தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்
Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM

(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும்.
தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.
எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார்.
அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார்.
இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார்.

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன.
ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார்.
இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.
யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.
இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது.
https://www.virakesari.lk/article/232873