ஆஸ்திரேலியாவில் பயிற்சியின் போது உயிரிழந்த 17 வயது கிரிக்கெட் வீரர் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Supplied
படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார்
கட்டுரை தகவல்
- லானா லாம் 
- பிபிசி செய்தியாளர் 
- ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 
மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார்.
செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது.
தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிக்கெட்டர் பென், வியாழக்கிழமையன்று உயிரிழந்தார்.
மகனை இழந்த குடும்பம் "முற்றிலும் உடைந்துபோய்விட்டதாக" பென்னின் தந்தை ஜேஸ் ஆஸ்டின் கூறினார். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் சமூகம் பென் ஆஸ்டினின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக கிரிக்கெட் விக்டோரியா தெரிவித்துள்ளது.
மகனை இழந்து வாடும் தங்களது குடும்பத்தின் இழப்பு குறித்த விவரங்களை தந்தை ஜேஸ் ஆஸ்டின் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்து கொண்டார்.
"டிரேசிக்கும் எனக்கும் அன்பான மகன், கூப்பர் மற்றும் சாக்கிற்கு பிடித்தமான சகோதரர் மற்றும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் ஒளிரும் விளக்காக இருந்தார் பென்," என்று அவர் கூறினார்.
"இந்த சோகமான சம்பவம் பென் ஆஸ்டினை எங்களிடமிருந்து பறித்துவிட்டது, அவர் பல கோடை காலங்களில் செய்து வந்தது போலவே, கிரிக்கெட் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் கிரிக்கெட்டை நேசித்தார், அது அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்."
விபத்து நடந்தபோது வலைகளில் பந்துவீசிக் கொண்டிருந்த பென்னின் சக வீரருக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாக ஆஸ்டின் கூறினார்.
"இந்த விபத்து இரண்டு இளைஞர்களைப் பாதித்துள்ளது, நாங்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம்" என்று அவர் கூறினார்.
விபத்துக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் சமூகத்தினர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் தனது மகனுக்கு உதவிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .
கிரிக்கெட் விக்டோரியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது "மிகவும் சவாலான நேரம்" என்றார்.
"10 ஆண்டுகளுக்கு முன்பு பில் ஹியூஸ் சந்தித்ததைப் போன்ற விபத்து இது. பந்து அவரது கழுத்தில் பட்டது," என் கம்மின்ஸ் கூறியதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .
அவரது மரணத்துக்கு யாரும் காரணம் அல்ல என்று பிரேத பரிசோதனை அதிகாரி கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
'திறமையான வீரர், அணியில் பிரபலமானவர்'
பென்னைத் தாக்கிய பந்து, பொதுவாகப் பயன்படுத்தப்படும் கையடக்க சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி வீசப்பட்டது என்பது தெளிவாகிறது.
"விக்டோரியாவிலும் - தேசிய அளவிலும் - முழு கிரிக்கெட் சமூகத்துக்கும் இந்த இழப்பு துக்கமளிக்கிறது. எங்களால் எப்போதும் இதை மறக்க முடியாது" என கம்மின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
பென் திறமையான வீரர், அணியில் பிரபலமானவர் மற்றும் கேப்டன் என்றும், மெல்போர்னின் தென்கிழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்றும் கம்மின்ஸ் தெரிவித்தார்.
"இளைஞர் ஒருவரின் வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்தது மனவேதனை அளிக்கிறது" என்று கம்மின்ஸ் கூறினார்.
ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக பென் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், பலருக்கு மகிழ்ச்சியைத் தந்த அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தியது.
ஹியூஸுக்கு செய்யப்பட்டதைப் போலவே, "put your bats out for Benny" என்ற முன்னெடுப்பை மேற்கொண்டு பென்னிக்கு அஞ்சலி செலுத்த நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிளப் கேட்டுக் கொண்டது.
வேவர்லி பார்க் ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய பென் பற்றி கூறிய கால்பந்து கிளப், அவர் "கனிவானவர்", "மரியாதைக்குரியவர்" மற்றும் "அருமையான கால்பந்து வீரர்" என்று கூறியது.
"எங்கள் கிளப்பும் சமூகமும் உண்மையிலேயே மிகச் சிறந்த இளைஞர் ஒருவரை இழந்துவிட்டன, சிறப்பான இளைஞராக வளர்ந்து கொண்டிருந்த அவரது இழப்பை எங்கள் கிளப் பல ஆண்டுகளுக்கு மிகவும் ஆழமாக உணரும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு