முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!
18 Dec, 2025 | 02:18 PM
![]()
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது.
கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன.
தென்னியன்குளம் சந்தி முதல் அம்பலப்பெருமாள்குளம் சந்தி வரையிலான பிரதான வீதி முற்றாகச் சிதைவடைந்துள்ளமையை மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதற்குத் தீர்வாக, அவ்வீதியின் ஒரு பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும், எஞ்சிய பகுதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கிராமத்தினுள் அமைந்துள்ள பாடசாலை வீதி, கோட்டைகட்டியகுளம் பாடசாலைப் பின்வீதி மற்றும் விடத்தை வீதி ஆகியவற்றை உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அமைதிபுரம் முதல் துணுக்காய் பிரதேச செயலகம் வரை ஏழு கிராமங்களை இணைக்கும் அரச பேருந்து சேவைக் கோரிக்கை தொடர்பில், தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்துச் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் சிதைவடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கலிங்குக்குப் பதிலாக நிரந்தர மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதனைத் தற்காலிகமாகத் திருத்தியமைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
அத்துடன், கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் கலிங்கு நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமையால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க, வனவளத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாகச் சீர்செய்ய மாவட்டச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தொலைதூர மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளமைக்குத் தீர்வாக, முதற்கட்டமாக வாரத்தில் ஒரு நாள் பொதுக்கட்டடம் ஒன்றில் மருத்துவ நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மேலும், இரு கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளூராட்சித் திணைக்களம் அல்லது மாற்று வழிகள் ஊடாக அமைத்துத் தருவதாக ஆளுநர் உறுதியளித்தார்.
பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளைச் சாதகமாக அணுகுவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
அம்பலப்பெருமாள்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் களஞ்சிய அறையுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அந்த மைதானத்துக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். குடியிருப்புக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
“அபிவிருத்திகள் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும்போதே அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அதிகாரிகளுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதி இளைஞர்கள் மதுபாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Virakesari.lk
