Aggregator
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இரசித்த.... புகைப்படங்கள்.
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
தீபாவளி... சிரிப்புகள்.
லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி
லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி
லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி
18 Oct, 2025 | 11:16 AM
![]()
லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Drone) தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர் முகமது ஷாஹீன் கொல்லப்பட்டார். இருதரப்பு யுத்த நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, இது பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் லெபனான் செயல்பாட்டுத்துறைத் தலைவராக (Chief of Operations in Lebanon) முகமது ஷாஹீன் செயல்பட்டு வந்தார். அவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.
ஈரானின் நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் மக்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காகவே ஷாஹீன் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
முகமது ஷாஹீனின் மரணத்தை ஹமாஸ் இயக்கமும் உறுதி செய்ததுடன், அவரைத் தங்கள் ராணுவத் தளபதி என்று குறிப்பிட்டது. லெபனானின் சிடோன் நகரில் முக்கிய வீதி ஒன்றில் சென்ற கார் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு இராணுவ சோதனைச்சாவடி அருகே ஒரு கார் தீப்பிடித்து எரிந்த காணொளியும் வெளியானது.
கடல் வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கடல் வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது
Oct 18, 2025 - 05:33 PM -
இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், எதிர்கால இலக்குகள் சம்பந்தமாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
துறைமுகங்களை நவீனமயக்காமல், நவீன மீன்பிடி முறை உள்ளிட்ட நடவடிக்கைகள்மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
அரசியல் பலம் மூலம் காரியங்களை சாதித்தது அந்த காலம். எனவே, கடல் அட்டை பண்ணை நடவடிக்கை உட்பட கடற்றொழில் சார்ந்த நடவடிக்கைகளின்போது அனைத்து நடவடிக்கைகளும் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே இடம்பெறும். அரசியல் விளையாட்டு இங்கு எடுபடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அத்துடன், எமது கடற்றொழிலாளர்களை சில போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். அந்த மாபியாக்களின் வலைகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது.
சட்டவிரோத நடவடிக்கையென்பது எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும். எனவே, போதைப்பொருள்களை முடிவுகட்டுவதற்குரிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு கடற்றொழிலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
கடல்மார்க்கமாகவே அதிகளவு போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, கடற்றொழிலாளர்களை அந்த கும்பல் இலகுவில் இலக்கு வைக்கலாம். இது பற்றி மீனவ அமைப்புகள் விளிப்பாக இருக்க வேண்டும். தமது தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தால் சட்டத்தன் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு அத்துமீறல்களே இடம்பெறுகின்றன. இப்பிரச்சினை முழுமையாக தீர்ப்பதற்குரிய இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோல கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பவற்றை வலுப்படுத்துமாறு நான் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்தார்.
வீரப்பன் யானைத் தந்தங்களை விட்டு சந்தனமரங்களை கடத்த தொடங்கியது ஏன்?

கட்டுரை தகவல்
பெ.சிவசுப்பிரமணியன்
பிபிசி தமிழுக்காக
18 அக்டோபர் 2025, 08:14 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகக் காட்டிலிருந்து தப்பி, இலங்கைக்குச் செல்ல முயன்றவரை, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை 2004 அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.
1978-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டில் வீரப்பன் இறக்கும் வரையிலும் அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 186.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு ஐஃஎப்எஸ் அதிகாரி, 2 மாநிலங்களைச் சேர்ந்த 10 வனத்துறை அலுவலர்கள், 31 காவல் துறையினர் உட்பட 123 பேரை வீரப்பன் கொன்றதாக அரசு தரும் புள்ளிவிவரம் கூறுகிறது. மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட 12 கடத்தல் சம்பவங்களில் 29 பேர் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், NAKKHEERAN
திரைப்படங்கள், புனைவுகள், தொலைக்காட்சி தொடர்கள், வெப்சீரிஸ் என பல வடிவங்களில் வீரப்பனின் வாழ்க்கை நிகழ்வுகள், விதவிதமாக வர்ணிக்கப்படுகின்றன. வீரப்பன் வாழ்ந்த காலத்தில், அவரை சந்தித்தவர்கள் வெகுசிலரே.
அந்த வகையில், 1993 முதல் 2000-ஆம் ஆண்டு வரையிலான ஏழாண்டுகளில், பல முறை நான் வீரப்பனைச் சந்தித்து, நேர்காணல் செய்திருக்கிறேன்; காட்டில் அவருடன் 40 நாட்கள் தங்கியிருக்கிறேன். அவருடன் மணிக்கணக்கில் பேசிய அனுபத்தில் இருந்து வீரப்பனின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவு நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
வீரப்பனின் பூர்வீகமும் சந்தனக் கடத்தலில் இறங்கிய பின்னணியும்

படக்குறிப்பு, செங்கப்பாடி எனும் கோபிநத்தம் தான் வீரப்பனின் சொந்த ஊர்.
தமிழக எல்லையோரம் கர்நாடக மாநிலத்திலுள்ள செங்கப்பாடி எனும் கோபிநத்தம் தான் வீரப்பனின் சொந்த ஊர். அந்த கிராமத்தில் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வீரப்பன் பிறந்தார். காவிரி ஆற்றங்கரையில் 4 பக்கமும் மலைக்காடுகளால் சூழப்பட்ட கிராமம். மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேட்டை, மீன்பிடித்தலே அங்குள்ள மக்களின் தொழில். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத அந்த கிராமத்தில் பிறந்த வீரப்பன் தலைக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கும் நிலைக்குச் சென்றதன் பின்னணி, எளிதில் விவரிக்க இயலாத அளவுக்கு மிக விரிவானது.
"எனக்கும், வீரப்பனுக்கும் ஒரே வயது. நாங்கள் பள்ளிக்கூடமே போனதில்லை. கோவணம் கட்டிக்கொண்டு, கூலிக்கு மாடு மேய்ப்போம். வீரப்பனின் அப்பா கூசன் (எ) முனுசாமி சிகாரி வேட்டைக்காரர். மாடு மேய்க்கும் போது, வீரப்பன் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு வருவான். துப்பாக்கியை விட உயரம் குறைவாயிருப்பான். 13 வயதிலேயே மான், கேளையாடு, கடத்தி (கடமான்), முசுக்கொந்தி (Nilgiri langur) எல்லாம் வேட்டையாடுவான். 17 வயதிலேயே யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி எடுத்தான்.'' என்கிறார் நல்லுார் மாதையன்.
வீரப்பனின் நெருங்கிய நண்பரான நல்லூர் மாதையன், வீரப்பன் பின்னால் பலரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வேட்டைக்குச் சென்றதாகச் சொல்கிறார்.
யானைகளை வேட்டையாடிய வீரப்பனை மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு மாற்றியதில், அவருடைய அண்ணன் மாதையனுக்கு பெரும் பங்கு இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். காட்டுயானைகளை சட்டவிரோதமாக வேட்டையாடும் தொழில் போட்டியில் கோட்டையூரைச் சேர்ந்த தங்கவேலு கோஷ்டிக்கும், மாதையன் கோஷ்டிக்கும் ஏற்பட்ட மோதலில், 1978 பிப்ரவரி 12-ஆம் தேதி, கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழக கிராமமான சிகரளஹள்ளியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதே வீரப்பன் செய்த முதல் கொலையாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

படக்குறிப்பு, வீரப்பனின் அண்ணன் மாதையன் (நடுவில் இருப்பவர்)
பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற கர்நாடகா போலீஸ் ஐ.ஜி. எம்.ஆர்.புஜார், "நான் சாம்ராஜ் நகர் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஒரே இடத்தில் நான்கு யானைகள் கொல்லப்பட்டு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. நானும், துணை வனப்பாதுகாவலர் (DCF) ஸ்ரீநிவாசும் பல நாள்கள் தூங்காமலே யானை வேட்டைக்காரர்களைப் பற்றி விசாரித்தோம். பல்வேறு யானை வேட்டைக் கும்பலைப் பிடித்து விசாரித்தபோதுதான், இதைச் செய்தது மொளுக்கன் என்கிற வீரப்பன் என்று தெரிந்தது.'' என்கிறார்.
அதன்பின் 2 ஆண்டுகள் தேடியும் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை என்று கூறும் புஜார், அதற்குத் துணையாக எல்லா வேலைகளையும் வீரப்பனின் அண்ணன் மாதையன் தான் செய்ததாகக் கூறுகிறார். மாதையன் தன் தம்பி வீரப்பனை காட்டுக்குள் வேட்டையாட வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகச் சொல்கிறார் ஓய்வுபெற்ற கர்நாடக வனத்துறை அதிகாரி வாசுதேவ மூர்த்தி.
''அப்போது உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், கொள்ளேகால் பகுதி காவல்துறை, வனத்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகள் பலரும் வீரப்பனுக்கு ஆதரவாயிருந்தனர். வீரப்பனைத் தீவிரமாக நாங்கள் தேடியபோது, மாதையன் என்னைச் சந்தித்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முயன்றான். நான் மறுத்துவிட்டு, வீரப்பனை சரணடையச் சொன்னேன். அதை ஏற்காமல் எங்களுக்கு ஆதரவாக இருந்த பலரையும் வீரப்பன் சுட்டுக்கொல்ல ஆரம்பித்துவிட்டான்.'' என்கிறார் வாசுதேவமூர்த்தி.
வீரப்பன் சந்தன மரங்களை கடத்த தொடங்கியது ஏன்?

படக்குறிப்பு, வீரப்பன் தங்கை மாரியம்மாள்
சர்வதேச அளவில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய தடை ஏற்பட்ட பின்பு, கேரளாவிலுள்ள சந்தன எண்ணெய் ஆலைகளுக்கு சந்தனக்கட்டைகளின் தேவை இருப்பதை அறிந்து சந்தனக்கடத்தல் வேலையில் இறங்கியதாக என்னிடம் வீரப்பன் தெரிவித்துள்ளார். அதற்குப் பின்பே அவருடைய கொலைப்பட்டியலும் வெகுநீளமானது. தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை மற்றும் வனத்துறையினரிடம் நான் சேகரித்த தகவல்களின்படி, வீரப்பனால் கொல்லப்பட்டவர்களில் பின்வரும் இவர்கள் முக்கியமானவர்கள்.
அண்ணன் மாதையன் மீது பொய் வழக்குப் போட்டவர் என்று கருதி குண்டேரிபள்ளம் வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனச்சரகர் சிதம்பரம் என்பவர் வீரப்பனால் கொல்லப்பட்டார்.
1989 ஏப்ரல் முதல் தேதி, வனத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருந்த கோட்டையூர் ஐயன்னன் குடும்பத்தினர் 5 பேர் வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5 பேர் கொலைக்குப் பின், தமிழ்நாடு – கர்நாடக வனத்துறை சார்பில், சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அதில் முக்கிய பொறுப்பு வகித்த கர்நாடக வனக்காவலர் மோகனையா 1989 ஆகஸ்ட் 4-ஆம் தேதி வீரப்பனால் கொல்லப்பட்டார்.
அதே மாதத்தில் 17 ஆம் தேதியன்று சந்தன மரங்களை வெட்டுவதைத் தடுக்க முயன்ற தமிழ்நாடு வனத்துறை ஊழியர்கள் பழனிசாமி, சுப்பிரமணியம் உள்ளிட்ட மூவர் வீரப்பனால் கொல்லப்பட்டனர்.
வீரப்பனைப் பிடிக்க கர்நாடக காவல்துறை மாதேஸ்வரன்மலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் பத்து பேர் கொண்ட சிறப்புப்படையை அமைத்தது. இந்த சிறப்புப்படையை 1990 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஒகேனக்கல் அருகிலுள்ள மெட்டுக்கல் காட்டில் வீரப்பன் குழு வழிமறித்து தாக்கி, உதவி ஆய்வாளர்கள் தினேஷ், இராமலிங்கம், ஜெகநாதன் உள்ளிட்ட 4 பேரைக் கொன்றது.
இதன் பின்பே வீரப்பனைப் பிடிக்க கர்நாடக அரசு சிறப்பு அதிரடிப்படையை (STF–Special Task Force) அமைத்தது. காவல்துறைத் தலைவர் திம்மப்பா மடியாள் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்டளை அலுவலராக டிசிஎஃப் ஸ்ரீநிவாஸ் பொறுப்பேற்றார். இதே காலகட்டத்தில் தமிழக அரசு வனக்காவல்படை (Jungle patrol) என்ற அமைப்பை ஏற்படுத்தி காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தலைவராக நியமித்தது.
இரு மாநில காவல்துறைகளும் இணைந்து தேடி, சிலுவைக்கல் காட்டுப்பகுதியில் வீரப்பன் குழுவைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தின. வீரப்பன் குழு சிதறியது, 80 டன் சந்தனக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன. வீரப்பன் குழுவில் 24 பேர், ஸ்ரீனிவாஸிடம் சரணடைந்தனர். அவர்களை வைத்து வீரப்பனையும் சரணடைய வைக்க ஸ்ரீனிவாஸ் முயன்றார்.
"வீரப்பனுக்கு உதவிய மக்களின் ஆதரவைப் பெற பல முயற்சிகளைச் செய்தார். ஊரைவிட்டு சென்றவர்களை ஊருக்கு வரச்செய்தார். வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். ஊர் மாரியம்மன் கோயிலைப் புதுப்பித்தார். வீரப்பன் தங்கை மாரியம்மாளுக்கு உதவிகள் செய்து தன் பொறுப்பில் கண்காணித்தார்." என்று பிபிசியிடம் விளக்கினார் ஓய்வு பெற்ற கர்நாடக வனஅலுவலர் அங்குராஜ்.
"வீரப்பன் தங்கை மாரியம்மாள், ஸ்ரீநிவாஸ் சார் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டே, வீரப்பனைச் சந்தித்து வந்தார். இதனை தெரிந்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ. ஷகீல் அகமது, மாரியம்மாளை விசாரணைக்குக் கூப்பிட்டார். இதனால், பயந்து போன மாரியம்மாள் விஷம் குடித்து விட்டார். நான்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்த வீரப்பனின் தம்பி அர்ஜுனன் அதை வீரப்பனிடம் சொல்லவில்லை.'' என்றார் அங்குராஜ்.
'நம்பிச்சென்ற அதிகாரியை கொன்ற வீரப்பன்'

படக்குறிப்பு, டிசிஎஃப் ஸ்ரீநிவாஸ்
வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸ் நடவடிக்கையால் வீரப்பனுக்கு ஆதரவான பலரும் மனம் மாறியதை விளக்கிய ஓய்வு பெற்ற கர்நாடகா காவல் அதிகாரி டைகர் அசோக்குமார், வீரப்பனைப் பற்றி தகவல் வந்த பல நேரங்களில் துப்பாக்கியால் சுடக்கூடாது என்று ஸ்ரீனிவாஸ் தடுத்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
''வீரப்பனைச் சரணடைய வைக்க அவனது தம்பி அர்ஜூனனை ஸ்ரீனிவாஸ் பிணையில் எடுத்து அனுப்பினார். சரணடைய விரும்புவதாக தம்பியிடம் தூதனுப்பிய வீரப்பன், துப்பாக்கியில்லாமல் காட்டுக்குள் வரவேண்டும் என்றான். வீரப்பனை நம்பிய ஸ்ரீநிவாஸ், எங்களிடம் சொல்லாமலே, துப்பாக்கி இல்லாமல் காட்டுக்குள் போனார். நம்பிச்சென்ற அவரை சுட்டுக் கொன்று, தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டான். இதுதான் இரு மாநில காவல்துறை அதிகாரிகளுக்கும் வீரப்பன் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது," என்கிறார்.
1991 நவம்பர் 10 அன்று, ஸ்ரீநிவாஸ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக காவல்துறை வீரப்பனை தீவிரமாகத் தேடியது. காடுகளில் வாழ்ந்த பலரை அவர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
1992 மே 20 அன்று, வனப்பகுதியை ஒட்டியிருந்த இராமாபுரம் காவல் நிலையத்தைத் தாக்கி, ஆயுதங்களைக் கைப்பற்ற வீரப்பன் கும்பல் முயன்றது. அதில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
அதிரடிப்படை தலைவராக இருந்த கர்நாடகா காவல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணாவை யானைத்தந்தம் விற்பனை செய்வதுபோல வீரப்பன் தந்திரமாக காட்டுக்குள் வரவழைத்தான். 1992 ஆகஸ்ட் 14 அன்று ஹரிகிருஷ்ணா, உதவி ஆய்வாளர்கள் ஷகீல் அகமது, பெனகொண்டா உள்ளிட்ட 6 பேரை சுட்டுக்கொன்றார்.
அதன்பின் தமிழக காட்டுப்பகுதிக்கு இடம் பெயர்ந்த வீரப்பனை தமிழ்நாடு வனக்காவல்படையும் தீவிரமாகத் தேடியது. இந்த நிலையில்,1993 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று, சுரைக்காய் மடுவு பகுதியில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி தமிழ்நாடு காவல்துறை, வனத்துறை, பொது மக்கள் என 22 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்பே தமிழ்நாடு அரசும் ஒரு சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது.
1993 மே 24 அன்று, மாதேஸ்வரன் மலையிலுள்ள ரங்கசாமி ஒட்டு என்ற இடத்தில், ரோந்து சென்ற கர்நாடக அதிரடிப்படை கண்காணிப்பாளர் கோபால் ஹோசூர் மீது தாக்குதல் நடத்திய வீரப்பன் கும்பல், உதவி ஆய்வாளர் உத்தப்பா உள்ளிட்ட ஆறு பேரைக் கொன்று, 5 துப்பாக்கிகளை (SLR) எடுத்துச் சென்றது.
இதற்குப் பின், எல்லைக் காவல்படையை உதவிக்கு அழைத்தது கர்நாடகா அரசு. ஏற்கனவே இரு மாநில அரசுகளும் அமைத்திருந்த 1500 வீரர்களுடன் சேர்ந்து வீரப்பனைத் தீவிரமாகத் தேடினர். ஆனாலும், அடர்ந்த அந்த காட்டுப் பகுதியில் வீரப்பன் குழுவினரைப் பிடிப்பது எளிதாக இல்லை.

படக்குறிப்பு, வீரப்பனின் தம்பி அர்ஜூனன்
சந்தனக்கடத்தலில் இருந்து ஆள் கடத்தலுக்கு மாறிய வீரப்பன்
நெருக்கடிகள் அதிகரித்த நிலையில் ஆட்களை கடத்த தொடங்கினார் வீரப்பன்.
1994 டிசம்பர் 3 ஆம் தேதி, கோவை மாவட்டம், சிறுமுகை காட்டுப்பகுதியில், தமிழ்நாடு துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) சிதம்பரநாதன் உள்ளிட்ட மூவரை வீரப்பன் கடத்தினார். மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், 26 நாள்களுக்குப் பிறகு, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.
1995 நவம்பர் முதல் நாளன்று, ஈரோடு மாவட்டம், செலம்பூர் அம்மன் கோயில் காட்டுப்பகுதியில் தமிழ்நாடு வன ஊழியர்கள் மூவர் வீரப்பனால் கடத்தப்பட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு அவர்களை மீட்டது காவல்துறை.
1997 ஜூலை 12 ஆம் தேதியன்று, கர்நாடக வனத்துறை ஊழியர்கள் ஒன்பது பேரை வீரப்பன் கடத்தினார். இருமாநில அரசுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முடிவில், 47 நாள்களுக்கு பின் வீரப்பன் அவர்களை விடுதலை செய்தார்.
அதே ஆண்டில் அக்டோபர் 9 அன்று, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டிலிருந்து பெங்களூர் வேளாண் ஆய்வுமைய ஆய்வாளர் சத்யவிரத மைத்தி, வன உயிரியல் ஆய்வாளர்கள் சேனானி, கிருபாகர் உள்ளிட்ட 7 பேர் வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்டனர். கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டது. 12 நாள்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
1998 டிசம்பர் 20 அன்று, ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்துக்கு வந்த வீரப்பன் கும்பல், அங்கிருந்த 6 காவலர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, 8 துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்றது.

படக்குறிப்பு, வீரப்பன் மற்றும் குழுவினரை நான் (சிவசுப்பிரமணியன்) சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆட்கடத்தலின் உச்சமாக 2000-வது ஆண்டு ஜூலை 30 அன்று, கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர், வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்டனர். அதுவரை தமிழ்நாடு-கர்நாடக என இரு மாநில மக்களுக்கு மட்டுமே அறிமுகமான வீரப்பன், உலகம் முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது அப்போதுதான். வீரப்பன் முன் வைத்த 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இருமாநில அரசுகளும், பேச்சுவார்த்தை மேற்கொண்டன. 108 நாட்களுக்கு பிறகு ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார்.
இறுதியாக 2002 ஆகஸ்டு 25 இரவு, கொள்ளேகால் அருகிலுள்ள கமகரே என்ற இடத்தில், பண்ணை வீட்டில் தங்கியிருந்த கர்நாடகா முன்னாள் அமைச்சர் எச்.நாகப்பாவை வீரப்பன் கடத்தினார். கர்நாடக அரசுடன் 106 நாட்கள் பேச்சுவார்த்தை நீடித்தது. ஆனால் செங்கிடி காட்டுப்பகுதியில் நாகப்பா பிணமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வில், நெஞ்சுப்பகுதியில் துளைத்த துப்பாக்கி குண்டுக்கு நாகப்பா பலியானது தெரியவந்தது. ஏராளமான AK 47 தோட்டாக்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. நாகப்பாவை கொன்றது யார் என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
யானை வேட்டை, சந்தனக் கடத்தல், ஆள் கடத்தல், காவல்துறை மீதான தாக்குதல் என கால் நூற்றாண்டு காலம், காட்டுக்குள்ளேயே வலம் வந்த வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் (அக்டோபர் 18) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனாலும், வீரப்பன் இன்றும் கூட இரு மாநில மக்களிடையே பேசுபொருளாகவே இருக்கிறார்.
(ஆவணங்கள் மற்றும் தமிழ்நாடு, கர்நாடக காவல்துறையினர் பகிர்ந்து கொண்ட தகவல்களுடன் வீரப்பனுடனான என்னுடைய சொந்த அனுபவங்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு