பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை
Published By: Priyatharshan
08 Sep, 2025 | 05:17 PM
அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன.
இந்த பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் நிமித்தம் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இலங்கை விமானப்படையின் அதிகரிகளுடன் இணைந்துக் கொண்டார்.
பேரனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் நிமித்தம் செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடக்கும் இந்த 5-நாள் பல்தரப்பு நிகழ்வானது, சுமார் 90 அமெரிக்க மற்றும் 120 இலங்கை விமானப்படை வீரர்களை ஒன்றிணைப்பதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான், மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் மற்றும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
இந்த பயிற்சியானது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, மருத்துவ தயார்நிலை, வான் பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் இரண்டு C-130J விமானங்கள் மற்றும் இலங்கையின் Bell-412, B-212 ஹெலிகப்டர்கள் மற்றும் கிங் எயார் 350 விமானம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த Pac Angel 25 பயிற்சி நடவடிக்கையானது, நடப்பு உலக நெருக்கடிகளுக்கு அவசியமான விரைந்த மற்றும் உறுதியான பதிலளிப்பு செயற்பாடுகளுக்கான அணியமைப்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது.
இந்த பயிற்சி நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பசுபிக் ஏஞ்சல் 25 இந்த ஆண்டில் இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு பயிற்சி நடவடிக்கையாகும் என்பதுடன், அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்து இதில் கலந்துகொள்பவர்களை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம். பேரனர்த்த பதிலளிப்பு முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரையான நடப்பு உலக சவால்களுக்கு தயாராவதன் நிமித்தம் எமது நாடுகள் எப்படி ஒன்றுபட்டு பணிபுரிகின்றன என்பதை இந்த பயிற்சி நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்து-பசுபிக் பிராந்தியத்தின் பங்காண்மையாளர்கள் என்ற வகையில், நாம் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தை பேணிப் பாதுகாப்பதுடன், எமது இந்த பிராந்தியம் தங்கியிருக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதன் நிமித்தம் சவால்களுக்கு ஒன்றுசேர்ந்து முகம் கொடுப்பதற்கான எமது ஆற்றலை Pac Angel போன்ற பயிற்சி நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன, என்று தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இந்த பயிற்சி நடவடிக்கையின் நடைமுறை தாக்கத்தை சுட்டிக்காட்டி அதில் கலந்துகொள்பவர்களை அமெரிக்காவின் சார்பில் வரவேற்றார். “Pac Angel நடவடிக்கையானது ஒரு சாதாரண பயிற்சிக்கும் மேலானதாகும். இது நெருக்கடி நிலைமைகளுக்கான துரித மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிப்பு செயற்பாடுகளை சாத்தியமாக்கும் எமது நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடனான நடப்பு உலக ஒத்துழைப்பை உருவாக்குவது பற்றியதாகும்.
ஒன்றிணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறோம், அச்சுறுதல்களை தடுக்கிறோம், மற்றும் பேரனர்த்தங்கள் தாக்கும் போது எம்மால் விரைந்தும் மற்றும் பயனுறுதிமிக்க வகையிலும் பதிலளிக்க முடியும் என்பதையும் உறுதிபடுத்துறோம். நாம் இன்று ஒன்றிணைந்து கட்டமைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய பொதுவான பாதுகாப்புக்கான அடித்தளமொன்றாகும், என்று அவர் குறிப்பிட்டார்.
பசுபிக் ஏஞ்சல் என்பது அமெரிக்க பசுபிக் விமானப்படைகளின் தலைமையிலும் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command - USINDOPACOM) அனுசரணையிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனிதாபிமான பதிலளிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி நடவடிக்கையொன்றாகும். இந்த பயிற்சியானது தற்போது அதனது 18 ஆவது ஆண்டில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கையானது, கிரிபாஸ், நவூரு மற்றும் வனுவாட்டு ஆகியவற்றுக்கு முக்கியமான உதவிகளை வழங்கிய அதனது 2007 ஆம் ஆண்டு தொடக்க நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து தமது பசுபிக் அயலவர்களுக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலித்து இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டின் இன்றியமையாத அம்சமொன்றாக Pac Angel உருவெடுத்துள்ளது. பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கைகளானது அதை நடாத்தும் நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், பல மாதங்களுக்கு முன்பாகவிருந்தே அது திட்டமிடப்படுகிறது. இந்த நடவடிக்கைகளானது எந்தவொரு தற்போதைய நடப்பு உலக நெருக்கடிகளுக்குமான பதிலளிப்பு செயற்பாடாக அமையவில்லை. மாறாக இந்த பயிற்சியை நடத்தும் நாடுகள் தமது குடிமக்களுக்கு உதவுவதற்கும் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் மற்றும் ஏனைய சவால்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிப்பதற்கும் அவற்றின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகும்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றுடன் அமெரிக்காவும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையின் ஏனைய பங்கேற்பாளர்களின் முன்னிலையில் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உரையாற்றுவதை இங்கு காணலாம்.
இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவில் இருந்து இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் பசுபிக் ஏஞ்சல் 25 நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.