போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷக்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை - நாமல்
07 Sep, 2025 | 11:07 AM
![]()
(இராஜதுரை ஹஷான்)
எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் நடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள் நிலையத்தின் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தொடர்பில் பொலிஸார் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.முறையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். கட்சி மட்டத்தில் அந்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கலில்லாமல் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒழுக்கமாகவே நாங்கள் செயற்படுகிறோம்.கட்சியின் எவரேனும் உறுப்பினர் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள கூடாது. நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும்,நியாயம் கிடைக்கும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதற்கான பொறுப்பினை அவர்கள் ஏற்காமல் அதனையும் பிறிதொரு தரப்பினர் மீது சுமத்துகிறார்கள்.
சுங்கத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸாருக்கு மூன்கூட்டியதாகவே தகவல்கள் கிடைத்திருந்ததா, வெளிநாட்டு புலனாய்வு பிரிவு இந்த கொள்கலன்கள் தொடர்பில் ஏதேனும் அறிவித்திருந்ததா, நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையை போதைப்பொருள் மையமாக மாற்றியமைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை.ஆகவே நாங்கள் திணறபோவதில்லை என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார்.