1 month ago
சிற்றின்பம் மற்றும் உணர்திறன் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன. தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின்மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள். அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான். நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார். இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையலாம்” என ஒரு விமோசனம் கூறினார். விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான். அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர். சாபக்காலத்தில் கிடைத்த வரம் அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்ததுடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தபின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவழித்தனர். ரிஷியின் சாபம் அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர். பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர். குந்தியின் வரம் அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான். முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள். காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான். குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது. நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான். அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார். ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகையதுன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார். ” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “ இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார். ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில்அவமானப்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!! https://solvanam.com/2025/01/12/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-2/