‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவும் அது தொடர்பில் அரசுத் தரப்புக்குக் கிடைத்துள்ள புலனாய்வு எச்சரிக்கைகளுமே நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தைச் சதித் திட்டங்கள் மூலம் நாசப்படுத்த முயன்றால், அவர்களைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்.எனவே, “ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தீட்டும் எண்ணம் வந்தாலும், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என பேச வைத்துள்ளது.
ராஜபக்ஷக்களின் குடும்பம் மீது குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தையும் இலக்கு வைத்து அனுரகுமார அரசு முன்னெடுத்து வரும் விசாரணை,கைது, விளக்கமறியல்,வழக்குகள் போன்ற விடயங்களும் அனுரகுமார அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது ஊழல்.
மோசடி எனக் கூறிக்கொண்டு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதுமே அனுரகுமார அரசை வீழ்ச்சிப் பாதைக்கும் ராஜபக்ஷக்களை எழுச்சிப் பாதைக்கும் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் தான், ராஜபக்ஷக்களின் ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’வின் முன்னாள் அமைச்சரும் முக்கிய உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளன.
சமீபத்திய தூதரக விஜயர்களின்போது, நாம் சந்தித்த பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள், ராஜபக்ஷக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து இதேபோன்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நாமல் ராஜபக்ஷ உங்கள் தலைவர், அடுத்த ஜனாதிபதி என்று எம்மிடம் கூறினர்.
அதுமட்டுமன்றி, பொதுமக்கள் கலந்துரையாடல்கள், குறிப்பாக, கிராம மட்டத்தில், ராஜபக்ஷக்களுக்கு குறிப்பாக நாமல் ராஜபக்ஷவுக்குஆதரவு அதிகரித்து வருகின்றது. ஒரு கட்சியாக, நாமல் ராஜபக்ஷவின் பயணம் சிறப்பாக முன்னேறி வருவதாக நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஜனாதிபதியாக அவர் வருவதைப் பற்றி கிராம மக்கள் ஏற்கெனவே பேசத் தொடங்கி விட்டனர்.
நாமல் ராஜபக்ஷவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்த அச்சம் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி ராஜபக்ஷவினரை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்குப் பயமாக இருக்கும்போது, அவர்கள் வழக்குகளைத் தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். நாமல் ராஜபக்ஷ வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இது குறித்து புலனாய்வுப் பிரிவுகள் “ஏற்கெனவே தமது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன” என்று கூறியுள்ளார்.ஆட்சி மாற்றத்துக்காக 2029ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்பது மக்களின் கருத்தாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்து, அனுரகுமார அரசுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன கூறுகையில், “அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அனுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துகள் இல்லை. நாமலைப் பற்றிதான் தேடப்படுகின்றது. நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை.
அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.இயற்கையாகவேதான் அந்த கருத்தாடல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லை . எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் அப்படி நடந்தும் உள்ளது. பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணி திரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷவும் ,ஏமாற்றத்தைப் பொறுத்தது போதும், இனி அதிலிருந்து எழுவோம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே எம்முடைய கட்சி உழைத்தது. நாம் பௌத்தர்கள் மாறாக இனவாதிகள் அல்ல. இளைஞர், யுவதிகளின் புதிய பரம்பரைக்கு ஏற்ற அரசியலை உருவாக்க நாம் தயார்.
பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக அனுர அரசாங்கம் மாறியுள்ளது.எம்மை அரசாங்கம் அதிகம் தாக்குகின்றது. அதற்கு காரணம் எம்மை பார்த்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகின்றது. காரணம் நாம் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
எம்முடைய கட்சி நாட்டை சேதப்படுத்தும் கட்சி அல்ல. மாறாக பயங்கரவாத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடையும் நாடாக ஆக்கிய கட்சியே எம்முடைய கட்சி .அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியலின் புது வரவும் சர்ச்சைக்குரியவருமான அர்ச்சுனா இராம நாதன் எம்.பியும் ‘நாமல் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி. அவர் ஜனாதிபதியாக நான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இதனை நான் அவரிடம் நேரிலும் தெரிவித்துள்ளேன்.
அவரின் தந்தை, சித்தப்பாமார் தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளை அவர் தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடாது என்றும் நேரடியாகக் கூறியுள்ளேன்.அதற்கான உத்தரவாதத்தை அவர் எனக்கு வழங்கியுள்ளார்’’ என சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து ‘அடுத்த ஜனாதிபதி நாமல்’ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார்.
இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்க குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. ஆனால் அதனை ராஜபக்ஷக்கள் மாற்றி ‘ராஜபக்ஷ குடும்ப ஆட்சி’ என்ற வரலாற்றை எழுதினர்.
அவர்களின் குடும்ப ஆட்சி எந்தளவுக்கு அவர்களுக்கு பலத்தைக் கொடுத்ததோ, அதுவே பின்னர் பலவீனமாகவும் மாறி அவர்களின் குடும்ப ஆட்சியை விரட்டியது. அதன்பின்னர் மக்கள் மாற்றமான ஆட்சி ஒன்றை எதிர் பார்த்த நிலையில்தான் அதனைப் பயன்படுத்தி தமது பிரசார ஆயுதத்தின் மூலம் அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது. ஆனால், அவர்கள் ‘வாய்ச் சொல் வீரர்’களாக மட்டுமே இருக்கின்றனர். இதனால் இவர்கள் மீது ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்றவாறாக மக்களுக்கிருந்த மயக்கம் தெளிந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில், இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அணி, சஜித் அணி என பிளவுண்டு மீண்டும் அணி சேர வாய்ப்பில்லாத நிலையில், இருப்பதால் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயாரில்லை.
அதனால் தான் ராஜபக்ஷக்கள் என்னதான் ஊழல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் தான் யுத்தத்தை முடித்து வைத்தவர்கள். நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுவந்தவர்கள்.
அவர்களின் ஆட்சிக்குப் பின்னர் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை, மக்களுக்கு விமோசனமும் கிடைக்கவில்லை என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில்தான் தற்போது மீண்டும் ‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன.
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷக்களின்-அலை-அடிக்கத்-தொடங்கும்-அறிவிப்புக்கள்-விடப்படுகின்றன/91-362923