ஊர்ப்புதினம்

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கும் சாத்தியம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 10:11 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். 

எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது. இதன் பிரகாரம் பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

இதன் பிரகாரம், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் ஆளும் கட்சியின் உள்வீட்டு மோதல்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும் ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடின்மையை சரிசெய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216216

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 09:23 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை  மேற்கொண்டு  செவ்வாய்கிழமை (03) இலங்கைக்கு வருகிறார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.

இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது 'அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு பேரவையின் மாநாட்டில் பங்பேற்றிருந்தார்.

இதன் போது குவாட் அமைப்பின் பங்காளிகளான அமெரிக்கா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற முதல் சந்திப்பு என்பதால் முத்தரப்புமே மிக ஆர்வமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டனர்.

அதே போன்று மூன்று நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இதன் போது ஒப்புக்கொண்டன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒத்துழைப்பின் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதுடன், இரு நாடுகளுக்க இடையில் 78 வருடகால இராஜதந்திர உறவுகள் உள்ளன.

அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பொதுவான நலன்களை பாதுகாப்பதிலும் பொருளாதாரம், பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் உட்பட பரந்துப்பட்ட ஒத்துழைப்புகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகள் வலுப்படுகின்ற நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216215

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

3 months 2 weeks ago

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

adminJune 1, 2025

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.

சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

43-1.jpg?resize=800%2C450&ssl=143-2.jpg?resize=800%2C450&ssl=143-4.jpg?resize=800%2C378&ssl=143-5.jpg?resize=800%2C450&ssl=143-6.jpg?resize=800%2C450&ssl=143-12.jpg?resize=800%2C450&ssl=143-15.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/216200/

யாழ் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் கபிலன் உறுதியுரை – சொன்னதை செய்வாரா சுமந்திரன்

3 months 2 weeks ago

யாழ் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் கபிலன் உறுதியுரை – சொன்னதை செய்வாரா சுமந்திரன்

adminJune 1, 2025

kapilan-scaled.jpg?fit=1170%2C688&ssl=1

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் உறுதியுரையை எடுத்துக் கொண்டார்.  யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்கும் நிகழ்வு, நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையை மேற்கொண்டார்கள். இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட (விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ். மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையை எடுத்துக்கொண்டுள்ளார்.

“யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனைத் தடுப்பதற்கு வழக்குத் தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/216194/

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்படுகின்றன; தரம் ஒன்று பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது - வடக்கு ஆளுநர் கவலை

3 months 2 weeks ago

31 MAY, 2025 | 05:10 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

குரும்பசிட்டி பொன். பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 'பரமானந்தம்' மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க. வசந்தரூபன் தலைமையில்  சனிக்கிழமை (31)  நடைபெற்றது. 

இந்த நிகழ்வில்  பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

போரால் இந்தப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது.

மீள்குடியமர்ந்த பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவதென்பது கடினமானதுதான். ஆனால் அதைச் செய்துள்ளார்கள். 

பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்கு பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள். 

அவர்களைப் பாராட்டுகின்றேன். அதேபோல பாடசாலையின் தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன் இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது. 

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல, மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. 

இங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றவேண்டும். 

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது. இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை.

வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள் வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப் பயன்படுத்தவில்லை. 

முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான் கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். 

அவர்கள் இங்கிருந்து தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும் என்றார்.  

IMG-20250531-WA0007.jpg

IMG-20250531-WA0023.jpg

IMG-20250531-WA0017__2_.jpg

IMG-20250531-WA0006__1_.jpg

https://www.virakesari.lk/article/216196

மாங்குளம் நகரில் 3007 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

31 MAY, 2025 | 05:36 PM

image

2017 மார்ச் 8ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (31) 3007 ஆவது நாட்களை எட்டியுள்ளது. 

இதனை முன்னிட்டு, மாங்குளம் நகரில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதந்தோறும் இவ்வாறு மாபெரும் முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் உறவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்நாளை குறிப்பாக நினைவுகூர்ந்தனர்.

இலங்கையில் நீதி கிடைக்காது எனும் நம்பிக்கையுடன், சர்வதேசம் ஊடாகவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

இன்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என உறவுகள் தெரிவித்துள்ளனர்.

1000301062.jpg

1000301060.jpg1000301047.jpg1000301046.jpg1000301048.jpg1000301058.jpg1000301030.jpg

https://www.virakesari.lk/article/216205

123 இந்திய ரோலர் படகுகளை கடலுக்குள் போடுவதற்கு நடவடிக்கை; கடற்தொழில் நீரியல் வள அதிகாரி

3 months 2 weeks ago

31 MAY, 2025 | 03:00 PM

image

இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலுக்குள் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில்  யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (30)  இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில்  அத்துமீறிய இந்திய ரோலர் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படகுகள் தரித்து நிற்பதால் எமது உள்ளூர் மீனவர்கள் தமது படகுகளை நிறுத்துவதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களை குறித்த ரோலர் படகுகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறன.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் கடலிலுக்குள் போடுவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/216174

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்

3 months 2 weeks ago

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது.

ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி நில அளவையாளர் நாயகம், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட ஆளுநர், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில், வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணியுடன் தொடர்புடைய முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்கும், அதற்குப் போதுமான முக்கியத்துவமுள்ள வகையில், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்குமான திட்டமாக இது அமைகின்றது.

இத்திட்டம், இலங்கையின் நீண்டகாலப் போர் பின்னணியில் காணிக்கான சம அளவிலான அணுகல் இல்லாமை தொடர்ச்சியான முரண்பாடுகளுக்கான மூலக்காரணமாக இருந்து வந்ததையும், மக்களின் இடம்பெயர்வு, மீளக்குடியமர்தல் மற்றும் சமூகங்களின் மீளிணைவு உள்ளிட்ட சிக்கல்களை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான இவ்வகை நம்பிக்கையின்மை நீண்டநாள் அமைதிக்குத் தடையாகவும், சமூக மாற்றத்துக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. இவை, ஒழுங்கற்ற கொள்கைகள், செயலாக்க வலுவிழப்புகள் மற்றும் நுட்பக்குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்தும் உருவாகின்றன.

 

இந்தச் சவால்கள் பலதரப்பட்டவையாக உள்ளன — தனிநபர் உரிமை விவகாரங்கள், இடம்பெயர்வின் தாக்கங்கள், சமூகங்களுக்கிடையிலான வளங்களுக்கான முரண்பாடுகள், இராணுவம் கைப்பற்றியுள்ள குடியேற்ற நிலங்கள், சமூக கலந்தாய்வின்றி பாதுகாப்பு அல்லது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் என வௌ;வேறு நிலைத்தன்மையற்ற சிக்கல்கள் உள்ளன.

இந்தச் சூழலில், இடம்பெயர்ந்தோர், அகதிகள், மீண்டுவருபவர்கள், குடும்பத் தலைவியரான பெண்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், இளையோர்கள் ஆகியோரது நுட்பமான நலன்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.

நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள், பெண்களுக்கு சட்டப்படி உரிமைகள் இருப்பினும் நடைமுறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தத் திட்டம் இதனை முற்றாக உணர்ந்தும் கவனத்துடனும் செயல்படுகிறது.

அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபை, சிவில் சமூகம், சமூகத் தலைவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காணிகளை விடுவித்தல், மீளக்குடியமர்தல், சமூக மீளிணக்கம் மற்றும் வீடு மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான நீடித்த, சமச்சீர் தீர்வுகளை வழங்கும் திறனுடன் செயல்படுதல் – இதன் மூலமாக எதிர்கால முரண்பாடுகளைத் தவிர்த்து, சமாதானத்தையும் சமூக நம்பிக்கையையும் கட்டியமைக்குதல் என இந்தத் திட்டத்தின் நோக்கம் தெளிவானது.

எனவே, இந்தத் திட்டத்தை எங்களால் முடிந்த அளவு நேர்த்தியான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டம், நம்பிக்கையை மீட்டெடுத்து, காணி என்பது உறுதியான சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், அனைத்து சமூகங்களுக்கும் ஒரு நிலைத்தமைப்பாக அமையும் வகையில் அமையவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர், யு.என். ஹபிட்டாட் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் திட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.

WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_95

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணிப் பிரச்சினைகள் வேறு வேறானவை என மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் தற்போது அங்குள்ள காணிப் பிரச்சினைகள் எத்தகைய தன்மை வாய்ந்தவை அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை இந்தத் திட்டத்தின் ஊடாக வழங்கலாம் என்பது தொடர்பிலும் மாவட்டச் செயலர்களும், மாகாண காணி ஆணையாளரும் குறிப்பிட்டனர்.

இதன்போது வடக்கின் 4 மாவட்டச் செயலர்களும், சூம் செயலி ஊடாக இணைந்த வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும் வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அந்தத் திணைக்களத்தின் முறைய வர்த்தமானியை மீளப்பெறுவது தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றபோதும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை எனவும் விசனத்துடன் அதிகாரிகளும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர். அது முக்கிய பிரச்சினை என்றும் அதுவும் இந்தத் திட்டத்தின் ஊடாகவேனும் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தத் திட்டத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெறும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/318549

கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்வு!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

31 MAY, 2025 | 02:04 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வந்த கலாநிதி சுதர்சினி உபேந்திரன் சனிக்கிழமை (31) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில், பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய, திறமை மற்றும் தகைமையின் அடிப்படையில் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் வழங்கிய விண்ணப்பத்தின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அவற்றை அண்மைய முறையில் பரிசீலித்த பேரவை, அவரை பௌதிகவியல் துறையின் பேராசிரியராக நியமிப்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.

https://www.virakesari.lk/article/216183

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

3 months 2 weeks ago

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

May 31, 2025 10:50 am

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.

வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும்.

முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார்.

https://oruvan.com/have-we-lost-the-north-sarath-weerasekara-questions/

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

3 months 2 weeks ago

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார். 

இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். 

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சா...
No image previewஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேக...
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார்.

https://adaderanatamil.lk/news/cmbbpk68p016yqpbszibgoe31

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

3 months 2 weeks ago

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30)  கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். 

இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmbbikebv016rqpbsob2cvcxs

பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!

3 months 2 weeks ago

பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!

உள்ளூராட்சி மன்றங்களில்  ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.

  

கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்துக் கலந்­து­ரை­யாடும் நோக்கில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடை­யி­லான சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் பதில் செய­லாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.

இச்­சந்­திப்­பின்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய அர­சியல் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­பது அவ­சியம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­ட­தா­கவும், அதன்­படி தமது இரு கட்­சி­களும் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட்டால் அவ்­விரு மாகா­ணங்­க­ளிலும் கணி­ச­மான சபை­களில் பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கைப்­பற்­ற­மு­டியும் என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் கஜேந்­தி­ர­குமார் தெரி­வித்தார்.

அதற்குப் பதி­ல­ளிக்­கையில், இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்­கப்­பாடு எட்­டப்­படும் பட்­சத்தில் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முடியும் எனவும், மாறாக வெறு­மனே தேர்­தலை இலக்­கா­க­வைத்து சபை­க­ளையும், பத­வி­க­ளையும் கைப்­பற்­று­வ­தற்­காக மாத்­திரம் கூட்­டி­ணை­ய­வேண்­டிய அவ­சியம் தமக்கு இல்லை எனவும் எடுத்­து­ரைத்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­தோடு நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் தமிழ்த்­தே­சி­யத்தைப் பாது­காப்­ப­தற்கே தமிழ்­மக்கள் ஆணை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும், எனவே தமிழ்த்­தே­சி­யத்தை முன்­னி­றுத்தி வாக்கு கோரிய சகல கட்­சி­களும் அதனைப் பாது­காத்து நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் எனவும் தான் தமி­ழ­ர­சுக்­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக கஜேந்­தி­ர­குமார் கூறினார்.

இதே­வேளை இச்­சந்­திப்பு தொடர்பில் கருத்து வெளி­யிட்ட இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

https://seithy.com/breifNews.php?newsID=334001&category=TamilNews&language=tamil

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

3 months 2 weeks ago

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
 
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/தடை-செய்யப்பட்ட-அமைப்புகள்-வர்த்தமானி-வெளியீடு/175-358299

முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்

3 months 2 weeks ago

முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்

adminMay 30, 2025

முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். என  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றத்தான் வேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை வினைத்திறனாக மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் சிறந்த தலைமைத்துவம் இருக்கவேண்டும்.

சில இடங்களில் தீராத பிரச்சினைகள் கூட சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் தீர்ந்துவிடும். ஆனால் சில இடங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தலைமைத்துவம் ஒழுங்காக அமையாவிட்டால் இழுபடும்.

முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதம் வரையில் தமது சபையின் ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்யவேண்டியுள்ளன. எஞ்சிய நிதியிலேயே அபிவிருத்தி வேலைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியதாகவுள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தாலும் எங்களின் சில செயலாளர்களின் வேலைகளையும் நான் பார்க்கவேண்டியிருக்கின்றது. சில செயலாளர்கள் மக்களைச் சந்திப்பதேயில்லை. தங்களைச் சந்திப்பவர்களுடன் எரிந்து விழுகின்றார்கள். இதனால் மக்கள் அவர்களைச் சந்திப்பதைவிட என்னைச் சந்திக்கலாம் என்று வருகின்றனர். மக்களுக்காகத்தான் பதவிகளில் இருக்கின்றோம் என்பதை அதிகாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216142/

திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கேள்வி

3 months 2 weeks ago

திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கே

http://seithy.com/siteadmin/upload/mano-ganesan-190525-seithy.jpg

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  

சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம் தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்?

75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=333979&category=TamilNews&language=tamil

திருக்கேதீச்சரத்தின் வருடாந்த திருவிழாவுக்காக யாழிலிருந்து கொடிச்சீலை எடுத்துச்செல்லப்பட்டது!

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 05:29 PM

image

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது.

கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் என்பவரின் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, கொடிச்சீலை திருக்கேதீச்சர ஆலயத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

1982ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில், யுத்த காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டிருந்தது.

2022ஆம் ஆண்டு திருக்கேதீச்சரம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாக இந்த ஆண்டு கொடிச்சீலை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216113

“நீ கும்பிடுவது சிலையின் தலையையா? காலையா? - தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மனோ எம்.பி. வலியுறுத்தல்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 04:51 PM

image

ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளேன். அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர் என்றும் மனோ குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது,

தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கமலநாதனை தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி தங்கி உள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.

https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o

பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!

3 months 2 weeks ago

IMG_4954.jpg?resize=750%2C375&ssl=1

பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால்  இன்று காலை  முற்றுகையிடப்பட்டு  தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காரியாலயத்தின் நிலம் உடைக்கப்பட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரது கட்சிக் காரியாலயத்தில் வைத்து அவரைக்  கைது செய்து  3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையிலேயே அவரது கட்சியின் காரியாலயம் சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று  முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது காரியாலயத்தில்  இருந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவே உட் செல்லவே முடியாதபடி அப்பகுதியில்   பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரியாலயக் கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433937

யாழில் கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 11:57 AM

image

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா.செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை (30) சனிக்கிழமை (31) இடமெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நேரம் வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 2.00 மணிக்கு மற்றுமொரு தனியார் விருந்தினர் விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250530-WA0035.jpg

IMG-20250530-WA0046.jpg

IMG-20250530-WA0052.jpg

IMG-20250530-WA0053.jpg

https://www.virakesari.lk/article/216065

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr