ஊர்ப்புதினம்

ஆயுர்வேதத் துறையில் 304 வைத்தியர்களுக்கு நியமனங்கள்

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையின் ஆய்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதனை அவர் வெளிப்படுத்தினார்.

ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் இணைப்பது சாத்தியமில்லை எனவும், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குப் பின்னர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும், சில வைத்தியர்களை சுற்றுலாத் துறையில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் மேற்கத்திய வைத்தியத்துடன் ஆயுர்வேதம், சித்தம், மற்றும் யுனானி வைத்திய முறைகளும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், இவ்வாண்டு பாதீட்டில் உள்ளூர் வைத்தியத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இத்துறைகள் புறக்கணிக்கப்படாமல், அனைத்து வைத்திய முறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்குவது தனது பொறுப்பு எனவும், இவை குறைவாக கவனிக்கப்படும் துறைகள் அல்ல எனவும் அவர் வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmd2z59ml015iqp4kj5eszobo

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனை தடை!

3 months 2 weeks ago

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

14 JUL, 2025 | 02:19 PM

image

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய  வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், போதைப்பொருள் பாவனை குறைவடைவதை காணக்கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவர். குறிப்பாக, மாணவர் சமுதாயம்.

இவ்வாறிருக்க, ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

தாங்கள் சிறிலங்காவை துப்புரவு செய்ய முன்வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே துப்புரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன :

1. பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்களோ,  அதேபோல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பாவிப்பதைக் கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.

3. பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும். இதற்குக் காரணம், பெற்றோருக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே, போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20250714_115832.jpg

20250714_115850.jpg

https://www.virakesari.lk/article/219964

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

3 months 2 weeks ago

Published By: VISHNU

14 JUL, 2025 | 01:54 AM

image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp_Image_2025-07-13_at_2.50.04_PM.

வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

WhatsApp_Image_2025-07-13_at_2.50.16_PM.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முறையான திட்டத்தின் கீழ் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்.போதனா வைத்தியசாலையின்  சிகிச்சை சேவைகள் அமைச்சர் கண்காணித்தார்.

WhatsApp_Image_2025-07-13_at_2.50.04_PM_

இதன்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், உள்நோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு,  வைத்தியசாலையின் ஏனைய சிகிச்சை துறைகள் மற்றும் வைத்தியசாலையின் மேம்பாட்டுத் திட்டங்கள் அவற்றின் தற்போதைய நிலை, எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், உள்நோயாளிகளின் நலன்  தொடர்பிலும் கேட்டரிந்துக் கொண்டார். 

WhatsApp_Image_2025-07-13_at_2.50.05_PM.

மேலும் வைத்திய ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய அமைச்சர் குறிப்பிடுகையில்,

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும்.  வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு அவசியமான அனைத்து சிகிச்சை சேவைகளையும் முறையாக வழங்கி அவர்களை ஆரோக்கியமான நபர்களாக மாற்றுவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்த நாட்டில் நோய்தாக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரையும் குணப்படுத்துவது சுகாதாரத்  துறையில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் முதல்  சுகாதார அமைச்சர் வரையான நாம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆகையால் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்.  யாழ்.போதனா வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்துக்கமைய எதிர்வரும் நாட்களில் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/219916

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது முறையற்றது - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

3 months 2 weeks ago

13 JUL, 2025 | 05:12 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது, இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடங்கள் செயற்படுத்தப்படவில்லை.

இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பு முறைமையை மாற்றியமைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. 

ஆட்பதிவு திணைக்களம் டிஜிட்டல் ஆளடையாள அட்டைக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் 99 சதவீதமளவில் நிறைவு செய்துள்ளன. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் ஆளடையாள அட்டையை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்திருந்தது.

இந்திய கொள்கையுடன் செயற்பட்ட இந்த அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும், இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. 

டிஜிட்டல் முறைமையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தான் இந்த திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் தனிப்பட்ட தரவு சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கான விலைமனுகோரல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லை. 

இந்தியாவில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் பத்திரத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்புக்கு கசிந்தால் இந்திய நிறுவனம் 10 சதவீதமளவில் தான் பொறுப்புக்கூறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/219889

பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!

3 months 2 weeks ago

பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!

1935916825.jpg

அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. 

தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன்.  நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

https://newuthayan.com/article/பிள்ளையான்_ஊடாக_சாட்சியத்தை_பெறவே_அரசு__முயற்சி_-_உதய_கம்மன்பில_கருத்து!

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

3 months 2 weeks ago

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

1080731357.jpeg

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கொக்குத்தொடுவாய்-முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசு தேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத்தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள் அவர்களின் வயது போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/வெடிப்புச்_சம்பவங்களில்_இறந்தோரே_கொக்குத்தொடுவாய்_புதைகுழியில்

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!

3 months 2 weeks ago

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!

adminJuly 14, 2025

Mannar-Pali.jpeg?fit=1170%2C660&ssl=1

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது

குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளால் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர்

https://globaltamilnews.net/2025/217843/

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

3 months 2 weeks ago

Ponzi-scheme.webp?resize=750%2C375&ssl=1

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும்.

https://athavannews.com/2025/1438963

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு

3 months 2 weeks ago

13 JUL, 2025 | 02:41 PM

image

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது.

இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த  இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் தெரிவிக்கையில், 10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால்  அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.

ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். 

மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது.

வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது.  நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/219869

தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன்

3 months 2 weeks ago

தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன்

13 JUL, 2025 | 11:19 AM

image

(நா.தனுஜா)

தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி ஒற்றுமை முயற்சிகளில் தமிழரசுக்கட்சி பங்கெடுக்குமா என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர், அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்துதான் பயணிக்கவேண்டும் எனவும், தமிழர்களுக்கான நியாயமான சுயாட்சியை உறுதிப்படுத்துவதற்கு கூட்டுமுயற்சி அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மிகமோசமான வார்த்தைப்பிரயோகங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டதன் பின்னர், மீண்டும் தற்போது ஒற்றுமை முயற்சி பற்றிப் பேசுகையில், ஏற்கனவே பேசிய மோசமான பேச்சுக்களே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/219843

வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

3 months 2 weeks ago

5-5-1.jpg?resize=750%2C375&ssl=1

வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளடங்குகின்றன.

மேலும், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளையும் கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும், சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.

இதுபோன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார்.

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடமானது ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை (German Red Cross Warendorf Branch) மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டதுடன் அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438940

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

13 JUL, 2025 | 10:50 AM

image

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்   மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

காலி தொடக்கம் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆகையினால் காலி தொடக்கம் மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/219840

இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

3 months 2 weeks ago

இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

13 JUL, 2025 | 09:13 AM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார்.

செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப்புதைகுழி என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த ஒரு விடயமாகும். கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை' என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்தமட்டில், அவ்வேளையில் ஆட்சிபீடத்தில் இருந்த மற்றும் அதனைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய தரப்பினர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான தரப்பினர் என்பதனால், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தையும், இனவழிப்பையும் அப்போதைய அரசாங்கங்களுடன் இணைந்து ஊக்குவித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, அக்காலப்பகுதியில் உருவான செம்மணி போன்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் எவ்வாறு நீதியான விசாரணைகளை முன்னெடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினார்.

ஆகவே செம்மணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத்தின் தலையீடோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணையோ இன்றி, அதுகுறித்த உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவே முடியாது என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/219830

முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு

3 months 2 weeks ago

முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு

13 JUL, 2025 | 09:19 AM

image

(எம்.வை.எம்.சியாம்)

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது.

இதற்கு பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்ட தடைகளும் இல்லையென அறிவித்தார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கான தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் தாம் வசித்த வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.

சந்தேகநபரான ராஜிதவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பெற்றுக் கொள்வதற்கான நகர்த்தல் பத்திரம் சமர்பித்து இதனை நேற்றுமுன்தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது. 

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தொடர்ச்சியாக தவிர்த்து வந்ததாக ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்தது. மேலும் 15 நாட்களாக சந்தேகநபரின் கைதொலைபேசியும் செயல் இழந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

சந்தேகநபருக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அறிவித்து அனுப்பிய கடித்ததுக்கு அவர் வர முடியாது என தெரிவித்து பதில் அனுப்பட்ட கடிதம் அல்லது மருத்துவ அறிக்கை மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதா என நீதவான் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறித்த ஆவணங்கள் முறைப்பாட்டு தரப்பினரிடம் இல்லை எனவும் அவை முறைப்பாட்டு கோப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டது. 

குறித்த ஆவணங்கள் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டிய நீதவான் முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்டத்தடையும் இல்லை என குறிப்பிட்டார். 

அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு அவசியம் இல்லை எனவும் பிடியாணை அவசியமாயின் அதற்கான ஆவணங்களை தயாரித்து மன்றில் சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/219831

இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி!

3 months 2 weeks ago

இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி!

452533409.jpg

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.

தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போரின் போது, சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரணதண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காணமுடிகிறது. 

அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதமேந்திய படையினர் வசமிருந்தமையும், 

பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன. 

இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், 

நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, 

சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார்.

https://newuthayan.com/article/இறுதி_யுத்தத்தில்_மீறப்பட்ட_மனிதாபிமானச்_சட்டம்_-_நீதிமன்றத்தை_நாடவுள்ள_சிங்கள_சட்டத்தரணி!

வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்!

3 months 2 weeks ago

வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்!

நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

நயினாதீவு வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இந்த திட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் வசந்த் சிவாஜிராசாந்த் மற்றும் ஜசிந்தா ஆகியோர், அத்துடன் ஜெர்மன் செஞ்சிலுவை சங்கம், வென்டோர்ஃப் கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் தமது ஆதரவை வழங்கினார்கள்.

புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை அடங்கும்.

இது ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.

சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.

இதுபோன்ற தீவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றும் அவர் கூறினார்.

சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார்.

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் பராமரிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சகம் பலவீனமாக உள்ளது என்றும், எதிர்காலத்தில், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை வழங்கும்போது, அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் நிறுவனங்களுடன் அந்த பௌதீக சொத்துக்களை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வைத்தியசாலைகளில் ஆம்புலன்ஸ்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கின.

https://www.samakalam.com/வடக்கில்-ஒரு-தாதியர்-கூட/

வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

3 months 2 weeks ago

IMG_5262-scaled.jpeg?resize=750%2C375&ss

வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 36 ஆவது நினைவுதினம் கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் நூலகத்தில் இன்று இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில், கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_5247-scaled.jpeg?resize=600%2C450&ss

New-Project-1-5.jpg?w=600&ssl=1

New-Project-145.jpg?w=600&ssl=1

https://athavannews.com/2025/1438928

2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!

3 months 2 weeks ago

IMG_7722.jpeg?resize=640%2C336&ssl=1

2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும்.

இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பணவனுப்பல் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.9% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது.

2024 ஆம் ஆண்டிற்கான மொத்த புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 6.57 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1438922

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது!

3 months 2 weeks ago

MediaFile-6.jpeg?resize=750%2C375&ssl=1

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகின் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1438919

“விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்”

3 months 2 weeks ago

“விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்”

adminJuly 12, 2025

43-5.jpg?fit=1170%2C1374&ssl=1

தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் விடுதலையை வலியுறுத்தி, ” விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம் ” எனும் தொனி பொருளில் யாழில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்.

பிள்ளையின் நீண்ட பிரிவுத்துயர் தாங்காது, தாய் தந்தை இருவரும் உயிர்நீத்த நிலையில், பெற்றவர்களது இறுதிச் சடங்குகளுக்கு ஒரு ஆயுள் தண்டனை கைதியாக கைவிலங்குடன் கொண்டுவரப்பட்டு சிதைகளுக்கு கொள்ளியிட்ட பின்பு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பார்த்தீபனின் தாயாரான அமரர் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அம்மையார் அவர்களின் மூன்றாமாண்டு நினைவேந்தல் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில்,  பார்த்தீபன் உட்பட்ட சக தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டுமென்ற பிரார்த்தனையுடன், நூதன போராட்டம் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பிரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, குடும்பத்தின் உற்ற உறவுகளை இழந்தும் பிரிந்தும் நீண்ட நெடுங்காலங்களாக அடிமைச்சிறை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்ப்புடனான விடுதலையை வலியுறுத்தும் முகமாக “விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தைளைத்திட ஒரு குவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்..! ” எனும் கருப்பொருளில், சமூக  ஆர்வலர்களின்  கரம் இணைத்து தொடர உள்ளனர்.

இப்போராட்டத்தில் நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் இருந்து ஒரு குவளை தண்ணீரை பொதுக் குவளைக்கு உவந்தளிப்பதன் மூலம்,
நாட்டப்படும் ‘விடுதலைப் பெருவிருட்சம்’  வேரூன்றி தளைத்திட உங்களது பங்களிப்பையும் அர்ப்பணிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இந்த மனிதநேயப் பணியில் இனம் மதம் மொழி கடந்து நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டுமென ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/217802/

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr