
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்
இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அலுவல் உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. "இது மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்" என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், செப். 8 தேதியிட்ட அந்த உத்தரவில், திட்ட அளவை பொறுத்து அல்லாமல், அனைத்து திட்டங்களும் மத்திய அரசு மட்டத்தில் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியான (strategic considerations) காரணங்களுக்காக இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, 2006 அறிவிப்பாணையின் (திருத்தம்) விதிமுறைகளின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
"மத்திய அரசு திட்டங்களில் பிரிவு பி-யில் (section B) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அணுக் கனிம சுரங்க திட்டங்கள் மற்றும் பிரிவு டி-யில் (section D) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய கனிமங்கள் (critical minerals) (சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள) சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது." என அதில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், HANDOUT
படக்குறிப்பு, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், டங்ஸ்டன் முக்கிய கனிமங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி துறையின் கோரிக்கை என்ன?
சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு 04.08.2025 தேதியிட்ட கோரிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம், ரேடார் மற்றும் சோனார் போன்ற கண்காணிப்பு சாதனங்கள், லேசர், மானிட்டர் போன்ற தொடர்பியல் கருவிகள், ஏவுகணைகளின் இலக்கை கட்டுப்படுத்தும் வழிகாட்டு அமைப்புகளின் தயாரிப்புகளில் இத்தகைய முக்கிய கனிமங்கள் பயன்படுவதாக தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் இத்தகைய கனிமங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதன் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. இதனால் நாட்டில் அதன் விநியோகம் அபாயத்தில் இருப்பதால், உள்நாட்டிலிருந்து இக்கனிமங்கள் நிலையாக விநியோகம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது" என அதில் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
எனவே, முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக கருதி அவை சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கோரியிருந்தது.
அதேபோன்று, 29.08.2025 தேதியிட்ட கடிதத்தில் அணுசக்தி துறை, மோனசைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தோரியம், மூன்றாம் நிலை அணுசக்தித் திட்டத்தில் சாத்தியமான அணுசக்தி எரிபொருள் ஆதாரமாக உள்ளது என கூறியுள்ளது. அதேபோன்று, முதல்நிலை அணுசக்தித் திட்டத்தில் யுரேனியம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்றும், இதுதொடர்பான திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது.
முக்கிய கனிமங்கள் என்னென்ன?
2023ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதன்படி, கோபால்ட், தாமிரம், டங்ஸ்டன், காட்மியம், செலினியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதேபோன்று, யுரேனியம், தோரியம் போன்ற 6 வகையான அணுக் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், டைட்டானியம், லித்தியம், டாண்டலம் உள்ளிட்ட ஆறு கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தோண்டி எடுப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட வழிவகுத்து 2023ம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஏன் முக்கியம்?
சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையின் முக்கியமான பகுதியாக, பொதுமக்கள் கருத்துக் கேட்பு உள்ளது.
தங்கள் பகுதிகளில் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை இத்தகைய கூட்டங்களில் எடுத்துரைப்பார்கள். பொதுமக்களின் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையில் தான் அந்த திட்டம் அமையும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு இவையிரண்டும் அனைத்து விதமான சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கும் மிக முக்கியம் என்றும், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அதன் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வதாக இருப்பதாகவும் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

பட மூலாதாரம், m.vetriselvan/Instagram
படக்குறிப்பு, 'இதனால் கதிர்வீச்சு அபாயம் கூட ஏற்படும்' என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்
"சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் 1994ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை கொண்டு வந்தனர். 1992ல் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் உலக நாடுகளின் முக்கிய கருத்துகளின் அடிப்படையிலும் இது கொண்டு வரப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் மிக முக்கிய அம்சமே பொதுமக்கள் கருத்துக் கேட்புதான்." என்கிறார் அவர்.
ஓர் திட்டம் வருகிறதென்றால், அதனால் சூழல் மீது எந்த தாக்கம் ஏற்படும் என்ற ஆய்வு நடத்தப்படும் . அதனடிப்படையில் தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.
"எந்தவொரு திட்டத்துக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு முன்னதாகவே இந்த அறிக்கையை அந்தந்த மொழிகளில் மொழிப்பெயர்த்து மக்களிடத்தில் பரவலாக்கியிருக்க வேண்டும். அதைன்பின் தான், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தும். அதில், பெரும்பான்மை மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். இப்போதைய உத்தரவின்படி, முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது" என தெரிவிக்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசு 2014ம் ஆண்டு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை மாற்றியமைப்பதற்காக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
அக்குழு, தொழில்கள் எளிதாக செயல்படும் வகையில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் உள்ள தடைகளை நீக்குவதற்காக, பல பரிந்துரைகளை அளித்திருந்தது. ஆனால், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை நாடாளுமன்ற நிலைக்குழு 2015ம் ஆண்டு நிராகரித்தது.
இதைச் சுட்டிக்காட்டிய வெற்றிச்செல்வன், "2020ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில்தான் முதன்முதலாக சில திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று கொண்டு வந்தது. அதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அதிலுள்ள விதிமுறைகளை தனித்தனியே செயல்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது" என கூறுகிறார்.
மேலும், இந்த உத்தரவை சட்டத்திருத்தமாக கொண்டு வராமல், அலுவல் உத்தரவாக கொண்டு வருவதும் ஏற்புடையதல்ல என்கிறார் வெற்றிச்செல்வன்.
"இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு அல்லாமல், அணுக்கதிர்வீச்சு அபாயமும் இருப்பதாக" கூறுகிறார் அவர்.
இனி என்ன நடக்கும்?

படக்குறிப்பு, அதிகளவில் கனிமங்களை தோண்டி எடுக்கும் நிலை இதனால் உருவாகலாம் என்கிறார், சு.ப. உதயகுமார்
"கருத்துக் கேட்பு நடத்தப்படாமல் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் நில உரிமையை இழந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்." என்கிறார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்த சு.ப. உதயகுமார்.
தமிழ்நாட்டில் என்ன தாக்கம் ஏற்படும்?
"கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இப்போது, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமே வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதேபோல், பழனி, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் இரும்பு தாது உள்ளது. அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் தோண்டி எடுக்கலாம் என்ற நிலை இதனால் உருவாகலாம். ஏனெனில், இத்தகைய கனிமங்கள் தான் இனி 'புதிய எண்ணெய் வளம்' என்கின்றனர். மக்கள் தான் தேசம், அவர்களின் அடிப்படை தேவைகள் தான் முக்கியமே தவிர, தனியார் நிறுவனங்களுக்காக விதிமுறைகளை மாற்றக் கூடாது" என்றார் சு.ப. உதயகுமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cx23plpp16do