அழுத்தங்களை அவை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவற்றுக்கு எதிர்வினையாகவே அவை ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கின என்ற முடிவுக்கு வரலாம்," என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பூஞ்சையில் தோன்றும் இந்தச் சிறிய துளி போன்ற கவசங்கள், "விண்வெளி போன்ற சூழ்நிலைகளில் உயிர்கள் இருக்கும்போது அவற்றின் செல்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்க உதவும் உயிரியல் அளவுகோலாகப் பயன்படுத்தப்படலாம்" என்றும் அவர் கூறினார்.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

படக்குறிப்பு, முனைவர் பாலமுருகன் சிவராமன் (இடது), முனைவர் அரிஜித் ராய் (வலது)

செவ்வாய் கோளில் ஈஸ்ட் பிழைத்திருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்?

இந்த ஆய்வு மனிதர்கள் விண்வெளியில் உயிர் பிழைக்க ஏதுவான வழிகளைக் கண்டறிய உதவுமா? ஈஸ்ட் பூஞ்சையை செவ்வாய் கோளின் சுற்றுச்சூழல் மாதியில் பரிசோதிப்பதால் என்ன பயன்?

ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் பேராசிரியருமான முனைவர் பாலமுருகன் சிவராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், "நிச்சயமாக இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனிதர்களின் பல விண்வெளித் திட்டங்களுக்கு உதவும். இது இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது" எனக் கூறினார்.

செவ்வாய் கோளில் ஒரு உயிர் பிழைத்திருக்கப் பல வகை சவால்கள் இருப்பதாகக் கூறிய அவர், "அவற்றில் சில சவால்களான விண்கல் மோதல் மற்றும் நச்சு வேதிமத்துடனான எதிர்வினை இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன" என்றும் அவற்றில் சாகாமல் ஈஸ்டுகள் பிழைத்து இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், "மனிதர்கள் விண்வெளியில் பிழைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலும் பல கட்டங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் இது ஒரு துளி மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, வான் உயிரியல், வான் வேதியியல் ஆகிய துறைகளில் இந்தியா ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறிய முனைவர் பாலமுருகன், அதில் இன்னும் மேம்படுவதன் மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்," என்றும் தெரிவித்தார்.

விண்வெளி சூழலில் ஆய்வு செய்ய ஈஸ்ட் பூஞ்சையை தேர்வு செய்தது ஏன்?

விண்வெளியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பதை ஆராய ஈஸ்ட் போன்ற மிகச் சாதாரணமான பூஞ்சை நுண்ணுயிரி உதவக்கூடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆய்வில், சாக்கரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) என்ற வகையைச் சேர்ந்த ஈஸ்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு அது தேர்வு செய்யப்பட மிக முக்கியக் காரணம் இருந்ததாகக் கூறுகிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியருமான புருஷர்த் ராஜ்யகுரு.

இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஈஸ்ட், ஒரு ஒற்றை செல் பூஞ்சைதான். இருந்தாலும், "அது மனித உடலில் நடப்பவை குறித்துப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. அதில் நடக்கக்கூடிய பல செயல்பாடுகள் நம் உடலிலும் நடக்கின்றன. அதனால்தான் இதை வைத்து விண்வெளியில் வாழும் திறனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது."

மேலும் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ராஜ்யகுரு, "செவ்வாய் கோளின் அழுத்தமான சூழலில் ஈஸ்ட் பூஞ்சைகள் தமது ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, உயிர்கள் பூமிக்கு வெளியே விண்வெளியின் பிற பகுதிகளில் பிழைத்திருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள எதிர்காலத்தில் உதவக்கூடும்" என்று விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e3dxvlylpo

Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!

1 week 5 days ago

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!

‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும்.

மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemon என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது சுமார் 90 மில்லியன் கிலோ மீட்டர்கள் அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 60% தூரத்திற்குள் உள்ளது.

இது தற்போது அதன் முதன்மையான பார்வைத் திறனில் உள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, Lemon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருகிறது. 

இது நவம்பர் 8 ஆம் திகதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 80 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும்.

பொதுவாக, வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது பிரகாசமாக பிரகாசிக்கும். 

இருப்பினும், Lemon வால் நட்சத்திரம் அதற்கு முன்பே பூமியை நெருங்கும் என்பதால், அது இரவு வானத்தைக் கடக்கும்போது அதன் பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1451006

மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா?

1 week 5 days ago

மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா?

பிரஷ் ஒன்றைக் கொண்டு தரையில் இருந்து மனித எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம்.

பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம்.

நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன.

ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வார்களா?

எச்சங்களாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு

எதிர்கால தொல்லுயிர் ஆய்வாளர்கள் நமது எச்சங்களைளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் நம்ப முடியாது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் ஆடம் ஃபிராங்க்.

"புவியியல் ரீதியாக ஒரு நாகரிகம் குறுகிய காலம் மட்டுமே நீடித்தால், பூமியின் உயிர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே எச்சங்களாக மாறும்," என்று அவர் விளக்குகிறார்.

இரண்டு கால்களில் உயரமாக நிற்கும் ஒரு பெரிய டைனோசர் எலும்புக்கூட்டை மூன்று பெண்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.

பட மூலாதாரம், Courtney Hale/E+ via Getty Images

படக்குறிப்பு, ஆடம் ஃபிராங்க் மற்றும் கேவின் ஷ்மிட் ஆகியோரின் 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையின்படி, டைனோசர்களின் இருப்பு இருந்த ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கும், ஒரு சில முழுமையான டைனோசர் எச்சங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ஃபிராங்க் இணைந்து எழுதிய 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்று, 165 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும், இதுவரை ஒப்பீட்டளவில் சில முழுமையான எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது.

எனவே, நமது மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாகத்தான் (இதுவரை) இருந்து வருவதால், தொல்லுயிர் எச்ச பதிவில் நாம் பெரிய அளவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் போகலாம் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

இருப்பினும், நாம் வேறு தடயங்களை விட்டுச் செல்லக்கூடும்.

பூமியின் வேதியியலை மாற்றுதல்

பூமியின் இயற்கையான புவியியலின் ஒரு பகுதியாக, பாறைகள் தொடர்ந்து அடுக்குகளாக அல்லது மண் படிவங்களாக மண்ணில் படிய வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு படிவத்தின் வேதியியல் கலவையும் அந்தக் காலக்கட்டத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும்.

பேராசிரியர் ஃபிராங்க் கூற்றுப்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் ஆகியவை பாறையில் படியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது "இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டறியப்படலாம்" என்கிறார்.

"மனிதச் செயல்பாட்டால் பூமியின் காலநிலை அமைப்பு மாறியதால், ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், கார்பன் ஐசோடோப்புகளில் ஒரு வித்தியாசம் இருப்பதை அவர்கள் காண்பார்கள்," என்கிறார் ஃபிராங்க்.

பரிணாமத்தை மறுவடிவமைத்தல்

நமது எலும்புகள் தொல்லுயிர் எச்சங்களில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும், நாம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அல்லது பல்லுயிர்த் தன்மையை மாற்றியமைத்த மற்ற இனங்களின் எச்சங்களை நாம் மாற்றியிருக்கலாம்.

பூமியில் உள்ள பாலூட்டிகளின் எடையின் (அல்லது உயிர் எடை - biomass) விகிதத்தைக் காட்டும் விளக்கப்படம் - 60% கால்நடைகள், 36% மனிதர்கள் மற்றும் 4% காட்டு பாலூட்டிகள்.

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வாழும் பாலூட்டிகளின் உயிர் எடையை (biomass) ஒப்பிட்டதில், அதில் 4% மட்டுமே காட்டுப் பாலூட்டிகளைக் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் 96% நாம் அல்லது நம்முடைய கால்நடைகள் என்று உயிர் எடையின் (biomass - அனைத்து உயிரினங்களின் மொத்த எடை) அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பறவைகளின் உயிர் எடையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக நம்முடைய கோழிப் பண்ணைகளிலிருந்து வருகிறது.

அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) என்ற லாப நோக்கற்ற இதழின்படி, நாம் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியனுக்கும் அதிகமான கோழிகளைக் கொல்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் இறக்கும் இந்த பறவைகளின் எச்சங்கள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்கலாம்.

"நாம் உயிரியல் பரிணாமத்தின் பாதையை மாற்றியுள்ளோம்," என்கிறார் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர், தொல்லுயிரியியலர் மற்றும் கெளரவ பேராசிரியர் ஜான் ஸலாசியேவிச்.

"நமது தொலைதூர எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், 'என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?' என்று ஆச்சரியப்படுவார்கள்," என்று அவர் கூறுகிறார்.

"அவர்கள் இவையெல்லாம் தொடங்கிய அடுக்குகளைத் தேடுவார்கள், அது நமது அடுக்குதான்."

நமது 'இறுதி மரபுச் சின்னம்'

பேராசிரியர் ஸலாசியேவிச் மற்றும் அவரது லீசெஸ்டர் பல்கலைக்கழக சக பேராசிரியர் சாரா கேபோட் இணைந்து எழுதிய "Discarded: How Technofossils Will Be Our Ultimate Legacy" என்ற புத்தகத்தில், நமது அன்றாடப் பொருட்கள் பூமியின் புவியியல் பதிவில் நீடித்து நிற்கும் என்று வாதிடுகின்றனர்.

ஒரு அலுமினிய பாட்டில், பாலியஸ்டர் ஸ்வெட்டர் அல்லது நிலத்தடி கார் பார்க்கிங் என இவற்றை அவர்கள் தொழில்நுட்பப் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள்.

சாம்பல் நிறப் படிமத்தில் நவீன சார்ஜிங் கேபிள்களின் அச்சு

பட மூலாதாரம், Sarah Gabbott

படக்குறிப்பு, பூமியின் மண் படிவங்களில் (sediment) தடயத்தை விட்டுச்செல்லும் அன்றாடப் பொருட்கள், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது குறித்த குறிப்புகளை எதிர்கால நாகரிகங்களுக்கு வழங்கக்கூடும்.

2020-ஆம் ஆண்டு ஆய்வின்படி, நாம் ஆண்டுதோறும் 30 ஜிகா டன் பொருட்களை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாரந்தோறும் தங்கள் உடல் எடையை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்குச் சமம்.

பூமியில் இப்போது உயிருடன் உள்ள பொருள்களைவிட, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அளவு (அவற்றின் உலர்ந்த எடை) அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனித உற்பத்தியில் மிகப்பெரிய விகிதம் கான்கிரீட்டிலிருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றலாம்.

''கான்கிரீட் கட்டடங்களின் விளிம்புகள், நடைபாதை கற்கள் என தொல்லுயிர் எச்சங்களில் வடிவங்களை அவர்கள் கண்டால்... அது இயற்கையான படிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவார்கள்." என்கிறார் ஜான் ஸலாசியேவிச்.

4 ஜிகாடன் (gigatonnes) விலங்குகளுக்கு எதிராக 8 ஜிகாடன் பிளாஸ்டிக் உலகில் உள்ளது என்பதைக் காட்டும் விளக்கப்படம்.

படக்குறிப்பு, நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020-ஆம் ஆண்டில், உலகில் உள்ள வாழும் விலங்குகளை விட மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு இரு மடங்கு அதிகமாக இருந்தது.

நமது பல பொருட்கள் மிக நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும்.

பிளாஸ்டிக் "ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான ஆண்டுகள் கூட நீடிக்கலாம்" என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார்.

2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அளவு நாம் அவ்வளவு அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறோம்.

ஆனால் இது பிளாஸ்டிக் மட்டும் அல்ல.

"நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கிராஃபைட் உள்ளது," என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார்.

"எனவே, பென்சில் வடிவில் உள்ள கிராஃபைட் நான்கு பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்."

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்தப் தொல்லுயிரியியலர் கூறுகிறார்.

"காகிதம் செல்லுலோஸால் ஆனது, அது இலைகளின் பொருளே ஆகும். எனவே... சரியான சூழலில் காகிதம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம்," என்று அவர் ஊகிக்கிறார்.

கிரக அளவில் ஏற்படும் மாற்றங்கள்

மனிதர்கள் பூமியின் புவியியலில் ஒரு பெரிய தடத்தை ஏற்கனவே பதித்திருக்கலாம். நம் மறைவுக்குப் பிறகு, வேறொரு புத்திசாலித்தனமான இனம் ஒரு நாள் அதைப் பார்க்குமா என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது மரபுச் சின்னத்தை கற்பனை செய்ய இவை பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் பேராசிரியர் ஃபிராங்க் ''ஆம்'' என்கிறார்.

"பூமியில் ஏற்படும் இந்த பெரிய மாற்றங்கள் - பல நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார்.

பிபிசி உலக சேவையின் கிரவுட் சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: எல்லென் சேங்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crmxj8n4n2lo

ஓரியானிட் விண்கல் பொழிவை எப்போது, எங்கே பார்க்கலாம்?

2 weeks ago

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

"ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது.

இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?

ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும்.

ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன.

ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.

இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன.

பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன.

ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும்.

ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்?

ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும்.

ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும்.

ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள்.

காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்?

ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும்.

இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், CFOTO

ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது?

நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது.

நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும்.

"இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது.

பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும்.

தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது.

வானம் தெளிவாக இருக்குமா?

வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.

மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/clyz56zmp40o

அறுவை சிகிச்சை இல்லாத தீர்வு: புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் 'ஒலி அலைகள்'

2 weeks 2 days ago

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

கட்டுரை தகவல்

  • ஜேமி டச்சார்ம்

  • 20 அக்டோபர் 2025, 06:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மனித உடலில் உள்ளுறுப்புகளை அறிய மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அல்ட்ராசவுண்ட், இப்போது அதிக அதிர்வெண் கொண்ட குவிக்கப்பட்ட ஒலி அலைகள் (focused high frequency sound waves) மூலம் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் புதிய வழிகளை வழங்குகிறது.

முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது ஜென் ஸு (Zhen Xu) தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டி இருக்காவிட்டால், கல்லீரல் புற்றுநோய்க்கான ஒரு அற்புதமான சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்க மாட்டார்.

2000-களின் முற்பகுதியில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் (Biomedical Engineering) துறையில் பிஹெச்டி மாணவியாக இருந்த ஸு, அறுவை சிகிச்சை (invasive surgery) இல்லாமல் நோயுற்ற திசுக்களை அழிப்பதற்கான வழியைக் கண்டறிய முயன்றார். அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைப் (அல்ட்ராசவுண்ட்) பயன்படுத்தி திசுக்களை இயந்திர ரீதியாக உடைக்கும் ஆய்வில் அவர் இறங்கினார். தனது கோட்பாட்டைப் பன்றியின் இதயங்கள் மீது பரிசோதித்து வந்தார்.

அல்ட்ராசவுண்ட் மனித காதுகளுக்குக் கேட்கக் கூடியது அல்ல. ஆனால், ஸு தனது பரிசோதனைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஒலி பெருக்கியைப் பயன்படுத்தியதால், அவர் ஆய்வகத்தைப் பகிர்ந்துகொண்ட மற்ற ஆராய்ச்சியாளர்கள் சத்தம் குறித்துக் குறை கூறத் தொடங்கினர். எனவே, தனது சகாக்களுக்குச் செவி சாய்த்து, அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் வீதத்தை (rate of ultrasound pulses) ஒலி அளவை மனித காது கேட்கும் வரம்புக்கு வெளியே கொண்டு செல்லும் அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்தார்.

அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒரு விநாடியில் ஏற்படும் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தது (இது ஒவ்வொரு துடிப்பின் நீளத்தையும் ஒரு மைக்ரோ விநாடிக்குக் குறைத்தது). அவர் முன்பு முயற்சித்த அணுகுமுறையை விட உயிருள்ள திசுக்களில் மிகவும் பயனுள்ளதாகவும் அது இருந்தது. அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே, அல்ட்ராசவுண்ட் செலுத்தப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் பன்றியின் இதயத் திசுவில் ஒரு துளை தோன்றியது. "நான் கனவு காண்பதாக நினைத்தேன்," என்று தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவப் பொறியியல் பேராசிரியராக இருக்கும் ஸு கூறுகிறார்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வரும் பல அணுகுமுறைகளில் ஒன்றாக ஹிஸ்டோட்ரிப்சி (histotripsy) என்று இருக்கிறது. இது, அறுவை சிகிச்சை இல்லாமல், ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கட்டிகளை நீக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

படக்குறிப்பு, ஒவ்வொரு விநாடிக்கும் உற்பத்தி செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கருவியைத் திசுக்களை அழிப்பதில் சிறப்பாகச் செயல்பட வைத்தது.

ஹிஸ்டோட்ரிப்சி, கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அக்டோபர் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஸுவின் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க அமைக்கப்பட்ட ஹிஸ்டோசோனிக்ஸ் (HistoSonics) என்ற நிறுவனம் நிதியளித்த ஒரு சிறிய ஆய்வில், இந்த அணுகுமுறை 95% கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராகத் தொழில்நுட்ப ரீதியான வெற்றியை அடைந்தது. வயிற்று வலி முதல் உள் ரத்தப்போக்கு வரை பக்க விளைவுகள் சாத்தியம் என்றாலும், சிக்கல்கள் அரிதானவை என்றும், இந்த முறை பொதுவாகப் பாதுகாப்பானது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கடந்த ஜூன் மாதம், ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன்தான் ஹிஸ்டோட்ரிப்சியை அங்கீகரித்த முதல் நாடானது. புதுமையான சாதனங்களுக்கான அணுகல் பாதை (Innovative Devices Access Pathway) முன்னோடித் திட்டத்தின்படி, தேசிய சுகாதார சேவையின் (NHS) கீழ் இந்தச் சிகிச்சை கிடைக்கப் பெறுகிறது.

இது புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும், புற்றுநோய் (metastatic disease) பரவலைக் கட்டுப்படுத்தவும், பிற புற்றுநோய் சிகிச்சைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் செய்யப்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் எப்படி வேலை செய்கிறது?

பலருக்கு, "அல்ட்ராசவுண்ட்" என்ற வார்த்தை உடனடியாக கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் சோனோகிராம் படங்களை நினைவுபடுத்துகிறது. சோனோகிராம் போன்ற ஒரு மருத்துவப் படத்தை உருவாக்க, ஒரு கையடக்கக் கருவி (transducer) அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. அவை உள்ளே உள்ள திசுக்களில் இருந்து எதிரொலிக்கும். திரும்ப வரும் அலைகளைக் கருவியில் உள்ள ஒரு சென்சார் எடுத்துக்கொள்கிறது. அதன் செயல்பாடுகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது. அவை பின்னர் தோலின் அடியில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஒரு படத்தைப் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

புற்றுநோய் சிகிச்சையில், அல்ட்ராசவுண்ட் அலைகள் ஒரு கட்டியின் ஒரு சிறிய பகுதியில் குவிக்கப்பட்டு அதை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அவை நுட்பமான "நுண் குமிழிகளை" (microbubbles) உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றன, அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டியின் திசுக்களை உடைக்கின்றன.

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக, ஹிஸ்டோட்ரிப்சி சாதனங்கள் அல்ட்ராசவுண்ட் அலைகளை சுமார் இரண்டுக்கு நான்கு மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு குவிய மண்டலத்திற்குள் (focal zone) அனுப்புகின்றன – "அடிப்படையில், உங்கள் வண்ணம் தீட்டும் பேனாவின் நுனி போன்றது," என்று ஸு கூறுகிறார். பின்னர், சரியான பகுதியை இலக்கு வைக்க ஒரு ரோபோ கை (robotic arm) வழிகாட்டுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஒலி விரைவான துடிப்புகளாக வழங்கப்படுகிறது. இந்தத் துடிப்புகள் நுட்பமான "நுண் குமிழிகளை" உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றனர். அவ்வாறு செய்யும்போது கட்டியின் திசுக்களை அவை உடைக்கின்றன. இதனால் பின்னர் நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு எஞ்சியவற்றைச் சுத்தம் செய்ய முடிகிறது.

இந்த முழு செயல்முறையும் வேகமானது, நச்சுத்தன்மையற்றது மற்றும் அறுவை சிகிச்சை அற்றது. பொதுவாக நோயாளிகள் அன்றே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஸு கூறுகிறார். சரியான சிகிச்சையின் நேரம் மாறுபடும் என்றாலும், ஹிஸ்டோசோனிக்ஸ் படி, பெரும்பாலான நடைமுறைகள் ஒன்று முதல் மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடுகின்றன. புற்றுநோய் கட்டிகள் பெரும்பாலும் ஒரே முறையில் அழிக்கப்பட்டு விடுகின்றன, இருப்பினும் பல அல்லது பெரிய கட்டிகள் உள்ள நோயாளிகளுக்குப் பல சுற்றுகள் தேவைப்படலாம்.

ஹிஸ்டோட்ரிப்சியின் நன்மைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன. சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் வருமா என்பதற்கு நீண்ட காலத் தரவு இன்னும் வலுவாக இல்லை. புற்றுநோய் கட்டிகள் உடலுக்குள் உடையும்போது வேறிடங்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை ஹிஸ்டோட்ரிப்சி ஏற்படுத்தக் கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கவலை எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்தக் கவலை இதுவரை விலங்கு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

படக்குறிப்பு, உருவாக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஆற்றலின் அளவைச் தேவைக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம், ஹிஸ்டோட்ரிப்சி கருவி எவ்வளவு திசு பாதிக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஹிஸ்டோட்ரிப்சி எல்லா புற்றுநோய்களுக்கும் எதிராகச் செயல்படாமல் போகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்புகள் அல்ட்ராசவுண்ட் அதன் இலக்கை அடைவதைத் தடுக்கலாம், இதனால் சில இடங்களில் உள்ள புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது.

நுரையீரல்கள் போன்ற வாயு நிரம்பிய உறுப்புகளில் ஹிஸ்டோட்ரிப்சியைப் பயன்படுத்துவது அபாயகரமானதாக இருக்கலாம், இதனால் அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்குச் சேதம் ஏற்படலாம்.

அல்ட்ராசவுண்ட் மூலம் புற்றுநோயை 'எரித்தல்'

புற்றுநோய் சிகிச்சையில் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தும் முதல் சிகிச்சை ஹிஸ்டோட்ரிப்சி அல்ல. அதிக-தீவிரமாக குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (High-intensity Focused Ultrasound - HIFU), ஒரு பழமையான தொழில்நுட்பம் ஆகும். இதுவும் கட்டிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படலாம். குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டியின் மீது செலுத்தப்பட்டு வெப்பத்தை உருவாக்குகிறது. இது அடிப்படையில் திசுக்களை "எரிக்கிறது" (cooks), என்று அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அல்ட்ராசவுண்ட் புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை மையத்தின் இணை இயக்குநரான ரிச்சர்ட் பிரைஸ் கூறுகிறார்.

"நீங்கள் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை எடுத்து, வெயில் நாளில் ஒரு உலர்ந்த இலை மீது பிடித்தால், நீங்கள் இலையை எரிய வைக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார். HIFU அடிப்படையில் புற்றுநோய் திசுக்களில் அதே காரியத்தைச் செய்கிறது, ஆனால் ஒலி ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

புற்றுநோயியல் துறையில், HIFU அநேகமாக புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு வழியாக அறியப்படுகிறது. 2025 ஆய்வின்படி, இந்தச் சிகிச்சையும் அறுவை சிகிச்சையைப் போலவே கிட்டத்தட்ட சமமான செயல்திறன் கொண்டது. நோயாளிகள் விழித்தவுடன் வலி மற்றும் சிறுநீர் தொடர்பான சில பக்க விளைவுகளை அனுபவிக்கலாம், ஆனால் அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை விட இது பொதுவாக வேகமாக இருக்கும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் நகர்வதைத் தவிர்க்கவும், அருகிலுள்ள உறுப்புகள் அல்லது திசுக்களுக்குத் தற்செயலான சேதத்தைத் தடுக்கவும், ஹிஸ்டோட்ரிப்சி மற்றும் HIFU சிகிச்சை இரண்டும் பொதுவாக பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகின்றன. ஆனால், ஹிஸ்டோட்ரிப்சி, HIFU ஆல் உருவாக்கப்படும் வெப்பத்தை உருவாக்குவதில்லை. இந்த வெப்பம் அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களைச் சேதப்படுத்தலாம்.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, HIFU என்பது புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு அல்ட்ராசவுண்டை பயன்படுத்தும் நிறுவப்பட்ட நடைமுறையாகும், இந்த நடைமுறை திசுக்களைச் சூடாக்குவதை நம்பியுள்ளது.

அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற மருந்துகள்

மற்றப் புற்றுநோய் சிகிச்சைகளுடன் இணைப்பதன் மூலமும் அல்ட்ராசவுண்டின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய ஆய்வு, ரத்த ஓட்டத்தில் நுண் குமிழிகளைச் செலுத்தி, அல்ட்ராசவுண்ட் மூலம் தூண்டுவது ரத்த-மூளைத் தடையை (blood-brain barrier) தற்காலிகமாகத் திறக்க முடியும் என்று தெரிவிக்கிறது. இந்தத் தடை பொதுவாக ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகள் மூளைக்குள் நுழைந்து சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சையின் போது அதை வேண்டுமென்றே திறப்பது, மருந்துகள் அவை தாக்க வேண்டிய புற்றுநோய் கட்டிகளைச் சென்றடைய அனுமதிக்கும்.

கனடாவின் சன்னிப்ரூக் சுகாதார அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானியான தீபா சர்மா, அந்த நன்மைகள் மூளைப் புற்றுநோயுடன் நின்றுவிடவில்லை என்று கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண் குமிழிகளின் கலவையை அவர் பல புற்றுநோய் வகைகளில் ஆய்வு செய்துள்ளார். இது மருந்து விநியோகத்தை பரவலாக மேம்படுத்தும் என்று அவர் கண்டறிந்துள்ளார்.

"கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது, ஆனால் இது பல நீண்ட காலப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது," என்று சர்மா கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் தூண்டப்பட்ட நுண் குமிழிகளின் உதவியால் கதிர்வீச்சு சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடிந்தால், அதே சிகிச்சைப் பலன்களை பெற குறைந்த கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்த முடியும். இதனால் பேரழிவுகரமான பக்க விளைவுகளையும் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கோட்பாட்டளவில் நம்பலாம்.

அல்ட்ராசவுண்ட் நோயெதிர்ப்பு சிகிச்சைக்கும் (immunotherapy) ஒரு நல்ல இணையாகத் தோன்றுகிறது. இந்தச் சிகிச்சை அணுகுமுறை, மறைந்து இருக்கும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதில் கவனம் செலுத்துகிறது.

குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டிகளைச் சூடாக்கிச் சேதப்படுத்தும் போது, இந்தத் திசுக்களை நோயெதிர்ப்பு மண்டலத்திற்குக் கூடுதலாகக் தெரியும்படி செய்கிறது என்று அல்ட்ராசவுண்டை நோயெதிர்ப்பு சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிரைஸ் கூறுகிறார்.

அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புற்றுநோய்க்கு எதிராக இந்த இணை சிறப்பாக செயல்பட முடியுமா என்பதைக் கண்டறிவது எதிர்கால ஆராய்ச்சிக்கான ஒரு திசையாக இருக்கும். புற்றுநோய் உடல் முழுவதும் பரவும் போது, ஒரே ஒரு கட்டியை மட்டும் அகற்றுவது போதாது. எனவே, மெட்டாஸ்டேடிக் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்.

மருத்துவர்கள் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி ஒரு கட்டியை உடைப்பதால், அதன் பண்புகளை நோயெதிர்ப்பு அமைப்பு அறியும். இதன் மூலம், உடலின் மற்ற இடங்களில் உள்ள புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஒரு அமைப்பு அளவிலான தாக்குதலை நோயெதிர்ப்பு அமைப்பு தொடங்குவதற்கு வழிவகுப்பதுதான் உச்சமாக இருக்கும் என்று பிரைஸ் கூறுகிறார்.

இது இன்னும் எந்த வகையான சோதனைகளிலும் பரிசோதிக்கப்படவில்லை, ஆனால் கோட்பாட்டளவில், "ஒரே ஒரு கட்டிக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் 10, 15, 20 கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார்.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

படக்குறிப்பு, ஹிஸ்டோட்ரிப்சி டிரான்ஸ்யூசர் தலைப்பகுதி, திசுக்களை உடைக்கக்கூடிய நுண்ணிய குமிழிக் கூட்டத்தை (tiny cloud of bubbles) உருவாக்குகிறது

அல்ட்ராசவுண்ட் மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை குறித்த சோதனைகள் இன்னும் ஒப்பீட்டளவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று பிரைஸ் எச்சரிக்கிறார். இந்த இணைந்த அணுகுமுறை சிகிச்சையை எப்போது அல்லது எப்படி மாற்றும் என்பதை அறிய மேலும் பல ஆராய்ச்சிகள் தேவை.

அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற பயனுள்ள ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகளை மாற்றுவதை அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புற்றுநோயியலில் அல்ட்ராசவுண்ட் அணுகுமுறை ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது.

அல்ட்ராசவுண்ட் புற்றுநோய்க்கு ஒரு "அற்புதமான குணம் அளிப்பது" அல்ல, என்று ஸு கூறுகிறார். எந்தவொரு மருத்துவ சிகிச்சையைப் போலவே, இதற்கும் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டும் சத்தத்தில் இருந்து விடுவித்ததைப் போலவே, அவரது கண்டுபிடிப்பும் – மற்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் – வரும் ஆண்டுகளில் நோயாளிகளின் தேவையற்ற துன்பத்தைத் தவிர்க்க உதவும் என்று ஸு நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy7e6p4ykl8o

குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி!

2 weeks 2 days ago

குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி! தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்!

kalkionline%2F2025-09-01%2Ff45yb1fj%2Fqu

கலைமதி சிவகுரு

நம்மால் பயன்படுத்தப்படும் கணினிகள் பொதுவாக Bit அடிப்படையில் இயங்குகின்றன. ஒரு பிட் என்றால் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி என்பது க்யூபிட் (Qubit) அடிப்படையில் செயல்படுகிறது. க்யூபிட் என்பது ஒரே நேரத்தில் 0வும் 1வும் இருக்க முடியும் (இதற்கு Superposition என்கிறார்கள்). மேலும், இரண்டு க்யூபிட்கள் இடையே வினோதமான Entanglement எனும் தொடர்பு இருக்கும். இதனால் அவை ஒரே நேரத்தில் பெரும் அளவிலான கணக்கீடுகளை செய்யும். இதுவே குவாண்டம் கணினியை, சாதாரண கணினியை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது.

எப்படி செயல்படுகிறது?

Superposition – ஒரு க்யூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்கும். இதனால் ஒரே நேரத்தில் பல கணக்கீடுகள் செய்ய இயலும்.

Entanglement – இரண்டு க்யூபிட்கள் இணைந்தவுடன், ஒன்று மாறினால் இன்னொன்றும் உடனே மாறும். இதனால் தகவல் பரிமாற்றம் வேகமாகும்.

Quantum Gates – பாரம்பரிய கணினிகளில் “Logic Gates” பயன்படுத்தப்படும். குவாண்டம் கணினிகளில் “Quantum Gates” பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்

குவாண்டம் கணினியின் சக்தி எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்:

1. ரசாயனம் & மருந்து கண்டுபிடிப்பு

மூலக்கூறு/புரதங்களின் துல்லியமான எரிசக்தி நிலைகள், வினை பாதைகள், பைண்டிங் ஆஃபினிட்டி ஆகியவற்றை கணிக்கல். செயல்படும் விதம் VQE (Variational Quantum Eigensolver), UCC, QPE (Quantum Phase Estimation) போன்ற அல்காரிதம்.

பலன்: புதிய மருந்துகளை உருவாக்கும் போது மூலக்கூறு அமைப்புகளை விரைவாக கணக்கிட உதவும். NISQ கால கட்டத்தில் ஹைப்ரிட் (Classical+Quantum) முறைகள் ஆராய்ச்சியில் பயன்படும்.

2. ஆப்டிமைசேஷன் (திட்டமிடல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை-செயின்)

ரோட்டிங், அட்டவணை அமைப்பு, பவர்-கிரிட் லோடு பாலன்சிங், வானூர்தி/ரயில் ஸ்லாட் ஒதுக்கீடு. செயல்படும் விதம் QAOA (Quantum Approximate Optimization Algorithm), QUBO மேப்பிங், குவாண்டம் அந்நீலிங்.

பலன்: செலவு/நேரம் குறைப்பு, பெரிய தேடல்-வெளியில் நல்ல தீர்வு வேகமாக. பைலட்-புரூஃப்-ஆஃப்-கான்செப்ட்கள்; உற்பத்தி தர நிலைக்கு வர Error-correction தேவை.

3. குவாண்டம்-சிமுலேஷன் (பொருட்வியல், உயர் ஆற்றல், காலநிலை)

காந்தப் பொருட்கள், சூப்பர் கண்டக்டர்கள், திரவ இதிர்புரை (turbulence) போன்ற சிக்கலான அமைப்புகள். செயல்படும் விதம் குவாண்டம் சர்க்கூட் அடிப்படையிலான சிமுலேஷன், Trotterization/Analog simulation.

பலன்: புதிய பொருட்கள், அதிக திறன் கொண்ட எரிசக்தி சேமிப்பு. முன்னேற்றம் வேகமாக இருப்பினும் fault-tolerant கணினி கிடைத்தால் வலிமையான ஜம்ப்.

4. கோட்பாடு (Cryptography) – தற்போதைய கடவுச்சொல் முறைகளை உடைத்துவிடும் திறன் கொண்டது. அதேசமயம், புதிய பாதுகாப்பான குறியாக்க முறைகளுக்கும் வழி வகுக்கும்.

5. செயற்கை நுண்ணறிவு (AI) – மெஷின் லெர்னிங் மற்றும் தரவு பகுப்பாய்வை மிக வேகமாகச் செய்யும்.

6. விண்வெளி ஆராய்ச்சி – பெரிய அளவிலான சிக்கலான கணக்குகளை எளிதாகக் கணக்கிட உதவும்.

7. சுற்றுச்சூழல் – வானிலை முன்னறிவிப்பு, இயற்கை பேரிடர் கணிப்பு ஆகியவற்றில் துல்லியத்தைக் கூட்டும்.

சவால்கள்:

குவாண்டம் கணினி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சில சவால்கள் உள்ளன. க்யூபிட்களை நிலைத்திருக்கச் செய்வது கடினம் (Quantum Decoherence). இயங்க அதிக குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது (பெரும் அளவிலான “super-cooling”). செலவுகள் மிக அதிகம்.

எதிர்காலம்:

இப்போது Google, IBM, Microsoft, Intel போன்ற பெரிய நிறுவனங்கள் குவாண்டம் கணினியை உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஒரு நாள் குவாண்டம் கணினி முழுமையாக வந்துவிட்டால், கணக்கீட்டின் வேகம் கணித்துக்கூட முடியாத அளவுக்கு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் “புதிய யுகம்” தொடங்கும்.

https://kalkionline.com/science-and-technology/quantum-computing-is-a-new-era-of-computing-technological-revolution

ஸ்பேஸ்எக்ஸின் 11-ஆவது ரொக்கெட் சோதனை வெற்றி : நிலவுப் பயணத்திற்கான மைல்கல்

2 weeks 6 days ago

15 Oct, 2025 | 09:23 AM

image

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது.

இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்படுகிறது. இந்த ரொக்கெட் சோதனையின் வெற்றி, விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்த ரொக்கெட் மூலமாகவே, இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227764

தோல் செல் மூலம் உங்கள் மரபணு கொண்ட குழந்தையை உருவாக்கலாமா?

1 month ago

உங்கள் தோல் மூலம் கூட கருத்தரிக்க முடியும்

பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 1 அக்டோபர் 2025, 11:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம்.

ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.

இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும்.

இப்போது விஞ்ஞானிகள் இந்த விதிகளை மாற்றுகின்றனர். இந்தப் புதிய முயற்சி மனித தோலில் இருந்து தொடங்குகிறது.

ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உடலை உருவாக்கத் தேவையான முழு மரபணு (டிஎன்ஏ) இருக்கும் தோல் செல்லின் நியூக்ளியஸை (nucleus) எடுக்கின்றனர்.

பின்னர், அதை மரபணு தகவல்கள் நீக்கப்பட்ட ஒரு கருமுட்டையில் வைக்கின்றனர்.

இந்த கட்டம் வரை, 1996-ல் உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது இது.

இந்த முறை, 1996-ல் உருவாக்கப்பட்ட உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது.

பட மூலாதாரம், OHSU

படக்குறிப்பு, பெரிய வட்டம், நுண்ணோக்கியில் பார்க்கப்படும் கருமுட்டையைக் குறிக்கிறது. கீழே உள்ள வெள்ளைப் புள்ளி, தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்டு கருமுட்டையில் வைக்கப்பட்ட மரபணு பொருளாகும்.

46 குரோமோசோம்கள்

ஆனால், விந்தணுவால் இந்த கருமுட்டையை கருத்தரிக்க முடியவில்லை. ஏனெனில் தானமாக பெறப்பட்ட இந்த கருமுட்டைக்குள் ஏற்கெனவே முழு குரோமோசோம்களும் உள்ளன. ஒரு குழந்தை உருவாக, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் (மொத்தம் 46) தேவை. ஆனால், இந்த முட்டையில் ஏற்கெனவே 46 குரோமோசோம்கள் இருக்கின்றன.

அதனால், கருமுட்டை தனது குரோமோசோம்களில் பாதியை வெளியேற்ற வேண்டும். அதன் பின் தான் கருமுட்டையால் விந்தணுவுடன் சேர முடியும். இந்தச் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் "மைட்டோமியோசிஸ்" என்று அழைக்கின்றனர். (இது "மைட்டோசிஸ்" மற்றும் "மியோசிஸ்" என்ற செல்கள் பிரியும் இரண்டு முறைகளின் கலவை).

'எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும்'

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு, 82 செயல்படும் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. அவை விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டன. சில கருமுட்டைகள் கருவின் ஆரம்ப கட்டத்துக்கு வளர்ந்தன. ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் எதுவும் வளரவில்லை.

"சாத்தியமற்றது என்று நினைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் செய்துவிட்டோம்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கரு உயிரணு மற்றும் மரபணு சிகிச்சை மைய இயக்குநர் பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ்.

ஆனால், இந்த செயல்முறை இன்னும் முழுமையாகவில்லை. கருமுட்டை எந்த குரோமோசோம்களை வெளியேற்றுவது என்பதை தற்செயலாகத் தேர்ந்தெடுக்கிறது. நோய் வராமல் இருக்க, 23 வகைகளில் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், சில வகைகள் இரண்டாகவும், சில வகைகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன.

மேலும், இந்த முறையின் வெற்றி விகிதம் 9% மட்டுமே. குரோமோசோம்கள் 'கிராசிங் ஓவர்' என்ற முக்கியமான டிஎன்ஏ மறுசீரமைப்பு செயல்முறையையும் தவறவிடுகின்றன.

"இந்த முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும்," என்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மிட்டாலிபோவ்.

"எதிர்காலத்தில் இது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் குழந்தை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது."

இந்தப் புதிய தொழில்நுட்பம், ‘இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்’ எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் முட்டைகளும் உருவாக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks

படக்குறிப்பு, பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ்

இந்தப் புதிய தொழில்நுட்பம், 'இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்' எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் கருமுட்டைகளும் உருவாக்கப்படுகின்றன.

இது இன்னும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) மூலம் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது.

வயதான பெண்கள், விந்தணு குறைவாக உற்பத்தி செய்யும் ஆண்கள், அல்லது புற்றுநோய் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடைந்தவர்களுக்கு இந்த முறை நம்பிக்கை தரும்.

இந்தத் தொழில்நுட்பம் பெற்றோராவதற்கான பாரம்பரிய விதிகளை மாற்றுகிறது. இதற்கு பெண்ணின் தோல் செல்கள் மட்டுமல்ல, ஆணின் தோல் செல்களையும் பயன்படுத்தலாம்.

இதனால், தன்பாலின தம்பதிகள் இருவரும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற முடியும். உதாரணமாக, ஆண் தம்பதிகளில் ஒருவரின் தோல் செல்களால் கருமுட்டை உருவாக்கி, மற்றவர் விந்தணுவால் கருத்தரிக்கலாம்.

"போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் குழந்தை பெற முடியாத கோடிக்கணக்கான மக்களுக்கு இது நம்பிக்கை தருவதோடு, தன்பாலின தம்பதிகளுக்கு இருவருடனும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெறும் வாய்ப்பையும் கொடுக்கும்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பவுலா அமடோ.

பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்

ஹல் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியர் ரோஜர் ஸ்டர்மி, இந்த அறிவியல் முயற்சி "முக்கியமானது" மற்றும் "சிறப்பானது" என்று தெரிவித்தார்.

"இதுபோன்ற ஆராய்ச்சிகள், இனப்பெருக்கத்தில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மக்களுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன," என்று அவர் கூறினார்.

"மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொறுப்பை உறுதி செய்யவும் வலுவான நிர்வாகம் தேவை என்பதை இது நமக்கு உணர்த்துகிறது."

எடின்பரோ பல்கலைக்கழகத்தின் எம்ஆர்சி இனப்பெருக்க சுகாதார மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ரிச்சர்ட் ஆண்டர்சன், புதிய கருமுட்டைகளை உருவாக்கும் இந்தத் திறன் "பெரிய கண்டுபிடிப்பு" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆய்வு பல பெண்கள் தங்கள் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தைகளைப் பெற உதவும் ஒரு முக்கிய படியாக இருக்கும்,"என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgqze2pq4vo

1972-க்கு பிறகு நிலவுக்கு மனிதனை அனுப்பாத நாசா, இப்போது மீண்டும் அதற்கு திட்டமிடுவது ஏன்?

1 month 1 week ago

ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • 25 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது.

50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது.

ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும்.

வரைபடம்: ஆர்டெமிஸ் II

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்: ஆர்டெமிஸ் II, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் செல்லும் முதல் நிலவுப் பயணமாக இருக்கும்.

நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார்.

"வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்," என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்."

விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), "ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது" என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார்.

எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது.

ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.

அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன.

ஆர்டெமிஸ் 2 திட்டம்

ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார்.

"அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திட்டத்தின் நோக்கம்

நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும்.

ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்?

ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System - ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும்.

தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும்.

எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும்.

விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள்.

இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு 'நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை' நடத்தும் - இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும்.

பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள்.

ஆர்டெமிஸ் 2 திட்டம்

ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள்.

அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள்.

விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார்.

"எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்." என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள்.

பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும்.

ஓரியன் விண்கலத்திற்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை விண்வெளி உடைப் பொறியாளர்கள் விளக்குகிறார்கள்.

பட மூலாதாரம், NASA/Robert Markowitz

படக்குறிப்பு, ஓரியன் விண்கலத்துக்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை பொறியாளர்கள் (spacesuit engineers) விளக்குகிறார்கள், இவர்களே விண்வெளி வீரர்களுக்கான உயிர்காக்கும் கருவிகளை வடிவமைக்கின்றனர்.

இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை" என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது.

"'முன்னதாக இல்லை' என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது," என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

"[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czrpkd625m0o

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

1 month 1 week ago

AI-human-heads.jpg?resize=750%2C375&ssl=

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும்  ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நேர்மைச் சவால்கள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதோடு, AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவும் வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1448416

அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?

1 month 1 week ago

ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலையாக ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும்.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா?

நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை.

அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணிந்திருந்த உடை, சாப்பிட்ட உணவு, கேட்ட பாடல்கள் என அனைத்தையும் மூளையில் படம்பிடித்து வைத்திருப்பதைப் போல நினைவில் வைத்திருப்பார்களாம். மருத்துவ ரீதியாக இது ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) எனக் குறிப்பிடப்படுகிறது.

ஹைப்பர்தைமீசியா என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு அதீத ஞாபக சக்தி இருப்பது வரமா? அல்லது சாபமா?

ஹைப்பர்தைமீசியா என்பது நோயா?

இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவருக்கு வழக்கமான நினைவாற்றலை விட, மிகவும் துல்லியமான விவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (Autobiographical Memory) இருப்பதை ஹைப்பர்தைமீசியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மிகவும் அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (HSAM) எனவும் குறிப்பிடப்படுகிறது.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' எனவும் குறிப்பிடுகின்றனர்.

"புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை நினைவில் கொள்ளும் பொதுவான நினைவாற்றலில் (superior memory) இருந்து இது வேறுபடுகிறது. மாறாக சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே எளிதாக நினைவில் கொள்ள முடியும்" என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UCI), இதுபோல தங்கள் வாழ்க்கையின் தருணங்களை எளிதாக நினைவுகூரும் ஒரு குழுவின் மூளை மற்றும் மனதின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்தனர்.

இந்த அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு UCI நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் மற்றும் சக ஊழியர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.

அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் கொண்டவர்கள் வழக்கமான ஆய்வக நினைவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை. "இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் 10½ வயதிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தவர்களாக உள்ளனர்" என மெக்காக் கூறியதாக 2012ஆம் ஆண்டு வெளியான நியூரோசயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர்

படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர்

இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் விஜய சங்கரை தொடர்பு கொண்டோம்.

"தைமீசியா என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பது பொருள். ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுதல். முதலில் இது ஒரு நோய் கிடையாது. இது நரம்பியல் அறிவாற்றல் (neuro cognitive) தொடர்பான ஒரு மருத்துவ நிலை ஆகும்." என விளக்கினார்.

மேலும் "இது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு 10 - 12 வயது முதலே தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பொரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களின் ஞாபகம் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்." என்றார்.

இந்த ஞாபக சக்தி கல்விக்கு உதவுமா?

தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார்.

அப்படியென்றால் இவ்வளவு ஞாபக சக்தி இருக்கும் ஒருவரால் தாங்கள் படிக்கும் விஷயங்கள், புதிய தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் எளிதாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.

இதுகுறித்து மருத்துவர் விஜயசங்கர் கூறுகையில், "இதுபற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைதான் துல்லியமாக நினைவில் கொள்ள முடியும். அதேசமயம் படிப்பிலோ, புதிய தகவல்களை அறிந்துகொள்வதிலோ இது உதவாது. அவர்களும் மற்றவர்களைப்போல படித்து, மனப்பாடம் செய்ய வேண்டும்." என்கிறார்.

"ஆனால் படித்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவது வேண்டுமானால், மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்." எனக் கூறினார்.

இதற்கான அறிகுறிகள் என்ன?

இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவேளை உங்களுக்கும் இந்த மருத்துவ நிலை இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி,

  • வழக்கத்திற்கு மாறான நினைவாற்றல் - உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை அதீத விவரங்களுடன் நினைவில் கொள்வது

  • தானாக நினைவுகொள்தல் - உங்களை அறியாமலேயே கடந்தகால தருணங்கள் நினைவில் தோன்றுவது. குறிப்பாக தேதி அல்லது சில குறிப்புகளை பார்க்கையில் இது தோன்றலாம்.

  • காலண்டரைப் போன்ற திறன் - ஒரு குறிப்பிட்ட தேதியில், பல தசாப்தங்களுக்கு முன்பும் கூட என்ன செய்து கொண்டிருந்தீர் என்பதையும் உடனடியாகக் கூறிவிடுவீர்கள்.

  • வலுவான உணர்வு பிணைப்பு - அந்த தருணம் நிகழும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ, அதை நினைவில் கொள்ளும்போதும் அதே உணர்வு தோன்றும்.

  • நேரம் - சராசரி மக்களை விட கடந்த காலத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்கள்.

அச்சு பிசகாத நினைவாற்றல்

HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ்.

இதுபற்றி 2017ஆம் ஆண்டு பிப். 8ஆம் தேதி 'தி கார்டியன்' இதழில் ஒரு கட்டுரை வெளியானது. பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் லிண்டா ரோட்ரிக்ஸ் மெக்ராபி இதனை தொகுத்திருந்தார். அதில் 1974ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ் என்ற பெண்ணுக்கு HSAM எனப்படும் இந்த மருத்துவ நிலை முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1965-ல் பிறந்தவர்.

இந்த கட்டுரையின் படி, இவரிடம் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, "அது ஒரு வெள்ளிக்கிழமை" என தனது நினைவில் தோன்றியதை விவரிக்கிறார். தொடர்ந்து "எனது இரட்டை சகோதர நண்பர்களான நினா மற்றும் மைக்கேல் உடன் பாம் ஸ்பிரிங்ஸ் சென்றேன். அதற்கு முன்பாக அவர்கள் வாக்ஸிங் செய்துகொண்டனர். அப்போது வலியால் கத்திக்கொண்டே இருந்தார்கள்" என சிறிய விவரங்களையும் நேற்று நடந்ததைப் போல அச்சுப் பிசகாமல் விரிவாக விவரித்தார்.

இவர் தனது 51 வயதிலும், 1980 முதல் என்ன நடந்தது என்பதை அவ்வளவு நுணுக்கமாக நினைவில் வைத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களின் அவரின் விருப்பமின்றியே நிறைய விஷயங்கள் அவரின் நினைவில் உதிப்பதாகவும் கூறினார்.

51 வயதிலும் இவரின் நினைவுகள் துல்லியமாக இருப்பது பற்றி மருத்துவர் விஜய சங்கரிடம் கேட்டபோது, "இந்த நிலை கொண்டவர்களுக்கு வயதாக ஆக ஞாபகங்கள் மறைந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. 70 - 80 வயதுகளில் கூட இவர்களால் துல்லியமாக கடந்த காலத்தை நினைவுகூர முடியும்" என்றார்.

ஜில் பிரைஸ் தொடர்பான மெக்காக்-ன் ஆய்வறிக்கை வெளியான பின்பு, 2007ல் பிராட் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த நிலை இருப்பதாக மெக்காக்-ஐ நாடினார். 2வதாக இவருக்கு இந்த நிலை உறுதி செய்யப்பட்டது. பின் 3வதாக ரிக் பாரன், 4வதாக பாப் பெட்ரெல்லா என அவரின் ஆய்வறிக்கை வெளியான பிறகு பலரும் இந்த மருத்துவ நிலை இருப்பதாக தன்னை தொடர்புகொண்டதாக மெக்காக் குறிப்பிடுகிறார்.

2011ஆம் ஆண்டில் இந்த HSAM மருத்துவ நிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும். அப்போதுவரை உலகிலேயே 22 பேருக்கு மட்டுமே இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக தி கார்டியனில் வெளியான கட்டுரை கூறுகிறது.

இதற்கு காரணம் என்ன?

பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக்

"ஒரு தருணம் எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தளவிற்கு அது நினைவில் கொள்ளப்படுகிறது" என நினைவாற்றல் பற்றி பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் ஆய்வு கூறுகின்றன.

நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுவாரஸ்யத்தை சற்று தூண்டும் விதமான உணர்வு ஏற்படும்போது, அது அட்ரீனல் ஸ்ட்ரெஸ் (adrenal stress) ஹார்மோன்களை வெளியேற்றும்.

இந்த ஹார்மோன்கள் மூளையில் உணர்வுகளை செயல்படுத்தும் பகுதியான அமிக்டலாவை (amygdala) செயல்படுத்தும். இந்த அமிக்டலா இது முக்கியமான தருணம் எனவும், இதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இந்த முறைதான் நமது நினைவுகள் எவ்வளவு வலிமையாகின்றன என்பதை தீர்மானிக்க உதவுகிறது." என மெக்காக் விளக்குகிறார்.

"சாதாரண நினைவாற்றல் கொண்ட நபர்களை விட HSAM நிலை கொண்டவர்களால் எளிதில் பழைய நினைவுகளை நினைவுகூர முடியும்" என UCI நரம்பியல் பட்டதாரி மாணவர் அரோரா லிபோர்ட் மற்றும் நரம்பியல் நிபுணரும், டாக்டர் க்ரைக் ஸ்டார்க் மே 12ஆம் தேதி வெளியிட்ட கற்றல் மற்றும் நினைவாற்றல் பற்றிய நியூரோபயாலஜி இதழ் (The Journal Neurobiology of Learning and Memory) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நினைவுகளை சரிபார்த்தால் இவை 87% உண்மையானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளையின் அமிக்டலா பகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளையின் அமிக்டலா பகுதி

ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள்

சமீபத்தில் பிரான்ஸை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இந்த மருத்துவ நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி PsyPost செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சிறுமியை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

"சிறுவயதில் தனக்கு கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரை யாரும் நம்பவில்லை. பின் தனது 16 வயதில்தான் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்" என அந்த கட்டுரை கூறுகிறது.

இது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH), ஆராய்ச்சியாளர் வாலண்டினா லா கோர்டேவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட நாளின் வானிலை முதற்கொண்டு துல்லியமாக கூறும் இவரின் இந்த திறன் கல்வியறிவில் எடுபடவில்லை. படிப்பு சார்ந்தவை என வரும்போது அதன் நினைவுகள் தானாக வருவதில்லை. தாமாக முயன்றால் மட்டுமே ஞாபகம் வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, இவரின் சுயசரிதை நினைவாற்றலை மதிப்பிட இருமாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனது வாழ்நாளில் 5 கட்டங்களில் இருந்து 4 தருணங்களை நினைவுகூரச் செய்தனர். இதில் இவருக்கு எந்தளவுக்கு துல்லியமாக தருணங்களை நினைவில் கொள்ள முடிகிறது என பரிசோதிக்கப்பட்டது.

இரண்டு முக்கிய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஒன்று ஒட்டுமொத்த நினைவக மதிப்பெண். மற்றொன்று குறிப்பிட்ட மற்றும் விரிவான நினைவுகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு எபிசோடிக் மெமரி (EM).

"இந்த பரிசோதனையில் இவருக்கு கடந்த கால நினைவுகள் தெளிவாக இருந்தன. அவை மீண்டும் நடப்பது போல் அடிக்கடி அவர் உணர்கிறார். மனம் சார்ந்த இவரின் காலத்தை கடக்கும் ஆற்றல் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் செல்கின்றன. இவரால் தனது எதிர்கால நிகழ்வுகளையும் விரிவாக கணிக்க முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது. இது அந்த சிறுமிக்கு வலுவான சுய விழிப்புணர்வு மற்றும் முன் அனுபவ உணர்வுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறது.

வரமா? சாபமா?

இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்?

"பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார்.

"இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார்.

"நாம் நினைவில் இல்லாததை மறதி எனக் கூறுகிறோம். ஆனால் சிறிய தகவல்களை சேமித்து வைப்பதால் என்ன பயன். அதன்மூலம் ஏதாவது பயனுள்ளதை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அது அறிவு அல்லது ஞானமாக மாறும்" என நரம்பியல் மருத்துவர் க்ரைக் ஸ்டாக் கூறுகிறார்.

"நினைவு என்பது கடந்த காலத்தை நோக்கியது. உங்கள் கடந்தகால அனுபவங்கள் இங்கே, இப்போது மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றும் வகையில் இருக்கிறது." என ஆராய்ச்சியாளர் லிபோர்ட் கூறுகிறார்.

"ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதால், ஹைப்பர்தைமீசியாவை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம். வயதாக ஆக இவர்களின் நினைவாற்றல் குறையுமா? இவர்களின் இந்த மனம் சார்ந்த டைம் டிராவல் வயதை பொருத்ததா? நினைவுகள் தோன்றுவதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? என எங்களுக்கு இதில் பல கேள்விகள் உள்ளன. இவை இன்னும் கண்டறியப்பட வேண்டும்." என லா கோர்டே தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வு உண்டா?

இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

"இந்த நிலை இருப்பவர்களால் எதையும் மறக்க முடியாது என்பதே இவர்களுக்கு பின்னடைவாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

மேலும் பேசிய அவர், "சாதாரணமாக நம்மை பொறுத்தவரை காலப்போக்கில் சில விஷயங்களை மறந்துவிட முடியும். ஆனால் இவர்களால் ஒரு இழப்பையோ, மறக்க நினைக்கும் விஷயங்களையோ, அதிர்ச்சியளிக்கும் தருணங்களையோ இவர்களே நினைத்தாலும் மறக்க முடியாது. இதனால் இவர்களால் அந்த துயரில் இருந்து மீளவே முடியாமல் போகும்" என்கிறார்.

"இதனால் Obsessive compulsion ஏற்படும். அதாவது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது." எனவும் கூறினார்.

இந்த மருத்துவ நிலையை சரிசெய்ய வழி உண்டா என அவரிடம் கேட்டபோது, "இது நோய் இல்லை என்பதால் இதற்கு தனியாக மருத்துவமோ, தீர்வோ கிடையாது. பொதுவாக இந்த நிலை இருப்பவர்கள் யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மனதை சற்று தளத்த் முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்க வேண்டும் என பரிந்துரைப்போம். மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு சென்று விடாமல் இருக்க, ஆலோசனைகளும் வழங்கப்படும்." என்றார்.

மேலும், "ஒரு வகையில் அவர்களின் நினைவாற்றல் வரம் என்றாலும், அதிலும் சில கஷ்டங்கள் இருக்கும். சில சமயங்களில் மனநல ஆலோசனைகள் வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்." என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4wwyz82d0o

விண்வெளியில் போர் மூளுமா? அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் யார் வலிமையானவர்?

1 month 2 weeks ago

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

9 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது.

இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது.

இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது.

தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது.

மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார்.

விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால் இதுவரை எந்தப் போரும் விண்வெளியில் நடக்கவில்லை. அமெரிக்காவும் இதை விரும்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள் போர் உலகுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மிகவும் முக்கியம்

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாக கூறுகிர் முனைவர் ராஜி ராஜகோபாலன்

ஆஸ்திரேலிய மூலோபாய நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் விண்வெளி பாதுகாப்பு விஷயங்களில் நிபுணருமான முனைவர் ராஜி ராஜகோபாலன், தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகள் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த செயற்கைக்கோள்களில் சுமார் 630 செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

மொத்த செயற்கைக்கோள்களில் பாதியளவு ராணுவ செயற்கைக்கோள்கள் என்று ராஜி ராஜகோபாலன் குறிப்பிட்டார்.

இவற்றில் சுமார் 300 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை.

ரஷ்யாவும், சீனாவும் பல ராணுவ செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளில் ராணுவத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றன. இவை ராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றன.

1990ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில் நேச நாட்டுப் படைகளின் நடவடிக்கைகளில் செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்கு வகித்தன.

பாலைவனத்தில் வீரர்கள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல செயற்கைக்கோள் மூலம் இயக்கப்படும் ஜிபிஎஸ் பயன்படுத்தப்பட்டது.

உலகின் முதல் விண்வெளிப் போர் என்றும் இது அழைக்கப்படுகிறது.

"இப்போதெல்லாம் அரசாங்கங்கள் உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்கவும் இலக்குகளைக் கண்காணிக்கவும் இதைப் பயன்படுத்துகின்றன. எதிர்காலத்தில் அனைத்து முக்கியப் படைகளும் இந்த அமைப்பை பயன்படுத்தும். செயற்கைக்கோள் உதவியுடன், இலக்கு கண்டறியப்படுவது மட்டுமல்லாமல், இலக்கைத் துல்லியமாகத் தாக்க ஆயுதங்களும் வழிநடத்தப்படுகின்றன" என்று முனைவர் ராஜி ராஜகோபாலன் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியா 2029 ஆம் ஆண்டுக்குள் 52 செயற்கைக்கோள்களை விண்வெளியில் அனுப்பும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக அறிவித்தது.

அப்படியானால் ஒரு நாடு செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு தகவல்களை வழங்குவது அவசியமா?

எந்தவொரு நாடும் செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறார் முனைவர் ராஜி ராஜகோபாலன்.

அந்த செயற்கைக்கோள்

  • என்ன வகையானது?

  • எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

  • எவ்வளவு காலம் செயல்படும்?

  • அதை மீண்டும் எப்படிக் கொண்டு வருவார்கள்?

  • விண்வெளியில் எங்கு வைக்கப்படுகிறது? என்பன போன்ற அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இது செயற்கைக்கோள்கள் ஒன்றோடோன்று மோதுவதைத் தடுக்கும்.

ஆனால் இப்போது பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதில்லை.

1962 ஆம் ஆண்டில், அமெரிக்கா விண்வெளியில் ஒரு அணுகுண்டை சோதித்தது, அதன் கதிர்வீச்சு பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சேதப்படுத்தியது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், விண்வெளியில் அணு மற்றும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் விண்வெளி நிறுவனம் இப்போது அதைக் கண்காணித்து வருகிறது.

இந்த அமைப்பு விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அதிகம் பங்களித்திருக்கிறது என்கிறார் ராஜி ராஜகோபாலன்.

இந்த ஒப்பந்தத்தில் விண்வெளியில் உள்ள வழக்கமான ஆயுதங்களைப் பற்றி எந்தத் தடையும் இல்லை. அவை கூட பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், இது ஒரு முக்கியமான பாதுகாப்பு சிக்கல்.

அதேபோல், கடந்த சில ஆண்டுகளில் விண்வெளியில் வணிக செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உட்பட பல தனியார் நிறுவனங்களின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பிராட்பேண்ட் இணைய வசதி மற்றும் பிற வசதிகளுக்காக விண்வெளியில் உள்ளன.

அதேபோல், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடுகளுக்கு இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.

விண்வெளியில் என்ன நடக்கிறது?

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்வெளி போட்டியில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவைத் தோற்கடித்தது.

ஜெர்மன் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஜூலியன் சூஸ், பூமியில் எங்காவது தாக்குதல் நடந்தால், அதை நாம் பார்க்க முடியும் என்கிறார்.

ஆனால் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் என்ன செய்கின்றன என்பது பற்றிய தகவல்களை செயற்கைக்கோள்கள், ரேடார் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு தரவுகளால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் பெறுகிறோம்.

ஒரு நாடு வேண்டுமென்றே மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழிக்க முயன்றால் என்ன நடக்கும்?

"இது ஒரு லட்சுமண ரேகை, இதுவரை யாரும் அதைக் கடக்கவில்லை. ஆம், செயற்கைக்கோள்கள் சிக்னல்களை சீர்குலைத்து தவறான சிக்னல்களை உருவாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன" என்கிறார் ஜூலியன் சுஸ்.

தற்போது விண்வெளி வளங்கள் நேட்டோவின் வாஷிங்டன் ஒப்பந்த பிரிவு 5 இல் சேர்க்கப்பட்டுள்ளன.

அதாவது, நேட்டோ உறுப்பினரின் செயற்கைக்கோளை யாராவது தாக்கினால், நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் தாக்குதல் நடத்தும் நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் விளக்குகிறார்.

ஆனால் செயற்கைக்கோள் சேதமடைவதற்கான காரணம் குறித்த உடனடித் தகவல் கிடைக்காததும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுக்கு அருகில் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் சூஸ்.

இது ஒரு செயற்கைக்கோளைப் படம் எடுப்பதற்கான முயற்சியாகவோ அல்லது அதைப் பற்றிய உளவுத்துறை தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியாகவோ இருக்கலாம்.

குறிப்பாக, அந்த செயற்கைக்கோளின் செயல்பாடு பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றால், அது மிக முக்கியமான விஷயமாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகில் பெரிய ராணுவங்களை கொண்டுள்ளன. இந்த அனைத்து ராணுவங்களும் விண்வெளியில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை உருவாக்கியுள்ளன.

இவை பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல, எனவே விண்வெளியில் அவற்றின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை.

விண்வெளியில் அமெரிக்கா மிகப்பெரிய சக்தியாக உள்ளது என்று ஜூலியன் சூஸ் கூறுகிறார்.

2008 ஆம் ஆண்டில், அது அதன் செயற்கைக்கோள்களில் ஒன்றை அழித்தது. இதைத் தவிர, அமெரிக்கா மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்கிறது.

உதாரணமாக, அமெரிக்கா மற்ற செயற்கைக்கோள்களைப் போலவே ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் செலுத்தக்கூடிய X-37 விண்வெளி விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த விமானம் இரண்டு ஆண்டுகள் விண்வெளியில் தங்கி பின்னர் தானாகவே பூமிக்குத் திரும்பும்.

அதேபோல், தகவல் தொடர்புகளுக்கான ஜிபிஎஸ்-க்கு மாற்றாக லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

விண்வெளி பந்தயத்தில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வரும் முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவை முந்தியது.

ஆனால் அதன் பின் வந்த காலத்தில் ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் அமெரிக்காவை விட பின்தங்கி விட்டது.

யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் அதன் விண்வெளித் திட்டங்களையும் பாதித்துள்ளன.

மறுபுறம், உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்புகளைச் சேகரிப்பதற்கு செயற்கைக்கோள்களையே அமெரிக்கா பெருமளவில் சார்ந்துள்ளது.

ரஷ்யா இதை அமெரிக்காவின் பலவீனமாகக் கருதி, செயற்கைக்கோள்களை குறிவைத்து ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. சீனாவும் இந்தத் துறையில் பின் தங்கிவிடவில்லை.

"2024 ஆம் ஆண்டில் 100 செயற்கைக்கோள்களை ஏவுவதே சீனாவின் இலக்காக இருந்தது, ஆனால் அதனால் 30 செயற்கைக்கோள்களை மட்டுமே அனுப்ப முடிந்தது. செயற்கைக்கோள்களை குறிவைக்கும் ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், அதன் செயற்கைக்கோள்கள் மற்ற செயற்கைக்கோள்களைச் சுற்றி வேகமாக நகரும் திறனைப் பெற்றுள்ளன. சில செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தான முறையில் அருகில் சென்றன," என்று கூறுகிறார் ஜூலியன் சுஸ்.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் அதிக வேகத்தில் சுழல்கின்றன, அவை ஒன்றுடன் ஒன்று மோதினால், அவற்றின் துண்டுகள் விண்வெளியில் சிதறக்கூடும்.

ஒரு சென்டிமீட்டர் துண்டு கூட, அதிவேகத்தில் நகர்ந்தால், ஒரு வெடிகுண்டை போலவே சேதத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியான சூழ்நிலையில் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினால் அது பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார் ஜூலியன் சுஸ்.

உதாரணமாக, ரஷ்யா விண்வெளியில் அத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்தினால், செயற்கைக்கோள் சிதைவதால் உருவாகும் துண்டுகள் அதன் சொந்த செயற்கைக்கோள்களையும் சேதப்படுத்தும்.

சமீபத்தில், சீனாவும் ரஷ்யாவும் நிலவில் ஒரு அணு உலையை நிறுவ ஒப்புக்கொண்டன. இது எதிர்கால ஆராய்ச்சிப் பணிகளுக்கு மின்சாரம் தயாரிக்கப் பயன்படும்.

தொழில்நுட்ப திட்டங்கள்

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு, கோல்டன் டோம் அமெரிக்காவை வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் விண்வெளிச் சட்டம் மற்றும் தரவு திட்டத்தின் இயக்குனர் சாடியா பெக்கரானன், விண்வெளித் தொழில்நுட்பம் என்பது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களை விண்வெளியில் ஏவுவது மட்டுமல்ல என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஈடிடி (EDT) எனப்படும் தானியங்கி ரோபாட்டிக்ஸ்(autonomous robotics) போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும் என்று சாடியா கூறினார்.

தானியங்கி ரோபாட்டிக்ஸ் மூலம், இயந்திரங்கள் விண்வெளியில் தானாகவே வேலை செய்ய முடியும்.

"இது எதிர்காலத்தில் விண்வெளி பாதுகாப்பின் முழு கட்டமைப்பையும் மாற்றக்கூடும். இது அமெரிக்காவை வான் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு பாதுகாப்புக் கவசத்தையும் (Golden Dome) கொண்டுள்ளது."

ஸ்டார்ஷீல்ட் என்பது பல செயற்கைக்கோள்களை பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு அமைப்பு.

இது அமெரிக்க அரசாங்கத்தாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப் கோல்டன் டோம் திட்டத்தை முன்மொழிந்தார். எதிரி ஏவுகணைகளைக் கண்டறிய ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விரைவாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் திறனை ராணுவம் பெறும் என்கிறார் சாடியா பெக்கரானேன் கூறுகிறார்.

இது பாதுகாப்புத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் மற்ற நாடுகளை விட முன்னிலையில் உள்ளன என்கிறார் சாடியா பெக்கரானன்.

"விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அவர்கள் இதில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்."

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாட்டுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பினால், எந்த தொழில்நுட்பமும் நிலைத்திருக்க முடியாது என்கிறார் சாடியா பெக்கரானன்.

விண்வெளியில் இந்த உபகரணங்களின் ஆயுட்காலம் காலாவதியாகும் தருவாயில், அவற்றை சரிசெய்ய வேண்டியிருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், புதிய தொழில்நுட்பம் அவற்றை விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக அகற்றவும் உதவும்.

உலகில் அவற்றின் தாக்கம் எத்தகையது?

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.

முனைவர் பிளெவின்ஸ் போவன், பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆஸ்ட்ரோ பாலிடிக்ஸ் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். செயற்கைக்கோள் போர் தொடர்பான விஷயங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு அவர் ஆலோசனை வழங்கி வருகிறார்.

விண்வெளியில் ஒரு செயற்கைக்கோள் போர் நடந்தால், அதனால் ஏற்படும் சேதம் மற்றும் தாக்கத்தை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்று அவர் நம்புகிறார், ஏனெனில் விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் உள்ளன, அவற்றின் உதவியுடன் மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

எந்த செயற்கைக்கோள்கள் அழிக்கப்படுகின்றன என்பதையே இது பெரும்பாலும் சார்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது வழியைக் கண்டறிய அல்லது உணவை ஆர்டர் செய்ய உதவும் ஜிபிஎஸ் சிக்னல்களை அனுப்பும் செயற்கைக்கோள்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், பொருளாதாரச் சேவைகளில் இன்னும் கடுமையான பாதிப்பு ஏற்படும், ஏனெனில் செயற்கைக்கோள்களில் அணு கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் பரிவர்த்தனையின் நேரம் என்ன என்பதை யாருடைய நேரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த சேவைகள் நிறுத்தப்படலாம்.

விவசாயிகள் மற்றும் வானிலை துறைகள் விவசாயம் அல்லது இயற்கை பேரழிவுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களைப் பயன்படுத்துகின்றன.

இது மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக, புயல்கள் அல்லது பிற பேரழிவுகள் பற்றிய துல்லியமான தகவல்களை மக்கள் சரியான நேரத்தில் பெறவில்லை என்றால், பலர் இறக்க நேரிடும்.

ஒரு நாடு ஒரு செயற்கைக்கோளின் இழப்பை எவ்வாறு சமாளிக்கிறது என்பது அது எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைப் பொறுத்தது.

விண்வெளியில் நேரடித் தாக்குதலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிக்க நாடுகளுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவைப்படும் என்றும் முனைவர் பிளெவின்ஸ் போவன் நம்புகிறார்.

அவர்கள் விண்வெளியில் மாற்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த வேண்டும், அல்லது செயற்கைக்கோள்கள் இல்லாமல் வேலை செய்யக்கூடிய உபகரணங்களின் வலையமைப்பை பூமியில் உருவாக்க வேண்டும்.

அவை செயற்கைக்கோள்களைப் போல பயனுள்ளதாக இல்லாவிட்டாலும், அவசரகாலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் செயற்கைக்கோள்கள் எப்போது, எப்படி தாக்கப்படும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்.

விண்வெளியில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் பிளெவின்ஸ் போவன்.

"பூமியில் நாடுகளுக்கு இடையிலான மோதல் கட்டுப்பாட்டை மீறும் போதுதான் விண்வெளியில் போர் பரவும். வெளிப்படையாக பலர் அதில் இறந்துவிடுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம், எனவே பூமியில் நடக்கும் மோதல்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை விட விண்வெளிப் போரைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படக் கூடாது என்பதே எனது கருத்து."

எனவே செயற்கைக்கோள் போரினால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது?

விண்வெளியில் உள்ள இயற்கையாலோ அல்லது மனிதனாலோ உருவாக்கப்பட்ட மிகச்சிறிய பொருள் கூட ஆபத்தானதாக இருக்கலாம்.

செயற்கைக்கோள்களை ஆயுதமாக்குவது எப்போதும் நோக்கமாக இருக்காது. ஆனால் தொழில்நுட்பம் இப்போது வணிக மற்றும் ராணுவ செயற்கைக்கோள்களுக்கு இடையிலான கோடுகளை மங்கலாக்கியுள்ளது.

பல நாடுகள் தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை தாக்கி அழித்து தங்களத திறனை பரீட்சித்துப் பார்த்துள்ளன.

ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.

அதேபோல், விண்வெளியில் தாக்குதல் நடந்தால், அது பூமியிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgj5vv3kq5o

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு

1 month 3 weeks ago

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா மோரல்

  • அறிவியல் ஆசிரியர்

    13 செப்டெம்பர் 2025, 01:53 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.

இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.

இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள்.

"இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

"நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே.

நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது.

2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள்.

"இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது.

"நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார்.

பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன.

"இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது"

விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை.

"உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது.

பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும்.

நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர்.

"இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார்.

"உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xr4vzrkqpo

தக்காளியின் கலப்பு இனப்பெருக்கத்தில் உருளைக்கிழங்கு உருவானது எப்படி? சுவாரஸ்யமான அறிவியல் கதை

1 month 3 weeks ago

ஒரு விவசாய சந்தையில் வைக்கப்பட்டிருக்கும் தக்காளிகள் மற்றும் உருளைக்கிழங்குகளின் காட்சி

Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • டலியா வென்சுரா

  • பிபிசி முண்டோ

    10 செப்டெம்பர் 2025, 04:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT

சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை.

அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solanum etuberosum) எனப்படும் ஒரு தாவர வகையின் முன்னோடிகள். இதன் தற்போதைய மூன்று இனங்கள் சிலி மற்றும் ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளில் காணப்படுகின்றன," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியல் நிபுணர் சாண்ட்ரா நாப் கூறினார்.

அவற்றின் பெயர்களில் இருந்து அவை தொடர்புடையவை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், அவை ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் அடைந்தன. "இவ்வாறு உருவாகியது புதிய தாவரம் ஒன்றை உருவாக்கிய மரபணுக்களின் மறுசீரமைப்பு," என்றும் இது "அந்த தாவரத்தை குளிர் மற்றும் வறண்ட ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் செழித்து வளர அனுமதித்தது" என்றும் நாப் கூறுகிறார்,

நிபுணர்கள் இதை இனங்களுக்கு இடையிலான கலப்பு இனப்பெருக்கம்( இன்டர்ஸ்பெசிஃபிக் ஹைப்ரிடைசேஷன் - interspecific hybridisation) என்று அழைக்கிறார்கள், இவ்வகை இனப்பெருக்கம் அடிக்கடி நிகழ்கிறது, சில சமயங்களில் இதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமாக இருந்தன.

உதாரணமாக, பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் இடையிலான இனச்சேர்க்கை காரணமாக கோவேறு கழுதை பிறக்கிறது. இது வெற்றிகரமான கலப்பினமாக இருந்தாலும், பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கே தம்மை இனப்பெருக்கம் செய்யும் திறன் இல்லை.

தாவர உலகில், இனங்களுக்கிடையேயான கலவைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று நாப் கூறுகிறார் - இப்படித்தான் நாம் தோட்டத் தாவரங்களைப் பெரும்பாலும் பெற்றுள்ளோம். இந்த கலப்பு இயற்கையாகவோ அல்லது மனிதர்களின் தலையீட்டாலோ நடக்கலாம், இரண்டு வகை பெற்றோரின் கலவையான தாவரங்களை உருவாக்குகிறது.

"சில சமயங்களில் அவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும், எனவே அவை ஒரு புதிய இனமாக உருவாகாது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சூழ்நிலைகளின் சேர்க்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது, அந்த கலவையின் விளைவு எதிர்பார்ப்புகளை விஞ்சுவதாக அமையும்.

அப்படித்தான் அன்று நடந்தது. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான தற்செயலான கலப்பில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்தது.

ஒரு சோலனம் எட்யூபெரோசம் (Solanum etuberosum) தாவரம் அருகே ஒரு சோலனம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum) தாவரத்தின் விளக்கப்படம்

LOC/Biodiversity Heritage Library சோலனம் லைகோபெர்சிகம்(இடது) மற்றும் சோலனம் எட்யூபெரோசம் (வலது), இவை உருளைக்கிழங்கை உருவாக்கின.

"நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமாக உள்ள உருளைக்கிழங்குக்கு இப்படி ஒரு பழமையான, அசாதாரணமான துவக்கம் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது," என்று நாப் கூறுகிறார்.

"தக்காளி அதன் தாய், எடூபரோசம் தந்தை" என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் அறிவித்தார், அவர் ஜூலை மாதம் செல் (Cell) இதழில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

நீண்டகால மர்மம் எப்படி அகன்றது?

சந்தையில் பார்க்கும்போது, கடினமான, மாவுத்தன்மை கொண்டதாக அமைந்த உருளைக்கிழங்கு, சிவப்பான, சாறுள்ள தக்காளியைப் போன்று தெரியவில்லை என்றாலும், "அவை மிகவும், மிகவும் ஒத்தவை," என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாப் கூறுகிறார்.

அந்த விஞ்ஞானியின் கூற்றுப்படி, இரண்டு தாவரங்களின் இலைகளும் பூக்களும் மிகவும் ஒத்தவை, மேலும் உருளைக்கிழங்கு தாவரத்தின் பழம் கூட ஒரு சிறிய பச்சை தக்காளி போலத் தெரிகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

"நாம் பார்ப்பதைத் தாண்டி, உருளைக்கிழங்குகள், தக்காளிகள் மற்றும் எடூபரோசம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்று நமக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உருளைக்கிழங்குக்கு எது மிக நெருக்கமானது என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால் வெவ்வேறு மரபணுக்கள் நமக்கு வெவ்வேறு தகவல்களைக் கூறின."

ஒரு நீளமான டாம்டேடோ தாவரம், அதன் மேல் தக்காளிப் பழங்களும், கீழே உருளைக்கிழங்குகளும் உள்ளன.

Thompson & Morgan உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் மிகவும் ஒத்தவை, அவற்றை ஒட்டுவதால், இந்த டாம்டேடோ (TomTato) என்று அழைக்கப்படும் தாவரம் போன்ற இரண்டையும் உருவாக்கும் ஒரு தாவரம் பிறக்கிறது. இதை தாம்சன் & மோர்கன் என்ற தோட்டக்கலை நிறுவனம் உருவாக்கியது.

பிரபலமான உருளைக் கிழங்கின் தோற்றம் குறித்த புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர்.

உருளைக்கிழங்கின் மரபியல் அசாதாரணமானது. மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு ஒவ்வொரு செல்லிலும் இரண்டு குரோமோசோம்களின் நகல்கள் இருக்கும் நிலையில், உருளைக்கிழங்குக்கு நான்கு உள்ளன.

எனவே, இந்த முரண்பாட்டைத் தீர்க்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எடூபரோசம் உட்பட டஜன் கணக்கான இனங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட மரபணுக்களை (ஒரு செல்லில் உள்ள மரபணுக்களின் முழுமையான தொகுப்பு) பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வரிசைப்படுத்திய உருளைக்கிழங்கு மரபணுக்கள் கிட்டத்தட்ட அதே தக்காளி-எடூபரோசம் பிளவைக் காட்டின.

உருளைக் கிழங்கின் முன்னோடி "இதுவும் இல்லை, அதுவும் இல்லை: அது இரண்டும்," என்று நாப் வலியுறுத்துகிறார்.

அப்படியாகத்தான், தென் அமெரிக்க மலைகளின் அடிவாரத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த காதல் உறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"இது ஒரு வெற்றிகரமான கலவையாகும், ஏனென்றால் இது ஆண்டிஸ் மலைத்தொடரின் புதிதாக உருவாக்கப்பட்ட உயரமான வாழ்விடங்களில் இந்த புதிய இனம் செழிக்க அனுமதித்த மரபணு சேர்க்கைகளை உருவாக்கியது" என்று நாப் விளக்குகிறார்.

உருளைக்கிழங்கு தாவரத்தின் தரைக்கு மேல் இருக்கும் பகுதி அதன் பெற்றோரை ஒத்திருந்தாலும், அதில் ஒரு அம்சம் மறைந்திருந்தது, அது வேறு எந்த தாவரத்திற்கும் இல்லை: அதுதான் கிழங்குகள்.

கிழங்குகள் இருப்பது என்பது எப்போதும் கைவசமாக ஒரு உணவுக் கூடை வைத்திருப்பது போன்றது: அவை ஆற்றலைச் சேமித்து, குளிர்காலம், வறட்சி அல்லது வேறு எந்தச் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் உயிர்வாழ உதவுகிறது.

சிறிய தக்காளி போன்ற பழங்களைக் கொண்ட ஒரு Solanum tuberosum (உருளைக்கிழங்கு) தாவரத்தின் விளக்கப்படம்.

Getty Images வரைகலையில் உள்ள "c" எழுத்து, சிறிய தக்காளிகள் போன்ற உருளைக்கிழங்கின் பழங்களைக் காட்டுகிறது.

நடந்திருக்கும் மரபணு குலுக்கல்

விஞ்ஞானிகள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கண்டுபிடித்தனர்: கிழங்குகளை உருவாக்கிய தாவரம், ஒரு மரபணு குலுக்களில் வென்றதன் மூலம் அவ்வாறு செய்தது.

அவற்றின் முன்னோடிகளில் ஒவ்வொன்றும் கிழங்குகள் உருவாக முக்கியமான ஒரு மரபணுவைக் கொண்டிருந்தன.

ஆனால் அவற்றில் எதுவுமே தனியாகப் போதுமானதாக இல்லை, எனவே அவை இணைந்தபோது, அவை நிலத்தடி தண்டுகளை சுவையான உருளைக்கிழங்குகளாக மாற்றுகிற செயல்முறையைத் தூண்டின.

நாப் உடன் பணிபுரிந்த சீனக் குழுவால் இதை நிரூபிக்கவும் முடிந்தது.

"அவர்கள் தங்கள் கருதுகோளை உறுதிப்படுத்த இந்த மரபணுக்களை நீக்கி, பல நேர்த்தியான பரிசோதனைகளைச் செய்தனர்," என்று அவர் கூறுகிறார், "அவை இல்லாமல், கிழங்குகள் உருவாகவில்லை."

உருளைக்கிழங்கை உருவாக்கிய இனக்கலப்பு ஒரு மகிழ்ச்சியான விபத்தை விடவும் கூடுதலானதாகும். அது ஒரு புதிய உறுப்பையே உருவாக்கியது. உருளைக்கிழங்கு என்ற இந்த உறுப்பு ஒரு பரிணாம சாதனையாகக் கருதப்படுகிறது.

அந்த கிழங்கின் இருப்பு காரணமாக விதை அல்லது மகரந்தச் சேர்க்கைகளின் தேவை இல்லாமல் தாவரம் இனப்பெருக்கம் செய்துகொள்ள அனுமதித்தது.

பல்வேறு உயரங்களுக்கும், சூழ்நிலைகளுக்குத் தகவமைத்துக் கொள்ள முடிந்தது, இது பன்முகத்தன்மையில் ஒரு அதிரடிக்கு வழிவகுத்தது.

இன்றும், "அமெரிக்காவில் மட்டுமே தென்மேற்கு ஐக்கிய மாகாணங்கள் முதல் சிலி மற்றும் பிரேசில் வரை 100க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் காணப்படுகின்றன" என்று நாப் கூறுகிறார்.

எடூபரோசம் மற்றும் டியூபரோசம் தாவரங்கள் அருகருகே உள்ள ஒரு புகைப்படம்.

Shenzhen Institute of Agricultural Genomics, Chinese Academy of Agricultural Sciences மேலோட்டமாகப் பார்த்தால், எடூபரோசம் (இடது) மற்றும் டியூபரோசம் (வலது) ஆகியவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பிந்தையதின் மாவுத்தன்மை கொண்ட கிழங்குகள்தான் உருளைக்கிழங்கை மிகவும் பிரபலமான பயிராக மாற்றுகின்றன.

மரபணுவால் ஏற்படும் பலவீனங்கள்

இருப்பினும், பாலின தொடர்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் இந்த திறன் உருளைக்கிழங்கிற்கு தீங்கையும் விளைவித்துள்ளது.

"அவற்றை வளர்க்க, நீங்கள் ஒரு உருளைக்கிழங்கின் சிறிய துண்டுகளை நடவு செய்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒரே வகையை கொண்ட ஒரு வயலை வைத்திருந்தால், அவை அடிப்படையில் பிரதிகள்," என்று டாக்டர் நாப் விளக்குகிறார்.

மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், உருளைக்கிழங்கு தாவரங்களில் புதிய நோய்க்கு எதிராக எந்தத் தடுப்பு சக்தியும் இருக்காது.

இது விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை நடத்தியதற்கான காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நாப்பின் கூற்றுப்படி, சீனக் குழு, விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய மற்றும் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படக்கூடிய உருளைக்கிழங்குகளை உருவாக்க விரும்புகிறது.

காட்டு இனங்களிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய வகைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

"இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்ற பரிணாம உயிரியலாளர்களும் நானும், உருளைக்கிழங்குகளின் மிக நெருங்கிய உறவு எது என்பதையும், அவை ஏன் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் கண்டறிய விரும்பினோம்," என்று அவர் கூறுகிறார்.

"எனவே, நாங்கள் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் இருந்து ஆராய்ச்சியை அணுகினோம், மேலும் எங்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்க முடிந்தது, இது ஆய்வில் பங்கேற்கவும் பணியாற்றவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dq30qlzreo

விக்ரம் 3201 சிப் இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் விண்கலங்களில் எவ்வாறு பயன்படும்?

1 month 4 weeks ago

VIKRAM 3201

பட மூலாதாரம், ISRO

கட்டுரை தகவல்

  • த.வி. வெங்கடேசுவரன்

  • பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி

  • 4 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய அடுத்த பயணம், ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மின்னணு (electronics) கருவிகளின் இருதயமாக இந்த 'சிப்' (chip) தான் அமையும்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் 3201 செயலி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) வடிவமைக்கப்பட்டு, சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகத்தால் (Semi-Conductor Laboratory - SCL) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி இணைப்பு சோதனை (Space Docking Experiment - SpaDeX) தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய 30 டிசம்பர் 2024 இல் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி60 (PSLV-C60) திட்டத்தில் இந்த கணிப்பி பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

விண்வெளிச் சூழலில் இந்த 'சிப்' சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொண்ட இஸ்ரோ, 2009 முதல் அதன் விண்கல இயக்க மின்னணு கருவிகளில் பயன்பட்டு வந்த 16-பிட் கணிப்பி விக்ரம் 1601க்கு பதிலாக, இனி வரும் திட்டங்களில் மேம்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 செயலியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

VIKRAM 3201

பட மூலாதாரம், X/@DrLMurugan

செல்போன் சிப்பை விட குறைந்த திறன் கொண்ட விக்ரம் 3201

நவீன ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் கணிப்பி செயலிகளுடன் மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், விக்ரம் 3201 செயலி மிகவும் பழைய தொழில்நுட்பம் என்று தான் கருதத் தூண்டும்.

எடுத்துக்காட்டாக, விக்ரம் 3201 ஒரு 32-பிட் செயலி, அதே நேரத்தில் சமீபத்திய மடிக்கணினிகள் பெரும்பாலும் 64-பிட் செயலிகள் (64-bit processors) கொண்டு இயங்கும். எளிய சொற்களில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், 32-பிட் அமைப்பு 2^32 நினைவக முகவரிகளை (memory addresses) ஒரே கணத்தில் அணுக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறன் கொண்ட கணிப்பியைப் பொருத்திய கணினிகளில் 4 ஜிபி ரேம் (RAM) வரை கையாளும் திறன் கொண்டு இயங்கும். மாறாக, 64-பிட் செயலி 2^64 நினைவக முகவரிகளைக் கையாளும்; எனவே 8 ஜிபி முதல் 16 ஜிபி ரேம் வரை அல்லது அதற்கும் மேற்பட்ட ரேம் நினைவகத்தைக் கையாளும் திறன் படைத்ததாக அமையும்.

64-பிட் செயலி கொண்டு இயங்கும் கணினியில் வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல லாவகமாக அனிமேஷன் படங்கள் கொண்ட கேமிங் செயல்படும்; ஆனால் 32-பிட் அமைப்பில் அதே கேமிங் திரையில் காட்சிகள் விட்டுவிட்டுத் தென்படும். நவீன 64-பிட் செயலி, 32-பிட் செயலியை விட சந்தேகத்துக்கு இடமின்றி அதிக திறன் கொண்டது தான்.

மேலும், விக்ரம் 3201 ஒரு 180 நானோமீட்டர் (180nm) நுணுக்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'சிப்'. இது 1990களின் பிற்பகுதி முதல் 2000களின் தொடக்கம் வரை புழக்கத்தில் இருந்த பழைய தொழில்நுட்பமாகும். இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்யும் தனது எளிய மற்றும் மலிவான நவீன கணினியில் உள்ள 11-ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5 (11th-generation Intel Core i5) செயலி மேம்பட்ட 10 நானோமீட்டர் (10nm) நுணுக்கம் கொண்டது.

'நானோமீட்டர்' (nm) என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கிறது. சிப் உற்பத்தி (chip manufacturing) சூழலில், எவ்வளவு நுணுக்கமாக சிலிக்கான் சிப்பில் (silicon chip) நுண்ணளவு கொண்ட டிரான்சிஸ்டர்களை (transistors) எவ்வளவு அடர்த்தியாக (density) வடிவமைத்து உற்பத்தி செய்கிறோம் என்பதைக் குறிக்கும். குறைவான nm என்றால் அதே அளவு திறன் கொண்ட கணிப்பியின் அளவு மேலும் சிற்றளவாக்கம் (miniaturisation) கொண்டிருக்கும் என்று பொருள்.

சிலிக்கான் சிப்பின் கூடுதல் அடர்த்தி கணிசமான நன்மைகளை வழங்குகிறது. அருகருகே டிரான்சிஸ்டர்கள் உள்ளதால் எலக்ட்ரான்கள் (electrons) குறுகிய தொலைவு பயணம் செய்தால் போதும்; எனவே கணினியின் வேகம் கூடும். சிறிய நுணுக்கமான டிரான்சிஸ்டர்கள் செயல்படுவதற்குக் குறைவான மின் ஆற்றல் போதும்; எனவே மின்கலங்களில் உள்ள மின்னாற்றல் நீண்ட காலத்துக்கு இயங்கும். அடர்த்தி கூடுதல் என்றால் அந்த மின்னணுக் கருவியின் அளவும் கூடுதல் சிற்றளவாக்கம் கொள்ளும்; எனவே, மேலும் கையடக்க கருவிகள் சாத்தியம் ஆகும்.

வணிகப் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், இன்று அதிநவீன தொழில்நுட்பம் வழியே ஆய்வகத்தில் 3nm முதல் 2nm சிப்பு வடிவாக்க தொழில்நுட்ப நிலையை உலகம் அடைந்துவிட்டது. இந்தச் சூழலில் 180nm என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போலதான் தென்படும்.

VIKRAM 3201

பட மூலாதாரம், @GoI_MeitY

ஆனால் ஸ்மார்ட்போன்களின் தேவைகளிலிருந்து விண்வெளி மின்னணுவியலின் (space electronics) தேவைகள் அடிப்படையில் மாறுபடுகின்றன. விண்ணை நோக்கி ஏவூர்தி சீறிப் பாயும்போது பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். புவியின் வளிமண்டலத்தைக் கடந்து விண்வெளிக்குச் சென்றால் அங்கே கதிரியக்கம், வெப்பத் தாக்கம் போன்ற பல்வேறு இடர்களைச் சமாளிக்க வேண்டிவரும். இந்த இடர் மிகு சூழலில் விண்வெளித் தொழில்நுட்ப மின்னணுக் கருவிகள் நம்பகமாக செயல்படவேண்டும்.

விண்வெளியில் விண்கலங்கள் மீது வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள், கருந்துளைகள் போன்ற விண்பொருள்களிலிருந்து வேகமாகப் பாய்ந்து வரும் மின்னேற்றம் கொண்ட காஸ்மிக் கதிர்கள், சூரியன் உமிழும் சூரியக் காற்று போன்ற கதிரியக்கத் துகள்கள் அடைமழை போல விழுந்துக்கொண்டே இருக்கும். டிரான்சிஸ்டர்களுக்குள் நுண்ணளவில் மின்னேற்றம் உள்ள நிலை, ஏற்றம் அற்ற நிலை என்பதே பூச்சியம் அல்லது ஒன்று என்கிற டிஜிட்டல் தரவாக (digital data) பதிவு ஆகும். மீஉயர் ஆற்றல் கொண்ட கதிர்கள் விழும்போது, மழைத்துளி பட்டு நுண்மண்துகள் தெறிப்பது போல, டிரான்சிஸ்டர்களுக்குள் உள்ள மின் ஏற்ற நிலையை மாற்றிவிட முடியும்.

அதன் தொடர்ச்சியாக பூஜ்ஜியம் இருந்த இடத்தில் ஒன்று அல்லது ஒன்று இருந்த இடத்தில் பூஜ்ஜியம் என மாறுதல்கள் இயல்பில் ஏற்படும். இந்த நிகழ்வு தனி-நிகழ்வு நிலைகுலைவு (Single-Event Upset - SEU) என அழைக்கப்படுகிறது, இது ஒரு சிறிய, சீரற்ற மாற்றம் (random change). இதன் விளைவாக விண்கலத்தின் கணினியில் உள்ள டிஜிட்டல் தரவு சலனம் அடையும்.

இயல்பில் ஏற்படும் இத்தகைய SEU தனி-நிகழ்வு நிலைகுலைவுகளைச் சமாளிக்க செக்சம் போன்ற சரிகாண்-சரிசெய் தொழில்நுட்பங்கள் (error correction techniques) உள்ளன. ஆயினும், குறிப்பிட்ட அளவு தரவு நிலைகுலைவை மட்டுமே நம்பகமாக சீர் செய்யமுடியும்.

VIKRAM 3201

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, செமிகான் இந்தியா 2025 நிகழ்வில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப்பை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோதியிடம் வழங்கினார்.

டிரான்சிஸ்டர்களின் அளவு சுருங்கும்போது அவற்றில் நிலைப்படுத்தப்படும் மின்னேற்ற அளவு குறையும்; எனவே சற்றே ஆற்றல் குறைவான காஸ்மிக் கதிர்கள் கூட இந்தச் சூழலில் தனி-நிகழ்வு நிலைகுலைவுகளை ஏற்படுத்த முடியும். எனவே, கூடுதல் தரவு நிலைகுலைவுகளைச் சமாளிக்க வேண்டும்; இதன் விளைவாக கணிப்பின் நம்பகத்தன்மை இயல்பில் குறையும். அடர்த்தி குறைவான, அளவில் கூடுதலான சிப்பு ஏற்பாட்டில், தரவு நிலைகுலைவு வாய்ப்பு குறைவாக அமையும்; எனவே கணிப்பின் நம்பகத்தன்மை கூடும். எனவேதான் இஸ்ரோ தற்போது பழைய 180nm சிப்பு வடிவமைப்பையே பயன்படுத்தி வருகிறது.

மேலும், விண்கலம் பூமியைச் சுற்றிவரும்போது ஒருசமயம் பளீர் என்ற சூரிய ஒளியிலும், பூமிக்கு மறுபுறம் செல்லும்போது பூமியின் நிழலில் கும்மிருட்டையும் சந்திக்கும். சூரிய ஒளி படரும் தருணத்தில் சுட்டெரிக்கும் +125°C வெப்ப நிலையும், பூமியின் நிழலில் புகும்போது விறைப்பான -55°C உறைகுளிர் நிலையையும் சந்திக்கும். மேலும் கணநேரத்தில் இந்த வெப்ப மாறுதல் ஏற்படும். விண்வெளிக்குச் செல்லும் மின்னணுக் கருவிகள் இந்த வெப்ப அதிர்வைத் தாங்கிச் செயல்படும் வகையில் அமையவேண்டும். -55°C முதல் +125°C வெப்ப நிலையில் இயங்கும் திறன் கொண்டதாக விக்ரம் 3201 சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விண்கலத்தில் 1.8V முதல் 5V மின்னழுத்த நிலையில் வேலை செய்யும் படியும் இந்தச் 'சிப்' உள்ளது.

கூடுதல் வேகம், மேலும் சிற்றளவு என்பது பூமியில் பயன்படுத்தப்படும் கையடக்க மின்னணுக் கருவிகளின் தேவை. வெப்பம், கதிரியக்கம் முதலியவற்றால் பாதிப்பு அடையாத, நினைவகத்தில் நிலைகுலையாத, நம்பகமான தரவு சேமிப்புத் திறன் தான் விண்வெளி மின்னணுக் கருவிகளின் அடிப்படைத் தேவை. நமது திறன்பேசிகளில் உள்ள அதிநவீன 'சிப்'கள் விண்வெளி நிலையில் சட்டென்று செயலிழந்துவிடும், ஆனால், விண்வெளிப் பயனுக்கு உகந்த மின்னணு கணிப்பியாக விக்ரம் 3201 அமைகிறது.

2009 இல் விண்ணில் ஏவப்பட்ட CARTOSAT-3 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவிய PSLV-C47 திட்டத்தில் தான் இந்தியா சுயமாகத் தயாரித்த விக்ரம் 1601 சிப்பு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதுமுதல் இன்று வரை இந்தச் சிப்பு தான் இஸ்ரோ ஏவூர்திகளிலும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விக்ரம் 3201 அதன் முன்னோடியான விக்ரம் 1601 இலிருந்து ஒரு கணிசமான வகையில் முன்னேற்றம் கொண்ட கணிப்பி ஆகும். மிதவை-புள்ளி ஆதரவு, Ada போன்ற உயர்-நிலை மொழிகளுடனான இணக்கத்தன்மை உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை இது உள்ளடக்கியது. மேலும், நவீன 70nm சிப்பு வடிவமைப்பில் இஸ்ரோ ஆய்வைத் துவங்கியுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்து சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகம் உற்பத்தி செய்யும் இந்தச் சிப்புகள் விண்வெளித்துறைக்கு மட்டுமல்ல, ரயில்வே போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார ரயில்களை இயக்கப் பயன்படும் மின்னணுக் கருவிகள், மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்படும் தன்னிறைவு தானியங்கி ரயில் மேற்பார்வை (indigenous Automatic Train Supervision - i-ATS) நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் விக்ரம் 1601 சிப்பு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், விக்ரம் 3201இன் வருகை காரணமாக பல்வேறு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மேலும் மேம்படும்.

விக்ரம் 1601 தயாரிப்புக்கு முன்னர் மோட்டரோலா, இன்டெல் போன்ற நிறுவனங்களிடமிருந்து தனக்கு வேண்டிய கணிப்பி சிப்புகளை இஸ்ரோ இறக்குமதி செய்து வந்தது. இறக்குமதியை நம்பி இருந்த இந்தியா விநியோகச் சங்கிலி அபாயங்கள் (supply chain risks), ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் (export restrictions), தேசிய பாதுகாப்புச் சவால்களை (national security challenges) சந்தித்தது. 1998 போக்ரான் சோதனைகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை (home-grown strategic tech) சுயமாக உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின. இதைத் தொடர்ந்துதான் விக்ரம் வரிசை சிப்வடிவமைப்பு உற்பத்தி எனும் தற்சார்பு நிலையை இஸ்ரோ கைக்கொண்டது. அதன் முதிர்ந்த நிலையே விக்ரம் 3201 உருவாக்கம்.

செமிகாண் இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் அளிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப், தடைகளை முறியடித்துத் தன்னிறைவுக்கு எடுத்துச் சென்ற இந்திய அறிவியல் தொழில்நுட்பச் சாதனையைப் பறைசாற்றுகிறது எனலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy8r4jz0dgmo

டைனோசர்களை அழித்தொழித்த விண்கல் மோதல் - மீண்டும் பூமியில் நிகழுமா?

2 months ago

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது.

அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது.

பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது.

இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா?

ரஷ்யாவை நிலைகுலைய வைத்த விண்கல் வெடிப்பு

Play video, "பூமியில் மீண்டுமொரு பேரழிவை உண்டாக்கும் விண்கல் மோதல் நிகழ வாய்ப்புள்ளதா?", கால அளவு 7,57

07:57

p0lzy0fz.jpg.webp

காணொளிக் குறிப்பு,

கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் திடீரென வானத்தில் பிரகாசமான நெருப்புக் கோளம் தெரிந்தது.

அதை மக்கள் அனைவரும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலத்திற்குள் பறந்து வந்த அந்த நெருப்புக் கோளம் சுமார் 30கி.மீ உயரத்தில் வெடித்தது.

அந்த வெடிப்பினால் காற்று விரிவடைந்து, அதிர்வலைகள் உருவாகிப் பரவின. சுமார் பல கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின, கட்டடங்கள் அதிர்ந்தன, கூரைகள் பிய்ந்து பறந்தன.

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 1,500 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, சுமார் 9,000 டன் எடைகொண்ட, 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துள்ளது.

சுமார் 100கி.மீ சுற்றளவில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தென்பட்டுள்ளது. அதில் சிலர் சூரியனைவிட அதிக பிரகாசத்தில் அது தெரிந்ததாக தெரிவித்தார்கள். அதன் பாதைக்கு அருகில் இருந்த சிலர், அது கடந்து சென்றபோது வெப்பமாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.

அந்தப் பகுதியில் பிறகு தேடிப் பார்த்தபோது, கோழிகுண்டு அளவிலான, வெடிப்பில் சிதறிய அந்த விண்கல்லின் சிறுசிறு துண்டுகள் கிடைத்தன.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ரஷ்யாவில் 2013ஆம் ஆண்டு 100 கி.மீ பரப்பளவுக்கு இந்த விண்கல் வெடிப்பு தெளிவாகத் தெரிந்தது

வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த ஒரு விண்கல்தான் பாதை மாறி பூமியை நோக்கி வந்தது என்றும், அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் சிறிதளவு தள்ளப்பட்ட அந்தப் பெரிய விண்கல், பாதை விலகி பூமியை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 30கி.மீ தொலைவில் இந்த விண்கல் வெடித்த நிகழ்வில், கிட்டத்தட்ட 400-500 கிலோ டன் டி.என்.டி வெடிபொருட்களுக்கு நிகரான ஆற்றல் இதிலிருந்து வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

இதேபோல, 1908ஆம் ஆண்டில் சைபீரிய பகுதியில் உள்ள துங்குஸ்கா என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

துங்குஸ்காவில் மோதிய விண்கல் 65 மீட்டர் விட்டம் கொண்டது. செல்யாபின்ஸ்க் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் 20 மீட்டர் விட்டமுள்ளது.

இவை, நியுயார்க் நகரின் 443 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், பாரிஸில் உள்ள 324 மீட்டர் உயரமான ஐபில் டவர் ஆகியவற்றைவிடச் சிறிதாகத் தெரியலாம்.

ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, மிக அதிக அளவிலான ஆற்றலை வெளிப்படுத்தி, சேதங்களை விளைவித்தன.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

படக்குறிப்பு, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றி வந்த ஒரு விண்கல் பாதை மாறி பூமியை நோக்கி வந்ததே 2013 ரஷ்யா நிகழ்வுக்குக் காரணம்

டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட சம்பவம்

பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இவ்வாறான விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஆராய்ந்து, பூமியில் விண்கல் விழுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

பல தருணங்களில் வானத்தில் எரிகல் நிகழ்வுகளைக் கண்டிருப்போம். அதாவது வானில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்படுவதைப் பார்த்திருப்போம். அவை எரிகல் பூமியில் விழும் நிகழ்வின் விளைவு.

சின்னச் சின்ன அளவிலான எரிகற்கள் பூமியில் வந்து விழுவதையே எரிகல் நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான எரிகற்கள் ஒரு நாளைக்குப் பல வந்து விழும். ஆனால், புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மீது உராயும்போது அவை எரிந்துவிடுகின்றன.

எடுத்துக்காட்டாக, உங்கள் இரு கைகளையும் சேர்த்து நன்கு தேய்த்துப் பாருங்கள். கை சூடாவதை உணர்வீர்கள் அதுதான் உராய்வு. அதேபோல எரிகற்கள் காற்றுடன் உராய்கின்றன. அப்போது ஏற்படும் வெப்பம் அவற்றை எரித்து விடுகின்றன. அப்படி எரிவதுதான் ஒளிக்கீற்றாக வானில் தென்படுகிறது.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட அளவிலான விண்கல் சில கோடி ஆண்டுகளில் ஒருமுறை என மிக மிக அரிதாகவே நடப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பூமியில் தினசரி விழும் விண்கற்கள்

ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன.

ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது.

ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும்.

அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும்.

இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது.

பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன.

பூமியின் அரணாகச் செயல்படும் நிலா

இதுபோன்ற விஷயங்களில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா செயல்படுகிறது. பூமிக்கு வரும் அடிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் பெரும் பகுதி விண்கல் மோதல்கள் நிகழாமல் அது தடுக்கிறது.

பூமியின் பக்கமாக வரக்கூடிய விண்கற்களைத் தன் பக்கம் ஈர்த்து, அந்த அடிகளைத் தானே தாங்கிக் கொள்கிறது. அதனால்தான் நிலவில் விண்கல் மோதல்களால் உருவான கின்னக் குழிகள் இருக்கின்றன.

புவியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் பார்த்தால் பிரமாண்டமான கின்னக் குழிகள் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியில் மோதிவிடாமல் நிலா பாதுகாத்து நிற்கிறது.

இந்தக் காரணத்தால், டைனோசர்களையே அழித்த 10-15கி.மீ விட்டம் கொண்ட பிரமாண்ட விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் சில கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்.

ஆனாலும், அப்படிப்பட்ட ஓர் ஆபத்து வர வாய்ப்புள்ளதா என்பதை முன்னமே தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஞ்ஞானிகள் உள்ளனர்.

அதற்காக, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்கள் அனைத்தும், எந்தத் திசையில் நகர்கின்றன, பூமியில் மோத வாய்ப்புள்ளதா என்பனவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxplqyk096o

உயிர்கள் வாழ இன்னொரு இடம்? - பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

2 months 2 weeks ago

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC)

படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரன்னார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம்.

இந்த அறிகுறிகள், ஆல்ஃபா சென்டாரி நட்சத்திர அமைப்பில், சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டன.

இந்த சாத்தியமான கோள் கடந்த ஆண்டு (2024 ஆகஸ்ட்) கண்டறியப்பட்டது, ஆனால் அதன் பின்னர் பார்வையிட்டபோது அது மறைந்துவிட்டது. இந்தக் கோள் நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்த வானியலாளர்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

"நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட தூரம், ஆனால் பால்வெளி அளவில் இது மிக அருகில் உள்ளது - இது நமது அண்டைப் பகுதியில் உள்ளது," என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விண்வெளி கருவிகள் இணைப் பேராசிரியர் டாக்டர் கார்லி ஹோவெட் கூறினார்.

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வியாழனின் நிலவான யூரோப்பாவின் சித்தரிப்புப்படம், இதன் கடல் பகுதியில் உயிரின் அறிகுறிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

மேலும் அவர், "இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உள்ளது, அதே வெப்பநிலையும் பிரகாசமும் கொண்டது. வாழக்கூடிய உலகங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார்.

இந்தக் கோள், நமது சூரிய மண்டலத்தின் வாயு கோள்களான சனி மற்றும் வியாழனைப் போன்று இருக்கும், மேலும் அடர்த்தியான வாயு மேகத்தால் சூழப்பட்டிருக்கும்.

அதாவது, இந்தக் கோளில் உயிர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைச் சுற்றி வரும் நிலவுகள் உயிர்கள் வாழக்கூடியவையாக இருக்கலாம்.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் பிற கோள்களில் பனியால் ஆன நிலவுகள் உள்ளன, அவை உயிரைத் தாங்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சாத்தியத்தை தற்போது யூரோப்பா கிளிப்பர் மற்றும் ஜூஸ் என்கிற விண்வெளி ஆய்வு திட்டங்களின் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த கோள்கள் நமது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஆனால், இந்த "புதிய" கோள் ஒப்பீட்டளவில் அதன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது.

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (கோப்புப்படம்)

தொலைதூரப் பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு தற்போது விஞ்ஞானிகள் வசம் இருக்கும் கருவியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நேரடி படமாக்கல் மூலம் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

"இந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், அருகிலும் வானத்தில் வேகமாக நகரக்கூடியவையாகவும் இருப்பதால், உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது," என்று நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் இணை ஆசிரியருமான சார்லஸ் பைச்மேன் கூறினார்.

இந்த நட்சத்திரங்கள் பெருமளவு பிரகாசமான ஒளியை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள பொருட்களை மறைக்கக்கூடும்.

அதனால் தான் இந்தக் கோள் 2024 ஆகஸ்டில் ஒரு முறை கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தேடியபோது மறைந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம்.

"ஒருவேளை அந்த கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருந்திருக்கலாம் அல்லது பார்க்க முடியாத அளவுக்கு அருகில் இருந்திருக்கலாம். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை," என்று டாக்டர் ஹோவெட் கூறினார்.

வானியலாளர்கள் இப்போது இந்தக் கோளை பற்றிய புதிய அறிகுறிகளைத் தேடுவார்கள். இதற்கு, 2027இல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய நாசா தொலைநோக்கியான கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் எதிர்கால ஆய்வுகள், ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்கிற முறை மூலம் இந்த கோள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நமக்கு தெரிவிக்க முடியும்.

இது, கோளின் தோற்றம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகளின் வாழக்கூடிய தன்மை பற்றி மிகவும் விரிவான தகவல்களை வழங்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j9vygzn60o

விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு

2 months 3 weeks ago

வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன?

யூரோ 2022 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பிரிட்டன் வீராங்கனை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி

5 மணி நேரங்களுக்கு முன்னர்

பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, ஆனால் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா உங்களுக்கு சற்று சாதகத்தை தரலாம்; செயல்திறன் மீது மாதவிடாய் சுழற்சியின் தாக்கம், மாதவிடாய் கண்காணிப்பு கருவிகள் என்ன பங்காற்றமுடியும்; சில காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன, அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்?

தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் "மினி ஆண்களாக" கருதப்பட்டதாக என்னிடம் கூறிய காலத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது.

மார்பக இயங்கியல் (Breast biomechanics)

கால்பந்தாட்ட வீராங்கனைகள் கொண்டாட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

2022ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் பிரபலமான காட்சியை நினைவுகூருங்கள்.

வெம்ப்லி மைதானத்தில் போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி கோலை அடித்தார்.

இதைத் தொடர்ந்த வெற்றிக்கொண்டாட்டத்தில், அவர் தனது பிரிட்டன் சட்டையை கழற்றி தனது ஸ்போர்ட்ஸ் பிராவை உலகுக்கு காட்டினார்.

இதை வடிவமைத்தவர் "பிரா ப்ரொஃபசர்" என்ற புனைப்பயரால் அழைக்கப்படும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்ட்-ஸ்கர்.

இதோ மார்பகங்கள் பற்றிய அவரது தகவல்கள்

  • ஒரு கால்பந்தாட்ட போட்டியின் போது மார்பகங்கள் சராசரியாக 11,000 முறை மேலும்கீழுமாக அசையக்கூடும் (bounce)

  • உரிய ஆதரவு இல்லாவிட்டால் ஒரு பவுன்ஸின் சராசரி அளவு 8 சென்டிமீட்டர் (3 அங்குலம்)

  • அவை 5ஜி விசையுடன் (புவியீர்ப்பு விசையைவிட ஐந்து மடங்கு அதிகம்) நகர்கின்றன. இது ஃபார்முலா 1 கார் ஓட்டுநரின் அனுபவத்துக்கு ஒப்பானது.

மார்பின் மீது நகர்வுகளை அளவிடும் மோஷன் சென்சார்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், நகரும் மார்பக திசுக்களின் எடை உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டை எப்படி மாற்றுகின்றன என்பதையும், அவ்வாறு மாற்றப்படும் செயல்பாடு விளையாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளன.

"சில பெண்களுக்கு அவர்களது மார்பகம் அதிக எடையுள்ளதாக இருக்கலாம், அவை நகர்ந்தால், அது அவர்களது உடல் நகர்வை மாற்றக்கூடும், களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் விசையின் அளவைக் கூட அது மாற்றக்கூடும்," என வேக்ஃபீல்ட்-ஸ்கர் என்னிடம் தெரிவித்தார்.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

பட மூலாதாரம், UNIVERSITY OF PORTSMOUTH

படக்குறிப்பு, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

உடலின் மேற்பகுதி நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகங்கள் மேலும்கீழுமாக அசைவைதை ஈடுகட்டுவது, இடுப்பு இருக்கும் நிலையை மாற்றி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டின் நீளத்தை குறைக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் பிராக்கள் வசதிக்கும், ஃபேஷனுக்கும் மட்டுமல்லாது செயல்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கின்றன.

"மார்பகங்களுக்கு குறைவான ஆதரவு இருந்தால், அது எடுத்துவைக்கும் அடியின் நீளத்தை நான்கு சென்டிமீட்டர் குறைத்ததை நாங்கள் பார்த்தோம்," என விளக்குகிறார் வேக்ஃபீல்ட்-ஸ்கர்.

"ஒரு மாரத்தானில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான்கு சென்டிமீட்டரை இழந்தால் அது மொத்தமாக ஒரு மைலாக கணக்காகிறது."

ஸ்போர்ட்ஸ் பிராக்கள் மார்பின் உள்ளே இருக்கும் மென்மையான அமைப்புகளையும் பாதுகாக்கின்றன, "நாம் அவற்றை நீட்டினால் அவை நிரந்தரமாகிவிடும்," என்கிறார் அந்த பேராசிரியர், எனவே "இது குணப்படுத்துவதைவிட, நிகழாமல் தடுப்பதில் இருக்கிறது."

மாதவிடாய் சுழற்சியும், செயல்திறனில் அதன் தாக்கமும்

காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை

பட மூலாதாரம், CALLI HAUGER-THACKERY

படக்குறிப்பு, காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை

மாதவிடாய் சுழற்சி உடலின் மீது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது உணர்வுகளையும், மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் களைப்பு, தலைவலி மற்றும் பிடிப்புகளை (cramps) உண்டாக்கலாம்.

ஆனால், விளையாட்டின் மீது மாதவிடாயின் தாக்கத்தை பற்றி பேசுவது "இன்னமும் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் அதனுடன் போராடிக்கொண்டிருப்பதால் அதை பற்றி பேசுவது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது," எனவும் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டன் சார்பாக பங்கேற்ற தொலைதூர ஓட்ட வீராங்கனை காலி ஹாகர்-தாக்கரி சொல்கிறார்.

மாதவிடாய் நெருங்கும்போது தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உணர்வதாக சொல்கிறார் காலி.

"நான் சோர்வாக உணர்கிறேன், கால்கள் கனமாக இருக்கின்றன, சில நேரங்களில் கிட்டத்தட்ட சேற்றில் ஓடுவதைப் போல் உணர்கிறேன், எல்லாமே வழக்கத்தை விட கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக இருக்கின்றன," எனகிறார் அவர்.

தனது மாதவிடாய் கண்காணிப்பு கருவியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதவிடாய் நேரம் "குறிப்பாக பெரிய பந்தயங்கள் வரும்போது" தனக்கு கவலையளிப்பதாகவும் உணர்கிறார்.

அப்படி ஒரு பெரிய பந்தயம், பாஸ்டன் மாரத்தான், ஏப்ரலில் நடைபெற்ற போது அவரது மாதவிடாய் காலம். அப்போட்டியில் அவர் ஆறாவது இடத்தை பிடித்தார். "அதிர்ஷ்டவசமாக அதை கடந்ததாக" நினைவுகூரும் அவர், அதே நேரம் தன்னால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என கூறுகிறார்.

மாதவிடாய் சுழற்சி. இரண்டு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது விளையாட்டு செயல்திறன் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?

"அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் இதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி செயல்திறனை பாதிக்கிறது என வெறுமனே சொல்லிவிடும் அளவு எளிதானது அல்ல," என்கிறார் மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பெண் உட்சுரப்பியல் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணரான பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்.

"போட்டிகள், தனிப்பட்ட சிறந்த செயல்பாடு, உலக சாதனை, எல்லாம் படைக்கப்பட்டுள்ளன, மாதவிடாய் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வெல்லப்பட்டு, இழக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.

இதில், 2022 சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மாதவிடாயால் ஏற்பட்ட பிடிப்புகளுடன் ஓடி உலக சாதனையை முறியடித்த பவுலா ராட்கிளிஃப்பும் அடங்கும்.

மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்

படக்குறிப்பு, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்

மாதவிடாய் சுழற்சி விளையாட்டு திறனை பாதிக்கிறதா என்பதை அறிய, ஹார்மோன்களால் உடல் முழுவதும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மாதவிடாய் அறிகுறிகளுடன் செயல்படுவதிலுள்ள சவால், மாதவிடாய் நேரத்தில் போட்டியிடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இவை அனைத்தைப் பற்றிய பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

"ஒருவர் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கும் ஒரு கட்டமோ, அவர் வெல்வார் அல்லது தோல்வியடைவார் என்ற கட்டமோ கிடையாது என பேராசிரியர் எலியட்-சேல் சொல்கிறார். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் எலும்பு, தசை அல்லது இதயம் போன்ற உடல் பகுதிகளை மாற்றலாம்.

"நாம் இன்னமும் புரிந்துகொள்ளாதது இதுதான்: இது உண்மையில் செயல்திறனை பாதிக்கும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?," என்கிறார் அவர்.

"தூக்கமின்மை, களைப்பு மற்றும் பிடிப்புகள் செயல்பாட்டை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு, தங்கள் மாதவிடாயின்போது ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கு ஏற்படும் பயமும் கவலையும் "முற்றிலும் உணரக்கூடிய நிலையில் உள்ள ஒன்று என அந்த பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

கசிவு அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க மும்மடங்கு மாதவிடாய் உள்ளாடைகளை அணிந்துகொள்ளும் வீராங்கனைகளுடன் பேசியிருக்கும் அவர், "அது ஒரு பெரிய மன பாரம்." என கூறுகிறார்.

கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின்  மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை

படக்குறிப்பு, கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின் மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை

சேல் ஷார்க்ஸ் வுமென் ரக்பி அணி, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

நான் முன்னாள் பிரிட்டன் ரக்பி கேப்டனும், இங்கிலாந்து அணியின் மிக அதிக புள்ளிகளை குவித்தவருமான கேட்டி டேலி-மெக்லீனை சந்தித்தேன்.

மாதவிடாய் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தைப் பற்றியும் அதற்கு எப்படி திட்டமிடுவது என்பது பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள அணி வெளிப்படையான ஆலோசனைகளை நடத்திவருகின்றன. "இதைப்பற்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை." என நினைப்பதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு முன்பே இப்யூபுரூஃபன் மாத்திரிகளை எடுத்துக்கொள்வது இதில் அடங்கும்." என்கிறார் டேலி-மெக்லீன்.

"இந்த புரிதல் மற்றும் தகவல் மூலம்தான் நாம் இதைப் பற்றி பேசமுடியும், திட்டங்களை வகுத்து, ஒருவரை மேலும் சிறந்த ரக்பி வீரராக மாற்ற அவரது நடத்தையை மாற்றலாம்," என அவர் சொல்கிறார்.

காயங்களை தவிர்ப்பது எப்படி?

பெண்கள் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் தெரியவந்திருக்கும் ஒரு விஷயம் சில காயங்கள் ஏற்படுவதற்கான் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம்.

காலின் மேல் மற்றும் கீழ் பகுதியை இணைக்கும் பகுதியான முன்புற சிலுவை தசைநார் (ACL) மீதுதான் பெரும்பகுதி கவனம் செலுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், இவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு ஓராண்டு ஆகலாம்.

பங்கேற்கும் விளையாட்டைப் பொறுத்து இந்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதரணமாகி வருகின்றன என்கிறார், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயங்கியல் ஆய்வாளர் தாமஸ் டாஸ்'சான்டோஸ்.

ஆனால், பெண்களுக்கு அதிக அபாயம் ஏற்படுவதை விளக்க "எளிதான விளக்கம்," ஏதும் இல்லை, என்கிறார் அவர்.

உடற்கூற்றில் இருக்கும் வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு பெரிய இடுப்புகள் இருப்பதால், தொடை எலும்பின் மேற்பகுதி மேலும் அகலமான ஒரு நிலையிலிருந்து தொடங்குவதால் முழங்காலில் காலின் கீழ்பகுதியுடன் இணையும் கோணத்தை மாற்றுகிறது, இது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

பெண்களில் ACL சற்றே சிறியதாக இருக்கிறது, எனவே அது சற்றே பலவீனமாக இருக்கலாம்," என முனைவர் டாஸ்'சான்டோஸ் விளக்குகிறார்.

முனைவர் தாமஸ் டாஸ்’சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்

படக்குறிப்பு, முனைவர் தாமஸ் டாஸ்'சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்

ACL காயங்கள் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டத்திலும் ஏற்படலாம், ஆனால், உலக அளவில் கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் ஃபிஃபா நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வு உட்பட பல ஆய்வுகளால் ஹார்மோன் மாற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மாதவிடாய்க்கு முன் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பது தசைநார்களின் பண்புகளை மாற்றலாம். இது அவற்றின் நீட்டிக்கப்படக்கூடும் தன்மையை அதிகரிக்கிறது, அதனால் காயமடையும் அபாயம் கோட்பாட்டளவில் அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், ஆண்களுக்கு இணையான தரத்தில் ஆதரவும், வலுப்படுத்தும் பயிற்சிகளையும் பெண்கள் இன்னும் பெறுவதில்லை என்பதால் தூய உடற்கூறியலைத் தாண்டி சிந்திப்பது முக்கியம் என்று டாஸ்'சான்டோஸ் வாதிடுகிறார்.

அவர் அதை நடன கலைஞர்கள் தரமான பயிற்சியை பெறும் பாலே நடனத்துடன் ஒப்பிடுகிறார், "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காய விகிதத்தில் இருக்கும் வேறுபாடு அடிப்படையில் பொருட்படுத்தத்தக்கதல்ல," என்று டாஸ்'சான்டோஸ் கூறுகிறார்.

சற்றே வித்தியாசமான முறைகளில் நகர விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் ACL காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இருக்கின்றன.

ஆனால், இதன்மூலம் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. தடுப்பாட்டக்காரரை ஏமாற்ற தோளை தாழ்த்திவிட்டு பிறகு வேறொரு திசையில் பாய்வது கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் அவசியமானது. இதைப் போன்ற நுட்பங்கள் ACL மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

"நாம் அவற்றை மறைத்துவிட்டு விளையாட்டு விளையாடுபவரை தவிர்க்க வேண்டும் என சொல்ல முடியாது," என்கிறார் டாஸ்'சாண்டோஸ்.

"அந்தச் சுமைகளை தாங்குமளவு அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான் நாம் செய்யவேண்டியது, நாம் 100% ACL காயங்களை நீக்கிவிடலாம் என சிலர் சொல்வதைப்போல் அது அவ்வளவு எளிதானதல்ல, நம்மால் முடியாது."

இனியும் 'மினி ஆண்கள் அல்ல'

இன்னமும் பதில் இல்லாத பல கேள்விகள் இருந்தாலும், சேல் ஷார்க்ஸ் வுமென் அணியை சேர்ந்த கேட்டி டேலி-மெக்லீனுக்கு இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

2007-ல் அவர் அணிக்காக முதல்முறையாக விளையாட தொடங்கியபோது, அவரது உடல் எப்படி செயல்படும் என்பது பற்றிய அனைத்து அனுமானங்களும் ஆண் ரக்பி வீரர்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை நினைவுகூருகிறார்.

"நாங்கள் மினி-ஆண்களாகவே நடத்தப்பட்டோம்." என்கிறார் டேலி மெக்லீன்.

இப்போது சிறுமியரும், பெண்களும் விளையாட்டில் வெளிநபர்கள் போன்று உணருவதில்லை என்கிறார் அவர். விளையாட்டு உயர்மட்ட அளவில் திறனை அதிகரிப்பதுடன் மேலும் அதிக பெண்களை விளையாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

"இது அற்புதமானது, இதை கொண்டாட வேண்டிய ஒன்று, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இளம்பெண்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உடல் தோற்றம், இது மாதவிடாயை சார்ந்தது மற்றும் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாதது, இவை மிக எளிதாக தீர்க்கப்படக்கூடியவை."

ஜெரி ஹோல்ட் தயாரித்த பிபிசியின் 'இன்சைட் ஹெல்த்' நிகழ்ச்சியிலிருந்து

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v3xql41weo

நிலவில் அணு உலை அமைக்கும் நாசா – சந்திரனை சுற்றி வல்லரசு நாடுகள் போட்டி

2 months 4 weeks ago

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசா ஃபிஷன் பரப்பு ஆற்றல் திட்டத்தின் மாதிரி புகைப்படம்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரானார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 7 ஆகஸ்ட் 2025, 02:11 GMT

நாசா நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நிலவில் மனித குடியேற்றத்துக்கான அடிப்படையாக இது பார்க்கப்படும் நிலையில் வல்லரசு நாடுகளில் போட்டிகளமாக நிலவு மாறிவிடுமோ என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் இதே போன்றதொரு அறிவிப்பை ரஷ்யாவும் சீனாவும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு நிரந்தர தளத்தை உருவாக்குவது அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

மறுபுறம் சீனாவும், ரஷ்யாவும் நிலவில் மனிதர்கள் வாழும் நிரந்தர தளங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாசாவின் செயல் தலைவர் பொலிடிகோ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த நாடுகள் நிலவில் 'தடைசெய்யப்பட்ட மண்டலம்' ஒன்றை அறிவிக்கக்கூடும் என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சமீபத்தில் நாசாவுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இலக்கும் காலக்கெடுவும் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன.

மேலும், இந்தத் திட்டங்கள் புவிசார் அரசியல் நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்று சில விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிலவின் மேற்பரப்பை ஆராய விரைந்து செயல்படுகின்றன. அதேபோல் அங்கு நிரந்தர மனித குடியிருப்புகளை உருவாக்கவும் சில நாடுகள் திட்டமிடுகின்றன.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி

"எதிர்கால நிலவு பொருளாதாரத்தையும், செவ்வாயில் அதிக ஆற்றல் உற்பத்தியையும், விண்வெளியில் அமெரிக்காவின் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டுமெனில், இந்த முக்கிய தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்த வேண்டும்," என நாசாவுக்கு அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி எழுதியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரை நாசாவின் தற்காலிக தலைவராக நியமித்துள்ளார்.

குறைந்தபட்சமாக, 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அணு உலையை உருவாக்கும் வகையிலான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு வணிக நிறுவனங்களுக்கு டஃபி அழைப்பு விடுத்துள்ளார்.

இது ஒப்பீட்டளவில், குறைந்த அளவிலான ஆற்றல்தான். ஒரு வழக்கமான கரையோர காற்றாலை 2 முதல் 3 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஆனால், சந்திரனில் மின்சாரத்துக்காக அணு உலையைக் கட்டும் யோசனை என்பது புதிதல்ல. 2022இல், அணு உலையின் வடிவமைப்புக்காக நாசா மூன்று நிறுவனங்களுக்கு தலா 5 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தங்களை வழங்கியது.

2035-க்குள் நிலவில் தானியங்கி அணு மின் நிலையம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தன.

நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகவோ அல்லது ஒரே வழியாகவோ இது இருக்கலாம் எனப் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு நிலவு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமம். இதில் இரண்டு வாரங்களுக்கு சூரிய ஒளி கிடைக்கும், மற்ற இரண்டு வாரங்கள் இருள்சூழ்ந்து இருக்கும். அதனால் சூரிய சக்தியை மட்டும் நம்பி இயங்குவது மிகவும் கடினமாகிறது.

"ஒரு சிறிய குழுவினரை தங்க வைக்கும் வகையில், சாதாரணமான ஒரு இருப்பிடத்தைக் கட்டுவதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவைப்படும். சூரிய மின்கலங்கள் மற்றும் பேட்டரிகளால் மட்டுமே இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியாது" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் சங்வூ லிம்.

"அணுசக்தி விரும்பத்தக்க ஒன்றாக மட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது" என்றும் அவர் கூறுகிறார்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், CNSA/CLEP

படக்குறிப்பு, 2020-இல் சான்ஜ்-இ திட்டத்தில் சீனா தனது கொடியை நிலவில் நிறுவியது.

லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பூமி மற்றும் கோள் அறிவியல் பேராசிரியராக உள்ள லியோனல் வில்சனைப் பொருத்தவரை, "போதுமான நிதி ஒதுக்கப்பட்டால்" 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலைகளை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது ஒன்று தான்.

வில்சனின் கூற்றுப்படி, சிறிய அணு உலைகளுக்கான வடிவமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.

"அந்த நேரத்துக்குள் நிலவில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு, நாசா போதுமான 'ஆர்ட்டெமிஸ்' ஏவுதல்களைச் செய்தால் அது முடியும்," என்கிறார்.

ஆர்ட்டெமிஸ் என்பது நாசா செயல்படுத்தும் சந்திரவெளிப் பயண திட்டம். இது மனிதர்களையும், உபகரணங்களையும் நிலவுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் இவ்வகை அணு உலை ஏவுதல்களில் பாதுகாப்பு குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன.

"பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருட்களை விண்ணுக்கு அனுப்புவது பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்புகிறது. அதற்கு சிறப்பு உரிமம் தேவை, ஆனால் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை," என்கிறார் ஓபன் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் நிபுணரான முனைவர் சிமியோன் பார்பர்.

2026ஆம் ஆண்டில் நாசாவின் நிதி ஒதுக்கீட்டில் 24% குறைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்த பிறகு, நாசாவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து டஃபியின் உத்தரவு எதிர்பாராதவிதமாக வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பூமிக்கு மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' போன்ற பல முக்கியமான அறிவியல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவை அடைவதற்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள், சீனா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் நிலவு ஆராய்ச்சி

"விண்வெளிக்குச் செல்வதில் போட்டி நிலவிய பழைய காலத்துக்கு, நாம் மீண்டும் திரும்புவது போல் தெரிகிறது. இது அறிவியல் ரீதியாக சற்று ஏமாற்றத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது," என முனைவர் பார்பர் கூறுகிறார்.

"போட்டி, புதுமைகளை உருவாக்கலாம். ஆனால் தேசிய நலன்கள் மற்றும் உரிமையை நிலைநாட்டுவது என்கிற குறுகிய நோக்கம் இருந்தால், சூரிய மண்டலம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பகுதிகளை ஆராயும் பெரிய நோக்கத்தை நீங்கள் மறந்து விடுவீர்கள்," என்றும் தெரிவித்தார்.

சீனாவும் ரஷ்யாவும், சந்திரனில் "ஒரு தடை மண்டலத்தை அறிவிக்க" வாய்ப்புள்ளது என்பது குறித்த டஃபியின் கருத்துக்கள், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

2020 ஆம் ஆண்டில், நிலவின் மேற்பரப்பில் நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்த கொள்கைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஏழு நாடுகள் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில், நாடுகள் நிலவில் உருவாக்கும் தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி 'பாதுகாப்பு மண்டலங்கள்' அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நீங்கள் சந்திரனில் ஒரு அணு உலையையோ அல்லது வேறு எந்த தளத்தையோ கட்டினால், அதைச் சுற்றி பாதுகாப்பு மண்டலம் இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு உங்களுடைய உபகரணங்கள் இருக்கும்," என்கிறார் முனைவர் பார்பர்.

"சிலருக்கு இது, 'நாங்கள் நிலவின் இந்தப் பகுதியை சொந்தமாக வைத்திருக்கிறோம். இங்கே நாங்கள் செயல்படப் போகிறோம், நீங்கள் வர முடியாது' என்று சொல்வதற்கு சமமாகத் தோன்றும்," என்றும் அவர் விளக்குகிறார்.

மனிதர்கள் பயன்படுத்தும் நோக்கில் நிலவில் அணு உலை அமைப்பதற்கு முன் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும் என்று முனைவர் பார்பர் குறிப்பிடுகிறார்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 திட்டம் 2027 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது பல தடைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு தளத்திற்கு அணுசக்தி இருந்தாலும், அங்கு மனிதர்களையும் உபகரணங்களையும் கொண்டு செல்ல வழியில்லை என்றால், அது பயனுள்ளதாக இருக்காது என்று கூறிய பார்பர், தற்போது இந்த திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடப்பதாக தோன்றுவில்லை என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crm4301jp79o

Checked
Wed, 11/05/2025 - 08:52
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed