Aggregator
யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!
யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!
13 Sep, 2025 | 03:10 PM
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின்றனர்.
இதனால் யாழ் . போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்திய பற்றாக்குறையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
இந்தியாவிலுள்ள அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களைத் தாக்க சதி : இலங்கையிலுள்ள பாகிஸ்தான் அதிகாரிக்கு அழைப்பாணை!
இந்தியாவிலுள்ள அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களைத் தாக்க சதி : இலங்கையிலுள்ள பாகிஸ்தான் அதிகாரிக்கு அழைப்பாணை!
Published By: Digital Desk 1
13 Sep, 2025 | 10:35 AM
இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் விசா ஆலோசகராகப் பணிபுரிகிறார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் இந்தியாவிற்குள் சதி வேலைகளைச் செய்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த முகமது சாகிர் ஹுசைன் (Mohammed Sakir Hussain) என்ற நபரை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் உயர் தரமான கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை Q பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு ( CID ) இந்த வழக்கை முதலில் பதிவு செய்தது. பின்னர், இது தேசிய புலனாய்வு முகவரமைப்பின் ஹைதராபாத் கிளைக்கு மாற்றப்பட்டது.
அமீர் சுபைர் சித்திக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ், குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போரைத் தொடுப்பது, போலியான அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது சாகிர் ஹுசைன் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில், சித்திக் மீது தேசிய புலனாய்வு முகவரமைப்பு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் : The New Indian Express
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு
13 Sep, 2025 | 01:55 PM
(எம்.மனோசித்ரா)
கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள பாடசாலைகள்
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள்
முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையின் கல்வி செயற்பாடுகள் முதற்கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மே மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மே மாதம் 4ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே 27 முதல் 31 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜூன் முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விடு;முறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்துக்கமைய வருடத்துக்கு 210 நாட்கள் கல்வி செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே 2026ஆம் ஆண்டு 197 நாட்கள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பரீட்சைகள்
மேலும் 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஆகஸ்ட்டிலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை டிசம்பரிலும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரியில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு
பட மூலாதாரம், NASA/JPL
படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.
கட்டுரை தகவல்
ரெபேக்கா மோரல்
அறிவியல் ஆசிரியர்
13 செப்டெம்பர் 2025, 01:53 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.
இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.
இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள்.
"இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
"நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார்.
"இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே.
நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது.
2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள்.
"இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது.
"நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார்.
பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன.
"இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது"
விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை.
"உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.
பட மூலாதாரம், NASA/JPL
படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது.
பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும்.
நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர்.
"இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார்.
"உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு