அறிவியல் தொழில்நுட்பம்

"பூமியை நெருங்கும் 6வது பேரழிவு" : அழிந்து போன உயிர்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமா?

3 months 1 week ago

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

7 ஜூன் 2025

ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.

கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.

ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

கொலோசல் பயோசயின்சஸின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பெத் ஷாபிரோ, 2015 இல் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் குளோனிங் பற்றி விவாதித்ததைக் குறிப்பிடுகிறார். அழிந்துபோன எந்த உயிரினத்தையும் குளோனிங் செய்ய முடியாது என அவர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புதிய சாதனை அவரது கருத்தை மாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார்.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் டயர் ஓநாய்கள் முக்கியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. டாக்டர் பெத் ஷாபிரோவின் கருத்துப்படி, டயர் ஓநாய் என்பது நரிகள் மற்றும் நாய்களுடன் தொடர்புடைய ஒரு இனமாகும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டயர் ஓநாய் இனத்தின் ஆரம்பகால புதைபடிவம் சுமார் 2.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்த விலங்குகள் வட அமெரிக்காவில் காணப்பட்டன. கடந்த பனி யுகத்தில், அதாவது சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டயர் ஓநாய் அழிந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் கூட்டத்தில், எந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்கலாம் என்பது பற்றிய விவாதம் நடந்ததை டாக்டர் பெத் ஷாபிரோ நினைவு கூர்கிறார்.

உயிரினத்தை மீண்டும் உருவாக்குவதில், தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சவால்களும் விவாதிக்கப்பட்டன. ரோமியோலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய இரு டயர் ஓநாய் குட்டிகள், மரபணு மாற்ற செயல்முறை தொடங்கிய 18 மாதங்களுக்குள் பிறந்துவிட்டன.

ஒரு உயிரினத்தின் அனைத்து டிஎன்ஏக்களின் முழுமையான தொகுப்பே மரபணுத் தொகுப்பு ஆகும். இதற்காக, கொலோசஸ் பயோசயின்சஸுக்கு டயர் ஓநாயின் டிஎன்ஏ தேவைப்பட்டது.

"72,000 ஆண்டுகள் பழமையான டயர் ஓநாயின் மண்டை ஓடு மற்றும் 13,000 ஆண்டுகள் பழமையான பல் ஒன்றும் கிடைத்தது. அதிலிருந்து டிஎன்ஏ கிடைத்தது. அதைப் பயன்படுத்தி இந்த இரு டயர் ஓநாய்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்கினோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இந்த மரபணு வரிசை, டயர் ஓநாய் இனத்தின் நெருங்கிய இனமான சாம்பல் ஓநாய் இனத்துடன் ஒப்பிடப்பட்டது. பண்டைய டயர் ஓநாய் இனத்துடன் ஒத்த ஒரு இனத்தை உருவாக்க இந்த மரபணுவில் சில மாற்றங்களைச் செய்ததாக டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில், டயர் ஓநாயின் டிஎன்ஏவில் சாம்பல் ஓநாயின் ஜீன்கள் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்பட்டது.

கருவை வளர்க்க, வளர்ப்பு நாய்கள் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்பட்டன. நாய்களின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது.

கருவுற்ற நாய்கள் அறுவை சிகிச்சை மூலம் ஓநாய்களை பிரசவித்தன. ஆனால், ஏன் சாம்பல் ஓநாய்களை வாடகைத் தாயாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறதா?

நாய்களை, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவமும் அறிவும் இருப்பதால் இது செய்யப்பட்டது என்று கூறும் டாக்டர் பெத் ஷாபிரோ, நாய்கள் உண்மையில் சாம்பல் ஓநாய்களின் மற்றொரு வடிவம் என்று சொல்கிறார்.

கடந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள்

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,COLOSSAL BIOSCIENCES

இப்போது, இந்த 'டயர் ஓநாய் குட்டிகள்' உண்மையில் என்ன என்றும் என்னவாக இல்லை என்றும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"அவை டயர் ஓநாய்கள் இல்லை என்பது உண்மைதான். நாங்கள் அவற்றை டயர் ஓநாய்கள் என்று அழைக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை Proxy Direwolf அல்லது Colossal Direwolf என்றும் அழைக்கலாம். நாங்கள் அவற்றுடன் சாம்பல் ஓநாயின் பண்புகளையும் சேர்த்துள்ளோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் இரண்டு ஓநாய் குட்டிகள் அக்டோபர் 2024 இல் பிறந்தன, மூன்றாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறந்தது. நிறுவனம் அவற்றை காட்டுக்குள் விட விரும்பவில்லை என்றும், இந்த குட்டிகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இனப்பெருக்கம் செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்த தனது நிறுவனம் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறுக்றார்.

இந்த செயல்முறையைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவே நிறுவனம் விரும்புகிறது. பல அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிரினங்கள் எவ்வாறு அழிந்து போகின்றன?

இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கூறுகையில், வாழ்க்கையின் வரலாற்றைப் பார்த்தால், 3.7 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் இருந்த உயிரினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிட்டன.

"மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியில் இருக்கும் 48 சதவீத விலங்கு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் பொருள், இன்று பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்கள் அருகிக் கொண்டே வந்தால் சில தசாப்தங்களில் அழிந்துவிடும்."

அழிவு என்பது பகுதியளவு நிகழ்வாகவும் இருக்கலாம், அதாவது ஒரு இனம் உலகின் ஒரு பகுதியில் அழிந்துவிடும், ஆனால் மற்றொரு இடத்தில் உயிர்வாழலாம். இருப்பினும் அந்த இனம் எல்லா இடங்களிலும் அழிந்து போகும்போது, அந்த உயிரினம் அழிந்துவிடும்.

உயிரினங்கள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ சொல்கிறார். உதாரணமாக, வேட்டையாடுதல், அல்லது அவற்றை அழிக்கும் உயிரினங்களை அவற்றின் பிரதேசத்தில் குடியேற்றுதல் மற்றும் அந்த இனங்களின் மெதுவான இனப்பெருக்க விகிதம் என ஒரு உயிரினம் அழிவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.

பூமியில் உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்த பெரிய அளவிலான ஐந்து சம்பவங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, வெகுஜன அழிவுக்கு (பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு) காரணமான சம்பவங்கள் இவை.

"இதற்கு முன்னர் நடந்த ஐந்து பேரழிவு நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், பூமியைத் தாக்கும் விண்கற்கள் அல்லது பிற இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, மெக்சிகோவை விண்கல் தாக்கியதால் டைனோசர்கள் அழிந்தன" என்று டாக்டர் டேனியல் பின்செரா டோனோசோ கூறினார்.

அந்த சம்பவம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் 90 சதவீத உயிரினங்களை அழித்தன.

இந்த ஐந்து பேரழிவு சம்பவங்களுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது ஆறாவது பேரழிவு நம்மை நெருங்கிவிட்டது. டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோவின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிரினங்களில் குறைந்தது 70 சதவீதமாவது அழிக்கப்படும்போதுதான் வெகுஜன அழிவு ஏற்படுகிறது.

அழிந்த விலங்குகளை மீட்டல்

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இப்போது நாம் பெருமளவில் அழிந்து வரும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார். வெகுஜன அழிவுக்குப் பிறகு, பூமியில் வாழ்க்கை மாறும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் எந்த இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன?

பல பெரிய பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கருதுகிறார். அவற்றில் திமிங்கலங்களில் சில வகை மற்றும் பெரிய ஆப்பிரிக்க பாலூட்டிகள் அடங்கும். ஆனால் தவளை இனங்களுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம், நில இழப்பு மற்றும் நோய்கள் காரணமாக, தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களை விட மிக வேகமாக அழிந்து வருவதாக அவர் கூறுகிறார்.

அவற்றின் பல இனங்கள் அழிந்துவிட்டன, மேலும் பல அழிவின் விளிம்பில் உள்ளன. ஒரு இனத்தின் அழிவு என்பது சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்குகிறது. அத்துடன், அவற்றுடன் தொடர்புடைய உயிரினங்கள் பலவும் அழிந்து போகத் தொடங்குகின்றன. இதைப் பல பாகங்களைக் கொண்ட ஒரு காரின் எஞ்சினுடன் ஒப்பிடலாம். எஞ்சினில் இருந்து ஒரு சிறிய திருகு கழன்று விழுந்தால், முழு எஞ்சினுமே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதைப் போலவே, ஒரு உயிரினம் அருகும்போதும், அழியும்போதும் அதன் சங்கிலித் தொடர் விளைவாக பல உயிரினங்களின் இருப்பும் பாதிக்கப்படும்.

அழிந்துபோன உயிரினங்களின் மீட்சி

மரபணு எடிட்டிங் குறித்த புத்தகங்களை எழுதிய அறிவியல் பத்திரிகையாளரான டோரில் கோர்ன்ஃபெல்ட், மரபணு திருத்தம் மூலம் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் குறைந்தது பத்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மாமூத் யானை போன்ற விலங்குகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன அல்லது இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை உருவாக்கும் சில திட்டங்களும் தற்போது செயலில் உள்ளன.

"மீண்டும் விலங்குகள் உருவாக்கப்படும் முயற்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மாமூத், டயர் ஓநாய், டோடோ பறவை மற்றும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் வட வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால் அறிவியலின் உதவியுடன், ஒரு லட்சம் வெள்ளை காண்டாமிருகங்கள் உருவாக்கப்பட்டு அவை காட்டில் விடப்பட்டால், வேட்டைக்காரர்கள் ஒரே வாரத்தில் அவற்றைக் கொன்றுவிடுவார்கள். உண்மையில், இதுபோன்ற விலங்குகளின் அழிவுக்கு காரணம் வேட்டை தான். இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை."

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் அசாத்தியங்களும் சாத்தியமாகின்றன என்றாலும், வேலை எளிதானது அல்ல.

பனியில் உறைந்து இருக்கும் மாமூத் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதன் டிஎன்ஏ கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் டோரில் கோர்ன்ஃபெல்ட் கூறுகிறார்.

"கடுமையாக சேதமடைந்துள்ள டிஎன்ஏவை மறுகட்டமைப்பது என்பது ஆயிரக்கணக்கான கிழிந்த பக்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு நாவலைப் படிக்க முயற்சிப்பது போன்றதாகும்" என்று அவர் விளக்குகிறார்.

1980களில், டிஎன்ஏவை மறுகட்டமைத்து ஆய்வு செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1990களில், குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலி என்ற செம்மறி ஆடு பிறந்தது மிகப் பெரிய சாதனையாக நிரூபிக்கப்பட்டது. அதாவது ஒரு உயிரினத்தின் சரியான நகல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு உயிருள்ள செல்கள் தேவை.

2012 ஆம் ஆண்டில், மரபணு திருத்தத்திற்கான ஒரு புதிய கருவி 'CRISPER Cas9' கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உதவியுடன், கொலோசல் பயோசயின்சஸ் டயர் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

என்னென்ன சந்தேகங்கள் உள்ளன?

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கருவியின் காரணமாக, மரபணு திருத்தம் மிகவும் துல்லியமானது, புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமானது என்று கூறும் டோரில் கோர்ன்ஃபெல்ட், 'CRISPR Cas 9' விவசாய அறிவியலிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் முயற்சிகளால் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் கனவு நனவாகும். ஆனால் அழிந்துபோன விலங்குகளை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது ஏன்?

"இதற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆர்வம் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பரிசோதித்து உலகை நன்கு புரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக, உலகில் பல நல்ல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை நமக்கு பயனளித்துள்ளதும் கண்கூடான விஷயம் தான். ஆனால் பல நெறிமுறை கேள்விகளும் இந்த சோதனைகளுடன் தொடர்புடையவை" என்று டோரில் கோர்ன்ஃபெல்ட் கருதுகிறார்.

அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதால் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள லூயிஸ் & கிளார்க் கல்லூரியின் தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஓடென்போ, மரபணு திருத்தம் நிச்சயமாக ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று கூறுகிறார், ஆனால் அழிவு நீக்கம் செய்வதன் மூலம், அதாவது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம், நாம் கடவுளாக மாற முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

"தத்துவார்த்த ரீதியில், அதன் நன்மைகள், தீமைகளை விட அதிகமாக உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதில் நெறிமுறை சிக்கல்களும் உள்ளன. இதில் பக்க விளைவுகளும் உள்ளன" என்று அவர் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் வெளிப்படுத்தப்படும் முக்கியமான கவலை என்னவென்றால், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு குறையக்கூடும்.

"ஒரு இனம் அழிந்துவிட்டாலும், அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள், இதுவொரு கவலை. அழிவு என்பது நிரந்தரமானது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கருத்து மாறக்கூடும். எனவே அழிவு நிலையில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் உணரத் தொடங்குவார்கள்" என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.

எந்த இனத்தை மீண்டும் உலகில் அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் முக்கியமான கேள்வி.

மாமூத் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்கலாம் என்றால் அதற்கான காரணம், அவை பனி உருகுவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதாக இருக்கும் என டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.

ஆனால் அழிவு தொடர்பான அடுத்த கேள்வி என்னவென்றால், மீண்டும் உருவாக்கப்படும் விலங்குகளின் இனங்கள் அசலானதாக இருக்காது, மாறாக அவற்றை ஒத்தது போலவே இருக்கும்.

இந்த நிலையில் உயிரினங்களை மீட்டெடுப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவடையாது என்று டாக்டர் ஜே. ஓடென்போ நம்புகிறார். மேலும், அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் அசல் உயிரினங்களைப் போன்றவையா இல்லையா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறினார். அவை பாதுகாக்கப்பட்ட கூண்டுகளில் வைக்கப்படும். இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், அவை மீண்டும் அழிந்துவிடும்.

"இந்தத் திட்டம் பாதுகாப்பிற்காக அல்ல, ஆர்வத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வது தனியார் நிறுவனங்கள் என்பதால், பிற விஞ்ஞானிகளால் இதைப் பார்க்க முடியவில்லை."

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொலோசல் பயோசயின்சஸ், டயர் ஓநாய் மீளுருவாக்கம் பரிசோதனை குறித்த தனது ஆராய்ச்சியை மதிப்பாய்வுக்காக ஒரு கல்வி இதழில் சமர்ப்பித்ததாகக் கூறியது. ஆனால் அது வெளியாக பல மாதங்கள் ஆகும்.

சரி, உயிரினங்களை மீட்டெடுப்பது சுலபமானதா? அவை அழிந்து போன உயிரினங்களாவே இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.

தற்போது, Colossal Biosciences உருவாக்கி வளர்த்துவரும் ஓநாய்கள் முழுமையான டயர் ஓநாய்கள் அல்ல. இருப்பினும், இது அழியாத்தன்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக முக்கியமானது என்று சொல்லலாம்.

ஒருவேளை, இதுவும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய ஊடகமாக மாறக்கூடும். ஆனால் அழிந்துபோன உயிரினம் ஒன்றை மீண்டும் உருவாக்குவதற்கு கடின உழைப்பும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல அதிக பணமும் தேவை.

அதுமட்டுமல்ல, சரியா தவறா என பல தார்மீகப் பிரச்னைகளும் இத்துடன் இணைத்து பார்க்கப்படும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும், ஆனால் இந்த அறிவியலைப் பாதுகாப்போடு பயன்படுத்துவது உலகில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்க உதவும் என்றும் டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39xjl8zk03o

விஞ்ஞானிகள் விளக்க முடியாமல் தவிக்கும் வினோதமான விண்வெளி வெடிப்புகள்

3 months 2 weeks ago

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன்

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா?

வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது.

அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர்.

அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பைவிட வேகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அது சூப்பர்நோவாவாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், அதன் தன்மை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்த அதிநவீன விண்மீன் வெடிப்பு AT2018cow என அழைக்கப்பட்டது. இதில் உள்ள "cow" என்பது ஒரு சீரான குறியீட்டின் ஒரு பகுதி மட்டுமே. அதற்கும் பசுவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'cow' என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எளிய பயன்பாட்டிற்காக மட்டுமே இது உலகமெங்கும் சுருக்கமாக "தி கௌ" (The Cow) என அறியப்படுகிறது.

இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுக்குப் பிறகு, வானியலாளர்கள் பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற சில வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.

இவை "ஒளிரும் வேகமான நீல ஒளியியல் நிலையற்ற வெடிப்புகள்" (Luminous Fast Blue Optical Transients - LFBots) என விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டுள்ளன.

"அவை மிகவும் பிரகாசமாக இருக்கின்றன" என்கிறார் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழக வானியலாளர் அன்னா ஹோ.

அதனால்தான் LFBot எனும் சுருக்கத்தில் உள்ள 'L' என்பது 'luminous' (ஒளிர்வான) என்பதைக் குறிக்கிறது.

இந்த வெடிப்புகளின் நீல நிறம், சுமார் 40,000°C (72,000°F) என்ற அதீத வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த வெப்பம் ஒளியை நிறமாலையின் நீல நிறப் பகுதிக்கு மாற்றுகிறது. அந்த LFBot எனும் சுருக்கத்தின் கடைசி எழுத்துகளான 'O' மற்றும் 'T' என்பவை இந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியும் ஒளி நிறமாலையில் (optical) தோன்றி, மிகக் குறுகிய நேரத்தில் மறையும் (transient) தன்மையைக் குறிக்கிறது.

வெற்றிகரமாக வெடித்துச் சிதறாத சூப்பர் நோவாக்களா இந்த LFBots?

தொடக்கத்தில், LFBots என்பது வெற்றிகரமாக வெடிக்க முடியாமல் போன சூப்பர்நோவாக்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

அதாவது, வெடிக்க முயன்ற நட்சத்திரங்கள், உட்புறமாக வெடித்து, அவற்றின் மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அதன் வெளிப்புறத்தை உள்நோக்கி விழுங்கும் செயல்முறை.

இருப்பினும், இவை குறித்த மற்றொரு கோட்பாடு தற்போது பிரபலமடைந்து வருகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் (intermediate mass black holes) எனப்படும் நடுத்தர அளவிலான கருந்துளைகளின் கண்டுபிடிக்கப்படாத ஒரு வகை, அவற்றுக்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்களை விழுங்கும்போது "கௌ" (Cow) எரிப்புகள் தூண்டப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, இந்தக் கோட்பாட்டுக்குப் புதிய ஆதாரங்களை விவரித்தது.

இது இப்போது பொருந்தக்கூடிய விளக்கமாகக் கருதப்படலாம். "பொதுவான நிலைப்பாடு இப்போது அந்தத் திசையை நோக்கி நகர்கிறது" என்று லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டேனியல் பெர்லி கூறுகிறார்.

இது சரியானது என நிரூபிக்கப்பட்டால், பிரபஞ்சத்தில் காணப்படும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கருந்துளைகளுக்கு இடையே காணாமல் போன இணைப்புக்கும், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான இருண்ட பொருள் (dark matter) குறித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியமான ஆதாரங்களை இது வழங்கக்கூடும்.

எப்போது இத்தகைய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது?

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,வெடிப்பதற்காக முயன்ற நட்சத்திரங்கள் வெடிக்காமல், மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளிப்புறத்தை உள்நோக்கி இழுத்து விழுங்குகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் "தி கௌ" (The Cow) வெடிப்பு, ரோபோ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியான அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வெடிப்பு, பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் பதிவானது. வழக்கமான சூப்பர்நோவாவைவிட இது 100 மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. மேலும், தோன்றிய சில நாட்களிலேயே மறைந்தும்விட்டது.

சாதாரண சூப்பர்நோவாக்கள் முழுமையாக நிகழச் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகும். இத்துடன், பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, இந்த வெடிப்பு ஒரு விசித்திரமான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

அதன் பிறகு, வானியலாளர்கள் இதேபோன்ற சுமார் 12 நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அவற்றை முதலில் கண்டறிந்த வானியல் ஆய்வுகளின் விளைவாகத் தரப்படும் எழுத்துக் குறியீடுகளின் அடிப்படையில், விலங்குகளை மையமாகக் கொண்ட புனைப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை,

  • ZTF18abvkwla, 2018-ல் கண்டறியப்பட்டது – இது "கோலா" என அழைக்கப்படுகிறது.

  • ZTF20acigmel, 2020-ல் கண்டறியப்பட்டது – "ஒட்டகம்" எனப்படுகிறது.

  • AT2022tsd, 2022-ல் கண்டறியப்பட்டது – "டாஸ்மேனிய டெவில்" என்று அழைக்கப்படுகிறது.

  • AT2023fhn, 2023-ல் கண்டறியப்பட்டது – "ஃபின்ச்" அல்லது "ஃபான்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகைய வெடிப்புகளைத் தேடும் முயற்சியில் வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தி வானத்தின் பெரிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வகையான நிகழ்வுகளைக் கண்டறிய வானியலாளர்கள் தற்போது விண்வெளியின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஒரு வெடிப்பு எப்போது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி மற்ற வானியலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க Astronomer's Telegram எனப்படும் ஆன்லைன் தளத்தில் அவர்கள் தகவல் அனுப்புகின்றனர். இது மற்ற தொலைநோக்கிகளை உடனடியாக அந்த நிகழ்வை உற்றுநோக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவம்பரில், ஹோ மற்றும் பெர்லி மற்றொரு புதிய LFBot வெடிப்பைக் கண்டறிந்தனர். இது AT2024wpp என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதற்குப் புனைப்பெயர் வைக்கப்படவில்லை. "நாங்கள் இதற்கு 'குளவி' (Wasp) என்ற பெயரை யோசித்தோம்," என்கிறார் ஹோ.

இந்த வெடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் இது "தி கௌ" வெடிப்புக்குப் பிறகு கண்டறியப்பட்ட மிகவும் பிரகாசமான LFBot.

மேலும், இது தனது பிரகாச நிலையின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், வானியலாளர்கள் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உள்படப் பல தொலைநோக்கிகளை அதை நோக்கித் திருப்பி, அதிகமாகக் கவனிக்க முடிந்தது. "தி கௌ வெடிப்புக்குப் பிறகு இதுவே சிறந்தது" என பெர்லி கூறுகிறார்.

'இவை அனைத்தும் ஆரம்பக் கால கண்டுபிடிப்புகளே'

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,PERLEY ET AL

படக்குறிப்பு,பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த "தி கௌ" வெடிப்பு 2018இல் கண்டறியப்பட்டது

ஆரம்பக்கால கண்டுபிடிப்புகள், 'குளவி' வெடிப்பு என்பது தோல்வியடைந்த சூப்பர்நோவாவால் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கின்றன.

அந்தக் கோட்பாட்டின்படி, ஒரு நட்சத்திரம் வெடிக்க முயலும்போது தானாகவே சரிந்துவிடும். அதன் வெளிப்புற ஓட்டுக்குள் ஒரு கருந்துளை அல்லது அடர்த்தியுள்ள நியூட்ரான் நட்சத்திரம் உருவாகி, அந்த ஓட்டைக் கிழித்து வெளியில் கதிர்வீச்சுகளைச் சுழற்றும். இதுதான் மைய இஞ்சின் எனப்படும் நிலையை உருவாக்கும்.

இது பூமியில் காணக்கூடிய சுருக்கமான 'கௌ' வெடிப்பை விளக்குகிறது. ஆனால் அந்த வெடிப்பில் இருந்து பொருட்கள் வெளியே செல்லும் எந்தத் தடயமும் 'குளவி'யில் காணப்படவில்லை என்று பெர்லி கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அப்படிப்பட்ட தடயங்கள் இருக்குமென விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பார்கள்.

இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே. "நாங்கள் இன்னும் அந்தத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் பெர்லி.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெங் காவ் மற்றும் அவரது குழுவினர் முதன்முதலில் கண்டறியப்பட்ட LFBot வெடிப்பை மீண்டும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தோல்வியடைந்த சூப்பர்நோவா என்ற கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த நிகழ்வின் எக்ஸ்-கதிர் தரவுகளை ஆய்வு செய்ததில், வெடிப்பைச் சுற்றி வட்டத்தட்டு வடிவில் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர், அந்த வெடிப்பின் கணினி மாதிரியை உருவாக்கிப் பார்த்தனர். அதில், அது இடைநிலை நிறை கருந்துளையால் விழுங்கப்படும் நட்சத்திரத்தின் எச்சங்கள் போல் இருப்பதாகத் தெரிந்தது.

அந்த வகையான கருந்துளைகள், நமது சூரியனின் நிறையைவிட நூறு முதல் ஒரு லட்சம் மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்றொரு பக்கம், சில பெரிய கருந்துளைகள் சூரியனைவிட மில்லியன் கணக்கிலும, பில்லியன் கணக்கிலும் அதிக நிறை கொண்டதாக இருக்க முடியும்.

நட்சத்திரம், கருந்துளையால் உண்ணப்படும்போது, அதன் பெரிய துண்டுகள் கருந்துளையைச் சுற்றி விழுந்து, கருந்துளையின் பிரகாசத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இதனால் பூமியில் வானியலாளர்கள் கண்ட 'கௌ எரிப்புகள்' நிகழ்கின்றன.

"எங்கள் ஆய்வு AT2018cow மற்றும் அதேபோன்ற LFBots வெடிப்புகளின் இடைநிலை நிறை கருந்துளைகளின் தன்மையை ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்கிறார் ஜெங் காவ்.

LFBots பற்றி நிலவும் மற்றொரு கருத்து

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூப்பர்நோவா வெடிப்பு

மற்றொரு கருத்து என்னவெனில், LFBots என்பவை உண்மையில் வுல்ஃப்-ரேயெட் (Wolf-Rayet) எனப்படும் ராட்சத நட்சத்திரங்களின் ஒரு வகை. அவை நமது சூரியனோடு ஒப்பிடும்போது 10 முதல் 100 மடங்கு குறைவான நிறையுள்ள சிறிய கருந்துளைகள் மூலம் உடைக்கப்படுகின்றன.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த வானியற்பியல் வல்லுநரான பிரையன் மெட்ஸ்கர் இந்த யோசனையை ஆதரிப்பவர்களில் ஒருவர். இவை உருவாகும் விதம், ஈர்ப்பு அலைகளை உண்டாக்கி கண்டறியப்பட்ட ஜோடி கருந்துளைகள் உருவாகும் முறைக்கு ஓரளவு ஒத்ததாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இதில் பல நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றுதான் கருந்துளையாக மாறுகிறது.

இடைநிலை நிறை கருந்துளைகள் பற்றிய கோட்பாடு தற்போதைய நிலையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், விரும்பத்தக்க கருத்தாகவும் இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், LFBots நமக்கு மர்மமான நடுத்தர அளவிலான கருந்துளைகளை ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். பிரபஞ்சத்தில் இடைநிலை நிறை கருந்துளைகள் இருப்பதாக வானியலாளர்கள் பெரும்பாலும் நம்புகின்றனர். ஆனால் அவற்றுக்கான உறுதியான ஆதாரம் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம், ஏனெனில் இவை அண்டத்தில் உள்ள சிறிய கருந்துளைகளுக்கும், நமது விண்மீனின் மையத்தில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கும் இடையில் காணாமல் போன இணைப்பாகச் செயல்படுகின்றன. LFBots மூலம் இடைநிலை நிறை கருந்துளைகள் எங்கே இருக்கின்றன மற்றும் அவை எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை அறிய முடியும்.

"இடைநிலை நிறை கருந்துளையின் மாதிரி மிகவும் சுவாரஸ்யமானது" என்கிறார் பெர்லி. "இடைநிலை நிறை கருந்துளைகள் உண்மையில் உள்ளதா என்பது ஒருவித விவாதமாகவே உள்ளது. இதற்கு ஆதாரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை."

LFBots என்றால் உண்மையில் என்ன என்பதை உறுதியாக அறிய, அவற்றின் மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவை. "துரதிர்ஷ்டவசமாக, அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன," என்று பெர்லி கூறுகிறார். "அவற்றில் குறைந்தது 100 மாதிரிகள் குறித்த தரவுகள் கிடைத்தால், அது எங்களுக்கான அடுத்த முக்கியப் படியாக இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஆண்டு இஸ்ரேலிய சுற்றுப்பாதை தொலைநோக்கி அல்ட்ராசாட் (அல்ட்ரா வயலட் டிரான்சியன்ட் வானியல் செயற்கைக்கோள்) ஏவப்பட உள்ளதால், தோராயமாக நூறு மாதிரிகளின் தரவுகள் கிடைக்கக்கூடும்.

தொலைநோக்கியின் பார்வை பரப்பளவு 204 சதுர டிகிரியாக இருக்கும். இது ஒரே நேரத்தில் 1,000 முழு நிலவுகளைப் பார்ப்பதற்குச் சமம். எனவே, இது விண்வெளியில் நடைபெறும் பிற நிகழ்வுகளுடன் சேர்த்து, மேலும் பல LFBots வெடிப்புகளைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற தொலைநோக்கிகளால், LFBot வெடிப்பு பிரகாசமாகும் தருணத்தில் அதன் திசையில் கவனம் செலுத்த முடிந்தால், அந்த நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேகரிக்க உதவக்கூடும்.

"ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) இதற்காக மிகச் சிறந்ததொரு கருவியாக இருக்கும்," என்கிறார் மெட்ஸ்கர். ஆனால், இதுபோன்ற அவதானிப்புகளைச் செய்ய நேரம் கிடைப்பது சுலபமல்ல.

"நான் இருமுறை முயன்றேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆண்டில் மீண்டும் முயலப் போகிறேன்" என்று ஹோ கூறுகிறார்.

கூடுதல் தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விசித்திரமான வெடிப்புகள் பற்றிய மர்மம் தொடரும். LFBots யாரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அசாதாரணமானது என்பது தெளிவாகிறது.

"இதுவொரு சுவாரஸ்யமான, ஒருமுறை நிகழும் சம்பவம் என நினைத்திருந்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு வகையான நிகழ்வாக மாறியது. மேலும் இவை நாளுக்கு நாள் இன்னும் சுவாரஸ்யமானதாகவே மாறிகொண்டிருக்கின்றன," என்கிறார் பெர்லி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdr531z8md3o

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?

3 months 2 weeks ago

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் 4' திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்.

இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழையப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி, இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா, சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் விண்வெளிக்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் நிலையம்' நிறுவத் தேவையான மாட்யூல்கள் பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

ஆக்ஸியம் 4

பூமியின் கீழ்வட்டப் பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கி விண்வெளி ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சர்வதேச விண்வெளி நிலையம்.

இந்த விண்வெளி நிலையம் 2031இல் செயலிழந்து, பூமியில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் பூமியில் விழும் முன்பே எரிந்துவிடும்.

அதற்கு மாற்றாக ஒரு புதிய விண்வெளி நிலையத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவ நாசா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியே 'ஆக்ஸியம் நிலையம்'.

அதை நிறுவத் தேவையான 4 மாட்யூல்கள் (Modules) பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் ஐஎஸ்எஸ் செயலிழக்கும்போது இந்த மாட்யூல்கள் பிரிந்து, ஒரு புதிய விண்வெளி நிலையமாகச் செயல்படும். ஆனால், 2031 வரை காத்திருக்காமல், 2028ஆம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் விரும்புகிறது.

அடுத்த ஆண்டில்(2026), முதல் மாட்யூல் விண்வெளிக்கு அனுப்பப்படும் என நாசா கூறுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 'ஆக்ஸியம் நிலையம்' உலகின் முதல் வணிக நோக்கிலான விண்வெளி நிலையமாக இருக்கும்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸியம் 4 குழுவினர்

இந்தப் புதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாகவும், வணிக விண்வெளி நிலையமாகவும் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்னோட்டமாக 2022இல் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம்.

அதன் நான்காவது கட்ட மிஷன் தான் இந்த ஆக்ஸியம் 4. இதில் பயணிக்கப் போகும் நால்வர் யார்?

  • அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், இந்த 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கமாண்டருமான பெக்கி விட்சன்

  • இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, இவர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் விமானி

  • போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விச்நியெவ்ஸ்கி, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

  • ஹங்கேரியை சேர்ந்த டிபோர் கபு, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார்.

அக்டோபர் 10, 1985, உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 'ஃபைட்டர் விங்' பிரிவில் (Fighter Wing- போர் விமானப் பிரிவு) இணைந்தார்.

சுபான்ஷு, 2000 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். இதில் இந்திய விமானப் படையின் சுகோய் எஸ்யு-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஏஎன்-32 போன்ற போர் விமானங்களை ஓட்டிய அனுபவமும் அடங்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு, இஸ்ரோவில் இருந்து வந்த ஒரு முக்கியமான அழைப்பு சுபான்ஷுவின் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார். பின்னர் 2024இல், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.

அதற்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நால்வரில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் பேக்-அப் குழுவில் இருக்கிறார். அதாவது, ஆக்ஸியம் 4 திட்டத்தின் பிரதான 4 உறுப்பினர்களைப் போலவே இந்த பேக்-அப் குழுவின் உறுப்பினர்களுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

ஒருவேளை, இறுதிக் கட்டத்தில் பிரதான உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரால் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவரது இடத்தை இந்த பேக்-அப் குழு உறுப்பினர் ஒருவர் நிரப்புவார்.

விண்வெளியில் என்ன பணிகளை மேற்கொள்வார்கள்?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர், 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

வரும் ஜூன் 8ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.41 மணிக்கு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் உந்தப்படும் டிராகன் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ளனர்.

ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், 14 நாட்களுக்கு நீளும்.

'ஆக்ஸியம் 4' திட்டத்தின் நோக்கம் "அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி, சௌதி அரேபியா உள்பட 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது" என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

அவற்றில் முக்கியமானவை,

  • குறுகிய கால விண்வெளிப் பயணங்களின்போது இன்சுலினை சார்ந்திருக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்பது குறித்து ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் நிலவும் குறைவான ஈர்ப்பு விசையே மைக்ரோகிராவிட்டி எனப்படுகிறது. அத்தகைய சூழல் மனித மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்தல்.

  • மனிதர்கள் விண்வெளிக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விண்வெளி வீரர்களிடம் இருந்து உடலியல் மற்றும் உளவியல் தரவுகளைச் சேகரித்தல்.

  • குறுகிய விண்வெளிப் பயணங்கள் மூட்டுகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் புற்றுநோய் வளர்ச்சியை ஆராய்தல், குறிப்பாக டிரிபிள்-நெகட்டிவ் மார்பக புற்றுநோயை ஆராய்தல்.

  • விண்வெளிப் பயணத்தின்போது ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வது.

'ஆக்ஸியம் 4' திட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள்

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் அங்கு செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் திட்டத்தில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ தலைமையிலான ஆராய்ச்சிப் பணிகளும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும். அவை பின்வருமாறு:

  • கணினித் திரைகள் மீது மைக்ரோகிராவிட்டி சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தல்.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் மூன்று நுண்பாசி திரிபுகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றை ஆய்வு செய்தல். பிறகு அதை பூமியில் கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுவது.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்வது.

  • ஆறு வகையான பயிர் விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

  • பயிர் விதைகளின் முளைத்தல் செயல்முறை மற்றும் வளர்ச்சியில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பதோடு, இது அடுத்த தலைமுறை இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் என ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராகேஷ் ஷர்மா

கடந்த 25 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 270க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சென்றிருந்தாலும், அதில் ஒருவர்கூட இந்திய குடிமகன் கிடையாது.

ஒரு இந்தியர் மீண்டும் விண்வெளிக்குச் செல்வது குறித்த செய்திக்காகவே தான் 41 வருடங்களாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் முன்னாள் இந்திய விமானப் படை விமானியும், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியருமான ராகேஷ் ஷர்மா.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விண்வெளித் துறைக்கு இது மிக முக்கியமான தருணம்" என்றார்.

மேலும், "நான் விண்வெளிக்குச் சென்றபோது எல்லாமே புதிய விஷயமாக இருந்தது. உலகின் கவனம் எங்கள் மீது இருந்தது, குறிப்பாக மொத்த இந்தியாவின் கவனமும்.

இப்போது தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், விண்வெளிப் பயணத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சவால்கள் இல்லாமல் இல்லை" என்று கூறினார்.

கடந்த 1984இல், ராகேஷ் ஷர்மா மற்றும் இரு சோவியத் விண்வெளி வீரர்கள் கொண்ட மூவர் குழு கிட்டத்தட்ட 8 நாட்கள் சோவியத் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தியது.

குறிப்பாக உயிரி மருத்துவம் மற்றும் ரிமோட் சென்சிங் சார்ந்த ஆய்வுகளை ராகேஷ் ஷர்மா மேற்கொண்டார்.

அந்தப் பயணத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 14வது நாடாக இந்தியா மாறியது. இப்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5ylklrgklo

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

3 months 2 weeks ago

space.jpg?resize=750%2C375&ssl=1

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்  இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின்  ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. 

பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது   ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

2.jpg?resize=600%2C355&ssl=1

அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது  விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும்  என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.

33.jpg?resize=600%2C335&ssl=1

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433527

Checked
Mon, 09/15/2025 - 22:38
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed