NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..?
Thursday, October 30, 2025 கட்டுரை

- எம்.எஸ்.எம். ஜான்ஸின் -
1990 ஆம் ஆண்டு ஆக்டொபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000 முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் 1990 ஜூலை 12 அன்று குருக்கள்மடம் ஊடாக சென்ற 72 ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது, 1990 ஆகஸ்ட் 3 அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147 பேரை படுகொலை செய்தது , 1990 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12 ஆம் திகதி காலை வரை ஏறாவூர் கிராமங்களில் 173 முஸ்லிம்களை படுகொலை செய்தது உட்பட ஏராளமான முஸ்லிம்களை கொன்று அவர்களை வெளியேற்ற முயற்சித்தும் அது வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் , முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 15000 குடும்பங்களை சேர்ந்த 81000 பேர் புலிகள் அமைப்பால் 1990 ஆக்டொபர் 15 முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக வெளியேற்றப் பட்டனர். இந்த வெளியெர்ராஹ்த்துக்கு இறுதியாக முகம் கொடுத்தது யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆவர்.
1400 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதியில் அரபிகளும் நாகர் இன மக்களில் ஒரு தொகுதியினரும் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து முஸ்லிம்களைன் பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. இவர்கள் யுத்தம், ஆழிப்பேரலை, மற்றும் சில இனவழிப்பு நடவடிக்கைகள் மூலம் காலத்துக்கு காலம் இடம்பெயர்வுகளை சந்தித்து இறுதியாக யாழ்ப்பாணம் நகர பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இனச்சுத்திகரிப்பு வெளியேற்றம்:
தமிழர்களுடன் பல தசாப்தங்களாக அன்னியோன்யமாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த சுமார் 3500 குடும்பங்களை சேர்ந்த 18000 முஸ்லிம்கள் 1990 ஆக்டொபர் 30 ஆம் திகதி இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப் பட்டு வெளியேற்றப் பட்டனர். சுமார் 600 க்கும் மேற்பட்ட கனரக ஆயுதங்கள் தரித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த சோனகர் நகரை சுற்றிவளைத்தனர். வீட்டுக்கு ஒருவரை ஜின்னா மைதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து அங்கு வைத்து நீங்கள் உடனடியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் தமிழீழத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப் பட்டு. எச்சரிக்கை வேட்டுக்களும் வானத்தை நோக்கி நடத்தப் பட்டது.
இந்த வெளியேற்றத்தின் போது தமிழீழத்தில் உழைத்தாய் அனைத்தும் தமிழீழத்துக்கே சொந்தம் என கூறப்பட்டு முஸ்லிம்களின் வெளியேறு பாதைகளில் எல்லாம் சோதனை சாவடிகள் அமைத்து பணம், நகை, மேலதிக உடைகள் எல்லாம் பறிக்கப் பட்டன. சிலர் 200 ரூபாய் மட்டும் கொண்டுசெல்ல அனுமதிக்கப் பட்டனர்.
வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள்:
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் யாழ் சோனகர் நகர், பொம்மைவெளி, மண்கும்பான், சாவகச்சேரி , பருத்தித்துறை, கிளிநொச்சி, நாச்சிகுடா, பள்ளிக்குடா , நயினாதீவு பண்ற பிரதேசங்களில் வசித்து வந்தனர். முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோது எல்லாப் பொருட்களையும் விட்டு விட்டு செல்லுமாறு கூறப் பட்டனர். கொண்டு சென்ற பொருட்களும் புலிகளின் சோதனைச் சாவடிகளில் பறிக்கப் பட்டது.
வெளியேற்றத்தினால் முஸ்லிம்கள் 2000 வீடுகளையும், 16 பள்ளிவாசல்கள், நான்கு பொதுக்கட்டிடங்கள், 7000 சைக்கிள்கள், 1500 மோட்டார் சைக்கிள்கள், ஏறக்குறைய 1500 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான பணம், வியாபார பொருட்கள், ஆடுமாடுகள் கோழி உட்பட எல்லா பொருட்களும் பலவந்தமாக பறித்து எடுக்கப் பட்டன.
அவ்வாறு இழக்கப் பட்ட மொத்த சொத்துக்கள் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 32 பில்லியன் ரூபாய்களாகும். சராசரியாக ஒரு குடும்பம் 91 இலட்சம் ரூபாய் இழப்புகளை சந்தித்துள்ளது.
2025 இல் தற்போதைய நிலை
1990 ஆம் ஆண்டு வெளியேற்றப் பட்ட யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் சுமார் 3800 குடும்பங்களை சேர்த்த சுமார் 20000 பேர்களாகும். அவர்கள் இனஅழிப்பு நடவடிக்கையில் வெளியேற்றப் பட்ட பின்னர் பலரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இக்கிரிகொல்லாவ, மதவாச்சி, அனுராதபுரம், நொச்சியாகம, குருநாகல், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோல்பு, திகாரி, மாபோல, கண்டி, மாவனல்லை, அக்குறணை, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை , களுத்துறை, பேருவளை என தமக்கு அமைந்த ஊர்களில் அடைக்கலம் புகுந்து அகதி முகாம்களிலும் , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் , பொது கட்டிட்டங்கள் பாடசாலை கட்டிடங்கள் போன்றவற்றிலும் தற்காலிகமாக வாழ்ந்தனர்.
இக்கிரிகொள்ளவையில் ஒரு அகதிமுகாமும், புத்தளத்தில் பத்து முகாம்களிலும் கொழும்பில் நான்கு முகாம்களிலும் நீர்கொழும்பில்
ஒரு முகாமிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் தஞ்சமடைந்த மக்கள் பின்னர் படிப்படியாக இடைத்தங்கல் முகாம்களுக்கு மாற்றப் பட்டனர்.
கடந்த 35 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வாறு வந்த 3800 குடும்பங்களும் தற்போது பல்கிப் பெருகியுள்ளது. அந்த வகையில் புத்தளத்தில் தற்போது சுமார் 5000 குடும்பங்களை சேர்ந்த 22000 பேர் வசிக்கின்றனர். இவ்வாறு நீர்கொழும்பில் 800 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர், பலவத்துறையில் 125 குடும்பங்களை சேர்ந்த 600 பேர் , கொழும்பில் 2000 குடும்பங்களை சேர்ந்த 8000 பேர், பாணந்துறையில் 300 குடும்பங்களை சேர்ந்த 1500 பேர் , நாட்டின் பல பாகங்களிலும் 500 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் வாழ்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகள், பிரித்தானிய, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சுவீஸ், நியூசீலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் ஐநூறு குடும்பங்களை சேர்ந்த 2000 பேரும், தனி நபர்களாக சுமார் 2000 பேரும் வசிக்கின்றனர்.
2009 யுத்த முடிவும் 2010 மீள் குடியேற்றமும்
2009 மே மாதம் 19 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகப் பூமியான யாழ்ப்பாணத்துக்கு சென்று மீளக் குடியேறும் வாய்ப்பு உண்ட என ஆராய்ந்தனர்.
அவ்வாறு சென்றவர்கள் தமது 2200 வீடுகள் 16 பள்ளிவாசல்கள் நான்கு பாடசாலை கட்டிடங்கள், கடைகள் என எல்லாம் உடைத்தழிக்கப் பட்டு காடுகள் வளர்ந்து, பற்றையாகவும், மீளக் குடியேறும் வாய்ப்பு குறைவானதாக இருப்பதையும் அவதானித்தனர்.
அவ்வாறு இருந்தும் சுமார் 2000 குடும்பங்கள் கிராம அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊடாக மாவட்ட செயலக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு மீள்குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை சமர்பித்திருந்தனர். அவர்கள் தமது உடைந்த வீடுகளை தகரத்தால் மறைத்துக் கொண்டும், கூரையை தரப்பால் கொண்டு மறைத்துக் கொண்டும் மேலும் பாடசாலை போன்ற பொது கட்டிடங்களிலும் தற்காலிகமாக தங்கியிருந்து வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற உதவிகளை எதிர்பார்த்திருந்தனர்.
நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமாகி அது வருடங்களாகியது. 2010 ஆம் ஆண்டு வீட்டமைக்க விண்ணப்பித்தவர்களுக்கு 2015 வரை ஒரு வீடு கூட வழங்கப் படவில்லை. இதே காலப் பகுதியில் இந்திய வீட்டமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 50000 வீடுகள் வவுனியா,மன்னர், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கட்டப்பட்டது. அதே ஒன்று இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 பேருக்கு காணிகளை மாவட்ட செயலகம் ஊடாக பெற்று அதில் வீடுகளை கட்டிக்க கொடுத்து இருந்தது. இந்த திட்டங்களில் முஸ்லிம்கள் உள்வாங்கப்ப படவில்லை.
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சோனகர் நகரை சேர்ந்த நபரொருவர் வீடமைப்பு உதவி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்த பின்னர் அடுத்த மூன்று வருடங்களில் 225 வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப் பட்டன.
இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு 2000 குடும்பங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் தொலைந்து விட்டதாக கூறி 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் வீடமைப்பு உதவிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட செயலகத்தால் சேகரிக்கப் பட்டது. அந்த பதிவின் கீழ் சுமார் 3000 குடும்பங்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர். அவர்கள் யாருக்கும் இதுவரை வீடுகள் வழங்கப் பட்டதாக தகவல் இல்லை.
புறக்கணிப்பு
யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள் குடியேற்ற அவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க மாறி மாறி வந்த அரசாங்கமும் மாவட்ட செயலகமும் தவறிவிட்டது என்பது கசப்பான உண்மையாகும்.
கருப்பு ஆக்டொபர் (BLACK OCTOBER )
1990 ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து 81000 முஸ்லிம்கள் பாசிச புலிகளால் அநீதியாக வெளியேற்றப் பட்ட அந்த இனவழிப்பு நடவடிக்கையை கண்டித்தும் அம்மக்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற உதவிகள் மீள் கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட வேண்டுமென்ற கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த கருப்பு ஆக்டொபர் வருடா வருடம் இடம்பெயர்ந்த சமூகத்தால் நினைவு படுத்தப் படுகின்றது.
புதிய தேசிய மக்க சக்தி அரசாங்கம்
இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வீடமைப்பு தேவை, கல்வி அபிவிருத்தி பொது சொத்துக்கள் பாதுகாப்பு , வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கௌரவ ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்க்கும் என நம்பியவர்களாக பின்வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகளை முன்வைக்கின்றோம் .
இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் புத்தளத்தில் அகதியாக வந்தவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான தீர்வை புதிய அரசாங்கம் முன்வைக்கும் என நம்பி பின்வரும் தேவைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள நபர்களுக்கு சோனகர் நகருக்கு அண்மையாக 300 வீடுகளை அமைத்தல் அல்லது 300 குடுப்பினங்களுக்கு தேவையான தொடர் மாட்டி குடியிருப்புகளை அமைத்தல்.
புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேற விரும்பும் சுமார் 100 குடும்பங்களுக்கு காணியும் வீடும் அமைத்துக் கொடுத்தல்.
யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு 15 கம்பியூட்டர்களைக் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்தல்.
யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு லைப்ரரி, மண்டப வசதி உட்பட 10 கம்பியூட்டர்களைக் கொண்ட பயிற்சி நிலையம் போன்றவற்றை கொண்ட கட்டிடம் ஒன்றை அமைத்தல்.
புத்தளத்தில் தில்லையடி பாடசாலைக்கும் பத்து வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை அமைத்தலும் அதில் 15 கம்பியூட்டர்களைக் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்தல்.
புத்தளத்தில் சுமார் 300 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தல்.
https://www.jaffnamuslim.com/2025/10/npp_30.html