வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் — கருணாகரன் —
வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம்
— கருணாகரன் —
“மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன.
அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லை.
இப்பொழுது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கோருகின்ற தரப்புகள்தான் அப்பொழுது ஆட்சியிலிருந்தன. எனவே அவர்களுக்கே இந்தத் தவறில் கூடுதல் பொறுப்புண்டு. அவர்களே இந்தத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துத் தாமப்படுத்தி, இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் விட்ட தவறை இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது.
முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் சீரழிவு நிலைக்குள்ளாகி விட்டன. அதிலும் வடக்கு மாகாண சபையின் நிலை இன்னும் மோசம். மாகாணசபை சீரழிந்துள்ளது என்றால், அதனுடைய நிர்வாகம் பாழடைந்துள்ளது என்றே அர்த்தமாகும். நிர்வாகம் பாழந்துடைந்துள்ளது என்றால். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுடைய பொறுப்பைச் செய்யவில்லை. அல்லது பொறுப்பைச் செய்யக் கூடிய ஆளுமையுடன் இல்லை என்பதே அர்த்தமாகும். இதற்கு வலுவான ஆதாரமாக, “பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மக்களுக்குச் சரியான முறையில் தங்களுடைய பணிகளைச் செய்யவில்லை.” என்று தொடர்ச்சியாக ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவலை தெரிவித்து வருவதைச் சொல்லலாம். ஆளுநர் சொல்வதில் உண்மையுண்டு. ஒரு தொகுதி உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் உரிய முறையில் தங்களுடைய பணிகளைச் செய்வதில்லை. அதனால் மக்கள் அலைச்சல்களுக்குள்ளாக வேண்டியுள்ளது. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றுப்படாமல் காலதாமதமாகிறது. அதனால் அவர்களுக்குப் பாதிப்பும் சிரமமும் ஏற்படுகின்றன. அபிவிருத்திப் பணிகளிலும் இந்த மாதிரி தாமதங்களும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. மருத்துவத்துறை, கல்வித்துறை போன்றவை சீர்குலைவைச் சந்திக்கின்றன. இப்படியே சொல்லிக் கொண்டு – பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.
தொடக்கத்தில் ஆளுநர் சொல்வதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஏனென்றால், மாகாணசபை நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆளுநர் அவதானித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிலைமை புரிகிறது. குற்றவாளிகளுக்கும் தவறிழைப்போருக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை – வாய்ப்பை அளிக்கிறார் என்றே பலரும் கருதினர். அத்துடன், புதிய NPP அரசாங்கமும் ஆட்சியில் இருப்பதால், நிச்சயமாக பெரிய மாற்றங்கள் – முன்னேற்றம் – ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை வேறு விதமாகியது. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக வரவர நிலைமை மோசமாகத் தொடங்கியது. ஆளுநர் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் சொல்கிறாரே தவிர, அவற்றுக்குத் தீர்வைக் காண்பதாகக் காணோம் என்ற குரல்கள் எழத் தொடங்கின. ஆளுநர் நல்லவர், நேர்மையானவர். பண்பானவர். ஆனால், நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளை எடுப்பதில், தவறிழைப்போருக்கான தண்டனைகளை அளிப்பதில் போதிய உற்சாகத்தைக் காட்டவில்லை. ஏனோ தயக்கம் காட்டுகிறார். இதனால் குறைபாடுகள் அதிகரிக்கின்றன. தவறிழைப்போரும் பொறுப்பற்று நடப்போரும் எந்த வகையான அச்சமும் இல்லாமல் அதேவிதமாக நடக்கின்றனர். ஆளுநர் குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் சொல்கின்றவர் இல்லை. அவர் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர். தவறுகளை இழைப்போரையும் பொறுப்பற்று நடப்போரையும் நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அது ஏன் செய்யப்படாதிருக்கிறது? என்ற விமர்சனங்களும் கேள்வியும் பரவலாகியுள்ளது.
இப்பொழுது வடக்கு மாகாணத்தில் பல புகார்களோடு (முறைப்பாடுகளோடு) ஆளுநர் பணிமனைக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றைப் பார்க்கலாம்.
1. ஆளுநரிடம் தெரிவித்தால் – முறையிட்டால் – தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
2. ஆளுநரைச் சந்திக்கக் கூடிய நிலை உள்ளதால்.
3. ஆளுநரைத் தவிர வேறு யாரிடம் இதை முறையிடலாம் என்ற நிலையில்.
4. ஏனைய இடங்களில் அளவுக்கு அதிகமான முறையீனங்களும் பிரச்சினைகளும் பெருகியுள்ளதால், ஆளுநரிடம் முறையிட வேண்டும், தீர்வைக் கோர வேண்டும் என்பதால்.
5. ஆளுநரே எந்த நிலையிலும் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நடவடிக்கைக்கு ஆணையிட வேண்டும் என்ற காரணத்தினால்.
ஆனாலும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உறங்கு நிலையிலேயே தள்ளி வைக்கப்படுகின்றன. சில விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அதற்குரிய அதிகாரிகளோடு நேரடியாக ஆளுநர் களத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைக்குப் பணிப்பதும் நடக்கிறது. அப்படிப் பணித்தாலும் காரியங்கள் எதுவும் உரிய முறையில் நடப்பதாக இல்லை. ஏதோ சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. அல்லது செயலாக்கம் நடைபெறாமல் அப்படியே கை விடப்படுகிறது.
இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அண்மையில் பல ஊடகங்களில் வந்து பொதுக் கவனத்தைப் பெற்ற ஒரு விவகாரம், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மகப்பேற்று மற்றும் பெண்கள் நோயியல் தடுப்பு – குணமாக்கல் பிரிவை இயங்க வைப்பதற்கான முயற்சியாகும்.
இந்த விடயம் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியது.
அதனையடுத்து ஆளுநர் குறித்த மருத்துவனைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
ஒரு மாதம் சென்ற பிறகும் எந்த விடயமும் நடக்கவேயில்லை. பதிலாக அந்தப் பிரிவு இயங்காமல் உள்ளதாகக் குறிப்பிட்டு, அங்குள்ள மருத்துவ உபகரணங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றன.
இதனையடுத்து நோயாளர் நலன்புரிச்சங்கம் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தச் சூழலில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் வடமாகாண சுகாதார அமைச்சும் ஆளுநர் தலைமையில் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டி குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் ஆராய்ந்தது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நோயாளர் நலன்புரிச் சங்கமும் அழைக்கப்பட்டிருந்தது.
கலந்தாராய்வின்போது குறித்த பிரிவை இயக்குவதற்கான தேவைகளின் பட்டியலை மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்தார். அந்தப் பட்டியலின் அடிப்படையில் அவ்வளவு வளங்களையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, முதற் கட்டமாக மருத்துவப் பிரிவை அங்கே இயக்க வைப்பதாகவும் படிப்படியாக அதற்கான வளங்களை நிறைவு செய்ய முடியும் என்றும் பேசப்பட்டது. அதற்கமைய தீர்மானமும் எடுக்கப்பட்டது.
அதற்குப் பிறகு 20 நாட்கள் கடந்து விட்டன.
நிலைமையில் துளி முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்குப் பிறகு யாரிடம் பேசுவது? எதைப் பேசுவது?
இப்படித்தான் அதே மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பேருந்து நிலையக் காணியில் தவறான முறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை (கடைகளை) அகற்றுவது தொடர்பாக ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதற்கான கூட்டமும் நடந்தது. ஊடகங்களிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், நிலைமையில் முன்னேற்றத்தைக் காணவேயில்லை.
இப்படித்தான் பாடசாலைகளில் அதிபர் நியமனங்கள், ஆசிரிய இடமாற்றங்கள், காணிப் பகுதிகளில் தாதமங்கள் என ஏராளம் குறைபாடுகளும் பிரச்சினைகளும் மலிந்துள்ளன.
காணிப்பிரச்சினை எனும்போது ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு காணிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவருக்கு ஆவணத்தை புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.
அந்தக் காணியில் குறித்த நபரும் அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே குடியிருந்து வருகின்றனர்.
இருந்தாற்போல கொழும்பில் இருக்கும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சிபாரிசுக் கடிதத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேலதிக சிபாரிசையும் பெற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலரையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரையும் சந்தித்துத் தனக்கும் அந்தக் காணியில் பாதியை உரிமை கோரியிருக்கிறார். இவ்வளவுக்கும் குறித்த நபர் ஒருபோதுமே புதுக்குடியிருப்பிலோ முல்லைத்தீவு மாவட்டத்திலோ குடியிருந்ததே இல்லை. ஆனால், குறித்த சிபாரிசுக் கடிதத்துக்காக மாவட்டச் செயலரும் பிரதேச செயலரும் நீண்டகாலமாகவே காணியில் குடியிருப்பவரை அழைத்து, பாதிக் காணியை வழங்குமாறு பணித்துள்ளனர். காணிக்குரியவர் அதனை மறுக்கவே அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். மட்டுமல்ல, பாதிக்காணியை வழங்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக கடிதமும் எழுதியுள்ளனர். இதனை ஆட்சேபித்து பாதிக்கப்பட்டவர் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து இன்னும் உரிய பதில் வரவில்லை. ஆனால், பிரதேச செயலகத்திலிருந்து ஏகப்பட் அழுத்தங்கள் அதற்கிடையில் காணி உரித்தாளருக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இப்படி அரச திணைக்களங்கள் தொடக்கம் தனியார் பிரச்சினைகள் வரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கூட பிரச்சினைகள் பேசப்படுகின்றனவே தவிர, தீர்வுகள், நடவடிக்கைள், முன்னேற்றங்கள் என்பது போதாத நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலைப் பலரும் கோருகிறார்கள். தேர்தல் வந்தாலும், அதில் வெற்றியீட்டினாலும் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபையைப் போல இன்னொரு நிர்வாகம் வந்தால் அதனால் என்ன பயன்? அதை விட தேர்தலே வேண்டாம். அதையும் விட ஆளுநரும் வேண்டாம் என்றுதான் சனங்கள் எண்ணுகிறார்கள். அப்படியென்றால் என்னதான் வேணும் என்பதே கேள்வி.









