பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்
27 Aug, 2025 | 04:13 PM
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் (HDP) உறுப்பினர்கள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை பிரதமர் ஹரிணி சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரம், சட்டங்கள், அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது.
இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத் (HDP) திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட HDP பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச் சுட்டிக்காட்டியதோடு, இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung, பாராளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு குழுவின் (HDP) நிறைவேற்றுப் பணிப்பாளர் Derek Luyten,, பிரதமரின் செயலர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலர் சாகரிகா போகாவத்த ஆகியோர் உட்பட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் | Virakesari.lk