பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது
12 Nov, 2025 | 01:04 AM

(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆறு வீரர்கள் 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் வனிந்து ஹசரங்கவைத் தவிர மற்றையவர்களால் பெரிய எண்ணிக்கைகளைப் பெற முடியாமல் போனது. அது இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
மத்திய வரிசையில் தனித்து போராடிய வனிந்து ஹசரங்க அரைச் சதம் குவித்த போதிலும் அவரால் இலங்கையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.
பெத்தும் நிஸ்ஸன்க, அறிமுக வீரர் ஆகிய இருவரும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால்,காமில் மிஷார (38), பெத்தும் நிஸ்ஸன்க (29), குசல் மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஆட்டம் கண்டது. (90 - 3 விக்.)
அந்த மூவரையும் ஹரிஸ் ரவூப் ஆட்டம் இழக்கச் செய்தார்.
அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர்.
சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
சரித் அசலன்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் வெளியேறினார்.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த துஷ்மன்த சமீர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து போராடிய வனிந்து ஹசரங்க 49ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 279 ஓட்டங்களாக இருந்தபோது 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது.
சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது.
அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: சல்மான் அகா
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது.
https://www.virakesari.lk/article/230131