ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
03 September 2025

எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
https://hirunews.lk/tm/418056/insisting-that-sri-lanka-sign-the-rome-statute





France orders hospitals war-ready by March












