NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும்
August 20, 2025
— கருணாகரன் —
‘வரலாற்றில் ஒரு மாற்றுத் தரப்பு‘என்ற அறிவிப்போடும் அடையாளத்தோடும் அதிகாரத்தில் – ஆட்சியில் இருக்கிறது NPP.
அது மாற்றுத் தரப்பா, இல்லையா?
அது பிரகடனப்படுத்தியதைப் போலமுறைமை மாற்றத்தை (System change) மெய்யாகவே நடைமுறைப்படுத்துகிறதா?
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாற்றங்களை நிச்சயமாகச் செய்யுமா? செய்யாதா?
NPP சுயாதீனமாக இயங்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது அதை JVP கட்டுப்படுத்தித் தன்னுடையபிடியில் வைத்திருக்கிறதா?
அல்லது NPP யும் ஏனைய ஆட்சியாளர்களைப்போலத்தான்இயங்குகின்றதா; சிந்திக்கின்றதா? அதை மீறிச்செயற்படுமா? என்ற சந்தேகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு.
ஆனாலும் ஆட்சியில் (அதிகாரத்தில்) பெரும்பான்மை பலத்தோடு NPP யே இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய – மறுக்க முடியாத – உண்மை. இந்த உண்மையிலிருந்தே நாம் விடயங்களை அணுக வேண்டும்.
இந்த உண்மையை ஏற்றுக்கொண்டபடியால்தான் இந்தியா பல வழிகளிலும் NPP அரசாங்கத்தோடு ஒத்துழைக்கிறது. அநுர குமார திசநாயக்கவுக்கு புதுடெல்லி அளித்த உற்சாகமான வரவேற்பிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியா மட்டுமல்ல, சீனா, மேற்குலக நாடுகள், அரபுதேசங்கள் எல்லாம் NPP அரசாங்கத்துடன் சீரானஉறவையே கொண்டிருக்கின்றன. IMF, ADB என சர்வதேச நிதி நிறுவனங்களும் UN போன்ற சர்வதேச அமைப்புகளும் NPP ஆட்சியுடன் இணைந்தே பயணிக்கின்றன.
விருப்பமோ விருப்பமில்லையோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புத்தான் ஆட்சியிலிருக்கும். அந்தத் தரப்புடன்தான் தொடர்பு கொள்ள முடியும். அதனோடு இணைந்தே எதையும் செய்ய முடியும்.
பெரும்பான்மை மக்கள் (இந்தப்பெரும்பான்மை வேறு. சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களிலும் கணிசமானவர்கள்) NPP யையே ஆட்சியமைப்பதற்குத் தெரிவு செய்துள்ளனர். ஆகவே அந்த மக்களுடைய தெரிவின் அடிப்படையிலே, அதற்கு மதிப்பளித்தே இந்தத் தரப்புகள் எல்லாம் NPP ஆட்சியுடன் தொடர்புறுகின்றன; தம்முடைய வேலைகளைச் செய்கின்றன. இதைத் தவிர்க்க முடியாது.
இங்கே இந்தத் தரப்புகள் கவனத்திற் கொள்வது, தம்முடைய தொடர்பைப் பேணுவதையும் தம்முடைய வேலைகளைச் செய்வதையும் பற்றியே.
இதற்காக NPP அரசாங்கத்தை – ஆட்சியிலிருக்கும் தரப்பை -எப்படிக் கையாள்வது என்பதையே சிந்திக்கின்றன. அதற்கப்பால் எதைப்பற்றியும் அவை சிந்திக்கவில்லை.
ஆனால், தமிழ் பேசும் தரப்புகளோ தமக்கு முன்னே உள்ள துலக்கமான உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளன. அல்லது அதை மறுக்கின்றன. அதனால் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் மாறாகவே சிந்திக்கின்றன; செயற்படுகின்றன.
என்பதால்தான் NPP ஐ எதிர்ச்சக்தியாகவே பிரகடனப்படுத்தி வைத்துக்கொண்டு, அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இதற்கு முன்னிருந்த இனவாதத் தரப்புகளான UNP, SLFP, SLPP போன்றவற்றோடு இணங்கியும் பிணங்கியும் உறவைக் கொண்ட கட்சிகள், NPP யோடு மட்டும் விலக்கம் கொள்கின்றன. ஒப்பீட்டளவில் UNP, SLFP, SLPP ஆகியவற்றை விட NPP இனவாதக் கட்சியல்ல. மட்டுமல்ல, முன்றேற்றச் சிந்தனைகளையும் ஊழல் எதிர்ப்பையும் அதிகாரக் குறைப்பையும் கொண்ட சக்தி. சுருக்கமாகச் சொன்னால், மற்றவற்றை விட நெருக்கம் கொள்ளக்கூடிய தரப்பு – சக்தி. என்பதால்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் NPP க்கு தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர். சிங்கள மக்களும் கூட மாற்றத்தைக் குறித்த நம்பிக்கையை NPP மீதே வைத்துள்ளனர். என்பதால்தான் அவர்கள் NPP க்குப் பேராதரவை வழங்கினர்.
இங்கே பிரச்சினை என்னவென்றால், மக்களின் உணர்வுக்கும் தெரிவுக்கும் வெளியே – மாறாக தமிழ், முஸ்லிம், மலைகக் கட்சிகள் நிற்கின்றன. காரணம், இவற்றின் அரசியல் இருப்புக்கு NPP சவாலை உருவாக்கியதே. இதை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்வந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொண்ட விதமும் அதற்குப் பின் சபைகளை அமைக்கும்போது இந்தத் தமிழ்பேசும் கட்சிகள் நடந்து கொண்ட முறையும் தெளிவாகவே வெளிப்படுத்தின.
இதனால் அரசாங்கத்துக்கு (ஆட்சிக்கு) முற்றிலும் வெளியிலேயே தமிழ்பேசும் தரப்புகள் நிற்கின்றன. அரசாங்கத்துக்கு வெளியே என்பதை, ‘அரசாங்கத்தை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில்‘ என்றுபொருள் கொள்ள வேண்டும்.
இங்கே ஒரு ஆழமான உண்மையை உணருவது அவசியம்.
சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக இப்போதுதான் தமிழ்பேசும் தரப்புகள் முற்றாகவே ஆட்சிக்கு வெளியே நிற்கின்றன. இதற்கு முன்பெல்லாம் எப்படியாவது சில கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கும். அது சரியானதா பிழையானதா என்பதல்ல இங்கே உள்ள விடயம். இங்கே கவனத்திற்குரியது, அப்படிச் சிலகட்சிகளாவது அரசாங்கத்தோடு (ஆட்சித்தரப்போடு) இணைந்து நின்றதால் – பங்கேற்றதால் – அந்தந்தச் சமூகங்கள் முழுச்சுமையிலிருந்து அல்லது முழுமையான நெருக்கடியிலிருந்து தப்பியிருந்தன.
இப்போது தமிழ்பேசும் தரப்புகள் மொத்தமாக வெளியே – ஆட்சித்தரப்புக்கு எதிராக நிற்பதால், ஒட்டுமொத்தத் தமிழ்பேசும் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன.
NPP எந்தளவுக்கு நியாயத்தோடும்விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ளுமோ அதைப்பொறுத்தே இந்தச் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் பேணப்படும். இதில் NPP யில் உள்ள தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் NPP ஐ ஆதரிக்கும் தமிழ்பேசும் சமூகத்திலுள்ள நபர்களும் ஏதாவது செல்வாக்கைச் செலுத்தினால் சற்றுக் கூடுதலாக ஏதாவது நடக்கலாம்.
ஆனால், அதற்குரிய வல்லமையை அவர்களிடம் காணமுடியவில்லை. ஆகவே தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கட்சிகளும் NPP யுடன் கொள்ளும் தொடர்பும் உறவும் அதைக் கையாளும் முறையுமே இந்தச் சமூகங்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும்.
ஆனால், NPP ஐக் கையாளத்தெரியாமலே – அதற்கான வல்லமை இல்லாமலேயே தமிழ்பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உள்ளன. (இதே நிலையிற்தான் NPP யும் உள்ளது. இதைப்பற்றிப் பின்னர் சற்றுவிரிவாகப் பார்க்கலாம்).
ஆக, தமக்கு முன்னே உள்ள உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளத் தவறினால் அல்லது புரிந்து கொள்ள முடியாமல் போனால் அது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும்.
இதுவே தமிழரின் அரசியலில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் விடுதலைப்புலிகள் பகைத்துக்கொண்டதும் இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள் தொடர்ச்சியாகவே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வதும் இவ்வாறான கையாள்கையின் தவறுகளாலேயே.
“இலங்கையின் ஆட்சியாளர்கள் இனவாதத்துக்கு அப்பால் எப்போது சிந்தித்தனர்? இனவாதத்துக்கு வெளியே வருவதற்கு யார் தயாராக இருந்தனர்? அப்படி யாராவது வந்திருந்தால் அதை வரவேற்றிருப்போமே!” என்று யாரும் இதற்குப் பதில் அளிக்கக் கூடும்.
இலங்கையின் சிக்கலான இனத்துவ அரசியற் சூழலில், இனவாதமும் மதவாதமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஆட்சி முறையில், இந்தியாவும் தமிழ்நாடும் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆகவே தமிழர்களை விட தாம் சிறுபான்மையினர் என்று சிந்திக்கும் தாழ்வுணர்ச்சியைக் கொண்ட சிங்களத் தரப்பிடமிருந்து முழு நிறைவான அதிகாரப் பகிர்வை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம்.
அரசியல் யதார்த்தத்தின்படி அந்த நியாயத்தை படிப்படியாகவே உணரச் செய்ய முடியும். படிப்படியாகவே வென்றெடுக்க முடியும். அதற்கு முடிவற்ற அரசியல் வேலைத்திட்டங்களும் கூர்மையான நுண்திறனும் வலிமையான உத்திகளும் உச்ச நிதானமும் தேவை. முகப்புத்தகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அள்ளிச் சொரியும் குப்பைகளால் அதைச் செய்யவே முடியாது.
அரசியலில் ‘கையாள்கை‘ என்ற சொல்லை Handling, Diplomacy, Strategy என்றே கொள்ளவேண்டும். இவை அனைத்தும் கலந்ததாகவே ‘கையாள்கை‘யின் செயற்பாட்டுத் தன்மை இருக்கும்.
தமிழரின் அரசியலில் ‘கையாள்கை‘ என்பது படுதோல்வியான விசயம். இப்பொழுது இந்தச் சுழிக்குள் மலையக, முஸ்லிம் கட்சிகளும் சிக்கியுள்ளன. இதற்குக்காரணம், தேசியம் (Nationalism) என்பதை இவை தவறாகப் புரிந்துகொண்டு, அதை இனவாதமாக(Racism) மடைமாற்றம்(Metamorphosis) செய்திருப்பதேயாகும்.
இந்தத் தவறை நீண்டகாலமாவே செய்தது தமிழ்த்தரப்பே. பின்னாளில் இதில் முஸ்லிம், மலையகச் சக்திகளும் இணைந்து கொண்டன. என்பதால்தான் இவற்றினால் அரசோடு பேசவே முடியாதிருக்கிறது. இதனால் இப்பொழுது அனைத்தும் எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதை அந்தக் கட்சியின் தலைவர்கள் மறுக்கலாம். ஆனால், உண்மை இதுதான். காலம் கடந்து இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இங்கே இன்னொரு கடினமான – அவசியமான உண்மையைக் கவனிக்க வேண்டும்.
NPP என்பது தனியே ஆட்சியை நடத்தும் தரப்போ கட்சியோ மட்டுமல்ல. அது பெரும்பான்மையான மக்களின் தரப்பாகும். முந்திய ஆட்சித்தரப்புகளைப் போலன்றி, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் செல்வாக்கையும் (ஆதரவையும்) பெற்ற தரப்பாக உள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் அது அறுதிப் பெரும்பான்மையையும் கொண்டுள்ளது. அதுதான் சர்வதேச சமூகத்தின் பாதியுமாகும்.
எப்படியென்றால், அரசாங்கத்தைக் கடந்து எந்த வெளிச்சக்தியும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது. அப்படித் தலையிட்டாலும் அதற்கு வரையறைகள் உண்டு. ஆகவே NPP யுடன் அல்லது அரசாங்கத்துடன் எதிர்த்து நிற்பதோ விலகி நிற்பதோ சர்வதேச சமூகத்தோடும் விலகி நிற்பதாகவே யதார்த்தத்தில் அமையும்.
அரசாங்கத்தை – ஆட்சித்தரப்பைப் பகைத்துக் கொண்டு வெளிச்சமூகம் அரசுக்குவெளியே நிற்கும் தமிழ்பேசும் தரப்போடு உருப்படியான எந்தவேலைகளையும் செய்யாது. வேண்டுமானால் வழமையைப் போலச்சம்பிரதாயமாக அவ்வப்போது சந்திப்புகளைச் செய்யலாம். ஏதாவது உரையாடலாம். நடைமுறையில் அவற்றினால் எந்தப் பயனும் குறிப்பிடக்கூடிய நன்மைகளும் கிட்டாது. கடந்த காலச் சந்திப்புகளும் படமெடுப்புகளும் இதைத் தெளிவாகவே உணர்த்துகின்றன.
ஆகவே NPP யின் ஆட்சியை எதிர்த்து நிற்பதென்பது, ஒரேநேரத்தில் அரசாங்கம், வெளிச்சமூகம், பெரும்பான்மை மக்கள் ஆகிய மூன்று தரப்பையும் எதிர்த்து நிற்பதாகும்.
அப்படியென்றால், NPP என்னசெய்தாலும், எப்படிச்செயற்பட்டாலும் அதைக்கண்மூடித்தனமாக – எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதா? என்ற கேள்வியை ஒரு குண்டாக யாரும் தூக்கிப் போடலாம்.
NPP இன்னும் பொறுப்புக் கூறும் ஒரு ஆட்சித் தரப்பாகமாறவில்லை என்பது உண்மையே. அப்படிமாறியிருந்தால், ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல, அரசாங்கத்தை நிர்வகிக்கும் – ஆட்சியை நடத்தும் – தரப்பு, மாற்றங்களைச் செய்ய விரும்பும் தரப்பு, மக்கள் நலனை முன்னிறுத்தும் தரப்பு, பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் தரப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண விரும்பும் தரப்பு, ஒட்டுமொத்தமாக ஒரு மாற்றுச்சக்தி என NPP பொதுவாகக்கருதப்படுவதால் தமிழ்பேசும் தரப்புகளை – தமிழ்பேசும்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை NPP இணக்கமான முறையில் அணுகியிருக்கவேண்டும்.
ஏனென்றால் NPP இப்பொழுது ஒரு அணியோ கட்சியோ அல்ல. அது ஆட்சியிலிருக்கும் தரப்பு. ஆட்சியிலிருக்கும் தரப்பு அதற்குரிய பொறுப்போடும் கடமைகளோடும் கண்ணியத்தோடும் இருக்கவேண்டும். அது கட்சி ஒன்றைப்போல விருப்பு வெறுப்பு, லாப நட்டக் கணக்குப் பார்த்துச்செயற்படக் கூடாது. கட்சியாகச்சுருங்கிச் செயற்பட முடியாது.
ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை அப்படித் தவறாக (கட்சியாக) செயற்பட்டதன் விளைவே கடந்தகாலத் துன்பியல் வரலாறும் இலங்கையின் வீழ்ச்சியுமாகும்.
இந்தப்படிப்பினைகளிலிருந்து NPP உண்மையாகவே எதையாவது படித்திருந்தால், அதுகட்சி என்ற உணர்விலிருந்துவிடுபட்டு, பொறுப்புடைய அரசாங்கத் தரப்பாகவே தான் உள்ளேன் என்று கருதிச்செயற்படும். தன்னுடைய பொறுப்புக் கூறலை, இணக்க நடவடிக்கைளை, மாற்றத்துக்கான செயற்பாடுகளை, தீர்வுக்கான முயற்சிகளை ஆரம்பிக்கும்.
இங்கும் ஒரு வேடிக்கையான – துயரமான உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்றவற்றோடு சிநேகபூர்வமான உறவைக் கொண்டிருந்த அநுரவும் NPP யும் ஆட்சி பீடமேறியபின் எதிர்மனோபாவத்தோடு அணுகும் நிலை தோன்றியுள்ளது. அப்படித்தான் ஆட்சி அமைப்பதற்கு முன், நட்புடன் கைகுலுக்கிய மேற்படி தரப்புகள் இப்பொழுது முகத்தை மறுவளமாகத் திருப்பிக் கொண்டுள்ளன. இந்த முட்டாள்தனத்தை (அறியாமையை) என்னவென்று சொல்வது?
ஆகவே இந்த இருளிலிருந்து ஒவ்வொரு தரப்பும் விலகி, ஒளியை நோக்கிப் பயணிக்க வேண்டும். இதில் கூடுதல் பொறுப்பு அரசாங்கத்தை நிர்வகிக்கும் NPP க்கு உண்டு.
பொறுப்புக் கூறல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதற்கான, காயங்களை ஆற்றக் கூடிய, எதிர் முகாம்களை இணக்கத்துக்குக் கொண்டுவரக்கூடிய, அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய சிறப்பான ஒரு முன்னாரம்ப நடவடிக்கையாகும். (Accountability is a great first step towards finding solutions to problems, healing wounds, bringing opposing camps to reconciliation, and giving hope to all).
அப்படிப் பொறுப்புக் கூறும் தரப்பாக, பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் தரப்பாக NPP செயற்படுமாக இருந்தால், அது எத்தகைய அரசியல் தவறுகளைத் தமிழ்பேசும் தரப்புகள் விட்டாலும் அதைக் கடந்து, அவற்றைச்சுமுகமாக்க முயன்றிருக்கும். இந்த ஓராண்டு ஆட்சிக்காலத்துள் அனைத்துத் தமிழ்பேசும் தரப்போடும் குறைந்தபட்சம் ஒரு சம்பிரதாயபூர்வமான சந்திப்பையாவது மேற்கொண்டிருக்கும். அதாவது பொருத்தமான அணுகுமுறையின் மூலம் தமிழ்பேசும் தரப்புகளைக் கையாண்டிருக்கும். அதில் வெற்றி கொண்டிருக்கும். ஒரு மாற்றுச் சக்தியானால் அதுவே நிகழ்ந்திருக்க வேண்டியது.
NPP யின் அழைப்பையும் நல்லெண்ண முயற்சிகளையும் தமிழ்பேசும் தரப்புகள் புறக்கணித்தால் அல்லது தவிர்த்தால் அது NPP க்கே மதிப்பைக் கூட்டும். பதிலாக தமிழ்பேசும் தரப்புகளுக்கு நெருக்கடியை உண்டாக்கும். குறிப்பாக அரசாங்கத்தின் அழைப்பையும் நல்லெண்ணத்தையும் ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பும்.
இப்பொழுது கூட இரண்டுதரப்புக்கும் (அரசாங்கம் {NPP} – தமிழ்பேசும் தரப்புகள்) காலம்கடந்து விடவில்லை. பரஸ்பரம் இரண்டு தரப்பும் சுமுகம் கொள்வதற்கான வழிகளைத்தேடலாம்.
NPP ஏற்றுக்கொள்ளவே முடியாத சக்தி என்றால், ஐ.தே.கவை அல்லது சு.கவை அல்லது பெரமுனவை அல்லது ஐக்கியமக்கள் சக்தியை ஏற்றுக்கொள்ளப்போகிறீர்களா? இவைதானே முன்பு ஆட்சியில் இருந்தன. இவற்றோடு குறைந்தளவிலேனும் உரையாடப்பட்டது. உறவாடப்பட்டது. ஏற்பட்ட விளைவு?
ஐ.தே.க, சு.க, பெரமுன, ஐக்கியமக்கள் சக்தி போன்றவற்றை விட NPP ஆபத்தானதா?
NPP தவறு என்றால் அடுத்ததெரிவு என்ன?
அதைப்போல தமிழ் பேசும் சக்திகளைப் புறக்கணித்துவிட்டு, இந்த நாட்டில் எத்தகைய தீர்வை எட்ட முடியும்? எத்தகைய முன்னேற்றத்தை உருவாக்கலாம்?
இந்த நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால், அது தனியே NPP யால் மட்டும் நிறைவேறக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினதும் அனைத்துச் சமூகங்களினதும் பங்களிப்புடன்தான் ஏற்படக்கூடியது. அதற்கான கதவுகளை (வாசல்களை) திறக்கவேண்டிய பொறுப்பு Responsibility (கடப்பாடு – Obligation) அனைவருக்கும் உண்டு.
“ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“
பாரதி பாடல் சொல்கின்ற இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைச் சமூகங்கள் தங்களுக்கிடையில் இணக்கம் கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணையவில்லை என்றால். இலங்கையில் பன்மைத்தன்மைக்கான இடமில்லை என்றால், அந்திய சக்திகள்(வெளியார்) (The forces of darkness – outsider) ஆதிக்கம் செய்யவே வழியேற்படும். அது இலங்கையை வெளியாரிடம் அடிமைப்படுத்துவதாகவே அமையும்.
என்ன செய்யப்போகிறோம்?
https://arangamnews.com/?p=12262