Aggregator
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது
adminOctober 29, 2025
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் , கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் , கடந்த 15 நாட்களுக்கு முன்னர் , இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள் , விசா என்பவை இல்லாத நிலையில் ,இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர்.
அந்நிலையில் குறித்த மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
'தென்கடலில் விழுந்த யாரும் பிழைத்ததில்லை'- கடலில் 26 மணி நேரம் மிதந்து உயிர்பிழைத்த சிவமுருகன்

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.
கட்டுரை தகவல்
சிராஜ்
பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15.
கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து 5 மணிநேரம் கடந்திருந்தது.
"என் கண் முன்னே, ஒரு கடல் மைல் தொலைவில் (1.8 கிமீ) சில படகுகள் என்னைத் தேடிக்கொண்டிருந்தன. தொண்டைக்குள் கடல் நீர் சென்று, புண்ணாகி இருந்தது, உதவிகேட்டு கத்த முடியவில்லை. அமாவாசை இரவில், கடல் நீரிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நான் தவிப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. சில மணிநேரங்களில் அந்த படகுகள் கரைக்கு திரும்பிச் சென்றன. நான் அங்கேயே மிதந்து கொண்டிருந்தேன்" என பிபிசி தமிழிடம் அன்று நடந்ததை விவரித்தார் சிவமுருகன்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.
கடந்த மாதம் 20ஆம் தேதி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார்.
நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
இந்தச் சம்பவத்திற்கு 2 வாரங்கள் முன் தான் முதல்முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கியிருந்தார் சிவமுருகன்.
"வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு செட்டிகுளத்தில் இருந்து கிளம்பி, 4.30 மணிக்கு சின்னமுட்டத்திலிருந்து மீன்பிடிக்க படகில் புறப்படுவோம். சனிக்கிழமையும் (செப்டம்பர் 20) அப்படிச் சென்று, வலை விரித்து, மீன் பிடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பத் தொடங்கினோம்."
"இரவு 8 மணிக்கு, சிறுநீர் கழிக்கலாம் என படகின் ஒரு ஓரத்திற்கு வந்தேன். ஜிபிஎஸ் கருவி மூலம் கடைசியாகப் பார்த்தபோது, நாங்கள் கன்னியாகுமரி கரையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் இருந்தோம். அப்போது திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. படகு குலுங்கியதும், நான் நிலைதடுமாறி கடலில் விழுந்துவிட்டேன். விழுந்ததும், நீச்சல் அடித்து, தண்ணீருக்கு மேலே வந்து கத்தினேன். ஆனால், படகின் எஞ்சின் சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை." என்கிறார் சிவமுருகன்.
தொடர்ந்து பேசிய அவர், "10-15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் நான் திரும்பி வராததால், என் தம்பி வெளியே வந்து என்னைத் தேடியுள்ளான். நடந்ததைப் புரிந்துகொண்டு, சத்தம் போட்டு அனைவரையும் அழைத்து, ஜிபிஎஸ் கருவி மூலம் வந்த பாதையை கணக்கிட்டு, படகை திருப்பிக் கொண்டுவந்து என்னைத் தேடினார்கள். ஆனால், அதற்குள் அலைகள் என்னை 1 கடல் மைல் தூரம் வரை இழுத்துச் சென்றிருந்தன"
"அவ்வளவு பெரிய கடலில், அதுவும் அமாவாசை இரவில், தலையை நீட்டிக்கொண்டு, கைகளை உயர்த்தி கத்திக்கொண்டிருந்த என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. டீசல் பிரச்னை காரணமாக அவர்கள் திரும்பிவிட்டார்கள். மீண்டும் சில படகுகளுடன் வந்து என்னை தேடினார்கள். படகுகளின் விளக்குகளைப் பார்த்து கத்தினேன், கைகளை அசைத்தேன், சில மணிநேரங்களில் அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அதையே செய்துகொண்டிருந்தேன்." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
அதிகமாக கடல் நீர் வாய்க்குள் சென்றதால், தொண்டையில் புண்கள் ஏற்பட்டும், முகத்தில் தொடர்ந்து அலைகள் அடித்ததால் தோல் உரிந்தும், கண்களில் உப்பு நீர் பட்டு அதிக எரிச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டதாகக் கூறுகிறார் சிவமுருகன்.
"அந்த இரவில் சுற்றி எந்த வெளிச்சமும் இல்லாத அந்த நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது கரைக்கு சென்றுவிட வேண்டும், உயிர் இங்கேயே போய்விட்டால், குடும்பம் என்னவாகுமென்று கவலை. நீரில் எளிதாக மிதக்கும் வகையில், எடையைக் குறைக்க அணிந்திருந்த டி-ஷர்டை கழற்றி எறிந்தேன். அப்போது தான் உடலெங்கும் ஏதோ ஒன்று கடிக்கத் தொடங்கியது" என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.
"புழுக்களைப் போன்ற ஜெல்லி மீன்கள் அவை. உடலில் ஒட்டிக்கொள்ளும், கொஞ்சம் விட்டால் தோலில் துளை போட்டு விடும் என ஊரில் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தேன். தொடர்ந்து கை, கால்களை அசைத்து மிதந்து கொண்டே இருந்ததால், உடல் சோர்வடையத் தொடங்கியது. சில சமயங்களில் நீரில் மூழ்கினாலும், தன்னிச்சையாக நீச்சல் அடித்து மேலே வந்துவிடுவேன். மறுநாள் காலை (செப்டம்பர் 21) சூரியனைக் கண்டதும், எப்படியும் நீந்தி கரையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது." என்கிறார்.
'தென்கடல் மிகவும் ஆபத்தானது'

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தென்கடலில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும் என்கிறார் பவுலின்.
கரையைத் தேடி நீந்தத் தொடங்கிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்தத் திசையில் நீந்தினாலும் கடல் அலைகள் மற்றும் காற்று அவரை வேறு திசையில் தள்ளியது. பிடிப்பதற்கு ஒரு கட்டை கூட கண்ணில் தென்படாத நிலையில், அலைகளால் அங்குமிங்கும் வீசப்பட்ட அவர், நீந்தும் முயற்சியைக் கைவிட்டார்.
"எப்படி நீந்தினாலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன் என்று தோன்றியது. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. குளிரில் கால்கள் மரத்துப் போயிருந்தன. சூரிய அஸ்தமனம் முடிந்து, இருள் சூழத் தொடங்கியதுபோது, உடலில் இருந்த தெம்பும், மன தைரியமும் மொத்தமாக போயிருந்தது. தென்கடலில் காணாமல் போன யாரும் பிழைக்க மாட்டார்கள் என ஏன் சொல்கிறார்கள் எனப் புரிந்தது. இதற்கு மேலும் அவதிப்படமுடியாது என தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போது எனக்கு தெரியாத ஒன்று, ஊருக்குள் நான் இறந்துவிட்டேன் என அறிவித்திருந்தார்கள். என் உடலாவது கிடைக்காதா என குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தார்கள் என்பது" என்றார்.
"ஆனால், மூழ்க முயற்சி செய்தாலும், என்னால் மூச்சை அடக்க முடியாமல், மேலே வந்துகொண்டே இருந்தேன். எனவே அதிக கடல் நீரை குடித்தேன். இந்த முறை நிச்சயம் மூழ்கி விடலாம் என நினைக்கும்போது, தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது." என்கிறார் சிவமுருகன்.
சிவமுருகன் பிழைத்து வந்தது ஒரு அதிசயம் தான் எனக் கூறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் மற்றும் எழுத்தாளர் பவுலின். 50 வருடங்கள் மீன்பிடி தொழிலில் அனுபவம் கொண்ட இவர், பிற கடல் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்கடல் மிகவும் ஆபத்தானது எனக் கூறுகிறார்.
"ராமநாதபுரத்தின் சேதுக்கரை, கீழக்கரை தொடங்கி குமரிக்கரை வரை விரிந்திருக்கிறது தமிழகத்தின் தென்கடல். அதில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும். எனவே அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும். அத்தகைய கடற்பகுதியில் தவறி விழுந்த ஒருவர், 24 மணிநேரம் கடந்து உயிர்பிழைப்பது என்பது மிகவும் அரிது. காரணம், கடலின் அதீத குளிர் உடலை உருக்கிவிடும். கால்கள் மரத்துப் போய் மேற்கொண்டு மிதக்க முடியாமல், மூழ்கத் தொடங்கிவிடுவோம். உடல் சோர்வடைந்து கடல் நீரைக் குடிக்கத் தொடங்குவார்கள், அது உடலில் நீர் வற்றலை ஏற்படுத்தும்." என்று கூறுகிறார்.
ஆழ்கடலின் நீரோட்டத்தால் எவ்வளவு நீந்தினாலும் கரையைக் கண்டறிவது கடினம் எனக்கூறும் பவுலின், "ஒரு கட்டை போன்று ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக்கொண்டே மிதப்பது நீண்ட நேரம் மிதக்க உதவும். ஆனால், 24 மணிநேரத்துக்கும் மேல் வெறுமனே கை, கால்களை அசைத்துக்கொண்டே மிதப்பது மிகவும் கஷ்டம். உடல் ஒரு கட்டத்தில் தளர்ந்து, மூழ்கி விடும்" என்கிறார்.
கடல் நீரில் தவறி விழுந்தால் ஏற்படும் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இனி மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாமென குடும்பத்தினர் கூறிவிட்டதாகக் சிவமுருகன் தெரிவிக்கிறார்.
கடல் நீரில் அதிக உப்பு உள்ளது. மனிதர்கள் கடல் நீரைக் குடிக்கும்போது, மனித உடலின் செல்கள் தண்ணீரையும் உப்பையும் உறிஞ்சிக் கொள்கின்றன. மனித சிறுநீரகங்கள் உப்பு நீரை விட குறைவான உப்புத்தன்மை கொண்ட சிறுநீரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எனவே, கடல் நீரைக் குடிப்பதன் மூலம் உறிஞ்சப்படும் அதிகப்படியான உப்பை அகற்ற, நீங்கள் குடித்ததை விட அதிக தண்ணீரை சிறுநீராக கழிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் நீரிழப்பால் உயிரிழக்க நேரிடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் கடல் நீரைப் பருகக் கூடாது.
அதேபோல, குளிர்ந்த நீரில் (15°C க்கும் குறைவான எந்த வெப்பநிலையிலும்) இருக்கும்போது, உங்கள் உடல் ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். இது நடந்தால், சுவாசம் மற்றும் இயக்கத்தின் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். குளிர்ந்த நீரால் ஏற்படும் அதிர்ச்சி உங்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கச் செய்து, மாரடைப்பை ஏற்படுத்தும்.
'எந்த மாதிரியான நீர்நிலையில் தவறி விழுந்தாலும் முதலில் பதற்றப்படாமல் மிதப்பது மிகவும் முக்கியம், அதோடு நிதானமாக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மிதப்பதற்கு உதவ உங்கள் கைகளையும் கால்களையும் மெதுவாக நகர்த்தலாம். நிலைத்தன்மையை மேம்படுத்த உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்கவும், உங்கள் கால்கள் மூழ்கினாலும் பரவாயில்லை. முழு உடலும் மிதக்கவில்லை என்றாலும், நீருக்கு மேலே தலை பின்னோக்கி சாய்ந்து, முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்' என பிரிட்டனின், ராயல் நேஷனல் லைஃப் போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) அறிவுறுத்துகிறது.

படக்குறிப்பு, தனது மகன் சிவராதேஷுடன் சிவமுருகன்.
தான் பார்த்த அந்த ஒளி ஒரு படகின் முகப்பு விளக்கு என்பதைப் புரிந்துகொண்ட சிவமுருகன், அதன் பிறகு நடந்தவற்றை விவரித்தார்.
"முழு பலத்தையும் திரட்டி கைகளை அசைத்தேன். எப்படியோ அவர்களும் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்னை நோக்கி படகைத் திருப்பினார்கள். நானும் அவர்களை நோக்கி நீந்தினேன். கடலில் இருந்து யார் என்னை தூக்கினார்கள், என்ன பேசினார்கள் என ஒரு 30 நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. டீ, பிஸ்கட்டுகளை சாப்பிட்ட பின் தான் கண்களைத் திறக்க முடிந்தது. கூத்தன்குழி கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவரின் படகு அது. அவரும் அவரது மீனவக் குழுவும், கடலில் விரித்திருந்த வலையை எடுக்க வந்திருந்தார்கள்." என்கிறார்.
கடலிலிருந்து மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு, கரைக்கு வந்தபிறகு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
சிவமுருகனுக்கு திருமணமாகி ஐந்து வயதில் சிவராதேஷ் என்ற மகன் இருக்கிறார்.
"கடந்த ஒரு மாதத்தில், ஒருமுறை கூட கடலில் கால் வைக்கவில்லை. இனி கடலுக்கு செல்லக்கூடாது என மகன் தொடங்கி குடும்பத்தினர் அனைவரும் கூறிவிட்டார்கள். இன்னும் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனக்கு இப்படி ஆன பின்பு எனது சகோதரன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டான்."
"அவ்வப்போது கரையில் நின்று கடலைப் பார்ப்பேன். உடலில் ஜெல்லி மீன்கள், தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் என அந்த இரவில் மிதந்தவாறு நான் பார்த்த கடல் தான் இப்போதும் எனக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியை மறக்கும் வரை என்னால் கடல் நீரில் கால்களை நனைக்க முடியாது." என்கிறார் சிவமுருகன்.
(தற்கொலை எண்ணங்கள், மன சோர்வு உள்ளிட்டவை இருந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து ஆலோசனைகளும், உதவியும் பெறலாம்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'தென்கடலில் விழுந்த யாரும் பிழைத்ததில்லை'- கடலில் 26 மணி நேரம் மிதந்து உயிர்பிழைத்த சிவமுருகன்
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

கலாபூஷணம் பரீட் இக்பால்
யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து, சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன.
35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன.
எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.
“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டளைப்படி 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.
முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.
புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்.நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.
புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?
ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.
பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.
பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது……
ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று சாதாரணமாக கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதல் அளித்தாலும் பலவந்த வெளியேற்றத்தை நினைத்ததும் உள்ளங்கள் கொதித்தன.
முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.
தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது யாழ் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈட்டுடன் கூடிய மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.
யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றம் நிகழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!!
கலாபூஷணம் பரீட் இக்பால்-
யாழ்ப்பாணம்.