
பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC
படக்குறிப்பு, யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக் தனது இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டை கையில் வைத்திருக்கிறார்.
கட்டுரை தகவல்
செர்ஹி மெல்னிக் தனது சட்டைப் பையில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு உலோகத் துண்டை வெளியே எடுக்கிறார். அது துருப்பிடித்திருக்கிறது.
அந்த உலோகத் துண்டை கையில் பிடித்தவாறே, "இது என் சிறுநீரகத்தைக் கீறி, என் நுரையீரலையும் இதயத்தையும் துளைத்தது," என்கிறார் அந்த யுக்ரேனிய வீரர்.
ரஷ்ய டிரோனின் துண்டுகள் போல தோற்றமளிக்கும் அந்த உலோகத் துண்டில், உலர்ந்த ரத்தத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன.
கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அவர் போராடியபோது இந்த துண்டு அவரது உடலில் நுழைந்தது.
"முதலில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் பின்னர் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்" என்று பகிர்கிறார் செர்ஹி மெல்னிக்.
யுக்ரேன் போரில் டிரோன் பயன்பாடு தீவிரமடைந்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
டிரோன்கள் வெடிக்கும்போது, இதுபோன்ற சிறிய உலோகத் துண்டுகள் மக்களைக் காயப்படுத்தக்கூடும்.
போர்க்களத்தில் ஏற்படும் காயங்களில் 80 சதவீதம் இந்த வகையைச் சேர்ந்தவை என்று யுக்ரேன் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
செர்ஹியின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அவருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும்.
"இந்த துண்டு கத்தியைப் போல கூர்மையாக இருந்தது. இந்தத் துண்டு பெரியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்" என்று கூறுகிறார் செர்ஹி.
ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றியது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு புதிய மருத்துவ தொழில்நுட்பம் உள்ளது. அதுதான் 'உலோக துண்டை எடுக்கும் காந்தக் கருவி'.
அறுவை சிகிச்சை எப்படி செய்யப்பட்டது?

பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC
படக்குறிப்பு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செர்ஹி மக்ஸிமென்கோ
செர்ஹி மெல்னிக்கின் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டின் காட்சிகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செர்ஹி மக்ஸிமென்கோ காட்டினார். அந்த உலோகம், நுனியில் காந்தம் கொண்ட ஒரு மெல்லிய கருவியின் உதவியுடன் மிகக் கவனமாக அகற்றப்பட்டது.
"இந்த சாதனம் இதயத்தில் பெரிய கீறல்கள் இடுவதற்கான தேவையை நீக்குகிறது," என்று மருத்துவர் மக்ஸிமென்கோ விளக்குகிறார்.
"நான் ஒரு சிறிய கீறலைச் செய்து, ஒரு காந்த கருவியை உள்ளே செருகினேன். அது உலோகத் துண்டை வெளியே இழுத்தது."என்கிறார் மக்ஸிமென்கோ.
மருத்துவர் மக்ஸிமென்கோவும் அவரது குழுவினரும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் 70 வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர்.
போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பார்வையை இந்தச் சாதனம் முற்றிலுமாக மாற்றியுள்ளது.
இதற்கு முன்னதாக, உடலில் நுழைந்த அத்தகைய துண்டுகளை அகற்றுவது ஒரு சிக்கலான பணியாக இருந்தது. ஆனால் போர் முனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மிகச் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, அத்தகைய சாதனங்கள் உருவாக்கப்பட்டன.
வழக்கறிஞராக பணிபுரியும் ஓலே பைகோவ், இந்த காந்த சாதனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 2014 முதல் யுக்ரேன் ராணுவத்தில் தன்னார்வலராக சேவை செய்து வருகிறார்.
போர் முனையில் பணியாற்றும் மருத்துவர்களுடன் நேரடியாக பேசினார் பைகோவ். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, காந்தத்தைப் பிரித்தெடுக்கும் இந்த கருவி உருவாக்கப்பட்டது
இருப்பினும், இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற காந்தங்களைப் பயன்படுத்துவது 1850களில் நடந்த கிரிமியன் போரில் கூட பயன்படுத்தப்பட்டது.
ஆனால் ஓலே பைகோவ் மற்றும் அவரது குழு இந்த பழைய கருத்துக்கு ஒரு நவீன வடிவத்தை வழங்கினர்.
வயிற்று அறுவை சிகிச்சைக்காக அதன் நெகிழ்வான மாதிரிகளை அவர் உருவாக்கினார்.
மிக நுண்ணிய மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எக்ஸ்ட்ராக்டர்களான இவை, எலும்புகளில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்றுவதற்காக மிகவும் வலுவான கருவிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
அருமையான யோசனை

பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC
படக்குறிப்பு, இந்த காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, இது ஒரு கனமான சுத்தியலைக் கூட தூக்கும்.
அறுவை சிகிச்சைகள் இப்போது மிகவும் துல்லியமானவையாகவும், குறைந்த கீறல்களுடன் நடைபெறும் வகையிலும் மாறியுள்ளன.
காயத்தின் மேற்பரப்பில் ஒரு காந்தத்தை மெதுவாக இயக்குவதன் மூலம், உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை வெளியே இழுக்க முடியும்.
பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிறிய கீறலைச் செய்வதன் மூலம், உலோகத் துண்டு அகற்றப்படும்.
ஒரு மெல்லிய பேனா அளவிலான கருவியைப் பிடித்துக்கொண்டு, ஓலே அதன் சக்தியை நிரூபிக்கிறார். அதில் உள்ள காந்தத்தைப் பயன்படுத்தி அவர் ஒரு சுத்தியலைக் கூட தூக்கிக் காட்டுகிறார்.
அவரது பணி உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. டேவிட் நோட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.
"பொதுவாக, யோசிப்பதற்கு கூட கடினமான சில விஷயங்கள் போரில் உருவாகின்றன," என்று அவர் கூறுகிறார்.
இப்போது போரின் முகம் மாறிவிட்டது, இதுபோன்ற துண்டுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உடலில் சிக்கிய அத்தகைய உலோகத் துண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால், இந்த சாதனம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார்
நோயாளிகளின் உடலுக்குள் இதுபோன்ற சிறிய துண்டுகளைத் தேடுவது "வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடுவது போன்றது" என்கிறார் அவர்.
அதேபோல், இந்தக் கருவியும் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. பல நேரங்களில், இது காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தும்.
"இதுபோன்ற சிறிய துண்டுகளை கையால் தேடுவது ஆபத்தானது. இதற்காக, பெரிய கீறல்கள் செய்யப்பட வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. எனவே அவற்றை ஒரு காந்தத்தால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தால், அது மிகவும் நல்ல யோசனையாகும்" என்று டேவிட் கூறுகிறார்.
இந்தக் கருவி யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது

பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவில் விழுந்த ஏவுகணை துண்டு (கோப்பு படம்)
போர் முனையில் சோதிக்கப்பட்ட இந்தக் கருவி, இப்போது யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவமனைகளிலும் போர் முனையிலும் பணிபுரியும் ஆண்ட்ரி ஆல்பன் போன்ற மருத்துவர்களுக்கு இதுபோன்ற 3000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது இந்தக் கருவியைச் சார்ந்து உள்ளார்கள்.
இந்த மருத்துவர்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டின் மத்தியிலும், பதுங்கு குழிகளிலும், தற்காலிக வெளிப்புற மருத்துவமனைகளிலும், சில சமயங்களில் மயக்க மருந்து இல்லாமலும் பணி புரிகிறார்கள்.
"வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களின் காயங்களுக்குக் கட்டு போடுவதும், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதும் எனது வேலை" என்கிறார் ஆண்ட்ரி ஆல்பன்.
இருப்பினும், இந்தக் கருவிக்கு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று யுக்ரேன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இருப்பினும், போர், ராணுவச் சட்டம் மற்றும் அவசரநிலை போன்ற சூழ்நிலைகளில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற சான்றளிக்கப்படாத சாதனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது.
"போரின் உச்சத்தில் அதிகாரத்துவ நடைமுறைகளுக்கு நேரமில்லை" என்கிறார் ஓலே.
"யாராவது என்னுடைய வேலையை குற்றம் என்று நினைத்தால், அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தேவைப்பட்டால், நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன். அப்படியானால், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அனைத்து மருத்துவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று ஓலே நகைச்சுவையாகக் கூறுகிறார்.
இந்த நேரத்தில் (சாதனத்தின்) சான்றிதழ் ஒரு முன்னுரிமை அல்ல என்று டேவிட் நாட் நம்புகிறார். காஸா போன்ற பிற போர் பகுதியிலும் இந்த சாதனம் உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
"போரில், இது (சான்றிதழ்) தேவையில்லை. மக்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையானதை நீங்கள் செய்கிறீர்கள்."
லிவிவில் உள்ள செர்ஹியின் மனைவி யூலியா, தனது கணவர் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்.
"இந்தக் கருவியை உருவாக்கியவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிய யூலியா, "அவர்களால்தான் என் கணவர் இன்று உயிருடன் இருக்கிறார்" என்று கண்களில் கண்ணீருடன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/ce3njpl13gjo