3 weeks 2 days ago
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை - ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை Published By: Vishnu 16 Feb, 2026 | 10:47 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளை இப்புதிய வரைவு எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றியும், இவ்வரைவு குறித்த பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் தமக்கு விளக்கமளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்புதிய சட்டவரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் சோல், வலுகட்டாயத் தடுத்துவைப்பு தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் பிரதித்தலைவர் மத்தியூ கில்லெற், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் தலைமை அறிக்கையாளர் கேப்ரியெல்லா சிற்ரொனி, சட்டவிரோத மற்றும் வலுகட்டாய தண்டனை வழங்கல்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மொரிஸ் ரிட்போல்-பின்ஸ், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர், தனியுரிமைக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அனா பிரையன் நௌக்ரெரெஸ் மற்றும் சித்திரவதைகள், மிகமோசமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வட்ஸ் ஆகிய எழுவரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கூட்டாக அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது; உங்களது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிக்காட்டும் வகையிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதில் மேற்கொள்வதற்கென கடந்த 2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதிலும், பொதுமக்களின் கருத்தறியும் நோக்கில் புதிய வரைவை வெளியிட்டதிலும் உங்களது அரசாங்கம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை பெரிதும் வரவேற்கிறோம். அதேபோன்று சட்டவாட்சி பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படவேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் சில சரத்துக்களின் ஊடாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டப்பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளமை என்பன உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டுகிறோம். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்பதுடன், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் தயாரிக்கப்படவில்லை. குறிப்பாக இச்சட்டவரைவின் 3 ஆம் பிரிவில் 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை விட முன்னேற்றகரமானதாக இருப்பினும், இதுவும் மிகப்பரந்துபட்டதாகவும் சர்வதேச நியமங்களுக்கு உட்படாததாகவுமே காணப்படுகிறது. இவ்வாறான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள் திட்டமிடப்படாத எதிர்மறை விளைவுகளுக்கும், திட்டமிடப்பட்ட வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கும் வழிகோலும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 15(1) ஆம் சரத்தின் பிரகாரம் குற்றவியல் சட்டங்கள் மிகவும் 'குறிப்பானதாக' இருக்கவேண்டும். அதனூடாகவே எவ்வாறான நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாகக் கருதமுடியும் என்பது குறித்தும், அவ்வாறான குற்றங்களைப் புரிவதனால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்தும் தெளிவான புரிதலை ஏற்படுத்தமுடியும். இருப்பினும் இத்தகைய விரிவான வரைவிலக்கணமானது சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கும், அதன்விளைவாக அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும். அதேவேளை இப்புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சில குற்றங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19 ஆவது சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான உரிமைக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு மட்டுப்பாடும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19(3) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டும். கருத்து வெளிப்பாடு மற்றும் தகவல்களை அறிதல் ஆகியவற்றின்மீது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனக்கூறி மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் முற்படுமேயானால், அதற்கு நியாயமான நோக்கம் இருப்பதுடன் இவ்வாறு மட்டுப்பாடு விதிப்பதன் ஊடாக அந்நோக்கங்கள் நிறைவேறும் என்பதை நிரூபிக்கவேண்டும். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் 8(2) ஆம் பிரிவை 78 ஆம் பிரிவுடன் இணைத்து நோக்குகையில், அதனூடாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் முடக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவின் ஊடாக நபரொருவரின் (சந்தேகநபர்) உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன போதியளவுக்கு உறுதிப்படுத்தப்படாத வேளை, அவரைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரிகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச அகதிகள் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றி எமக்கு விளக்கமளிக்குமாறு கோருகிறோம். அதேபோன்று தற்போது இவ்வரைவு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் உரியவாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமா எனவும், இவ்வரைவு தொடர்பான பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெளிவுபடுத்துமாறு வேண்டுகோள்விடுக்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238836
3 weeks 2 days ago
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை - ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை
Published By: Vishnu
16 Feb, 2026 | 10:47 PM

(நா.தனுஜா)
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை இப்புதிய வரைவு எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றியும், இவ்வரைவு குறித்த பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் தமக்கு விளக்கமளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்புதிய சட்டவரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் சோல், வலுகட்டாயத் தடுத்துவைப்பு தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் பிரதித்தலைவர் மத்தியூ கில்லெற், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் தலைமை அறிக்கையாளர் கேப்ரியெல்லா சிற்ரொனி, சட்டவிரோத மற்றும் வலுகட்டாய தண்டனை வழங்கல்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மொரிஸ் ரிட்போல்-பின்ஸ், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர், தனியுரிமைக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அனா பிரையன் நௌக்ரெரெஸ் மற்றும் சித்திரவதைகள், மிகமோசமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வட்ஸ் ஆகிய எழுவரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கூட்டாக அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;
உங்களது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிக்காட்டும் வகையிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதில் மேற்கொள்வதற்கென கடந்த 2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதிலும், பொதுமக்களின் கருத்தறியும் நோக்கில் புதிய வரைவை வெளியிட்டதிலும் உங்களது அரசாங்கம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை பெரிதும் வரவேற்கிறோம். அதேபோன்று சட்டவாட்சி பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படவேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் சில சரத்துக்களின் ஊடாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டப்பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளமை என்பன உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டுகிறோம். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்பதுடன், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் தயாரிக்கப்படவில்லை.
குறிப்பாக இச்சட்டவரைவின் 3 ஆம் பிரிவில் 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை விட முன்னேற்றகரமானதாக இருப்பினும், இதுவும் மிகப்பரந்துபட்டதாகவும் சர்வதேச நியமங்களுக்கு உட்படாததாகவுமே காணப்படுகிறது. இவ்வாறான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள் திட்டமிடப்படாத எதிர்மறை விளைவுகளுக்கும், திட்டமிடப்பட்ட வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கும் வழிகோலும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 15(1) ஆம் சரத்தின் பிரகாரம் குற்றவியல் சட்டங்கள் மிகவும் 'குறிப்பானதாக' இருக்கவேண்டும். அதனூடாகவே எவ்வாறான நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாகக் கருதமுடியும் என்பது குறித்தும், அவ்வாறான குற்றங்களைப் புரிவதனால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்தும் தெளிவான புரிதலை ஏற்படுத்தமுடியும். இருப்பினும் இத்தகைய விரிவான வரைவிலக்கணமானது சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கும், அதன்விளைவாக அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.
அதேவேளை இப்புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சில குற்றங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19 ஆவது சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான உரிமைக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு மட்டுப்பாடும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19(3) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டும். கருத்து வெளிப்பாடு மற்றும் தகவல்களை அறிதல் ஆகியவற்றின்மீது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனக்கூறி மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் முற்படுமேயானால், அதற்கு நியாயமான நோக்கம் இருப்பதுடன் இவ்வாறு மட்டுப்பாடு விதிப்பதன் ஊடாக அந்நோக்கங்கள் நிறைவேறும் என்பதை நிரூபிக்கவேண்டும். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் 8(2) ஆம் பிரிவை 78 ஆம் பிரிவுடன் இணைத்து நோக்குகையில், அதனூடாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் முடக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.
அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவின் ஊடாக நபரொருவரின் (சந்தேகநபர்) உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன போதியளவுக்கு உறுதிப்படுத்தப்படாத வேளை, அவரைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரிகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச அகதிகள் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றி எமக்கு விளக்கமளிக்குமாறு கோருகிறோம்.
அதேபோன்று தற்போது இவ்வரைவு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் உரியவாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமா எனவும், இவ்வரைவு தொடர்பான பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெளிவுபடுத்துமாறு வேண்டுகோள்விடுக்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/238836
3 weeks 2 days ago
கடலடி மலைகள் சுறாக்களை ஈர்ப்பதன் மர்மம் என்ன? பட மூலாதாரம்,AIG Conservation Dept கட்டுரை தகவல் கேத்தரீன் லேதம் 16 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் பரந்து விரிந்து, அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலின் மேற்பரப்புக்குக் கீழே, பிரமாண்டமான கடலடி மலைகள் பரவியுள்ளன. அந்த நிலவியல் அமைப்புகள் சுறாக்களால் நிரம்பி வழிகின்றன. நீண்டகாலமாகச் செயலற்றுக் கிடக்கும் எரிமலை சிகரங்களின் மீது கடல் நீரோட்டங்கள் காற்றைப் போல கர்ஜிக்கின்றன. இந்தக் கடலடி மலைகள், கடலின் தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து, 3,300 அடி உயரம் வரை செல்கின்றன. சில மலைகளில் பள்ளங்கள் உள்ளன அல்லது முகடுகள் வரிசையாக அமைந்துள்ளன. மற்றவற்றின் உச்சியில் பெரிய, தட்டையான பீடபூமிகள் உள்ளன. சில நேரங்களில் இந்தச் சிகரங்கள் கடலின் மேற்பரப்புக்கு மேலே எட்டிப் பார்த்து, தீவுகளை உருவாக்குகின்றன. கடல் மலைகள் என்பவை ஆழ்கடல் மற்றும் திறந்தவெளிப் பெருங்கடல் உயிரினங்கள் சந்திக்கும் நீருக்கு அடியிலுள்ள மலைத் தொடர்களாகும். சிறிய மிதவை உயிரினங்களை உண்ணும் மீன்கள் முதல் பெரிய வேட்டையாடி உயிரினங்கள் வரை அனைத்துமே இங்கு கூடுகின்றன. இது கடல் உணவுச் சங்கிலியில் ஒரு பரபரப்பான இடமாக உள்ளது. இப்படியான கடல் மலை ஒவ்வொன்றும் தனித்துவமானது, நிரம்பி வழியும் உயிர் சூழலைக் கொண்டது. அவை பவளப் பாறைகள், ஓடுள்ள கணுக்காலிகள், கடற்பஞ்சுகள், கடல் நட்சத்திர மீன், மீன்கள், ஆக்டோபஸ்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், டால்பின்கள், சுறாக்கள் எனப் பலவற்றால் செழித்துக் காணப்படுகின்றன. தட்டையான கடல் தரையுடன் ஒப்பிடும்போது, கடல் மலைகள் அதிக எண்ணிக்கையிலும் பன்முகத்தன்மையுடனும் அதிக உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பலவும் உலகில் வேறு எங்குமே காணப்படாதவை. மேலும், இந்த இடங்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் இருக்கக்கூடும். வடக்கு அட்லான்டிக்கின் உறைந்த நீரில் இருந்து வெப்பமண்டல பசிபிக்கின் ஆழமான பகுதிகள் வரை, உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடலடி மலைகள் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன. "கடந்த சில தசாப்தங்களாக கடல் தரையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான எரிமலை சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் காலநிலை இயக்கவியல் துறை இணை பேராசிரியர் அலி மஷாயெக். இன்று, கடல் குறித்த ஆய்வு வேகமடைந்து வருவதால், மேன்மேலும் கடலடி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அட்லான்டிக் பெருங்கடலின் கடல் மலைகளை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தின்போது, விஞ்ஞானிகள் கடலின் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் வேட்டையாடிகளான சுறா மீன்களை அசாதாரணமான எண்ணிக்கையில் கண்டுபிடித்தனர். "அது எங்கோ தொலைவில் ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பது போல் இருந்தது," என்கிறார் அசென்ஷன் தீவில் ஏழு ஆண்டுகள் முதன்மைப் பாதுகாப்பு விஞ்ஞானியாகப் பணியாற்றிய சாம் வெப்பர். அசென்ஷன் தீவு என்பது ஆப்பிரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே உள்ள தீவு. வெப்பமண்டல மத்திய அட்லான்டிக்கில் தனிமையிலுள்ள ஒரு நிலப்பரப்பு. ஆனால், அந்தத் தீவைச் சூழ்ந்துள்ள கடல் அலைகளுக்குக் கீழே பார்த்தால், ஒரு வித்தியாசமான கதை வெளிப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள ஓர் எரிமலையின் உச்சியே அசென்ஷன் தீவின் நிலப்பகுதி. பட மூலாதாரம்,AIG Conservation Dept படக்குறிப்பு,அசென்ஷன் தீவின் கடற்கரைக்கு அப்பால், ஆராய்ச்சியாளர்கள் ஒரு பட்டுச் சுறாவை டேக் செய்வதற்காக இழுக்கின்றனர் அது, "கடல் மட்டத்தைத் தாண்டி ஒரு தீவாக மாறியுள்ளது" என்று வெப்பர் கூறுகிறார். இது நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நீண்டு கிடக்கும் கடல் மலைகளின் சங்கிலியில் உள்ள ஒன்று. "அது செயின்ட் ஹெலினா வழியாகச் சென்று, அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து ஆப்பிரிக்கா வரை செல்கிறது." தற்போது பிரிட்டனில் உள்ள எக்ஸிடர் பல்கலைக் கழகத்தில் கடல் முதுகெலும்புயிரி சூழலியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வெப்பர், அசென்ஷன் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 300கி.மீ தொலைவிலுள்ள மூன்று கடலடி மலைகளை ஆய்வு செய்தார். ஹாரிஸ் ஸ்டீவர்ட் கடல் மலையின் உச்சி ஆழமாக உள்ளது. மறுபுறம், கிராட்டன், யங் ஆகிய 'தெற்கு கடல் மலைகள்' ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்தவையாக உள்ளன. அவற்றின் சிகரங்கள், கடல் மட்டத்தில் இருந்து 330 அடி ஆழம் வரை உயர்ந்துள்ளன. அதோடு, அவை வெறும் 80கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளன. அந்த இடம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது என்கிறார் வெப்பர். பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வின் ஜேம்ஸ் கிளார்க் ராஸ் என்ற ஆய்வுக் கப்பலுடன் இணைந்து, வெப்பர் தனது 16 நாட்களில் பெரும்பாலான நாட்களை ஒரு சிறிய நீளமான மீன்பிடிப் படகில் கழித்தார். அப்போது அவர், தனது ஆய்வுக்காக சுறாக்களைப் பிடித்து டேக் செய்துகொண்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 41 மடங்கு அதிகமான சுறாக்கள் "நாங்கள் மீனவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினோம். அவர்கள் மீன்களை மிகத் திறமையாகப் பிடித்தார்கள். பின்னர், நாங்கள் அதை டேக் செய்யும் வேலையைச் செய்தோம். அனைவரும் ஒன்றாக வேலை செய்தோம், சமைத்துச் சாப்பிட்டோம், ஒன்றாகத் தூங்கினோம்." இந்தத் தெற்கு கடல் மலைகளில்தான் வெப்பர் மற்றும் அவரது சகாக்கள், திறந்த பெருங்கடலுடன் ஒப்பிடும்போது, 41 மடங்கு அதிகமான சுறாக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். சுற்றியுள்ள கடல் நீருடன் ஒப்பிடுகையில், வெப்பரும் அவரது குழுவும் தெற்கு கடல் மலைகளில் சுறாக்கள் மற்றும் இதர பெரிய வேட்டையாடி மீன்களின் மொத்த பன்முகத்தன்மை ஐந்து மடங்கு அதிகமாகவும் உயிர்க்கூளம் 30 மடங்கு அதிகமாகவும் இருந்ததைக் கண்டறிந்தனர். பல அழியும் அபாயத்தில் உள்ள இனங்களின் எண்ணிக்கையும் மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற வணிக ரீதியாகப் பிடிக்கப்படும் இனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகளவில் இருந்தது. "ஆழ்கடல் மற்றும் வலசை செல்லும் சுறாக்கள் உள்பட, சுறாக்கள் உலகப் பெருங்கடல்கள் அனைத்திலும் கடல் மலைகளைச் சுற்றி இருக்கவே விரும்புகின்றன" என்று பிரிட்டனில் உள்ள பிளைமௌத் பல்கலைக் கழக உயிரியல் மற்றும் கடல் அறிவியல் பள்ளியின் கடல் ஆளுகை நிபுணரும் இணை விரிவுரையாளருமான லிடியா கோலர் தெரிவித்தார். இருப்பினும், கடலடி மலைகள் ஏன் இத்தனை சிறந்த கடல் வேட்டையாடிகளைத் தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது ஓரளவுக்கு மர்மமாகவே உள்ளது. பட மூலாதாரம்,AIG Conservation Dept/ Univ of Exeter/ Univ of W Australia படக்குறிப்பு,அசென்ஷன் தீவு கடல் மலைக்கு அருகில், நீருக்கடியில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டபோது, ஒரு ஷார்ட்ஃபின் மேக்கோ சுறா இரையை ஆராய்வது பதிவானது கடலடி மலைகளும் புவி காந்தப்புலமும் கடல்வாழ் உயிரினங்கள் தங்குமிடம், சுத்தம் செய்துகொள்வது, உணவு எனப் பல காரணங்களுக்காக கடலடி மலைகளுக்குச் செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. அதோடு, அவற்றை அவை வழிசெலுத்தலுக்கான அடையாளமாகவும் பயன்படுத்தக்கூடும். சிறிய இரும்பு அணுக்களைக் கொண்ட எரிமலைப் பாறை குளிர்ந்து திடமாகும்போது ஒரு கடலடி மலை உருவாகிறது. பூமியின் காந்தப்புலத்துடன் சீரமைக்கப்படும் இந்த இரும்பு அணுக்கள், காலத்தால் உறைந்து போகின்றன. மேலும், அந்தக் கடலடி மலையின் தனித்துவமான காந்தப்புலம் அதில் நிலைநிறுத்தப்படுகிறது. திமிங்கிலம், சுறா ஆகிய இரு இனங்களும் கடலடி மலைகளின் தனித்துவமான புவிகாந்த அடையாளங்களை பாதை கண்டறியப் பயன்படுத்தக்கூடும் என்று வெப்பர் கூறுகிறார். "கடலடி மலைகள் மிகவும் வலுவான காந்த அடையாளத்தைக் கொண்டுள்ளன. மீன்கள் பலவும் அதை உணரக்கூடியவையாக உள்ளன. நாங்கள் ஆய்வு செய்த கடலடி மலைகள், சுமார் 100 முதல் 200 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ள ஒரு மிக நீண்ட கடலடி மலைத்தொடரின் முனையில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் தங்கள் வலசைப் பாதையில் அவற்றை இடைத்தங்கல் இடங்களாகப் பயன்படுத்துகின்றனவா என்பதைக் கண்டறிய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்." "உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள வேட்டையாடிகள் உள்பட, கடலடி மலைகளில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆற்றலின் ஒரு செறிவாகும்," என்று வெப்பர் விளக்குகிறார். அவரது கூற்றுப்படி, அந்த ஆற்றல் இரண்டு முக்கிய இடங்களில் இருந்து வரலாம். "முதலாவதாக, கடலடி மலையிலேயே அது உருவாக்கப்படலாம். அதாவது, கடலடி மலை ஆற்றலை உருவாக்குகிறது அல்லது செறிவூட்டுகிறது. இதுவே சோலை கருதுகோள். அதாவது கடலடி மலை என்பது உயிர்ச்சூழலை ஆதரித்து வளர்க்கும் ஒரு சோலையைப் போன்றது." "இரண்டாவதாக, கடலடி மலைகள், வேறு இடங்களில் உணவருந்திவிட்டு, அந்த ஆற்றலை கடலடி மலைக்குக் கொண்டு வரும் உயிரினங்களுக்கான கூடுமிடங்களாகச் செயல்படுகின்றன. இதுவே சேவை மையம் கருதுகோள்." பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,பூமியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடலடி மலைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன பெருங்கடலை கலக்கி விடும் கடலடி மலைகள் கடந்த 1998இல், பெருங்கடல் ஆய்வில் முன்னோடி ஆராய்ச்சியாளரான வால்டர் மங்க், கடல் மலைகளை "பெருங்கடலை கலக்கி விடும் தண்டுகள்" என்று விவரித்தார். ஒரு கடல் மலை எவ்வாறு வளமான, ஊட்டமளிக்கும் சோலையாக மாறக்கூடும் என்பதை விளக்குவதற்கு இது உதவக்கூடும். கடல் மலையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் நீர் கொந்தளிப்பாகவும் சீரற்றதாகவும் இருக்கலாம். கடல் நீரோட்டங்கள் நீருக்கு அடியில் உள்ள செங்குத்தான சரிவுகளில் மோதும்போது, நீர் உச்சிக்குத் தள்ளப்படுகிறது. இதனால், குளிர்ந்த ஊட்டச்சத்து நிறைந்த நீரை சூரிய ஒளி படக்கூடிய மேற்பரப்பை நோக்கித் தள்ளுகிறது. "பெருங்கடலின் ஆழமான நீரோட்டங்கள் இந்தக் கடல் மலைகளுடன் இடைவினை புரிவதால் உருவாகும் கொந்தளிப்பு, ஆழ்கடல் நீரோட்ட இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு வகிப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்" என்கிறார் மஷாயெக். உண்மையில், மஷாயெக் மற்றும் அவரது குழுவின் கூற்றுப்படி, மலைகளைச் சுற்றி நடக்கும் இந்தக் கலக்குதல், உலகளாவிய பெருங்கடல் கலவையின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்குக்குப் பங்காற்றுகிறது. "கடல் மலையால் தூண்டப்படும் இந்தக் கலவையானது ஊட்டச்சத்துகள், ஆக்ஸிஜன், வெப்பம், கரிமம் போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பண்புகளின் ஆழ்கடல் சேமிப்பைக் கட்டுப்படுத்துகிறது" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் பெருங்கடல் ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியருமான லாரா சிமோலி. ஆழ்கடல் நீர் மேற்பரப்புக்குத் தள்ளப்படும்போது, ஊட்டச்சத்துகள் மேல்நோக்கி வருகிறது. இது ஃபைட்டோபிளாங்டன்களின் பெருக்கத்திற்கு வித்திடுகிறது. இவை பெருங்கடல் உணவுச் சங்கிலியில் முதன்மையாக இருப்பதால், கடல் மலை ஒரு வளமான சோலையாக மாறுகிறது. இது சுறாக்கள் போன்ற பெரிய வேட்டையாடிகளை ஈர்க்கிறது. "கடல் மலைகள், அதன் மீது தொடர்ந்து அடித்துச் செல்லப்படும் பிளாங்டன் உயிரிகளுக்கு ஒரு மாபெரும் பொறியாகச் செயல்பட முடியும்" என்கிறார் வெப்பர். அதோடு, "இந்த பிளாங்டன் மேலும் கீழுமாக நகரும்போது, கடல் மலையால் அதை உச்சியில் சிக்க வைக்க முடியும். அந்த அற்றல், பின்னர் உணவு வலையின் ஊடாக, அதற்கு மேலே உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பரவுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,பொதுவாக தனிமையில் வாழும் மார்பிள் மின்சாரத் திருக்கை மீன்கள், போர்ச்சுகல் கடற்கரைக்கு அப்பால் உள்ள கோரிங்கே கடலடி மலையில் கூடுகின்றன 'சேவை மையம் கருதுகோள்' சில உயிரினங்கள் கடல் மலையைத் தங்கள் வீடாகக் கொண்டு, "நிரந்தரமாக வசிப்பதாகவும்" வெப்பரின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. அதோடு, கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற சில இனங்கள், திறந்தவெளி பெருங்கடலில் இரை தேடிய பிறகு கடல் மலைகளில் கூடுவதையும் காட்டுகின்றன. "ஆற்றல் கடல் மலைக்கு வெளியே உருவாக்கப்பட்டு, இரை தேடும், இடம்பெயரும் வேட்டையாடிகள் அதைச் சேகரித்து கடல் மலைகளுக்குக் கொண்டு வருகின்றன." இங்குதான் "சேவை மையக் கோட்பாடு" வருகிறது. கடல் மலைகள் ஒன்று கூடுவதற்கும், சமூக நடத்தைகளில் ஈடுபடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்குமான ஓர் இடமாகச் செயல்படலாம். அல்லது திறந்தவெளிப் பெருங்கடலில் வேட்டையாடிய பிறகு திரும்புவதற்கான ஒரு தளமாகக்கூட இருக்கலாம். கடல் மலைகளில் சுறாக்கள் விரும்புவதாகத் தோன்றும் சில குறிப்பிட்ட இடங்கள் உள்ளதாகக் கூறுகிறார் வெப்பர். "அவை மிக அதிக எண்ணிக்கையில் அந்த ஓர் இடத்தில் ஒன்று கூடுகின்றன." இதுதான் வெப்பருக்கு மிகவும் பிடித்தமான கருதுகோள். இதை அவர் 'சேவை மையக் கருதுகோள்" என்று அழைக்கிறார். மேலும், இதை அவர் விரிவாக ஆராய விரும்புவதாகவும் தெரிவித்தார்: "அவை கடல் மலைகளை ஆற்றல் சேமிப்புப் புகலிடமாகப் பயன்படுத்துகின்றனவா என்பதை நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்." பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,ஒவ்வொரு கடலடி மலையும் தனித்துவமானது மற்றும் உயிர்ச்சூழல் நிரம்பியுள்ளது பல சுறா இனங்கள் தங்கள் செவுள்களுக்கு தொடர்ந்து தண்ணீரைச் செலுத்திக்கொண்டே இருக்க இடைவிடாமல் நீந்த வேண்டியுள்ளது. "அவற்றால் நீந்துவதை நிறுத்த முடியாது. இதுவொரு ஆற்றல் செலவை ஏற்படுத்துகிறது." வானத்தில் ஒரு கழுகு வெப்பக் காற்றோட்டத்தில் வட்டமிடுவதைப் போல, கடல் மலைகளைச் சுற்றி நீர் மேலே எழும்போது, அதேபோன்ற ஒரு நிகழ்வு சுறாக்களிடையே நடக்கக்கூடும் என்று வெப்பர் கருதுகிறார். இந்த மேல்நோக்கிய நீரோட்டம், சுறாக்கள் உணவு உண்ணாத நேரங்களில் மிதந்து ஆற்றலைச் சேமிக்க அனுமதிக்கும். "பின்னர் அவை மீண்டும் வெளியே சென்று நீலக்கடலில் இரை தேடுகின்றன." வெப்பரின் குழுவால் டேக் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பட்டு சுறா, ஒவ்வோர் இரவும் இரை தேடுவதற்காகக் கடல் மலையை விட்டு வெளியேறி, 100 கி.மீ வரை பயணிக்கிறது. "அவற்றால் இந்தக் கடல் மலைகளுக்கு மிகத் திறமையாகப் பாதையைக் கண்டறிய முடிகிறது. அவற்றால் நீண்ட நேரம் நீந்த முடியும், மிக விரைவாக மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பவும் முடியும்," என்கிறார் வெப்பர். ஆய்வாளர்களுக்குத் தெரிந்த மற்றொரு விஷயம் என்னவெனில், டேக் செய்யப்பட்ட சில பட்டுச் சுறாக்கள், சுமார் ஓராண்டுக்கு அந்தக் கடலடி மலையில் இருந்து காணாமல் போயின. அவை அவற்றை ஒரு சேவை மையம் போலப் பயன்படுத்துகின்றன என்பதை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் வெப்பர். "ஒரு நீண்ட பயணத்தில், அவை அங்கு வந்து, ஒருவேளை உணவுண்டு, பின்னர் தங்கள் வலசைப் பயணத்தைத் தொடர்கின்றன. அவை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. மேலும் கடலடி மலைகளில் ஏராளமான உணவு உள்ளது. எனவே, அவை செல்லும் வழியில் இங்கு தங்கிச் செல்கின்றன." பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,கோரின்ஜ் கடல்மலையின் வாழ்விடங்கள் ஏறக்குறைய 5 கிலோமீட்டர் ஆழம் வரை பரவியுள்ளன. மேலும் அவற்றில் கடற்பாசி காடுகள், குளிர்ந்த நீர் பவளப்பாறைகள், ஆழ்கடல் கடற்பஞ்சுப் படுக்கைகள் ஆகியவை அடங்கும் ஒளிவட்ட விளைவு கடல் மலைகளுக்கு சோலை, சேவை மையம் ஆகிய இரண்டு கருதுகோள்களும் பொருந்தக்கூடும் எனத் தெரிகிறது. அங்கு நிரந்தரமாக வசிக்கும் உயிரினங்கள், வழக்கமாக வந்து செல்லும் உயிரினங்கள், அவ்வழியாகச் செல்லும் சில உயிரினங்கள் எனக் கலந்து காணப்படுகின்றன. இவற்றின் விளைவாக கடல் உயிரினங்களின் எண்ணிக்கை இந்தப் பகுதிகளில் மலைகளின் உச்சிகளுக்கு அப்பால் வெகுதூரம் வரை பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, ஒரு கடலடி மலையைச் சுற்றி கிட்டத்தட்ட ஓர் ஒளிவட்டத்தைப் போல, உயிரினங்களின் செறிவு அதிகமாகக் காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது திறந்தவெளிப் பெருங்கடலில் 6கி.மீ வரை பரவியிருந்தது. இந்த ஒளிவட்ட விளைவு சுமார் 40 கி.மீ வரைகூட பரவக்கூடும் என்று பிற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. "உச்சியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றாலும், அதிக எண்ணிக்கையிலான வேட்டையாடிகளை காணலாம். அந்த இடத்தில் கடல் ஆயிரக்கணக்கான மீட்டர்கள் ஆழமாக இருக்கும்," என்கிறார் வெப்பர். பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு சூரை மீன்கள், பெரிய கண் சூரை மீன்கள் கடல் மலை உச்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பயணித்தன. ஆனால், அவை "ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒட்டியே" இருந்ததாகத் தெரிகிறது, என்கிறார் வெப்பர். ஒலி அலைகள் மூலம் டேக் செய்யப்பட்ட கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள் இரண்டு தெற்கு கடல் மலைகளுக்கு இடையே உள்ள 80கி.மீ தூரத்திலும் பயணிப்பது காணப்பட்டது. அவை அந்த இரண்டு உச்சிகளையுமே தங்கள் வீடாகக் கருதுவது போல அது இருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்கிடையே, பட்டு சுறாக்கள் இரவில் கடல் மலை உச்சிகளில் இருந்து விலகிச் சென்று, விடியற்காலையில் மீண்டும் திரும்பின. இது வேட்டையாடிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் நிறைந்த ஒளிவட்டம், இரவு மற்றும் பகலுக்கு ஏற்ப விரிவடைந்து, சுருங்குவதைக் காட்டுகிறது. கடல் மலைகள் ஆழ்கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஈடு செய்ய முடியாத சோலைகளாகும். மேலும் சுறாக்கள், திருக்கை மீன்கள், ஸ்கேட் மீன்கள் போன்ற அழியும் அபாயத்தில் உள்ள மீன்கள் உள்படப் பலவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பதை நிரூபிக்கும் சான்றுகளும் அதிகரித்து வருகின்றன. "ஆழமற்ற கடல் முதல் ஆழ்கடல் வரை, கடலோரப் பகுதி முதல் ஆழ்கடல் வரை, முழு கடல் சூழலியல் அமைப்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும் சுறா இனங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன" என்கிறார் கோலர். ஆனால், அவையனைத்தும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது ஆபத்தானது. பல தசாப்தங்களாக, பெரிய கண் சூரை மீன் போன்ற விரும்பத்தக்க மீன்களை எளிதில் காணக்கூடிய கடல் மலைகள், டிராலர் எனப்படும் ஆழ்கடல் இழுவை வலை மீன்பிடித்தலுக்கு உள்ளாகி வருகின்றன. "சுறாக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அதிகப்படியான மீன்பிடித்தல்தான்" என்கிறார் கோலர். "இதில் வணிகரீதியாக அவற்றை இலக்கு வைத்துப் பிடிப்பது மட்டுமின்றி தற்செயலாக இழுவை வலைகளில் சிக்குவதும் அடங்கும்" என்கிறார் அவர். "அவர்கள் வேண்டுமென்றே சுறாக்களைப் பிடிக்கச் செல்வதில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், செல்லும் இடங்கள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான சுறாக்களைப் பிடிக்கிறார்கள். மேலும், அவற்றை கரைக்குக் கொண்டு வந்து சந்தைப்படுத்துகிறார்கள்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கடல்வாழ் உயிரினங்களுக்கு இருக்கும் ஐந்து பெரிய அச்சுறுத்தல்களில், இழுவை வலை மீன்பிடித்தலும் ஒன்று. மேலும், இதனால் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில் சுறாக்களும் அடங்கும். ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடித் தொழில்களால் எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பதில் தெளிவில்லை. ஆனால், அந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன்களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, கடல் தரையில் வலைகளைப் போட்டு இழுத்துக்கொண்டே செல்வதன் மூலம் மீன்பிடிப்பது அழிவுகரமான மீன்பிடி முறை என்கிறார் கோலர். "கனமான ஒரு வலை, கடல் தரை முழுவதும் இழுத்துச் செல்லப்படுகிறது. மென்மையான கடற்பஞ்சுகள், பவளப் பாறைகள் போன்ற எளிதில் உடையக்கூடிய அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அது பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவை அடியோடு அகற்றப்படுகின்றன. இறுதியில் மிஞ்சுவது ஒன்றுமில்லாத வெற்று நிலப்பரப்பு மட்டுமே." அனைத்தும் கடல் தரையில் இருந்து சுரண்டி எடுக்கப்படுகின்றன. அங்கு இருக்கும் எந்தவொரு உயிரினமும் அகற்றப்படுகிறது. "கடல் தரையில் இழுவை வலைகளை வைத்து மீன்பிடிப்பது, அடிமட்ட சுற்றுச்சூழல் அமைப்பையே தகர்த்துவிடுகிறது. இதனால் முழு உணவுச் சங்கிலியும் அழிக்கப்படுகிறது" என்கிறார் வெப்பர். மேலும், "கடல் மலைகளில் வாழும் உயிரினங்களில் பலவும் மிக மெதுவாக வளரக்கூடியவை. அவை மிக மெதுவான வாழ்க்கை சுழற்சியைக் கொண்டவை. இழுவை வலையால் நிகழும் திடீர் மீன் பிடித்தல் முறை அவற்றை முழுதாக அள்ளிச் செல்கின்றன. இதனால் அவை முற்றிலுமாகக் காணாமல் போய்விடுகின்றன" என்றும் வெப்பர் குறிப்பிட்டார். இழுவை வலை மீன் பிடித்தலின் தாக்கம் கடலடி மலைகளில் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்கிறார் கோலர். "இந்தச் சூழல் அமைப்புகள் மீண்டும் உருவாகி மீண்டு வருவதற்கு மனித வாழ்நாளைவிட அதிக காலம் எடுக்கும். இதற்கிடையே, உணவு ஆதாரங்கள், இனப்பெருக்கப் பகுதிகள் போன்ற மிக முக்கியமான அவற்றின் சேவைகளை கடல் உயிரினங்கள் இழக்க நேரிடும்." இருப்பினும், சுறாக்கள் எங்கு கூடுகின்றன என்பதை அறிவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான முக்கிய ஞானமாக உள்ளது. அசென்ஷன் தீவுகளிலும், 2019இல் முழு பிரத்யேக பொருளாதார மண்டலம் வணிக மீன்பிடித்தலுக்காக மூடப்பட்டது. 2021இல் ஐ.நா சபையின் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீடு, "மீன்பிடிப்பு, கடலடி மலைச் சூழல் அமைப்புகளுக்குத் தற்போதுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறியது. மேலும், அக்டோபர் 2025இல் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் "தீர்மானம் 032" ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடலடி மலைகளில் இழுவை வலை மீன்பிடித்தல் முறையில் உலகளாவிய மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d0j884vlyo
3 weeks 2 days ago
இனவாதத்திற்கு இடமில்லை; மாற்றத்தை முன்னெடுக்கப் பெண்கள் முன்வர வேண்டும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய! Published By: Digital Desk 1 16 Feb, 2026 | 03:30 PM இனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பின்னோக்கித் தள்ள எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார், அடம்பன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எமது அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். புள்ளிவிபரங்களின்படி, மொத்த சனத்தொகையில் சுமார் 52 சதவீதமானோர் பெண்கள். அதன் அர்த்தம், எமது நாட்டின் மக்கள் தொகையில் பலம்மிக்க ஒரு தரப்பினர் பெண்களே என்பதாகும். ஆயினும், பல்வேறு துறைகளை எடுத்துக்கொண்டால் அல்லது அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்த்தால், அந்தப் பலம் நடைமுறையில் பெண்களாகிய எமக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்த பிரதான பிரச்சினை யுத்தமும் வன்முறையுமே ஆகும். நாம் ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்த்து வந்தோம். உண்மையில் யுத்தம் காரணமாக நாம் பிளவுபட்ட ஒரு நாடாகவே இருந்தோம். இதன் காரணமாகப் பெண்களே அதிகளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இந்நாட்டின் பெரும்பான்மையான பெண்கள் தமது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புகளை இழந்து துயரப்படுவதை நாம் அறிவோம். இந்தப் பகுதியிலும் அவ்வாறு துயரப்படும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் கடந்துவிட்ட போதிலும், அந்த அமைதி இன்றும் எமது இதயங்களில் ஏற்படவில்லை. இப்போதும் கூட, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாது தவிக்கும் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். தனித்து நின்று தமது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் பல பெண்களும் இருக்கிறார்கள். எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்நாட்டின் சகலரும் பாதுகாப்பாக, சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம். ஆயினும், சில இனவாதக் கும்பல்கள் மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன. அவர்களுக்கு ஊழலை ஒழித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டுமே. அதுவும் சாதாரண மக்களுக்காக அல்ல, அவர்களது சுயநலத்திற்காகவே. அவர்கள் இந்நாட்டின் வளங்களை எந்த அளவுக்கு அழித்திருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். 2022 ஆம் ஆண்டில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆயினும் 2025 ஆம் ஆண்டளவில், திருட்டு, ஊழல் மற்றும் வீண்விரயங்களைத் தடுத்துப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எமது அரசாங்கத்தால் முடிந்தது. அதனாலேயே, 'தித்வா' சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாரிடமும் கடன் பெறாது மக்களுக்கு உதவ எம்மால் முடிந்தது. 21 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பால் பண்ணையாளர்களுக்கு 'மில்கோ' நிறுவனத்தின் இலாபத்தைப் பகிர்ந்து அளிக்க முடிந்தது. ஒரு வருட காலத்திற்குள் வருமான வழிகளை அதிகரித்து, நிறுவனங்களின் வீண்விரயங்களைக் குறைத்ததாலேயே இந்த இலாபத்தை வழங்க முடிந்தது. வீழ்ச்சியடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பி, மோசடி மற்றும் ஊழலை நிறுத்தி, அரசியல்வாதிகளின் வீண்விரயங்களைத் தடுத்து, அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டை இனவாதத்தைத் தூண்டிப் பின்னோக்கித் தள்ளச் சிலர் முயற்சிக்கின்றனர். இனவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெண்களே ஆவர். நாம் மீண்டும் பிளவுபட்டு, ஒற்றுமையின்மையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டுமா? வேண்டாம் என்றால் அதற்குப் பெண்களின் தலைமைத்துவம் அவசியம். நாம் ஆரம்பித்துள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களாகிய நீங்களும் முன்வர வேண்டும். நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆகையினால் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தைப் பின்னோக்கித் தள்ள நாம் இடமளிக்க மாட்டோம். நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரதான பிரச்சினை போதைப்பொருள். எமது பிள்ளைகள் அதற்குப் பலியாகிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே நாம் இருக்கிறோம். இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுகின்றன. போதைப்பொருள் பாவனையாளர்கள் காரணமாக வீதிகளில் நடப்பதற்கும், வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்வதற்கும் அச்சமாக இருக்கிறது. போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். இது வரை அதிகாரத்தில் இருந்தவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். பொலிஸாருக்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் இன்று சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். இன்று பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்ய முடிகிறது. நீதிமன்றங்கள் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கின்றன. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும், சட்டம் அனைவருக்கும் சமம். இருப்பினும் சட்டப் பாதுகாப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படாத இடங்கள் இன்னும் இருப்பதை நாம் அறிவோம். வன்முறைக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சட்டம் இன்னும் வினைத்திறனானதாக இருக்க வேண்டும். நாம் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இவ்வாறான வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிள்ளைகளின் கல்வியில் நம்பிக்கை வைத்துத் தாய்மார்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஐந்து வருட இடைவேளையின் பின்னர் இந்த ஆண்டு நாம் பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துகிறோம். நிச்சயமாக அந்த ஆசிரியர்கள் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இன்னும் அதிபர்கள் முறையாக நியமிக்கப்படாத நிலைமை இருந்து வருகின்றது. இந்த வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்ப நாம் கடந்த ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய பாடசாலை, சிறிய பாடசாலை என்ற வேறுபாடு இல்லாது, அனைத்துப் பாடசாலைகளிலும் இருப்பது எமது பிள்ளைகளே என்ற சமத்துவ நிலைமையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி வலையத்திலும் ஒரு பாடசாலையை நாம் அபிவிருத்தி செய்வோம். அந்தப் பாடசாலைகளைத் தெரிவு செய்து அனுப்புமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். ஒவ்வொரு இரண்டாம் நிலை பாடசாலையிலும் 'திறன் வகுப்பறை' ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் இந்த ஆண்டு முதல் முதலாம் தரத்திற்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வியை வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே எம்மை மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவந்தார்கள், அதை நாம் செய்தே தீருவோம். பொருளாதாரத்திற்காகப் பெண்களே அதிகளவு உழைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கே மிகக் குறைந்த ஊதியம் கிடைக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எனவே, வீட்டிலிருந்தே சுயதொழில் செய்வதற்கு அல்லது வேலையில் ஈடுபடும்போது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உட்பட மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பெண்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238799