இலங்கை பொறுப்புக்கூறுவதற்காக ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
Published By: RAJEEBAN
12 JUN, 2025 | 11:52 AM
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை புறக்கணிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜேர்மனிக்கான இயக்குநர் பிலிப்ப்ரிஷ் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் ஜேர்மனியிலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளனர், ஆனால் இலங்கை ஜனாதிபதியை ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மேர்ஸ் சந்திக்கும்போது எழுப்பவேண்டிய கரிசனைகள் நீண்டகாலத்தவை என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கமும் தமிழீழ பிரிவினைவாத விடுதலைப்புலிகளும் 1983 முதல் 2009 வரை இலங்கையில் ஒரு கொடுரமான உள்நாட்டு போரில் ஈடுபட்டனர், அதில் இருதரப்பினரும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட பரவலான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக யுத்தத்தின் இறுதிமாதங்களில் அரசபடையினர் பொதுமக்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டனர், போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை பலவந்தமாக காணாமலாக்கினர்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்,
பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிறுவியுள்ளது.
ஆனால் திசநாயக்க அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை, முன்னைய அரசாங்கங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பாதுகாத்தன, பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தன.
இலங்கையர்களை ஒன்றிணைத்து பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும்நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்களிற்கு அவரது அரசாங்கம் தீர்வை காணவில்லை, கடந்த கால அநீதிகளிற்கு நீதி வழங்குவதை நோக்கி முன்னேறவில்லை.
இலங்கை அரசாங்க நிறுவனங்கள் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடுகளை காட்டிவருகின்றன, பலகாரணங்களை முன்வைத்து நிலங்களை அபகரிக்கின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் போக்கு பௌத்தமதகுருமாரும் பாதுகாப்பு படையினரும் பல இந்து ஆலயங்களை கைப்பற்றி அவற்றை பௌத்த ஆலயங்களாக மாற்றியுள்ளனர்.
2017 முதல் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடைந்துள்ளது. 27 மனித உரிமை தொழிலாளர் உரிமை சூழல் பாதுகாப்பு பிரகடனங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.
இலங்கை இந்த விடயத்தில் இன்னமும் பேரம் பேசுவதில் தோல்வியடைந்து வருகின்றது.
ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டம், இது ஒரு மோசமான துஸ்பிரயோக சட்டமாகும், இது நீண்டகாலமாக சித்திரவதை மற்றும் தடுப்புக்காவலிற்கு காரணமாக விளங்குகின்றது. இது பெரும்பாலும் தமிழர்கள், முஸ்லீம்களை இலக்குவைக்கின்றது..
தேர்தலிற்கு முன்னர் அனுரகுமாரதிசநாயக்க இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார். 2017 முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இவ்வாறான வாக்குறுதியை வழங்கிவந்துள்ளனர்.
இதேவேளை எந்த வித ஆதாரமும் இன்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துகின்றது.
ஐக்கியநாடுகளில் இலங்கை குறித்த தீர்மான விடயத்தில் ஜேர்மனி முன்னர் தலைமை வகித்தது எனினும் 2020 ஆண்டிற்கு பின்னர் இதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
பொறுப்புக்கூறலிற்கான அழுத்தத்தை பேணவும், ஆதாரங்களை சேகரிப்பதை உறுதி செய்யவும், இலங்கை குறித்த தீர்மானம் இந்த ஆண்டின் இறுதியில் புதுப்பிக்கப்படுவது அவசியம்.
ஐநா முயற்சிகள் மற்றும் ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திசநாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை சீர்திருத்தங்களிற்கான தனது உறுதிமொழிகள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜேர்மன் சான்சிலர் வலியுத்த வேண்டும், இதுபோன்ற வாய்ப்புகளை தவறவிடக்கூடாது.