
கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்!
எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.
கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கனடா பதிலடி கொடுத்தால் அது அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார்.
அமெரிக்கா ஏற்கனவே சில கனேடிய பொருட்களுக்கு 25% முழுமையான வரியை விதித்துள்ளது.
இந்த நிலையில் 35% வரி என்பது வொஷிங்டனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு ஒரு அடியாகும்.
இந்த வாரம் ஜப்பான், தென் கொரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட அமெரிக்க வர்த்தக பங்காளிகளுக்கு ட்ரம்ப் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட கடிதங்களில் இந்தக் கடிதமும் ஒன்றாகும்.
கனடாவின் கடிதத்தைப் போலவே, ஒகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் வர்த்தக பங்காளிகள் மீது அந்த வரிகளை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அண்மைய வரி அச்சுறுத்தல் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் வரும் பொருட்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ட்ரம்ப் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு உலகளாவிய 50% வரியையும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து கார்கள் மற்றும் லொரிகளுக்கும் 25% வரியையும் விதித்துள்ளார்.
செப்பு இறக்குமதிகளுக்கு 50% வரியையும் அண்மையில் அவர் அறிவித்தார், இது அடுத்த மாதம் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கனடா அதன் பொருட்களில் நான்கில் மூன்று பங்கினை அமெரிக்காவிற்கு விற்கிறது.
மேலும் இது ஒரு வாகன உற்பத்தி மையமாகவும், உலோகங்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் உள்ளது.
மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகம் வாங்குபவராகவும் கனடா உள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகளின்படி, கடந்த ஆண்டு இது $349.4 பில்லியன் அமெரிக்க பொருட்களை இறக்குமதியும், $412.7 பில்லியன் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக சவால்களைச் சமாளிப்பதற்கான உறுதிமொழியுடன் தனது லிபரல் கட்சியை மீண்டும் தேர்தல் வெற்றிக்கு அழைத்துச் சென்ற கார்னி, ஜூலை 21 ஆம் திகதிக்குள் அதன் முக்கிய வர்த்தக பங்காளியுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1438739