1 month 4 weeks ago
குறிப்பன் எனும் தெய்வம் தி. செல்வமனோகரன் January 9, 2025 | Ezhuna அறிமுகம் மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. இதன் ஊடாக நீத்தார் பெருமை, முன்னோர் வழிபாடு, தெய்வ வழிபாடு போன்றன உருவாயின. தொழில்சார் வாழ்வில் தமக்குதவும் இயற்கையை இயற்கைப் பொருளை முன்னிறுத்திய வழிபாடுகளும் அவற்றின் வழி அதனைத் தெய்வநிலைப்படுத்தலும் தவிர்க்க முடியாத வாழ்வியல் அம்சங்களாயின. குறிப்பன் எனும் தெய்வமும் தொழில்சார் நிலையில் வைத்து நோக்கத்தக்க ஒன்றாகவே காணப்படுகிறது. குறிப்பன் : பெயர் பற்றிய உரையாடல்கள் தமிழ் மரபில் குறிப்பன் என்ற சொல்லின் வரலாறு குறித்த எந்தப் பதிவையும் அறியமுடியவில்லை. குறிப்பன் ஈழத்தில் குறிப்பாக பூநகரிப் பிராந்தியத்தில் நிகழ்கின்ற தனித்த சொல் வழக்காக, தெய்வமாகக் காணப்படுகிறது. (அ) சங்ககால அகநானூறில் “ஓம்பினார் கவர்ந்து கூழ் கெழு குறிம்பில்” (113), “கல்லுடைக் குறும்பின் வயவர்” (31) என்றும்; சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்றும் கூறப்பட்டுள்ளது. (ஆ) குடி என்பது குலம், கோத்திரம் குடும்பம் என்றும், குடியானவன் என்பது மண்ணின் மைந்தன், வேளாண்மை செய்பவன் என்றும் பொருள் சுட்டப்படும். இது குடியானவன், குடியாட்சி, குடியிறை என விரியும். குடும்பு எனும் சொல் குறித்த பிரதேசத்தை – கிராமத்தைக் குறிக்கும். அகரமுதலி குடும்பர் என்பதற்கு ஊர்த்தலைவர் என்பதோடு பள்ளரின் தலைவர் என்றும் பொருள் சுட்டுகிறது. ஆரம்பத்தில் அது ஒரு பதவிப் பெயராகவும் பின்பு சாதிப் பெயராகவும் சாதியின் தலைவரைச் சுட்டும் சொல்லாகவும் மாறியிருக்கலாம் (சரோஜினி குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப.34). இவற்றோடு இணைத்தும் தனித்தும் ஆராயத்தக்க சொல் ‘குறிப்பன்’ எனலாம். ஒன்றைச் சுட்டுவது ‘குறிப்பான்’. அது சுருங்கிக் குறிப்பன் என்றாகியிருக்கலாம். குறி எனும் சொல் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. தமிழகராதி அடையாளம், எண்ணம், ஒருவகை சாத்திரம் சொல்லுதல், குணம், குறிப்பு, தோற்றம், நன்னடத்தை, நிமித்தம், பயில், புடைவை, மாடு, முறை எனப் பொருள் சுட்டுகிறது (கதிரைவேற்பிள்ளை, நா., 2003). குறிப்பு – அடையாளம், ஒருமை, கருத்து, பிறந்தநாள் எழுதி வைக்கும் ஓலை, விருப்பம் என்றும்; குறிப்பானவன் – கணிசவான், மதிக்கத்தக்கவன் எனவும்; குறியர் – குள்ளர், குறியானவன் – நிதார்த்தன் என்றும் பொருள் சுட்டப்படுகிறது. ‘குறிப்பன்’ என்பது கிராமிய மொழி வழக்காறாக இருக்கலாம். குறிப்பன் என்பது குறிப்பால் உணர்த்துபவன், அடையாளப்படுத்துபவன், குறித்துச் சொல்பவன் எனும் பொருளை உணர்த்தும் சொல்லாக அமைந்துள்ளது. குறிப்பன் வழிபாடு ஈழத்தில் கிளிநொச்சிப் பிராந்தியத்தில் பூநகரி பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராமியத் தெய்வமாக குறிப்பன் அமைந்துள்ளது. தமிழ்ச்சூழலில் வேறெங்கும் இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை பரமன் கிராய் வில்லடி ஐயனார் கோயில் பூசாரியும், வெட்டுக்காடு பெரும்படை பூசாரியும் ஏற்படுத்தியிருந்தாலும் அதனை ஆய்வு நிலைப்படுத்த உதவியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் சிரஞ்சன். அவரின் துணையோடும் ஆய்வு ஆர்வலர்கள் கோ. விஜிகரன், சு. தாரங்கன் ஆகியோருடனும் இவ்வாய்வினை மேற்கொண்டோம். கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடு தொலைந்தால் துவரந்தடியை வெட்டிவைத்து வழிபடுவர் அல்லது கிடைக்கும் வைரமான தடியை வெட்டிவைத்து வழிபடுவர். அத்தெய்வம் கருணை கொண்டு தொலைந்த ஆடு, மாட்டைக் கூட்டி வரும் அல்லது அவை நிற்கும் இடத்தைக் குறிப்பால் உணர்த்தும் என்றும் நம்பப்படுகிறது. இதன்வழி அந்தத் தடியை (பொல்லை) குறிப்பன் எனும் தெய்வமாகக் கருதி பூசை செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர் அல்லது கால்நடையை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவர் கையில் தடி, குறிப்பாக துவரந்தடி வைத்திருப்பதுண்டு. அதனைக் கொண்டே பட்டியை அல்லது மந்தையை வழிப்படுத்திச் செல்வதும், விலகிச் செல்லும் கால்நடையை வழிப்படுத்துவதும், துரத்தி அழைத்து வருவதும், பகை விலங்குகளை விரட்டுவதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடகப் பிரதேசத்திலிருந்து கால்நடைக்கான புல்வெளிகளைத் தேடித் தேடி தமிழகத்தையும் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும் வந்தடைந்த பழங்குடிகளாக ‘குறுமன்ஸ்’ இனக்குழுவினர் கருதப்படுகின்றனர். இவர்கள் குறுமன் (தமிழ்நாடு), குருபர் (கர்நாடகா), குருபா (ஆந்திரா), குருமா (தெலுங்கானா) எனப் பலவாறு சுட்டப்படுகின்றனர். இவர்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட இனக்குழுவினராவார் (சந்திரசேகர், சி. 2021, அரண் ஆய்விதழ்). இயற்கை நெறிக்காலத்தில் – அதியமான் காலத்தில் குறும்பு எனும் கால்நடை அரண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை ‘ஸ்டுவர்ட்’ எனும் ஆய்வாளர் “இந்த இனக்குழுவினர் ‘குறி’ எனும் ஆடுகளை மேய்த்ததால் குறும்பர் எனப்பட்டனர்” எனச் சுட்டுகின்றமை இணைத்து நோக்கத்தக்கது. ஆடுகளின் மேய்ப்பை அல்லது கால்நடை வளர்ப்பவர்களின் தலைவன் – முன்னோர் வழிபாட்டின் வழி ‘குறிப்பன்’ எனும் தெய்வமாகியிருக்கலாம். இதனை இன்னும் வலுப்படுத்துவது குறும்பர் இனக்குழுவின் வாழ்க்கை முறை என்பதோடு கால்நடை வளர்ப்பு, மேட்டுநில விவசாயம் என்பன குறிப்பனை வழிபடும் மக்களிடமும் காணப்படுகிறது. நிலவுற்பத்திச் சமுதாயத்தின் வழி உருவான நிலவுடமை அல்லது நிலப்பிரபுத்துவம் விவசாய உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பெருநிலத்தை உடையவர் நிலக்கிழாராக, அதிகாரமுடையவராக, உழுவித்து உண்பவராக உயர்ந்தார். சிறு நிலமுடையவர் அல்லது நிலமற்ற விவசாயக் குடிகள் உழுது உண்போராக மாறினர். வர்க்க முரண் இதன் வழி உருவாயிற்று. அது சாதியாக, உயர்வு தாழ்வாக மாறிற்று. உழுவித்து உண்பவர் பெருங்குடி வேளாளராகவும் உழுது உண்பவர், கூலிகள் என்போர் சிறுகுடி வேளாளராகவும் மாறினர். அவர்கள் ஆரம்பத்தில் மள்ளர் என்றும் பின்பு பள்ளர் என்றும் சுட்டப்பட்டனர். இவர்கள் வேளாளரின் நிலங்களை உழுது விதைப்பவர்களாகவும் கால்நடைகளை மேய்ப்பவர்களாகவும் மாறினர். பூநகரியின் எல்லைக்கிராமங்களில் மேட்டுநில மேய்ச்சல் நிலங்கள் இருப்பதும்; கால்நடை வளர்ப்பும், வயல்களை விளைவிப்பதும் குறிப்பனை வழிபடும் மக்களின் தொழில்துறைகளாக இருப்பதும் குறும்பர் (குறுமன்ஸ்) இனக்குழுவினரை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தினர் தம்மை தேவேந்திர குலம் என்று சுட்டுவர். அவர்களுள் பல்வேறு உட்பிரிவுகள் (குலங்கள்) காணப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட அட்டவணைச் சாதியினர் பட்டியலில் இவர்கள் பள்ளன், தேவேந்திர குலத்தார், கடைஞன், களவாடி, குடும்பன், பண்ணாடி எனும் ஆறு பிரிவினராகச் சுட்டப்படுகின்றனர் (பரமேஸ்வரி, சி., 2000, தேவேந்திர குல வேளாளர் வரலாறும் சமூக அரசியல் எழுச்சியும், 40 – 52). இவை மேலும் ஏறத்தாழ நூற்றிமுப்பது பிரிவுகளை உடையன. இதில் குடும்பன் எனும் சொல் சிறுகுடி வேளாளரின் தலைவனைக் குறிப்பதாகவே சொல்லப்படுகிறது. குடும்பத்துக்குத் தலைவன் தகப்பன் என்பதன் வழி இச்சொல் உருவாகி இருக்கலாம் எனச் சில ஆய்வாளர் சுட்டுவர் (சரோஜினி, குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப. 34). குடும்பம் என்பது மருதநில மக்களின் வழி உருவான பண்பாட்டு அடையாளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, குறும்பர், குடும்பர் எனும் இரு இனங்களும் விவசாயக் குடிகள். கர்நாடக ‘குறி’ மேய்ப்பவர்கள் தமிழ்நாடு, கேரளா ஊடாகக் கடல்நீரேரி வழி பூநகரியில் குடியேறி இருக்கலாம் என்பதும், பெருங்கற்காலப் பண்பாட்டை உடைய தொல்நகரம் பூநகரி என்பதும் இங்கு கவனத்திற்குரியதாகும். ஆயினும் குறிப்பன் எனும் தெய்வம் ஈழத்துக்கே – பூநகரிக்கே உரிய தனித்த பண்பாட்டு வெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் குறிப்பன் கோயில்கள் ஈழத்துப் புலத்தில் பூநகரியில் மட்டுமே குறிப்பன் கோயில்கள் காணப்படுகின்றன. பூநகரியில் குறிப்பனுக்கான தனித்த கோயில், பரமன்கிராய் வில்லடி கிழக்கில் வயலின் நடுவே காணப்படுகிறது. குறிப்பனுக்கான தனித்த வேறு கோயில்கள் இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தக் கோயிலின் உரிமையாளராகவும் பூசாரியாகவும் விளங்குபவர் திரு. இராமலிங்கம் குணரத்தினம் ஆவார். இதனை விட பரமன் கிராமம் வில்லடி மேற்கு ஐயனார், வண்ணக்கம் வெளி வீரபத்திரர், காவாக்குளம் நரசிம்ம வைரவர், தம்பிராய் ஊத்தக்குடியன் வைரவர், வில்லடி தெற்கு வைரவர், உப்பிளவான் வைரவர், செல்லையாத்தீவுக்கு அண்மையிலுள்ள ஐயனார், சங்குப்பிட்டி ஐயனார் முதலான கோயில்களில் பரிக்கலமாக – பரிவார தெய்வமாக குறிப்பன் காணப்படுகிறது. இக்கோயில்களில் காணப்பட்ட பொது அம்சங்கள் சிலவற்றை அவதானிக்க முடிந்தது. குறிப்பனின் தனிக்கோயிலாயினும், குறிப்பன் பரிவாரமாக அமர்ந்திருக்கும் கோயிலாயினும் அவை இயற்கையான வயல்வெளிச் சூழலில் மேட்டு நிலத்தில் அமைந்துள்ளன. இவை யாவும் பூசாரிகளால் பூஜை செய்யப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக வழிபடுகின்றோம் என்ற உரையாடலுக்கு மேல், இக்கோயில்கள் பற்றிய தெய்வம் பற்றிய கதையாடல் வேறு எதனையும் அறிய முடியவில்லை. குறிப்பனுக்கான தனித்த புராணக்கதைகளையோ, இலக்கிய, தொல்லியல் சான்றுகளையோ அறியமுடியவில்லை. சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் வழிபடு தெய்வமாகவே இது அறியப்படுகின்றது. குறிப்பனுக்கு உருவமில்லை. குறி வழிபாடே காணப்படுகிறது. கோயில் அமைப்பும் குறிப்பன் குறி வழிபாடும் வீரை, கூழா மரங்களின் கீழ் பிரம்பு (தடி) வைத்து வழிபடும் மரபே தொன்மை முறையாகக் காணப்பட்டுள்ளது. மரத்தாலான தடியானது மழை, வெயில், காற்று என்பவற்றால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதடைவதனால் வெள்ளைக் கல் (சுண்ணாக்கல்) வைத்து குறிப்பனை வழிபடும் மரபு வளர்ச்சி பெற்றது. தற்போது சூலமும் அருகே வைக்கப்படுகின்றது. இன்றும் பெரும்பாலான கோயில்கள் மரத்தடிக் கோயில்களாகவே காணப்படுகின்றன. சில கோயில்களில் மரத்தடியில் சீமெந்துத் தளம் இடப்பட்டு தடியும், கல்லும் வைத்து திறந்த வெளி வழிபாடே நடத்தப்படுகின்றன. ஓரிரு கோயில்களில் பரிவாரமாக மூன்றுக்கு மூன்று அளவில் சீமெந்துக் கட்டடம் கட்டப்பட்டு கூரையிடப்பட்டுள்ளது. பரமன் கிராய் வில்லடி கிழக்கு குறிப்பன் கோயில் கருவறை, முன் மண்டபம் என்பன உடையதாகவும், அண்ணளவாக பதினைந்துக்கு பத்து அளவு கொண்டதாகவும் சீமெந்துக் கட்டடமும், ஓட்டுக்கூரையும் உடையதாகவும் உள்ளது. விசேட தினங்களில் தென்னை ஓலைகளில் சிறு முன் மண்டபம் ஒன்று இணைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் பரிவார தெய்வமாக ஐயனார் வீற்றிருக்கின்றார். குறிப்பனை பரிவார தெய்வமாக உடைய பெரும்பாலான கோயில்கள் பெருங்குடி வேளாளருடையது என்பதும், ஐயனார் அவர்களின் தெய்வமாக பூநகரியில் கருதப்படுவதும், சிறுகுடி வேளாளரின் குறிப்பன் கோயிலில் ஐயனாருக்குத் தனி இடம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாதியம் கருதாத, சமதையான, ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை செய்யும் செயற்பாடாக இதனைக் கருதலாம். வழிபாட்டு முறைகள் குறிப்பன் தெய்வத்திற்கு வாரமொருமுறை விளக்கு வைக்கும் முறைமை காணப்படுகின்றது. பரமன்கிராய் வில்லடி குறிப்பன் கோயில் தனக்கான தனித்துவமான முறைமைகளை பின்பற்றி வருவதை உரிமையாளரும், பூசாரியுமான இ. குணரத்தினம் உறுதிப்படுத்தினார். வைகாசி விசாகத்துக்கு பின்பு இங்கு பொங்கல் நிகழ்த்தப்படுகிறது. இதை விட கார்த்திகை தீபம், சித்திரை வருடப் பிறப்பு போன்ற சில விசேட தினங்களிலும் மடை வைக்கும் மரபு காணப்படுகின்றது. பழைய காலத்தில் தடியும் பின்பு வெள்ளைக்கல்லும் வைத்து கூழா மரத்தடியில் வழிபடப்பட்டது. இன்று கூழா மரமில்லை. 2017 இல் ஆலயம் இன்றைய நிலைக்குரியதாக்கப்பட்டு கருங்கல் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். அதில் குறிப்பன் தெய்வம் பூசாரி மீது வந்திறங்கி கலையாடிக் குறி சொல்லும். பூசைமுறை உள்ளிட்ட விடயங்களை அது கூறும் என்றும் அதன்படியே பூஜை நிகழ்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. பூசைக் காலத்தில் பூசாரி மீது தெய்வமிறங்காத விடத்து, “மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறைநான்கின் அடிமுடியும் நீ, மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலமிரண்டேழு நீ, பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, யொருவ நீயே, பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே, பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ, புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்..? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!” எனும் ‘நடராஜர் பத்து’ பாடலைப் பாடி உருவேற்றுதல் முறை காணப்படுகின்றது. இது ஒரு வகையில் மேனிலையாக்கமாகின்றது. வெற்றிலை மடை வைத்த அடுத்த நாள் தண்டல் நடைபெறும். பொருள், காசு பெறல் என அத்தண்டல் அமையும். இதில் சாதியமற்ற நிலை காணப்படுகின்றது. மதியம் அன்னதானம் நடைபெறும். இரவே பொங்கல் நிகழ்வு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து அண்ணளவாக முப்பதடி தூரத்தில் உள்ள பாலை மரத்தின் கீழ் வைத்தே வளுந்து எடுக்கப்படும். வளுந்து எடுக்கும் போது பாலை மரத்தைச் சுற்றி ஐந்தடியளவில் விட்டு பனையோலையில் மறைப்புக் கட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து வளுந்து எடுக்கப்பட்டு பொங்கல் நிகழ்த்தப்படும். பின் மடை போடப்படும். மடையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் பொங்கலோடு வடை, மோதகம், முறுக்கு, பால்ரொட்டி போன்ற பலகாரங்கள் பலவும் படைக்கப்படும். பூசாரி மந்திரம் இன்றி பூசை நிகழ்த்துவார். பூஜை நிறைவில் தெய்வமாடிக் குறி சொல்லுவார். இக்கோயில்களில் பலியிடல் இடம்பெறுவதில்லை. வன்னி இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்தில் பூசாரிக்கு அணிகலன்கள் இருந்துள்ளது. ‘கவுண்’ போன்ற ஆடையை உடுத்து, கை கால்களில் அவற்றோடு ஒட்டிய வெள்ளிச் சதங்கைகள் அணிந்து, நெற்றியில் வெள்ளிப் பட்டமும், மார்பில் வெள்ளியாபரணமும் போட்டிருப்பார். இவ்வழக்கம் இன்று இவ்வாலயத்தில் அற்றுப் போய்விட்டது. பெருங்காடு பெரும்படைக் கோயில்களில் இன்றும் இதனை ஒத்த அணிகலன்கள் உண்டு. குறிப்பன் ஆலய மடை பரவலில் உள்ள விசேடம் ‘அபின்’ படைத்தல் ஆகும். அதனை பூசாரி மட்டுமே தன் பங்காகப் பெற முடியும். இது மட்டக்களப்புத் தேசத்தில் வைரவருக்கு அபின் ரொட்டி படைக்கும் மரபோடு ஒப்பிடத்தக்கதாகும். பொங்கல் பூசை முடிவடைந்து மறுநாள் காலையில் வழி வெட்டப்பட்டு பூசை நிறைவுறும். எட்டாம் நாள் (எட்டாம்மடை) காய்மடை, பூமடை என்பன படைக்கப்பட்டு பூசை நிகழ்த்தப்படுவதோடு பொங்கல் விழா நிறைவுபெறும். இப்போது பூசாரியாக உள்ள குணரத்தினத்தின் தந்தை இராமலிங்கமே முன்பு பூசாரியாக இருந்தவர். அவரின் இறப்பின் பின்பு கிராஞ்சி இளந்தாரி கோயில் பூசாரி செல்வரத்தினம் பூசாரியாக இருந்து வந்துள்ளார். அவர் ஆலய வழக்காறுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டதும், வெற்றிலை மடைக்கு வர முடியாமற் போனதும், அவரது மரணமும் குறிப்பன் வழிபாட்டின் வீரியத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகின்றது. எண்பதுகளின் பிற்பகுதி வரை பெண்கள் இந்த ஆலயத்திற்கு வருவதில்லை. இங்கு பொங்கல் விழா நிறைவுற்றதன் பின் அடுத்த நாள் பூநகரி மட்டுவிலில் உள்ள நாச்சிமார் கோயிலில் குடும்பமாகச் சென்று பொங்கலும் பலகாரமும் மடையிடும் வழக்கமே இருந்துள்ளது. இம்மரபை அக்கோயில் பூசாரி மாற்றியதும், நாச்சிமாருக்கு பொங்கிய பின் குறிப்பனுக்கு பொங்க வேண்டும் என்றதும் இரு பிராந்தியத்தவர்களிடமும் முரணை ஏற்படுத்தியது. அதனால் அன்றிலிருந்து குறிப்பன் ஆலயத்தவர் நாச்சிமாருக்கோ, அவர்கள் குறிப்பன் கோயிலுக்கோ வருவதில்லை. இது புதிய மரபொன்றை உருவாக்கியது. 1990 இல் குறிப்பன் கனவில் உணர்த்தியதன் படி ஆலயத்திற்கு கடா ஆடு ஒன்று நேர்ந்து விடப்படும். அதன் பின் பெண்கள், ஆலயத்துக்கு வருபவர் ஆகியோர் பொங்கல் விழாவில் ஈடுபடுவர். அதேவேளை நேர்ந்து விடப்பட்ட ஆடு ஒரு வருடத்துள் இறந்து விடுவதாக இ. குணரத்தினம் பூசாரி குறிப்பிடுகின்றார். குறிப்பன் கோயில் பூசாரிக்கே குறிப்பன், ஐயனார் கலைகள் வருகின்றன. அதேவேளை ‘கந்தசாமி பெஞ்சாதி’ என்கின்ற பெண்மணியே நாச்சிமார் கலையாடியாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. பூசாரி கட்டுச் சொல்லுதலும், செய்வினை எடுத்தல் முதலானவையும் நடைபெற்று வருகின்றன. பூசாரி கலையாடும் போது கையில் தேவையின் பொருட்டு பொல்லு (முன்பு தடி இப்போது இரும்பு) ஏந்தி நின்று கலையாடுவார். இது குறிப்பன் தெய்வத்தின் அடையாளமாகும். அதேவேளை இதே சிறுகுடி வேளாளரின் இன்னொரு குல தெய்வமான அண்ணமாரின் குறியீடாகவும் பிரம்பு எனும் பொருளே விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பன் வழிபாடு, அண்ணமார் வழிபாடு என்பன ஒத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அண்ணமார் தெய்வம், பொல்லுக்கிழவன், சிவகுடும்பன் என அழைக்கப்படுவதும் (சண்முகலிங்கன், 2014, இலங்கை – இந்திய மானிடவியல்: 27), பூநகரியில் அண்ணமார் உள்ள இடத்தில் குறிப்பன் இல்லாதிருப்பதும் குறிப்பன் உள்ளவிடத்தில் அண்ணமார் இல்லாதிருப்பதும் சுட்டத்தக்கது. இது சாதிய உட்பிரிவு சார்ந்த விடயமாகவும் இருக்கலாம். நெல் விதைப்பில் இருந்து வெட்டுக் காலம் வரையும் நேர்த்தி வைக்கப்பட்டு நெல்லில் ஒரு பங்கு வழங்குதலோ, அல்லது புது நெல்லில் பொங்குதலோ குறிப்பன் வழிபாட்டில் இன்றும் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். மேலும் கால்நடைகள் நோயுற்றாலோ, தொலைந்தாலோ, பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்திக்குமாறு வேண்டி நேர்த்தி வைத்துப் பொங்குதல், காணிக்கை செலுத்துதல் போன்ற பல முறைகளும் காணப்படுகின்றன. குறிப்பன் பரிவாரமாக இருக்கும் ஆலயங்களில், பொங்கல் காலங்களில் அவ்வாலய முறைப்படி வளுந்து எடுக்கப்படும் போது குறிப்பனுக்குரிய வளுந்து எடுக்கும் உரிமை இச்சிறுகுடி வேளாளருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளமை குடிமை முறையின் உரிமை சார் பண்பாக நோக்குதற்குரியதாகும். முடிவுரை குறிப்பன் வழிபாடு இன்றுவரை காணப்பட்டு வரினும், அது குறித்த சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு குறித்த பூநகரிப் பிராந்தியத்தில் மட்டும் குறுகிப் போயுள்ளதாயினும், அது இத்தொல்நகரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக உள்ளது என்பது நோக்கற்பாலது. கால்நடையோடு தொடர்புடைய இவ்வழிபாடு விவசாய உழுதுண்ணும் சமூகத்தின் தொழில்சார் வழிபாட்டு முறைமையாக இருக்கலாம். வேளாண்குடி சமூகத்தவர் யாவரும் வணங்கும் தெய்வமாக, நம்பிக்கைக்குரிய வழிபாடாக இது காணப்படுகின்றது. பெருங்குடி வேளாளர் தமது வழிபாட்டு நிலத்தில் குறிப்பனுக்கு தனியிடம் வழங்கியதோடு அதற்கான வளந்துரிமையை சிறுகுடி வேளாளருக்கே வழங்கி உள்ளமை இதனை உறுதிப்படுத்துகின்றது. இத்தெய்வம் கால்நடை மேய்ப்பாளரின் தடியை, ஆட்டைக் குறிப்பால் உணர்த்துகின்ற (மலையக ரோதை முனி போல) தொழிற் கருவி சார்ந்த வழிபாட்டை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழினும் இன்று உயர் குடியினர் தத்தம் ஆலயங்களில் தாமே வளந்தெடுத்துப் பொங்கும்முறை காணப்படுகின்றது. சில ஆலயங்களில் வளந்துப் பொருட்களையோ, காசையோ பெற்றுத் தாமே பொங்கிப் படைத்துவிட்டு சிறுகுடி வேளாளரிடம் வழங்கும் முறைமை காணப்படுகின்றது. சாதிய ஒடுக்குமுறை மற்றும் சாதிய நீக்கத்தின் வழி இன்று குறிப்பன் செல்வாக்கிழந்து வரும் தெய்வமாகவே உள்ளது. அது நிலப் பண்பாட்டோடு இணைந்த பொருளாதார வாழ்வின் அடையாளம் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இன்றும் மேனிலையாக்கத்துக்கு பெரிதும் உள்ளாகாத நிலவியலோடு இணைந்த இயற்கைசார் தெய்வ வழிபாடாக இது திகழ்கின்றது. https://www.ezhunaonline.com/the-deity-of-kurippan/
1 month 4 weeks ago
ரப்பர் – நாவல் வாசிப்பனுபவம் இராதா கிருஷ்ணன் July 9, 2025 ரப்பர் நாவல் குமரி மாவட்டம் உருவான காலகட்டத்தின் கதை என்று சொல்லலாம் . அப்போது நிகழ்ந்த சமூக மாற்றங்கள், மக்களின் எழுச்சி வீழ்ச்சிகளை இரு குடும்ப வரலாறுகளை, அதன் தற்போதைய நிலைகளை சொல்வதன் வழியாக பேசும் நாவல் இது. முக்கியமாக இக்காலகட்டத்தில் நிகழ்ந்த நாயர் சாதியின் வீழ்ச்சியையும் , நாடார் சாதியின் எழுச்சியையும் இரு குடும்ப வரலாறுகள் வழியாக அறிய இயலும் . நாவலில் எனக்கு மிக பிடித்த அம்சம் என்பது கதை மாந்தர்களின் மனநிலைகளை மிக நெருங்கி நம்மால் அறிய முடிவதுதான், அவர்களது மன போராட்டங்கள், உள நிலைகளை நம்மால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. பிரதான கதாபாத்திரமான பிரான்சிஸ் முதற்கொண்டு உதவியாளன் பாத்திரமாக வரும் குஞ்சி வரை அவர்கள் மனநிலையை நம்மால் துல்லியமாக அறிய முடிகிறது. இந்த நாவலின் பெரிய பலம் இது என்று எண்ணுகிறேன் . இரண்டாவது முக்கிய அம்சம் ஒரு பாத்திரம் உச்சத்தில் இருப்பதையும் அப்போது அவரிடம் வெளிப்படும் குணத்தையும் பிறகு வீழ்ந்த பிறகு அந்த பாத்திரத்தில் வெளிப்படும் குணத்தையும் காண முடிவது. காலம் ஒருவரை எப்படி மாற்றுகிறது என்பதை காண முடிவது. மேலும் இதற்கு மாறாக உணவிற்காக சண்டையிட்டு கொல்லும் நிலையில் இருந்து வாழ்வை தொடங்கி மிக பெரிய அளவில் வளர்ந்து சொத்து சேர்த்து பின் இறக்கும் தருவாயில் தனது பிள்ளைகள் அந்த சொத்துகளை அழிக்கும் நிலையை மரணப்படுக்கையில் இருந்து காணும் சூழலை காண முடிவது என வாழ்வின் பல்வேறு வண்ணங்களை இந்த நாவலில் காண முடிகிறது . நாவலில் நாயர், நாடார் சமூக வரலாறுகள்,மனிதர்கள் தாண்டி இன்னொரு சமூக பிரதிநிதியும் வருகிறார்,அவர் கண்டன்கானி எனும் மலை பழங்குடி மனிதர். இயற்கையை அழித்து சொத்து சேர்க்காதவர், அதனாலேயே நிம்மதியான வாழ்கையை வந்தவர் . இவரது பேரன் லாரன்ஸ்தான் நாவலின் பிரதான பாத்திரமான பிரான்சிஸ்க்கு ஆகாயத்து பறவைகள் விதைப்பத்தும் இல்லை , அறுவடை செய்வதும் இல்லை எனும் மந்திரத்தை அளிக்கிறான் . பிரான்சிஸ் சொத்துகளை இழக்கும் நிலையில் வீழ்ச்சியின் நிலையின் இருப்பவன் , இனி என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவன் , அவனுக்கு இந்த பாடல் பெரும் நிம்மதியை அளிக்கிறது ! லாரன்சிடம் இயற்கையை அழிக்க கூடாது என்ற போதம் இருக்கிறது . அவன் அப்படி என்ன காணியின் பேரன் என்பது முக்கியமான காரணம் , அவன் ரப்பர் மரங்களை வெறுக்கிறான் , காரணம் அதன் சூழல் கேடுகள் ,அது இயற்கையை , இயற்கையின் சீர்மையை கெடுக்கிறது என எண்ணுகிறான் , பதிலாக வாழையை மிக நேசிக்கிறான் ,வாழையை பற்றி அதன் குணங்களாக அவன் எண்ணும் இடம் நாவலின் அழகான பகுதிகளில் ஒன்று . நாவலில் குளம் கோரி( வேலப்பன் ) என்ற ஒரு பாத்திரம் வருகிறது , மிரள வைக்கிறது . சூழல்களால் மிக கீழ்மையான செயல்களுக்கு ,கீழ்மையான மனநிலைகளுக்கு சென்ற ஒருவனின். மனதிற்குள் இருக்கும் மேன்மையும், துக்கத்தையும் அறிய முடியும் இடம் இந்த நாவலின் சிறப்பான இடங்களில் ஒன்று . நாவலில் நான் அதிர்ச்சி அடைந்த இடம் குமரி மாவட்டம் உருவான அசல் காரணம் என அறிய முடிகிற இடம் ! எபன் என்ற ஒரு பாத்திரம் உண்டு , திரேஸ் என்பவளின் காதலன் அவன் , குமரி மாவட்ட பிரிவினை போராட்டத்தில் ஈடுபட்டு பொலிசாரால் கொல்ல பட்டு இறந்து விடுவான் . அவன் போராட்ட நாயகர்களை பற்றி ஆவேசமாக உணர்ச்சிகரமாக எல்லாம் காதலியிடம் சொல்வான் . ஆனால் பின்னணியில் இந்த போராட்டத்தை ரப்பர் தொழில் முதலாளிகள் தங்கள் சுயநலனுக்காக ஆதரித்தனர் என்பதும் , நாயர் – நாடார் மோதல் இதில் உள்ளிருப்பதும் , இவைதான் அசலான காரணம் என்பதும் இந்த நாவல் வழியாக அறிய முடிகிறது. காதலி திரெஸ் இதனை அறிந்து காதலனது தியாகம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று நினைக்கும் இடம் எனக்கு படு அதிர்ச்சி கொடுத்தது , ஏனெனில் இங்கு தற்போது நிகழும் சமூக பிரச்னைகள் சார்ந்து கவனிப்பேன் , சில சமயம் அதை பற்றி எழுதுவேன் , இந்த எபன் கதை தெரிந்த பிறகு ஒவ்வொரு பிரச்சனைக்கும் வெளியே தெரியாத அசல் காரணம் வேறு இருக்கலாம் ,அதை அறியாது வெளி காரணங்களை பார்த்து வாதிடுவது எல்லாம் அபத்தான செயல்களாக தோன்றுகிறது ! இந்த நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு பெண் பாத்திரம் திரேஸ், அவளது வாழ்வும் இளமை தொடங்கி பேச படுகிறது , பெரிய அழகியாக தொடங்கி , காதலித்து ,பிறகு வசதியான வீட்டில் வாழ்ந்து , கடைசியில் மகனிடம் அடிவாங்கி அமரும் பாத்திரம் ! இன்னொரு கதாபாத்திரம் தங்கம் , இளம் பெண் , அவள் தற்கொலை செய்து கொள்வாள் , வீழ்ச்சி அடைந்த வீடுகளில் முதன்மையாக பாதிக்க படுவது பெண்கள்தான் , சூழல்கள் அவர்களை பிய்த்து தின்று விடும் . எனக்கு இந்த நாவலை படித்த போது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாளா,அல்லது கொல்ல பட்டாளா என்ற சந்தேகம் வந்தது , ஏனெனில் அவள் தான் கற்பமானதில் இருந்து தப்ப வேண்டும் என்றுதான் எண்ணி இருந்தாள், பிறகு நாவலில் அவள் தற்கொலை செய்து கொண்டதாக சொல்ல படுகிறது . இன்னொரு இடத்தில் அவள் கொலை செய்ய பட்டதாக ஒருவர் சொல்வதும் வருகிறது . எனக்கு இந்த நாவலில் பிடிக்காத பாத்திரம் லிவி. இவனை அவனது அம்மா திரேசின் வாரிசு என்று சொல்லலாம் ,எல்லாம் விதங்களிலும் ! …….. நாவலில் எல்லா குணங்களும் அதன் குரூர நிலையில் வருகிறது என்று சொல்லலாம் , உணவிற்காக மரணம் நிகழும் அளவிற்கு சண்டையிடும் சூழலும் வருகிறது . விவசாயத்திற்காக குன்றுகள் நடுவே இருக்கும் இடம் நின்று எரியும் காட்சி , அதை ஒட்டிய மனநிலை தீவிரமாக வெளிப்படுகிறது . சொந்த அம்மாவையே இன்னொரு தொடர்பு வைத்ததற்காக மகன் அடித்து வெளுக்கும் காட்சி வருகிறது . தனது சொந்த தங்கை தற்கொலை செய்து இறந்ததை, அவளை ஒருவன் வைத்திருந்ததை தானே பிறரிடம் கிண்டலடித்து சொல்லும் காட்சி வருகிறது ! பல தவறுகள் செய்தாலும் என் அளவில் இந்த நாவலின் உயர் பாத்திரம் பொன்னுமணி பெருவட்டர்தான், பசிக்கு திருடியவனை விடுவித்து தன்னோடு வைத்து கொள்கிறார் . சொத்துகள் சேர்த்தாலும் அதன் மீது பற்று இல்லாதவராக இருக்கிறார் , முக்கியமாக பிரான்சிசின் மனதை புரிந்து அவனை ஆதரிப்பவராக இருக்கிறார் . நாவலின் பிரதான பாத்திரம் பிரான்சிஸ். வாசிக்கும் போது அவன் வழியாக என்னை யோசித்தேன், அப்படி யோசிக்கும் போது அடையும் தெளிவுகள்தான் நல்ல நாவல்கள் வாசிப்பதன் நற்பலன்கள் என்று தோன்றுகிறது. இந்த நாவல் சிறியது, ஆனால் சிறந்த பல தருணங்கள் கொண்ட நல்ல அழகான நாவல் இது . இந்த நாவலை இதற்கு முன்பு மூன்று நான்கு முறை வாசிக்க முயன்று இருக்கிறேன் . இந்த அளவு முன்பு இழுத்தது இல்லை. இப்போது ஒரு வாசிப்பில் ஈர்ப்புடன் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு நூலுக்கும் அதை வாசிக்கும் தருணம் அமையும் போதுதான் உள்ளே செல்ல முடியும் என்று சொல்லப்படுவது உண்மை என்று தோன்றுகிறது ! https://mayir.in/essays/radhakrishnan/3833/
1 month 4 weeks ago

அமைச்சர் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் வருகையை போராட்டக்களம் அணுகிய விதத்தில் சில குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. குறிப்பாக இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோரும் போராட்ட களத்திற்கு ஆதரவு நல்கி வருகை தரும்போது அதனை போராட்ட ஏற்பாட்டாளர்கள் தந்திரமாக அணுகியிருக்க வேண்டும்.
-ஐ.வி.மகாசேனன்-
மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது ‘அணையா விளக்கு’ போராட்டமாகும். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜூன் 23 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான ஜூன் -25 அன்று பெருந்திரளான மக்கள் தன்னார்வமாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் ஒருசிலருடன் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் பிரதான பேசுபொருளாகவும் மாறியிருந்தது.
இக்கட்டுரை வெகுஜன போராட்டக்களங்களில் அரசியல்வாதிகள் மீதான மக்கள் எதிர்ப்பின் ஈழத்தமிழர் அரசியல் கலாசாரத்தை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூன் – 25 அன்று இறுதி நாளில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது சிறு குழப்பம் உருவாகியது. இருவரும் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் வெளியேறியபோது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஆதரவு கோரியது தொடர்பில் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பின்னர் தேசிய மக்கள் அரசாங்கத்தின் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்த போதும் சிறு குழப்பகரமான சூழல் உருவாகியது. மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் அணையா விளக்கில் மலரஞ்சலி செலுத்த வந்தபோது போராட்டக்காரர்கள் ஒரு சிலர் அவர்களை உடனடியாக வெளியேறுமாறு கோரி எதிர்த்தனர். பதட்டங்கள் அதிகரித்ததால் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். இவ்முரண்பாட்டு செய்திகளுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் வந்திருந்தார். போராட்டக்காரர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
வெகுஜன போராட்டங்கள் மற்றும் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழரசியலில் நீண்டதொரு மரபாக காணப்படுகின்றது. குறிப்பாக 1976 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து இளைஞர்களின் ஆயுதப் போராட்ட நகர்விற்கு உரமூட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னாளில் மாவட்ட சபைக்குள் முடங்கினார்கள். இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தமிழ் மக்களை சினங்கொள்ள வைத்தது.
1970 களின் இறுதியில் மற்றும் 1980 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ளும் வெகுஜன நிகழ்வுகளில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் வாகனத்தை பொதுமக்கள் தாக்கிய வரலாறுகள் காணப்படுகின்றது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்திருந்த போது மாணவர்களின் எதிர்ப்பால் வெளியேறியிருந்தார்.
குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியினை மாணவர்கள் பறித்து பெரும் குழப்பகரமான சூழ்நிலையொன்று உருவாகியிருந்தது. இவ் எதிர்ப்புக்கள் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
1980 கள் மற்றும் 1990 களில் வெகுஜன நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்தது. இது மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய உறுதியான நிறுவனக் கட்டமைப்பினாலேயே சாத்தியமாகியிருந்தது. 1980 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே எழுச்சியுற்ற ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களினை வெகுஜன அபிப்பிராயங்களை ஒன்றுதிரட்டி சாத்தியப்படுத்தக்கூடிய களமாக இருந்தது.
எனினும் தொடர்ச்சியான தேர்தல்களில் 1989 இல் யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் 1994 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். இறுதியாக 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் நியமன உறுப்பினராக பாராளுமன்றம் சென்றிருந்தார். அவ்வாறே 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராயிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நியமன உறுப்பினராகவே பாராளுமன்றம் சென்றிருந்தார். இப்பின்னணியில் 1970 களின் இறுதியில் மற்றும் 1980 களில் வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தியிருந்த கோபத்தை பின்னாளில் தேர்தல்களிலும் வெளிப்படுத்தி அவர்களை நிராகரித்திருந்தார்கள்.
‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அணையா விளக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் எதிர்ப்பாளர்களிடம் ‘உங்களுக்கு அவையள் பிழை செய்திருந்தால் வாக்குகளில் காட்டுங்கள்’ எனத் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானதாகும். 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை நெறிப்படுத்தும் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தை வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடுமையாக எதிர்த்திருந்தனர். இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பல வெகுஜன நிகழ்வுகளிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் 2010 களுக்கு பின்னர் உயர்வாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் அங்கிருந்த கட்சி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டிருந்தார்.
2018 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே வருகை தந்திருந்திருந்தனர்.
அன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் வருகை தந்திருக்கவில்லை. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்தால் மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதெனக்கூறி மாணவப் பிரதிநிதிகளை வேறு இடத்திற்கு அழைத்திருந்தார்கள்.
இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெகுஜன நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத மக்கள் எதிர்ப்பையே உறுதி செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்பையும் அணுக வேண்டியுள்ளது.
2010 களின் பின்னர் வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் தமது நம்பிக்கையின்மை மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும்இ ‘அணையா விளக்கு’ ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியது போன்று தேர்தல்களில் இவ் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்த தவறுகின்றார்கள். 2017 இல் முள்ளிவாய்க்காலில் வெளியேற்றப்பட்ட இரா.சம்பந்தன் 2020 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ் மக்களிடம் எதிர்ப்பை பெற்று வரும் சுமந்திரன் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் மக்கள் வாக்குகள் மூலம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே மக்கள் நிராகரித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். எனினும் 1980 கள் மற்றும் 1990 களில் வெகுஜன நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்தது. இது மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய உறுதியான நிறுவனக் கட்டமைப்பினாலேயே சாத்தியமாகியிருந்தது. 1980 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே எழுச்சியுற்ற ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களினை வெகுஜன அபிப்பிராயங்களை ஒன்றுதிரட்டி சாத்தியப்படுத்தக்கூடிய களமாக இருந்தது.
அத்தகையதொரு பொதுக்கட்டமைப்பு 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடம் வெற்றிடமாகவே அமைகின்றது. 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியேற்றப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அடுத்த தேர்தலிலேயே மக்களால் நிராகரிக்கப்படும் சூழமைவு காணப்பட்டது. 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த போது அன்றைய மாணவர் ஒன்றியம் ‘தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்’ என வீரவசனம் பேசியிருந்தார்கள். எனினும் அவ் ஒன்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலிற்கே மக்களுக்கு சரியானதையும் நிராகரிக்க வேண்டியவர்களையும் வழிகாட்ட மாணவர் ஒன்றியம் தவறியிருந்தது.
இவ்வாறாக மக்களின் எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்புகளின் பலவீனங்களினாலேயே வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் எதிர்ப்புகளின் பிரதிபலிப்புகளை தேர்தல் முடிவுகளில் அவதானிக்க முடிவதில்லை.தேர்தல் நலன்களை மாத்திரம் மையப்படுத்தி இயங்கும் கட்சிகளும் வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் மக்கள் எதிர்ப்புகளையும் புறந்தள்ளி போகும் நிலைமைகள் காணப்படுகின்றது.
‘அணையா விளக்கு’ போராட்டத்தில் வருகை தந்த போது போராட்டக்காரர்களின் ஒரு சிலரின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களும் அரசாங்க உறுப்பினர்களும் அதனை மக்களின் எதிர்ப்பு மற்றும் கோபங்களிலிருந்து திசைமாற்றும் செய்திகளையே வழங்கி இருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் வெளியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் ஆரம்பம் தமிழரசுக் கட்சியின் உட்பூசலாகவே அமைந்திருந்தது.
எனினும் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை வெளியே செல்லுமாறு எழுப்பப்பட்ட கோஷத்திற்குரியவர்களை முழுமையாக தமிழரசுக் கட்சியின் உட்பூசலின் எதிர்த்தரப்பினராக சுருக்கிவிட முடியாது. காணொளியில் இயல்பான மக்களின் கோபங்களும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் தம்மை நியாயப்படுத்த முழுமையாகவே எதிர்ப்பினை திசைதிருப்பும் வகையில் செய்தி வழங்கி இருந்தார்கள். இதனை தொடரும் வகையிலேயே அரசாங்க உறுப்பினர்களின் செய்திகளும் அமைந்திருந்தது.
அமைச்சர் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் வருகையை போராட்டக்களம் அணுகிய விதத்தில் சில குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. குறிப்பாக இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோரும் போராட்ட களத்திற்கு ஆதரவு நல்கி வருகை தரும்போது அதனை போராட்ட ஏற்பாட்டாளர்கள் தந்திரமாக அணுகியிருக்க வேண்டும்.
போராட்டக்காரர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அரசாங்கத்தின் இரட்டை நிலையை தோலுரிக்கக்கூடிய வகையிலும் அல்லது இனப்படுகொலையை அரசாங்க உறுப்பினர்கள் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் களத்தை அணுகியிருக்க வேண்டும். எனினும் போராட்டக்களம் குழப்பகரமாக மாறியதன் பின்னணியில் மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே காணப்படுகின்றது.
அரசாங்க உறுப்பினர்களை வெளியேறுமாறு எழுப்பப்பட்ட கோஷத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே கூறப்பட்டது. எனினும் போராட்டக்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வெகுஜன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் மதுபோதையிலிருந்ததாகவும் அவர்களே தமக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ‘அணையா விளக்கு’ போராட்டத்தை திசைதிருப்பி குழப்பவே சென்றிருந்தார்கள் என்ற நுண்ணிய அரசியலையே வெளிப்படுத்துகின்றது.
அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மக்கள் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட செய்தியின் பின்னரும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தமையும் அமைகின்றது. இதன் நுண்ணிய அரசியலை கையாளும் உத்தியை ‘அணையா விளக்கு’ போராட்டம் திட்டமிட தவறியுள்ளது. எதிர்காலங்களில் இதனையும் அணுகும் விதத்திலேயே ஈழத்தமிழர்கள் போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டி உள்ளது.
எனவே, வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழ் அரசியல் கலாசாரத்தின் பொதுப்பண்பாகவே காணப்படுகின்றது. எனினும் முன்னைய காலங்களில் வெகுஜனங்களின் எதிர்ப்பை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு ஈழத்தமிழர்களிடம் காணப்பட்டமையால்இ வெகுஜன நிகழ்வுகளின் எதிர்ப்பு தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது. இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையாக அமைந்திருந்தது.
எனினும் 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களினை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு இன்மையால் அல்லது உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்புகளின் பலவீனங்களால் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கள் தேர்தல்களில் பிரதிபலிக்கப்பட முடிவதில்லை. ஆதலால் வெகுஜன நிகழ்வுகளில் ஏற்படும் எதிர்ப்புக்களை அரசியல்வாதிகள் உதாசீனம் செய்பவர்களாகவே உள்ளனர். இதனூடாக வெகுஜன போராட்டங்களையும் மலினப்படுத்தும் செயற்பாடுகளையே அரசியல்வாதிகள் செய்யும் நிலைமைகளையே சமகாலத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் நம்பிக்கையீனமான அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளை தொடர்ச்சியாகவும் அதேவேளை தேர்தல்களில் பிரதிபலிப்பதனூடாக மாத்திரமே வெகுஜன போராட்டங்களை பாதுகாப்பதுடன், அரசியல்வாதிகளின் தான்தோன்றித் தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
https://thinakkural.lk/article/318755
1 month 4 weeks ago
பட மூலாதாரம்,TAU படக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டன கட்டுரை தகவல் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 19 ஜூலை 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஒலிகளை எழுப்பினால், பெண் அந்துப்பூச்சிகள் அந்த செடிகள் மீது முட்டையிடுவதைத் தவிர்த்தன என்பதற்கான ஆதாரத்தை முதல்முறையாக டெல் அவிவ் பல்கலைக் கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. செடிகள் அழுத்தத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தாலோ "கூச்சலிடுகின்றன" என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதலில் காட்டியது இந்தக் குழுதான். இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் வரம்புக்கு அப்பால் இருக்கின்றன. ஆனால் பல பூச்சிகள், வெளவால்கள் மற்றும் சில பாலூட்டிகளால் உணரமுடியும். "செடிகள் வெளிப்படுத்தும் ஒலிகளுக்கு ஒரு விலங்கு எதிர்வினையாற்றுவதை காட்டும் முதல் செயல்விளக்கம் இதுதான்," என்கிறார் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் யோஸி யோவெல். "இது இப்போதைக்கு ஊகம்தான். ஆனால், அனைத்து விதமான விலங்குகளும் செடிகளிடமிருந்து கேட்கும் ஒலிகளின் அடிப்படையில் மகரந்த சேர்க்கை செய்யவா, அதற்குள் ஒளிந்துகொள்ளவா அல்லது செடியை முழுமையாக உண்பதா போன்ற முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்." அந்துப்பூச்சிகள் செடிகளின் தோற்றத்திற்கு எதிர்வினையாற்றாமல் அவற்றின் ஒலிக்கு எதிர்வினையாற்றுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வாளர்கள் கவனமாக பரிசோதனைகளை மேற்கொண்டனர். இப்போது அவர்கள் பல்வேறு செடிகள் ஏற்படுத்தும் ஒலிகளையும் பிற இனங்கள் அந்த ஒலிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்வார்கள். "பல சிக்கலான செயல் - எதிர்செயல்கள் இருக்கக்கூடும் என நீங்கள் கருதக்கூடும், அதுவே முதல் படி," என்கிறார் பேராசிரியர் யோவெல். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு பேராசிரியர் லிலாக் ஹாடனியின் கூற்றுப்படி, வறட்சியான காலகட்டத்தில் தங்களது நீரை சேமித்து வைப்பது போன்ற தகவல்களை தாவரங்கள் ஒன்றுக்கொன்று ஒலி மூலம் பரிமாறிக் கொள்ள முடியுமா, அதற்கு பதிலளிக்க முடியுமா என்பதும் ஆய்வின் மற்றொரு அம்சமாக இருக்கும். "இது ஒரு உற்சாகமூட்டும் கேள்வி," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு தாவரம் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதைப் பற்றி மிகவும் அக்கறை கொள்ளும் உயிரினம் மற்ற தாவரங்கள்தான், அவை பல வழிகளில் பதிலளிக்கலாம்." செடிகள் புலன் உணர்வு கொண்டவை அல்ல என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள். சுற்றுச்சூழல் மாறுபாட்டால் தாவரங்களில் ஏற்படும் இயற்பியல் விளைவுகளே ஒலியை உண்டாக்குகின்றன. இந்த ஒலியை கேட்கக்கூடிய ஆற்றல் படைத்த விலங்குகளுக்கும், பிற தாவரங்களுக்கும் இந்த சத்தங்கள் பயனுள்ளவையாக இருக்கலாம் என்பதைத்தான் தற்போதைய கண்டுபிடிப்பு காட்டுகிறது. பேராசிரியர் ஹடானியின் கூற்றுப்படி அதுதான் உண்மையென்றால், செடிகளும் விலங்குகளும் தங்களது பரஸ்பர பயன்களுக்காக ஒருங்கிணைந்த பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த ஒலிகளை உருவாக்கவும் கவனிக்கவும் தேவையான ஆற்றலை பெற்றுள்ளன. "தங்களுக்கு பயனளிக்கக் கூடும் என்றால் அதிக கூடுதல் ஒலிகள் அல்லது உரத்த ஒலிகளை ஏற்படுத்தக்கூடிய பரிணாம வளர்ச்சியை தாவரங்கள் அடையக் கூடும். இந்த பெரும் தகவல்களை உள்வாங்கிக்கொள்ள வசதியாக விலங்குகளின் கேட்கும் திறனும் வளர்ச்சியடையலாம். "இது பரந்த, ஆய்வு செய்யப்படாத துறை- ஒரு உலகமே கண்டறியப்பட காத்திருக்கிறது." இந்த பரிசோதனையில், பொதுவாக குஞ்சுகள் பொரித்தவுடன் உண்ண வசதியாக தக்காளி செடிகளில் முட்டையிடும் பெண் அந்துப்பூச்சிகள் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர். அந்துப்பூச்சிகள், குஞ்சுகளுக்கு சரியாக ஊட்டமளிக்கக் கூடிய ஆரோக்கியமான தாவரத்தைத் தேடிப் பிடித்து முட்டியிடும் என்பது ஆய்வின் அனுமானம். எனவே, நீரிழப்பு மற்றும் அழுத்தத்தில் இருப்பதாக தாவரம் சமிக்ஞை செய்யும் போது, அந்துப்பூச்சிகள் இந்த எச்சரிக்கையை கவனித்து, அதில் முட்டையிடுவதைத் தவிர்க்கிறதா என்பதே கேள்வியாக இருந்தது. செடிகள் உருவாக்கிய ஒலிகள் காரணமாக அந்துப்பூச்சிகள் முட்டையிடவில்லை என்பதுதான் பதிலாக கிடைத்தது. இந்த ஆய்வு eLife இதழில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gd4j4prggo
1 month 4 weeks ago
பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு

காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.
கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார்.
நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர்.
Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர்.
காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள்.
காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
https://thinakkural.lk/article/319073