5 days ago
கொம்பேறிமூக்கன் பாம்பு. யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. செல்லையா, தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த பலா மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டுவதற்காகக் கையில் வீச்சரிவாளுடன் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். செல்லையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருக்கும். "மரமேறிக் கைத்தழும்பு ஏறிய உடம்பு" என்று ஊருக்குள் சொல்வார்கள். பலா மரத்தின் ஒரு கிளை வீட்டின் கூரைக்கு மேலே நீண்டுகொண்டு தொல்லையாக இருந்தது. "டேய் ரகு, அந்தக் கயிற்றை இங்க எறிடா" என்று கீழே நின்ற மகனிடம் கத்தினார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தக் கிளையின் நுனிப் பகுதிக்கு நகர்ந்தார். அப்போதுதான் அந்தச் சலசலப்பு கேட்டது. பலா இலைகளுக்கு நடுவே பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் நீண்ட ஒரு பாம்பு பதுங்கியிருந்தது. செல்லையா உற்றுப் பார்த்தார். அவரது நெஞ்சு 'திக்' என்றது. "அடக் கடவுளே! இது சாரைப் பாம்பின்ரை ஆண் வர்க்கம்! கொம்பேறி மூக்கன்!" கிராமத்துப் பெரியவர்கள் சொல்வது செல்லையாவின் நினைவுக்கு வந்தது. ‘கொம்பேறி மூக்கன் கடிச்சால் கொல்லாம விடாது. அது கடிக்கிற வேகத்தில மரத்து உச்சிக்கு ஏறும். அது ஏற ஏற விஷம் தலைக்கு ஏறும். கடைசியில பிணத்தை எரிச்சாத்தான் கீழ இறங்கும்.’ செல்லையா சுதாரிப்பதற்குள் அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்தது. செல்லையாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலே 'நறுக்'கென்று கொத்தியது. அடுத்த நொடியே அந்தப் பாம்பு செல்லையாவை விட்டு விலகி மரத்தின் உச்சிக்கிளையை நோக்கிச் சரசரவென்று ஏறத் தொடங்கியது. "ஐயோ! அப்பா!" என்று கீழே நின்ற ரகு அலறினான். செல்லையா நிலைகுலைந்தார். விஷம் ஏறுகிறதோ இல்லையோ பயம் அவரை ஆட்கொண்டது. மரக்கிளையைப் பிடித்துக்கொண்டே கீழே பார்த்தார். கண்கள் இருட்டின. பிடி தளர்ந்தது. "தொப்"பென்று கீழே மணலில் வந்து விழுந்தார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் ஓடி வந்தார்கள். செல்லையாவின் கையில் இரண்டு பற்கள் பதிந்த அடையாளம். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஊர்ப் பெரியவர் கனகசபை ஓடி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்தார். மரத்தின் மிக உயரமான, மெல்லிய கிளையின் நுனியில் அந்தப் பாம்பு சுருண்டு உட்கார்ந்து கீழே விழுந்து கிடக்கும் செல்லையாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "மாட்டிட்டியே செல்லையா, அது கொம்பேறி மூக்கன்டா! கடிச்சிட்டு உச்சிக்கு ஏறிட்டு. இனி அது இறங்க மாட்டுது. அது மேல இருக்கிற வரைக்கும் இவன் ஒடம்பில விஷம் ஏறிக்கொண்டே தான் இருக்கும்." என்றார் கனகசபை பீதியுடன். செல்லையாவுக்கு வாய் நுரைக்கத் தொடங்கியது. உடல் வெட்டி இழுத்தது. விஷத்தின் வேலையா அல்லது மரண பயமா என்று தெரியவில்லை. "ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்கோ!" என்று ரகு கத்தினான். "தம்பி, இது சாதாரண பாம்பு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற நேரத்துக்குள்ள கதை முடிஞ்சிடும். அந்தப் பாம்பு கீழ இறங்கினாத்தான் உன்ரை அப்பா பிழைப்பான். ஆனால் உன்ரை அப்பாவை எரிச்சுக் கருமாதி செய்யுற புகை வந்தாத்தான் அது இறங்கும்." என்றார் பெரியவர். ரகுவுக்குக் கோபம் வந்தது. "என்ன லூசுத்தனமா கதைக்கிறீங்கள்? அப்பாவைக் காப்பாத்த வழியைப் பாருங்கோ!" அப்போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் "பெரியவரே அந்தப் பாம்புக்குச் செல்லையா செத்துப்போனது தெரியோணும். அவ்வளவு தானே?" என்றான். "ஓம். அவன் எரிஞ்ச புகை அதுக்குத் தெரியோணும்." என்றார் பெரியவர். "அப்ப ஒரு காரியம் செய்வம். செல்லையாவைத் தூக்கிட்டுப் போய் ஒரு ஓரமா வையுங்கோ. உடனை கொஞ்சம் பச்சை ஓலையளையும், பழைய பாயளையும் போட்டு மரத்துக்குக் கீழ எரிப்பம். அந்தப் புகை மண்டலத்தில பாம்பு ஏமாந்தாலும் ஏமாறும்." என்றான் அவன். வேறு வழியில்லை. செல்லையா மயக்க நிலையில் இருந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ரகுவும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பலா மரத்தின் அடியில் காய்ந்த சருகுகள், பழைய பனையோலைகள் எல்லாவற்றையும் குவித்தார்கள். நடுவே கொஞ்சம் பச்சை இலைகளையும் போட்டார்கள். "நெருப்பை வைடா!" என்றார் பெரியவர். நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பச்சை இலைகள் எரிந்ததில் கரும்புகை குப்பென்று கிளம்பியது. அந்தப் புகை நேராக மரத்தின் உச்சியை நோக்கிச் சென்றது. கீழே அனைவரும் மூச்சடக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் உச்சியில் இருந்த கொம்பேறி மூக்கன் அந்தப் புகையை உணர்ந்தது. கீழே ஏதோ எரிகிறது; புகை வருகிறது என்பதை அது பார்த்தது. "எரிச்சுட்டாங்க போல" என்று நினைத்ததோ என்னவோ அந்தப் பாம்பு மெதுவாக நகரத் தொடங்கியது. "இறங்குது! பாம்பு இறங்குது!" என்று கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுத்தார். பாம்பு ஒவ்வொரு கிளையாக இறங்க இறங்க ஓரமாகப் படுத்திருந்த செல்லையாவின் இழுபறி கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது. பாம்பு பாதி மரத்தைத் தாண்டி கீழே வந்து கொண்டிருந்தது. திடீரென்று காற்று திசைமாறி வீசியது. புகை கலைந்து சென்றது. பாம்பு சட்டென்று நின்றது. கீழே எரிவது மனித உடல் அல்ல, குப்பைகள் என்பதை அது கவனித்துவிட்டதோ? அல்லது கீழே சலசலக்கும் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுவிட்டதோ? அது மீண்டும் மேலே ஏறத் திரும்பியது. "ஐயோ! அது ஏமாறல! திரும்பவும் ஏறுது!" என்று ரகு கதறினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமு தன் கையில் வைத்திருந்த 'கவணை'(கெற்றப்போல்) எடுத்தான். சின்ன வயதில் குருவி, ஓணான் அடித்த கை பழக்கம். தரையில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கவணில் பொருத்தினான். குறி தவறக்கூடாது. தவறினால் பாம்பு உச்சிக்குப் போய்விடும்; செல்லையா கதை முடிந்துவிடும். மூச்சிரைக்கக் குறி பார்த்தான். பாம்பு மேல் கிளைக்குத் தாவத் தயாரானது. ‘விர்ர்ர்’ கவணில் இருந்து புறப்பட்ட கல் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. சரியாகப் பாம்பின் தலைப்பகுதிக்குக் கீழே அதன் கழுத்தில் 'நச்'சென்று தாக்கியது. பாம்பு நிலைதடுமாறியது. பிடி நழுவியது. சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து ஒரு கயிறு அறுந்து விழுவது போல அந்தப் பாம்பு தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அது சுதாரிப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் கம்பு, தடிகளால் அதை அடித்தார்கள். அதே நேரம் அங்கே ஓரமாகப் படுத்திருந்த செல்லையா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் திறந்தார். "அப்பா!" என்று ரகு ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான். பாம்பு செத்துவிட்டது. அதன் உடல் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. பெரியவர் கனகசபை செல்லையாவின் கையைப் பிடித்துப் பார்த்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது. "தப்பிச்சுட்டான். அந்தப் பாவி கீழ இறங்கினதால தான் இவன் பிழைச்சான். ஆனா அதுவா இறங்கேல்லை. நாங்கள் இறக்கினோம்!" என்றார். செல்லையா மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அவர் கண்கள் அந்தப் பலா மரத்தின் உச்சிக்கிளையையே பார்த்துக்கொண்டிருந்தன. மருத்துவ ரீதியாக அது பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்தப் பாம்பு குறைந்த அளவு விஷத்தையே கக்கியிருக்கலாம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு. "கொம்பேறி மூக்கன் ஏறினால் விஷம் ஏறும்; அது இறங்கினால் தான் உயிர் தங்கும்." அன்று முதல் அந்தப் பலா மரத்தில் யாரும் ஏறுவதில்லை. காற்றில் அதன் இலைகள் அசையும்போதெல்லாம் அந்தப் பாம்பின் ஆவி இன்னும் அங்கே உச்சிக்கிளையில் உட்கார்ந்து யாராவது கடி வாங்குவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு பயம் அந்த ஊரில் இன்றும் இருக்கிறது. நண்பனின் முகநூலிருந்து.....
5 days 2 hours ago
இலங்கை அணி விளையாடும் குறூப்பில் அவுஸ்ரேலியா உள்ளடங்கலாக அனைத்து அணிகளும் மோசமான அணியாக இருக்கின்றது, ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்து, தென்னாபிரிக்கா என நல்ல அணிகளுடன் போட்டியினை வைத்து ஒரு நல்ல அணியினை சுப்பர் 8 முன்னமே கழட்டி விடப்போகிறார்கள், இன்றைய போட்டி தென்னாபிரிக்காவுடன் ஆப்கானிஸ்தானுக்கு, இந்திய பிட்ச் மோசமான பிட்ச் இந்த் மோடி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத செத்த பிட்ச், போட்டி வேறு காலையில் நடக்கவுள்ளது 250 ஓட்டங்கள் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கை அணி சுப்பர் 8 க்கு தகுதியான அணியே இல்லை, சிம்பாவேயிடம் தோற்றால் சிம்பாவே சுப்பர் 8 க்கு போய்விடும் என நினைக்கிறேன். கோசான், எனது இடத்தினை தற்காலிகமாக கைப்பற்றியுள்ளார் அவ்வளவே!