Aggregator
சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்
சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்
சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்
Published By: Vishnu
20 Dec, 2025 | 03:29 AM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்)
நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள். புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த இந்த உதவி போதாது.
கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள்.
நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை.
இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள் .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள்.
9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச் காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள் இருக்கும்போது 10 பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும்.
அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார்.
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்
பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்
பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்
Published By: Vishnu
19 Dec, 2025 | 10:57 PM
![]()
இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை (19) ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது.
அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.
அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது.
நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம்.
எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம்.
2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.
விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது.
குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.
இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும்.
மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.
தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.