கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க - இலங்கை கண்காட்சி
28 Aug, 2025 | 05:20 PM
இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரியங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH ) நடைபெறவுள்ளது. அமெரிக்கத் தூதரகமும், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, BMICH Cinema Lounge இல் செப்டம்பர் 3 முதல் 5 வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பழமையான கப்பல்
தெற்கு இலங்கையில் உள்ள கொடவாய மீன்பிடிக் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 2,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கப்பல் சிதைவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான மரக்கப்பல் சிதைவு என அறியப்படுகிறது. கி.மு. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கப்பல், இந்து சமுத்திரத்தில் பண்டைய காலத்தில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் கடல்வழிப் பயணங்கள் குறித்த அரிய தகவல்களை வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விடயமான இறையாண்மை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அமைதியினையும், பாதுகாப்பினையும் பராமரிப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் வகிக்கும் முக்கிய பங்கினை இந்தக் கண்காட்சி நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் பங்களிப்பு
இந்த திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியம் (AFCP) நிதியளித்துள்ளது. இந்த நிதியுதவியின் மூலம், களிமண் மட்பாண்டங்கள், அரைக்கும் கற்கள், கண்ணாடி மற்றும் உலோக பாளங்கள், கார்னிலியன் மணிகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் நிபுணர்களால் மீட்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள், பிராந்திய வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் பண்டைய காலத்தில் இலங்கை வகித்த முக்கிய பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
கண்காட்சியின் நோக்கம்
இந்தக் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கம், கொடவாய தளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இக்கண்காட்சி செப்டம்பர் 3 ஆம் திகதி காலை 11:00 மணிக்கு பொதுமக்களுக்காகத் திறக்கப்படும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.
கண்காட்சிக்குப் பின்னர், மீட்கப்பட்ட தொல்பொருட்கள் காலியில் உள்ள கடல்சார் தொல்பொருள் நூதனசாலையில் காட்சிப்படுத்தப்படும். இந்தப் புதிய முயற்சி, பாரம்பரியங்களைப் பாதுகாப்பதிலும், எதிர்கால ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையே நிலவும் நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கை நினைவூட்டுவதாகவும் இக்கண்காட்சி அமைகிறது.
கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க - இலங்கை கண்காட்சி | Virakesari.lk