இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் !
Published By: Digital Desk 3
15 Sep, 2025 | 01:58 PM
இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபடுவது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் செயல்களில் ஈடுபடுவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் சேவைகளுக்கான விளம்பரங்கள் பகிரப்படுகின்றன. இதில் நேரடி வீடியோ சேவைகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள், சேவையின் வகையைப் பொறுத்து மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு, "தாய் முழு உடல் மசாஜ்" சுமார் 10,000 ரூபாய்க்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. அதேநேரம், நேரடி வீடியோ அமர்வுகளுக்கு 10 நிமிடங்களுக்கு 1,000 ரூபாய் முதல் 30 நிமிடங்களுக்கு 10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரடி சந்திப்புகளுக்கு 8,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய விபச்சார விடுதிகள் அல்லது ஸ்பாக்களைப் போலல்லாமல், இந்த இணையத்தள பாலியல் சேவைகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் பெயர் தெரியாத டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி ரகசியமாகச் செயல்படுகின்றன. இதனால், குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது பொலிஸாருக்கு சவாலாக உள்ளது.
இலங்கையில் உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல பெண்கள் பாலியல் தொழிலை நாடியுள்ளனர். அதேநேரம், சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டுப் பெண்களும் இந்த இணையத்தள பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இணையத்தள மோசடிகளுடன் தொடர்புடையவை என்றும், வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு சேவையை வழங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலும், பொது அவமானம் மற்றும் சமூக களங்கத்திற்கு அச்சமடையும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முறைப்பாடுகள் அளிப்பதில்லை என்பதால், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வது கடினமாக உள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைச் சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுடன் பாலியல் உறவு கொள்வது சட்டபூர்வ பாலியல் துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இணையத்தள துன்புறுத்தல் மற்றும் தவறான பயன்பாடு போன்ற சிக்கல்களைத் தீர்க்கவும் முயல்கிறது. இந்தச் சட்டம், தடைசெய்யப்பட்ட இணையச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க இணைய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வழிவகுக்கிறது.
இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் ! | Virakesari.lk