ஊர்ப்புதினம்

"சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம்

3 months 1 week ago

"சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம்

21 Jul, 2025 | 10:53 AM

image

கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்"  என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும்  வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.  

மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுப் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.

கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில், 

நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’  என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம். இதற்காக,  தேசிய சமாதான பேரலை எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தேசிய மட்டத்தில்  இதணை நாம் முன் எடுக்க உள்ளோம்.

எமது மாதாந்த அமர்வு மற்றும் பல்வேறு வகையான செயலமர்வுகளில் நாம் சகோதர இனம் என்ற சொல்லையே பயன் படுத்துகிறோம். பெரும் பான்மை, அல்லது சிறுபான்மை என்ற பதங்களைப் பயன் படுத்தும் போது ஒரு இனத்தை உயர்த்துவது போன்ற மன நிலையும் மற்றும் ஒரு இனத்தை தாழ்த்துவது போன்ற மன நிலையும் ஏற்படுகிறது.

அதே நேரம் சகோதர இனம் என்று கூறும் போது சகோதர உணர்வு ஏற்படுகிறது. எனவே அத்தகைய சொற்பிரயோகத்தை பிரபல்யப்படுத்தும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து வருகிறோம். அதில் ஒன்றாகவே மேற்படி ஸ்டிகர் போராட்டமும் அமைந்துள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/220516

செம்மணிப்புதைகுழி வழக்கைக் கையிலெடுத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு; அகழ்வில் இன்று பிரசன்னமாவர்

3 months 1 week ago

செம்மணிப்புதைகுழி வழக்கைக் கையிலெடுத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு; அகழ்வில் இன்று பிரசன்னமாவர்

914055823.jpg

செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று அகழ்வு நடவடிக்கைகளின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி, சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அகழ்வு நடவடிக்கைகளின் போது பிரசன்னமாவார்கள் என்று தெரியவருகின்றது.

https://newuthayan.com/article/செம்மணிப்புதைகுழி_வழக்கைக்_கையிலெடுத்தது_குற்றப்புலனாய்வுப்_பிரிவு;_அகழ்வில்_இன்று_பிரசன்னமாவர்

மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

3 months 1 week ago

மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவரும் அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கடமை தவறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்கியதற்காக அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளாக முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி, ஐஜிபி மற்றும் சிஐடியின் இயக்குநர் ஜெனரலிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அப்போதுதான் எதிர்காலத்தில் மக்கள் நியாயமாகவும் நியாயமாகவும் வாழக்கூடிய ஒரு நாடு கட்டியெழுப்பப்படும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/மைத்திரி-ரணில்-மற்றும்-க/

ஜெனீவாவில் முறையிட, ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தீர்மானம்!

3 months 1 week ago

ஜெனீவாவில் முறையிட, ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தீர்மானம்!

adminJuly 21, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளன.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே,“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறி தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

https://globaltamilnews.net/2025/218142/

கசூரினா கடற்கரையில் தீ!

3 months 1 week ago

கசூரினா கடற்கரையில் தீ!

adminJuly 21, 2025

00-2.jpg?fit=1080%2C810&ssl=1

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21)  பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/218136/

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும்

3 months 1 week ago

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும்

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை இன்றைய தினம் தெரிவு செய்தனர். 

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவி யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர். 

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவராக சி. இளங்கோதை, மட்டக்களப்பு மாவட்டம் வ.அமலநாயகி, அம்பாறை மாவட்டம் வ.செல்வராணி, திருகோணமலை மாவட்டம் எஸ்.செபஸ்ரியான்தேவி, வவுனியா மாவட்டம் சி.ஜெனிற்ரா, முல்லைத்தீவு மாவட்டம் ப.வீரமணி, கிளிநொச்சி க.கோகிலவாணி, மன்னார் மாவட்டம் கு.உதயசந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

https://adaderanatamil.lk/news/cmdbw6u5301emqp4kja18plf9

மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

3 months 1 week ago

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Published By: VISHNU

20 JUL, 2025 | 09:21 PM

image

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். 

குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் சனிக்கிழமை (19) தினம் ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது. 

அந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் தலை தூக்கிய நிலையில், அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

அதனை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர். 

அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறித்த சம்பத்தில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர்.

குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

0__1_.png

0__2_.png

0__3_.png

0__4_.png

0__5_.png

20250720_191218.jpg

20250720_191243.jpg

20250720_191206.jpg

https://www.virakesari.lk/article/220495

ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

3 months 1 week ago

20 JUL, 2025 | 05:10 PM

image

கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20)  மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன் போது குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம் எனவும் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினார். 

பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருப்பதாகவும் பொலிஸார் தங்களது வாக்குமூலத்தையும் பதிவு சரியான முறையில் செய்யவில்லை எனவும் நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் பக்க சார்பாக செயற்பட்டதாகவும் குறித்த தாயார் தெரிவித்தார். 

விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் இதன் போது வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிரிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார். 

குறித்த விபத்தான தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார். 

தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும் இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேரூந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் இதன் போது தெரிவித்தார்.

பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிரிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர். 

உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/220481

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

20 JUL, 2025 | 12:42 PM

image

திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/220451

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

3 months 1 week ago

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

FB_IMG_1753001841333-438x470.jpg

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம், ஜூலை 17ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி பின்வருமாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்:

4.5 கோடி ரூபாய் புனரமைப்புப் பணிகளுக்காக (பொது கழிவறை அமைத்தல் உட்பட)
2 கோடி ரூபாய் டிஜிட்டல் சேவைகளுக்காக
* 3.5 கோடி ரூபாய் கணினிகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவுக்காக

எனினும், புனரமைப்பு நிதியின் கணிசமான பகுதியை தனியான கழிவறை வசதியை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே நிதியின் அசல் நோக்கம் என்று வாதிட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்பதால், முழு நிதி ஒதுக்கீட்டையும் அதன் அசல் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சூடான விவாதத்தைத் தொடர்ந்து, நிதி டிஜிட்டல் சேவைகளின் மேம்பாட்டிற்காக மட்டுமே முறையாகவும் கண்டிப்பாகவும் செலவிடப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சரியான பொது கழிப்பறை வசதிகள் இல்லாததாலும், தற்போதுள்ள கழிப்பறைகள் நகர சபையால் மோசமாகப் பராமரிக்கப்படுவதாலும், பல பொதுமக்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் காரணம் காட்டி, நூலகத்தில் ஒரு தனி கழிப்பறை வசதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.

எனினும், டிஜிட்டல் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு கணிசமான பகுதியை திசை திருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நியாயத்தை கடுமையாக எதிர்த்தனர். யாழ்ப்பாண மாநகர சபையும் ஏனைய உள்ளூர் அதிகாரிகளும் தற்போதுள்ள பொது கழிப்பறைகளை முறையாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தொடர்பில்லாத உள்கட்டமைப்புக்காக திசை திருப்பக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், வட மாகாண சுற்றுலாத்துறை அமைச்சகம் இப்பிராந்தியத்தில் தேவையான இடங்களில் பொது கழிப்பறைகளை நிர்மாணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

https://akkinikkunchu.com/?p=333517

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

3 months 1 week ago

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

arjun.jpg

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டு நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்கும் என்பதை சமூக ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

2016இல் நிறுவப்பட்ட விஸ்டம் ஓக், முக்கியமாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்படுகிறது. நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடுகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்துடன் அவர் செய்த பணிக்காக மகேந்திரன் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2016 இல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, பிணைமுறி மோசடி வழக்கை எதிர்கொள்ள சிங்கப்பூர் சென்ற மகேந்திரனை நாடு கடத்த அரசாங்கம் முயற்சித்தது.

எனினும், சிங்கப்பூர் இதுவரை அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக, அவர் எந்தத் தடையும் இல்லாமல் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://akkinikkunchu.com/?p=333526

யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!

3 months 1 week ago

யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!

Vhg ஜூலை 20, 2025

1000547315.png

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திரிபுபடுத்தியமை, மற்றும் போலியான வீசாவுடன் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

https://www.battinatham.com/2025/07/blog-post_743.html

உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3 months 1 week ago

உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: RAJEEBAN

20 JUL, 2025 | 03:19 PM

image

செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான இடம்பெற்றது என்பதற்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளதாவது.

பொறுப்புக்கூறல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது உங்களிற்கு தெரியும்.

ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்னரே எங்களிற்கு அறிவித்திருந்தார்கள்.வார ஒரு நோக்கம் இருப்பதாக எங்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.

அப்படி சொல்லப்பட்ட நிலைமையில் வடகிழக்கை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

செப்டம்பர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முடிவடையும் வரை இங்கே வராதீர்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஏனென்றால் நீங்கள் அதற்கு முதல் இங்கு வந்தீர்கள் என்றால் அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் கேட்க விரும்புகின்ற அத்தனை வாக்குறுதிகளையும் செம்டம்பர் மாதம் வரப்போகின்ற அந்த தீர்மானத்தை எந்தளவிற்கு பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு பலவீனப்படுத்துவதற்கான முழு முயற்சியையும் செய்து இறுதியில் அந்த தீர்மானம் பலவீனப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களிற்கு அதிலிருந்து மீள முடியாத நிலையை ஏற்படுத்தும் என  அவர்கள் தங்கள் மகஜரில் வலியுறுத்தியிருந்தனர்.

தெற்கில் இருக்கின்ற சுமார் 100 மனித உரிமை அமைப்புகளும் அவசரமாக நீங்கள் வராதீர்கள் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

அதைஎல்லாவற்றையும் மீறித்தான் அந்த ஆணையாளர் வருகின்றார், அந்த ஆணையாளர் வந்தபோது ,துரதிஸ்டவசமாக என்னால் இங்கே இருக்க முடியாத ஒரு காலம்.

2021ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி ஒரு பொதுகடிதத்தை தமிழ் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அனுப்பியிருந்தோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் - நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

அந்த கடிதத்தில் அவ்வேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராயிருந்த சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார்.

மனித உரிமை விடயத்தில் உறுதியாக இணைந்து பயணிக்கின்ற அமைப்புகளும் கைச்சாத்திட்ட கடிதம்.

இன்றைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்த கடிதம் ,இன்றும் மிகவும் பொருத்தமான ஒரு கடிதம்.

உண்மையிலேயே தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயம் 100க்கு நூறு வீதமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடிதமாக அது காணப்படுகின்றது.

நாங்கள் அந்த கடிதத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டும் என விரும்பியதால் நாங்கள் அந்த முயற்சியையும் மேற்கொண்டு வெற்றியையும் அடைந்தோம்.

அனைத்து தரப்புகளும் அந்த கடிதத்தி;ல் கையெழுத்திட்டவை மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது இங்கேயிருக்கின்ற அமைப்புகளை சந்தித்த இடத்தில்,தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக சிங்கம் ஊடாக அது வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தை நாங்கள் வழங்கியபோது செம்மணியையும் உள்வாங்கித்தான் அதனை கொடுத்திருந்தோம்.

தற்போது இருக்கின்ற சூழல் பொறுப்புக்கூறல் படிப்படியாக குறைந்து பேச்சுபொருளாக மாறிவிட்ட சூழல்

போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான முயற்சிகள் பூஜ்ஜியத்திற்கு வருகின்ற இடத்திற்கு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து விட்டினம்.

அதனை இன்று ஒரு பேச்சுப்பொருளாக கூட இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தியுள்ளார்கள்.

கடந்த தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றது அரசாங்கத்தை விசாரணைமுன்னெடுக்க சொல்லி  செய்யசொல்லி கேட்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் அதுவும் அந்த தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போரின்கடைசிக்கட்டத்தில் ,இடம்பெற்ற விடயங்களை விசாரணை செய்யவேண்டும் என்பதுதான் 2012 முதல் இந்த தீர்மானங்களின் குறிக்கோளாக உள்ளது.

செம்மணி போர்நடைபெற்ற காலத்தில்தான் இடம்பெற்றது.ஆனால் இந்த தீர்மானம் விரும்புகின்ற அந்த காலப்பகுதிக்கு வெளியே.

புதுதீர்மானம் செப்டம்பரில் வருகின்றது, செம்மணி எப்போதோ மறைக்கப்பட்ட ஒரு விடயம்,வெறுமனே 15 உடல்களை கண்டுபிடித்த இடத்தில் அதன் பின்னர் அரசாங்கம் விசாரணைக்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன்கதிர்காமர் இருந்தவேளை இது ஒரு பொய்,மனித புதைகுழிகள் இல்லை குற்றவாளியொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இடத்தில கோபத்தில எல்லா பழிகளையும் அரசாங்கத்தின் மீது போட விரும்பின நிலையில் தான் அந்த வாக்குமூலம் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லைஉண்மைதன்மையும்  என தெரிவித்து முழுமையாக மூடினார்கள்.

அதனை கிடப்பில் போடுவதற்கு தான் அவர்களின் முழுமுயற்சியும் இருந்தது.

சந்திரிகாவின் அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு பிறகு வந்த ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமும் இவை எவற்றையும் எடுத்துப்பார்க்க விரும்பவில்லை, இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த அரசாங்கத்தை பற்றி நாங்கள் சொல்லவேண்டியதில்லை.

செம்மணி பொய் 600 உடல்களே கொல்லப்பட்டு புதைக்கப்படவில்லை என சொல்லப்பட்டு ஒரு முடிவாகயிருந்த நிலையில் தான், செம்மணியின் இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.

செம்மணி எங்களிற்கு இரண்டு சந்தர்ப்பங்களை தருகின்றது,

ஒன்று ஜெனீவாவில் இருக்கின்ற சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது.

இரண்டாவது விடயம் செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது.

அதாவது நடந்தது இரண்டு தரப்புகளிற்கும் இடையிலான ஒரு போர் அல்ல,இதற்கு பின்னால் ஒரு சரித்திரம் உள்ளது, தமிழ் மக்களிற்கு நடந்த அநியாயங்களை சரியாக பார்த்தால் அது இறுதியில் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்ற எல்லா விடயத்தையும் உள்வாங்கி யார் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பதுதான் எங்களிற்கு கூட தேவைப்படுகின்றது.

அப்போதுதான் எங்களிற்கு உண்மையான நீதியும் நியாயமும் கிடைக்கும்.

இல்லாவிடில் ஒரு சரித்திரத்தை மாத்திரம் மூடிமறைத்துவிட்டு ஒரு பக்கத்தை மாத்திரம் படமெடுத்துவிட்டு  நீங்கள் இதற்குரிய தீர்வை கொண்டுவாருங்கள் என கேட்பது நியாயத்தைகொண்டுவரப்போவதில்லை.

செம்மணி எங்களிற்கு அந்த கதவையும் திறக்கவைத்துள்ளது.

ஆகவே இன்று எங்களிற்கு உள்ள தேவை என்னவென்றால் இந்த முழு விடயத்தையும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதே.

செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இது ஒரு ஆபத்தானது

ஏனென்றால் இலங்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு உரிய சட்டத்தரணியாக செயற்படுகின்றது அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் வந்தாலும் அவர்கள்தான் போவார்கள், அதேவேளை அவர்கள் தான் குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.அரசதரப்பில் இருக்கின்ற பிழை செய்தவர்களிற்கு எதிராகவும் அவர்கள்தான் வழக்கை தாக்கல் செய்வார்கள்.

இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது இலங்கையின் சட்டத்துறையின் ஒரு பொதுப்பிரச்சினை.அந்த பொதுப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம்.

அதற்கும் இனப்பிரச்சினை காலத்தில் இலங்கையில் நடந்த அநியாயத்திற்கும் இடையில்  எந்த தொடர்பும் இல்லை.

அவ்வாறான சுயாதீன அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதன் ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களிற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.

ஏனென்றால் இலங்கையில் இருக்ககூடிய இனப்பிரச்சினை இனங்களிற்கு இருக்ககூடிய பிரச்சினை,அந்த இனங்கள்  என பார்க்கின்ற போது இலங்கை அரசு என்பது ஒரு இனத்தின் சொத்தாக மாறியுள்ளது.

ஏனைய இனங்களிற்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கை அரசின் கட்டமைப்பே மாறியிருக்கின்றது. என்ற கருத்தை சொல்லித்தான் முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் அவர்கள் தெளிவாக சொல்லியிருந்தார் ஒரு உள்ளக விசாரணை இலங்கையிலே பொருத்தமே இல்லாதது என்று.

இலங்கைக்கு உள்ளே அந்த இனப்பிரச்சினையின் தாக்கம் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையே நடுநிலைதன்மை இழக்க வைத்திருக்கின்றது என்பதும் அது ஒரு போதும் ஒரு உள்ளக விசாரணை ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த குற்றங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்காது.

ஆகவே ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் , சர்வதேச விசாரணைதான் மிகப்பொருத்தம் ஆனால் ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் என சொன்னார்.

அதற்கு ஒரு விட்டுக்கொடுப்பாக நாங்கள் தமிழ் தரப்பு தெரிவித்தது இதூன் கலப்புபொறிமுறையின் முழு கட்டுப்பாடும் சர்வதேச தரப்பிடம் இருந்தால் தான் கலப்பு பொறிமுiயை நாங்கள் பரிசீலிப்போம் . இதுதான் எங்களின் நிலைப்பாடாகயிருந்தது.

இன்றைக்கு திட்டமிட்ட வகையிலே சுயாதீன வழக்குரைஞர் அலுவலம் ஒன்று தேவை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுடைய விடயத்திற்கு தீர்வாக அதனை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

https://www.virakesari.lk/article/220468

பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால

3 months 1 week ago

பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால

General20 July 2025

1752997057_2095807_hirunews.jpg

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.

இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

https://hirunews.lk/tm/410744/important-matters-related-to-pillaiyaan-to-be-brought-to-court-soon-minister-ananda-wijepala

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு

3 months 1 week ago

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு

1006468013.jpeg

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/article/அனைத்து_ஆசிரியர்களும்_பட்டதாரிகளாக_இருப்பது_கட்டாயம்!_பிரதமர்_அறிவிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

3 months 1 week ago

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

adminJuly 20, 2025

IMG-20250719-WA0043-1024x576-1.jpg?fit=1

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.  எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும், அதற்கு நீதி கோரிய போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதன் போது, எட்டு மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நடுவதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காக குறித்த விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

IMG-20250719-WA0038-1024x576-1.jpg?resizIMG-20250719-WA0040-1-1024x576-1.jpg?resIMG-20250719-WA0041-1-1024x576-1.jpg?res

https://globaltamilnews.net/2025/218090/

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

3 months 1 week ago

Chemmani_Kumanan.jpeg?resize=750%2C375&s

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந் நிலையில், நாளை(21) முதல் 15 நாட்களுக்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்பு கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன.

இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 https://athavannews.com/2025/1439847

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் - காரைதீவு பிரதேச தவிசாளர்

3 months 1 week ago

20 JUL, 2025 | 11:24 AM

image

குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே  போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் அடிப்படையில் சனிக்கிழமை (19) காரைதீவு - 03 லெனின் வீதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் பாஸ்கரன்,

எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் சட்ட விரோதமாக திண்மக்கழிவுகளை வீதிகளில் கொட்டுகின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளை, சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

எனவே, சுத்தமான, சுகாதாரமான சூழலையும் அழகான காரைதீவு பிரதேசத்தையும் உருவாக்குவதற்காக எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகிறோம்.

எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது போன்று எதிர்காலத்திலே வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் விடயத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் முயற்சிகள் செய்து வருகின்றோம்.

அதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் எங்களுக்கு தர வேண்டும். மாறாக, இந்த  கேட்டுக்கொள்வதோடு, எமது பிரதேச சபையின் ஊழியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/220440

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

3 months 1 week ago

20 JUL, 2025 | 10:41 AM

image

(இராஜதுரை ஹஷான்)

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம்  முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,  தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர்  விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நாட்களான சிசு ஒன்று வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து  சமூகத்துக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்க வேண்டிய பொறுப்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.

பெண்கள் தந்தையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அல்லது பொறுப்பேற்க முடியாத நிலையில் குழந்தையை பிரசவிக்க நேரிட்டால் பாரதூரமான சுகாதார பாதிப்புக்கும், சமூக நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அமைச்சுக்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது.

பொறுப்பேற்க முடியாத நிலை மற்றும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஆகிய காரணிகள் பெண்கள் அச்சமடைந்து இவ்வாறு தாம் பெற்ற குழந்தையை கைவிட்டுச் செல்கிறார்கள். மனிதர்களின் உளவியல் தொடர்புகளை தடுக்க முடியாது, சட்டமியற்ற முடியாது.

இருப்பினும் அந்த உளவியல் ரீதியிலான தொடர்பில் பிரதிபலனாக  பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள  வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,தாயின் குடும்பவழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன. பெண்கள் பிள்ளை பெற்றவுடன் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

பெற்ற குழந்தையை வளர்க்க முடியாவிடின் பிறிதொரு தரப்பினருக்கு அந்த குழந்தையை கையளிக்கும் சட்டத்திலான நிறுவன கட்டமைப்பு நாட்டில் உள்ளது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வழங்கப்படும்.

குருநாகல் மாவத்தகம பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசு தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளது. இந்த சிசுவின் தாயை தேடி விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாயை கண்டுப்பிடித்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தாய் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடும் சமூக நிலையே காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/220434

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29 ஆரம்பம்

3 months 1 week ago

20 JUL, 2025 | 09:12 AM

image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையி, மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

குறித்த தீர்மானங்களின் படி, ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. 

உற்சவ காலங்களில் ஆலய சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்பு செய்யமுடியும். உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/220419

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr