கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம்.
பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டியதுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (13.12.2025) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் பிரதியமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வரவேற்புரையின்போது மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களை வரவேற்கின்றேன்.
சூறாவளி மற்றும் இதனுடன் இணைந்த வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கும் முயற்சிக்காக மன்னார் மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன்.
பாதிப்புகளிலிருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின்- பாதுகாப்பு படையினர்- அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுடன் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீட்nடுக்கப்பட்டதையிட்டு யாவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றேன்.
வரவேற்புரையைத் தொடர்ந்து ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவிக்கையில் அனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். ‘பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்கட்ட உதவிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தற்போது அவர்களின் வாழ்வாதாரத் துறைகளான விவசாயம்இ மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதிலும் உட்கட்டுமானங்களை மீளமைப்பதிலும் எமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதன்போது ஒவ்வொரு துறை சார்ந்தும் ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார். வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்திய அவர், மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள வீதிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தரத் திருத்த மதிப்பீடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், மன்னார் மாவட்டத்தின் வெள்ள நீர் கடலைச் சென்றடைவதற்கான வடிகால் வாய்க்காலின் அளவு போதாமையாக உள்ளமை குறித்து ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.
மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதில் நிலவும் சிரமங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகக் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்இ தொலைத்தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் அதிகாரிகளிடம் வினவினார்.
நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறை குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பெரும்போகத்துக்கான நீர் விநியோகம், மீள்விதைப்புக்கான ஆயத்தங்கள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பரப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.
நிவாரணக் கொடுப்பனவுகள் மக்களைச் சென்றடைவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். மரக்கறி மற்றும் தானியச் செய்கை அழிவுகள் தொடர்பிலும் குறிப்பாக வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்களின் இழப்புகளுக்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி வினவினார்.
இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அடுத்த ஆண்டு வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாகாண விவசாய அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் பதிவு செய்யப்படாதவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இதன்போது மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத தன்மையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமித்து நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணித்தார்.
மீன்பிடித்துறை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. புயல் காரணமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும். வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ என உறுதியாகத் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான 25இ000 ரூபா கொடுப்பனவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பாடசாலைப் புத்தகங்கள் அழிவடைந்துள்ளமை குறித்துக் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அது தொடர்பில் தனது அவதானத்தை செலுத்தினார்.
முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகள் அபாய வலயங்களில் வசிப்போரை மீள்குடியேற்றுதல் மற்றும் நிவாரண உதவிகள் பகிர்ந்தளிப்பு குறித்தும் ஜனாதிபதி தெளிவான வழிகாட்டல்களை வழங்கினார்.
இறுதியாகச் சுகாதாரத் துறை குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கமளித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையிலான முன்னாயத்தக் கூட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் காரணமாகப் பேரிடரால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்தன எனவும் அவர் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்த வேளைகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற விசேட உயரமான அம்புலன்ஸ் வண்டி மற்றும் அம்புலன்ஸ் படகுத் தேவையை அவர் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உடனடித் தீர்வுகள் குறித்தும், எதிர்கால நீண்டகாலத் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
https://www.samakalam.com/கால்நடைகளுக்கான-இழப்பீட/