Aggregator
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
அதிசயக்குதிரை
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - கே.கோடீஸ்வரன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - கே.கோடீஸ்வரன்
09 Sep, 2025 | 05:24 PM
(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை விடயத்தில் அதற்கென தனியாக 30 வருடங்களாக பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது பிரதி அமைச்சர் வசந்த பியதிச நியமிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கதக்க விடயமே. ஆனால் இன்று வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.
கல்முனை பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தையும் சேர்த்து ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டதை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும்.
இவ்வளவு காலமும் நடந்த இரண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டத் நிறுத்தி விட்டு இப்போது இரண்டு பிரதேச செயலகங்களை சேர்த்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவது ஆரிய மோசடிக்கு தள்ளப்படக்கூடிய மற்றும் பெரிய பிளவுக்கு தள்ளப்படக்கூடிய காரணமாக இருக்கப் போகின்றது.
மீண்டும் மீண்டும் இவ்வாறான பிளவுகள் ஏற்படுவதற்கு இந்த அரசாங்கம் காரணமாக இருக்கக் கூடாது. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே இடம்பெற்று வந்தது. இப்போது இரண்டையும் சேர்த்து இரண்டு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.
அங்கு தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக அளவில் வாக்குகளை வழங்கி இருந்தனர் ஆனால் இன்று அந்த தமிழர்கள் வெட்கி தலைகுனிந்து இருக்கின்றார்கள். தலைவரை நியமித்தும் அந்தப் பிரதேச செயலக குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருக்கின்றது.
இதை நாங்கள் எதிர்க்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வகையில் நீங்கள் இரண்டு பிரதேச செயல்களையும் இணைத்து வைக்கின்றீர்கள்.
இது வடக்கு செயலகப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதனை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த சபையில் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
செம்மணியோடு முடக்கப்படுமா யுத்தகால மீறல்களுக்கான நீதி?
செம்மணியோடு முடக்கப்படுமா யுத்தகால மீறல்களுக்கான நீதி?
Published By: Vishnu
08 Sep, 2025 | 01:02 AM
(நா.தனுஜா)
இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது.
கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள்
நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் ஆரம்பமாகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதச்சென்ற கிருஷாந்தி குமாரசுவாமியும், அவரைத்தேடிச்சென்ற அவரது தாய் ராசம்மா குமாரசுவாமி, இளைய சகோதரன் குமாரசுவாமி பிரணவன், அயலவர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு இன்றோடு 29 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
கிருஷாந்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக செம்மணி பற்றிய உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தினார். 1995 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச படையினரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் காணாமல்போன பலர் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாகவும், அங்கு சுமார் 300 - 400 பேர் வரை புதைக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் சோமரத்ன வெளிப்படுத்தியதை அடுத்து, 1999 இல் அவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேசக் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அகழ்வுகளில் 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அத்தோடு செம்மணி பற்றிய உண்மைகள் ஓர் தற்காலிக ஓய்வுக்குச் சென்றன.
மீளப் பேசும் செம்மணி நிலம்
இந்நிலையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது சில மனித எச்சங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சட்ட மருத்துவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமையுடன் (4) இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளில் 43 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் (4 செப்டெம்பர் 2025) மொத்தமாக 235 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 224 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணியில் கண்டறியப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள், சிறுவர்கள் பயன்படுத்தும் பாடசாலைப் புத்தகப்பை, விளையாட்டுப்பொம்மை, பால் போத்தல் என்பனவும், கடந்த ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் செம்மணி மனிதப்புதைகுழிக்கான விஜயமும் இதுவரை வட, கிழக்கின் பேரவலக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்காத, புரிந்துகொள்ள முயற்சிக்காத தெற்கின் கவனத்தைக்கூட செம்மணியின் பக்கம் திருப்பியிருக்கிறது. 'செம்மணிக்கு நீதி' என ஒட்டுமொத்த நாடும் ஒருமித்துக் குரல் எழுப்பாவிட்டாலும், அந்நீதியைக்கோரி குறித்தவொரு தரப்பு எழுப்பும் கோஷத்தைத் தடுக்க முற்படாத சூழ்நிலையொன்று தெற்கில் பகுதியளவில் உருவாகியிருக்கிறது.
சோமரத்ன ராஜபக்ஷவின் புதிய வெளிப்படுத்தல்கள்
இது ஒருபுறமிருக்க 1996 ஆம் ஆண்டு 7 ஆம் காலாட்படை தலைமையகத்தில் கொல்லப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தாரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர வேறெந்தக் குற்றத்தையும் புரியாத தனது கணவர், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கிறார் எனக் குறிப்பிட்டு மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி சேனாலி சம்பா விஜேவிக்ரம அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அதுமாத்திரமன்றி 'யாழ். அரியாலையில் சம்பத் எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டில் அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன சகல நபர்களும் 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தின் உயரதிகாரிகளினாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்பதை நானறிவேன். அவ்வதிகாரிகள் யார் என்பதையும், 1996 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன்' என சோமரத்ன ராஜபக்ஷ பிறிதொரு வெளிப்படுத்தலையும் செய்திருந்தார்.
காலம் கனிந்திருக்கிறது
ஆக, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் வெளிச்சத்துக்கு வந்து கிடப்பில் போடப்பட்ட ஒரு மனிதப்பேரவலத்தையும், அதன் காரணகர்த்தாக்களையும் வெளிக்கொணர்வதற்கான காலம் கனிந்திருக்கிறது. செம்மணி மனிதப்புதைகுழி என்பது தனியொரு சம்பவம் அல்ல. மாறாக அது தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன் இராணுவத்தினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களின் ஒரு சாட்சியம் மாத்திரமே என்பதை சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய வெளிப்படுத்தல்கள் உணர்த்துகின்றன.
இப்போது எம்முன் இரண்டு கேள்விகள் தொக்குநிற்கின்றன. முதலாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (8) ஆரம்பமாகவிருக்கும் நிலையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற சகல மீறல்களுக்குமான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சாட்சியமாகத் திகழும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறோம்? இரண்டாவது, ஒட்டுமொத்த மீறல்களுக்குமான நீதியை அரசாங்கம் செம்மணியோடு மாத்திரம் மட்டுப்படுத்திவிடுமா?
இங்கு முதலாவது கேள்விக்கான பதிலை சரிவரக் கண்டறிந்து, அதனை தமிழ் அரசியல் தலைமைகள், சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் ஒன்றிணைந்து உரியவாறு நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே இரண்டாவது கேள்வியில் எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்தைக் களையமுடியும்.
மனிதப்புதைகுழி விவகாரத்தையும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாத பின்னணியில், சர்வதேச விசாரணை பற்றிய சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவரும் தமக்குச் சாதகமாக அமைந்திருப்பதாகவும், அதனை தமிழ்த்தரப்புக்கள் சரிவரப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.
இருப்பினும் இங்கு மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடியவகையில் ரோம சாசனத்தில் கையெழுத்திட்டிருக்காத இலங்கையை வேறு எந்த அடிப்படைகளில் நடைமுறைச்சாத்தியமான சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கித் தள்ளமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடுகள்
'சர்வதேச விசாரணை என்பது கட்டாயமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறவேண்டிய விசாரணையா? அல்லது வேறு வகையான சர்வதேச விசாரணையா? என்ற வினா மக்கள் மத்தியில் நிலவும் அதேவேளை, அரசியல்வாதிகள் மத்தியிலும் இதுபற்றிய புரிதலின்மை காணப்படுகிறது. ரோம சாசனத்தில் உறுப்புரிமை அற்ற நாடுகளிலும், உறுப்புநாடுகள் ரோம சாசனத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரான காலப்பகுதியில் அந்நாடுகளிலும் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நியாயதிக்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே ரோம சாசனத்தில் கையெழுத்திடாத இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் அங்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு மிகக்குறைவு. இருப்பினும் சர்வதேச நீதியை நோக்கி நகர்வதற்கான வேறுபல வழிமுறைகள் சர்வதேச சட்டங்களில் உண்டு. உதாரணமாக யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கான யுன ர்ழஉ வுசiடிரயெட எனப்படும் சர்வதேச தீர்ப்பாயங்கள் நெதர்லாந்தின் ஹேக் நகரில் தனியாக உருவாக்கப்பட்டன. அதேபோன்று கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கலப்புமுறையிலான பல தீர்ப்பாயங்கள் காலத்துக்குக்காலம் நிறுவப்பட்டுள்ளன' என சர்வதேச நீதியை நாடுவதில் உள்ள மாற்றுத்தெரிவுகள் பற்றி விளக்கமளிக்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஷ்.
அதுமாத்திரமன்றி, கனேடிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் சர்வதேச சட்டத்தில் உட்புகுத்தப்பட்ட விடயமான 'பாதுகாக்கவேண்டிய கடப்பாடு' பற்றி சுட்டிக்காட்டிய அவர், இக்கோட்பாட்டின் பிரகாரம் இலங்கையில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்தைத் தடுப்பதற்கு ஐ.நா தவறிவிட்டது என்பதை அப்போதைய செயலாளர் நாயகம் பான் கி-மூன் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும், எனவே மேற்படி கோட்பாட்டின்படி உள்நாட்டில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாதவிடத்து, அடுத்தகட்டமாக அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு ஐ.நா வுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
செம்மணியோடு நீதி முடக்கப்படக்கூடாது
அதேவேளை கடந்தகாலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் பின்தள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியானது 1948 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் இனவழிப்பை வெறுமனே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற 6 மாதகாலத்துக்குள் முடக்கிவிடக்கூடாது எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் தரப்பினருக்குக் கிடைத்த பெருவாய்ப்பு என குறிப்பிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுவந்த தீர்மானங்களின் பலவீனம் மற்றும் குறுகிய தன்மையை வெளிப்படுத்துவதற்கும், அத்தீர்மானங்களைப் பரந்துபட்ட அடிப்படையில் விரிவுபடுத்துவதற்கும் நாம் செம்மணி விவகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கும் நிலையில், இனி இவ்விவகாரம் சர்வதேச மட்டத்தில் நீதிமன்றப்பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரிக்கப்படும் அதேவேளை, அதில் செம்மணி மனிதப்புதைகுழியும் உள்வாங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்' என்றார்.
உள்ளகப்பொறிமுறைகளை உதாசீனப்படுத்தக்கூடாது
இருப்பினும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளடங்கலாக இலங்கையில் இடம்பெற்ற மீறல் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதி, பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்வதுடன் அவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, உள்ளக ரீதியில் இயங்கிவரும் பொறிமுறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், மறுபுறம் மனிதப்புதைகுழி தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து நிலவும் நம்பிக்கையீனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவகையில் அச்செயன்முறை மாற்றியமைக்கப்படவேண்டிய விதம் என்பன பற்றியும் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்.
'முதலாவதாக செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும். அப்புதைகுழி மழைக்காலத்தில் உரியவாறு பேணப்படவேண்டும். அத்தோடு அங்கு கண்டறியப்படும் எலும்புக்கூடுகள் யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிவதற்கு உள்நாட்டிலேயே மரபணு வங்கியொன்று (னுNயு டீயமெ) நிறுவப்படவேண்டும். இவற்றுக்கு அப்பால் இந்த மனிதப்புதைகுழி தொடர்பில் யார் விசாரணைகளை முன்னெடுக்கப்போகிறார்கள் என்பது மிகமுக்கியம். இலங்கையைப் பொறுத்தமட்டில் பொலிஸார் யுத்தத்துடன் தொடர்புடைய மற்றும் அதனுடன் தொடர்பற்ற பல்வேறு மீறல்களில் ஈடுபட்ட வரலாறு இருக்கிறது.
அவ்வாறிருக்கையில் இந்த பொலிஸார் மனிதப்புதைகுழி தொடர்பில் சுயாதீனமானதும், நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பார்களா? அவ்விசாரணைகள்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாகப் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்களா? என்ற கேள்வி நிலவுகிறது. எனவே இவ்விசாரணைகளுக்காக பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பற்ற, உரிய நிபுணத்துவம் உடைய அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன விசாரணைக் கட்டமைப்பொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும். அடுத்ததாக சர்வதேச நியாயாதிக்கம் (ருniஎநசளயட துரசளைனiஉவழைn) உள்ளடங்கலாக சர்வதேச நீதிக்கான நகர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, உள்நாட்டுப்பொறிமுறைகளை உதாசீனப்படுத்தக்கூடாது. ஏனென்றால் நீதியை நிலைநாட்டவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் அவற்றை உதாசீனப்படுத்துமிடத்து, தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஆகையினால் தம்மால் எதனையும் செய்யமுடியவில்லை எனவும் அரசாங்கம் கூறிவிடும்' எனச் சுட்டிக்காட்டினார்.
மனிதப்புதைகுழிகள் சிக்கலானவை
அதற்கமைய இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் இயங்கிவரும் உள்ளகப்பொறிமுறையான காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல்களை மேற்கொள்வதிலும் தமது அலுவலகத்தின் பங்களிப்புக் குறித்துத் தெளிவுபடுத்தினார். 'மனிதப்புதைகுழிகளைக் கையாள்வது மிகச்சிக்கலானதாகும். ஏனெனில் இவ்விவகாரத்தில் மனித எச்சங்களை ஆராயவேண்டும். மனிதப்புதைகுழி மண்ணின் தன்மையை ஆராயவேண்டும். வாக்குமூலங்களை சேகரிக்கவேண்டும். முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஊடாகவே மனிதப்புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு மரணித்தார்கள்? அவர்கள் அங்கு எப்படிப் புதைக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பெறமுடியும்' எனச் சுட்டிக்காட்டிய மிராக், மறுபுறம் மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் பகுப்பாய்வுப் பணிகளில் எதிர்வருங்காலங்களில் உள்வாங்கப்படவேண்டியிருக்கும் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம், எலும்புக்கூடுகள் தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான ஆய்வுகூட வசதிகள் இன்மை பற்றியும் பிரஸ்தாபித்தார்.
சகல மீறல்களுக்குமான நீதி
ஆக, யுத்தகாலத்தில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் என்பன உள்ளடங்கலாக சகல குற்றங்களுக்குமான நீதியையும், பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு தமிழர்கள் கோரிவரும் நிலையில், அது செம்மணிக்கான நீதியாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுவிடக்கூடாது. மாறாக ஏனைய அனைத்து மீறல்களுக்குமான நீதியை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இன்னமும் உரத்து வலியுறுத்துவதற்கான ஆயுதமாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். செம்மணியின் கீழும், இன்னமும் அடையாளம் காணப்படாத மனிதப்புதைகுழிகளின் கீழும் உதவிகோரத் திராணியின்றி உயிரடங்கிப் புதையுண்ட ஆயிரமாயிரம் உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீகக் கடப்பாடு சகலருக்கும் உண்டு.
வடக்கு மாகாணத்தின் சவால்களைத் தீர்ப்பதற்கு வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
வடக்கு மாகாணத்தின் சவால்களைத் தீர்ப்பதற்கு வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
09 Sep, 2025 | 01:01 PM
(எம்.நியூட்டன்)
வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை (09) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றுகையில் , வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும்.
மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள்.
பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள்.
இந்தப் பின்னணிகளையும் கருதிலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது.
கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது.
மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே?
அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் - ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன.
அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.
எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என்றார் .
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.