நினைவுகூரலுக்கான சுதந்திரம் மேலும் வலுப்படுத்தப்படும் தீர்வை வழங்குவதற்கான அரசியல் தன்முனைப்பு தம்மிடம் உண்டு என்கிறார் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
28 Sep, 2025 | 10:49 AM
![]()
(நா.தனுஜா)
முன்னைய அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட நிராகரிப்பு, வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள், சத்துருக்கொண்டான் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகளின் மீள்விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குழுவில் அங்கம்வகிக்கும் அறிக்கையாளர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான அரசியல் தன்முனைப்பு தமது அரசாங்கத்திடம் இருப்பதாகவும், ஆகவே இதுபற்றி விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததுடன் அதற்கு உதாரணமாக அண்மையில் குருக்கள்மடத்தில் உள்ள மனிதப்புதைகுழியை தான் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வைப் பொறுத்தமட்டில், அப்பணிகளுக்காகப் போதியளவு நிதியை ஒதுக்கீடு செய்து, அவற்றை உரியவாறு முன்னெடுத்துவருவதாகவும், இருப்பினும் நிபுணத்துவம் உள்ளிட்ட உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் சர்வதேச சமூகத்திடம் அதனைக் கோருவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கடந்தகால அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தன்முனைப்பு அரசாங்கங்களுக்கு இல்லாததன் காரணமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் செயற்திறன்மிக்கவகையில் இயங்குவதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும், ஆனால் தமது அரசாங்கத்திடம் அந்த அரசியல் தன்முனைப்பு இருப்பதன் காரணமாக மேற்படி கட்டமைப்புக்கள் உரியவாறு இயங்குவதற்கு அவசியமான வளங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.