ஊர்ப்புதினம்

கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்

1 week 3 days ago

05 Sep, 2025 | 04:41 PM

image

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளையில் இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (5) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் நடத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.

இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-09-05_at_12.41.31.jp

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

“எங்கே எங்கே உறவுகள் எங்கே”, “எமக்கு எமது உறவுகள் வேண்டும்”, “எமக்கு நீதி விசாரணை வேண்டும்”, “எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “1990-09-05அன்று வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் எங்கே” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

WhatsApp_Image_2025-09-05_at_12.41.27__1

அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

1990.09.05 அன்று அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி, பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு, முகமூடி மனிதர்களால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை 35 வருடங்கள் கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூருகிறார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழுவானது பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது.  

1990 செப்டம்பர் 5ஆம் திகதி 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் 24 மணிநேரத்துக்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் எனவும் அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ பதில் அனுப்பியிருந்தார்.

இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உட்பட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர்.

WhatsApp_Image_2025-09-05_at_12.41.30__1

இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்துச் சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும் தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக  கூறப்படுகிறது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர்.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆம் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டுசென்றனர் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுவரை இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் 35வது வருடமாக உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2025-09-05_at_12.41.20.jp

WhatsApp_Image_2025-09-05_at_12.41.24__1


கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்  | Virakesari.lk

கிளிநொச்சி ஏ-9 வீதியில் திடீரென தீப்பற்றியது கார்

1 week 3 days ago

05 Sep, 2025 | 02:06 PM

image

கிளிநொச்சி ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வெள்ளிக்கிழமை (05) திடீரெனதீப்பற்றி எரிந்ததுள்ளது. 

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிஸார், தீயை அணைத்த பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒரு முக்கிய நிறுவனம் ஆகும்.

இதைவிடமும் இன்னமும் பாரிய தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவு இவ்வாறு அலட்சியமாக இருந்தால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

எனவே, இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VID-20250905-WA0023_3_.jpg

VID-20250905-WA0023_2_.jpg

VID-20250905-WA0023_1_.jpg

VID-20250905-WA0021.jpg

https://www.virakesari.lk/article/224280

திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

1 week 3 days ago

05 Sep, 2025 | 11:33 AM

image

திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளிக்கிழமை (05)  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இது எமது வைத்தியசாலை வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும், சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

களங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும், நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திரசிகிச்சைக்கூடம் இயக்கப்பட வேண்டும், எலும்பு முறிவுக்காக தனியான தனியான களம் வேண்டும், ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது, பிண அறையில் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள A&E  கட்டடம் திறக்கப்பட வேண்டும், பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/224267

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு

1 week 3 days ago

wmremove-transformed-13.jpg?resize=750%2

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுசேர்க்கும் முகமாகப் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் நேற்றையதினம், காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது.

இந்த நீர் சேகரிப்பு நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446212

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

1 week 3 days ago

FB_IMG_1739693299367.jpg?resize=750%2C37

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்

இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம்.

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446194

கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை

1 week 3 days ago

கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை

04 September 2025

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், தினமும் மாலை 05 மணிக்கும் 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த 16 மாணவர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 07 மாணவிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hiru News
No image previewகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை
கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை . Most visited website in Sri Lanka.

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை!

1 week 3 days ago

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

அதன்படி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பின்வரும் கேள்விகள் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது

  1. இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டன?

  2. இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன?

  3. இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் - தகனம்)

  4. இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால், அதன் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம்.

இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட தகவல்களை தான் கோருவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://newuthayan.com/article/விடுதலைப்புலிகளின்_தலைவர்_தொடர்பில்_பாதுகாப்பு_அமைச்சிடம்_மனித_உரிமைகள்_செயற்பாட்டாளர்_கோரிக்கை!

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

1 week 3 days ago

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

700190474.jpeg

எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீற்றர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

காவல்துறையினர், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.

அத்துடன் விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/நாட்டை_உலுக்கிய_எல்ல_விபத்து_-_ஒருவர்_கைது!

களுவாஞ்சிகுடி - குருக்கள்மடம் மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடளியுங்கள்; நீதியமைச்சர் பொதுமக்களிடம் வலியுறுத்தல்

1 week 4 days ago

Published By: Vishnu

04 Sep, 2025 | 06:49 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். செம்மணி மனித புதைகுழி சர்வதே தரத்துடன் முறையாக ஆராயப்படுகிறது முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வழங்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் தகவல் வழங்குபவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அப்பகுதிகளை அண்மித்த பகுதிகளுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் கண்காணிப்பு விஜயத்தை வியாழக்கிழமை (4) மேற்கொண்டிருந்தார்.

கள கண்காணிப்பின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில்  முறையாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.இதனால் கடந்த காலங்களை காட்டிலும் காணாமலாக்கபட்டோர் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வு பணிகள் சர்வதேச தரத்துடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் கண்காணிப்புடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய மனித புதைகுழிகள் இடத்தை காட்டிலும் குருக்கல்மடத்தின் நிலைமை மாறுப்பட்டது.2014 ஆம் ஆண்டு இந்த இடம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.2019 ஆம் ஆண்டு இந்த இடத்தை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதியை வழங்குமாறு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்த தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அந்த அரசாங்கம் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.கடந்த காலத்தை பற்றி பேசி இனி பயனில்லை.இருப்பினும் அந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட முடியும்.

எமது அரசாங்கம்; ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் கடந்த கால முறைப்பாடுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலையீட்டுடன் முறையாக விசாரிக்கப்படுகிறது.காணாமல் போனோர் அலுவலகம் தமது பணிகளுக்குரிய கட்டளைகளை பெற்றுக்கொண்டு எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் கொழும்பில் இருந்து நீதிமன்ற சட்டவைத்திய அதிகாரிகளை அழைத்து வந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

இந்த அகழ்வு பணிகளுக்குரிய நிதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று (நேற்று) இவ்விடயத்துக்கு வருகைத் தந்தேன்.முறையான கண்காணிப்புக்களை தொடர்ந்து முறையான வழிமுறைகள் ஊடாக நிதி வழங்க தயாராகவே உள்ளோம்.

நடுநிலையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், சர்வதேச தரத்துடன் பரிசோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதியமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நீதி மற்றும் உண்மையை கண்டறிவது அரசாங்கத்தின் பிரதான கடப்பாடாகும்.தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.குருக்கள்மடம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் அதனை எமக்கு வழங்க வேண்டும்.வழங்கப்படும் தகவல் பாதுகாக்கப்படுவதுடன், தகவல் வழங்குபவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் உட்பட துறைசார் நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைக்கு அமைய எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றமே தீர்மானிக்கும்.இங்கு நிதி பிரச்சினையில்லை.மனிதாபிமானம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சகல மனிதப்புதைகுழிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறோம்.ஐக்கிய நாடுகள் சபை, தென் ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இவ்விடயங்கள் பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.நாட்டு மக்களுக்காக  விசாரணைகளை மேற்கொள்கின்றோமே தவிர,சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காகவல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு இந்த ஒருவருட காலத்தில் பலவற்றை செய்துள்ளோம்.ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதே சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த விசாரணைகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை.எமது அரசாங்கத்தின் பிரதான தரப்பான மக்கள் விடுதலை முன்னணியினர் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் இவ்வாறே பாதிக்கப்பட்டார்கள்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? சகலருக்கும் நீதி மற்றும் நியாயம் கிடைக்கும் வகையில் செயற்படுவோம்.களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.நிச்சயம் நீதியை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/224228

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

1 week 4 days ago

Published By: Vishnu

04 Sep, 2025 | 06:30 PM

image

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை  முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வியாழக்கிழமை (04.09.2025) பதிவு செய்யப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-09-04_at_18.15.06_7a

குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருனாவுக்கரசு சிவகுமாரன்,  ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் (04.09.2025) பதிவு செய்துள்ளனர்.

WhatsApp_Image_2025-09-04_at_18.15.06_28

35 வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள்  மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்த குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224226

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான நிதி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் - ரி.பி. சரத்

1 week 4 days ago

04 Sep, 2025 | 06:17 PM

image

கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் என  வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால்  மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி. சரத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

download__5_.jpg

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரி.பி.சரத்,

யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக தமது அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அந்நிலையில் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை நேரில் ஆராய வந்துள்ளோம்.

கிளிநொச்சியில் உள்ள கிராமங்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்றபோது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து வசதிகள், அபிவிருத்திகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளதை அவதானித்தோம்.

அதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.

மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையினால் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.

 கிராமங்கள் ரீதியாக பிரஜா சக்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் ஒன்றிணைந்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்  என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

 மீள்குடியேற்றம் அமைச்சானது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே அதிக நிதியினை ஒதுக்கியுள்ளது.

அதனால் மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பிரதேச செயலக ரீதியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியும் எனவே அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு கூறினார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டீபானி டொடங்கோட, பணிப்பாளர் (மீள்குடியேற்றம்) கே.ஜி.பி. பூர்ணிமா அபேசிறிகுணவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர்  கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

download__6_.jpg

https://www.virakesari.lk/article/224217

மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் - ஜனாதிபதி

1 week 4 days ago

Published By: Digital Desk 3

04 Sep, 2025 | 11:46 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சக்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலை எமது அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

159 ஆவது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு  கொழும்பு பொலிஸ் மைதானத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

பொலிஸ் திணைக்களம் 159 ஆண்டுகாலத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. அளப்பரிய சேவையாற்றியுள்ளது.பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான சேவையினால் தான் பொலிஸ் சேவை 159 ஆண்டுகால கௌரவத்தை தனதாக்கியுள்ளது.

பொலிஸ் சேவைக்கு பாராட்டுக்கள் மற்றும் கௌரவம் காணப்படுவதை போன்று விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன. ஆகவே பொலிஸ் சேவையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸ் சேவையில் ஈடுபடும் சகலரினதும் பிரதான பொறுப்பாகும். பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்புக்காக பொலிஸார் செயற்பட வேண்டும்.

பொலிஸ் சேவைக்கான கௌரவத்தை உறுதியாக பாதுகாக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பொலிஸ் சேவை தொடர்பில் வெளியாகும் ஒருசில செய்திகள் ஆரோக்கியமானதல்ல, 84 ஆயிரம் பேர் உள்ள பொலிஸ் சேவையில் ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸ் சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பொலிஸ் சேவை திறமையானது. சர்ச்சைக்குரிய  சம்பவங்களை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். மிகவும் திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள்  பொலிஸ் சேவையில் உள்ளார்கள். திறமையுடன் மனிதாபிமானத்துடன் செயற்பட கூடியவர்களும் உள்ளார்கள்.

நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய படுகொலைகள் மற்றும் குற்றங்கள் உள்ளன. இந்த படுகொலைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான உண்மை ஏன் வெளிவரவில்லை. பொலிஸ் திணைக்களத்தின் பலவீனமா? நான் ஒருபோதும் அவ்வாறு எண்ணமாட்டேன். குற்றங்களை குறுகிய நேரத்தில் கண்டுப்பிடிக்கும் சிறந்த விசாரணையாளர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள்.

வெளிக்கொண்டு வர முடியாத படுகொலைகள் மற்றும் குற்றங்களின் பின்னணியில் அரசியல் சக்தி மற்றும் அரசியல் அதிகாரம் இருந்துள்ளது. இதுவே உண்மை. பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்தாலும் அரசியல் தலையீடுகளினால் அவை பலவீனடைந்த வரலாறும் உண்டு. விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் பழிவாங்கப்பட்ட கலாசாரமும் இந்த நாட்டில் இருந்தது. எமது அரசாங்கத்தில் அவ்வாறான நிலை ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள்.

குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கப்படும் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். படுகொலைகள் மற்றும் குற்றங்களை காலங்கள் தீர்மானிக்காது. குற்றங்கள் எதனையும் காலவோட்டத்தில் மறக்கடிக்க முடியாது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தாத நிலையில் குற்றங்கள் தூய்மைப்படுத்தப்படமாட்டாது. ஆகவே குற்றங்களுக்குரிய தண்டனைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

ஒருசில குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் காலவோட்டத்தின் பின்னர் அவதானத்துக்குட்படுகிறது. தசாப்த காலங்களுக்கு முன்னரான குற்றங்களின் விசாரணைகள் மற்றும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காலவோட்டத்தின் பின்னர் தப்பித்துக் கொள்ளலாம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். இது ஒருபோதும் வெற்றிப்பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். காலம் தண்டனையை தீர்மானிக்காது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

போதைப்பொருள் வியாபாரம் நகரம் முதல் கிராமம் வரை வியாபித்துள்ளது. பாரிய எதிர்பார்ப்புடன் பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் இன்று போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். ஒருசிலர் தமது சுயநலனுக்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். போதைப்பொருள் வியாபாரத்துக்கு அரசியல் தலையீடு இருந்ததை அனைவரும் அறிவோம். அரச நிறுவனங்களின் பிரதானிகளும், பொலிஸ் சேவையில் ஒருசிலரும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்பதையும் இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும்.

சகல துறைகளின் கௌரவத்தை அத்துறைகளின் உத்தியோகத்தர்கள் பாதுகாக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே போதைப்பொருள் ஒழிப்பின் வீரர்களாக பொலிஸார் மாற வேண்டும்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் சமூக கட்டமைப்பில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றல் மற்றும் அவர்களை கைது செய்யும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. நீங்கள்  சாதாரண குடிமக்கள் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை தோளில் பொறுப்பேற்றுள்ளீர்கள். ஆகவே மக்களுக்காக தைரியமாக செயற்படுங்கள். மக்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வரும் வகையில் மக்களுக்காக செயற்படுங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/224176

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

1 week 4 days ago

693690.jpg?resize=605%2C358&ssl=1

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி.

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள்  சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446093

நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்

1 week 4 days ago

Published By: Digital Desk 3

04 Sep, 2025 | 10:02 AM

image

நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்  என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த  நிலைமையைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்ற வைத்தியர் சுராஜ் பெரேரா இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் சிறுவர்கள் ஆவர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது சிறுவர் பருவ புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படவில்லை என்பது தெளிவாகக் காட்டுகிறது.  இந்த எண்ணிக்கை பொதுவாக 600 முதல் 800 வரம்பிற்குள் இருந்தது. தற்போது, ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் பருவ புற்றுநோயாளர்கள் பதிவாகின்றன.

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் கூற்றுகளின் படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான தரவுகளும் சேகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் குணமடையும் திறன் இருந்தபோதிலும் தாமதமாக கண்டறியப்பட்ட நோயாளிகளும் உள்ளனர். இந்த உயிரிழப்புகளை மேலும் குறைக்கலாம். அதேபோல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடினால் சிக்கல்களையும் குறைக்கலாம்.

https://www.virakesari.lk/article/224160

இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் இறுதி அறிக்கை வெளியீடு

1 week 4 days ago

Published By: Vishnu

04 Sep, 2025 | 04:02 AM

image

(நா.தனுஜா)

உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முற்கூட்டிய வரைவு அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் வழங்கியதன் பின்னரா இறுதி அறிக்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக சகல ஒடுக்குமுறைச்சட்டங்களையும் இல்லாதொழிப்பதாகப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அச்சட்டத்தை முற்றாக நீக்குவது குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமென கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வெறுமனே இரண்டு வார காலஅவகாசத்தை வழங்கும் அறிவிப்பு கடந்த மேமாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

அப்புதிய சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அரசாங்கமானது நபர்களைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.

இவ்வறிக்கை தொடர்பான ஆணை வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் நினைவுகூரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அவற்றை ஒழுங்குசெய்தவர்கள் உள்ளடங்கலாகப் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த நபர்கள் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் படையினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் வகையில் பொதுப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகிறது' என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆக்கபூர்வமானதும் செயற்திறன்மிக்கதுமான பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சமூகத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட சமூகப்பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவருவோர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தகாலத்தில் சர்வதேச குற்றங்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மீறல்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்வதும், அதுகுறித்து உரியவாறான தீர்வை வழங்குவதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதும் அவசியமாகும்.

மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையையும், நீதியையும் உறுதிசெய்வதற்குத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவரது கொள்கைப்பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இக்கருத்தானது செயல் வடிவம் பெறுமாயின், அதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்டதொரு வாய்ப்பு கிட்டும். இருப்பினும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்வதுடன், கடந்தகால மீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு ரீதியான நிலைமைகள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன' என்றும் அவ்வறிக்கையில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224149

ஐ.நா.வில் இலங்கை குறித்து இந்தியா மௌனம் கலைய வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹநாமா

1 week 4 days ago

03 Sep, 2025 | 03:03 PM

image

(எம்.மனோசித்ரா)

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் அது இலகுவான விடயமல்ல. இதற்கு ஐரோப்பிய மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டுமெனில் இலங்கை தொடர்பில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹநாமா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (03)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடர் இவ்வாரம் ஆரம்பமாகிறது. புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பதிலளிப்பு தொடர்பில் 47 அங்கத்துவ நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவது இலகுவான விடயமல்ல.

மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள கால கட்டத்திலேயே இது தொடர்பில் பேசப்படுகிறது. ஆனால் இந்த பொறிமுறை பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் பிரேரணைக்கு அமெரிக்கா இணை அனுசரனை வழங்குகிறது. எனினும் தற்போது ட்ரம்ப் அதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதால் இங்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டிரிகோ உள்ளிட்ட 5 நாடு;கள் இலங்கைக்கு எதிரான யோசனையை தயாரித்து அதனை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தரினகராலயத்திடம் கையளித்துள்ளன. இந்த யோசனைக்கு இலங்கையிடம் இணை அனுசரணை கோரப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இது சிறந்த தீர்மானமாகும். எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனமும், இறையான்மைiயும் காணப்படுகிறது.

இதனை எந்த வகையிலும் யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. இதற்கு முன்னர் ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் எமக்கெதிரான யோசனைக்கு நாமே இணை அனுசரணை வழங்கியிருக்கின்றோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களில் பரிந்துரைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன. சுயாதீன இராச்சியம் என்ற ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முன்னிலையாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவற்றில் பிரதானமானது ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும்.

அவ்வாறு அதில் கையெழுத்திட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் நாம் நேரடியாக தொடர்புபடுவோம். எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அடுத்து நாம் அவதானம் செலுத்த வேண்டிய விடயம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுவினரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடிந்துள்ளது.

இந்த சட்டம் நடைமுறையில்லாவிட்டால் இவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பர். இது பொலிஸாரின் விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பாகவே அமையும்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றை ஏற்றுக் கொள்கின்றோம். இதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் காணப்படுகிறது. இவ்வாறு மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும்.

அவற்றுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். செப்டெம்பர் ஒக்டோபரில் மாத்திரமன்றி தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் இதற்காக விசேட குழு நியமிக்கப்பட வேண்டும்.

சீனா, வியட்நாம், கியூபா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு ஆதரவாகவுள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அதற்கு இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். இந்தியா எமக்காக பேசும் பட்சத்தில் எம்மால் இந்த நாடுகளின் ஆதரவை இயல்பாகப் பெற முடியும்.

இந்தியா தவிர தென் ஆபிரிகா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் நம்பிக்கையும் பெற வேண்டும். இந்த நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை. மாறாக இவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளைப் பயன்படுத்தும் பட்சத்தில் எமக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/224099

காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

1 week 4 days ago

New-Project-70.jpg?resize=750%2C375&ssl=

காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2025/1446035

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

1 week 4 days ago

dog-fe.jpg?resize=660%2C375&ssl=1

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446002

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

1 week 4 days ago

New-Project-69.jpg?resize=750%2C375&ssl=

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன.

தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குறைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2025/1446031

நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு

1 week 4 days ago

நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு

PrashahiniSeptember 4, 2025

WhatsApp-Image-2025-09-03-at-21-07-38_c4

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (03) நடைபெற்றது.

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர்.

அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.

நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.thinakaran.lk/2025/09/04/breaking-news/150884/நாவற்குழியில்-நவீன-கடலுண/

Checked
Mon, 09/15/2025 - 19:37
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr