யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!
யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் தெரிவில் உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி முன்னிலை வகித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கு உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், விஞ்ஞான பீடப் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், விஞ்ஞானபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.பிறின்ஸ் ஜெயதேவன் ஆகிய ஆறுபேர் போட்டியிடுகின்றனர்.
மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பேரில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இந்த நிலையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாவது நிலையையும், மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன் மூன்றாவது நிலையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் சுற்றறிக்கையின் படி, பேரவையால் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று விண்ணப்பதாரர்களின் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினுடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனடிப்படையில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணைவேந்தராக நியமனம் செய்வார்.











