
பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்.
கட்டுரை தகவல்
சிராஜ்
பிபிசி தமிழ்
27 செப்டெம்பர் 2025, 01:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 27 செப்டெம்பர் 2025, 02:01 GMT
(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.)
'அடுத்த ஸ்பீல்பெர்க்'
ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு தலைப்புடன், இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இடம்பெற்றிருந்தார்.
எந்தவொரு இயக்குநருக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம், காரணம் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்களால் மதிக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ், ஷிண்ட்லர்'ஸ் லிஸ்ட், ஈ.டி என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர்.
அது மட்டுமல்லாது, மனோஜ் நைட் ஷியாமளனின் முன்மாதிரியும் அவரே.
மனோஜ் நைட் ஷியாமளனின் திரைப்பயணம் குறித்த பதிவான 'The Man Who Heard Voices' புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் பாம்பெர்கர் இந்த சம்பவம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார்.
"அந்த அட்டைப்படம் வெளியான பிறகு, ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய மனோஜ், 'நியூஸ்வீக் இதழில் அந்தத் தலைப்பை எழுதியவர்கள் அறியாவிட்டாலும் கூட எனக்கு நன்றாகத் தெரியும், நான் அடுத்த ஸ்பீல்பெர்க் அல்ல' எனக் கூறினார்".

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படம்.
இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில், ஆகஸ்ட் 6, 1970ஆம் ஆண்டு பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். அவரது தந்தை, டாக்டர் நெல்லியாட்டு சி. ஷியாமளன், மாஹேவைச் சேர்ந்தவர், தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். மனோஜ் பிறந்த சில வாரங்களில், அவரது குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு புலம்பெயர்ந்தது.
பென்சில்வேனியாவில் வளர்ந்த போது தங்களைப் போல ஷியாமளனும் ஒரு மருத்துவர் ஆவார் என்றே அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர்.
"அப்பா, நான் நியூயார்க்கில் உள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். அதுதான் சிறந்த திரைப்படப் பள்ளி. எனக்கு உதவித்தொகையும் கிடைக்கும்' என்று என் தந்தையிடம் கூறினேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு நான் என் அம்மாவிடம் சொன்னேன், அவருக்கு சிறுவயதில் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்." என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் ஷியாமளன்.
'தி சிக்ஸ்த் சென்ஸ்'

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்'
தனது 21வது வயதில், 'பிரே வித் ஆங்கர்' (1992) என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் ஷியாமளன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. ஆனால் அந்தப் படம், பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது.
"என்னுடைய முதல் திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும். நான் அதில் இந்திய அமெரிக்கராக நடித்திருப்பேன். ஆனால் அந்தப் படத்தை என் குடும்பத்தரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அப்போது என் அப்பா ஒரு ஆலோசனை வழங்கினார், 'உன் படத்தில் வெள்ளையர்களை நடிக்க வை, அதன் பிறகு பார்' என்றார். அதை பின்பற்றினேன், வெற்றி கிடைத்தது" என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் மனோஜ் நைட் ஷியாமளன்.
இயக்குநர் ஷியாமளனை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால், அது 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' (The Sixth sense).
'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என இத்திரைப்படத்தில் கோல் சியர் என்ற 9 வயது சிறுவன் பேசும் வசனம் இன்றுவரை அமெரிக்காவில் மிகவும் பிரபலம்.
"சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் வெளியானவுடன், 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என்ற வரி டி-சர்ட்களில், விளம்பரங்களில், மேடை நாடகங்களில், புத்தகங்களில் என எங்கும் இருந்தது. இரவில் மக்கள் உணவகங்களில் அமர்ந்துகொண்டு, 'நானும் இறந்தவர்களை பார்க்கிறேன்' என கிசுகிசுப்பார்கள்." என்று 2006இல் வெளியான 'The Man Who Heard Voices' புத்தகத்தில் விவரித்துள்ளார் மைக்கேல் பாம்பெர்கர்.

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, 1991இல் சென்னையில் நடைபெற்ற 'பிரே வித் ஆங்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷியாமளன்.
குறிப்பாக 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்தின் எதிர்பாரா முடிவு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்றும், மனோஜ் நைட் ஷியாமளனுக்கென ஒரு பிரத்யேக திரைப்பட பாணியையும், அவரது திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் இப்படம் உருவாக்கியது என்றும் மைக்கேல் பாம்பெர்கர் குறிப்பிடுகிறார்.
"உலகளாவிய டிக்கெட் விற்பனை, டிவிடி விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் சாதனை படைத்தது."
"மனோஜ் நைட் ஷியாமளன் அதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். அவர் நடிக்கவும் செய்திருந்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்திற்குப் பிறகு, மக்கள் நைட்டை 'அடுத்த ஹிட்ச்காக்' என்று அழைத்தனர், அவருக்கு அப்போது முப்பது வயது கூட ஆகவில்லை. நடிகர்களிடம் திறன்பட வேலை வாங்கும் ஒரு இயக்குனராக அவர் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஆக்ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸிடமிருந்து ஒரு சிறப்பான நடிப்பை அவர் பெற முடிந்ததால். 1999இல், நைட் ஒரு 'ராக் ஸ்டார்' போல மக்களால் கொண்டாடப்பட்டார்." என மைக்கேல் பாம்பெர்கர் எழுதியுள்ளார்.
ஹாலிவுட்டில் தொடர் வெற்றிகள்

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின.
'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு, ஷியாமளன் இயக்கி அடுத்தடுத்து வெளியான, அன்பரேகபிள் (Unbreakable- 2000), சைன்ஸ் (Signs- 2002), தி வில்லேஜ் (The Village- 2004) ஆகிய மூன்று திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன என மைக்கேல் பாம்பெர்கர் கூறுகிறார்.
'இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் திரைக்கதைத் திருப்பங்களை உள்ளடக்கிய உளவியல் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படங்கள்'- இதுவே மனோஜ் நைட் ஷியாமளனின் பாணி என்ற பிம்பம் உருவானது.
"விமர்சகர்கள் தான் அத்தகைய பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களின் இறுதியிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைத்து நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு தான் எனக்கு பயமே. அதனால் தான் லைஃப் ஆஃப் பை (Life of Pi) போன்ற திரைப்படத்தை இயக்குவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஷியாமளன்.
ஆங் லீ இயக்கத்தில் 2012இல் வெளியான 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் நாயகன் இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்தவனாக இருப்பான். லைஃப் ஆஃப் பை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு ஒருமுறை கிடைத்ததாகவும் ஷியாமளன் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.
எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும்

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, 'அடுத்த ஸ்பீல்பெர்க்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.
'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. ஆனால், அதற்கு அடுத்த நான்கு திரைப்படங்கள் 'தி லேடி இன் தி வாட்டர்' (2006), 'தி ஹாப்பனிங்' (2008), 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' (2010), 'ஆஃப்டர் எர்த்' (2013) ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.
தனது வழக்கமான 'எதிர்பாரா திருப்பங்கள்' என்ற பாணியிலிருந்து சற்று விலகியே அவர் இந்த நான்கு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார்.
குறிப்பாக 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்திற்காக, மோசமான திரைப்படங்களை பகடி செய்து வழங்கப்படும் 'கோல்டன் ராஸ்பெர்ரி விருது' வழங்கப்பட்டது. 'மோசமான இயக்குநர்', 'மோசமான துணை கதாபாத்திரம்' இரு விருதுகள் மனோஜ் நைட் ஷியாமளனுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, 'தி ஹாப்பனிங்' திரைப்படத்திற்கு மோசமான திரைப்படம், மோசமான நடிகர், மோசமான இயக்குநர், மோசமான திரைக்கதை என நான்கு 'கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள்' வழங்கப்பட்டன.
'அடுத்த ஸ்பீல்பெர்க்', 'அடுத்த ஹிட்ச்காக்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.
"ஒரு திரைப்படத்தை எழுதும்போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் யோசித்தே எழுத வேண்டும். 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்தில் அதை நான் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்தேன். ஆனால் இன்றும் கூட மக்கள் அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, மனோஜ் நைட் ஷியாமளனின் தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர்.
'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்' என்ற பிரபல அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆசியர்களின் கதாபாத்திரங்களுக்கு 'வெள்ளையின' நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆனால், இதை இயக்குநர் ஷியாமளனும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது.
அதற்கு பிறகு, ஷியாமளன் இயக்கத்தில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான 'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது.
நடிகர் வில் ஸ்மித் 2015இல் அளித்த ஒரு நேர்காணலில், "'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் என் திரை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி. என்னுடைய பையனையும் அதில் நடிக்க வைத்தது தான் இன்னும் வேதனையானது. நான் ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதையே நிறுத்திவிட்டேன்." எனக் கூறியிருந்தார்.
'தி விசிட்' மீட்டுக்கொடுத்த அடையாளம்

பட மூலாதாரம், @MNightShyamalan
படக்குறிப்பு, 2015இல் வெளியான 'தி விசிட்' திரைப்படம்
"என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'மெயின்ஸ்ட்ரீம்' திரைப்பட பாணியில் பொருந்திப் போவதற்கு சில திரைப்படங்களை எடுத்தேன். அது தவறு என பின்னர் புரிந்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்கள் அவை அல்ல என்பதும் புரிந்தது" என தனது தோல்விப் படங்கள் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.
தனக்கு கிடைத்த தோல்விகளால், தனது அடுத்த திரைப்படத்தை சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்த ஷியாமளன், ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை இயக்கினார்.
2015இல் வெளியான 'தி விசிட்' என்ற அந்த திரைப்படம் மூலம் மீண்டும் தனது 'எதிர்பாரா திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ்' என்ற பாணிக்கு திரும்பினார் ஷியாமளன்.
தங்கள் அம்மா வழி, தாத்தா- பாட்டியின் பண்ணை வீட்டில் 5 நாட்கள் விடுமுறையைக் கழிக்க, பெக்கா ஜேமிசன் என்ற சிறுமியும் அவளது தம்பி டைலரும் வருகிறார்கள். முதல் முறையாக தங்கள் தாத்தா- பாட்டியை சந்திக்கும் பெக்கா மற்றும் டைலர், அவர்களுடன் தங்கும்போது சில அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் 'தாத்தா பாட்டி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையையும் கண்டறிகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.
5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட 'தி விசிட்' திரைப்படம், 98.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய அளவிலான வசூலைக் குவித்தது.
அதன் பிறகு, அவர் எடுத்த 'ஸ்ப்ளிட்' (2016), 'கிளாஸ்' (2019) திரைப்படங்கள் மீண்டும் ஷியாமளனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தின.
"ஹாலிவுட்டில் என்னைப் போல புகழையும் ட்ரோல்களையும் பார்த்த இயக்குநர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை. 'தி விசிட்' திரைப்படம் எடுக்கும்போது, 'நான் அனைத்தையும் இழக்கப் போகிறேன்' என்ற பயமும் இருந்தது, மறுபுறம் காமெடியும் ஹாரரரும் கலந்த ஒரு கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வெற்றி என்பது எப்போதும் ஒரு கத்தி முனையில் நிற்பது போல தான்" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.
மனோஜ் நைட் ஷியாமளன், இந்திய இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
"இந்தியர்கள் என்றாலே காதல், 5 பாடல்கள் அல்லது நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் நிலவும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் மிக எளிய த்ரில்லர் கதைகளால் பிரபலமடைந்தவர் மனோஜ். 'சைன்ஸ்', 'தி வில்லேஜ்' போன்ற திரைப்படங்களில், நம் நாட்டு கதைகளையே ஹாலிவுட்டுக்கு ஏற்றார் போல வடிவமைத்திருப்பார். 'ஒரு இந்தியராக இருப்பது' என்ற தடையையே தனது பலமாக மாற்றி ஹாலிவுட்டில் வெற்றி பெற்றவர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்தியக் கலைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி தான்" என்று ஜா.தீபா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c1ed01yv466o