இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?

படக்குறிப்பு,ரமேஷ்
கட்டுரை தகவல்
திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது
இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர்.
கண்டி - போபிட்டிய - பௌலான தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்தார்.
ஒரு நாள் மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற போது, அவர் வெட்டிய மரமே அவர் மீது வீழ்ந்துள்ளது. இதனால் ரமேஷ் மாற்றுத்திறனாளியானார்.
மரம் வீழ்ந்தமையினால் முதுகெலும்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே ரமேஷ் இவ்வாறு ஓரிடத்திலேயே இருந்து வருகின்றார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் (சமூக நலத்திட்டம்) ஊடாக 10000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவின் ஊடாக 10000 ரூபாயும் மாத்திரமே இவருக்கு மாத வருமானமாக கிடைக்கின்றது.
ரமேஷின் மனைவி நவமணிதேவிக்கு வேலைக்கு செல்வதற்கான இயலுமை இருக்கின்ற போதிலும், தனது கணவருக்கு உதவிகளை செய்வதற்காக அவருடனேயே இருந்து வருகின்றார்.
ரமேஷுக்கு 6 வயதான ஒரு மகன் இருக்கின்றார். ரமேஷுக்கு கிடைக்கும் நலத்திட்ட கொடுப்பனவுகளே அவரது மகனின் படிப்புக்கும் செலவிடப்படுகின்றது.
வாரத்திற்கு ஒரு முறை மருத்துவமனைக்கு கட்டாயம் செல்ல வேண்டிய நிலைமையையும் ரமேஷ் எதிர்நோக்கியுள்ளார்.
நடக்க முடியாத காரணத்தினால் தனிவாகனத்தை வாடகைக்கு எடுத்தே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதாகவும், ஒரு தடவை மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு 5000 ரூபாய் செலவிட வேண்டும் எனவும் ரமேஷ் கூறுகிறார்.

படக்குறிப்பு,ரமேஷின் மனைவி நவமணிதேவி
'நள்ளிரவில் சரிந்த சுவர்'
பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள ரமேஷின் குடும்பத்திற்கு, திட்வா புயல் மீண்டும் அடியை கொடுத்துள்ளது.
27ம் தேதி பெய்த கடும் மழையின் போது, ரமேஷின் குடிசை வீட்டு சுவர் நள்ளிரவில் சரிந்து வீழ்ந்துள்ளது.
உடனே ரமேஷின் மனைவி, தனது கணவரை சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து, தனது பிள்ளையையும் சுமந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்
''கடும் மழைக்கு மத்தியில் விடிய விடிய செல்ல இடமில்லாமல், ஒரு குன்றின் மீதுள்ள இடத்தில் குளிருக்கு மத்தியில் தங்கியிருந்தோம்'' என்கிறார் ரமேஷ்
விடிந்த பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் வேறொரு இடத்திற்கு ரமேஷின் குடும்பம் அழைத்து செல்லப்பட்டுள்ளது.
இன்று அந்த பிரதேசத்திலுள்ள ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக இவர்கள் தங்கியுள்ளனர்.

படக்குறிப்பு,ரமேஷின் வீடு
ரமேஷின் வீடு, மண்சுவர்களில் செய்யப்பட்ட ஒரு சிறிய குடிசை. நான்கு குச்சிகளை நான்கு புறத்திலும் வைத்து, அதற்கு துணியை சுற்றி மறைத்ததே அவர்களது கழிப்பறை.
''எனக்கு தொழில் எதுவும் செய்ய முடியாது. மனைவிதான் என்னை பார்த்துக்கொண்டிருக்கின்றார். மண்சரிவால் இருந்த வீடும் உடைந்தது. நான் தற்காலிக இடத்திலேயே இருக்கின்றேன். சொந்தக்காரரின் இடத்தில் இருக்கின்றேன். என்னை பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லாமை காரணமாக மனைவியும் வீட்டில்தான் இருக்கின்றார்.'' என்றார் ரமேஷ்.
''மண்சரிவின் போது என்னுடைய வீட்டில் தான் இருந்தோம். சுவர் ஒரு பக்கம் உடைந்து. மறுபக்கம் சுவர் வெடித்திருக்கின்றது. எந்த நேரத்திலும் முழுமையாக வீழ்ந்து விடலாம். எனக்கு எழுந்து போக முடியாது என்பதனால், குடும்பத்தோடு இங்கு வந்து இருக்கின்றோம்.'' என அவர் கூறினார்.
தனக்கு சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க யாரேனும் முன்வந்தால், அதனூடாக தனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியும் என ரமேஷ் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

''சுயதொழில் ஒன்று செய்தால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மகனின் படிப்பை பார்த்துக்கொள்வேன். மனைவியால் வேலைக்கு போக முடியாது. எனக்கு கழிப்பறை செல்வது, எனக்கு ஆடை மாற்றி விடுவது. எல்லாவற்றையும் அவரே பார்க்கின்றார். தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்றாலும் அவரின் உதவி வேண்டும்.'' என அவர் தெரிவித்தார்.
தமது குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்துகொடுத்தால், ஏதோ ஒரு வகையில் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என ரமேஷின் மனைவி நவமணிதேவி கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c62nzg72798o