சமூகங்களை துருவமயப்படுத்தும் சர்வதேச பொறிமுறைகளை ஏற்கோம்; ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிவித்தது இலங்கை
07 Sep, 2025 | 09:59 AM
(நா.தனுஜா)
எந்தவொரு வெளியக பொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன், அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோது ஏற்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் அண்மையில் வெளியிடப்பட்ட எழுத்துமூல அறிக்கையில் இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமனங்களுக்கு அமைவான சுயாதீனமானதும், நியாயமானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்கு தவறியிருக்கின்றன.
இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க ஆக்கப்பூர்வமான செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருந்த கரிசணைகளுக்கு பதிலளித்து, ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு, நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், ஊழல் ஒழிப்பு, நிகழ்நிலை காப்புச் சட்டம் திருத்தம் போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கடந்த ஜுன் மாதம் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு விளக்கப்பட்டது.
அதேபோன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றுக்கு அவசியமான நிதி மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்வதன் ஊடாகவும் உள்ளக நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன.
அத்தோடு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சகல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமும் நிறுவப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இம்மாதம் அளவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கை நிலைமாற்றத்துக்கு வழிவகுக்க கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை பயன்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்கு இடமளிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமும் மனித உரிமைகள் பேரவையிடமும் கோருகிறோம்.
எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைத்தூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.