15 Sep, 2025 | 11:03 AM

கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.





இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அது அறிவு நிறைந்த ஒரு நல்ல எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும்.
ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும்.
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.
ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம் என்றார்.

இவ்விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன,
மனித வளங்களை வளர்ப்பதை போல் உலகில் வெற்றி பெறக்கூடிய வேறு எதுவும் இல்லை. நாட்டின் இளைஞர்களுக்கு அவற்றை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு.
ஜனாதிபதி நிதியம் இன்று அந்தப் பணிக்கு பங்களிக்கிறது. மனித வளங்களை வளர்ப்பதன் மூலம் நாடு வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவும் விழாவில் உரையாற்றினார்.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு சனிக்கிழமை (13) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியத்தை கையாளும் துறைசார் அலுவலர்களுக்கு இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தவும் மற்றும் விரைவான சேவைகளை வழங்கத் தேவையான அறிவு மற்றும் பயிற்சி வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.







https://www.virakesari.lk/article/225113