பட மூலாதாரம், BBC SINHALA
கட்டுரை தகவல்
இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.
குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.
அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

படக்குறிப்பு, வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன்
சரணடைந்த 29 குழந்தைகள் கொல்லப்பட்டனரா?
சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.
இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கு இன்று வரை என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

படக்குறிப்பு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா
இந்த நிலையில், சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுவதுடன், அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை, பொம்மை, பாதணி, ஆடை என்ற வகையிலான சில சாட்சிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழுந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம்,SRI LANKA ARMY
படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே
எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா?
டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை.
அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை.
இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.
டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார்.

சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு
இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது.
குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.
இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது.
யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது.
இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது.
இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது.
அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது.
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgl3ynwg1eo