Aggregator
பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!
பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!
பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காரியாலயத்தின் நிலம் உடைக்கப்பட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரது கட்சிக் காரியாலயத்தில் வைத்து அவரைக் கைது செய்து 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவரது கட்சியின் காரியாலயம் சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது காரியாலயத்தில் இருந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவே உட் செல்லவே முடியாதபடி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரியாலயக் கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண பல் அறுவை சிகிச்சையில் 8 பேர் பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரிய வந்த உண்மை
சாதாரண பல் அறுவை சிகிச்சையில் 8 பேர் பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரிய வந்த உண்மை
திருப்பத்தூர்: சாதாரண பல் அறுவை சிகிச்சையில் 8 பேர் பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரிய வந்த உண்மை
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், சாரதா வி
பதவி, பிபிசி தமிழ்
57 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல் மருத்துவ கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற 8 பேர், சுகாதாரமற்ற கருவியைப் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு கூறுகிறது.
சிகிச்சையின்போது தேவைப்படும் சலைன் பாட்டிலை திறக்க சுகாதரமற்ற ஒரு கருவியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்ததால், புர்கோல்டெரியா சூடோமலெய் (Burkholderia pseudomallei) எனும் பாக்டீரியா நரம்பு மண்டலத்தை பாதித்து நியூரோமெலியோய்டோசிஸ் (neuromelioidosis) என்ற தீவிர மூளைத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.
பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்ட, பெரியோஸ்டீல் எலிவேட்டர் (periosteal elevator) என்ற அந்தக் கருவி பல் அறுவை சிகிச்சையின்போது, எலும்புகளின் மீதுள்ள மெல்லிய திசுக்களை தூக்கிப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
முறையாகச் சுத்தம் செய்யாத அந்தக் கருவி சலைன் பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேசாக மூடப்பட்ட சலைன் பாட்டிலை தேவைப்படும் போதெல்லாம் திறக்க அந்தக் கருவி அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாகவே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பத்து பேருக்கு பாக்டீரியா தொற்று பரவியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதில் 8 பேர் நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டனர்.
எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 10 பேர் ஒரே வகையான பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு பல் மருத்துவ கிளினிக்குக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தது தெரிய வந்தது.
அனைவருக்குமே வாயின் ஒரு பகுதியில் மயக்க மருந்து கொடுத்து செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அவசியப்பட்டுள்ளன. அந்த சிகிச்சைகளின்போது அவர்கள் அனைவருக்கும் அடிக்கடி சலைன் ஊற்ற வேண்டிய அவசியம் இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவ சிகிச்சைக்கும் பாக்டீரியா தொற்றின் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடையில் சராசரியாக எட்டு நாட்கள் இருந்துள்ளன.
உயிரிழப்புகள் ஏற்பட்டு மக்கள் போராட்டம் காரணமாக அந்த கிளினிக் சுத்திகரிக்கப்பட்டு, அதன் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு, மூடப்பட்டு விட்டது. இதனால் கிளினிக்கில் சோதனை நடத்தி பல்வேறு மாதிரிகளைச் சேகரிப்பது சிரமமானது.
இருப்பினும் கிளினிக்கில் திறக்கப்பட்டிருந்த சலைன் பாட்டிலில் இருந்து கிடைத்த மாதிரியில் புர்கோல்டெரியா சூடோமலெய் எனும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. திறக்கப்படாத சலைன் பாட்டில்கள் உள்பட மேலும் பல மாதிரிகள் அங்கிருந்து சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டன. அதில் திறக்கப்பட்ட பாட்டில்களில் மட்டும் இந்த பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வுக்கான காரணம் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
திருமணமான ஒரு தம்பதி தீவிர காய்ச்சல் மற்றும் அதைத் தொடர்ந்து மூளைத்தண்டு (மூளையின் அடிப்பகுதியைக் குறிக்கும்) பாதிப்புகளுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நோய் தாக்குவதற்கு முன்பாக இருவருமே திருப்பத்தூரில் உள்ள ஒரு பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெற்றிருந்தது தெரிய வந்தது.
அதே நேரம் அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற மேலும் சிலர் உயிரிழந்தது குறித்த செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. அந்த கிளினிக்கில் பணியாற்றும் ஒரு மருத்துவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறி எட்டு பேரின் பெயர்கள் அடங்கிய போஸ்டர்கள் உள்ளூரில் ஒட்டப்பட்டிருந்தன. திருப்பத்தூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் கே. மாரிமுத்து இந்த விவகாரம் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, 2023 மே 9ஆம் தேதி நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்பு அதிகரிப்பது குறித்து சிஎம்சி மருத்துவமனை மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தியது. இந்த நோய்ப் பரவலுக்கு முன்பாக சிஎம்சி மருத்துவமனையில் 2008 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 18 பேருக்கு மட்டுமே நியூரோமெலியோய்டோசிஸ் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மே 13ஆம் தேதி மாவட்ட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த நோய்ப் பரவல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகள் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு தனது ஆய்வை தொடங்கியது. இதில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.
உலகை சுற்றி வந்த இப்னு பதூதா இந்தியாவில் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கை கண்டு அஞ்சியது ஏன்?29 மே 2025
ஒரு கையளவே உள்ள இந்த சிறு பறவையை ஆந்திர அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு 40 ஆண்டுகளாக தேடுவது ஏன்?29 மே 2025
21 பேருக்கு பாதிப்பு
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 21 பேருக்கு நியூரோமெலியோய்டோசிஸ் பாதிக்கப்பட்டிருந்ததை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். அதில் பத்து பேர் குறிப்பிட்ட பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள். மீதமுள்ள 11 பேருக்கு தங்கள் சுற்றுபுறத்தில் இருந்து இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே உயிரிழப்பு 9 சதவிகிதமாக (11 பேரில் ஒருவர் உயிரிழப்பு) இருக்க, பல் மருத்துவ கிளினிக் சென்றவர்களில் உயிரிழப்பு 80 சதவிகிதமாக இருந்தது.
"சிகிச்சைகளின்போது வாயைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் சலைனில் பாக்டீரியா இருந்ததால் அது, ரத்தத்தில் கலக்காமல் நேரடியாக நரம்பு மண்டலத்தில் நுழைந்துள்ளதே" பத்தில் எட்டு பேர் உயிரிழந்ததற்கான காரணமாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 21 பேரில், 17 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருவரும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் அதில் அடக்கம்.
பல் மருத்துவ கிளினிக் செல்லாதவர்களைவிட, அங்கு சென்றவர்களின் இறப்புகள் நோய்த் தொற்று ஏற்பட்டுக் குறைந்த நாட்களில் நடந்துள்ளன என்று ஆய்வு கூறுகிறது.
பல் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு அறிகுறிகள் தோன்றியது முதல் 16 நாட்களுக்குள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அதேநேரம், நோய் பாதிக்கப்பட்ட, பல் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களில் உயிரிழந்த ஒருவர் அறிகுறிகள் தென்பட்டு 56 நாட்கள் கழித்து மரணமடைந்துள்ளார்.
சுற்றுபுறத்தில் இருந்து பாக்டீரியா தொற்றுக்கு ஆளானவர்களில் தலை மற்றும் கழுத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பி, வாயின் உள் கன்னத்தில் உள்ள படலம், வெள்ளை அணு திசுக்களைக் கொண்ட நிணநீர் கணுக்கள் ஆகியவற்றில் வீக்கம் மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் பல் மருத்துவ கிளினிக் சென்றவர்களுக்கு நோய் வேகமாகப் பரவியதால் முகத்தின் தோல் மற்றும் திசுக்களில் பாதிப்பு, திசுக்களில் சீழ்கட்டி ஆகியவை ஏற்பட்டன.
பாதிக்கப்பட்ட 21 பேரில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 12 பேர் ஆறு மாத காலம் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் எட்டு பேருக்குத் தீவிர உடல் ஊனம் உட்பட தீவிர நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டன.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டிஎஸ் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, "இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை. சுகாதாரத்துறை துரிதமாகப் பணியாற்றி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அத்தகைய நோய்ப் பரவல் வேறு எங்கும் இதுவரை ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.
நியூரோமெலியோய்டோசிஸ் என்பது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
நியூரோமெலியோய்டோசிஸ் என்பது மூளை, முதுகுத் தண்டு உள்ளிட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கும் புர்கோல்டெரியா சூடோமலெய் எனும் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர நோய்த்தொற்று. இந்த பாக்டீரியா பொதுவாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சில நேரங்களில் நரம்பு மண்டலத்தில் நுழைந்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களுக்கு எளிதில் இந்தத் தொற்று ஏற்படலாம் என்றாலும் ஆரோக்கியமாக இருப்பவர்களையும் இந்த பாக்டீரியா பாதிக்கும்.
தலைவலி, காய்ச்சல் ஆகியவை ஆரம்பத்தில் தோன்றக்கூடிய அறிகுறிகள். உடலின் ஒருபுறம் தசை அயற்சி ஏற்படலாம், உடலின் சமநிலையை இழக்கக்கூடும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் அதைத் தொடர்ந்து பேச்சுக் குளறலும் முக நரம்புகள் பாதிப்பும், மூளைத் திசுக்கள் பாதிப்பும் உண்டாகும். சிலருக்கு உயிரிழப்பு ஏற்படலாம், சிலருக்கு நிரந்தர நரம்பு பாதிப்புகள் அது தொடர்பான உடல் ஊனம் அல்லது இயலாமை ஏற்படலாம்.
வாணியம்பாடி கிளினிக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆரம்பத்தில் முகத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிரேனியல் நரம்பு (மூளையை முகம், தலை, உடலுடன் இணைக்கும் நரம்புகள்) பாதிப்பு மற்றும் மூட்டு பலவீனம் கொண்டிருந்தனர்.
முதுகு, கழுத்து வலி உள்ளவர்கள் எப்படி படுத்து தூங்குவது நல்லது?25 மே 2025
ஈயத்தை இனி தங்கமாக மாற்றலாம் - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு25 மே 2025
புர்கோல்டெரியா சூடோமலெய் எப்படிப் பரவும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
புர்கோல்டெரியா சூடோமலெய் பொதுவாக மாசுபட்ட மண் மற்றும் தண்ணீரில் காணப்படும்.
காயங்கள், வெட்டுகளைக் கொண்ட மனித உடல் தோல் பாக்டீரியா கொண்ட மண் அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது இந்த பாக்டீரியா உடலுக்குள் செல்லக் கூடும்.
பாக்டீரியா இருக்கும் தூசு அல்லது நீர்த் துளிகளைச் சுவாசிக்க நேரிட்டாலும் இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்றுவிடும்.
ஏதேனும் சூழலில் பாக்டீரியா கொண்ட நீரை அருந்தும்போதும் இது உடலுக்குள் செல்லும்.
மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பாக்டீரியா தொற்று பரவுவதற்கான வாயுப்பு மிகக் குறைவு.
சில நேரங்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய்ப் பாதிப்பு பரவலாம். இது மிக அரிதாகவே நிகழக்கூடியதுதான் என்றாலும், இந்த பாக்டீரியா பல ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்கு தண்ணீரில் உயிர் வாழும் திறனைக் கொண்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
யாழில் கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி
யாழில் கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி
30 MAY, 2025 | 11:57 AM
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.
கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா.செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை (30) சனிக்கிழமை (31) இடமெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நேரம் வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 2.00 மணிக்கு மற்றுமொரு தனியார் விருந்தினர் விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் - மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு
இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் - மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு
படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன
30 மே 2025, 08:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தன. மோசமான வானிலை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரயில் சேவையும் பல இடங்களில் தடைபட்டுள்ளது.
கொழும்பு நகரில் வீடுகள் சேதம்
இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசி வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது. கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதி முதல் வெள்ளவத்தை பகுதி வரையான கரையோர பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீசிய கடும் காற்றுடனான வானிலை கரணமாக மரங்கள் முறிந்து வீழந்திருந்ததுடன், பல கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மரம் முறிந்து வீழ்ந்தமையினால் எவருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
கொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மதில் சுவரொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாகவே இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன
கண்டியில் தாய் - மகள் காயம்
கண்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தொலைத்தொடர்பு கோபுரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
அவிசாவளை - தெரணியகலை பகுதியில் மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மூவரும் தெரணியகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையிலிருந்த சிறுமியொருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புத்தளம் - ஆனைமடு பகுதியில் போலீஸ் நிலையத்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, போலீஸ் நிலையத்தின் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 வருடம் பழைமையான மரமொன்றே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படக்குறிப்பு,வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை
ரயில் சேவைகளில் பாதிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக, ரயில் மார்க்கங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால், பல ரயில் மார்க்கங்களின் ஊடாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புத்தளம் ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரம் முறிந்து வீழந்தமையினால், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் தடை
படக்குறிப்பு,நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிய வரும் கடும் காற்றுடனான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே இவ்வாறு மின்சாரம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
தடைபட்டுள்ள மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிடுகின்றது.
இன்றைய வானிலை
படக்குறிப்பு,கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் இடைக்கிடை கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமானது, 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை அடுத்து, பொதுமக்களை அவதானித்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு
முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?
முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், நஜானின் மொடாமெதி
பதவி, பிபிசி பாரசீகம்
30 மே 2025, 04:22 GMT
உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்?
இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?
அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் கூறிவிட இயலாது.
உருளைக்கிழங்கு முளைவிடும் போது என்ன நடக்கும்?
முளைவிடுதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. உங்கள் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு ஒரு செடியாக வளர போகிறது என்பதன் அறிகுறி அது.
இந்த நிலையில், உருளைக்கிழங்கு க்ளைகோலாய்ட்ஸ் (glycoalkaloids) என்ற நஞ்சை அதிகமாக உற்பத்தி செய்யும். இந்த இயற்கையாக உருவாகும் நச்சுத்தன்மை, செடிகளை பூஞ்சைகள் மற்றும் பூச்சிகளின் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
இந்த நச்சுகளில் காணப்படும் மற்றொரு கலவை சொலானின். இது உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய கத்தரிக்காய் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றிலும் காணப்படும்.
அறுவடை செய்து, சேமித்து வைக்கும் போது இந்த நச்சுக் கலவைகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்பினருக்குமே அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.
பட மூலாதாரம்,SHUTTER STOCK
படக்குறிப்பு,முளைவிட்ட உருளைக்கிழங்குகளை சமைக்க பயன்படுத்தும் போது பசுமையான பகுதி முழுமையாக நீக்கப்பட வேண்டும்
இப்படியாக முளைவிட்ட காய்கறிகளை உட்கொள்ளலாமா?
"முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் மிகவும் ஆபத்தானது க்ளைகோலாய்டுகள். இது உணவுக்கு கசப்பான சுவையை தருவது மட்டுமின்றி, வாந்தியையும் ஏற்படுத்தும்," என்று டாக்டர் க்ரிஸ் பிஷப் தெரிவிக்கிறார். அவர் லிங்கன் பல்கலைக்கழகத்தில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பப்ப் பிரிவில் பணியாற்றுகிறார். 'பொட்டேட்டோஸ் போஸ்ட்ஹார்வெஸ்ட்' என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
"உருளைக்கிழங்குகள் பச்சை நிறத்தில் தோற்றமளித்தால் அதில் இந்த இயற்கை ரசாயனம் இருப்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். அதனால் தான் பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்குகளை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது," என்று பிஷப் பிபிசிக்கு தெரிவித்தார்.
"இந்த ரசாயனத்தின் செறிவானது, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் இன்னும் கூடுதலாக இருக்கலாம். எனவே அவற்றை முழுமையாக நீக்கிவிட வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முளைவிட்ட பகுதியில் அதன் 'வேர்' வரை சென்று முழுமையாக நீக்கிய பிறகு, மற்ற பகுதியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.
அதே போன்று பிரிட்டனின் உணவு தரங்களுக்கான முகமை, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் எப்பகுதியை உணவில் சேர்ப்பது சரியாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, "குருத்தை நீக்கிவிட்ட பிறகும், உருளைக்கிழங்கு திடமாக இருக்கும் பட்சத்தில், எந்த சேதமும் இல்லாத பட்சத்தில், அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்று அறிவுறுத்துகிறது அந்த முகமை.
"இருப்பினும், உருளைக்கிழங்கில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் பச்சை நிறம் இருப்பது, அதில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்," என்றும் குறிப்பிட்டுள்ளது.
"முளைவிட்ட உருளைக்கிழங்குகள், தொட்டுப் பார்ப்பதற்கு மிகவும் திடமாக, சுருக்கங்கள் ஏதுமின்றி இருக்கும் பட்சத்தில், குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆனால், தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும், சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் அவை இழந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம்," என்ற முகமை குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம்,SHUTTER STOCK
படக்குறிப்பு,உருளைக்கிழங்குகள் முளைவிட்டிருந்தால், அதில் அளவுக்கு அதிகமாக நச்சுகள் உள்ளன என்று அர்த்தம்.
சொலானின் நச்சு
அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கேத்தி மார்டின், "முளைவிட்ட உருளைக்கிழங்குகளை நீங்கள் உட்கொள்ளவே கூடாது," என்று கூறுகிறார்.
உருளைக்கிழங்குகளை வெளிச்சத்தில் வைக்கும் போது, அது முளைவிடுதலை தூண்டுகிறது. க்ளைகோலாய்டு, சொலானின் போன்ற நஞ்சுகளின் உற்பத்தியையும் தூண்டுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடானது. குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இவை ஆபத்தானவை என்று அவர் விளக்குகிறார்.
"பச்சை நிறமில்லாத உருளைக்கிழங்குகளில் சொலானின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இது விஷமாக மாறக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் ஒருவர் உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணக் கூடாது," என்றும் கேத்தி தெரிவிக்கிறார்.
உண்மையில் மிகவும் அரிதாகவே சொலானின் நஞ்சால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டனில் 1970-களின் பிற்பாதியில், 78 பள்ளி மாணவர்கள் பச்சை உருளைக்கிழங்குகளை உட்கொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் அதிகமாக அறியப்பட்ட நிகழ்வாக இன்றும் உள்ளது.
மிகவும் குறைவான அளவில் உட்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்பையும் நீங்கள் குறைவாகவே உணர்வீர்கள்.
சொலானின் நஞ்சால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படும். மிகவும் தீவிரமான தாக்கம் இருக்கும் பட்சத்தில், தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பலவீனமாக உணருதல், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை இழத்தல் போன்றவையும் ஏற்படும். சில நேரங்களில் மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய உருளைக்கிழங்குகளை உட்கொள்ளும் போது சிலருக்கு சில நிமிடங்களில் அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு இரண்டு நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்படலாம்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சொலானின் நச்சால் மக்களுக்கு வயிற்றுப்பொக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன
முளைவிட்ட உருளைகளை என்ன செய்வது?
குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், சமைப்பதற்கு முன்பு அவற்றை நீக்கிவிடவும்
ஒரு அங்குலத்திற்கு மேலாக வளர்ந்திருந்தாலோ, அல்லது உருளைக்கிழங்கு மிகவும் மிருதுவாக இருந்தாலோ அதனை சமைக்க வேண்டாம்
பச்சை நிறத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி நீக்கவும். இது அதிக அளவில் இருக்கும் நச்சுகளையே குறிக்கிறது.
உருளைக்கிழங்கு அழுகியிருந்தால் அதனை குப்பையில் போடுவதே சிறந்தது
உருளைக்கிழங்குகளில் குருத்துகள் முளைத்திருக்கும் பட்சத்தில், அதனை பொறுமையாக கையாளவும். அதனை பிடுங்கி எறிவது, உருளையின் அப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும். நம் உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தான் அதுவும் நிகழும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்திலோ அல்லது பாலூட்டும் தாய்மாராகவோ இருந்தால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
உருளைக்கிழங்குகளை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்?
உருளைக்கிழங்குகள் வீணாவதை தடுக்கவும், 'ஃபிரெஷ்ஷாக' இருப்பதை உறுதி செய்யவும் கீழ் காணும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்
3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம்.
கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை அப்போதே கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் எளிதில் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. ஏன் என்றால் இவ்விரண்டு உணவுப் பொருட்களும் ஈரப்பதம் மற்றும் வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இது முளைவிடுதலை தூண்டும்.
பட மூலாதாரம்,SHUTTER STOCK
படக்குறிப்பு,உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது.
முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா?
முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டு, உருளைக்கிழங்கு போன்று நச்சுத்தன்மை கொண்டவை அல்ல.
"மாறாக முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயத்தை உண்பது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன் என்றால் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை," என்று கூறுகிறார் பேராசிரியர் மார்டின்.
"பூண்டு அல்லது வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்தில் இருந்து இவை முளைக்கின்றன. இருப்பினும் அவை கசப்பாகவும், மிகவும் மிருதுவானதாகவும் கொண்டிருக்கும்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.
பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களையும் 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்காமல், காற்றோட்டமான பைகளில் அவற்றை போட்டு வைத்தால் காற்றோட்டத்துடன் அவை இருக்கும்.
உருளைக்கிழங்குகள் போன்றே, வெங்காயம், பூண்டுகளில் இருந்து நாற்றம் எழுந்தாலோ, அழுகிப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை குப்பையில் கொட்டுவதே எப்போதும் நல்லது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மாணவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க ஆரோக்கிய சூழல் அவசியம்; வைத்தியர் ஜே. மதன்
மாணவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க ஆரோக்கிய சூழல் அவசியம்; வைத்தியர் ஜே. மதன்
30 MAY, 2025 | 11:50 AM
ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது மாணவர்கள் ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை கண்காணிக்க சென்ற வேளை மாணவர்கள் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறியக்கிடைத்தது.
அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவறைகளே இதற்கு முக்கிய காரணம்.
மலசல கூடங்களை சுத்தப்படுத்த ஆளனிப்பற்றாக்குறை மற்றும் அதற்கான போதிய நிதி உதவியின்மை போன்ற குறைகள் உள்ளன.
இதனால் மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன் சிறுநீரை வெளியேற்றாமல் வைத்துக்கொள்ள பழகிக் கொள்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுப்பதோடு பல நடத்தைப் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடும்.
இப்பிரச்சினைகள் மிகவும் அவசரமாக பரிசீலிக்கப்பட வேண்டியதுடன் ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.
இதுகுறித்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்தி அதிபருடன் கலந்துரையாடி துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை என்றார்.